ஹாய்யா ஸ்கூட்டர் பின்சீட்ல உக்காந்துகிட்டு ட்ரா ஃபிக்கையும் சிக்னலையும் கண்டுக்காம நிமிஷா நிமிஷம் மாறும் வானத்தையும்,அதத் தொட்டு சிலுத்துக்குற மர உச்சிங்களையும் மேலாலப் பாத்தபடி காத்தக் கிழிச்சிகிட்டுப் போற சொகமே அலாதிதான்.
என் கலீக் தஜ்மால் வீடு,என் வீட்டுக்குப் போற வழீல பாதி தூரத்துல இருக்கு. அதுனால அவன் வண்டி கொண்டாராதப்ப என் ஆக்டிவாவ ஓட்டிட்டு வந்து மெயின் ரோட்ல எறங்கிக் குடுத்துட்டு உள்ள நடந்து போயிடுவான். நா கொண்டாராதப்ப அவன் ஸ்கூட்டர்ல வந்து பாதீல எறங்கிகிட்டு அங்கருந்து ஆட்டோ புடுச்சு போயிடுவேன்.
வேல முடிஞ்சாலும் டேபிள சொரண்டிகிட்டாவுது இருந்தே ஆவணும்.அதான் கவர்மெண்ட் ஆஃபீசுங்குறது.அஞ்சேகாலுக்குத்தான் கிளார்க்குங்கள அவுத்து வுடுவாங்க.அதுனால நானும் தஜ்மாலும் ஒண்ணாதான் கௌம்பணும்.பார்க்குக்குள்ள பூந்து வரப்பமட்டும் அந்தப் பச்ச வாசனைய உள்ளுக்குள்ள நீளமா இழுத்து மெதுவ்வா போவேன். அப்ப சொல்லி வச்சாப்புல தஜ்மால் வண்டியும் ஊரும்.
தஜ்மால் ஒயரத்துலதான் சேத்தி.கோதும நெறத்துல அளவான எடைல இருப்பான்.நெத்தி அவ்ளோ பெருசில்ல. தலமுடி அடர்த்தியா தூக்கி சீவியிருந்தாலும் மீசமுடி மட்டும் அங்கொண்ணும் இங்கொண்ணுமா பூஞ்சையா மொளச்சிக் கெடக்கும். அவன் டென்த் தான்;அவுங்கப்பா சேவகம் பண்ண பெரும்புள்ளியோட சிபாரிசுல இந்த வேலைல சேந்துட்டான்னு வலுவான சேதி. என்ன படிச்சிருக்கன்னு கேட்டா மட்டும் அவுனுக்குக் கோவம் வரும்.‘ஆ..மா,எழுதுனவன் ஏட்டக் கெடுத்தான்,படிச்சவன் பாட்டக் கெடுத்தான்‘னு அந்த எடத்தவுட்டு நழுவிடுவான்.
தஜ்மால் ரோட்டுல காறி, காறித் துப்புறதுதான் அருவருப்பா இருக்கும். பின்னாடி உக்காந்திருக்குற எம்மேல எச்சி பட்றுமோன்னு பதப்பாவும் இருக்கும்.திரும்பத் துப்புறப்பக் கண்டிக்கலான்னு கண்கொத்திப் பாம்பாட்டம் கவுனிச்சுகிட்டே இருப்பேன்.சோதனையா அப்ப துப்பமாட்டான். நா ஓஞ்சுபோய் எதிர்பாக்காதப்ப திடீர்னு தூரத் துப்பிடுவான்.வழீல புதுசா மொளைக்குற பில்டிங்க்ஸ், எங்களுக்கு வரப்போற செட்டில்மென்ட்,எதுவும் இல்லன்னா ஆஃபீசர் யார் தலையயாவுது உருட்டிப் பேசிகிட்டே போறதுல சட்டுனு அவன் வீடு வந்துடும்.
தஜ்மால் வீடுதாண்டி வர்ற வழீல மீன்கட. பளபளன்னு குவிச்சு வச்சிருக்குற மீன்ங்க கண்ணப் புடுங்கும். மீன் வாசன குப்புன்னு தூண்டும்.லேட்டாயிட்டா சின்னவன் வந்து வெளீல நிப்பானே. அதுனால அந்தக் கட நெருங்குறப்பவே ஆக்சலேட்டரத் திருவி வேகமா போயிடுவேன். உள்ளதச் செய்யவே முழி பிதுங்குது!இதுல நமக்குன்னு தனிய்யா -நேரமேது?
எங்கப்பாவுக்கும் எனக்கும் நாத்தமில்லாம சாப்பாடு எறங்காது.போன்லெஸ் சிக்கன-அதும் சின்ன சின்ன துண்டா வறுத்துவச்சா மட்டும் மோந்து பாப்பாரு இவரு. புள்ளைங்களுக்கும் இதே பழக்கமாயிடுச்சு.ஞாயத்துக் கெழமையானா இதான் கறி சாப்பாடு.அதுலயும் காரங்கூடாது. ஒடம்பு கெட்டுப் போகுமாம்.எப்புடியும் அழியப்போற ஒடம்புதான?அது நல்லதா இருக்குறப்பவே ருசிச்சு அனுபவிக்குறத வுட்டுட்டு......தித்திச்சுக் கெடக்குறதத் திங்கத்தான் முடியுதா?
அத்திப் பூத்தாப்புல மூட் வர்றப்ப இவர் சூப்பர் மார்க்கேட்லேர்ந்து ஃப்ரோஸன் ஃபிஷ் வாங்கிட்டு வந்துடுவாரு. அது ஃப்ரீஸர்லயே கெடந்து மரத்துப் போயிடும். பாத்தா திட்டுவாரேன்னு ஒருநாள் வெளீல எடுத்து தேக்காம கொள்ளாம வெறும் தூளுங்களப் போட்டு அரகொறையா பொரட்டியெடுக்குறதுக்குள்ள பொண்ணு,‘ஸ்மெல்லிங்‘னு மூக்க சுளிப்பா.அத ஃப்ரிஜ்ல வச்சு ரெண்டுநாளா சாப்புட்றதுக்குள்ள எனக்கு மூஞ்சிலடிச்சுப் போயிடும்.
அதுனால இனிமே வாங்கிட்டு வராதீங்கன்னு கையெடுத்துக் கும்புட்டுட்டேன். அதுக்கு இவர் சொல்றாரு,‘இல்லாட்டி ஒனக்கு அப்பப்ப சாமி வந்துடுமே‘ன்னு. அப்புடி எனக்குத் தேவப்பட்டா ஹோட்டல்ல சாப்ட்டுக்குறேன்னு ஜம்பமா சொல்லிட்டேன்.ஆனா எங்க முடியுது?
நேத்து ராத்திரி ஃப்ரிஜ்ல நொரச்சுக்கெடந்த புளிக்கொழம்ப எடுத்து ஒழிச்சுப் போட்டேன்.ரெண்டு மீனோ, ராட்டோ வாங்கிப்போட்டு கொதிக்கவக்கலான்னு என்னைக்கோ எடுத்துவச்சது; மறந்தே போச்சு.அப்பதான் எனக்கு மீன் சாப்ட்டே ஒரு வருஷமானது ஞாபகத்துக்கு வந்துது.போன லீவுல ஊருக்குப் போனப்ப சாப்ட்டது. ராத்திரீலருந்து நாக்கு மீனுக்கு அலைய ஆரமிச்சிருச்சு.
இன்னைக்கு தஜ்மால்,‘நா கேன்ட்டீனுக்கு வரல. மீன் சாப்புடப்போறேன். வரியா?‘ன்னு கேட்டான். மரியாதங்குறது அவன் அகராதீலையே கெடையாது. நம்ப தஜ்மால்தானன்னு ஒடனே வரேன்னு சொல்லிட்டேன். அத அவன் எதிர்பாக்கலங்குறத பேஸ் அடிச்ச அவன் மூஞ்சு காட்டிக் குடுத்துருச்சு.
ஆனா சமாளிச்சுகிட்டு,‘நா முன்னாடி போறேன். நீ பின் கேட் வழியா வா. யாருக்கும் சொல்லவேணா‘ன்னு போயிட்டான். அதுவும் சரிதான். ரெண்டுபேரும் சேந்து சாப்புடப்போறது தெரிஞ்சா என்னக் கூப்புடல,ஒன்னக் கூப்புடலன்னு பேச்சும் அதுக்கும் மேல வம்பும் வரும்.ஆனா இதையெல்லாம் தஜ்மால் நெனச்சுப் பாத்ததுதான் எனக்கு ஆச்சரியமா இருந்துது. நா பின்வழியா நடக்க ஆரமிச்சேன்.
இவர் மாசத்துல ஒன்னுரெண்டு தடவ எதாவுது ஒரு பெரிய ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போவாரு. அங்கருக்குற அலங்காரங்களப் பாத்தா வயிறு ரொம்பிடுமாக்கும். எப்பவும் இவர் ஆடர் பண்ற மெனு எனக்கு மனப்பாடம். இதுக்கு இருட்டுல கண்ண சுளிச்சுகிட்டு மெனுவையே பாக்கவேணாம். எல்லாருக்கும் பத்துமோன்னு நா வெறும் கிரேவியப் போட்டுப் பேர் பண்ணுவேன். கடசீல ஆறிப்போய் துண்டு மிஞ்சுனா சாப்புடுவேன்.‘ஒனக்கு ஃபிஷ் வெரைட்டி ஏதாவுது?‘ன்னு இவர் கேக்குறதும்,வெலயப் பாத்துட்டு நா வேண்டாங்குறதும் வழக்கமா நடக்குற உபசரிப்பு.
பிராமின்ஸ் மாதிரி ஸ்வீட்,முறுக்குன்னு அமுக்குற இவரு ஒரு ஆம்லெட்ட முழுசா சாப்புடத் தெணறிடுவாரு. அப்பல்லாம் எனக்கு முதல் மரியாதைல சிவாஜி,‘சேர்வ மவனே,ஒங்கப்பன் ஆட்டு ரத்தத்துல புட்டு செஞ்சு போட்டாலே விக்கிக்குவான்’னு எகத்தாளம் பண்றதுதான் நெனப்பு வரும்.
அன்னைக்கு ஏதோ ஸ்டார் ஹோட்டல் ஷெஃப்-இவர் கூடப் படிச்சவராம்; கூப்ட்டாருன்னு பாத்துப் பாத்து ட்ரெஸ் பண்ணிக்கிட்டு டின்னருக்குப் போனோம்.ஸ்டார்ட்டரா ஒரு ப்ளேட்ல பளிங்கு கணக்கா ப்ரான்ஸும் முழிச்சு முழிச்சுகிட்டு வந்துது.அத மீதி வைக்காம நா வெட்டுன வேகத்தைப் பாத்த இவரு, ‘காஞ்சமாடு கம்புல வுழுந்தமாதிரி மண்டாத’ன்னு அடித் தொண்டைல எங்காதுகிட்ட உருமுறாரு. எனக்கு அத்தோட பசியத்துப் போச்சு.
ஆனா என்னப் புரிஞ்சுகிட்ட ஷெஃப்,பெரிய்ய ப்ளூக்ராப்- அப்புடியே முழுசா கொண்டாந்து வச்சிட்டார். ஒயிட் ப்ளேட்ல அண்டர் த ஸீ வோர்ல்டாட்டம் என்னப்பார்-என் அழகப்பார்-னு கலர்ஃபுல்லா பரந்து விரிஞ்சு கெடக்கு. கூடவே சின்ன சுத்தியும் இடுக்கியும்!அதால சத்தமில்லாம ஒடச்சு சாப்புடணுமாம். இதேதுடா வம்பாப் போச்சுன்னு கைக்கெட்டுனது வாய்க்கெட்டாம நா தவிக்குறதப் பாத்த அவர்,‘வீட்டுக்குப்போய் ஃப்ரீயா சாப்புடுங்க’ன்னு இன்னொண்ணையும் சேத்து பாக் பண்ணிக் குடுத்துட்டார். நல்லாருக்கணும் அவர்.
வீட்ல நா நண்டு ஓட்ட ஒடச்சு,கால உறிஞ்சி வீசு வீசுன்னு வீசுற வித்தையப் பொடுசுங்க ரெண்டும் கூடிநிண்ணு வேடிக்க பாக்குது. குவிஞ்சு கெடக்குற ஓட்டப்பாத்த இவர் அரண்டுபோய்,‘அவ்ளோத்தையும் சாப்ட்டுட்டியா?’ன்னு கேக்குறார் -நா என்னமோ அரக்கிமாதிரி. ஓட்ட ஒடச்சா, உள்ள என்னாருக்கும் பெருஸ்ஸா ? நானே நண்டு சாப்புடாம இடுப்பு செத்துக் கெடக்குறேன்.
பின் தெரூல இருக்குற மங்களூர் ஹோட்டல நெருங்க நெருங்க மீன் வறுக்குற வாசன மூக்கத் தொளைக்குது.
கதவில்லாத அந்தச் சின்ன எடத்துக்குள்ள தஜ்மாலோட நொழைஞ்சதும் பொக கலந்த சூடு வந்து கதகதன்னு அப்புச்சு.ஒரே ஜென்ட்ஸ் கூட்டம். லேடீஸே இல்ல.என்னையே எல்லாரும் உத்துப் பாக்குறாங்க.எனக்கு ஒருமாதிரி ஆயிருச்சு. நாங்க ஒரு சின்ன டேபிள்ல எதிரும் புதிருமா உக்காந்தோம். தஜ்மால் மெனுவ என்ட்ட குடுத்து,‘க்யா சாஹியே?‘ன்னான்.நா‘ ஃபிஷ் மீல்‘னேன்.
அதையே தனக்கும் ஆடர் பண்ணான். சீக்கெரமே வந்துருச்சி. அதுலருந்த வறுவல், உப்புக்கண்டம் சைஸுக்கு இருக்குறதப் பாத்த தஜ்மால், ரெண்டுஃ பிஷ் ஃப்ரை கொண்டாரச் சொன்னான். லேட்டாயிடப் போகுதுன்னு நா சும்மா பேச்சுக்கு சொன்னதும் ஜல்தீ, ஜல்தீன்னு வெரட்டுனான். அது அவுனுக்குப் பழகுன எடம் மாதிரி தெரிஞ்சிது.
நா அப்புடி ஒண்ணும் சாப்பாட்டுராமி இல்ல.இப்பத்தான் சோவபுடிச்சுப் பூசியிருக்கேன்.
சுவரொட்டியும் ஈரலும் சாப்ட்டா ரத்தம் சொரக்குமாம். ஹூம் ....யார் வாங்கித்தரா? அப்பாதான் ஊருக்குபோனா ஏன் இப்புடிக் கண்ல உசிர வச்சிட்ருக்கன்னு அதையும் இதையும் வாங்கித் தள்ளுவாரு.நானும் இடும்பைக்கூர் என்வயித்துல எல்லாத்தையும் கட்டுவேன்.
போனவாட்டி அம்மா அடுப்படீல எனக்குக் கேக்காதுன்னு ,‘எல்லாம் நீங்க குடுத்த செல்லந் தான்.பொம்பள எத்தன நாளைக்கு நாக்குருசி பாக்கமுடியும்?ஏதோ கெடச்சத வயிறுநெறைய அள்ளிப் போட்டுக்கிட்டு தெம்பா குடும்பத்த கவுனிப்பாளா’ன்னு கொமையுறாங்க. அதுக்கப்பா, ‘ஒன்ன மாதிரியும் ஒம்புள்ளைய மாதிரியும் கெடச்சதையெல்லாம் திங்குற காக்கா இல்ல எம்பொண்ணு. புலிக்குப் பொறந்தவ; புல்லத் திம்பாளாக்கும்’னு உருமுறாரு. ஒருவேள மனுஷங்களுக்குள்ள நா விலங்குண்ணியா இருப்பேனோ?
அதுக்கப்பொறம் ஆங்காரமா- ஒத்துக்காதுன்னு திரும்பிவர்ற வரைக்கும் எதைய்யும் தொடல.
இதுக்குத்தான் வீங்கிகிட்ருக் கேனாக்கும்.
எனக்கும் தல நரைக்க ஆரமிச்சிருச்சு.இன்னொம் எத்தன நாளைக்குதான் வாயையும் வயித்தையும் கட்றது?மத்த ருசியெல்லாம் காலப்போக்குல அடங்கலாம்.ஆனா மனுஷன் படுக்கைல கெடக்குறப்பையும் அடங்காதது இந்த நாக்குருசி ஒண்ணுதான.
பீங்கான் தட்டு முழுசையும் அடச்சிகிட்டு ரவா பதிச்ச வஞ்சரமீன் மொருமொருன்னு எண்ணக் கொப்பளத்தொட வந்துது. அதப் பாத்ததும் ஏந்தயக்கமெல்லாம் போயே போச்சு. நடுமுள்ளுல துளி சத ஒட்டாம தஜ்மால் அவ்ளோ சுளுவா,சீக்கெரமா சாப்புட்டான். குனிஞ்சு சாப்ட்டுகிட்டே அவன் முழியத் தூக்கிப் பாத்தப்ப எர எடுக்குற புலிமாதிரி இருந்துது.ஏற்கெனவே பளபளக்குற அவன் மூஞ்சு வேர்வைல டாலடிக்குது.நா காரத்துல கசியுற எம்மூக்கக் கையத்தூக்கி ஜாக்கெட்ல தொடச்சுகிட்டே
சாப்ட்டேன். இப்ப யாரும் என்ன சட்டபண்ணல.பசிச்சிருக்குரவுங்க தட்டுலயே கண்ணவச்சு ஆவலா மென்னு சாப்ட்டாங்க.
என் தட்ல கெடந்த தோலையும்,கொழம்பு மீன்ல முள்ளோட ஒட்டிட்ருந்த சதையையும் பாத்த தாஜ்மால்,‘என்ன இப்டி சாப்டற?‘ன்னு உரிமையா கடிஞ்சு,‘ஔர் குச்?’னதும் அங்கருந்த சந்தடிய மீறி நா,‘நை நை’ன்னு கத்திட்டேன். பில் கொண்டாந்தவன் தஜ்மால் கைல குடுத்ததும் நா கைய நீட்டிக் கேட்டேன்.
தஜ்மால் சிரிச்சுகிட்டே அலட்சியமா ஒரு ஆயிர ரூபாத் தாளேடுத்து பில் தட்ல போட்டான்.குடியில்லாத அசல் முஸ்லீமாக்கும் தஜ்மால். அதுனால அவன்ட்ட மாசக் கடசீலயும் பணம் பொழங்கும்.கைமாத்து கேக்குரவுங்களுக்கு வட்டியில்லாம குடுக்குறதும், சம்பளம் வந்ததும் அவுங்க பின்னாடியே தொங்கி அடுத்த ஆளுக்குத் தெரியாம வசூல் பண்ணிக்குறதும் அவன் செய்ற சேவ.இதுனால அவனுக்கு ஆம்பளைங்க சப்போட்டும் உண்டு. யூனியன் தலைங்களுக்கும் தண்ணிகாட்டி கைக்குள்ள வச்சிருப்பான். அந்தத் தெம்புலதான் அன்னைக்கு மேனேஜர் மெமோ குடுத்தப்பகூட அவர் முன்னாடி சிரிப்ப அடக்கிட்டு நின்னானோ?
அவங்காசுல சாப்ட்டது எனக்கு வெக்கமாப் போச்சு. ‘அப்பன்னா நா இனிமே வரமாட்டேன்’னு நா மூஞ்சியத் தூக்கவும்,‘அடுத்தவாட்டி நீ குடு’ன்னு சோம்ப அள்ளி வாய்ல போட்டுகிட்டான். அடிக்கடி இல்லாட்டியும்,இப்புடி மேஞ்சு சாந்தி பண்ணிகிட்டா நல்லாதான் இருக்கும். நா வாஷ்பெசின்ல கை கழுவுனதும் பக்கத்துலருந்த கம்பீல குத்திருந்த நியூஸ்பேப்பர் துண்ட எடுத்து தொடச்சுக்கக் குடுத்தான்.வாழ்க்க எவ்ளோ எளிமையா இருக்கு! ‘நீ மொதல்ல போ. நா லேட்டா வந்தா யாரும் கேக்கமாட்டாங்க‘ன்னு அவன் கம்பீரமாப் பல்லக் குத்திகிட்டே என்ன அனுப்பிவச்சான். எங்களுக்கெடைல இருந்த பொட்டத் தெடல்ல இந்த ரகசியம் புதுசா மொளச்சிடுச்சி.
சாய்ங்காலம் வண்டி கொண்டாராத தஜ்மால் , என்னையே ஓட்டச் சொல்றான்.இது என்ன புதுப் பழக்கோன்னு நெஜம்மாவான்னு கேக்குறேன். அதுக்கு அவன்‘தெனோம் நானேதான ஓட்றேன்?இன்னைக்கு ஒருநாள் நீ ஓட்டு. டபிள்ஸ் அடிக்கத் தெரியாதுன்னா வேணா’ன்னு ஏளனமாப் பாக்குறான். எனக்கு ரோஷம் பொத்துகிட்டு வந்துடிச்சு.‘யாருக்குத் தெரியாது?‘ன்னு நா முன்னாடி ஒட்டுல உக்காந்து ஓட்றேன். கொஞ்சதூரம் போனதும் என் இடுப்பப் பின்னாடீலர்ந்து அவன் வெரலுங்க பட்டும் படாம புடிக்குது. எனக்கு கிச்சுகிச்சு மூட்றமாதிரி கூச்சமா, சிரிப்புல ஒடம்பு குலுங்குது. அதக் காமிச்சிக்காம அடக்குறதுக்குக் கன்னத்து உள்சதையக் கடிச்சுக் கடிச்சுக் கன்னிப்போகுது. சும்மா க்ரிப்புக்குப் புடிச்சிருப்பான்.
தஜ்மால் வெயிட்டையும் சேத்து ஓட்றது எனக்குக் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா அவன் ரெண்டு பக்கமும் காலப்போட்டு உக்காந்ததால பாலன்ஸ் பரவால்ல. என் கவனத்தையெல்லாம் ரோட்ல வச்சு ஓட்றேன். பார்க்குக்குள்ள பூந்து வரப்ப அவன் உள்ளங்கைங்க என் இடுப்புல பதியப் புடிக்குது.பொடவ சுத்தாத லெஃப்ட் சைட் அவன் கைச்சூட்ட ஒணருது. இப்ப என்னோட சிரிப்பு தன்னால அடங்கிடுச்சு.
தஜ்மால் இதுவரைக்கும் இப்புடி நடந்ததில்ல. ஆனா இவன் கொழந்தையோ, பைத்தியமோ இல்ல; மணி மணியா மூணு புள்ளைங்களுக்குத் தகப்பங்குறது இப்பதான் எனக்கு ஒறைக்குது. நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு அவங்கூட ஹோட்டலுக்குப் போனது அவன மிஸ்லீட் பண்ணிருக்கலாம்.தெரியாமலா ஆஃபீஸ்ல மத்த பொம்பளைங்கல்லாம் எவங்கூடயும் பட்டும் படாம இருக்காளுங்க? எதாவுது காரியம்னா மட்டும் பல்லக் காமிச்சிட்டு முடிஞ்சவொடன்னே ஈவெரக்கமில்லாம மூஞ்சத் திருப்பிக்குவாளுங்க.நா மட்டும் அடக்கிகிட்ருக்காம பெரிய்ய சாஃப்ட்வேர்ல வேல புடுங்குறமாதிரி ஆடுனா- அனுபவிக்க வேண்டியதுதான்.
ஐய்யய்யோ,இப்ப என்னா செய்றது? எனக்கிப்ப பயத்துல நெஞ்சு படபடக்குது;லேசா வேர்க்குது.பின்னாடி திரும்பிப் பாக்கத் திராணியில்ல. அவன் மூஞ்ச முறிக்க எனக்கு மனசு வரமாட்டேங்குதே...எச்சுமுழுங்கி,‘இப்டிப் பண்ணா எப்புடி ஓட்றது?’ங்குறேன். ஹெல்மெட்டுக்குள்ளருந்து தீனமா வந்த எங்கொரல் கேக்கல போல. கைப்புடி தளரல. இப்ப நா தெளிவ்வா,‘ஐஸே கரே தோ கைஸே காடி சலாதீ?’ன்னதும் அதறாம பூனமாதிரி கைய எடுக்குறான். அதுக்கப்பொறம் எறங்குற வரைக்கும் நாங்க பேசிக்கவே இல்ல.
வீடு வந்ததும் எறங்கித் தலகுனிஞ்சு நிக்குற தாஜ்மால் நைஸா ஏங்கண்ண ஆராயுறான். நா எதையும் காமிச்சுக்காம எப்பையும்போல ஃபிரெண்ட்லியா சிரிச்சு ,‘பை‘ன்னு சொல்றேன். அவனும் பழைய தஜ்மாலாகி தன்னோட பளிச் சிரிப்போட ஸ்கூல் பையனாட்டம் ‘பை‘சொல்றான். அவன் போறதுக்குள்ள நா திரும்பிப் பாக்காம கௌம்புறேன்.என்னைக்கும் இல்லாத வேகத்தோட என் வண்டி சீறிக்கிட்டு ஓடிப் போவுது.
(பா.கண்மணி, பெங்களூருவில் வசிக்கிறார். வங்கித் துறையில் பணிபுரிந்தவர். கவிதைகள், கதைகள் இதழ்களில் பிரசுரம் ஆகி உள்ளன.)
டிசம்பர், 2015.