ஓவியம் மனோகர்
சிறுகதைகள்

மாது என்றொரு மானுடன்

இரா. முருகன்

நடுராத்திரி கழிந்து ராத்திரியா காலையா என்று தீர்மானிக்க முடியாத மூன்றே கால் மணிக்கு மாது வந்து சேர்ந்தான்.

 எங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருக்கும் எல்லாக் குடித்தனங்களும் மட்டுமில்லாமல், அயல் குடித்தனங்கள், எதிரே ஆவி எழுப்பும் ஜெபக் கூடத்தில் சகோதரர் புன்னோஸ் வடக்கன்,  எலிசபெத் டெய்லர் தையல்கடைக்குள் தூங்கும் காஜா போடுகிற பையன் சமஷ்டி, தெருக்கோடி சைக்கிள்கடை சுந்தரேசக் குருக்கள் என்று எல்லோரையும் எழுப்பும் அளவு என் ப்ளாட் வாசல் கதவை ஓங்கித் தட்டி, நான் திறந்தபோது கதவோடு ஒட்டிக் கொண்டு நிற்கிறான்.

‘‘திருச்சியிலே சாயந்திரம் வெங்காய தோசை தின்னுட்டு ஏறினேன். பஸ் இப்போ தான் மெட்ராஸ் வந்து சேர்ந்து மாம்பலத்துலே இறக்கி விட்டான். தோசை இன்னும் எதுக்களிக்கறதுடா, கொஞ்சம் ஜீராம் இருந்தா கொடேன், அப்படியே ஒரு டம்ப்ளர் மூத்ரச் சூட்டுலே வெந்நீர்''. செல்லமாகக் கையில் இடுக்கிய தோல்பையும் இன்னொரு கையில் ஒரு பிரம்மாண்டமான துணிப் பையுமாக எனக்கு முன்னால் நிற்கிறவனை உள்ளே வரச் சொன்னேன். அஞ்சறைப்பெட்டியிலிருந்து சீரகமும், இன்வர்ஷன் ஹீட்டரில் சுட வைத்த வென்னீரும் கொடுத்தேன். இனிமேல் நான் தூங்கினாற்போல தான்.

‘‘நாளைக்கு டெக்ஸ்டைல் கஸ்டமர் கான்ப்ரன்ஸ். ஜெயின் லெட்டர் போட்டு கூப்பிட்டிருக்கான்.'' சொல்லியபடி அவன் தோல்பையைத் திறந்து தேட, நான் அவசரமாகக் கையமர்த்தி, விடிந்ததும் பார்க்கலாம் என்றேன். வாசல் அறையில் டி.வி,யை ஓரமாக நகர்த்திவிட்டு நாற்காலிகளை ஒன்றன்மேல் ஒன்றாக ஆடி மாதத்தில் கல்யாண மண்டபம் போல அடுக்கி விட்டு, பாயைப் போட்டு அவனைப் படுக்கச் சொன்னேன். ‘‘நாளைக்கு இல்லே கான்பரன்ஸ், ராத்திரி பனிரெண்டு மணிக்கு மேலே ஆச்சே, இன்னிக்குத்தான் அது.'' எனக்கு உப்புப் பெறாத உண்மைத் தகவலைச் சொல்லியபடி தூங்கிவிட்டான்.

தூக்கம் வரவில்லை. புதுசாக வரக்கூடிய கஸ்டமர்களைச் சந்தித்து நம் மேல் ஈர்ப்பு இன்னும் அதிகம் வரவைக்க பேசி வென்று வா என்று ஆபீசில் கைகாட்டி இருக்கிறார்கள். அடுத்த வாரம் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்ப வேணும். ப்ராங்க்பர்ட், லண்டன், பாரீஸ் என்று மூன்று நகரம். முப்பது நாள் பயணம். எல்லாம் சரியாக வந்தால்.. ரெட்டைக் குடித்தனம் இல்லாமல் குடும்பம் முழுவதும் ஐரோப்பாவுக்கே குடி மாறலாம்.

பாண்டிச்சேரியில் வீடும் சென்னையில் உத்தியோகமுமாக என்னைப் போல் இருப்பதில் ஒரு சிறிய சங்கடம் ‘இதோ நாலே மணி நேரத்தில் போய்ச் சேரும் தொலைவில் நம்ம ஊர். குடும்பம் அங்கேயே சௌகரியமாக இருக்கட்டும். நாம் வெள்ளிக்கிழமை சாயந்திரமானால் காரோ, பஸ்ஸோ ஏறி பாண்டி. ரெண்டு நாள் ஹாயாக வீடு. திங்கள் அதிகாலை திரும்ப சென்னை.' இப்படி பழகிப் போவதால், சென்னையில் ஃப்ளாட் பெரும்பாலும் நாம் மட்டும் ஒற்றையனாகத் தங்கியிருக்க மட்டுமாக இருக்கும். பிரச்சனை அங்கே தான் ஆரம்பிக்கிறது. நெருங்கிய உறவு, தூரத்து உறவு, நட்பு, நட்பின் நட்பு என்று சகலரும் உரிமை கொண்டாடி எங்கெங்கிருந்தோ புறப்பட்டு வந்து குறைந்தது இரண்டு நாளாவது நம் வீட்டில் தாவளம் அடித்துத் தங்கிப் போவதை வழக்கமாகக் கொள்வதைப் பொறுத்துக்கொள்ள வேண்டிப் போகும். அதுவும் இந்த மாது மாதிரி ஃபேமிலி ட்ரீ போட்டால் அதன் ஈசான மூலையில் வேறேதோ கொடி படர்ந்தமாதிரி உறவு இருக்கப்பட்டவர்கள் சுவாதீனமாக ராத்திரி மூன்று மணிக்குக் கதவைத் தட்டி வந்து சேர்வார்கள்.

ஓவியம்

விடிந்து எழுந்தபோது சுடச்சுட காப்பி கலந்து கொண்டு வந்தான் மாது. அவனது வரவின் ஓர் நன்மை அது. என்ன கான்பரன்ஸ், எங்கே நடக்குது என்று சம்பிரதாயமான, பதிலைப் பெரியதாக எதிர்பார்க்காத கேள்விகளோடு நான் நியூஸ்பேப்பரைப் பிரிக்க, ‘‘அப்பளம் வடம் தயாரிப்பாளர்கள் கான்பரன்ஸ்'' என்றான் மாது. ‘‘நீ டெக்ஸ்டைல் கான்பரன்ஸ்'' என்று விடிகாலை வந்தபோது சொன்னாயே?'', என்று கேட்டேன். ‘‘ரெண்டும்தான்'' என்றான் அவன்.

ரிலையன்ஸும் ரேமண்ட்ஸும் ஆனையடி அப்பளம் தயாரிக்கும் சாத்தியம் பற்றி யோசித்தபடி குளிக்கப் போனேன். வந்தபோது என் டை ஒன்றை பனியனுக்கு மேலே சினிமாப் பட ஜூனியர் மோஸ்ட் வில்லன் போல கழுத்தில் நாலைந்து சுருக்கு விழக் கட்டியபடி நிலைக்கண்ணாடி முன் நின்று கொண்டிருந்தான் மாது. ‘‘டை கட்டிப் போனால் தான் கான்பரன்ஸ்களிலே கவுரவமா நடத்துவாங்க'' என்றபடி கழுத்துச் சுருக்கை இன்னும் இறுக்க, அந்த நீலக்கலர் சைனீஸ் டை டர்ரென்று கிழிந்தது.

‘‘மன்னிச்சுக்கோ, வேறே டை பருத்தியிலே இருந்தாக் கொடு'' என்றான் மாது. நான் இன்னொரு வெளிர்நீல சைனீஸ் டையை ஜாக்கிரதையாக டபிள் நாட் போட்டு அணிந்து அப்படியே கழற்றி மாதுவிடம் கொடுத்தேன். சுருக்கை இறுக்கவும், அவிழ்க்காமல் தளர்த்தவும் மட்டும் சொல்லிக் கொடுத்தேன். அந்த டையை இன்னும் இருபது வருஷம் அப்படியே கட்டிப் போகலாம் என்றான் மாது. அவனுடைய ஜீன்ஸ் பேண்ட்டோடு டை சரிப்பட்டு வராது என்று தெரிந்து, என் பேண்ட் ஒன்றை கீழே மடக்கி விட்டு உடுத்தக் கொடுத்தேன். புது முழுக்கை வெள்ளைச் சட்டையும் அதே போல.  ஷூ மட்டும் என்னிடம் அதிகமாக இல்லாததால், போட்டு வந்த செருப்போடு தான் அவன் போக வேண்டிய சூழ்நிலை.

‘‘பரவாயில்லே, அங்கே ஷூ, சாக்ஸ் எல்லாம் பிரசெண்ட் பண்ண சாத்தியம் இருக்கு'' என்றான் மாது. என்ன மாதிரி கான்பரன்ஸ் அது என்று குழப்பம் தான் அதிகமானது.  வாயைத் திறந்து கேட்டேவிட்டேன் மாதுவிடம்.

‘‘அது ஒண்ணுமில்லே. டெக்ஸ்டைல் கான்பரன்ஸ் அந்த ஃபைவ் ஸ்டார் ஓட்டல்லே ஒரு ஹால்லே நடக்கறது. அப்பளம் உற்பத்தியாளர் சந்திப்பு அதே ஓட்டல்லே வேறே ஒரு ஹால்லே நடக்குது. அப்பளக்காரங்க டிபன் தருவாங்க, டெக்ஸ்டைல்வாலா சோறு போடுவாங்க. அங்கேயும் இங்கேயும் நடந்துட்டிருந்தா ரெண்டு இடத்திலேயும் இலவசமா யானை, குதிரை கூட கிடைக்கலாம். ஷூ என்ன பெரிய விஷயமா?'' சொல்லியபடி வெற்றிப் பார்வை பார்த்தான் மாது. 

 நானும் டை கட்டிப் போய் கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை பார்த்து, பிஸ்கட் விழுந்து தற்கொலை செய்து கொண்ட டீ பருகி, ஒரே தட்டில் கோழி மாமிசமும், பருப்புருண்டைக் குழம்பும், ஜாங்கிரியும் நிறைத்து வந்து நின்றபடியே சாப்பிட்டு கம்ப்யூட்டர் கான்பரன்ஸ்கள் ஏகதேசம் ஆயிரம் போய் வந்திருக்கிறேன். எங்கேயும் எனக்கு கிழிந்த சாக்ஸ் கூட வரவு இல்லை.

‘‘இந்தா, உனக்குத்தான் வாங்கினேன், கொடுக்க மறந்து போச்சு'' என்று ஒரு சின்னஞ் சிறிய பிஸ்கெட் பாக்கெட்டை எனக்கு அன்பளித்து, பஸ்ஸுக்கு சில்லறையாக ஐநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு புறப்பட்டான் மாது.  

ஆபீஸில் நுழையும்போதே ஓய்வான தினம் என்று புத்தியில் பட்டுவிட்டது. எப்படி என்றெல்லாம் கேட்கக்கூடாது. சில நாள் இந்த மாதிரியான கண்டுபிடிப்புகளுக்கான சமிக்ஞைகள் காற்றிலேயே கலந்திருக்கும். முக்கியமாக கஸ்டமர்களின் ஸ்தலங்களில் விடுமுறை தினம் என்றால் இந்த நிம்மதி கியாரண்டியாகக் கிடைக்கும். இல்லாமலும் சிலநாள் ஏற்படலாம். கஸ்டமர் ஆபீஸில் எல்லோரும் அவ்வப்போது கான்பரன்ஸ் எதற்காவது போகலாம். அந்தத் தினங்களும் சுபயோக நாட்களே.

‘‘இன்னிக்கு பிக் டேடா கான்பரன்ஸுக்கு இன்வைட் வந்திருக்கு. நான் போகலாம்னு நினைச்சேன். மதியம் புட்பால் போறேன். நீ கான்ப்ரன்ஸ் போ'' என்றார் என் தலைவர். நிச்சயம் இன்றைக்கு ஓய்வான தினம்தான். 

‘‘டை கட்டிப் போ. சாப்பாடு எல்லாம் தடபுடலா இருக்கும்'' என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் சொல்லி, கையை மடக்கி வாயில் வைத்து, ‘‘பிரெஞ்ச் ஒயின் ஆறா ஓடும்'' என்று கொஞ்சம் அசூயையோடு பார்த்துக் கடந்து போனார்.

என் மேஜைக்குள்ளே எப்போதும் நாலைந்து டை வைத்திருப்பேன். இன்றைக்கு பார்த்தால் அதில் ஒன்றே ஒன்றுதான் மஞ்சள் நிறத்தில் ஏக வித்தியாசமாக முழித்துப் பார்த்தது. மற்ற டைகளை கஸ்டமர் விசிட்,  ப்ராஸ்பெக்ட் விசிட் என்று யார் யாரோ இரவல் வாங்கிப் போய்த் திரும்பத் தரவே இல்லை. எங்கள் பாஸும் இப்படிக் கடன்பட்டார் பட்டியலில் உண்டு.

மஞ்சள் டையும், பாஸிடம் கடன் வாங்கிய பிளேசருமாக நான் கம்பெனி ஏற்பாடு செய்து கொடுத்த சொகுசு காரில் கான்பரன்ஸ் நடக்கும் இடத்துக்குப் புறப்பட்டேன். எங்கே என்று கூடப் பார்க்காமல் அலுப்போடு இன்விடேஷனை டிரைவரிடம் கொடுத்து விட்டுச் சிறு துயில். அரைமணி நேரத்தில் போய்ச் சேர்ந்தாகிவிட்டது. கீழே பிக் டேட்டா கான்பரன்ஸ் பெயர் பார்த்து எத்தனையாவது மாடி என்று தெரிய வந்தது. லிப்டில் புகுந்தேன்.

‘‘வாய்யா ஜேம்சு'', பழக்கமான குரல். திகைத்துப் போய்ப் பார்த்தேன். மாது, ‘‘ஏன்பா, நீயும் இங்கேதான் வரேன்னு சொல்லியிருந்தா சேர்ந்தே வந்திருக்கலாமே..'' என்றான் சகஜ பாவமும் குற்றம் சாட்டும் தொனியுமாக.

‘‘இது டெக்னிகல், வேறே சமாச் சாரம்'' என்றேன் லிப்ட் நிற்பதை எதிர்பார்த்து.

‘‘கான்ப்ரன்ஸ்னு வந்தா எல்லாம் ஒண்ணுதான். குடி. தீனி. இலவச வஸ்துகள்.''

தொழில்நுட்பம் துப்பி, எடுத்து மேலே பூசிக்கொண்டு, தலையில் தேய்த்து, லோட்டாவில் பிடித்துக் குடித்து டெக்னிகல் லகரி ஏறி எல்லோரும் நடமாடும் பிக் டேட்டா கான்பரன்ஸ் எங்கே, சாத்வீகமான அப்பளம் வடம் வத்தல் எங்கே..

நான் நாலாவது மாடியில் இறங்க, மாதுவும் என்னோடு ஒட்டிக்கொண்டு லிப்ட் வெளியே வந்தான். ‘‘சொன்னேனே, அது டெக்னிகல் கான்பரன்ஸ். அங்கே எல்லாம் கூப்பிடாம போக முடியாது. உள்ளே வர்றவங்களை பரீட்சை செஞ்சு பார்த்துத்தான் அனுமதிப்பாங்க'' என்று அவனுக்கு சாம, பேத, தான, தண்டம் என்று அனைத்தையும் குழைத்து பயமுறுத்திப் பார்த்தேன்.

‘‘எனக்கெதுக்கு உங்க கான்பரன்ஸ்? டெக்ஸ்டைல் கான்பரன்ஸ் இந்த மாடிதான். அங்கே போயிட்டிருக்கேன். செட்டிநாடு சைவம் டிபனாம்.''

அவன் திரும்பிப் பார்த்து, ‘‘ஏன் இத்தனை கேவலமா மந்திரித்துவிட்ட ஆடு மாதிரி கழுத்திலே மஞ்சத் துணியைக் கட்டிட்டிருக்கே?'' என்று என் டையை இகழ்ந்துவிட்டு, தன், தன் என்ன, என், வெளிர்நீல டையை பெருமையோடு பார்த்தபடி நகர்ந்தான்,

கான்பரன்ஸ் ஹால் உள்ளே  ஒரு சுந்தரிப் பெண்குட்டி புன்சிரிப்புப் பொழிந்தபடி எதிர்ப்பட்டாள். அவள் எதிர்பார்த்ததைக் கொடுத்தால் கண்ணால் நன்றி சொல்லி உள்ளே விடுவாள். எடுக்கக் கையை என் பாக்கெட்டில் விட்டபோது தான் உரைத்தது. என் பிசினஸ் கார்ட் எடுத்து வரவில்லை. சிரிப்போடு இன்னொரு சிரிப்பு சுந்தரியைக் கூட்டி வந்தாள் அவள். அவள் போய் இன்னொரு சிரிப்பு மத்ய வயசான அம்மாவைக் கூட்டி வந்தாள். அவள் சிரித்தபடி போய் ஒரு வழுக்கைத் தலையரோடு வர, அவர் என் பக்கத்தில் வந்து முகர்ந்து பார்த்து விட்டு உள்ளே வரச் சொன்னார்.

‘‘ஒரு கடி ப்ளீஸ்'', அலாஸ்கா குளிர்பிரதேசம் போல் கனமான பனிக் கோட்டோடு நின்றவர் நீட்டிய பிஸ்கட் ட்ரேயில் இருந்து ஒரு விள்ளல் எடுத்தபடி உள்ளே பார்த்தேன். கொறிக்காமல் மெல்ல மென்று சாப்பிட ஆகாரம் எங்கே என்று கண்கள் தேட, ‘‘கான்பரன்ஸ் ஆரம்பமாகிறது'' என்று உள்ளே துரத்தினார் துருவக் கரடி.  அப்பளம் வடாம் கான்பரன்ஸுக்குப் போய் வயிறு நிறையக் கொட்டிக் கொண்டிருக்கும் மாதுவை நினைத்தேன்.

பிக் டேட்டா அனலடிக்ஸ் என்று தொடங்கி ஒரு வெள்ளைக்காரர் மூச்சு விடாமல் பேச, தூக்கம் எங்கே எங்கே என்று வந்தது. சின்ன ப்ளாஸ்கில் வைத்த காப்பியை ஒரு மடக்கு சீப்பிக் குடிக்கச் சுவர்க்கம் தெரிந்தது.  ‘வால்யூம், வெலாசிடி, வெரைட்டி' என்று பிரஞ்சுப் புரட்சியைப் பிரகடனம் செய்த வால்டேர் போல விரல் நீட்டி முழங்கிய துரை ஒரு வினாடி தயங்க வாசல் கதவு திறந்து ஒரு தலை தட்டுப்பட்டது. மாதுதான்.

வாசலில் இருந்து கையைக் காட்டி வாவா என்று என்னை அவன் கூப்பிட, வாசலை ஒட்டிய நாற்காலியில் இருந்த தாட்டியான அம்மையார் அவனிடம் தகவல் பெற்று என் பக்கம் நடந்து வந்து மாது அழைப்பதைத் தெரியப்படுத்தினார். இன்னும் அதிகம் யாரும் படுத்தாமலிருக்க நானே வாசலுக்குப் போனபோது வெள்ளைக்காரன் டிஸ்ரப்டிவ் காம்படீஷன் என்றபடி என்னைப் பார்த்துத் தீவிழி விழித்ததைத் தவிர்த்தேன்.

‘‘ஏன் மீட்டிங் நடுவிலே வந்து கூப்பிடறே?'' நான் சன்னமான குரலில் படபடத்ததைக் கண்டுகொள்ளாமல் மாது இப்படியும் அப்படியும் அரை வட்டம் சுழல அவன் காலைப் பார்த்தேன். என்ன ஆச்சரியம். புத்தம் புதிய ஸ்போர்ட்ஸ் ஷூ மாட்டியிருந்தான் அவன். அந்த கம்பீரத்துக்கு முன் என் கருப்பு ஷூ பாலீஷ் இன்றி வெளுத்து அங்கங்கே அழுக்கு அப்பி  பரிதாபமாக இருந்தது. இது யார் உபயம் என்று தெரியவில்லை. தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடக்கூடும் எனக்கு.

கேட்டுவிட்டேன்.

‘டெக்ஸ்டைல் கான்பரன்ஸில் டீ ஷர்ட் அறிமுகப்படுத்தப் போறதை ஒரு பார்ட்டி பேசினார். அவங்க தொடர்ந்து ஸ்போர்ட்ஸ் ஷூவும் அறிமுகப் படுத்தறாங்களாம். சாம்பிள் ஷூ கொண்டு வந்திருக்கார். எல்லாம் இது போல படா படா சைஸ். எனக்கு உடனே கொடுத்துட்டார். இன்னும் இருக்கு. நம்ம உறவிலே எல்லாருமே பெரிய திருவடி தானே. உன் ஷூ சைஸ் என்ன?''.கேட்டுவிட்டேன்.

நான் சொல்லிவிட்டு உள்ளே போகும் முன் நிறுத்தி ‘‘சாப்பிட்டியா?'' என்றான். ‘‘எங்கே, அரை பிஸ்கட்டும் ஒரு ப்ளாஸ்க் காப்பியுமா ஒப்பேத்திட்டிருக்கேன்'' என்று சலித்துக் கொண்டபடி உள்ளே போனேன். வெள்ளைக்காரர் பேசி முடித்து கேள்விகளை எதிர்கொண்டிருந்தார். இந்த மாதிரி கான்பரன்ஸுகளில் துறுதுறுவென்று ஏதாவது சம்பந்தமாகக் கேள்வி கேட்டு புத்திசாலி என்று நிரூபித்துக் கொள்ளும் சிலரைப் பார்க்கலாம். அவர்கள் மேதாவிலாசத்தில் மயங்கி அங்கே வந்திருக்கும் நிர்வாகிகள் யாராவது அங்கேயே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் எடுத்து கொடுத்து விடுவார்கள் என்ற அசட்டு நம்பிக்கைதான் இந்த முந்திரிக் கொட்டைத் தனத்துக்குத் தூண்டுகோல்.  ஆனாலும் இவர்கள் தூங்கா நகர வாசிகள். ஹாலிவுட் சினிமா பார்க்கிற சுவாரசியத்தோடு பிக் டேட்டா அனலடிக்ஸை அணுகுகிறவர்கள். வெள்ளைக்காரர் மிகையாக ஆச்சரியம் தெரிவித்தபடி ஏதோ விளக்க எடுத்து பேச்சாளர் தியேட்டர் கழிவறையில் தொடர்ந்து அரை மணி நேரமாக மூத்திரம் போகிறவனுக்குப் பின்னால் பொறுமையின்றி கால் மாற்றி மாற்றி நிற்கிறவன் போல் டென்ஷனோடு நின்று கொண்டிருந்தார்.

அவர் ‘‘நான் ஒரே ஒரு விஷயம் மட்டும் சுருக்கமாகச் சொல்றேன்'' என்று பேச ஆரம்பிக்க நானும் ஒரு சேஞ்சுக்காக காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தேன். வாசல் கதவு திறக்க பயத்தோடு நோக்கினேன். மாது இல்லை.

பேசிய இரண்டு சான்றோர் பெருமக்களும் கலந்துரையாடி மகிழ்ந்ததும், காப்பி நேரம் என்று அறிவித்தார்கள். ஹால் ஓரமாக காப்பி குடுத்து கொண்டிருந்தபோது ‘இந்தா, இதைப் புட்டுப் போட்டுக்கோ. அப்புறம் காப்பி குடிக்கலாம்''. திரும்பிப் பார்க்கக் கொடை வள்ளல் போல், பச்சை கலர் வாழை இலை டிசைன் ப்ளாஸ்டிக் தட்டில் பலகாரத்தோடு மாது.

அவனை அப்படியே தள்ளிக்கொண்டு ஓரமாகப் போனேன். ஸ்லைஸ்டு அண்ட் டைஸ்டு டேடா என்று விட்ட குறை தொட்ட குறையாக  டாய்லெட்டுக்குப் போனவரைத் தடுத்து நிறுத்தி யாரோ சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள். சுவரைப் பார்த்தபடி நின்று தட்டில் இருந்து வாரி விழுங்கினேன். ‘‘இதை எதுக்கு இவ்வளவு தூரம் எடுத்துட்டு வந்தே?'' ஒப்புக்குக் கேட்டேன் என்று மாதுவுக்குத் தெரிந்திருக்கும். அதனால் என்ன?

‘‘நான் இன்னும் நாலு இட்லி தின்னுட்டு உனக்கும் எடுத்துண்டு வந்தேன். இது சௌகரியமா இருக்கற நேரம். அதாம்பா, கம்பர்ட் ப்ரேக்''.

‘‘கம்பர்ட் ப்ரேக்னா டாய்லெட் போறது மாதிரியான காரியத்துக்காக'' நான் சொல்வதை மாது பொருட்படுத்தவில்லை. ''உனக்கு ஷூ கிடைச்சாச்சு. அடுத்த கம்பர்ட் ப்ரேக்லே, வந்துதுன்னா கம்பர்டபிளா டபிள்ஸ் போய்ட்டு, ஷூ எடுத்து வரேன்''. பதிலை எதிர்பார்க்காமல் அவன் வெளியே நடந்தான்.

பிக் டேட்டா ஸ்ட்ரக்சர் நார்மலைசேஷன் என்ற கடமுடா தலைப்பில் ரொம்ப அழகான ஒரு யுவதி, சதா கைக்குட்டையால் மூக்குக்குக் கீழே வியர்வையைத் துடைத்துக் கொண்டு பேசினதை உன்னிப்பாகக் கவனித்தேன். மொபைல் சத்தமின்றி அதிர, ஆபீஸ். எடுத்துக் கண்ணை இடுக்கிக் கொண்டு வாசிக்க, ‘ஐரோப்பா புது கஸ்டமர்கள் அவர்களே வருவதாக இருப்பதால், நீ எங்கேயும் போக வேண்டாம்'. அதிரடி தகவல் அது.

வெறுத்துப் போய் வாசலுக்கு வந்தபோது டை கட்டின நாலு கனவான்கள் அவசரமாக வழி மறித்தார்கள். ‘‘மன்னிக்கணும். இன்றைக்கு பகல் விருந்து தவிர்க்க முடியாத காரணத்தால் நடைபெறாது.  அடுத்த மாதம் எட்டாம் தேதி வேறு பைவ் ஸ்டார் ஓட்டலில் ராத்திரி விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. உங்கள் பிசினஸ் கார்டை இந்தக் கோப்பையில் போட்டுப் போனால் காலகிரமத்தில் அழைப்பு அனுப்பப்படும். மீண்டும் வருந்துகிறோம்.

''போய்யா நீயும் ஆச்சு, சாப்பாடும் ஆச்சு என்று இரண்டு கையும் தூக்கி ‘இட்ஸ் ஆல்ரைட்' என்று காட்டியபடி மாடிப்படிப் பக்கம் வந்தேன்.

‘‘டெக்னிக்கல் கான்பரன்ஸ் இப்படித்தான் பொசுக் பொசுக்குனு முடிஞ்சுடுமா?''. மாது தான்.  கையில் பெரிய பை ஒன்றை வைத்திருந்தான்.

‘‘உனக்குத்தான்'பா. ஸ்போர்ட்ஸ் ஷூ. வீட்டுலே போய் போட்டுப் பாரு''. நான் நிஜமாகவே நன்றி சொல்லி பையை வாங்கிக் கொண்டேன். ‘‘எப்போ வருவே'' என்று கேட்டேன்.

‘‘அப்பளம் டீலர்களுக்காக ஒரு லாட்டரி குலுக்கிப் போட்டாங்க. எனக்கு பம்பர் அடிச்சிருக்கு. லண்டன், பாரீஸ் டூர் தான் ப்ரைஸ். ஏற்பாடு எல்லாம் பண்ணிட்டு இன்னொரு ப்ரண்டை பார்க்கப் போறேன். ராத்திரி வரேன்.''

அவன் கையைக் குலுக்கி விட்டு வந்தேன். என கையிலும் அப்பளம், வத்தல், வடாம் வாசம் தூக்கலாக வந்து கொண்டிருந்ததாகத் தோன்றியது.

ஜூன், 2018.