சிறுகதைகள்

பெண் பார்க்கும் படலம்!

ம. காமுத்துரை

சைலன்சர் பிடுங்கி எறியப்பட்ட கோலத்தோடு தெருவை அலறவைத்தபடி  வீட்டு முன்னால் வந்திறங்கினான் கண்ணன். பைக்கை வீட்டுக்குப் பின்னால் நிறுத்திப் பூட்டினான். வீட்டுவாசலில் குவியலாய் செருப்புகள் ஜோடி போட்டுக் கிடந்தன. அதில் சம அளவில் ரப்பர் வார் போட்ட பெண்கள் அணியும் செருப்புகளும் கலந்திருந்தன.

முகமெங்கும் வியர்வையின் பிசுபிசுப்பு மின்னியது. பைக்கை வேகமாய் ஓட்டி வந்ததில் வெளிக்காற்றையும் மீறி மனசில் ஊறிய வெப்பத்தில் பின் கழுத்திலும் முதுகு ஓடையிலும் ஈர நாம்பலை அறிய முடிந்தது. நிச்சயமாய் தலைமுடியும் கலைந்துதான் இருக்கும். இப்படியே வீட்டுக்குள் நுழைந்தால் அம்மாவின் வசவு தாங்க முடியாது. அதும் இன்னைக்கி தங்கச்சியை பெண்பார்க்க வந்திருப்பவர்கள் முன்னால் திட்டினாலும் ஆச்சர்யம் இல்லை. ஆனால். ஈஸ்வரி வந்திருப்பாளே! அசடு வழிந்து நிற்கமுடியாது.

சட்டெனத் தோன்றிய யோசனையில் எதிர்ப்புறம் ஓடிய சந்தில் நுழைந்தான். நேர்ச்சந்தில் அப்பாயி வீடு. பத்தே எட்டுத்தான். நாலே எட்டில் தாவிப் போய்ச் சேர்ந்தான் வீடு பூட்டியிருந்தது. கதவை அடுத்திருந்த மாடக்குழியில் கைவிட்டான்.

சணல்கயறு கட்டிய தொங்கலுடன் சாவி இருந்தது.

வாசலை ஒட்டிக் கிடந்த தண்ணீர்த் தொட்டியில் கைவிட்டு நீரை அள்ளி அறைந்து முகம் கழுவினான். கதவைத் திறந்து கொடியில் கிடந்த அப்பாயினது சேலையில் முகம் துடைத்துக் ஆணியில் தொங்கிய கையகலக் கண்ணாடி பார்த்து தலைவாரினான். பவுடர் இல்லை. திருநீரு கிடைத்தது. ஆள்காட்டி விரலில் தொட்டு பட்டும்படாமல் புருவ மத்தியில் இட்டுக் கொண்டான். இருந்தாற்போலவே கதவைப் பூட்டி சாவியை மாடக்குழியில் வைத்துவிட்டு தன் வீட்டிற்கு வந்தான்.

திண்ணையில் வழுக்கையும் வெண்மிளகுத் தாடியுமாய் ஆண்களும் பெண்களுமாக நாலைந்து பேர் அமர்ந்திருந்தனர். எல்லோரையும் ஒருசேரப் பார்த்தபடி தலையை அசைத்து வலதுகையால் நெஞ்சைத் தொட்டு ‘வாங்க' என வரவேற்றான்.

‘இவெந்தே எம் மூத்தபேரெ ! தனத்துக்கு அண்ணே. தேனில ஒர்சாப்பு வச்சிருக்கான்.'அம்மாச்சி புதியவர்களிடம் அவனை அறிமுகம் செய்வித்தது.

‘டப்புடப்புன்னு தெருவே அலறுற மாதிரி சித்த மின்னாடி பைக்குச் சத்தம் கேட்டுச்சே. அது நீ தானா?' அவனைப் பார்த்த பார்வையில் கேட்காமல் கேட்டனர். இன்னும் வித்தியாச வித்தியாசமான ஆரான் சத்தங்களுடனும் இரவில் கலர்க்கலராய் ஒளிரும் விளக்கு ஜோடனைகளுடனும் விதவிதமான வகையில் பைக்குகள் ஓட்டி வருவான்.

இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கல் மற்றும் எக்சேன்ஞ் பணிகளுக்கு அணுகவும். ‘ப்ளூஸ்டார் கண்ணன்'. எதற்காக அந்த ஸ்டார் என்பது இப்பவுமே எவருக்கும் புரியாத புதிராக இருந்தது. ‘எல்லாம் ஒரு கெத்துதான்!' எனச் சொல்லிக் கொள்வான்.

தாழ்வாரத்தைக் கடந்து வீட்டுக்குள் நுழைந்தான். அடுப்படியில் வெக்கை வடிய, உள்ளே எதோ தயாரிப்புப் பணி நடந்து கொண்டிருந்தது, பகல்ப் பொழுதிலும் அதிசயமாய் வீட்டுக்குள் லைட் எரிந்து கொண்டிருந்தது.

சுவரோரமாய் விரித்திருந்த சமுக்காளத்தில் கொலுபொம்மை போல அலங்கரிக்கப்பட்டு தனம் உட்கார வைக்கப்பட்டிருந்தாள். பெரிய பொம்பளையாய் சேலையைச் சுற்றி, தலை கொள்ளாமல் மல்லிகைப்பூவும், கனககாம்பரமும் பின்பாரமாய் இழுக்க, கழுத்தில் அம்மாவின் ரெட்டைவடச் சங்கிலியும் நெக்லசையும் அணிவித்திருந்தனர். தனத்திற்கருகே இரண்டு புதிய பெண்கள் அமர்ந்திருக்க, அம்மா நின்றிருந்தது. கண்ணனைக் கண்டதும் அம்மாவும் அங்கிருந்தவர்களிடம் அவனை அறிமுகம் செய்வித்தது. அக்கணத்தில் லேசாய் தலை உயர்த்தி கண்ணனைப் பார்த்து முறுவலித்தது தனம்.

‘கொஞ்சம் வழி?'

அடுக்களையிலிருந்து, ஈஸ்வரி காப்பித் தம்ளர்களை ஏந்திப் பிடித்துக் கொண்டு கண்ணனுக்குப் பின்னால் நின்று குரல் விடுத்தாள்.

அடர் நீலத்தில் தாவணியும், அதே நிறத்தில் கொஞ்சம் வெளிறியதான ரவிக்கையையும் அணிந்து ஒரேஒரு ரோஜாப்பூவை மட்டும் பின்னந் தலையில் ஹேர்ப்பின் குத்திச் சூடியிருந்தாள். வேறு எந்தவித அலங்காரமும் இல்லாமலே பளிச்சென வானத்து நிலாபோல மின்னினாள்.

கானா விலக்கிலிருந்து கீழிறங்கும் போது புறப்பட்டுவரும் தென்மேற்கு பருவக்காற்றின் சுகந்தத்தையும், ஆளைத் தள்ளிவிடும் அதன் வேகத்தையும் அக்கணத்தில் அனுபவித்தான்.

அப்போதுதான் கண்ணனுக்குத் தான் பவுடர் போடவில்லை எனும் ஞாபகமே வந்தது. இனி எங்கே  பவுடர் பூச! வெறும் கையால் முகத்தை விறுவிறு எனத் தடவி மசாஜ் பாலீஷ் செய்து கொண்டான்.

‘கல்லுச்சாமி மாதிரி உம்மானாச்சியா நிக்காட்டி வந்தவங்கள ஒரு வாத்த, வாங்கன்னு கேக்க வேணம்மா?' யாரையோ சொல்வது போலச் செல்லக் கண்டிப்பு செய்து கொண்டே அனைவருக்கும் காப்பியை விளம்பினாள் ஈஸ்வரி. கண்ணன் முகம் சள்ளென வியர்த்தது.

ஈஸ்வரி, தனத்தின் சோட்டுக்காரப் பிள்ளை. பக்கத்து வீடும்கூட, காலையில் வாசல் தெளிப்பதில் ஆரம்பித்து தண்ணியெடுக்கப் போவது, மாலையில் கோயிலுக்குப் போவதுவரை அத்தனைக்கும் ஒன்றாகத்தான் போவார்கள்.

விடிந்தது முதல் அடைவதுவரை பட்டறையை விட்டு நகராத கண்ணனுக்கு ஈஸ்வரியின் வருகைக்குப் பிறகு கடையில் வேலை நேரம் குறைந்து போனது. சமீபமாய் ஈஸ்வரி தனது அம்மாவை அத்தை எனவும் அழைக்கிறாள்.

‘வந்த வொடனே தம்பி கேட்ருச்சே!' ஒரு பெண்மணி சட்டென ஈஸ்வரிக்கு பதில் சொன்னாள். எப்போது யாரைக் கேட்டோம் என்பது நினைவில்லில்லை.

அமர்ந்திருந்தவர்கள் தனத்திடம் ஏதேதோ கேள்விகள் கேட்டார்கள்.

கண்ணன் அடுக்களை நிலைப்படியில் சாய்ந்தபடி நின்றான். மூன்றடுக்கு வீடு. அகலமான, திண்ணையும், கூரை இல்லாத தாழ்வாரமும் உள்ளொடுங்கிய இந்த அறையுமே மொத்த விஸ்தீரணம். உள்ளறையில்தான் முன்பக்கம் அடுக்களையும் இருந்தது. இன்றைக்கு அடுக்களை ஈஸ்வரியின் ஆளுமையில் இருக்கிறது போலும். ஈஸ்வரியின் தாயாரும் உள்ளேதான் இருந்தார்கள். அவனைக் கண்டும் காணாத மாதிரி ஆனால் அவனது கண்பார்வைக்கு உட்பட்ட பகுதியிலேயே சுற்றிச் சுழன்று கொண்டிருந்த ஈஸ்வரி அவன் எதிர்பாராத ஒரு கணத்தில் அவனது கையிலும் ஒரு காப்பித் தம்ளரைத் திணித்தாள். அப்போது அவளது ஒற்றை விரல் கண்ணனைச் சுட்டுவிட்டது. அது சர்ப்பத் தீண்டலைப் போல  உச்சிக்குத் தாவி ஏறியது. அந்த போதையுடன், தம்ளரை எச்சில்படுத்திக் கடித்துக் குடித்தான்.

“யேங்க?'

தனத்திற்கு அருகில் உட்கார்ந்திருந்த பெண்களில் ஒருவர், வாசல் பக்கமாய்த் திரும்பி யாருக்கோ

சத்தங் குடுத்தார். அந்தக் குரலை எதிர்பார்த்திருந்த மாதிரி விருப்பமும் தயக்கமுமாய் ஆண்களில் இரண்டுபேர் எழுந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள்..

அவர்களுக்கு வழிவிட்டு அம்மா விலகிக்கொள்ள, நின்றமானைக்கி தம்மை அழைத்த பெண்ணிடம் ஒரு பார்வையையும், தனத்தின் மீது இன்னொரு பார்வையும் வைத்தனர்.

“ஏங்க, பொண்ணு, நம்ம சாமாண்டியக்காப் பேத்தி சாடைல இருக்கில்ல?' அழைத்த பெண் சாடை காட்டிப் பேசினார்.

“அட, இதுக்குத்தெங் கூப்பிட்டியா?' சிரித்தவர், 

‘ம்!' எனத் தலையாட்ட, இன்னொருவர், “ஒண்ணு தெரியுமா, நாம என்னா நெனச்சிப் பாக்கறமோ அது போலதா எதுவும் தெரியும். கோட்டிக்கழுத, நா என்னமோன்னுல நெனச்சே' என்றவர், ‘ஒனக்கு புள்ளையப் புடிச்சுருக்கா?' எனக் கேட்டுவிட்டு அவர், கண்ணன் பக்கமாய் ஒதுங்கினார். கண்ணன் புன்னகைத்தான்.

“பத்தாப்பு படிச்சிருக்காம்ல' அந்தப் பெண்ணே அவருக்குப் பதில் சொன்னார்.

“அப்பிடியா?' கண்ணனைப் உண்மையா என்பது போல பார்த்தார். உண்மையில் தனம் எட்டாம் வகுப்புதான் பாஸ், என்னத்தச் சொல்ல ? தலையை மட்டும் ஆட்டினான்.

‘தம்பி நீங்க என்னா படிச்சிருக்கீங்க ? எங்க வேல பாக்கறீங்க?' கண்ணனது தோளைப் பற்றிக் கொண்டார்.

“அதேன் சொன்னாகள்ல. தேனில ஒர்சாப் வச்சிருக்கார்னு' உடன் நின்றவருக்கு அந்தப் பெண்ணே பதில்

சொல்ல, அம்மா, அவனது ஐ.டி.ஐ படிப்பையும் சேர்த்துச் சொன்னது.

‘பரவால்ல, பரவால்ல: தங்கச்சிக்கு முடிச்ச கையோட இவருக்கும் பொண்ணப் பாத்துருங்க. நடக்க வேண்டியதெல்லா அந்தந்தக் காலத்திலயே நடந்தாத்தே மவுசு'

கண்ணன் பெண்ணைப் பார்த்தான்.

மறுபடியும் ஈஸ்வரி கும்பலுக்குள் புகுந்து

எச்சில் தம்ளர்களைச் சேகரித்துக் கொண்டிருந்தாள். தம்ளரைத் தரும் சாக்கில் அவளது கையைத் தொட்டுவிட எண்ணினான். எல்லோரிடமும் தம்ளரை வாங்கியவள் ஏனோ கண்ணனை மறந்து விட்டு சேகரித்த தம்ளர்களோடு, கழுவ தாழ்வாரம் போய் விட்டாள். சட்டென சோர்ந்த முகத்துடனும் வன்மத்துடனும் கண்ணனும் கையிலிருந்த தம்ளருடன் அவளைப் பின் தொடர்ந்தான்.

பாத்திரங்களை எருச் சாம்பல் தொட்டுத் தேய்த்துக் கழுவி, தண்ணீர் வடியக் கவிழ்த்து வைத்தாள். கண்ணனின் பார்வை பட்ட உறுத்தலாலோ என்னவோ திரும்பி அவனைப் பார்த்தாள்.  கண்ணன் தனது கையிலிருந்த தம்ளரை நீட்டினான்.

களுக்கெனச் சிரித்தபடி ஒருகையால் தம்ளரை வாங்கியவள் மறுகையால் மாராப்பை சரிசெய்து கொண்டாள். கண்கள் மோதி மின்னல் தாக்கியதில் கண்ணனுக்கு பார்வை இருண்டது. இருட்டில் தடுமாறிய கண்ணனை அம்மாச்சி தனது குளிர்ந்த கரங்களால் தாங்கிக் கொண்டது.

“என்னா அப்பனு, காப்பி குடுச்சிட்டியா ? வா, வந்து இப்பிடி ஒக்கார்ரியா?‘  கரிசனமாய்த் திண்ணையில் இடம் ஒதுக்கித் தந்தது. ஏற்கெனவே அங்கே அப்பாயி உட்கார்ந்த வாக்கில் உறங்கிக் கொண்டிருந்தது. வசதியாய் உட்கார்ந்து கொண்டான்.

உள்ளேயும் பெண்பார்க்கும் படலம் தொடர்ந்தது.

அக்டோபர், 2022