ஓவியம் ஜீவா
சிறுகதைகள்

புலி அம்சம்

இரா. முருகன்

மகி எழுந்தபோதே அவர் வந்து விட்டார். ஏகப் பரபரப்பில் இருப்பதாக அவருடைய பேச்சும் நடப்பும் உணர்த்தின.  பூனைக் கண்ணும், பூனை மீசை போல சிலும்பி நின்ற அடர்த்தி இல்லாத மீசையும், முகத்திலும் கைகளிலும் வெளுத்த சிறு வட்டங்களுமாக அலைபாய்ந்தார் அவர்.

'மகி, ரெடியா?''

 பேச முடியாமல் பற்பசை நுரை வாயில் அடைக்க அவரை உட்காரச் சொன்னான்,மகி. நல்ல வேளையாக நாற்காலி இருந்தது.

‘ஸ்ரீ காமராஜ் தலைமையில் காங்கிரஸ் கட்சி சர்க்கார் இன்று பதவி ஏற்கும். ஸ்ரீ பக்தவத்சலம் நிதி மந்திரியாகவும், ஸ்ரீ கக்கன் விவசாய மந்திரியாகவும்..''.

மகி ரேடியோவை அணைத்தான். பக்கத்தில் தினசரி காலண்டர் இன்னும் மார்ச் 2, 1962 வெள்ளி என்று நேற்றைய   தினம் காட்டிக் கொண்டிருந்தது. பரபரவென்று மேல் தாளைக் கிழித்துக் கீழே போட்டார் அவர்.

இரண்டு உதவி டைரக்டர்கள் ஒண்டுக் குடித்தனம் நடத்தும் வீடு. மகி மூன்றாவதாக இங்கே நுழைந்து ஒரு மாதம் தான் ஆகிறது. அவன் உதவி டைரக்டர் இல்லை. மெடிக்கல் ரெப்ரசென்டேடிவ். சின்ன மருந்துக் கம்பெனி என்பதால், வரும் சம்பளத்தில் இந்தக் குடித்தனம் தான் தோதுப்பட்டது.

‘மகி, நேசனுக்கு டீ எல்லாம் கிடையாதா?'

' கீழே கடையிலிருந்து பையன்   டீ எடுத்து வந்தபோது அவர் குரல் சத்தமாகக் கேட்டது. நல்ல, வேளை அதற்குள் வாய் கொப்பளித்திருந்தான் மகி.

‘உங்களுக்கு இல்லாமலா சார்?'' பிரஷ்ஷில் இருந்து கூடுதல் தண்ணீரை விசிறி அடித்து நீக்கிக் கொண்டே சொன்னான் அவன். கொண்டு வந்திருந்த டீயை அவருக்குக் கொடுத்தபடி, நடந்து போன பையனின் முதுகைப் பார்த்து இன்னொரு டீ சொன்னான். அவனுக்குக் கேட்டிருக்காதோ என்ற சந்தேகத்தில் இன்னொரு தடவை இரைந்து சொன்னான்.

‘கிளம்பலாமா?'', என்றார் நேசன். இன்னும் ஷேவ் முடிக்க வேண்டும். குளிக்க வேண்டும். இன்றைக்கு சனிக்கிழமை என்பதால் எந்த டாக்டரிடமும் அப்பாயிண்ட்மெண்ட் இல்லை. ஆகவே சாப்பிட்டு விட்டுக் கிளம்பலாம். ஆனால் அதுவரைக்கும் நேசன் அறையிலேயே உட்கார்ந்திருப்பாரா?

உதவி டைரக்டர்கள் ரெண்டு பேருமே தெலுங்குப் பட ஷூட்டிங் என்று மைசூர் போயிருக்கிறார்கள். அவர்கள் வரும்வரை இது மகிக்கு மட்டுமான இடம் தான். பூட்டிப்போய் சாவியைப் பாதுகாத்து திரும்பி வரும்போது விளக்கு எரிகிறதா என்று பார்த்து, வீடு பெருக்கி, ஆயிரம் காரியம் வீட்டு நிமித்தம் வந்திருக்கிறது. என்றாலும் பொறுத்துக்கொள்ளக் கூடியதுதான்.

‘குளிக்கலேன்னா பரவாயில்லே மகி. புனிதாவும் குளிக்கலே''. நேசன் சாதாரணமாகச் சொல்ல, மகிக்கு இனம் புரியாத பயம் எட்டிப் பார்த்தது. இவரை பாம்பு என்று நினைத்து ஜாக்கிரதையாக இருப்பதா, பழுதை என்று எடுத்துப் போட்டு விட்டு நடப்பதா என்று இன்னும் புரியவில்லை. 

‘பத்தே நிமிஷம் சார்'' என்றபடி ஷேவிங் சோப்பை முகத்தில் பூச, அருகில் வந்து நின்றார் நேசன்.

‘குமாரராஜா சீன் இன்னிக்கு எடுக்கறேன். அப்படியே அம்சமா  நீங்களும் புனிதாவும் சேர்ந்து இருக்கற மாதிரி எடுத்துடலாம்... நோ டயலாக்''.

தாடைக்குக் கீழ் ரேசரை வைத்து மெல்ல மழித்துக் கொண்டிருந்தபோது சொன்னார். அவன் சந்தோஷப்படலாமா சங்கோஜப்படலாமா என்று தீர்மானிப்பதற்குள், ‘புனிதா என் வளர்ப்பு சிறுத்தை'' என்று ரசம் போன சுவர்க் கண்ணாடியில் சிரித்தார்.

மகிக்கும், நேசனுக்கும், சினிமாவுக்கும், சிறுத்தைக்குமான தொடர்பு தற்செயலானது. நேசன் மற்ற குடித்தனக்கார உதவி டைரக்டர்களைத் தேடிப் போன வாரம் இங்கே வந்தபோது அது தொடங்கியது.

''தம்பி, சினிமாவிலே நடிக்கிறீங்களா?''.

ஓவியம்

நேசன் மகியிடம் கேட்ட முதல் கேள்வி இது. யார், எங்கிருந்து வந்திருக்கிறார், யாரைப் பார்க்க வேணும் என்ற தகவல் ஏதுமில்லாமல் திடீரென்று ஒரு தாடிக்காரர் தன்னிடம் இப்படிக் கேட்க, நடிக்கவில்லை  என்றான் மகி.

‘சரி, அப்போ சினிமாவிலே நடிக்கறீங்களா?''

அதே கேள்வியை இரண்டாம் தடவை கேட்கும்போது கேட்ட தொனியில் இருந்த மாற்றத்தை கவனிக்காமல் இருக்க முடியவில்லை அவனால். ‘உங்க முகம் கேமிராவிலே அம்சமா வரும். ஆளும் அம்சமா வாட்ட சாட்டம் தான். முதுகை கோணாம வச்சுக்கிட்டா போதும்''.

‘நான் நேசன். சினிமா ப்ரொட்யூசர், நடிகர், கதை வசனகர்த்தர்''.

அவர் சுருக்கமாகத் தன்னைப் பற்றி மகியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். ‘சிங்கம் புலி கரடி பாம்பு நேசன்'' என்று ஏப்பம் விட்டபடி உபரித் தகவல் தந்தார்.  அதெல்லாம் அறைக்குள் வந்த வாடை எழுந்தது அப்போது.

‘ஒரு ஐநூறு ரூபாய் இருந்தா கொடுங்க. ஷூட்டிங் வரும்போது சம்பளத்தோட கொடுத்திடறேன்''.

 அவர் சகஜமாக அடுத்துக் கேட்க ஆடிப் போய்விட்டான் மகி. சரியாக அறிமுகம் கூட ஆகாமல், சர்வ சாதாரணமாக ஐநூறு ரூபாய் கடன் கேட்கிற இவரைப் பற்றிப் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தபோது போனால் போகிறதென்று இன்னும் கொஞ்சம் தகவல் கசிய வைத்தார்.

‘உங்க சங்காத்திங்களை ஒரு தெலுங்குப் படத்துக்கு கரடி சப்ளை பண்றது விஷயமா பார்க்க வந்தேன். தேடிட்டிருந்ததா பட்சி சொல்லிச்சு. சரி, வர்ற சனிக்கிழமை வரேன்'' என்று அவனுடைய பதிலுக்கு நிற்காமல் கிளம்பியவர் அன்று போகும்போது ‘அடுத்த வாரம்  ரெடியா இருங்க. வனராணி மகன் ஷூட்டிங் ஆரம்பிச்சிடலாம். புனிதாவோட நிறைய சீன் வச்சிருக்கேன்'' என்றார், மகியிடம். தலையும் வாலும் புரிபடாத பேச்சு அது.

அவர் ஒரு வினாடி புன்னகைத்தபடி நிற்க, பணம் இல்லை என்று தயங்கித் தயங்கிச் சொன்னான் மகி. பரவாயில்லை என்று பெருந்தன்மையாக மன்னித்துவிட்டுப் போனார் அவர் அப்போது.

இன்று சனிக்கிழமை. சொன்னபடி வந்திருக்கிறார் .

‘சார், நான் கிளம்பிப் போய் நாலு டாக்டர்களை சந்திக்கணும். எங்க கம்பெனி மருந்து மாத்திரை பத்தி அவங்ககிட்டே எடுத்துச் சொல்லணும்.''

அவன் சொன்னதை நேசன் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. ‘அடுத்த வாரம் பார்த்துக்கலாம். சிறுத்தைப் புலியோட சேர்ந்து நடிக்க இப்போ விட்டா அப்புறம் அம்சமா நாள் நட்சத்திரம் வாய்க்காது'' என்றார் அவர் சீரியஸாக.

‘யார் நடிக்க?'' அடிப்படையான கேள்வியை அவன் எடுத்து விடும்போது இன்னொரு சாயா கொண்டு வந்திருந்த பையன் நாலு பிஸ்கட்டுகளையும் ஒரு காகிதத்தில் சுற்றிக் கொண்டு வந்து நீட்டினான்.

ஒரு பிஸ்கட்டை எடுத்துக் கடித்தபடி ‘நீங்கதான் செகண்ட் ஹீரோ.   புனிதா கிட்டே பழகணும். அம்சமான பொம்பளைப்பா. அந்த ஹீரோயினையும் வரச் சொல்லியிருக்கேன். அறிமுகப் படுத்திக்கிட்டா அடுத்த வாரம் அம்சமா ரேப் சீன் எடுத்துடுவேன்'', என்று மிரள வைத்தார் நேசன்.

‘சார், குளிச்சுட்டு வந்துடறேன்'' மகி சொல்ல, ஒன்றும் பேசாமல் ரேடியோவை ஆன் செய்தார். 'ஆண்டவன் படைச்சான் என் கிட்டே கொடுத் தான்', என்று ரேடியோ சிலோன் உச்சத்தில் பாடிக் கொண்டிருந்ததை சத்தம் குறைத்தார்.

‘நிச்சய தாம்பூலம்  பார்த்தாச்சா?'' என்றார். இல்லை என்று சொல்லிக் குளிக்கக் கிளம்பினான் மகி. ‘நல்லா போய்ட்டிருக்காம். ஐம்பது நாள் ஓடிச்சுன்னா போட்ட பணத்துக்கு மேலே தேத்திடுவாங்க''. பின்னால் இருந்து மகிக்குத் தேவையில்லாத புது ரிலீஸ் சினிமா வசூல் நிலவரம் வந்தது.  

 ‘சார், இன்னொரு நாள் வச்சுக்கலாமா?'' மகி திரும்பி வந்து தலை துவட்டியபடி தயவாகக் கேட்க, அடுத்த குண்டைப் போட்டார் அவர். ‘இன்னொரு நாள் வச்சுக்கவா டாக்சியை வெயிட்டிங்க்லே போட்டிருக்கேன்?''

 ஆக, அவனைக் கிளப்பிக் கொண்டு போவதிலேயே குறியாக இருக்கிறார். போக்குவரத்து செலவுக்குத் தன் தலையில் மிளகாய் அரைக்கப்படும் என்று புரிந்தது மகிக்கு.

டாக்சி கட்டணம் ஏறுகிற பயம் பின்னாலிருந்து இயக்க பதினைந்தே நிமிடத்தில்  ரெடியாகி விட்டான் மகி என்ற மகேந்திரன்.   வாசல் கதவைப் பூட்டும்போது சொன்னார், ‘அடுத்த தெருவிலே அன்னபூரணி ஓட்டல் போய்ட்டு போகலாம். இட்லி கடப்பா அம்சமா இருக்கும்''. அவர் பார்க்கிற, புழங்குகிற எல்லாமே அம்சமாகத்தான் இருக்கும் போல.

‘என்ன சார், இன்னும் வெயிட்டிங் இருக்கா? இன்னிக்கு வேறே சவாரி போன மாதிரித்தான்''. டாக்சி டிரைவர் குறைச்சல்பட, ‘போட்டுக் கொடுக்கறோம்பா. கவலைப்படாதே'' என்று அம்சமாக அபயம் அளித்தார் நேசன்.

சட்டைப் பைக்குள் தொட்டுப் பார்த்துக் கொண்டான் மகி. பர்ஸில் இருந்த அறுநூறு ரூபாயில் முந்நூறைப் பெட்டியில் வைத்து விட்டு மீதியை எடுத்து வந்திருக்கிறான் அவன்.  இப்போதே அதிலிருந்து எடுத்துக் கொடுத்து விட்டால் மேற்கொண்டு செலவு வராமல் இருக்கும் என்று தோன்றியது. கேட்கவும் சங்கடமாக இருந்தது.

‘போதும், போதும் நிறுத்துப்பா. இங்கே இருந்து நடந்துடுவேன்'' அவசரமாகக் கீழே இறங்கி விட்டார் நேசன். ‘நீயும் இறங்குப்பா'' என்றார் மகியிடம். நீங்க நீயென்றானது ஏன் என்று மகி யோசித்துப் பார்க்கப் புலப்படவில்லை.

‘இங்கே இருந்து குறுக்குப் பாதை இருக்கு. பத்தே நிமிஷத்துலே வீட்டுக்கு போயிடலாம்'' என்றபடி ‘மகி, இவருக்கு எவ்வளவு இஷ்டமோ கொடு'' என்று சளைக்காமல் அசர வைத்தார்.

‘இல்லே சார், எவ்வளவு தரணும்னா..''. மகி தயங்க, ட்ரைவர் உதவிக்கு வந்தார்.

‘இது, நேசன் சார் வச்சிருந்த கார் தான் சார். அவருக்கு சவாரி வந்தா, தர்றதை வாங்கிக்கச் சொல்லிட்டார் முதலாளி'' என்றார் ட்ரைவர்.

ஓவியம்

‘தம்பி யாரு?'' ஒரு மடக்கு வென்னீர் குடித்த தெம்பில் குமாரராஜா கேட்க, ‘இவர் தான் ஹீரோ'' என்று மகி சற்றும் எதிர்பார்க்காத தகவலைச் சொன்னார் நேசன். செகண்ட் ஹீரோ என்றாரே வரும்போது?

 ‘இன்னிக்கு இவர் சீன் எடுக்கப் போறீங்களா?''

குமாரராஜா குரலில் விரோதம் தெரிந்ததாக மகிக்குத் தோன்றியது.

நாற்காலிகளை ஒட்டிப் போட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்தபடி மகியையும் பக்கத்தில் உட்காரும்படி கைகாட்டினார் நேசன். இன்னும் இரண்டு பேர் அவரையும் மகியையும் மாறி மாறிப் பார்த்தபடி நாற்காலிகளில் சங்கடத்தோடு உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

‘அவங்க வனராணி வசனம் எழுதினவங்க. பாட்டும் அவங்க தான். பாலக்காடு பிரதர்ஸ், கொலம்பியா ரெகார்ட் வந்துது. இந்தப் படத்துக்கும் அவங்க தான் எல்லாம்''.  வனராணி எத்தனை நாள் ஓடியது என்று கேட்க நினைத்தான் மகி. வேண்டாம், குமாரராஜா கோபித்துக் கொள்ளக் கூடும்.

மகி பாலக்காடு பிரதர்ஸுக்கு வணக்கம் சொன்னான். ரெண்டு முதியவர்களும்  நீண்ட திடகாத்திரமான பல்வரிசையோடு இருந்தார்கள்.

‘அண்ணே, கதை முடிவு பண்ணிட்டா, எழுதி முடிச்சுடலாம்''. சகோதரர்களில் ஒருவர் சொன்னார். ‘செய்வோம், செய்வோம்.'' என்றார் நேசன். ‘குமாரராஜா சார், இன்னிக்கு இவர் சீன் எடுக்கலே. நீங்க புனிதாவோட இருக்கற சீன் தான்.  இவரை உங்க ஜமீனுக்கு வரவேற்கறீங்க. அப்போ மகி ஒரு நிமிசம் உங்க கையைப் பிடிச்சுட்டு நிப்பான். அம்புட்டுதான்''.  நைச்சியமாகச் சொன்னார்.

அவர் போகிற வேகத்தில் படம் எடுத்து முடிவதற்குள், மகியே குமாரராஜா போல அப்பம் தின்று கொண்டிருப்பானோ என்னவோ.

‘சரி, அப்ப ஆரம்பிக்கலாம். முடிச்சுட்டு நான் ராமாபுரம் போக வேண்டியிருக்கு'' என்றார் குமாரராஜா. உள்ளே இருந்து வந்த பெண் பெட்டியில் வைத்த, சலவை செய்த உடுப்புகளை குமாரராஜாவிடம் கொடுத்தாள். அவர் ஓரமாக நின்று நீளமான அண்டர்வேர் தெரிய வேட்டியைக் களைந்து விட்டு அந்தக் கால்சராயையும் சட்டையையும் அணிந்து வந்தார். நேசன் அவருக்கு ஒரு ஒப்பனைப் பெட்டியில் இருந்து முகத்தில் அடர்த்தியாக மாவு பூசி, மீசையையும் ஒட்ட வைத்தார்.

‘மகி, உனக்கு நீ போட்டிருக்கறதுதான் உடுப்பு. அண்ணே, புனிதா சீன் எடுத்துடலாமா?'' நேசன் கேட்க, உள்ளே இருந்து வேகமாகத் திரும்பவும் வந்த பெண் அவர் காதில் ஏதோ சொன்னாள்.

‘இப்போ ஏன் தூங்க விட்டே? எழுப்பு'' சற்றே எரிச்சலோடு சொன்னார் நேசன்.   அவள் போய்த் திறக்க, கோடவுனில் இருந்து சன்னமாக உறுமல் சத்தம் கேட்டது. முழிச்சிக்கிட்டா என்றார் நேசன். காக்கைகள் நாலைந்து அவசரமாகக் கூக்குரல் எழுப்பிப் பறந்து போக, ஒரு சிறுத்தைப் புலி வெளியே மெல்ல நடந்து வந்து கொண்டிருந்ததைப் பார்க்க மகிக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது.

இந்த மனுஷர் சொன்ன சிறுத்தையும் நிஜம்தான். ஆனால் ஃபோட்டோவுக்கு நிற்பது தவிர அதோடு கூட மகிக்கு வேலை இல்லை. அவன் பலாத்காரம் செய்ய வேண்டிய பெண் எங்கே என்று தெரிந்தால் போதும். வந்திருப்பாளோ?

உள்ளே அப்பளம் பொரிக்கும் எண்ணெய் வாடை வருகிறதை கவனித்தான் அவன். அவள் அங்கே இருந்து பொழுது போகாமல் அப்பளம் பொரித்துக் கொண்டிருக்கலாம். அவளுக்கும் புனிதாவுக்கும் பொரித்த அப்பளம் பிடித்தமானதாக இருக்கும். அந்த வாடைக்குத்தான் சிறுத்தை எழுந்திருக்கும்.

சிறுத்தையோடு கூட ஒரு அமானுஷ்யமான நிசப்தம் நடந்து வந்தது.  இது வழக்கமான நிகழ்ச்சி என்பது போல் நேசன் ரிப்ளெக்டரை நகர்த்திக் கொண்டிருந்தார். ஒரு தடவை அது நகர்ந்தபோது திண்ணை முழுக்க வெளிச்சம் போட்டுக் காட்டியது. நடந்து வரும் சிறுத்தையும், இரண்டு காலையும் நாற்காலி மேல் வைத்தபடி அதைப் பார்க்கும் குமாரராஜாவும் ஏதோ ஒரு காலத்தில் செலுலாய்டில் புனிதாவின் அம்மாவோடு அவர்  உறைந்த தருணம் இப்படித்தான் இருந்திருக்கும் என்று மகியை நினைக்க வைத்தார்கள். வானம் கறுத்துக் கொண்டும் பிரகாசித்தும் மாறிமாறி வர, மேகங்கள் விளையாடிக் கொண்டிருந்தன.

‘ரொம்ப மெலிஞ்சிருக்கே. ரெண்டு மாசம் முந்தி நான் அந்த காடிகானா வாசல்லே இதோட கட்டிப் புரண்டு விளையாட்டு சண்டை போட்டேனே, அப்போ இருந்ததை விட எலும்பு தெரிய இருக்காப்பல. படத்துலே சட்டுனு வித்தியாசம் தெரியுமே'', குமாரராஜா சந்தேகம் கிளப்பினார்.  

‘பரவாயில்லே அண்ணே. சிறிது காலம் சென்று அப்படீன்னு டைட்டில் கார்ட் போட்டுடலாம்.. அங்கேயும் முன்னைக்கிப்போ கொஞ்சம் வயசு கூடுதலா தான் தெரியுது. கண்ணுக்கு கீழே இன்னும் பூசினா அம்சமா இருக்கும்''.

அவர் கடைசியாகச் சொன்னது சிறுத்தைப் புலிக்கான ஒப்பனையா, குமாரராஜாவுக்கானதா என்று மகிக்குத் தெரியவில்லை. சிறுத்தை அவன் பக்கத்தில் வந்து வளர்ப்பு நாய் போல் காலை முகர்ந்து விட்டு, குமாரராஜாவைப் பார்த்து சின்னதாக உறுமியது.

‘நல்லா இருக்கீங்களான்னு உங்களை கேக்குது அண்ணே'' நேசன் மொழிபெயர்த்தார்.

சிறுத்தையைத் தொடர்ந்து காம்பவுண்ட் வெட்ட வெளிக்கு குமாரராஜா நடக்க,  பெரிய துளிகளாக தூறல் விழுந்து நொடியில் மழையானது. உள்ளே அடித்த சாரலில் திண்ணை  ஓரம் ஈரம் படர்ந்தது.

சிறுத்தை தன் இருப்பிடத்துக்கு நனைந்தபடி மெல்ல ஓடியது. கையில் பொரித்த அப்பளத்தோடு சிறுபெண் பின்னாலேயே போய்க் கதவை அடைத்து விட்டு வந்தாள்.

இடி முழக்கி நிதானமாக மழை தொடர்ந்தது. திண்ணையின் ஓரத்துக்குப் போய் நேசன் அண்ணாந்து மேகங்கள் நிலைத்த வானத்தைப் பார்த்தார்.

''இன்னிக்கு ஷூட்டிங் அம்புட்டுதானா'', குமாரராஜா அலுப்போடு கேட்டார்.

‘திடுதிப்புனு மழை வரும்னு யாரு அண்ணே கண்டாங்க? நசநசன்னு, எளவு ஓயற மாதிரி தெரியலே.. இன்னொரு நாள் வச்சுக்கலாமா?'' என்றார் நேசன். யாரும் பேசவில்லை. மகி மட்டும் சரி என்று தலையாட்டினான்.  

வசனம் சகோதரர்களில்  ஒருத்தர் கோடவுன்களைச் சுட்டிக் காட்டி மகியிடம் சொன்னார் & ‘வனராணி எடுத்தபோது இந்த ரெண்டு கோடவுன்லேயும் மேலே கூரை போட்டு ஒரு கரடி, ஒரு மலைப்பாம்பு, புலி, ரெண்டு குரங்கு வச்சிருந்தார் நேசன்''.

‘இப்போ அங்கே கண்டாமுண்டா தான் போட்டு வச்சிருக்கேன்''.  

நேசன் சொல்லியபடி மகியின் சட்டைப் பையில் இருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்து குமாரராஜாவிடம் கொடுத்து குருதட்சிணை என்றார். வாசலில் மகி வந்த டாக்சி வந்து நின்றது.

நின்று நிதானமாக சன்னமான மழை பெய்து கொண்டிருக்க, நூறு ரூபாயை மட்டும் கௌரவ சம்பளமாகப் பெற்று குமாரராஜா கம்பெனி டாக்சியில் போய்விட்டார். மகி வணக்கம் சொன்னதை கவனிக்கவில்லை அவர்.

வசனம் சகோதரர்கள் வேட்டியை மடித்துக் கட்டியபடி சரி, பிறகு பார்க்கலாம் என்று எழுந்தார்கள். குந்தாணி குந்தாணியாக அவர்கள் தாண்டிப் போக வேண்டியிருக்காது என்று மகி நினைத்தான். மழையில் கரைந்து ஓடும் நரகல் எதிர்ப்படாமல் அவர்கள் சாலையிலேயே நடந்து போகட்டும்.

அவன் நிமிர,  ‘அடுத்த வாரம் வந்துடு, அம்சமா எடுத்துடலாம். இப்படி மழை வரும்னு தெரியாம போயிட்டுது''  என்று சொல்லியபடி, நேசன் காமிராவோடு இரண்டாம் கோடவுனுக்குள் போய்க் கொண்டிருந்தார். 

முதல் கோடவுன் கதவு   ஒருக்களித்துத் திறந்திருக்க, அந்தச் சிறு பெண் பிளாஸ்டிக் கோப்பையில் தண்ணீர் எடுத்து சிறுத்தைக்குக் குடிக்கக் கொடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது அந்த முகம் ஒப்பனை கலைந்து தெரிந்தது. அது ஒரு பூனையின் முகமாக இருந்தது.

மார்ச், 2019.