பி.ஆர் ராஜன்
சிறுகதைகள்

பீகேயும் தானியல் ஆசானும்

மீரான் மைதீன்

மனசு நல்லாருந்தா மந்திரமும் தேவையில்லை ஒரு மயிருந் தேவையில்லை தெரியுமா... காலை கொஞ்சம் நீட்டி நீட்டி போட்டு நடந்தார் பீகே. பின்னால் தானியேல் மாமாவும் சந்திரனும் பீகேவின் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் தம்பிடித்து நடந்தார்கள். பீகே வயசில் மூப்பு என்றாலும் கெத்துப் பிடித்து நடந்தார் என்றால் ஒரு மாதிரிப்பட்டவன் அவருடைய நடைக்கு ஜோடி போட முடியாது.

பழய ரோட்டில் வடக்கமாற நடந்து கொண்டிருந்தார்கள். பீகே சொன்னார் ‘‘தானியேலே குறைஞ்சது இரண்டாயிரம் ஸ்டெப்பாவது போடணும். நடக்க நடக்க கேஸ் ரிலீஸ் ஆயிட்டே இருக்கும். கேஸ் இறங்கிப் போகப் போக உடம்பு கனம் குறைஞ்சி அப்படியே இதமாவும். இல்லண்ணா பாரத்த தலையில கொண்டு வச்சிரும். நடைதான் பாத்துக்கோ நல்ல பயிற்சி. இந்த பெஞ்சிபிரஸ்ஸு, கஸரத்து புல்லப்ஸு இந்த மயிரெல்லாம் வேலைக்காவது. நடைதான், நடையப் போல பெஸ்ட் வேற எதுவும் கிடையாது. நீச்சலும் சூப்பர் ஐட்டம். ஆனா இந்த தா**யோ குளத்த எல்லாம் சாக்கடையாக்கிப் போட்டானுவோ... இல்லண்ணா நீஞ்சி குளிக்கலாம் என்றபடி படாரென நல்ல சப்தமாக ஒரு குசுவை நீளமாக விட்டார்.

ஓய்.. ச்சீ என்னத்த ஓய்..

அசிங்கம் பிடிச்ச வேலையள போய்.. அந்த எழவு சவுண்டில்லாம வுடும்! சந்திரன் சிரித்துக்கொண்டே சொன்னான். ஓய் ஆசானே.. நமக்கு பீகே மூலத்துல ஒரு சைலன்ஸர் வாண்டி மாட்டுனா என்னா...

சைலன்ஸர்ல நிக்காது பீகே குசு குதிரை சக்தி உடையது... பழய பட்டாளம்லா...

ஓய் நட போதும்... கலுங்குக்கு போவலாம்.. வாரும்..

தானியேலே நீ வேணும்ணா முன்னப் போ.. நான் கொஞ்சம்கூட நடந்துட்டு வாரேன்..

தானியேல் மாமாவும் சந்திரனும் நின்றார்கள். தானியேல் மாமா ஏரியாவில் நல்ல பேர்கேட்ட ஆசான். ஒரு காலத்தில் சிலம்பு சுற்றினாரென்றால் ஊரே நின்று பார்க்கும். அவருக்கு ஒருபாடு சிஸ்யர்களும் உண்டு. தானியேல் மாமாக்கு நடையில் பெரிய விருப்பமில்லை என்றாலும் பீகேவுக்கு ஒரு கம்பெனிக்காகவே கூட நடக்கிறார். பேச்சுத் துணைக்கு கூட நடந்து நடந்து இந்த மாலை நடை வழக்கமாகிப் போனது. பீகே நடந்து கொண்டிருந்தார். வழக்கமாக பீகேயும் தானியேல் மாமாவும்தான் நடப்பார்கள். இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் சந்திரனும் வந்திருக்கிறான்.

சாயங்காலம் ஐஞ்சு மணிக்கு நடை தொடங்கினால் ஒரு முக்கால் மணி நேரம் பழய ரோட்டில் நடை நீடிக்கும். ஆறுமணிக்கு கலுங்குக்கு வந்தால் அரைமணி நேர ஓய்வுக்குப்பின்பு வழக்கம் போல தொடங்கிவிடும். பழய ரோட்டில் இரயில்வே முக்கில் வாத்தியார் மோகன் தலைமையில் ஒரு குடி கூட்டம் உண்டு. ஒன்றிரெண்டுமுறை அவர்கள் பீகேவை அழைத்துப் பார்த்திருக்கிறார்கள். பீகே அசங்க மாட்டார்.

ஏன் ஓய் ஒருநாளு அவனுகளோட போய் ஒரு இழுப்பு இழுத்துப் பாக்க வேண்டியதுதானே... என தானியேல் மாமாவும் பலமுறை சொன்னதுண்டு.

தானியேல.. முடி வெட்டது.. சட்டை தைக்கது..

குடிக்கது.. இந்த மூணையும் செட்டாகாதவங்கூட செய்யக் கூடாது... புதுசா வரவன்கூட பத்தாயிர ரூவாய கைல தந்து குடிண்ணாலும் குடிக்கப்புடாது.. குடிச்சா அதுக்குள்ள வெலை கொடுக்க வேண்டியது வரும்.

வாஸ்தவம்தான் ஓய்.. எனக்கிட்ட அடிமொற படிச்ச பையன்.. அதான் சாரோடு ராஜேந்திர பாலாஜி... நம்ம சிஸ்யன்தான்.. ஃ பாரீன்ல இருந்து வந்தவன்.. சரக்கு இருக்கு வாங்க ஆசானேண்ணான்... நானும் போயிட்டேன்.. ப***ன்.. இரண்டாவது ரவுண்டுல கேட்கான்... லேய் தானியேலே...

ஒண்ணா... செவுடு, இரண்டா... செவுடுண்ணு பீத்திக்கிட்டு கிடந்தியே இப்போ எங்கூட குங்ஃபூ போட வாரியாலேன்னு கேட்டான்... எனக்கு அவன் பிளான் மனசிலாயிட்டு.. தா**ழி பழய பகையில நம்மள அடிக்க பிளான் போடுதாம்ணு.. நைசா எழும்பி சிரிச்சிட்டே வெளியே வந்தேன்.. அவன் அப்பன் ஒரு அரைகிறுக்கன் போல.. அவன் மசில்வெடிய லோட் பண்ணி வச்சிட்டு மிஸ்டர் தானியேல் ஹேண்ட்ஸ் அப்ங்கான்...

அப்புறம்....

என்னத்த அப்புறம்... அப்பனும் மவனும் மொதல்லயே சேந்து குடிச்சிருக்கானுவோ... நான் அன்னைக்கு தலைக்கு மேல கையத் தூக்கலண்ணா சுட்ருப்பானுங்க.. ஆனா ஒண்ணு.. தா**ழி எங்கிட்ட எப்பவாவது மாட்டுவான்.. அப்போ அவன் வெதைய இணிஞ்சி வெளியே போடுதனா பாரும்..

சந்திரனும் பீகேவும் அன்று விழுந்து கிடந்து சிரித்தபோது தானியேல் மாமா கலுங்கிலிருந்து கடுப்பில் சொன்னார்.. ஓய் பீக்கே... ஒம்மாண சொல்லுதேன்.. பாலாஜிக்க வெதைய இணிவேன் ஓய்....

கலுங்கில் இதமான காற்று வீசிக்கொண்டிருந்தது. காற்றின் இதத்தில் பீகேயின் வியர்வை உலர்ந்து சிறகைச் சுருக்கி அமர்ந்திருக்கும் பறவையைப் போல இருந்தார்.

வுடட்டா ஓய்....

ஒரு காமணிநேரம் பொறு தானியேலே... சரீரம் ஒண்ணு சொஸ்ததையாவட்டு..

தானியேல் மாமா குட்டையில் தவளைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். சந்திரன் பழய ரோட்டிலிருந்து அப்படியே போனவன் ஏழுமணிக்குள் கலுங்குக்கு வருவதாகச் சொல்லியிருந்தான். கலுங்கின் கிழக்குபக்க சுவரின் கீழே மூலையில் குப்பியும் தண்ணியும் இதர சாதனங்களும் பையிலிருந்தன. தானியேல் மாமா பார்த்துப் பார்த்து அம்பரந்து கொண்டிருந்த நோட்டத்தை மனசிலாக்கிக் கொண்டே பீகே.. தானியேலே... இந்த நடை பயிற்சி இருக்கே.. இது சாயங்காலத்த விட காலையிலதான் கொள்ளாம் பாத்துக்கோ..

நான் முன்னால பட்டாளத்துல இருந்து வந்த புதுசுல காலையிலதான் நடப்பேன்... கூட அஞ்சாறு வௌங்காதவனுவோ உண்டு... அடுத்தவனுவளக் கழுவி குடிப்பு... போங்க தா***ளேன்னு பொறவு அவனுவளோட போறதில்லே...

ஓய்.. வுடட்டா....

கொஞ்சம் பொறு.. இருதய துடிப்பு சீராவட்டு...

கலுங்கு அமைதியாக இருந்தது. இன்றைக்கு குட்டையில் தவளைகளின் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. கவனித்துக் கொண்டே தானியேல் மாமா.. ஓய் பீக்கே.. தவளைகள் உலகத்துல எதோ பிரச்னைண்ணு நினைக்கேன்..

எதவச்சி சொல்லுதே...

அதுகளுக்க சத்தம் இன்னைக்கு அவ்வளவு சரியில்லே பாத்துக்கிடும்...

இருவரும் குட்டையை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நிறைய தவளைகள் சத்தம் எழுப்பியபடி குட்டையில் துள்ளலும் மறிச்சலுமாகக் கிடந்தன. கலுங்குக்கு கீழ்பக்க கல்கட்டுகளின் இடைவெளியில் சில தண்ணிப் பாம்புகளும் தலையை நீட்டியபடி இருந்தன. கூர்ந்து பார்த்துவிட்டு பீகே தானியேல் மாமாவிடம் சொன்னார். இந்த பாம்புகளுக்கு மனசாட்சியே இல்ல பாத்துக்கோ.. அனக்கமில்லாம பூனைபோல இருந்துட்டு பளிச்சின்னு தவளையள பிடிச்சி திங்கியது.. மொதல்ல பாம்புவளுக்க செவளையத் திருப்பனும்.

ஓய்... வுடட்டா...

என்னடே தானியேலே கால்ல வென்னிய ஊத்துனவன் மாதிரி வாறே...

என்ன பிரச்னை...

பிரச்னையும் மயிருந்தான் ஓய்.. வுடட்டா...

ஏழவ வுட்டுத் தொலை...

தானியேல் மாமா கலுங்கின் கிழக்கு பக்கம் அமர்ந்தபடி சரசரெவென இரண்டு கப்பில் விட்டபடி நீட்டினார். இன்னும் இருட்டவில்லை. தானியேல் மாமா இழுத்து எடுத்துவிட்டு கப்பை சைடில் வைத்தார். கையில் ஐயப்பன் கடையில் வாங்கிய சீவல் கொஞ்சம் இருந்தது. பீகே அடவு தொடங்கினார். கப்பை வாய் அருகே கொண்டு போவதும் முனங்குவதுமாக இருந்தார். முகம் அஸ்டகோணலாக மாறிக் கொண்டிருந்தது. பளிச்சென கப்பை வாயில் பொருத்தி ஒரு இயந்திரத்தை போல இழுத்துக் கொண்டே... ச்சீ.. நாய் பயலுவோ.. பண்ணிப் பயலுவோ... தானியேலே சீவல கொண்டா... பிச்சக்காரப்பயலுவோ...

தானியேல் மாமா சீவலை அள்ளி பீகேவின் வாயில் போட அவர் லேசாக ஆசுவாசமானார். தானியேல் மாமா தொடங்கினார்.

ஓய் .. பீகே.. ஒம்ம சப்போட் எனக்கு வேணும்... ராஜேந்திர பாலாஜி இரண்டு நாளைக்கு முன்னால ஊருக்கு வந்திருக்கான்.

சீவலை சவைத்துக் கொண்டே ..... ராஜேந்திர பாலாஜிண்ணா.. உனக்க பழய சிஸ்யன்தானே... அவனெல்லாம் சின்னப் பைய்யம்டே.... அவன்ட்ட என்ன பிரச்னை...

இரண்டு வருசத்துக்கு முன்னால ஒருக்க கூட்டிட்டுப் போனாமணு சொன்னேம்புலா...

மத்த ஹேண்ட்ஸப் மேட்டரு... அதான் அதோட

முடிஞ்சில்லா அப்புறமென்னா...

நானும் முடிஞ்சிச்சுண்ணுதான் நினைச்சேன்... அதுல ஒரு பிரச்னை கிடக்கு...

என்ன பிரச்னை

நான் மஸ்தான்ட்ட ராஜேந்திர பாலாஜிக்க ஒத்த வெதைய ஒருநாள் இல்லண்ணா ஒருநாள் இணிவேண்ணு சொன்னத மஸ்தான் ராஜேந்திர பாலாஜியோட அப்பாட்ட சொல்லிட்டாம் போல...

யாரு அந்த மசில்வெடி கிறுக்கண்ட்டயா...

ஆமாம்.. நேத்து ராஜேந்திர பாலாஜி ஆஸ்திரேலியாவுல இருந்து வந்ததும் அப்பன் மவன்ட்ட சொல்லிட்டான். அவன் ஒரு பாட்டல் ஃபாரின் சரக்க வச்சிட்டு என்னய நேத்துலயிருந்து தேடிட்டு இருக்கானுங்க...

எதுக்கு...

அவன் வெதைய நான் இணிஞ்சி காட்டனுமாம்..

பீகே குழப்பமாகப் பார்த்துக் கொண்டே.. சும்மா சொல்லிருப்பான்.. நீ வேற.. எவனாவது சொந்த வெதைய பறிகொடுக்க வருவானா... சரக்க வுடு..

பீகே சிரித்தார். லேசாக இருட்டி விட்டது. பீகே தொடர்ந்தார்... இந்த கலுங்குக்கு எவனோ செய்வினை வச்சிட்டாம் பாத்துக்கோ.. எதாவது ஒரு பிரச்னை வருது.. பீகே யோசனையாக அமர்ந்திருந்தார். தானியேல் மாமா இரண்டாவது கப்பை நீட்டியபடி.. ஒருவேளை ராஜேந்திர பாலாஜி வந்தா என்ன பண்றது....

பீகே எதுவும் பேசவில்லை. மௌனமாக இருந்தார். அவரின் இடது கையில் கப்பிருந்தது. வலது கையில் தானியேல் மாமா சீவலைத் திணித்தார். பீகே மானதானமில்லாமல் அறுத்துக்கிழித்தபடி இரண்டாவது ரவுண்டை நிறைவு செய்துவிட்டு... தானியேல.. ராஜேந்திர பாலாஜிக்க தவப்பன்ட்ட அந்த மசில் வெடி இப்போ கெடக்கா தெரியுமா...

இருக்கு... டபுள் பேரல் மசில் வெடி.. பண்டு ஒரே ஷூட்ல ஏழு கொக்க கொன்னுருக்கான்..

ரொம்ப பொல்லாதவனா இருப்பானோ... குட்டையில் தவளைகளின் சத்தமும் பெகளமுமாகக் கிடந்தது. அநேகமாக பாம்பு இறங்கி இருக்கலாம். குட்டைத் தண்ணீரின் சலசலப்பு மிகுதியாகக் கேட்டது. பீகே இன்று குடித்துவிட்டு சில ஜின் கதைகள் பற்றி தானியேல் மாமாவிடம் பேச வேண்டுமென போட்டிருந்த திட்ட மெல்லாம் ராஜேந்திர பாலாஜி வெதை விசயத்தால் தவிடுபொடியாகிக் கிடந்தது. மிதமான போதையில் பலவாறு யோசித்துக் கொண்டிருந்த பீகேவுக்கு ஒன்றும் ஓடவில்லை. வழக்கமாக கலகலவென பேசிக்கொண்டிருக்கும் தானியேல் மாமாவின் மௌனம் சங்கடமாக இருந்தது. பீகே இன்னும் கொஞ்சம் குடிக்கலாம் எனச் சொன்னார். தானியேல் மாமா கலுங்கின் கிழக்கு பக்கம் உட்கார்ந்தார்.

தானியேலே நீ ஒண்ணும் பேடிக்கண்டாம்...

ஓய் நான் பயப்படலே.. ராஜேந்திர பாலாஜி திடிர்னு வந்து வெதைய இணியும் ஆசானேன்னா.. என்ன செய்யது... அதான் பாக்கேன்...

பேசாம நமக்கு... சிஎம் செல்லுக்கு ஒரு பெட்டீசன் போட்டா என்னா...

தானியேல் மாமா பேசவில்லை.எழுந்து கப்பை நீட்டினார். பீகேவுக்கு தானியேல் அழ ஆரம்பித்துவிடுவானோ என்ற பயமிருந்தது.ஆனால் அவரிடம் அழும் மனநிலை இல்லை என்பது தெரிந்தது. கையில் சீவலை வைத்திருந்தார். கப்பை வாயிலிருந்து எடுத்தவேகத்தில் பீகே... இதுக்கு பதிலா மூத்திரத்த குடிக்கலாமே... ச்சீ.. குடிகாரப்பயலுவோ... பண்ணிக்குப்.. வார்த்தை முடியும் முன்னரே தானியேல் மாமா பீகேவின் வாயில் சீவலை அடிச்சி ஏற்றினார். பிற வார்த்தைகள் பீகேவின் வாயில் சீவலோடு சவைப்பட்டுக் கொண்டு கிடந்தது. தானியேலே... வர மயிரு வரட்டு.. ஆகப்பாட ஒரு வெதைதானே..

பாத்துக்கிடலாம்... இணியச் சொன்னாம்ணா.. இணிஞ்சிறு..

பாத்துக்கிடலாம்.. அவனுக்கெல்லாம் வெதை இருக்கதும் ஒண்ணுதான்.. இல்லாம இருக்கதும் ஒண்ணுதான்.. ..

ஓய்... நமக்கு சந்திரன்ட்ட சொல்லி மஸ்தான் மூலமா சமாதானமா போனா எப்படி..  பீகே புரியாமல் பார்த்தார். பிறகு கேட்டார். மஸ்தான்ட்ட என்னான்னு சொல்லது...

இது ஒரு சாதாரண வெதை பிரச்சனை.. தானியேல் மாமாவுக்கு லேசாக லெம்பத் தொடங்கியது. கலுங்கின் விளிம்பை பிடித்து பேலன்ஸ் பண்ணிக் கொண்டார்... ஒரு பேச்சிக்கு பதிலா இன்னொரு பேச்சி பேசதுதான்... அதுக்காக ஒருத்தன் ஆஸ்திரேலியாவுல இருந்து வந்து வெதைய இணியும்ணு வந்தா என்ன பண்றது ஓய்...  ராஜேந்திர பாலாஜி ஆஸ்திரேலியாவுல என்ன வேலை பாக்கான்...

அங்க எதோ சைனாக்காரன் கடையில தவளை பிடிக்க சோலி...

அதுக்கு தா***ழி இந்த குட்டையில தவளை பிடிக்கலாமே...

பேச்சு போய் கொண்டே இருந்து. மேலும் ஒருமுறை இருவரும் குடித்துக் கொண்டனர். ஏழேகாலுக்கு சந்திரன் வந்தான். அவன் அவனின் கொழுந்தி மகள் சடங்கான செய்தியை சொல்ல முயன்றபோது பீகே அவனை பேசவிடாமல் தடுத்து ராஜேந்திர பாலாஜியின் விசயத்தைச் சொன்னார். சந்திரனுக்கு ஒன்றும் ஓடவில்லை. அவன் ஒரு குச்சியால் கலுங்கின் கீழே தரையில் வரைந்து கொண்டிருந்தான். அது ஒரு உருவமாய் வளர்ந்து கொண்டிருந்தது. நல்ல இருள் சூழ்ந்து கிடந்ததால் அந்த உருவம் வெளியே தெரியவில்லை. சந்திரன் அதற்கு ஒரு கண்ணும் வரைந்திருந்தான். உருவத்தில் அந்த ஒற்றைக் கண் அங்குமிங்குமாக உருண்டபடி கிடந்தது. சந்திரன் அந்த உருவத்துக்கு இரண்டாங் கண் வரையத் துவங்கும் போது கையிலிருந்த குச்சி முறிந்து போனதால் அவன் இருட்டில் அதுபோல இன்னொரு குச்சி சிக்குமா எனத் துளாவிக் கொண்டிருந்தான்.

அங்க என்ன மயிரத் தேடுதே... என்னத்தையாவது சொல்லு..

என்ன என்னத்த சொல்லச் சொல்லுதியரு... என்றபடி சந்திரன் கீழே கவனித்த போது அந்த உருவத்திலிருந்த ஒற்றைக்கண் கோபமாய் செரஞ்சிப் பார்த்தபடி தள்ளேயோழி.... இன்னொரு கண்னையும் வரையிலே.. என்றதும் சந்திரன் பயந்து எழும்பி அழத் தொடங்கினான். முன்பொருமுறை தானியேல் மாமா அழுததுபோல சந்திரனின் அழுகை இருந்தது. சந்திரா.. அழாதே.. அழாதடே... தானியேல் மாமாதான் சமாதானப் படுத்தினார். சந்திரன் சமாதானமாகவில்லை.. ஆசானே.. என்னய பாக்கான்... ஆசானே.... என்னைய மொறைக்கான்...

பீகே கலுங்கிலிருந்து எழுந்து தள்ளாடியபடி நின்று யார்லே... யார்லே... தானியேலே அந்த பீயாத்திய எடு...

ஓய்... பீகே... பீயாத்தியும் மயிருந்தான்... வர மயிரு வரட்டுவோய் பாக்கலாம்... சந்திரா.. மிச்சத்த மூணு கப்புல விடுலே...  பாக்கான் ஓய்.. ஒத்தக் கண்ணன்....  அவன் வெதைய இணிவேன்... ஒத்தக்கண்ண சூருவேன்... வுடு வுடுவுடு..  சந்திரன் சமாதானமாகி கலுங்கின் கீழிருந்து மெல்ல சரக்கை மூன்றாக வீதம் வைத்துக் கப்பில் விட்டான். ஆளுக்கொன்றாக நீட்டியபடி பீகேவை குறிவைத்து சீவலை தயாராக கையில் வைத்திருந்தான். பீகே ஓரே இழுப்பில் இழுத்துவிட்டு பண்ணிக்கப் பொறந்தவலுவோ.. என ஆரம்பிக்கும் போதே சந்திரன் பீகேயின் வாயில் சீவலை அழுத்தி தள்ளினான்.

கொஞ்சம் கண்கள் மங்கிக் கொள்கிற அளவுக்கு போதையின் பிடி இறுகி இருந்தது. சந்திரன் காலடியில் தரையிலிந்து ஒற்றைக் கண்காரன் உருண்டு கொண்டு கிடந்தான். சந்திரன் அவனைக் காலால் சமுட்டிப் பிடித்தபடி.. ஆசானே ராஜேந்திர பாலாஜி ரொம்ப மோசமானவன்... அவன் கண்ணுல மாட்டிராதையும்.. அவன் ட்வல் இயர்ஸ் ஓல்டு சரக்கோட ஒம்மள தேடி நடக்கான்... நீரு மாட்டினியர்னா.. கொண்டு போய் ஊத்தித் தந்து....

சந்திரன் நிலைதடுமாறினான். அவன் நிலைதடுமாறி நீங்கியதும் காலின் கீழ் கிடந்த ஒற்றைக் கண்காரன் எழுந்து சந்திரனை மிதித்து தள்ளிவிட சந்திரன் ரோட்டில் மட்டமல்லாக்க மயங்கி விழுந்தான்.  பீகே ... தானியேலே... இப்பவாச்சும் மடியில இருந்து பியாத்திய எடு...

தானியேல் மாமா அழத் தொடங்கினார். பீகே தள்ளாடியபடி சந்திரனை தூக்கி கலுங்கின் பக்கவாட்டில் இருத்தி விட்டு.. நிமிர்ந்த போது ஈத்தாமொழி தங்ககுமரனின் வாழைத் தோப்பருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தது. கூர்ந்து பார்த்துக் கொண்டே பீகே, தானியேல் மாமாவிடம் ... வரது ஆட்டோவா பாரு...  ஆட்டோ மெல்ல மெல்ல ஹாஜியார் வயல் தாண்டி இழுத்து இழுத்து கலுங்குக்கு முன்னால் வந்து நின்றது. பீகே, சந்திரன், தானியேல் மாமா மூவரும் கூர்ந்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஆட்டோவிலிருந்து ஒத்தைக் கண்ணை மறைத்தபடி ராஜேந்திர பாலாஜி இறங்கினான். அவன் கையில் பெரிய குப்பியுமிருந்தது.

நவம்பர், 2021