சிறுகதைகள்

பி.ஜி

ஆனந்த் ராகவ்

என் அலுவலக அறைக் கதவை மென்மையாய் தட்டித் திறந்து “உள்ளே வரலாமா சார்” என்று  கேட்டு வந்து அமர்ந்த அந்தப் பெண்ணுக்கு இருபது வயதிருக்கும்.

கிளிப்புகளுக்குக் கட்டுப்படாமல் சுருள் சுருளாய் கூந்தல் தலைமேல் ததும்பியிருந்தது, ஏராளமாய் கண்கள், ஒற்றைக்கல் மூக்குத்தி பதவிசாய் பொருந்திய நாசி.  சற்றே மேல் நோக்கி விரிந்திருந்த மேல் உதடு.  அதற்குமேல் அவளை கவனிக்கவிடாமல்  ‘நான் பி.ஜி’ சார்” என்றாள். மருதாணி சிவப்பு  கையிலிருந்த கோப்பை  நீட்டினாள்.

பி.ஜி- ‘பேயிங் கெஸ்ட்’- பெங்களூரையே அடித்து சாய்த்துக் கொண்டிருக்கிற கணிப்பொறியியல் மழையில் சகட்டு மேனிக்கு வளர்ந்திருக்கிற காளான்.  கணினி மென்பொருள் வியாபாரத்துக்கென்று பன்னாட்டு நிறுவனங்களுக்கு, பெங்களூரில் மற்ற ஆன்மாக்களுக்கு வாய்க்காத, பிரத்யேக வசதிகளுடன் நிறுவப்பட்ட பிரதேசங்களில் வெளிநாட்டிலிருந்து ஒரு நறுக்கு பெயர்த்தெடுத்து வந்து நட்டது போல முளைத்திருந்த, பளபளப்பான நிறுவனங்களில்  பணி புரிய இந்தியாவின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் வரும் இளைஞர்களையும் யுவதிகளையும் தங்கவைக்கக் கட்டப்பட்ட  பதவிசான தங்கும் வசதிகளுக்கு வைக்கப்பட்ட பெயர்தான் பி.ஜி.

இரண்டு மூன்று பேர் தங்கும் படுக்கை அறை, பொதுவான வரவேற்பு அறை, கேண்டீன் சமையல், அத்யாவசிய தொலைக்காட்சி, துவை இயந்திரம் என்று வசதி செய்து கொடுத்து தலைக்கு நாலாயிரமோ ஐயாயிரமோ கட்டணம் வசூலிக்கும் இந்த  பி.ஜி  கட்டடங்கள், பெங்களூர் முழுக்க இறைந்து கிடக்கின்றன. பத்தாயிரம் பதினைந்தாயிரம் என்று வீட்டு வாடகை தரும் வசதியோ, தேவையோ இல்லாத, அன்னியரோடு அறையை பகிர்ந்துகொள்ள யோசிக்காத, இளைஞர்களுக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை. பெங்களூரின் ஐடி பிரதேசங்களில் இது பெரிய வியாபாரம். மதில் சுவர்கள், உணவுவிடுதிகள், பஸ் நிறுத்தங்கள், விளக்குக் கம்பங்கள், டிரான்ஸ்ஃபார்மர்கள், மரங்கள் என்று எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ அங்கெல்லாம்  பி.ஜி என்று  இரண்டு பூதாகரமான அட்சரங்களைக் கொண்ட  பிட் நோட்டீஸ்  ஊர் முழுக்க அலறிக்கொண்டிருக்கும்.

எங்கள் அலுவலகக் கட்டடம் சுற்றியும்  இதுபோன்ற பி.ஜி வசதிகள் இருக்கின்றன. எங்கள் அலுவலகக்கட்டிடத்தின் உரிமையாளர் சந்திரசேகர ரெட்டி,  அங்கே கிரவுண்டு சதுர அடிக்கு முப்பது ரூபாய்க்கும் கீழே கேட்பாரற்றுக் கிடந்தபோது ஏக்கர் கணக்கில் வாங்கிக்குவித்த நிலங்களில் எங்கள் அலுவலகம் தவிர இன்னும் சில பி.ஜி கட்டங்களை கட்டிப்போட்டு வாடகைக்கு விட்டிருக்கிறார். ‘ப’ வடிவ வளாகக் கட்டிடத்தில் நடுவில் இருந்த எங்கள் அலுவலகத்தின் இருபுறமும்  பி.ஜி  வசதி இருந்தது. பெண்களுக்கான விடுதிகள்.  ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக  நுழைவிடம்  இருந்தாலும் இவற்றின்  மின் இணைப்புகள் ஒன்றாகவே இருந்தன. அதனால் பிரதி மாதம் ஒன்றாய் வரும் மின்கட்டணம், தண்ணீர் போன்ற வசதிகளுக்கு வரும் விவரப்பட்டியல் எங்கள் அலுவலகப் பெயரிலேயே வரும். இதில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்று பகிர்ந்து கொள்ளும் கணக்கை யாராவது போட்டு எடுத்துக்கொண்டு  அதை ஒப்புச் சான்று பெற என்னிடம் வருவார்கள். அதற்குத்தான் அந்தப் பெண் வந்திருந்தாள்.  நான் கணக்கை சரி பார்த்துக்கொண்டே  “உன் பேர் என்னம்மா” என்றேன்.

“ மஹா” என்றாள்

“மஹா ?.. ”

“ முழுப் பேரு சீதா மஹாலட்சுமி சார்.”

“ மங்களகரமா இருக்கே அது எப்படி மஹா ஆச்சு ?”

“ நீளமா இருக்குன்னு கூப்பிடறதுக்கு வசதியா.. என் பிஜி ஃபிரண்ட்ஸ் மஹா ஆக்கிட்டாங்க”

“ சீதா இல்லன்னா லட்சுமி  அப்பிடின்னு கூட அழகா சுருக்கியிருக்கலாமே”

“ அது ரொம்ப கர்நாடகமா இருக்காம்”

“சர்தான். பேர் வைக்கறது அப்பா அம்மா.. அதை மாத்திவிடறது  ஃப்ரண்ட்ஸ். பேரு வக்கறத்துக்கே அர்த்தமில்லாம போறது. என் பொண்ணுக்கு நானும் என் மனைவியும் அவ்வளவு விவாதம் பண்ணி, அங்க இங்க படிச்சி,  தேர்ந்தெடுத்து  அழகா ‘நங்கை’ ன்னு பேர் வச்சோம். இப்ப அவளோட வடக்கத்திய ஃப்ரண்ட்ஸ்னால  ‘ நங்கு’ ஆயிட்டா.. ”

அவள் சிரிக்கும்போது தெற்றுப்பல் அழகாய் நானும் இருக்கிறேன் என்றது. 

“உன்னை வீட்ல எப்டி கூப்பிடுவாங்க”

“லஷ்மி’‘

“ நானும் அப்படித்தான் கூப்பிடப்போறேன். உன் பேரை மாத்தின பொண்ணு பேரு என்ன ?”

“ சங்கு”

“இதுவும் சுருக்கினதா.. சங்கமித்ரா ன்னு இருந்திருக்கணும். சரியா”

“கரெக்ட் சார்”

“சங்கமித்ரா  என்ன அழகான பேரு..  சங்கமித்ரா யாரு தெரியுமா? அசோகரோட பொண்ணு. அவ அண்ணனோட சேர்ந்து புத்தமதக் கொள்கைகளை பரப்பினவ. நயம் தெரிஞ்சிக்காம சுருக்கிடறதா ?”

அந்தத் தெற்றுப்பல் சிரிப்பிலிருந்து பார்வையை விலக்கி காகிதக் கணக்கை சரிபார்ப்பது கடினமாய்தான் இருந்தது.

பெயர்கள் போலத்தான் இவர்கள் வாழ்க்கையும். பெற்றோர்கள் ஒரு வாழ்க்கையை கனவு காண, பிள்ளைகள்  நண்பர்களின் பாதிப்பால் வேறுஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள்.

லஷ்மியின் ஊர் விசாகப்பட்டிணம். பி.டெக் முடித்துவிட்டு  சி, பிஎச்பி பாஷைகளில் உழன்று, ஆரகிள், மை எஸ்கியூஎல் எல்லாம் சமாளித்துவிட்டு, ஜூம்லா, துருபால் என்று இரண்டு வருஷம் அனுபவம் சேர்த்துக்கொண்ட பெண்.  ஒரு அமெரிக்க உலகளாவிய நிறுவனத்தில் வேலை.   அவள் தந்தையின் அறுபது கால  அலுவலக ஊதியத்தின் உச்சத்தை அவள் சம்பாதிக்கத் துவங்கிய சில ஆண்டுகளிலேயே எட்டியவள். அதுதான் பெற்றோர்கள் இவளை தங்களிடமிருந்து விலகி இன்னொரு மாநிலத்தில் தனித்திருக்க அனுமதித்திருக்கவேண்டும். 

என் கையெழுத்தை வாங்கிக்கொண்டு “தேங்க்யூ சார்”  என்று புன்னகையுடன் அவள் திரும்பிப்போகும் போது  திறக்கப்பட்ட கதவு வழியாய் சன்னமாய் கொலுசு சத்தம் கேட்டது.

இரவு உடையோடு பால்கனியில் பல் தேய்த்துக்கொண்டு, கழுவின சாப்பாட்டு தட்டை எடுத்துகொண்டு, வளாகத்துள் இருந்த பாட்மிண்டன் கோர்ட்டில் ஆடும்போது என்று லஷ்மி என் கண்ணில் அடிக்கடி தென்படுவாள். அவளுடைய உறவினர் பையனுக்கு வேலை கேட்டு என்னை அணுகி, என்  நண்பரின் நிறுவனத்தில் சிபாரிசு செய்து வேலை தாங்கித்தந்தது,  ஆதார் அட்டை விண்ணப்பிக்க எங்கள் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த முகாம் ஒன்றுக்கு பி.ஜி பிரிவு பிரதிநிதியாக இயங்கி உதவியது என்று ஒன்றிரண்டு பரஸ்பர உதவிகளால் லஷ்மி எனக்கு மிகவும் பரிச்சயமாகிப்போனாள். 

எந்த மாநிலத்திலிருந்து வந்திருந்தாலும், என்ன குடும்பத்துப் பின்னணி இருந்தாலும், லஷ்மி போன்ற அந்த பி.ஜி  பெண்களுக்கு, மாறிப்போன வாழ்க்கை முறையால்  ஒரு பொதுத்தன்மை வந்து சேர்ந்துவிடுகிறது. இவர்களுக்கு பிரச்சனைகளே இல்லை. சதா சிரிப்பும் கெலிப்புமாய் இவர்களை தினமும் பார்க்கிறேன். எல்லோரும் இருபத்து ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள். கவர்ச்சியானவர்கள்.  சந்தையில் சமீப வெளியீடான செல்போன்களும், ஐ பாட் போன்ற உபகரணங்களும் இவர்கள் உடலின் அங்கம் போல ஒட்டப்பட்டே கிடக்கின்றன. சதாசர்வகாலமும் சங்கீதம் கேட்டுக்கொண்டோ, யாருடனாவது பேசிக் கொண்டோ இருக்கிறார்கள். அவர்கள் பேசுவது பெண்களுடன் அல்ல என்பது நாணம் இழையோடும் அவர்கள் புன்னகையிலிருந்து அனுமானம் செய்யலாம். இவர்களில் நிறைய பேர் ஆண்களுக்கு இணையாக புகைப்பிடிக்கிறார்கள் என்பதும் பலர் மதுபானங்கள் பருகிறார்கள் என்பதையும், சிலர் போதைப் பொருட்களை நாடுகிறார்கள் என்பதையும்   வெள்ளிக்கிழமை இரவுகளில் பிரிகேட் ரோட்டிலும், கோரமங்கலாவிலும் துடிக்கும் இசையில் இயங்கும் டிஸ்கோத்தேகள் போனால் தெரிந்துகொள்ளலாம். சந்தோஷம் மிதக்கும் வாழ்க்கையில்  அவர்களுக்கு கிடைக்காமல் எஞ்சியிருப்பது  ஒன்றுதான். ஆண் சுகம். அந்த ஏக்கம் வெளிச்சம்  அடங்கியதும் வெளிப்படும். 

எங்கள் வளாகத்திலிருந்து வெளிப்பட்டு பிரதான சாலையோடு இணையும் அரை கிலோ மீட்டர் நீளமுள்ள துணைச்சாலையில்,  வீதி விளக்குகளின் மங்கிய வெளிச்சத்தில், இரண்டு பக்கங்களிலும்  அடர்த்தியாய் வளர்ந்து சாலையை அடைத்திருக்கும் குல்மோஹர் மரங்களுக்குக் கீழே தினமும் மாலை அணிவகுத்து நிற்கும்  இளைஞர்கள் இந்தப் பெண்களின் மறுமுனையில் சஞ்சரிப்பவர்கள்.  இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்தேறிய மிடுக்கான, ஸ்டைலான  பி.ஜி ஆண்கள்.  அனேகமாய் ஒன்றாய் பணிபுரிகிறவர்கள்.

மோட்டார் சைக்கிளிலோ, கார்களிலோ  வந்திறங்கி பேசிக்கொண்டும்,  கண்ணோடு கண் கவ்வியும், உராய்ந்துகொண்டும், வெளிச்சம் குறைந்திருக்கும் இடங்களில் ஒருவரை ஒருவர் ஸ்பரிஸித்துக்கொண்டும் ஜோடிகள் நிற்கும். அவர்களுக்குள் தீயாய் கனன்று கொண்டிருக்கும் வேட்கை,  கவிந்திருக்கும் இருட்டில் நெருப்புப் பொறிகளாய் சிதறும்.  கட்டடத்திற்கு உள்ளே ஆண்களுக்கு அனுமதி இல்லாததால் இந்த சந்திப்புகள் வாயிற்கதவுக்கு வெளியே அந்தத் தெருவின் இருபக்கமும்தான் நடந்தாகவேண்டும். பிரச்சனையில்லாத நட்பு, கொஞ்ச காலப் பிரியம்,  உடம்பு சுகம் பழகிப்போன தீவிரமான காதல் என்று வெவ்வேறு விகிதங்களில் இவர்கள் உறவாடல் அந்த சாலையோரத்தில் தாண்டவமாடும்.  இந்தப் பொறிகள்  தீயாய் எரிந்து அணைந்து  வேட்கையை தணித்துக்கொள்ளத் தோதான இடங்கள் நகரத்தின் சில பகுதிகளில் இருக்கின்றன. மரத்தடியில் ஆரம்பித்து மஞ்சத்தில் முடிகிற இவர்களின் வேட்கை வேகத்துக்கு தடையாய் இருப்பது அவரவர்கள் சுயகட்டுப்பாடு மட்டுமே.  அந்த வேலி தாண்டி கருத்தடை மாத்திரைகளும், ஆணுறைகளும்  சகஜமாய் பாவிக்க பழகிய உலகம் இவர்களுடையது. தவறுகள் என்று வகுக்கப்பட்ட எல்லையை கொஞ்சம் கொஞ்சமாய் விரிவுபடுத்திக்கொண்டிருக்கிற உலகம்.

அந்தச் சாலையில் லஷ்மியையும் நான் பார்த்திருக்கிறேன்.  அலுவலகத்திலிருந்து தாமதமாய் போகும் தருணங்களில்  என் காரிலிருந்து பார்க்கையில் தெரிகிற  பிங்கி, பூனம், ஷப்னம் களுக்கு இடையே அவளையும்  நான் பார்க்கிறேன்.  சிரிப்புடன், கொஞ்சம் வெட்கத்துடன், குறும்புடன். அவளுடன் கை கோர்த்து நின்றபடி பேசும் இளைஞன்  அழகாய் இருக்கிறான்.

சிவப்பாய் உயரமாய், குறுந்தாடி சகிதம் ஸ்டைலாய். அவன் கழுத்தைச் சுற்றிய பட்டையும் அதன் கீழே தொங்கிய அடையாள அட்டையும் அந்த இளைஞனும் அவளுடனோ இல்லை அந்தப் பிரதேசத்தின் வேறு ஒரு பன்னாட்டு நிறுவனத்திலோ ஐந்து அல்லது ஆறு எண்களில் சம்பளம் வாங்குகிறவனாய் இருக்கலாம்  என்றது.  அவர்களுக்குள் இருந்தது வெறும் சிநேகம் இல்லை என்பது லஷ்மியின் கண்கள் என் கண்களை சந்தித்ததுமே அவனிடமிருந்து சட்டென்று விலகி நின்ற தினுசிலும், என் பார்வையை தவிர்க்கிற விதத்திலும்  தெரிந்தது.

இந்தப் பெண்களைப் பார்க்கும் போதெல்லாம்  நகரத்தின் பெரிய இஞ்சினியரிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் இன்னும் இரண்டு வருடங்களில் படிப்பை முடித்துவிட்டு வேலை செய்யப் பிரயாசைப்படும் என் பெண்ணைக் குறித்த கவலை என்னை ஆட்கொண்டு விடுகிறது.  நாளை அவளும் இது போன்று வாழ்க்கைக்கு பழகிவிடுவாளோ என்கிற கிலி எழுகிறது. இரவு உணவுக்குப் பிறகு வராந்தாவில் உட்கார்ந்து என் மனைவியுடன் பேசும் அந்தரங்க உரையாடல்களில் இந்தக் கவலை எங்களுக்குள் அடிக்கடி வெளிப்படுகிறது. பெங்களூரை விட்டு வேற எங்கேயும் தனியா போய் இருக்கவேண்டாம் என்று என் மனைவியும்,  வளர்க்கப்பட்ட விதம் சரியாய் இருந்தால் நம் இளைஞர்கள் தவறு செய்யமாட்டார்கள் என்று நானும் ஒவ்வொரு முறையும் விவாதித்து எங்களையே சமாதானப்படுத்திக்கொள்வோம்.

எங்கள் நம்பிக்கையெல்லாம் சிதைந்துபோகிறமாதிரி அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. என் வாகனம் பழுதாயிருந்ததால் பேருந்தில் போக பிரதான சாலையை நோக்கி நடக்கும்போதுதான் லட்சுமியையும் அந்த இளைஞனையும் பார்தேன்.  எட்டு மணி. இதர ஜோடிகள் தங்களது உறவாடல்களை முடித்துக் கொண்டு பிரியாவிடை பெற்றுக்கொண்ட வெறிச்சோ டிய தெருவில் அவர்கள் இருவர் மட்டும் இருந்தார்கள்.  நடந்து வரும் என்னை அவர்கள் கவனிக்கவில்லை.  இருவருக்குமிடையே என்னவோ வாக்குவாதம்.  லஷ்மி என்னமோ கெஞ்சிக் கொண்டிருக்க அந்த இளைஞன் விறைப்பாக அவளை எதிர்கொண்டிருந்தான்.  அவர்கள் பேசிய ஹிந்தி எனக்கு புரியாவிட்டாலும் லட்சுமி கொஞ்சம் உரத்த குரலில் அழுவதும், அவன் கடிந்துகொள்வதும் நான் அவர்களை நோக்கி நடந்தபடி முன்னேறுகையில் தெரிந்தது. மன்றாடிக்கொண்டிருந்தவள் சட்டென்று குனிந்து அவன் கால்களை தொட்டு யாசிக்கிறாள்.  அவன் விலகிப்போய் நின்று இரைகிறான். அவள் எழுந்து அவனைத் தொடர அவன் அவளை லேசாக தள்ளிவிடுகிறான். லஷ்மி தடுமாறி விழப்போய் சுதாரித்துக் கொண்டு நிற்கிறாள்.

அவர்களுக்கு மிக அருகில் வந்து விட்ட என்னால் குறுக்கிடாமல் இருக்கமுடியவில்லை.  அவள் என்னை எதிர்பார்க்கவில்லை.  என்னைப் பார்த்து அவசரமாய் கண்களை துடைத்துக்கொள்கிறாள்.

“லஷ்மி என்ன நடக்கிறது இங்கே. யார் இந்தப் பையன்.  உன்னை தொந்திரவு செய்கிறானா ?

“ஒண்ணுமில்லை சார்.  என் பிரண்டுதான். ”

“ஃபிரண்டா. உன்னை பிடிச்சு தள்ளிவிட்டதை நான் பார்த்தேனே.  இவன் உன்னை ஏதாவது தொந்திரவு செய்தால் பயப்படாமல் சொல்லு.” நான் அந்தப் பையனை எதிர்கொண்டேன்.  “மிஸ்டர்  நீ யார் ? என்ன வேண்டும் உனக்கு?”

“இது எங்கள் பர்சனல் விஷயம் நீங்க தலையிட வேண்டிய அவசியமில்லை. உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு  போங்கள் “

அவன் நிதானமாய் அலட்சியமாய் என்னைப் பார்த்து பயப்படாத தொனியில் ஸ்டைலான ஆங்கிலத்தில் சொல்கிறான். அது என் சினத்தை அதிகரித்தது. அமெரிக்க வாடிக்கையாளர்களை எதிர்கொள்ள போதிக்கப்பட்ட வெற்று அமெரிக்க ஆங்கிலத்தில்  உதார் விடுகிறான். ஆங்கிலம் மட்டும் தெரிந்துவைத்துக்கொண்டு  பெரிய புத்திசாலிபோலப் பேசும், இந்தக் கம்ப்யூட்டர் தொழில் வளர்த்துவிட்ட இவனைப்போன்ற  முட்டாள்களை பெங்களூரில் மூலைக்கு மூலை  நான் பார்க்கிறேன்.

“உன் பர்சனல் விஷயத்தை தெருவில் வைத்து செய்தால் நான் கேட்கத்தான் செய்வேன். இப்பவே ஒரு கால் போட்டு போலீஸை வரவழைத்து உன்னை  ஸ்டேஷனில் கொண்டுபோய் வைக்க என்னால் முடியும். பார்க்கிறாயா? மரியாதை குறைவாய் என்னிடம் பேசாதே. நம்பர் கொடு. உன் வீட்டில் பேசுகிறேன்.”

எனக்கு அவனை முற்றிலுமாய் பிடிக்கவில்லை.  அவனை, லட்சுமியை, இந்த இளைஞர் கூட்டத்தை, கம்ப்யூட்டர் நிறுவனங்களை. என் பாக்கெட்டிலிருந்து செல் போனை உறுவினேன்.

லஷ்மி என் கைகளைப் பிடித்துக்கொண்டு மன்றாடுகிறாள். “வேண்டாம் சார். ப்ளீஸ் விட்டுடுங்க சார். போலீஸ் எல்லாம் வரவழைக்காதீங்க. சின்ன பிரச்சனை தான். நாங்க அமைதியா பேசிக்கறம் சார்.  வீட்டுக்கெல்லாம் போன் வேணாம் சார்.”

அவனிடம் மன்றாடியதை விடத் தீவிரமாய் என் கைகளைப் பற்றிக்கொண்டு அழுகிறாள்.  எதற்கோ பயப்படுகிறாள். என்ன செய்வது என்று தெரியாமல்  அந்தச் சூழலில்  ஒட்டாமல்   ரௌத்திரத்தை அடக்கிக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாதவனாய் தயக்கத்தோடு நின்றேன். லஷ்மியும் இணைந்து எங்கள் அந்தரங்க சமாச்சாரத்தில் தலையிடாதீர்கள் என்று சொல்லி விட்டால்?

“லஷ்மி. நான் உன்னோட பேசணும். திங்கட்கிழமை ஆபீஸ் வந்து என்னப் பார். ”

நான் அவர்களை விட்டு விலகி விருட்டென்று நடந்தேன். நவராத்ரி விடுமுறை, இடைப்பட்ட வார இறுதி, என் மும்பை பயணம் என்று  அலுவலகம்  போகாமல்  இருந்த ஒரு  வாரமும் அந்தக் காட்சியில் நுழைந்து அவனைத் திரும்பத்திரும்ப  கன்னத்தில் அறைகிறேன். செக்யூரிட்டியை கூப்பிட்டு  இழுத்து வெளியேற்றச்சொல்கிறேன். உயர்பதவியில் இருக்கும் என் போலீஸ் நண்பனைக் கூப்பிட்டு அந்தப் பையனை மிரட்டி வைக்கிறேன்.

விடுமுறைக்குப் பிறகு அலுவலகம் போனதும் லஷ்மி என்னை சந்திக்க வரவில்லை. அவள், திங்கட்கிழமை காலை பிரேதமாய் கண்டெடுக்கப்பட்டாள்.  பண்டிகைக்கு பெரும்பாலோனோர் அவரவர் ஊருக்குச் சென்று விட்ட தனிமையில், மன உளைச்சலில் தூக்கில் தொங்கியிருந்தாள்.

அலுவலக வாசலில் குழுமியிருந்தது பெண்கள் கூட்டம். பலர் கூக்குரலிட்டு அழுதுகொண்டிருந்தார்கள்.  உத்திரத்திலிருந்து தொங்கிய உடலைக் கண்ட அவளுடன் தங்கிய அந்த ஒரிய பெண் அதிர்ச்சியில் பிரமை பிடித்தவள் போல இருந்தாள். 

போலீஸ் வந்தது. ஆம்புலன்ஸ் வந்தது.  கயிற்றை அறுத்து அவளைக் கீழே கிடத்தி ஸ்டெரச்சரில் கொண்டுவந்தார்கள். வண்டியில் ஏற்றும்போது அவளை மூடியிருந்த படுதாவை விலக்கி  முகத்தைப் பார்க்க எனக்கு மனசில்லை.  கால் பக்கம் படுதா விலகிக்கிடந்ததில்  அவளின் வீங்கிக்கிடந்த காலில் வெள்ளிக் கொலுசு தெரிந்தது.

பின்வந்த நாட்களில் அந்த வளாகம் முழுக்க லஷ்மியின் இறப்புக்கு காரணங்கள் என்று பல  செய்திகள் கசிந்தன.  அவள் கர்ப்பமாய் இருந்ததாய்,  பெற்றோர்கள் பார்த்த பையனை இவள் மறுத்து  வீட்டில் சச்சரவானதாய், இவள் காதலனை பெற்றோர்கள் ஒப்புக்கொள்ளாததாய், அந்தப் பையன்  அவளை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்ததாய், அலுவலகத்தில் வந்த வாய்ப்பான போஸ்டிங்கை ஏற்றுக்கொண்டு அவன் அமெரிக்கா சென்றுவிட்டதாய்..  வித விதமாய் செய்திகள்.

அதற்காக உயிரை மாய்த்துக்கொள்ளவேண்டுமா ?

ஒரு  வாழ்நாள் முழுவதும் போராடிப் பெற வேண்டிய சுகங்களை இளவயதிலேயே  பெறும் இவர்கள் ஒரு சின்ன  தோல்விக்கு துவண்டு விடுகிறார்கள்.  போராட்டமும், தோல்வியும், வலியும் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பதை வாழ்ந்து உணருவதற்கு முன்னரே  இவர்கள் ஒரு இழப்பில் வாழ்க்கைகளை முடித்துக்கொள்கிறார்கள்.

என்னால் லஷ்மியின் இறப்பை மறக்க இயலவில்லை.  ஒரு வகையில் நானும் அதற்கு காரணம் என்று எண்ணம் நிலைத்துவிட்டது. அன்று நான் விலகிச் சென்றிருக்கக்கூடாது. என் பெண்ணாய் இருந்தால் போயிருக்கமாட்டேன் இல்லையா?  அந்தப் பையனை கண்டித்து  வீட்டில் முறையிட்டிருந்தாலோ, இருவரையும் உட்காரவைத்து பேசியிருந்தாலோ, இன்னும் ஐம்பது அறுபது ஆண்டுகள் வாழப்போகும் வாழ்க்கையில் இதுவும் இதுபோலவும் நிறைய நெருடல்கள் வரும் என்று புத்தி சொல்லியிருந்தாலோ,  உயிரைப் போக்கிக்கொள்ள இது காரணம் இல்லை என்று உணர்த்தியிருந்தாலோ அந்தப் பெண் இன்று உயிரோடு இருந்திருப்பாள் என்கிற நினைப்பு என்னுள் ஆழப் பதிந்துவிட்டது.

அதன் பிறகு,  பாதிக்கப்பட்ட மனநிலையில்  என் பெண்ணை அணுகும்விதம் கூட மாறிவிட்டது.  என் அதிகாலை கனவுகளில் நங்கை தூக்கில் தொங்கினாள். அவளுக்குத் தெரியாமல் அவள் செல் போன் குறுஞ்செய்திகளைச் சோதித்தேன்.  அவள் அலைபேசியில் நண்பர்கள் பட்டியலில் ஆண் பெயர்களைத் தேடினேன். முக புத்தகத்தில் அவள் சுவரை கண்காணித்தேன். அவளுக்கு செல்போனில் அழைப்புகள் வரும்போது  ஒட்டுக்கேட்டேன். என் திடீர் கெடுபிடிகளால் என்னிடம் கோபமாய் இருந்தாள் நங்கை.

அடுத்தமாதம்  அலுவலக அறைக்குள் நுழைந்த பெண்ணுக்கும் இருபது சொச்சம் வயதுதான் இருக்கும்.  அழகாய் இருந்தாள். அவள் பூசியிருந்த வாசனைத் திரவியத்தின்  வாசம் அறையை  நிறைத் தது.  நகப்பூச்சு அணிந்த  மெல்லிய விரல்களால் தாங்கி நீட்டிய கோப்பில் இருந்த காகிதக் கணக்கை சரி பார்த்தேன். அவள் பெயரையும், ஊரையும், படிப்பையும் விசாரிக்காமல், அவளை அறிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல்  மௌனமாய் கையெழுத்துப்போட்டுக்கொடுத்தேன்.

“தேங்க்ஸ் சார்” புன்சிரிப்போடு சொல்லிவிட்டு எழுந்து அறைக்கதவை திறந்து  அந்தப் பெண் வெளியேறினாள்.

அவள் போகும்போது மெல்லிய கொலுசு ஒலி எனக்கு மட்டும் கேட்டது.

ஏப்ரல், 2015.