ஓவியம் ஜீவா
சிறுகதைகள்

பாதபூஜை

ஆத்மார்த்தி

1. குன்றம்

எப்போதிருந்து திங்கட்கிழமை மீதான வெறுப்பு வந்தது..? அப்பா    வீட்டை விட்டு ஓடிப்போனது ஒரு திங்கட்கிழமை.அந்த தினத்தின் சாயங்காலம் மிகவும் நீண்டது..வீடு கொள்ளாத கூட்டம்.சொந்தக் காரர்களும் அக்கம் பக்கத்தாரும் நெரிசலாக அமர்ந்து ’அடுத்தது என்ன?’ என்று பேசிக் கொண்டிருந்தார்கள். வீட்டு

சமையலறையில் யாரோ யாரையோ அதட்டிக் கொண்டு காஃபியைப் போய்க் கொடு என்றார்கள்.எனக்கு அப்போது விபரம் தெரியவில்லை என்று அடிக்கடி அம்மா சொல்வாள்.

முத்துக்குமாரசாமி மாமா வரக் கொஞ்சம் தாமதமாயிற்று.அவரைக் கண்டதும் இரண்டு தரப்புக்களுமே கொஞ்சம் பயங்கலந்து மரியாதை தந்தன.அப்பா ஓடிப் போனாரா இல்லை தற்கொலை செய்து கொண்டாரா என்பதைப் பற்றி எல்லாம் யாரும் பேசத் தேவையில்லை என்று தான் முத்துக்குமாரசாமி மாமா பஞ்சாயத்தைத் தொடங்கினார்.அம்மாவுக்கு அவரது வருகை ஆறுதலாக இருந்தது.வீட்டையும் ஒட்டினாற்போலிருந்த ஆறரை செண்ட் இடத்தையும் ஆறுமாச காலத்துக்குள் விற்று வரும் தொகை எவ்வளவோ அதனைக் கடன்காரர்களுக்கு செட்டில் செய்து விடுவதாக அம்மா எழுதித் தர மாமா சாட்சிக் கையொப்பம் இட்டார். அம்மா கல்லாகி இருந்தாள். அவள் அழவே இல்லை.அரை மணி நேரத்தில் பஞ்சாயத்து சுமூகமாக முடிவடைந்தது.

கட்டிய புருஷன்  தற்கொலைக் கடிதாசி எழுதிவிட்டுக் காணாமற் போயிருந்த போதும் அவள் அழாதது நிறையப் பேரை உறுத்திற்று. ஒரு கதை கிடைக்கும் போது அதனைத் தங்கள் வசதிக்குத் திறந்து கொள்ள முடிகிறது. அப்படியான சாவியை அம்மா தன் உறுதியான மௌனத்தில் வழங்கினாள். வந்த கூட்டம் தங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற் போல் பெருங்கதை ஏதும் கிடைக்காமல் சலிப்போடு திரும்பிற்று.

ஒரு வாரகாலத்துக்குள் வீட்டைக் காலி செய்தோம். புரோக்கர் பழனிவாசனிடம் மாமா ‘எத்தனை சீக்கிரம் முடியுமோ இந்த வீட்டை தட்டி விட்டுரணும் பழனீ..‘ என்று கேட்டுக் கொண்டார். இருந்த பண்ட பாத்திரங்கள் முதற்கொண்டு பலவற்றையும் அம்மா வந்த விலைக்கு விற்றாள். எது எத்தனைக்குப் போயிற்று என்பதை எதிர்த்த வீட்டு பாக்கியத்தம்மாள் மனசுக்குள் குறித்து வைத்துக் கொண்டாள். அம்மா அடுத்த நாளுக்காகப் பெரிய திட்டம் ஏதையும் வைத்துக் கொள்ளவில்லை.மிகவும் தேவையான சிற்சில சாமான்களை மாத்திரம் வைத்துக் கொண்டாள். கையில் கணிசமாகப் பணம் தேறியது. பாப்பாவை இடுப்பில் இருத்திக் கொண்டு என்னிடம் சின்ன மூட்டையைத் தந்தாள்.தென்பரங்குன்றத்துக்குச் செல்லும் வழியில் சிறு சரிவில் ஓட்டு வீடு ஒன்றை வாடகை பேசி இருந்தாள். மாமா சிபாரிசு தான். ஒரே நாளில் வீடு மாறினோம்.

புதிய வீட்டின் சுருக்கம் என் கனவுகளைப் பலவாறாகக் கிழித்தது.

அடுத்த திங்கட்கிழமை தான் இட்லிக் கடை ஆரம்பமாயிற்று. அம்மாவின் கைப்பக்குவம் எடுத்த எடுப்பிலேயே கனஜோராய் வியாபாரம் ஆகத் தொடங்கியது. எங்கள் கதை தெரிந்த பலரும் குன்றத்தில் இருந்தார்கள். எப்போதும் உணவின் தேவை இருக்கக் கூடிய சஞ்சாரஸ்தலம் குன்றம். அம்மா மெல்லக் கடனின் கோரப்பிடியில் இருந்து வெளியே வந்தாள். மாமா உண்மையிலேயே தன்னாலான அளவு எங்கள் குடும்பத்தின் நிழலாக இருந்தார்.அவர் செல்வாக்காகத் தழைத்தோங்கிய காலம் முடிவடைவதற்குள் நான் படிப்பை முடித்து எம் அண்ட் டி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். பாப்பா இஞ்சினியரிங் கல்லூரியில் சீட் கிடைத்து ஆஸ்டலுக்குப் போன போது நான் ஏழாவது வருஷ சர்வீஸில் இருந்தேன். இரண்டு பேருமே வெவ்வேறு காரணங்களை முன்வைத்து ‘இட்லிக் கடை போதும்மா..‘ என்று அம்மாவை வற்புறுத்தினோம். அவள் அரை மனதாக சரி என்று வீட்டுக்குள் முடங்கினாள். ஒவ்வொரு நாளையும் கசப்பு மாத்திரை முழுங்குவதைப் போலத் தள்ளினாள்.எல்லாம் ஒரே வருஷம். முருகனடியைச் சேர்ந்தாள் அம்மா. பாப்பா இஞ்சினியரிங் முடித்த மறுவாரமே தன் உடன் படித்த சந்தன் என்னும் மார்வாடிப் பையனை ரிஜிஸ்தர் கல்யாணம் செய்து கொண்டது இன்னொரு திங்கட்கிழமை தான்.

‘ஏன் எங்கிட்ட சொல்லலை..?’ என்று கேட்டேன்.அதற்கு கோமதி ‘சொல்லியிருந்தா..?‘ என்று கேட்டாள். ‘என்னைக் குறை சொல்லாத குமார்.நாம ரெண்டு பேருமே செல்ஃபிஷ்.நமக்கு இடையில இருந்த ஒரே ஒரு நூலிழை ஒட்டடை மாதிரி கலைஞ்சு போயாச்சு. அம்மா இருந்திருந்தா அப்டின்னு நாம பேசிக்கிறதுல அர்த்தம் இல்ல. அதான் இல்லையே...திஸ் இஸ் மை லைஃப்.ஐம் ஆன் இஞ்சினியர், நாட் எ பேபி’ என்று மூச்சிரைத்தவள் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

எனக்குள் எங்கேயோ வலித்தது. எல்லாருக்கும் பொதுவான ஒரே உலகம் போலத் தோன்றினாலும் அதனுள் இருக்கக் கூடிய அத்தனை உலகங்களும் வெவ்வேறு. பாப்பாவின் உலகத்துக்குள் அம்மாவோடு சேர்ந்து நானும் இறந்து போயிருந்தேன். அந்த செய்தியை எனக்குத் தெரியாமல் அத்தனை நாட்கள் பொத்தி வைத்திருந்தது அவள் சமர்த்து.

‘நீயும் உன்னிஷ்டப்படி இருந்துக்கலாம்.உன்னையும் நான் எதும் கேட்கப் போறதில்லை.என் மேல உயிரா இருக்கார் சந்தன்..’ என்று மூன்றாவது வாக்கியத்தை அவள் சொல்ல ஆரம்பித்த போது நான் கிளம்பி நடக்கலானேன். எரிச்சலில் என்ன செய்வதென்று தெரியவில்லை. அன்றைக்குத் தான் முதன் முதலில் சிகரட் பிடித்தேன். தொண்டை எரிந்தது. நெஞ்சுக் குழி வேண்டாம் என்று என்னைக் கெஞ்சியது. ஆனாலும் நான் மிகத் தனியாக இருந்தேன். எனக்கு எதாவதொன்று தேவைப்பட்டது. அத்தனை சத்தியமாக அத்தனை அவசரமாக எனக்கொருத்தி வாய்த்து பாப்பாவின் முன்னே மாலையும் கழுத்துமாய்ச் சென்று நிற்பதற்கு சாத்தியமில்லை. இன்னும் யோசித்துப் பார்த்தால் எனக்குள் உண்மையிலேயே அத்தனை கோபமிருந்தாலும் நானொரு பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை.இருபத்தியாறு வயதுகளில் என்னென்னவோ தோன்றும்.எனக்கு யார் மீதும் காதல் இல்லை. நான் எதிரே நடந்து வரும் எந்தப் பெண்ணின் மார்பகங்களையும் உற்று நோக்கியதில்லை. போஸ்டர்கள் தொடங்கி புத்தகங்கள் வரைக்கும் காணவாய்க்கிற பெண்ணுடல்களை அவசரமாய்ப் புரட்டிவிடுவேன். அம்மா மற்றும் பாப்பாவோடே வாழ்ந்திருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். என்றாலும் தனிமை என்ற ஒன்றை எப்போதும் பதற்றத்தினூடே தான் அணுகியிருக்கிறேனே தவிர என் வாழ்க்கையில் பல கற்பனைகள் கூட எனக்கு வாய்க்காமல் கதவுகளை சார்த்திக் கொண்டே இருந்திருக்கிறேன்.சொல்லப் போனால் எதிரே வருவது எனக்கான தேவதையா என்று முகம் நிமிர்ந்ததே இல்லை. கடந்து செல்பவளுக்குப் பெயரா தேவதை...?வெல்...நானொரு பரிபூரண அசமஞ்சம்.

அதற்கு அப்பால் என் வாழ்க்கையில் நிறைய திங்கட் கிழமைகள் வந்தன.ஒவ்வொரு திங்கட் கிழமையும் எப்படி இருக்குமோ என்ற பதற்றம் வெள்ளிக்கிழமை சாயந்திரங்களிலேயே துவங்கிவிடும். செவ்வாய் காலை வரைக்கும் நீடிக்கும். என்னளவில் ஒரு வாரம் என்பது புதனும் வியாழனும் மாத்திரம் தான். திங்கட்கிழமைகள் பாம்பின் தலையும் முதலையின் பிருஷ்டமும் கொண்டு வினோதமான கெக்கலிப்புடன் என்னைத் துரத்திக் கொண்டே இருந்தன. நான் அவற்றிடமிருந்து விடுபடும் வரைக்கும் எல்லா சாலைகளிலும் இலக்கற்று ஓடிக் கொண்டே இருந்தேன். மரணத்துக்கு முந்தைய இரைச்சல் இரவுகளாய் என் ஓய்தல்கள் வாய்த்தன.

2.மேன்ஷன்

நான் செல்பேசி பயன்படுத்துவதில்லை. எனக்குக் கைக்கடிகாரம் போதும். அதுவும் மணி பார்க்க இல்லை. நாள் பார்க்க. பாழாய்ப் போன திங்கட்கிழமை இல்லை என்று மற்ற தினங்களை உறுதி பண்ணிக் கொள்வதில் ஒரு ஆனந்தம். திங்கட்கிழமைகளிலிருந்து வேறெந்த தினமாவது என்னைக் காப்பாற்றிவிடாதா என்றுஒரு நப்பாசை. மற்றேதுமில்லை. ஏழெட்டு வருடங்கள் கழித்து எங்கெங்கோ விசாரித்து என் முகவரியைத் தேடி அது ஒரு மேன்ஷன் அறை- வந்தாள் பாப்பா. எதுவுமே நடக்காதது போல என்னிடம் அளவளாவினாள். என்னை அடிக்கடி நினைத்துக் கொள்வதாகவும் அது மாதிரியான சமயங்களில் உனக்குப் புரையேறி இருக்கும் என்றாள். என் தொண்டை வரைக்கும் எழுந்த பதிலைச் சொல்லவில்லை. வேண்டாம்.

தன் பையனுக்கு அழகர் கோயிலில் மொட்டை அடிக்க வேண்டுதல் என்பதே அவளது இந்திய விஜயத்தின் காரணம்.‘இந்தக் காலத்ல ஒரு செல்ஃபோன் இல்லாம ஒருத்தன் இருப்பானா..?’  என்று கடிந்தபடி எனக்கொரு செல்ஃபோனைத் தந்தாள்.ஆப்பிள் சிக்ஸ் எஸ்....காஸ்ட்லி ஃபோன் டா...பத்திரமா வெச்சிக்க என்றாள். என் மீதான திடீர் அன்புக்குக் காரணம் இல்லாமல் இல்லை. சேட்கணவனின் அம்மா வழுக்கி விழுந்து  கால் விழுந்து விட்டதாம்.‘குலதெய்வத்துக்கு எதும் பாக்கி வெக்காதே..’ என்று அவர்களுடைய ஜோசியன் சொல்லிவிட எதற்கு விடுவானேன் என்று கிளம்பி அமெரிக்காவிலிருந்து இருபது நாள் லீவில் வந்திருக்கிறாள். வந்த இடத்தில் தாய்மாமன் மடியில் அமர்த்தித் தான் காது குத்த வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. தேடி வந்து குளிர்விக்க ஒரு செல்ஃபோன். ஸ்டிங்கிங் கிவ் அண்ட் டேக்ஸ்.

அந்த செல்ஃபோனை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமல் என் அறையில் டீவி மேல் வைத்திருந்தேன். அழகர் கோயிலில் சாமி கும்பிட்டு காதுகுத்தி மொட்டை அடித்து வரும் போது ஃபார்ச்சூன் பாண்டியனில் எல்லாருக்கும் விருந்து. அவர்கள் ஸைட் நாற்பது பேருக்கு மேல் கூட்டம். பாப்பா என் காதோடு ‘இதை நீ குடுக்குறாப்ல குடுத்திரு’ என்று என் கையில் ஒரு பொட்டலத்தைத் திணித்தாள். நான் எனக்கென்ன நடக்கிறது என்று அந்தக் காலையிலிருந்தே பிரமித்துக் கொண்டிருந்தவன் சரி என்று வாங்கி என் ஜிப்பா பாக்கெட்டில் திணித்துக் கொண்டேன். மிக மெல்லிய பாலித்தீன் பொட்டலம். உள்ளே வெகு சன்னமாக ஒரு மைனர் செயின்.சாப்பிட்டு முடித்ததும் என் காதோடு வந்து ஞாபகப் படுத்தினாள். செயினை எடுத்து போட்டு விடு குமார் என்றாள்.

நான் என் ஜிப்பா பாக்கெட்டில் துழாவினேன். காணோம். எங்கிட்ட தந்தியா பாப்பா என்றேன். பற்களைக் கடித்தபடி ‘யூ.. பாஸ்டர்ட் விளையாடாத..’ என்றாள் அடுத்தவர்களுக்குக் கேட்டிருக்காது தான். என் பாவனைக் கத்தியால் அவள் தொண்டையைக் கரகரவென்று அறுத்தேன். குருதி வழிய என்னை சுட்டுவிரல் நீட்டிக் காட்டிக் கொடுத்தவாறே பச்சைக் கார்பெட்டில் கண்செருகி விழுந்து இறந்தாள்.

‘நீ மனுஷனாயிருப்பேன்னு நெனச்சேன்..அப்பன் புத்தி தப்பாம வந்திருக்கு...?’ என்றாள். அவன் தானே உனக்கும் அப்பன் என்று மெலிதான குரலில் கேட்டேன்.அவள் பதில் சொல்லவில்லை. பாவம் அவளுக்கு மானப்பிரச்சினை. எனக்கும் ஒரு அண்ணன் இருக்கான் எனக்காக அவன் செயின் போடுவான் குழந்தைக்கு என்று காட்டிக் கொள்ள விரும்பி இருக்கிறாள். லாபநட்டமற்ற கணக்கு. எனக்கு ஓஸியில் பெருமை. குழந்தைக்கு இன்னுமோர் செயின் என்று வின்வின் கணக்குப் போட்டு வந்தவளுக்கு நான் அசடாட்டம் அய்யய்யே காணம் என்றதும் பதற்றத்தில் பாவம் பாஸ்டர்ட் என்று திட்டுகிறாள்.  சரி செயின் இருந்திருந்தால் நான் பாஸ்டர்ட் இல்லையா..?அது தொலைந்ததால் நான் பாஸ்டர்டா..?இதென்ன ஸ்வாமி நியாயம்..?

சந்தன் என்கிற காதல்கணவன் என் தங்கச்சி புருஷன் வந்து ‘என்ன?‘ என்று வினவ இவள் எதோ சொல்ல இரண்டு பேரும் என்னைப் பார்த்த பார்வையில் சத்தியமாய் சினேகிதம் இல்லை.‘சரி விடு’ என்று ஒரு வார்த்தை தான் சொன்னான். இவளும் அங்கே நான் என்ற ஒருவன் இல்லவே இல்லை என்றாற் போல் கிளம்பிப் போயே விட்டாள்.திரும்பிச் செல்லும் போது என்னை கூப்பிடாமல் சரக் புரக்கென்று நாலைந்து கார்களில் சென்றுவிட்டார்கள். அன்றிரவெல்லாம் குடித்தேன். நான் எந்தவகையிலும் முயற்சிக்காத ஒரு உறவும் சந்திப்பும் அதன் தொடர்ச்சியாக இன்னும் கொஞ்சம் மானம் அழிதலும் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது..?எனக் கண் கசிந்தழுதேன். மறு நாள் காலை நான் குடியிருக்கும் எஸ்.எஸ்.காலனி மேன்ஷன் ரூமுக்கு வந்தாள் பாப்பா.தலையை குதிரை வால் இட்டிருந்தாள். ஜீன்ஸூம் டீஷர்ட்டுமாய் அமெரிக்கத்தனமாய் எனக்குத் தெரிந்த ஒருத்தியின் வேறோருத்தியாய் வந்திருந்தாள்.

‘நீ இப்பிடி பண்ணுவேன்னு நா நெனக்கவே இல்லை.என் மானம் போச்சு..’ என்றாள்.நான் பேசாமல் ‘நான் எடுக்கலை பாப்பா...எனக்கெதுக்கு செயின்? ’ என்றேன்.

‘நீ வேணும்னு பண்ணியா இல்லை நிசமாவே தொலைஞ்சுதா..இனி எந்த முகத்தை வெச்சிட்டு என் வீட்டுக்காரரை ஏறெடுப்பேன். நா சண்டை போட்டுத் தான் உன்னைக் கூப்பிட சொன்னேன். உன் இமேஜை ரெய்ஸ் பண்றதுக்குத் தான் ட்ரை பண்ணேன். பட் நீ சொதப்பிட்டே குமார். ஐம் ஸாரி நீ எதுக்குமே லாயக்கு இல்லை. அம்மா உன்னை என்னென்னவோ நினைச்சா...நீ ஃபெயில் ஆய்ட்டே’ என்றவளிடம் ‘இப்ப உனக்கு என்ன வேணும்..?’ என்றேன்.

‘செயின் லாஸ் ஆனது பரவாயில்ல போனாப் போட்டும்னு சொல்லிட்டார். ஆப்பிள் ஐஃபோன் ரொம்ப காஸ்ட்லி. நீ வேற செல் யூஸ் பண்ண மாட்டேன்னு சொன்னியே அதான் அது அவரோட கஸின் ஒருத்தன் காசு கொடுத்து வாங்கிக்கறேன்னு சொல்றான்..அதைக் குடுத்திட்றியா?’ என்றாள்.

என்னை திட்டாதீர்கள் ஸ்வாமி...அதுவும் ஒரு திங்கட்கிழமை தான். என் உடம்பெல்லாம் எரிந்தது. மௌனமாக டீவி மேலிருந்த பெட்டியை எடுத்து அவள் கையில் திணித்தேன். அவள் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கிளம்பினாள். பொண்டாட்டியை டைவர்ஸ் செய்யலாம்.கூடப் பிறந்தவளை என்ன செய்து உறவறுப்பது.? நான் பாஸ்டர்ட் என்று சான்றளித் தவளை எப்படி என்னிடமிருந்து பெயர்த்து சுத்தமாய் நீக்குவது..? திரும்பி வாசலுக்குப் போனவள் தன் ஹீல்ஸ் செருப்பை கஷ்டப்பட்டு அணிந்து கொண்டாள்.இரண்டாவது செருப்பை அணிவதற்காக செல்ஃபோன் டப்பாவை கைப்பிடிச் சுவர் மீது வைத்துவிட்டு குனிந்து மாட்டிக் கொண்டாள்.ஒருகணம் பக்கத்தில் கிடந்த என் செருப்பை எடுத்து அவளை சரமாரியாக அடித்து நொறுக்கி..ச்சே...எதெற்கெல்லாம் இந்த தைரியம் தேவைப்படுகிறது..?நான் எதற்கும் லாயக்கு இல்லாதவன் தான்.

மெல்ல ஜன்னல் வழியாகப் பார்த்தேன்.இவள் மாடியிலிருந்தே கீழே காரில் இருந்து சன்னல்வழியே பார்க்கும் சந்தனிடம் கட்டைவிரலை உயர்த்தி காட்டினாள். டாக் டாக்கென்று நடந்து படியிறங்கிப் போனாள். அதற்கடுத்த திங்கட் கிழமை வழக்கம் போல் வாரவிடுமுறை ரூமுக்குள்ளேயே பொத்திக் கிடந்தவன் எதோ ஓரு ஆவேசத்தில் சினிமாவுக்குக் கிளம்பினேன்.இன்னொரு பேண்டை எடுக்கத் தலைப்படுகையில் அந்த சனியன் பிடித்த ஜிப்பாவின் உட்புறம்

பாக்கெட்டின் ஓட்டை வழியாக முழுவதுமாகக் கீழிறங்கிக் கொக்கி மாத்திரம் தொக்கிக் கொண்டு பாப்பாவின் செயின் தொங்கிக் கொண்டிருந்தது. டீவி மேலேயே வெகுகாலமாய் ஒரு அட்டை பாக்ஸில் இருக்கிறது.

ஓவியம்

3. மின்னசோட்டா

ஆறு மாசங்கள் கழித்து  பாப்பாவும் அவள் கணவனும் மின்னசோட்டாவின் ஓரு தடுப்புச் சுவரில் கார் மோதி அந்த இடத்திலேயே அமரத்துவம் எய்தியதாக எனக்குத் தகவல் வந்தது. கடைசியாக கட்டைவிரலை உயர்த்திக் காட்டியபடி என்னிடமிருந்து கிளம்பிப் போன ஒருத்தியின் பிம்பம் எனக்குள் வந்து வந்து போனது. சந்தனின் அண்ணன் என்னிடம் பாஸ்போர்ட் இருக்கிறதா என்று கேட்டான். நான் இல்லை என்றதும் என்னிடம் சில காகிதங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டான். ஒரு இடத்தில் பாஸ்டர்ட் என்று கிறுக்கினேன்.மொத்தம் நூற்றிப்பதினாறு ஒப்பங்களில் ஒன்று இப்படி இருந்தால் யாரும் கவனிக்கப் போவதில்லை. எல்லாம் ஒரு சம்பிரதாயம் தானே..?

அடுத்த இரண்டு மாசங்கள் கழித்து பாப்பாவின் வங்கியிலிருந்து என் வங்கிக் கணக்கிற்கு இந்திய மதிப்பில் சில கோடிகள் அக்கவுண்ட் ட்ரான்ஸ்பர் ஆகியிருந்தது. சந்தனின் பெற்றோர் இன்சூரன்ஸ் பணத்தில் சரிபாதியை எனக்குத் தந்துவிடும் படி அறிவுறுத்தி இருந்தார்கள் என்று தெரிந்து கொண்டேன். பாப்பாவின் பணம் என்று ஆரம்பத்தில் உறுத்தல் இருந்தாலும் போகப் போக சகஜமாயிற்று.

அது வரைக்கும் சாம்பல் நிறத்தில் கண்ணற்ற கேவல்களுடன் பெருகிக் கொண்டிருந்த திங்கட்கிழமை என்னும் வவ்வால் வேறொரு பறவையாய் மாறிற்று. திங்கட் கிழமைகள் குறிப்பிட்டுச்சொல்லும்படியான சம்பவங்கள் ஏதுமற்றுச் சலித்தன. சில வாரங்கள் தொடர்ச்சியாக எது திங்கள் என்றே தெரியாத பரபரப்பும் நிகழ்ந்தது. பாஸ்போர்ட் எடுக்க விண்ணப்பித்தேன்.

சென்னையில் ஒரு அழகான ஃப்ளாட்டை வாங்கிக் குடியேறினேன். வெர்னா காருக்கு வெள்ளாடை ட்ரைவர். சமையல் வேலை செய்வதற்கு ஒரு அம்மாளை நியமித்தேன்.இந்த சென்னை நகரத்தில் பணத்தைத் துரத்தத் தேவையில்லாதவர்கள் எதை நோக்கியும் ஓடவேண்டியதில்லை. என்னிடம் சமீபத்தில் கரையாத கோடிகள் இருக்கின்றன.

நினைத்ததை எல்லாம் செய்து கொள்ள முடிகிறது. புத்தகங்களை விலை பாராமல் வாங்க முடிகிறது. டீவீடிக்கள் நல்ல உயர் ரக மதுபானம்...வேறென்ன வேண்டும்..?அடிக்கடிப் பயணிக்க ஆரம்பித்தேன். முதலில் டெல்லி.அப்புறம் மும்பை. பிற்பாடு கொல்கத்தா.. இந்தியாவில் எத்தனை இடங்கள் பார்க்க வேண்டி இருக்கின்றன...?எப்போதாவது ஜன்னல் பக்கத்தில் அமர்ந்து பயணிக்கையில் பாப்பாவின் முகம் வந்து மேகமாய்க் கலையும். அப்போதுகளில் விமானத்தின் புதிய பணிப்பெண்ணின் வழுவழு சிரிப்பை பார்த்து மூட் மாறிக் கொள்வேன். திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை.கொஞ்சம் பயமாக இருக்கிறது. வெல் அது யாருக்குத் தெரியப் போகிறது..?

ஆச்சரியமாக திங்கட்கிழமைகள் என் மேல் ஆசீர்வாதங்களாய்ப் பொழியத் தொடங்கின.

சென்ற திங்கட்கிழமை சிங்கப்பூர். வாரக்கடைசியில் மலேசியா. இதோ இன்று இன்னொரு திங்கட்கிழமை.ஹாங்காங்கின் புகழ்பெற்ற மசோஸ்யா ஹோட்டலின் முப்பத்தியாறாவது தளத்தில் அமைந்திருக்கிற ஸ்பா செண்டருக்குள் செல்கிறேன். என்னை வரவேற்று சூடான பானம் ஒன்றைத் தந்தவளின் கன்னத்தில் தட்டுகிறேன். அவளுக்குத் தெரிந்திருக்கிறது. ஆடவர்கள் இத்தனை தூரம் கடந்து வந்தால் செலவழிக்க அஞ்சுவதில்லை என்று. என் பர்ஸிலிருந்து பெருந்தொகையைத் தன் கணக்கிற்கு மாற்றிக் கொள்ள அவள் விரும்பினாள்.

வெறும் மஸாஜ் போதுமா..?அல்லது ஹேப்பி எண்டிங் வேண்டுமா என்று கேட்டாள். அவள் கையில் இருந்த ஃபார்மில் கவனமாய்க் குறித்துக் கொள்ளக் காத்திருந்தாள். சொல்லி விட்டுப் பிறகு மாற்ற முடியாது.வெறும் மசாஜூக்கும் ஹேப்பி எண்டிங்குக்கும் வெவ்வேறு நபர்கள் வருவார்கள் என்பது தெரிந்த போது எதற்கும் இருக்கட்டும் என ஹேப்பி எண்டிங்கை தேர்வெடுத்தேன். என் கார்டில் இருந்து பணத்தை அவள் அக்கவுண்டுக்கு மாற்றினாள்.ஒரு அரசனை அழைத்துக் செல்வது போல் என்னை அந்தப்புரத்துக்குள் அழைத்துச் சென்றாள்.

4.ஹாங்காங்

எனக்கு வழங்கப்பட்ட அறை பாதி இருளில் மிதந்தது. எனக்கான தெரபிஸ்ட் உடம்பில் இருந்து கமழ்ந்த பாடிஸ்ப்ரேயை இதற்கு முன்பு எங்கேயோ இதே நெருக்கத்தில் உணர்ந்திருக்கிறேன். எங்கே எனத் தெரியவில்லை. எங்கோ ஆழதூர உயரத்திலிருந்து மிக மென்மையான வாத்திய இசை வழிந்து கொண்டிருந்தது.எனக்கு வழங்கப்பட்டவள் அதிகபட்சம் இருபது வயது இருக்கலாம். அவள் என்னை மென்மையாக அதே சமயம் உறுதியான தன் கரங்களால் கையாளத் தொடங்கினாள். உடலெல்லாம் வெறுங்கைகளால் வழித்து சொடக்கிட்டவள் என்னை ஒரு நாற்காலியில் அமரச்செய்தாள். கால்களை நாற்காலி முன் தொட்டியில் இருத்தினாள். இளஞ்சூடாக வென்னீர் வரத்து தொடங்கிற்று. முதலில் என் கால்கள் இரண்டையும் வரிசையான ஃபோம்களைக் கொண்டு கழுவினாள். ஒவ்வொரு ஃபோம் அல்லது  சோப் உபயோகத்துக்கு அப்பாலும் மறுபடி மறுபடி என் கால்களைக் கழுவிக் கொண்டே இருந்தாள். நகங்களை வெட்டினாள். நகத்திற்கும் காலுக்கும் இடையிலான அழுக்கை அதற்கென்றே இருக்கும் சின்ன கத்தி கொண்டு நீக்கினாள்.. புதியதாய்ப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை ஒருசேரக் குளிப்பாட்டுகிற செவிலியைப் போல என் கால்களை அவள் தாலாட்டினாள். தங்க நிற வஸ்து ஒன்றை என் கால்களெங்கும் அவள் பூசிய போது லேசாக ஜில்லென்றிருந்தது.

என்னை நிமிர்ந்து பார்க்கும் போதெல்லாம் அவள் சிரித்தாள்.இப்போது பெடிகூர் முடிந்து பாடி மஸாஜூக்காக என்னை படுக்கையில் குப்புறப் படுக்க சொன்னாள். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு அவளுடைய ஆளுகையில் என் உடல் இருந்தது. கண்களை லேசாக மூடிக் கொண்டவன் அயர்ந்து உறங்கியிருந்தேன். முழுவதுமாக முடிந்த பிறகு என் கன்னத்தை லேசாகத் தட்டி எழுப்பினாள்.

நீ இப்போது குளிக்கலாம் என்றாள். நான் சரி என்றாற் போல் தலை அசைத்தேன். ஹேப்பி எண்டிங் என்று சிரித்தவள் என் வலது தொடையில் தன் கையை வைத்து மெல்ல வருடினாள். எண்டிங் என்ற வார்த்தை என்னைக் கலவரப்படுத்தியது. சீக்கிரமே எல்லாமும் முடிந்துகொண்டிருக்கின்றன என்பதை நினைப்பதற்கே கனமாக இருந்தது. இப்போது எனக்கு மிக நெருக்கமாக அவள் நின்றுகொண்டிருந்த போது அவளது பாடிஸ்ப்ரேயின் நறுமணம் இன்னும் நெருக்கமாக இன்னும் வியர்வையோடு எங்கே எங்கே என எனக்குள் ஞாபகங்களைக் கலைத்துப் போட்டு நிரடிக் கொண்டிருந்தேன்.

ஆமாம்..எனக்குள் எதோ உதறியது. பாப்பா என் அறைக்கு வந்த போது இதே பாடிஸ்ப்ரேயைத் தான் அணிந்திருந்தாள்.

அவளது முகத்தை என்னால் ஏறேடுக்க முடியவில்லை.என் தொடையிலிருந்து மையத்தை நோக்கி நகர்ந்த அவளது கரத்தைச் சட்டென்று உதறினேன்.

யூ ஹவ் பெய்ட் ஃபார் தட் நோ  என்று முணுமுணுத்தவள் டோண்ட் யூ நீட் தட் என்றாள். அவள் குரல் வெளுத்திருந்தது.

நான் சட்டென்று அவளது கரங்களைப் பிடித்தேன். அவள் மறுபடி முகம் மலர்ந்தாள்.

ஹவ் மச் யூ வாண்ட் என்றேன்...டிப்ஸ் ...?என்றவள் ‘வாட் யூ நீட் ஃப்ரம் மீ ..இஃப் யூ டேக் சம்திங் ஐ கேன் டேக் யுவர் மணி’ என்றாள். நான் அவளுக்கு அருகே குனிந்து காதோடு சொன்னேன் .

ஓரிரு வினாடிகள் அவள் சொல்வதறியாது நின்றாள்.ஆர் யூ சீரியஸ்..?என்றாள். நான் சிரித்தவாறே எஸ்..சீரியஸ்.எனக்கு என்ன வேண்டுமோ அதைத் தான் கேட்கிறேன் என்றேன்.

அவள் பணத்தை எண்ணினாள். தன் ஆடைகளை எடுத்து ஒவ்வொன்றாக அணிந்துகொண்டாள். அந்த அறையில் தற்போது விழிகள் ஒளிர்ந்து உருளும் வினோதமான இருள் ததும்பிக் கொண்டிருந்தது. நானும் அவளுமே ஒரு அசையும் சித்திரத்தின் உருவங்களைப் போலத் தோன்றினோம். அவள் இன்னமும் என்னை நான் பாராத தருணங்களில் பார்த்தபடி இருந்தாள்.

மெல்லத் திரும்பியவள் என்னை நெருங்கினாள். என் கன்னத்தில் நாலைந்து முறை மாறி மாறி அறைந்தாள். நான் கண்களை மூடியபடி இருந்தேன்.தளர்ந்தவளாய்த் தன் ஹேண்ட்பேகை எடுத்துக் கொண்டவள் வாசலை நெருங்கி,‘  நீ அறையச்  சொன்னதால் தான் அறைந்தேன். எனக்கு வருத்தமாக இருக்கிறது. இது தான் உனக்கு ஹேப்பி எண்டிங்கா..?’ எனக் கேட்டாள். நான் பதிலேதும் சொல்லவில்லை. மறுபடி கண்களை மூடினேன். அவள் கிளம்புவதற்காகக் காத்திருந்தேன்.

பிப்ரவரி, 2017.