ஓவியம் பி. ஆர். ராஜன்
சிறுகதைகள்

பந்தம்

அருள்மொழி

ஊரென்றால் நினைவுக்கு வருவது பழைய வீடு தான். அங்கு தான் செல்வி வளர்ந்தாள். வளர்ந்தாள் என்பதை விட வளர்க்கப்பட்டாள் என்பதே சரியாக இருக்கும். அவள் பிறக்கும் வரை ஆத்தா குட்டிக்கொண்டே இருப்பாளாம். அம்மா சொல்வாள்.

ஒரு வருஷம் ஆனப்புறமும் ஒண்ணுமே கொண்டுவராத இந்த மலட்டு கிராதகியை விட்டுட்டு பிள்ளை பெறக்கூடிய மகாலட்சுமியைப் பார்த்து அப்பாவுக்குக் கட்டி வைக்கலாம் என்று சொல்வாளாம். அப்படிக் கட்டி வைத்தால் இங்கே இருக்கவும் முடியாது, அம்மாச்சி வீட்டுக்கும் போக முடியாது. அப்படிப் போயிட்டால் 'இவளுக்கே குடுத்த எடத்துல வாழ துப்பில்லை'ன்னு ஊரு பேசும். அடுத்தவளுக்கு கலியாணம் இன்னும் சிரமமாகப் போயிரும். காதலிச்சு கல்யாணம் பண்ணாலும் சொந்த சாதிக்காரனாகப் பார்த்து கல்யாணம் பண்ணணும் என்கிற 'கொள்கை' பிடிப்புடன் இருந்தவள் அம்மச்சி. இவங்கம்மாவை கட்டிக்குடுத்து அழைச்சி உடும்போது 'நீ செத்தா கூட புருசன் ஊட்ல சாகோணும், இங்க மட்டும் வரலாம்னு நினச்சிறாதே' அப்படின்னு சொல்லி அனுப்பினாளாம்.

இவளுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்காது. பள்ளிக்கூடம் முடிஞ்சி வந்தொடனே ராக்கியப்பன் வீட்டுக்கு விளையாட போய்விடுவாள். ராக்கியப்பன் வீட்டுக்கோ, வேலுச்சாமி வீட்டுக்கோ, பூங்கொடியக்கா வீட்டுக்கோ, கணேசன் வீட்டுக்கோ. ராக்கியப்பனின் அப்பாவுக்கு புளி யாவாரம். வேலுச் சாமியின் அப்பா திருப்பூருக்கு வேலைக்கு போவார். கணேசனின் அப்பா உள்ளூரில் முடிவெட்டுவார். அம்மா பெரும்பாலும் விளையாடப்போனால் திட்ட மாட்டாள். ஆனா கணேசன் வீட்டுக்கு போனால் சில நேரம் திட்டு கிடைக்கும். ஆத்தாவுக்கு தெரிஞ்சா 'தலநாள்ல பொறந்த தட்டக்கொட்ட' என்று திட்டுவாள். ஆனால் இவளுக்கு கணேசன் வீட்டுக்கு போகத்தான் பிடிக்கும். கோலிக்குண்டு அடிக்க சொல்லிக்கொடுத்தது அவன் தான். ஆனால் அது அம்மாவுக்கு பிடிக்காது. 'குண்டாட போறயா..' என்று விரலை ஒடித்துவிடுவாள்.

ஓவியம்

கணேசனுடன் விளையாடுவது குறைவு தான். அவன் கொஞ்சம் முரடன். அடித்து வைத்துவிடுவான். ஆனால் அங்கே கணேசனின் ஆயா இருப்பாள். கொஞ்சிக்கொண்டே இருப்பாள். கணேசனின் அம்மாவும் 'சாப்புடு தங்கோ' என்று சந்தையில் இருந்து வாங்கிவந்த மிச்சரை தருவாள். அது அவ்வளவு ருசியாக இருக்கும். அம்மா சந்தையிலிருந்து மிஞ்சிப்போனால் மிட்டாயும் சக்கரை வள்ளி கிழங்கும் வாங்கி வருவாள். மற்றதெல்லாம் காய்கறி மட்டும் தான். ஒரு நாள் சந்தைக்கு போகும்போது 'சந்தைல இருந்து மிச்சர் வாங்கிட்டு வாம்மா' என்று சொன்னாள். அன்னிக்கி பிடிச்சது சனி. 'சந்தை மிச்சரை எங்க தின்னே?' என்று கேட்டாள். கணேசன் வீட்டில் என்றதும் அடி வெளுத்துவிட்டாள். இத்தனைக்கும் இவள் குழந்தையா இருந்தப்ப தண்ணிவார்த்து விட்டதெல்லாம் கணேசனின் ஆயா தானாம். அப்புறம் என்ன? இன்னொரு பழக்கமும் இருந்தது. யாராவது ஏதாவது தின்னக்கொடுத்தால் உடனே வாங்கிவிடக்கூடாது. யாரிடம் வாங்கலாம் யாரிடம் வாங்க கூடாது என்பதே பெரிய குழப்பம். அதையும் 'வாங்காதே' என்று வாய் திறந்து சொல்ல மாட்டாள். அம்மாவை பார்த்தா அதை  வாங்கலாமா வேண்டாமா என்பதை கண்ணாலேயே சொல்லிவிடுவாள். அப்புறம் தனக்கே பிடிக்காதது போலவோ பசியில்லை என்றோ அதை மறுத்துவிட வேண்டும். தவறியும் அம்மா திட்டுவாள் என்று
சொல்லிவிடக்கூடாது.

கணேசன் வீட்டில் என்று சொன்னதும் அன்று முதல் இரட்டை கண்காணிப்பு ஆரம்பித்தது. பொழுதோட விளையாடப்போகையில் எங்கே போறேன்னு சொல்லிட்டு தான் போகணும். 'அதென்ன பொழுதனிக்கும் அவமூட்டுக்கு போறே' அப்படின்னு ஆத்தா திட்டுவாள். சாதி பார்க்கிறாளாம்! ஆத்தாவின் திட்டு அப்படியொன்றும் காதில் ஏறாது. கணேசன் வீட்டுக்கு திரும்பும் சந்துக்கு முன்னால் பாலாமணி வீடு இருந்தது. பாலாமணி சிறியவள். அவ்வளவாக பழக்கம் இல்லை. இருந்தாலும் பாலாமணி வீட்டுக்கு போறேன்னு
சொல்லிட்டு அங்கே போய் அவளுடன் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு அப்புறம் கணேசன் வீட்டுக்கு போயிரலாம். திரும்பி வந்தப்புறம் அம்மா கேட்டால் பாலாமணி வீட்டுக்கு விளையாட போயிருந்தேன் என்று சொல்லிக்கொள்ளலாம். அது பொய்யில்லை இல்லே?

இதுக்கெல்லாம் போயி அப்பாவிடம் முறையிட முடியாது. 'இந்த காம்ப்ளயிண்டல்லாம் எங்கிட்ட கொண்டுவராதே' அப்படின்னு சொல்லுவார். ரொம்ப முக்கியமான விஷயம் மட்டும் தான் அவரிடம் போகணும். நமக்கு என்ன அவ்வளவு முக்கியமான விஷயம் இருக்கப்போகுது? அதனால் சோறோ, அடியோ, திட்டோ, எங்காச்சும் போகணுமா வேண்டாமா, காசு வேணுமா, சித்தி வீட்டுக்கா அத்தை வீட்டுக்கா என எல்லாத்துக்கும் அம்மாவை தான் கெஞ்ச வேண்டும்.

பள்ளிக்கூடம் ஒன்றும் அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால் அந்த பட்டிக்காட்டு பள்ளிக்கூடத்தில் முதல் ரேங்க் வாங்குவது பெருமையாக  இருந்தது. பெயிலாகிப்போன மற்றவர்களை வாத்தியார் இவளை காட்டி காட்டி திட்டுவார். 'மூத்திரத்தை வாங்கி குடிங்கடா முண்டங்களா.. அப்பவாச்சும் படிப்பு ஏறுதான்னு பாக்கலாம்..' அவர் ரொம்ப கெடுபிடி. பையன்கள் என்றால் அடித்து முதுகு தோலை உரித்துவிடுவார். கெட்டவார்த்தை பேசினால் வாயில் சூடு வைத்துவிடுவேன் என்று சொல்வார். தீக்குச்சியை உரசி வாய்கிட்டே வைத்து 'பேசுவியா..' என்று மிரட்டுவதை வகுப்பே பார்த்திருக்கிறது. ஆறாவதுக்கு போவது என்றாலே அஞ்சாவது ஏண்டா பாஸ்பண்ணுறோம் என்று இருக்கும். அவ்வளவு பயம். அதென்னவோ இந்த வளுவு பசங்க மட்டும் சீக்கிரமா மாட்டிக்குவாங்க. வாத்தியார் அடிக்கிற அடியில கம்பு உடைஞ்சிரும். சிலப்பம் மற்ற பசங்களும் மாட்டுவார்கள். ஆனா ரெண்டு அடியோ மண்டைல கொட்டோ கிடைக்கும். அவ்வளவு தான். ராக்கியப்பன் பெயிலாய் போனப்போ இவளைக் காட்டி திட்டவில்லை. மறந்திருப்பாரா இருக்கும்.

நடுவிலே சில்லாங்காட்டு சித்தப்பன் மகளுக்கு கலியாணம் வந்தது. பொதுவாக கல்யாணத்துக்கெல்லாம் கூட்டிட்டு போக மாட்டார்கள். படிப்பாளிக்கி படிப்பு கெட்டுபோவுமாம். ஆசையாய் தான் இருக்கும். ஆனா நெருங்கின சொந்தம் தவிர பங்காளி வீட்டுக் கல்யாணத்துக்கெல்லாம் - மூச். ஆனால் இந்த
சித்தப்பன் உயிருடன் இல்லை. கடன் அதிகமாகி சில்லாங்காட்டு தோட்டத்தை விற்று கடனை கட்டிவிட்டு அவர் எங்கியோ போயிட்டார். அந்த
சித்தி 'காசிக்கு போயிட்டார்'னு சொல்லிக்கொள்ளும். இப்போ பள்ளத்துக்கிட்ட ஒண்டுக்குடித்தனம். சித்தி 'சத்திரம் பாத்தெல்லாம் கலியாணம் பண்ண முடியாது, மாப்பளையூடு இருவது பவுனுக்கு தகஞ்சதே பெருசு. நீங்கதா ஏதாச்சும் செய்யோணும் மச்சா..' என்று அழுதது. அப்புறம் மாப்பிளை வீட்டுடன் கலந்து பேசி இவங்க தோட்டத்துலையே கல்யாணத்தை பண்ணிரலாம் என்று முடிவானது. 'கட்டுத்தார பந்தல பிரிச்சு, பொடக்காலி படல எடுத்துபோட்டு நெரவுனம்னா அதுக்கெடக்குது எடம் ஐநூறு பேருக்கு தாட்டும்' என்றாள் ஆத்தா. ஆத்தா அப்படிதான். அம்மாவையும் இவளையும் தான் திட்டிக்கொண்டே இருப்பாளே தவிர நல்ல காரியங்களில் முட்டுக்கட்டை போடமாட்டாள்.

ஓவியம்

கல்யாண வேலையெல்லாம் ஜரூராக நடந்தது. முந்தின நாள் ராத்திரி பட்டினிச்சோறு ஏற்பாடானது. நடு வாசலில் வைத்து பொண்ணுக்கு தலைக்கு தண்ணீர் ஊற்றி சோறு சுற்றி போட்டார்கள். கணேசனின் அப்பா பந்தம் பிடிக்க வந்திருந்தார். அதென்னவோ சாங்கியமாம். லைட்டு போட்டிருந்தாலும் பட்டினித்தண்ணி ஊத்தும்போது பந்தம் கொளுத்தி பிடிக்கணுமாம். நெறைய கலியாணத்தில் கணேசனின் அப்பா தான் பந்தம் பிடிப்பார். கையில் இருக்கும் தூக்குபோசியில் இருந்து அவ்வப்போது ஒரு கரண்டி எண்ணெயை எடுத்து பந்தத்தில் ஊற்றுவார். பந்தம் எரிவது அழகாய்த்தான் இருக்கும்.. பெரிய தீயாக எரியாது.. ஆனால் ரொம்ப நேரத்துக்கு எரிந்துகொண்டே இருக்கும். பந்தப் புகையில் புங்க எண்ணெய் வாசனை வரும்.

தண்ணிவார்த்து முடிந்ததும் பந்தி போடுவார்கள். கல்யாண வீட்டு ரசம் ஒரு தனி மணம். பந்தி முடிந்ததும் கணேசனின் அப்பா அதற்கென கொண்டுவந்த தூக்கு போசியில் சோறும் குழம்பும் வாங்கிக்கொண்டு போய்விடுவார். சிறுசா இருக்கைல ஒருமுறை கேட்டிருக்கிறாள், 'ஏன் தூக்கு போசில
சோறு கொண்டு போறீங்க? இங்கியே சோறுண்டுட்டு போலாம்ல?' என்று. அதுக்கு அவர் 'கணேசும் அவியம்மாளும் ஊட்ல இருக்குறாங்கல்ல பாப்பா, அவியளுக்கும் சேத்து வாங்கிட்டு போறேன்' என்றார். 'அவியளையும் கூட்டிட்டு வந்திருந்தா ஆயிருக்கும்...'  என்றதற்கு அவர் பதில் சொல்லவில்லை, சிரித்து விட்டு போய்விட்டார். அதற்கப்புறமும் அவர்களை எந்த கல்யாணத்திலும் பார்ப்பதில்லை. முடிவெட்ட வருவது தவிர்த்து சில்லாங்காட்டு அக்கா கலியாணத்தில் திரும்பவும் பார்க்கிறாள்.

11, 12வதுக்கு பஸ் ஏறி டவுன் பள்ளிக்கூடத்தில் போய்ப் படித்தாள். ஆறாவதில் அருமையாய் இருந்த படிப்பு பன்னிரெண்டில் மந்தமாகிப்போனது. இங்கெல்லாம் பெரிதாக திட்டுவதில்லை. நல்லவேளை. ஒருமுறை கணக்கு டீச்சர் 'கிளாசுல கனவு கண்டுட்டு இருக்கியா பிள்ள..' என்று கேட்டதற்கே அவமானமாகிப்போய்விட்டது. ஆனால் ஆறாவது வாத்தியார் மற்றவர்களை திட்டியது போலெல்லாம் திட்டியிருந்தால் என்னவாகி இருக்குமோ? அப்போது திட்டு வாங்கிய கணேசனை நினைத்து இப்போது பாவமாக இருந்தது.

காலேஜ் படிக்கிறாயா என்று கேட்டார் அப்பா. போகலாம் தான். ஞாயிற்றுக்கிழமை படங்களில் வரும் கல்லூரிகளை பார்த்தல் யாருக்கு தான் ஆசை வராது? ஆனா 12ஆவதை விட கஷ்டமான படிப்பை எப்படி படிப்பது? இருக்கிறதுலயே ஈஸியான படிப்பு எது என்று பலரையும் கேட்டதில் வரலாறு என்றார்கள். கதை போல இருக்குமாம்.

ஓவியம்

கல்லூரியில் சுமார் கேட்டகிரி தான். பெயிலாகுமளவு மோசம் இல்லை. 60 - 70 வாங்கி பாஸாகிவிடுவாள். முதல் ரேங்கெல்லாம் இல்லை. ஆனாலும் இங்கே பெயிலானாலும் அடுத்த கிளாசுக்கு போயிரலாம். அது கொஞ்சம் ஆறுதல். கிளாசில் நாலு தமிழ்ச்செல்விகள். அதனால் இவளை தனிப்பட்ட ஆளாக யாருக்கும் தெரியாது. வீட்டில் சொல்லியனுப்பியபடி காலேஜ் போனோமா வந்தோமா என்று இருந்தாள். யாரிடமும் அனாவசிய பேச்செல்லாம் இல்லை.

கல்லூரி முடிந்து கல்யாணத்துக்கு மாப்பிளை பார்க்கும் படலம் நடந்தது. ஈரோட்டுக்கும் கோயமுத்தூருக்கும் போய் சங்கத்தில் எழுதி வைத்துவிட்டு வந்தார்கள். மாப்பிள்ளை டிகிரி படித்திருக்க வேண்டும் என்பதில் அப்பா கறாராக இருந்தார். பலரும் எஞ்சினியருக்கு படித்துவிட்டு பனியன் கம்பெனி வைத்திருந்தார்கள். அது ஏனென்று புரியவில்லை. மிசினெல்லாம் பாக்க படிக்கணுமோ என்னவோ. ஆனால் படிக்காதவர்களும் பனியன் கம்பெனி போட்டார்கள். பெரிய பிரச்னை ஒன்றும் இருப்பதாய் தெரியவில்லை. அப்படி ஒரு பனியன் கம்பெனி வைத்திருக்கும் இன்ஜினீயர் தான் மாப்பிள்ளையாக வந்தார். கரூர்க்காரர். கோவிலில் வைத்து பார்த்து முடிவானது. கல்யாணத்துக்கு நூறு பவுன் போட்டு மாப்பிளைக்கு மாருதி கார் வாங்கி தருவது தான் ஊரெல்லாம்
பேச்சாக இருந்தது.

பட்டினி தண்ணிக்கு நீலப் பட்டு எடுத்திருந்தார்கள். தண்ணீர் ஊற்றுவதற்கு பழைய புடவையை கட்டச்சொன்னாள் அம்மா. 'தண்ணி தானம்மா, நல்லதையே கட்டிக்கிறேன்' என்று சொன்னதுக்கு 'அந்த சீலையை வண்ணாத்திக்கு குடுத்துறோணும். அதுனால பழச கட்டு' என்றாள். ஒருபுறம் ஒரு புடவை தானே என்று நினைத் தாலும், அழுக்காறு வந்து பழைய புடவையாக சுற்றிக்கொண்டது.

''நேரம் போகுது புள்ளைய கூட்டியாங்க'' என்கிற
சத்தத்துக்கு அத்தை உள்ளே வந்தாள். கூட்டிச்செல்ல. எல்லா சடங்குக்கும் துணைக்காரியுடன் தான் போக வேண்டும். ஒத்த வயசுடைய அத்தை மகளோ, மாமன் மகளோ துணைக்கு வருவார்கள்.  எல்லாரும் பார்க்க வருவது ஒரு மாதிரிதான் இருந்தது. அங்கே கணேசன் பந்தம் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான். பக்கத்திலிருந்த அத்தையிடம் குசுகுசுவென்று கேட்டாள் - 'இதென்ன கணேசன் வந்துருக்கான், அவங்கப்பா தானே வருவாரு?' 'அவங்கப்பன்
செத்துப் போச்சு. அது என்னத்துக்கு உனக்கு இப்ப? பேசாம தலையை குனிஞ்சி வா' என்றாள் அத்தை.

பித்தளை முக்காலி மேல் உட்கார வைத்தார்கள். முக்காலியிலிருந்து தண்ணி சுத்துற சொம்பு வரைக்கும் எல்லாமே புதுசு தான். தலைக்கு ஊற்றி சோறு சுற்றினார்கள். சீர்க்காரி சுற்றிப்போட்ட
சோற்று உருண்டை மூன்று பக்கமும் விழுந்தது. எல்லாவற்றையும் மீறி கணேசன் பந்தம் பிடித்துக்கொண்டிருப்பது உறுத்திக்கொண்டே இருந்தது. திரும்பி போகையில் அவனை கண்டுகொண்டதன் நிமித்தமாக புன்னகைக்க வேண்டும் என்று நினைத்தாள். அதற்கு மனசும் வரவில்லை, தைரியமும் வரவில்லை.

செப்டெம்பர், 2019.