ஓவியம் ஜீவா
சிறுகதைகள்

பண்டிகை நாள்

விநாயக முருகன்

வளசரவாக்கத்திலிருந்து பாலவாக்கம் செல்லும் வழியெங்கும் சாலைகள்  துடைத்தாற்போல வெறிச்சோடி கிடந்தன. சுந்தரத்தின் வீட்டுக்கு செல்லும்போது இருபது நிமிடங்களில் புயல்போல பைக்கை ஓட்டிச்சென்றிருந்தான். அங்கிருந்து திரும்பும்போதுதான் ஏதேதோ குழப்பங்களுடன் வண்டியை மெதுவாக ஓட்டிவந்துக் கொண்டிருந்தான். வண்டி ஓட்டுகையில் அலைபேசியை வைப்ரேட்டரில் வைத்திருப்பது வழக்கம். இருந்தாலும் அடிக்கடி வண்டியை நிறுத்தி செல்போனை எடுத்து ஏதாவது தவறவிட்ட அழைப்பு வந்துள்ளதா என்று பார்த்தான். ராமாபுரம் தாண்டியதும் அவன் வண்டியை நிறுத்தி மீண்டும் செல்போனை எடுத்து பார்த்தான். ஒரேயொரு குறுஞ்செய்தி வந்திருந்தது. அவனது வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து தீபாவளி வாழ்த்துச்செய்தி அனுப்பியிருந்தார்கள். முந்தைய குறுஞ்செய்தியை எடுத்துப்பார்த்தான். அவனது வங்கிக்கணக்கில் நூற்றுஐம்பது  ரூபாய் இருப்பதாக ஒரு செய்தி தெரிந்தது. நேற்று இரவு ஏடிஎம் மையத்திலிருந்து இருநூறுரூபாய் எடுத்திருந்தான். அவனும் சேகரும் கோயம்பேடு செல்லும் வழியில் ஒரு புரோட்டாகடையில் சாப்பிட்டார்கள். சேகரை கோயம்பேடு நிலையத்தில் பேருந்து ஏற்றிவிட்டு திரும்பி வரும் வழியில் நூறுரூபாய்க்கு பெட்ரோல் போட்டான். சட்டைப்பாக்கெட்டில் சில்லறைக்காசுகளும், ஒரு பத்துரூபாய் தாளும் இருந்தன. காலை உணவு சாப்பிடவில்லை. தேநீர் மட்டும் குடித்துவிட்டு கிளம்பிச்சென்றான். சுந்தரம் எப்படியும் தன்னை செல்போனில் அழைத்துவிடமாட்டானா என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துக்கொண்டிருந்தது.

இவன் அங்கு போகும்போது சுந்தரம் வீட்டில் இல்லை. சுந்தரத்தின் மனைவி வெளியே காத்திருக்க சொன்னாள். வீட்டுக்கு வெளியே பைக்கை நிறுத்திவிட்டு மரத்தடியில் காத்திருந்தான். சுந்தரத்தின் பிள்ளைகள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் அங்கிருந்த வீடுகளில் இருக்கும் பெரியவர்கள் தொலைக்காட்சியில் தீபாவளி பட்டிமன்றமும், சினிமா நடிகர்களின் பேட்டிகளும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மணிக்கணக்கில் சுந்தரத்தின் வீட்டு வாசலில் காத்திருந்ததுதான் மிச்சம். சுந்தரத்தின் குண்டான மனைவி வெளியே வந்தாள். மினுக்க மினுக்க தீபாவளி பட்டுப்புடவை கட்டியிருந்தாள். உடலில் நகைக்கடல் அலையடித்தது. நல்லநாள் அதுவுமா வீடு தங்குதா? எப்ப பாரு கட்டப்பஞ்சாயத்து, ஊர் பிரச்சினைன்னு என்று முனகிக்கொண்டே இவனை நோக்கி நடந்துவந்தாள்.

“இந்தாப்பா எவ்வளவுநேரம்தான் இங்கேயே உக்காந்திருப்ப? அது பிரண்ட்ஸ்ங்களோட பாண்டிச்சேரி போயிருக்குதாம். வர நைட்டு ஆகுமாம். உன்னோட நம்பர் தெரியுமில்ல. அதுவா கூப்பிடும். நீ கௌம்பு” என்று சொல்லிவிட்டு உள்ளே  சென்றாள். இவன் பிச்சைக்காரன்போல கூனிகுறுகி நின்றிருந்தான். முனகிக்கொண்டே அங்கிருந்து கிளம்பினான்.      

மியாட் மருத்துவமனை தாண்டியதும் அவன் வண்டியை நிறுத்தி மீண்டும் அலைபேசியை எடுத்து பார்த்தான். சுந்தரத்தின் அழைப்பு எதுவும் இல்லை. சாலையில் ஓரளவு வெடிச்சத்தம் குறைந்திருந்தது. ஆனால் காற்றில் கந்தகவாசம் கலந்திருப்பதை உணரமுடிந்தது. அவ்வப்பொழுது தூரத்தில் எங்கோ அதிர்வேட்டுகளும்,சரவெடிகளும் விட்டுவிட்டு வெடிக்கும் சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தன. பட் ரோட்டில் வளைந்ததும் வாகனத்தை நிறுத்தினான். அவனுக்கு உரத்து குரலெடுத்து அழவேண்டும் போலிருந்தது. யாராவது பார்த்துவிடுவார்களோ என்று தயக்கமாக இருந்தது. கடைகள் எல்லாம் பூட்டப்பட்டு கிடந்தன. பூட்டிக்கிடந்த கடையொன்றின் முன்னால் பைக்கை நிறுத்தி அதன் மீது உட்கார்ந்து சாலையை பார்த்தான். சாலையில் போக்குவரத்து இல்லை. அதனாலேயே அவ்வப்பொழுது கடக்கும் வாகனங்கள் விரைந்துக்கொண்டிருந்தன.

பண்டிகை நாள் வந்தால் இந்த பெருநகரம் பந்த் அறிவிக்கப்பட்டதினம் போல  வெறுமையாக மாறிவிடுகின்றது என்று யோசித்தான். பண்டிகை வந்துவிட்டால் சாலைகள் எல்லாம் துயரம் வடிந்த முகத்துடன் அழுதுவடிகின்றன? சற்றுமுன்பு சுந்தரத்தின் பிள்ளைகள் உற்சாகமாக பட்டாசு வெடித்ததை பார்த்தது நினைவுக்கு வந்தது. இந்த பண்டிகைகள் ஏன் எப்போதும் சிறுவர்களுக்கு உற்சாகமாகவும், பெரியவர்களுக்கு துயரத்தையும் கொண்டுவந்து விடுகிறதென்று யோசித்தான். எல்லா சிறுவர்களுமா உற்சாகமாக இருக்கிறார்கள் என்றும் கேட்டுக்கொண்டான். வரும் வழியில் வர்த்தகமையம் தாண்டி ஒரு சிறுவனும், சிறுமியும் கந்தல் துணிகளோடு சாலையில் வெடிக்காத வெடிகளை தேடியபடியே அலைந்துக்கொண்டிருந்ததை பார்த்தான். பிளாட்பாரத்தில் வசிப்பவர்களாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.  

சுந்தரத்தின் வீட்டு வாசலில் காத்திருக்கும்போது ஏதோவொரு வீட்டின் உள்ளிருந்து அதிரசம் பொறிக்கும் வாசனை வந்ததை நினைவுபடுத்திக்கொண்டான். கிராமத்தில் இருந்திருந்தால் அம்மா கடனோ உடனோ வாங்கி எப்படியாவது இவனுக்கு பிடித்த பலகாரங்களை சுட்டு தந்திருப்பாள். இப்படி பண்டிகை நாளில் யாருமே இல்லாத இந்த பெருநகரத்தில் தெருவோரமாக அநாதையாக உட்கார்ந்து அழுதுக்கொண்டிருப்பதை தலையெழுத்து என்றா சொல்லமுடியும்? என்னோட திமிர்தானே என்று யோசித்தான்.

பைக்கில் உட்கார்ந்திருந்தவன் பக்கவாட்டில் திரும்பி அவனது முகத்தை கண்ணாடியில் பார்த்தான். தலை நரைத்து முன்நெற்றி ஏறிக்கிடந்தது. கண்களுக்கு கீழே கருவளையங்கள். நாற்பதை தாண்டிய தளர்வும், அசதியும் முகத்தில் தெரிந்தது. நேற்றுகூட கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சேகர் அதை குறிப்பிட்டான்.

“இன்னுமா? சினிமா ஆசைய சுமந்துக்கிட்டு திரியுற? கெடச்ச வேலைய தக்க வச்சுக்கோ. இந்த வருஷமாவது தீபாவளிக்கு ஊருக்கு போற வழிய பாரு” 

பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான். வாழ்க்கையில் தோற்றுபோகும் நேரத்தில் மனதில் ஏற்படும் வலியைவிட கொடுமையான விஷயம் தெரியுமா? தோற்றுப்போன நேரத்தில் இலவசமாக கிடைக்கும் அறிவுரைகள். பொதுவாக வெற்றிபெற்றவர்களை பார்த்து யாரும் அறிவுரைகள் சொல்வதில்லை. ஏனெனில் வெற்றிப்பெற்றவர்கள் இந்த உலகின் கண்களுக்கு அறிவாளிகளாக மாறிவிடுகிறார்கள். தோற்றுப்போனவர்களுக்கு அறிவுரைகள் சொல்வதையே எல்லாரும் விரும்புகிறார்கள்.

நான்கு மாதங்கள் முன்பு ஒருநாள் திருச்சிக்கு சென்று அம்மாவை பார்த்துவிட்டு வந்தான். “வரம் வாங்கி ஒத்த புள்ள பொறந்துச்சு. அது மொட்ட மரமா பட்டுப்போகணுமா? உன் கூட படிச்ச சிநேகித பசங்கள பாரு. இடுப்பு ஒசரத்துக்கு பசங்கள கூட்டிக்கிட்டு போறானுங்க. என்னோட காலத்துக்கு பிறகு உன்னய யாரு கவனிச்சுக்குவாங்க?” சொல்லிவிட்டு அம்மா அழுதாள். அதற்குத்தான் அவன் ஊருக்கே செல்வதில்லை. விடிவதற்குள் சொல்லிக்கொள்ளாமல் பேருந்து பிடித்து சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டான். பக்கத்துக்குவீட்டு மரகதம் செல் போனிலிருந்து அம்மா இவனை அழைத்தாள். இவன் பதிலேதும் பேசாமல் தொடர்பை துண்டித்துவிட்டான். இரண்டுவாரங்கள் முன்பு மரகதத்தின் அலைபேசியிலிருந்து இவனுக்கு மீண்டும் ஓர் அழைப்பு வந்தது. அம்மா பேசவில்லை. மரகதம்தான் அழைத்திருந்தாள்.

“அம்மாவுக்கு ரொம்ப உடம்பு முடியல தம்பி. இந்த தீபாவளிக்காச்சும் உன்னய ஒரு எட்டு வந்துட்டு போக சொல்றாங்க. எவ்வளவு சமாதானம் செஞ்சாலும் அழுதிட்டே கெடக்கு” 

“ம்.எனக்கு வேலை இருக்கு. அப்புறம் பேசுறேன்” என்று கோபமாக சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தான். பிறகு பேசவேயில்லை.    

சென்னைக்கு வந்து பதினைந்து வருடங்கள் ஓடிவிட்டன. இதுவரை முப்பதுக்கும்  மேற்பட்ட வேலைகளை பார்த்துவிட்டான். ஒரு மெக்கானிக்கல் ஷாப், ஆயத்த ஆடை விற்பனை பிரதிநிதி , செல்போன் விற்கும் கடையில் உதவியாள், மென்பொருள் நிறுவனங்களின் வாசலில் நின்று வங்கிக்கடன் வாங்க சொல்லி நோட்டீஸ் விநியோகிக்கும் வேலை. எந்த வேலையிலும் அதிகபட்சமாக பத்து மாதங்கள் தாண்டியதில்லை. கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது சென்னைக்கு ஓடிவந்திருந்தான். இந்த இருபது வருடங்களில் பத்து தீபாவளிக்கு ஊருக்கு சென்றிருப்பான். முன்பெல்லாம் கூட அவ்வளவாக தனிமையின் வலி தெரியவில்லை. இப்போதெல்லாம் தனிமை மரண பயத்தை விட கொடுமையாக இருப்பதாக தோன்றியது. பண்டிகை நாட்கள் தனித்திருப்பவர்களின் துயரத்தை நூறு மடங்கு அதிகரித்துவிடுகிறது. வாரத்துக்கு மூன்று முறையாவது மரகதம் அலைபேசியிலிருந்து அம்மா அவனுடன் பேசிவிடுவார். அவனை பண்டிகைக்கு ஊருக்கு வரச்சொல்லி அம்மா புலம்புவார். பதிலுக்கு அவன் எரிந்து விழுவான். ஆனால் இரண்டு வாரங்களாக அம்மாவிடமிருந்து எந்த அழைப்பும் இல்லை. அவனுக்கு பயமாக இருந்தது. சில நாட்களாக இரவுகளில் அவனை துர்கனவுகள் துரத்திக்கொண்டிருந்தன. இவனாக ஒருமுறை மரகதம் அலைபேசிக்குத் தொடர்புகொண்டான். அந்த எண் உபயோகத்தில் இல்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. ஊரில் இருக்கும் நண்பர்களை தொடர்புகொள்ளலாமென்றால் அவர்களில் அநேகர் படித்து பெங்களூர், புனே, அமெரிக்கா என்று செட்டில் ஆகியிருந்தார்கள். சிலர் சொந்த தொழில் பார்த்தார்கள். திருமணம் செய்து வசதியாக இருந்தார்கள். அவர்களின் அலைபேசி எண்ணும் இவனிடம் இல்லை. எங்கே அபூர்வமாக எப்போதாவது ஊருக்கு சென்றாலும் ராப்பிச்சைக் காரன்போல நள்ளிரவில் ஊருக்குள் இறங்கி விடிவதற்குள் கிளம்பிவந்துவிடுவான். பால்யகால தோழர்களின் தொடர்புவிட்டுபோய் பத்து வருடங்கள் ஆகியிருந்தன. 

சென்னையில் அவனுக்கு இப்போதைக்கு இருக்கும் ஒரே சொந்தம் சேகர் மட்டுமே. சேகரின் சொந்த ஊர் கோயம்புத்தூர். ஓரளவு வசதியானவன். அவனும் சினிமா வாய்ப்பு தேடித்தான் சென்னைக்கு வந்தான். கைக்காசை செலவழித்து சொந்தமாக சில குறும்படங்கள் தயாரித்தான். சினிமா வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் வேலைக்கு சேர்ந்திருந்தான். பாலவாக்கத்தில் ஒரு சிறுபிளாட்டில் வாடகைக்கு குடியிருந்தான். சேகர் தயவால்தான் இவன் வண்டி ஓடிக்கொண்டிருந்தது.

சேகருக்கு இவனை விட ஐந்து வயது குறைவு. அடுத்த மாதம் சேகருக்கு திருமணம். திருமணம் ஆகிவிட்டால் சேகருடன் ஓசியில் தங்கமுடியாது. வேறு வீடுதான் தேடவேண்டும். ஏற்கனவே ஜாடைமாடையாக சொல்லிவிட்டான்.

அவன் பைக் கண்ணாடியில் தனது முகத்தை பார்த்தான். கண்ணாடியை உடைக்க வேண்டுமென்று ஆத்திரம் வந்தது. முஷ்டியை இறுக்கியவன் அமைதியானான். நாற்பது வருட வாழ்க்கையில் தனக்கென்று சொந்தமாக ஒரு பைக் கூட வாங்கமுடியவில்லையே.

அவனுக்கு மற்ற எல்லா கவலைகளையும் விட அம்மாவிடமிருந்து ஏன் அழைப்பு வரவில்லை என்றுதான் பயமாக இருந்தது. அவளை தான் ரொம்பவே காயப்படுத்திவிட்டதாக நினைத்து வருந்தினான். ஒருமுறை கூட அவனை பார்த்து சம்பாதிக்க லாயக்கவற்றவன் என்று அம்மா சொன்னதில்லை. மாறாக அம்மாவுக்கு எப்போதும் அவனது திருமணம் பற்றிதான் ஏக்கங்கள் இருந்தன. இளமையில் மனிதருக்குள் எண்ணற்ற கனவுகள் இருக்கும். மலையை உடைத்து மாலையாக போட தோள்கள் தினவெடுக்கும். வயதாக வயதாக எல்லாம் குறைந்துக்கொண்டே வந்து நிம்மதியாக தூங்கி எழுந்து நேரத்துக்கு மலம் கழித்தாலே போதுமென்ற நிலைக்கு மனிதர்கள் வந்துவிடுகிறார்கள். அம்மாவுக்கு இவனிடமிருந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் வடிந்துக்கொண்டே வந்து இறுதியில் இவன் தீபாவளிக்கு ஒருமுறை ஊருக்கு வந்து பார்த்துவிட்டு போனாலே போதும் என்று ஏக்கமாக இருந்தது.    

தீபாவளிக்கு ஊருக்கு செல்வதென்பது இந்நூற்றாண்டின் மிகப்பெரிய நிகழ்வாக மாறிவருவதை சேகரை வழியனுப்ப பேருந்து நிலையத்துக்கு செல்லும்போது அவன் கண்டுபிடித்தான். பார்க்கும் பேருந்துகள் எல்லாம் மனிதர்கள். இயற்கை பேரிடர் வந்த ஊரிலிருந்து மனிதர்கள் கூட்டம் கூட்டமாக மூட்டை முடிச்சுகளுடன் காலிசெய்துவிட்டு போவதைபோல எல்லாரும் ஏன் இப்படி பதறியோடுகிறார்கள் என்று அவனுக்கு குழப்பமாக இருந்தது. பண்டிகைதின ரயில்கள், பேருந்துகளில் ஒருமாதம் முன்பே பயணச்சீட்டுகள் விற்று தீர்ந்திருந்தன என்று யோசித்தபடியே அங்கிருந்து திரும்பினான். 

முன்பு எப்போதையும்விட அவனுக்கு தீபாவளிக்கு ஊருக்கு செல்லவேண்டுமென்ற ஆசை அதிகரித்தது. சேகரிடம் காசு கேட்கமுடியாது. அவனுக்கு தெரிந்த இன்னொருத்தர் சுந்தரத்தை கைகாட்டினார்.

சினிமா வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு ஓரளவு சுந்தரத்தை தெரியும். வட்டிக்கு பணம் கொடுக்கும் ஆள். பொருள் இல்லாமல் காசு கொடுக்கமாட்டான். சேகரின் பைக்கை அடமானம் வைத்து கொஞ்சம் பணம்புரட்டி ஊருக்கு சென்று அம்மாவை பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று அவனுக்குள் ஒரு யோசனை ஓடியது. சேகர் கல்யாணவேலைகளில் மும்முரமாக இருந்தான். திரும்பிவர இரண்டு வாரங்கள் ஆகும். அதற்குள் எப்படியாவது பணம்புரட்டி பைக்கை மீட்டுவிடலாம் என்று திட்டமிட்டிருந்தான். செய்வது திருட்டுவேலைதான். ஆனால் வேறுவழியில்லை.      

சேகரை பேருந்தில் ஏற்றிவிட்டு சுந்தரத்திடம் அலைபேசியில் பேசினான். அவர் காலையில் வந்து பணம் வாங்கிக்கொள்ள சொன்னார். எப்படியாவது தீபாவளி அதிகாலை சென்று அம்மா கையால் தலைக்கு எண்ணெய் வைத்து அவள் ஆசையை நிறைவேற்றவேண்டுமென்றுதான் கடன் கேட்டிருந்தான். விடிந்தால் தீபாவளி. பணம் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன?

“அட. சும்மா தொணதொணன்னு. கோடி ரூபாய் வட்டி வந்தாக்கூட நைட்டுல கடன் தரமாட்டேன். காலையில வா” என்று அலைபேசியை துண்டித்தார்.

சரி. இரவு வரைக்கும் தீபாவளிதானே? எட்டுமணிக்கு போய் காசு வாங்கிவிடலாம். அப்படியே மதுரவயல் பைபாஸ் பக்கம்.  அங்க இருந்து ஏதாவது பேருந்தில் ஏறினால் மதியத்துக்குள் திருச்சி போய்விடலாம். பாதி தீபாவளியாவது கொண்டாடலாம் என்று ஆசையுடன் சுந்தரத்தின் வீட்டுக்கு சென்றான். ஆனால் சுந்தரம் இவனை வரச்சொல்லிவிட்டு பாண்டிச்சேரி சென்றிருந்தார். சுந்தரத்தை நான்குமுறை செல்போனில் தொடர்புகொண்டும் அவர் பதிலளிக்கவில்லை. பெரும்பாலும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக செய்தி வந்துக்கொண்டே வந்தது.

இந்த வருட தீபாவளியும் தனிமையில்தான். பண்டிகை நாட்களில் ஊருக்கு செல்வது ஒரு வரமென்று தோன்றியது. இதுவரை தீபாவளிக்கு ஊருக்கு போகிறானோ இல்லையோ எப்படியாவது கையில் பணம் தேற்றி விடுவான். மலிவுவிலையில் ஒரு புதுச்சட்டை எடுத்து அறைக்குள் தனியாக அமர்ந்து உடுத்திக்கொள்வான். மதியத்துக்குமேல் ஏதாவது புதுப்படம் பார்த்துவிட்டு மாலையில் எங்காவது சென்று சரக்கு அடித்துவிட்டு இரவு வீடு திரும்பிவிடுவான். தனிமையாக இருந்தாலும் அவனுக்குள் தீபாவளியை கொண்டாடிக்கொண்டிருந்தான். இந்த வருடம் சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் போய்விட்டது. சுந்தரத்தின் வீட்டு வெளியே காத்திருந்தபோது எங்கோ கறிக்குழம்பு வாசம் வீசியது நினைவுக்கு வந்தது. அப்பா உயிரோடு இருந்தவரை தீபாவாளி அன்று அமாவாசை வந்தாலும் கறிக்குழம்பு செய்வது வழக்கம். மதியத்துக்கு பிறகு அப்பாவும் இவனோடு சேர்ந்து வெடிவெடிப்பார். பெரிதாக சொத்து எதுவும் சேர்க்காமல் விட்டு போயிருந்தாலும் பாசத்தை மூட்டை மூட்டையாக கொட்டிவிட்டு சென்றிருந்தார்.

சிகரெட்டை கீழே போட்டு காலால் நசுக்கியவன் சட்டைப்பைக்குள் கைவிட்டான். இரவு உணவுக்கு ஏதாவது தேற்ற வேண்டும். வங்கிக்கணக்கில் நூற்றுஐம்பது ரூபாய் மிச்சம் இருந்தது. வரும் வழியில்தான் ராமாபுரம் முன்பிருந்த ஏடிஎம் மையத்தில் நுழைந்து பார்த்தான். ஐநூறு ரூபாய் நோட்டுகள் மட்டுமே வரும் என்று தகவல் வந்தது.    

சின்னமலை தாண்டியதும் ஒரு ஏடிஎம் மையத்தை பார்த்தான். இனியும் பாண்டிச்சேரியிலிருந்து சுந்தரம் கூப்பிடுவார் என்ற நம்பிக்கையை இழந்திருந்தான். இரவு உணவுக்கு ஏதாவது தேற்றிவிட்டால் மறுநாள் அலுவலகம் சென்று யாரிடமாவது கடன்வாங்கிக்கொள்ளலாம். கடவுளே இங்காவது நூறுரூபாய் தாள் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டே வண்டியை நிறுத்தி உள்ளே நுழைந்தான்.     

“தம்பி. ஹெல்மெட்டை கழற்றிட்டு போங்க. முகத்தில இருந்து கர்சீப்பை அவிருங்க ” என்று ஒரு குரல் அதட்டியது.   

திரும்பி பார்த்தான். மையத்தின் பக்கவாட்டில் இருந்த சின்ன மறைவில் ஒரு பெரியவர் அலுமினிய டிபன்பாக்சிலிருந்த மோர்சாதத்தை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அவன் கவனிப்பதை பார்த்துவிட்டு சற்று கூச்சத்துடனும்  டிபன்பாக்சை பின்னால் நகர்த்தி வைத்துக்கொண்டார். அவரை முழுமையாக ஏறிட்டு  பார்த்தான். விரலால் தள்ளிவிட்டால் தரையில் விழுந்துவிடுவார். நரைத்த காய்ந்த எண்ணெய் வைக்காத தலை. கண்கள் குழிவிழுந்து கிடந்தன. நான்கு நாட்களாக சவரம் செய்யப்படாத வெள்ளை ரோமங்கள் கன்னத்தில் இறங்கியிருந்தன. சோளக்காட்டு பொம்மைக்கு துணியை மாட்டிவிட்டதுபோல யூனிபார்மை மாட்டியிருந்தார். முன்னாடியெல்லாம் ஏடிஎம் வாசல்களில் ஓய்வுபெற்ற இராணுவவீரர்கள் இருந்தார்கள். இப்போது இதுபோல பஞ்சத்துக்கு வருபவர்களை சல்லிசாக பிடித்துப் போடுகிறார்கள். இவரால் எப்படி பணப்பெட்டகத்தை பாதுகாக்க முடியும்? இவருக்கே இரண்டு பேர் பாதுகாப்புக்கு வேணுமே என்று நினைத்துக்கொண்டான்.

“மன்னிச்சுக்குங்க தம்பி ஹெல்மெட்டை கழட்டாட்டி திட்டுவாங்க. அதான் சொன்னேன்” என்றார். யார் திட்டுவார்கள் யாரை திட்டுவார்கள் என்று அவனுக்கு புரியவில்லை. ஆனால் அவர் எங்கோ திட்டுவாங்கியிருப்பார் என்பதை மட்டும் அவரது குரலிலிருந்தும் முகபாவனையிலிருந்தும் உணரமுடிந்தது. தலைகவசத்தை கழற்றியபடி உள்ளே நுழைந்தான். அவன் அதிர்ஷ்டம் அந்த மையத்தில் நூறு ரூபாய் தாளை எடுக்க முடிந்தது. அவன் கணக்கில் மிச்சம் ஐம்பது ரூபாய் இருப்பதாக அலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்தது. ஏடிஎம் மையத்தில் ஐம்பது ரூபாயை தாளை எடுக்கும் வசதி இருந்தால் நல்லா இருக்குமென்று தோன்றியது. வெளியே பார்த்தான்.  எங்கும் அமானுஷ்ய அமைதி. விட்டுவிட்டு கேட்கும் வேட்டுச்சத்தங்கள். வயதான ஒரு நோயாளி கிழவனும் நானும் மட்டுமே. இவரை தலையில் அடித்துப்போட்டு இந்த ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை அள்ளிச்சென்றால் கூட யாரும் கேள்விகேட்க மாட்டார்கள். ஆனால் சினிமாவில் மட்டுமே அது சாத்தியம். தன்னால் அது முடியாது என்று உணர்ந்து சோர்வுடன் வெளியே வந்தான். வெளியில் வரும்போது அந்த பெரியவர் கைகழுவி நின்றிருந்தார்.      

“என்ன தம்பி மிஷின் வேலை செய்யலையா? மிஷினை இப்படி குலுக்குறீங்க”

“வேலை செய்யுது” என்றான் கடுப்போடு.

பெரியவர் தலையை சொறிந்தார். அவரது பார்வை அவன் சட்டைப்பையின் மீதே விழுந்துக்கிடந்தது. அதேநேரம் வெறித்து பார்க்கவில்லை. சட்டைப்பையில் கைவிட்டு சில்லறையை தேடினான். பத்துரூபாயை வெளியில் எடுத்தான். பெரியவர் அவரது விரல்களை ஆர்வமாக பார்த்ததை அவன் கவனித்துவிட்டான். அவரது வறுமையிலும் ஒரு சிறு தன்மானம் மிளிர்ந்துக்கொண்டிருப்பதை கவனித்தான். அவரிடம் பேசவேண்டும்போல அவனுக்கு தோன்றியது.        

“என்ன பெரியவரே தீபாவளிக்கு கூட உங்களுக்கு லீவு இல்லையா? ஊருக்கெல்லாம் போகலையா?” கேட்டான்.     

“இல்ல தம்பி. எட்டு தேதிக்குதான் தம்பி சம்பளம் போடுவாங்க. இந்த தடவ தீபாவளி இரண்டாந்தேதி வந்துடுச்சு. அது சரி. யாருக்கு எப்ப சம்பளம் போடுவாங்கன்னு காத்திருந்தா பண்டிகைநாள் வரும்? அப்படியே பண்டிகை முன்னாடி வந்திருந்தாலும் பெருசா என்ன நடந்திருக்கும்? இரண்டாயிரத்து ஐநூறு தருவானுங்க. திங்கறதுக்கும் தங்கறதுக்குமே போயிடும். பண்டிகை நாள்ல ஊருக்கு போனா பேரபுள்ளைகளுக்கு கையில எதுனாச்சும் வாங்கிட்டு போனாத்தானே மரியாதையா இருக்கும்?”

பெரியவரின் பேச்சு அவனுக்குள் சுரீரென்று இறங்கியது. பணம் மிகுந்த பெட்டகத்தை உள்ளே வைத்துவிட்டு வெளியில் பரிதாபமாக உட்கார்ந்திருக்கிறார்கள் என்று தோன்றியது. அதுசரி செல்வமும், கருணையும் மிக்க கோவில் வாசலில் என்ன பணக்காரர்களாக உட்கார்ந்திருக்கிறார்கள்? பிச்சைக்காரர்கள்தானே என்று கேட்டுக்கொண்டான்.

அந்த பெரியவர் குழாயை திறந்துவிட்டதுபோல பேச ஆரம்பித்தார். அவரது சொந்த ஊர் ஆரணியென்றும், எம்ஜியாரின் தீவிர ரசிகன் என்றும் சொன்னார். ஊரில் விவசாயம் பார்த்தது, பங்காளிகளோடு தகராறு. சினிமா வாய்ப்புத்தேடி முதல்முறையாக  சென்னை வந்தது, கொஞ்சநாள் பீச்சில் ராட்டினம் ஓட்டும் வேலை செய்தது, காதலித்து தன் மனைவியை திருமணம் செய்துகொண்டது, ஏதேதோ வேலை செய்தது, எம்ஜியார் இறந்ததும் இரண்டுநாள் சாப்பிடாமல் அவரது சமாதி பக்கத்திலேயே காத்திருந்தது என்று ஒரு மனிதனின் ஐம்பதாண்டுகால வரலாற்றையே சொல்லி முடித்திருந்தார். ஆனால் அவர்பேச்சில் ஒருமுறை கூட இந்த நகரத்து மனிதர்கள் மோசம் என்றோ நகரத்தை புகார்கூறியோ ஒரு வார்த்தையும் வெளிப்படவில்லை. அவருக்கு இரண்டு மகள்கள் என்றும் திருமணமாகி மீஞ்சூரில் வசிப்பதாக சொன்னார். எப்போதாவது பேரப்பிள்ளைகளை பார்க்க போவதாகவும் பண்டிகை நாளும் அதுவுமா அவங்களுக்கு எதுவும் வாங்கி கொடுக்கமுடியவில்லை என்று வருத்தத்துடன் சொன்னார்.

“என் பொண்டாட்டி மட்டும் இப்ப இருந்திருந்தா நானெல்லாம் இப்படி தனியா கெடந்து...” என்று எதையோ சொல்ல ஆரம்பித்தவர் நிறுத்திக் கொண்டார். குரல் கம்மியிருந்தது. வறண்ட இருமலுடன் நெஞ்சு சளியை வெளியே துப்பிவிட்டு பாக்கெட்டில் இருந்து ஒரு பீடியை எடுத்து பற்றவைத்தார். பீடியை உறிஞ்சியவர் சிலவிநாடிகள் அமைதிக்கு பிறகு “பண்டிகை இல்லாட்டி தம்பி. அவங்கள வேற நாள்ல போய் பார்த்துட்டா போச்சு” என்று சொன்னார்.

அவரையே பார்த்தபடி நின்றுக்கொண்டிருந்தவன் எதையோ நினைத்து கையில் இறுக்கி பிடித்திருந்த பத்துரூபாயை சட்டைப்பைக்குள் வைத்துவிட்டு நூறுரூபாய் தாளை எடுத்தான். பெரியவரிடம் கொடுத்தான். அவர் திகைப்பு கலந்த தயக்கத்துடன் பார்க்க, “வச்சிக்கோங்க பெரியவரே. ஹேப்பி தீபாவளி”  என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் அங்கிருந்து கிளம்பினான். பாலவாக்கம் நெருங்கியதும் கடற்கரை நோக்கி வண்டியை திருப்பினான்.  கடற்கரையில் யாரும் இல்லை. கடலையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். இருட்டியதும் வீட்டுக்கு சென்றான். கேட்டை திறக்கும்போது கீழ்வீட்டில் இருக்கும் இளம்பெண்கள் புத்தாடை அணிந்து தெருவில் புஸ்வானம் கொளுத்திக்கொண்டிருந்தார்கள். இவனை கண்டுக்கொண்டதாகவே தெரியவில்லை. கார் நிறுத்துமிடத்தில் வாகனத்தை ஏற்றிவிட்டு மாடிக்கு சென்றான். கதவை திறந்து லுங்கியை மாற்றி படுக்கையில் விழுந்தான். ஜன்னலுக்கு வெளியே சேகருக்கு தெரியாமல் அடகு வைக்க எடுத்துச் சென்ற பைக் அவனை பார்த்து  கிண்டல் செய்வதுபோல உணர்ந்தான்.   

ஆத்மாநாமின் ஒரு கவிதை வரிகள் அவனுக்குள் ஓடின. 

இந்தச் செருப்பைப் போல் எத்தனை பேர் தேய்கிறார்களோ

இந்தக் குடையைப் போல் எத்தனை பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ

இந்தச் சட்டையைப் போல் எத்தனை பேர்

கசங்குகிறார்களோ

அவர்கள் சார்பில் உங்களுக்கு நன்றி

இத்துடனாவது விட்டதற்கு.

ஏடிஎம் நிலையத்தில் பார்த்த அந்த பெரியவரின் பெயரைக் கூட கேட்காமல் வந்துவிட்டோமே என்று வெட்கமாக இருந்தது. தன்பெயரையும் அவர் கேட்கவில்லையே என்று நினைத்துக்கொண்டான்.

ஏப்ரல், 2016.