ஓவியம் பி.ஆர்.ராஜன்
சிறுகதைகள்

நசிமாத்தா

தாமிரா

ஒலகமே தண்ணிக்குள்ள முங்கிக் கெடக்குத்தா, ஆனா மனுசங்க யாரும் முங்கல. எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துது.  எல்லா மனுசங்களுமே தண்ணிக்கு மேல நடக்கப் பழகிருந்தாங்க.  நாம தண்ணி மேல நடக்கோம்னு அவுங்களுக்குத் தெரியவே இல்ல.  அவ்ளோ  சாதாரணமா நடந்துட்டிருந்தாங்க.  தூரத்துல பளிங்குல கெட்டுன ஒரு பெரிய பள்ளியாசல், அதோடநெழல் அப்படியே தண்ணில விழுந்து, அதும் ஒரு பள்ளியாசல் மாறியே தெரியுது.

இந்த ஒலகமே ஊதாக்கலர்ல அழகா இருந்துது. அந்த அழக ரசிச்சுகிட்டே நடந்து போயிட்டிருந்தேன்.  லேசா வேட்டியில மூத்திரம் பிரிஞ்சிருச்சுத்தா. அப்படியே கனவும் கலைஞ்சிருச்சு.  ஆனா இப்ப கண்மூடினாலும் அந்தத் தண்ணில மெதக்கற ஒலகமும், பள்ளியாசலும், மனுசங்களும் அப்படியே கண்ணுக்குள்ள நிக்காங்க''.

அத்தா என் கைகளைப் பிடித்து தன் கைகளுக்குள் வைத்தபடி தனது கனவினைச் சொல்லிக் கொண்டிருந்தார்.  உம்மு இந்தக் கனவினை அநேக முறை கேட்டிருப்பாள் போல.  அருகில் வந்து அத்தாவிற்கு கேட்காத விதத்தில், பதட்டமான குரலில் ‘‘இப்படித்தாம்ணே என்னென்னவோ சொல்லுதாஹ எனக்கு பயமா இருக்குண்ணே... '' என்றாள்.

எண்பத்து மூன்று வயது என்பதே, அச்சுறுத்தும் வயதுதான்.  அதுவும் இதுவரை காய்ச்சல், தலைவலி என்று படுத்தறியாத ஒரு மனிதன் ஆறு நாட்கள் ஒரு அறைக்குள் முடங்கிக்கிடப்பதும், விநோதமான கனவுகாண்பதும் யாருக்கும் பயமேற்படுத்தத்தான் செய்யும்.

அத்தா எனது வலது கையை இறுக்கமாகப் பிடித்திருந்தார்.  அந்த விரல்களின் இறுக்கம் என்னிடம் நிறைய பேசுவது போலிருந்தது. என்னை நழுவ விட்டுவிடக்கூடாது என்கிற தீர்மானம் அந்தக் கைகளில் இருந்தது. எதையோ எடுக்கவந்த மீரா ‘‘மாமா அப்பா* ஒங்களத்தான் தேடிட்டுருந்தாங்க'' என்று சொல்லிவிட்டுப் போனாள்.

‘‘படுத்தே கெடக்கறனா என்னென்னவோ ஞாவகம் வருதுத்தா. உச்சந்தலையில லேசா கை பட்டாலே வலி உசிரு போவுது.  மத்தபடி பொஸ்த்தவம் வாசிக்க முடியல.  ஒரு பக்கம் வாசிக்கதுக்குள்ள கண்ணுலருந்து தண்ணியா வருது.  என்னைவுட்டுரும்மா கிராமத்துக்குப் போறேன்னாவுடவும் மாட்டேங்கா?''

‘‘டாக்டர் கிட்ட போவோமா?''

‘‘இல்லத்தா வேங்குன  மாத்திரையளே இன்னும் இருக்கு. ''

அத்தா மெல்ல என் கைகளைப் பிடித்து எழுந்து அமர்ந்தார்.  மவம் வந்ததும் அத்தாவுக்கு உசார் குடுத்துருச்சு பாத்தியாக்கா என பெரியக்கா நசிமாவிடம் சொன்னாள் உம்மு.  அத்தா சிரித்தார்.  நீண்டநேரம் கழித்து சிரிக்கிறார் என எனக்குத் தோன்றியது.

ஒருவேளை, இரண்டொரு நாளுக்குப் பிறகான சிரிப்பாகக்கூட இருக்கலாம். அத்தாவின் சிரிப்பு எனக்கு ஆசுவாசமாக இருந்தது. அத்தாவின் பிரச்சனை உடல்நிலை இல்லை மனநிலை எனப் புரிந்தது.

‘‘இருங்கத்தா உடுப்பு மாத்திட்டு சாயா குடிச்சிட்டு வாறேன்'' என்றபடி அறையைவிட்டு வெளியே வந்தேன். என் பின்னாலேயே பெரிய அக்காவும் வந்தாள். பெரிய அக்காவுக்கு தலை முழுமையாக நரைத்திருந்தது.  அவளுக்கு திருத்தமாக அம்மாவின் சாயல் வந்திருந்தது.

‘‘இதுக்கு முன்னால அத்தா எப்ப இப்படி சிரிச்சா ஹன்னு ஞாவம் இருக்கக்கா''

இந்தக் கேள்விக்கு அக்காவால் பதில் சொல்ல இயலவில்லை.  அவள் தன்நெற்றி சுருக்கி நினைவு அடுக்குகளை துழாவினாள். பதில் இல்லை.

சட்டென குற்றவுணர்ச்சியும், தவிப்பும் மேலிட ‘‘தெரியலயே தம்பி'' என்றாள்.

‘‘அத்தா இப்பல்லாம் பாட்டுப்பாடுதாஹளா'' எனக் கேட்க வேண்டுமென நினைத்தேன். ஏனோ அதைக் கேட்பதில் ஒரு தயக்கம் இருந்தது. பின்னால் வந்த உம்மு அடுக்களைக்குச் சென்று சாயாவை சுடவைத்தபடியே ‘‘ரெண்டுநாள் இருந்துட்டுப் போண்ணே'' என்றாள். நான் பதில் எதுவும் சொல்லவில்லை.

பஷிரியா ‘‘அத்தாவை சித்தா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்'' என்றாள். அத்தா எங்கும் வர மறுத்துவிட்டார். 

அத்தா எழுந்து வந்து டைனிங் ஹாலில் அமர்ந்து சாப்பிட்டதை எல்லோரும் வினோதமாகப் பார்த்தார்கள். சட்டென அவருக்குள் எழுந்த தெளிச்சி என்னால்தான் என பெரியக்கா நசிமா உறுதியாகச் சொன்னாள். 

அம்மாவின் மௌத்திற்குப் பிறகு  அத்தாவை  எப்படிக் கையாள்வதென்று  யாருக்கும் தெரியவில்லை. கிராமத்து வீட்டில்தான் அத்தா இருக்கிறார். ஊரின் மேற்குத் தொங்கலில் இருக்கும் ஒற்றை வீடு. ஊரையும், வீட்டையும்  ஒரு வளைந்த சாலை பிரிக்கும்.  ஊரெல்லாம் திருநெல்வேலி  தொகுதி, வீடு மட்டும் ஆலங்குளம் தொகுதி என்ற விநோதத்தைக் கொண்டிருக்கும் வீடு அது. அத்தாவின்  பேரம் பேத்திமார் அந்த வீட்டிற்கு கே.கே.எம்.  பண்ணை வீடு என்று பெயர் வைத்திருந்தார்கள். அந்தப் பெயரும் கூட அம்மாவின் ஏற்பாடுதான். அத்தாவின் பெயர் கே. காதர் முகைதீன் அந்தப் பெயரிலேயே  வீடும், காடும் விளங்க வேண்டும் என்பது அம்மாவின் ஹாஜத்து*.

பெரிய அக்கா நசிமாவின் மகன் காஜா கட்டிய வீடுதான் என்றாலும் அது ஒரு கூட்டுக் குடும்பத்திற்கான  சாத்தியங்களைக் கொண்ட வீடாக இருந்தது.  அம்மா அப்படி அந்த வீட்டை வடிவமைத்திருந்தாள். அம்மா ஒரு நிறைஞ்ச மனுசி. அவளுக்கு எப்போதும் அவளைச் சுற்றி மனிதர்கள் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பெருநாளின் போதும் அம்மா ஒற்றை மனுசியாக நின்று பிரியாணியோ,தேங்காச்சோறோ பொங்குவாள்.  ஒற்றை மனுசி என்றுதான் பெயர் அம்மாவிற்கு கை வேலை செய்ய மொத்த குடும்பமும் நின்று கொண்டிருக்கும்.  அன்றைக்கு வீட்டுப்படியேறி வரும் எல்லோருக்கும் இல்லையென்று சொல்லாமல் உணவளிப்பாள். அப்படி உணவளித்த ஒரு பெருநாள் கழிந்த ஆறாம் நாள் அம்மா மௌத்தாகிப் போனாள்.

அம்மா இறப்பதற்கு ஒரு பத்து நாளுக்கு முன்னால் வயக்காட்டில் வைத்து ‘‘எப்படியாச்சும் அவளை காப்பாத்திக் குடுத்துருடா.  அவ இல்லாம எனக்கு வாழத் தெரியாது'' என்றார் அத்தா. வாழத் தெரியாது என்ற அந்த சொல் என்னை அதிகம் பாதித்தது, அந்தப் பயணத்தில் ஊரில் நான்கைந்து நாள் அதிகம் தங்கியது அம்மாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதற்குத்தான். அம்மா ஆஸ்பத்திரிக்கு வர மறுத்தாள். ‘‘பெருநா கழியட்டும்த்தா கம்ப்ளீட்டா செக் பண்ணிரலாம்.  நானும் இன்னுங் கொஞ்ச நாளைக்கு ராகத்தா* இருக்கத்தாம்த்தா விரும்புதேன்'' என்றாள்.

பெருநாள் கழிந்ததும் ‘‘எனக்கு எல்லாம்  சப்சாடா  நல்லாயிருச்சுத்தா. பெருநாளோட பெருநாளா அல்லா எல்லா பலாமுசீபத்தையும்* தீத்துவச்சுட்டான்'' என்று சொன்னாள். அன்று அவளிடம் இருந்த தெளிச்சலும் சுறுசுறுப்பும் எல்லோருக்கும் அந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஊருக்குக் கிளம்பிப் போகையில் ‘‘இந்ததரவ நீ நல்லாவந்திருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்குத்தா.  இனி நா நிம்மதியா இருப்பேன்'' என்று வாழ்த்தினாள்.

நான் ஊருக்குக் கிளம்பி வந்ததும் மறுநாளே அம்மாவின் மௌத்* செய்தி வந்து சேர்ந்தது. அம்மாவின் மரணத்தைத்தாண்டி அத்தாவின் துயரத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறோமோ என்கிற பயமே வழியெங்கும் அச்சுறுத்திக்கொண்டிருந்தது.

அத்தா அமைதியாக அம்மாவைப் பார்த்தபடியே இருந்தார். நீண்டநேரம் அழுது ஓய்ந்ததற்கான அமைதியும்,கேவலும் அவரிடம் இருந்தது. என்னைப் பார்த்ததும் அவருக்கு துக்கம் இரட்டிப்பாகி இருக்க வேண்டும். பெருங்கொண்ட குரலெடுத்து அழத்துவங்கினார். ‘‘உன்னோட சேத்து, ஏ நசிமாத்தாங்கற சொல்லும்லோ செத்துப் போச்சி இனி என்னை யாரு அப்படிக் கூப்பிடுவா'' என்று அழும் அத்தாவை எப்படித் தேற்ற என்று தெரியவில்லை. மரணம் என்பது ஒரு உயிரை மட்டுமா கொண்டு போகிறது.

அத்தா சொன்னது போல நசிமாத்தா என்ற குரலும் அம்மாவோடு போயிற்று.  அம்மாவின் மௌத்திற்குப் பிறகு இந்த வீடு அவருக்கு அன்னியப்பட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து திரும்பிய போது ‘‘தொட்டுப் பேசக் கூட ஆளில்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கைத்தா' என்றார்.  சமீபமாக அத்தா கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் போகிறது.

‘‘ஏ மீனா'' என்கிற  அழைப்பொலியோடுதான் வீட்டிற்குள் வருவார். அவர் அம்மாவைப் பேர் சொல்லி அழைக்கும் விதம் அத்தனை அழகாக இருக்கும்.  ஒரு நாளில் நூறு முறையாவது அம்மாவின் பெயரை உச்சரிப்பார்.  மீனா  மாடுதொறக்கச் சொல்லிட்டியா? மீனா உளுந்துபொடைக்க ஆள் சத்தங்காட்டிட்டியா? அவரது ஒவ்வொரு பேச்சுக்கு முன்னாலும் அம்மாவின் பெயர்  வந்து ஒட்டிக்கொள்ளும்.

அத்தாவிற்கு நல்ல குரல்வளம். சின்ன வயதில் திரைப்பட பின்னணிப் பாடகராகும் முயற்சி செய்தவர். அத்தாவின் பாடல்களுக்கு அம்மா பெரிய ரசிகை. ஆனால்,  ஒரு பாட்டு பாடுங்களேன் என நேரடியாக கேட்க மாட்டாள்.  காஜா மவ நீங்க பாடுனாதான் தூங்குவேன்னு அடம்புடிக்கா என்பாள். வயல்வெளியில் இருந்தார்களானால், ‘‘நசிமாத்தா நீங்க  இந்த வரப்புல உக்காந்து பாடுனியன்னா அந்தப் பாட்ட கேட்டுக்கிட்டே அவளுவ கூடகொஞ்சம்  வேல பாப்பாளுவ.  பொம்மி உங்க பாட்டைக் கேட்டான்னா ரெண்டாளம் வேலை பாப்பா'' என்பாள். அத்தா மறுப்பேதும் சொல்வதில்லை. அம்மா எப்போது பாடச் சொன்னாலும் பாடுவார். கொள்ளுப் பேரனையோ, பேத்தியையோ தொட்டிலில் போட்டு ஆட்டியபடி அம்மாவைப் பார்த்து. 

கொஞ்சும் மொழி சொல்லும் கிளியே செழும் கோமளத் தாமரைப் பூவே. ஒரு  வஞ்ச மிலா முழு மதியே... இந்த வானில் உதித்த நல் அமுதே. கண்ணே... கண்மணியே... கண்ணுறங்காயோ? என்று பாடியதை நான் பார்த்திருக்கிறேன்.  அந்தப் பாட்டின் சுகத்தில் அம்மா உறங்கிப் போவாள்.

கோபமாக இருக்கின்ற நாட்களில்  அம்மாவின் கையால் பச்சைத் தண்ணீர்கூட வாங்கிக் குடிப்பதில்லை என்கிற வைராக்கியத்தோடு இருப்பார்.  அதை உணர்ந்து கொள்ளும் அம்மா ஜோதியின் கையில் காஃபி கொடுத்துவிடுவாள். மறுப்பேதும்  சொல்லாமல் வாங்கிக் குடித்துக் கொள்வார்.  ‘‘உங்கையால குடுத்தாத்தான் குடிக்காரு ஜோதி பேசாம உன்னை அவருக்கு கெட்டி வச்சிர வேண்டியதுதான்'' என்பாள் அம்மா. 

‘‘ச்சீ போங்க நாச்சியாரே'' என சொல்லிவிட்டு நகர்வாள் ஜோதி.

அதே கோபத்தோடு ஆறுமுக வேளார் வீட்டிற்கு முன்னால் இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு போவார் அத்தா. அம்மாவிற்கு வேகமாக நடக்க இயலாது என்ற போதும் தத்தக்கா பித்தக்காவென நடந்து பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் அத்தாவிடம் போய் நிற்பாள். 

‘‘போயிட்டு வாறேன்னு சொல்லிட்டு போனா என்ன நசிமாத்தா... சொல்லாம போனியன்னா நீங்க  வார வரைக்கும் கெதங் கெதங்னு  இருக்குமால்லியா?'' என்பாள்.

‘‘மீனா உடுத்தின வேட்டியோட அப்படியே போயிருவேன்னு சொன்னேன்'' அழுத்தந்திருத்த மான குரலில் இதைச் சொல்வார். அம்மாவிற்கு சிரிப்பு வரும்.  கார் வருகிறதா எனப் பார்ப்பது போல தன் சிரிப்பை கட்டுப் படுத்திக்கொள்வாள். ‘‘காரு  மேட்டுல வந்துட்டான்.  நாளைக்கு காலைல வரும் போது அரக்கிலோ ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்துருங்க''. அம்மா அவரது கோபத்தை துளியும் மதிக்காமல் இதைச் சொல்வாள்.  அவருக்கு இன்னும் வேசடை கிளம்பும்.  ‘‘மீனா உடுத்துன வேட்டியோட போயிருவேன்னு சொன்னேன்''என்பார்.

‘‘முப்பது வருசமா உடுத்துன வேட்டியோடத்தான நசிமாத்தா போயிட்டிருக்கியோ'' என்பாள் அம்மா. அதற்கு மேல் அவரிடம் பதில் இருக்காது. 

அம்மாவிடம் அநேக பலஹீனங்கள் இருந்தன ஆனால் அந்த பலஹீனங்களையெல்லாம் அவள் அன்பால் மறக்கடிக்கச் செய்திருந்தாள். அந்த அன்பை இழந்துவிட்டதும், அதை ஈடு செய்ய முடியாததும் அத்தாவின் ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தது.

அம்மாவின் மௌத்திற்குப் பிறகு அத்தா பாடுவதை விட்டுவிட்டார். வீட்டில் இருக்கும் ஒன்றிரண்டு குழந்தைகளும்  ‘டாக்கிங் டாம்' உணவூட்டலுக்கு பழகியிருந்தார்கள். அத்தாவோடு பெரும் பொழுதுகளை வயக்காட்டில் செலவு செய்யும் முருகன் ‘‘பெரிய முதலாளி பேச்சுக்கால் இப்பம் முன்னகணக்கா இல்ல கொறைஞ்சு போச்சு'' என்றார். எப்போதாவது ஊருக்கு வரும் போது நான் அத்தாவை பாடச் சொல்வேன். அத்தாவின் பாடலில் பழைய சுருதி இருக்காது.  குரல் பிசிறுதட்டி பலமிழந்து இருக்கும். 

முன்ன மாதிரி பாட வரலத்தா. இதெல்லாம் நல்லா உச்சத்துல நின்னு பாடணும்.  குரல் எவ்வமாட்டுக்குது என்பார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த முருகன் ஒரு நாள்  ஏக்க மெலிவு தேகத்துக்கு மட்டுந்தான் இருக்குமா? கொரலுக்கு இருக்காதா? எனக் கேட்டார்.  முருகன் இதைச் சொன்னதும் அவர் ‘‘ஆமாத்தா அவளுக்குப் புரியுதோ இல்லயோ வஞ்சனை இல்லாம பாராட்டுவாத்தா.  இப்ப யாருக்காக எதுக்காக பாடறதுன்னு இருக்கு. '' என்றார்.

பள்ளி வாசல் இல்லாத அந்த ஊரில் அத்தா அதிகாலையில் எழுந்து சன்னமான  குரலில் பாங்கு சொல்லிவிட்டு தொழ ஆரம்பிப்பார்.  அப்போது மட்டும் அத்தாவின் குரலில் பழைய இனிமை இருக்கும்.

அத்தாவின் மீது குடும்பத்திலிருக்கும் எல்லோருக்கும் அதிக ப்ரியம் இருந்தது.  அதிலும் இரண்டாவது அக்கா மெஹரின் கணவர் மொம்மது மைதீன் அவரை ஒரு நண்பனைப் போல பார்த்துக்கொண்டார்.  ஆனாலும் அத்தாவிற்குள் அம்மாவின் இழப்பு ஒரு குறை இருந்து கொண்டேயிருந்தது. எந்த அன்பும், எந்த அன்பிற்கும் மாற்று இல்லை.

‘‘எம்பத்தி மூணு வயசாச்சு எனக்குள்ளயும் சில ரகசியம் இருக்கும்லத்தா.  அத நா யாருகிட்ட சொல்ல முடியும். யாருகிட்டயும் சொல்ல முடியாத சொல்லுதாம்த்தா என்னை துரத்திட்டே இருக்கு. அதுதான் உங்கம்மா ஞாவகத்துல திரும்பத் திரும்ப என்னைக் கொண்டாந்து நிறுத்திருது'' என்பார். எங்கிருந்து பேச்சுத்துவங்கினாலும் அது அம்மா நினைவுகளில் வந்து முடியும். அம்மாவோடு வாழ்ந்த நாட்களின் ஒரு கணத்தையாவது திரும்ப  வாழ்ந்துவிட வேண்டும் என்கிற எண்ணம்  அவருக்குள் இருந்தது. பிரித்து எறியப்பட்ட கூட்டினைத் தேடி அலையும் ஒரு சிட்டுக்குருவியின் தவிப்போடு அவர் இருந்தார்.

அத்தாவிற்கு பயணம் போவது பிடிக்கும்.  புகை பிடிப்பதை நிறுத்திய பிறகு அத்தாவோடு பயணப்படுவது எனக்கும் பிடித்த ஒன்றாகவே இருந்தது. பயணத்தின் போது ஒரு குழந்தை போல வேடிக்கை பார்த்தபடி, கேட்டறியாத மிகப் பழைய பாடல்களை பாடியபடி வருவார். ஒவ்வொரு பயணமும் அவரை முற்றிலும் புதிய மனிதராகவும், உற்சாகமும் இளமையும் நிறைந்தவராகவும் மாற்றிவிடும்.  இப்போது சாப்பிடும் மாத்திரைகளையெல்லாம் மீறி அவரை  ஒரு பயணம் அழைத்துச்  சென்றால் தெளிவாகிவிடுவார் என்று தோன்றியது.

பெரிய அக்காவிடம் அத்தாவை எங்கயாவது கூட்டிட்டுப் போயிட்டு வரலாம்னு தோணுது என்று சொல்ல.  அப்படியா தம்பி என்றாள்.  அந்தச் சொல்லில் அவ்வளவு சந்தேகம் இருந்தது.  உடம்பு சரியில்லாத நெலமையில கூட்டிட்டுப் போகணுமா என்கிற கேள்வியை உள்ளடக்கியதாக இருந்தது.  எதுக்கும் ஒரு முறை டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போகலாம் என்றாள் பஷிரியா.  எனக்கு அது தேவையில்லையெனத் தோன்றியது.

‘‘அத்தா கார்ல ஒரு ட்ராவல் போலாமா ?'' என்றேன்

‘‘எங்கத்தா போறோம். ''

சட்டென எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ‘‘தேனில விஜய்சேதுபதி ஷூட்டிங் நடக்குது. சேதுவ பாத்துட்டு வரலாமா?'' என்றேன்.

‘‘போலாம்த்தா.  ஆனா நா அவரு படம் பாத்தது இல்லயே. அன்னைக்கு டிவில தொன்னூத்தி ஆறுன்னு ஒரு படம் போட்டான். செத்த நேரம் பாத்தேன் எனக்கு பிடிக்கல. என்ன  பேசுதாங்கன்னு சத்தமும் காதுல விழல, அந்தாக்குல எந்திரிச்சு வந்துட்டேன். போய்பாத்தம்ன்னா... என்னமும் நாலுவார்த்தை அவரப்பத்தி பேசணும்லத்தா.  அதான  மரியாதையா இருக்கும்'' என்றார்.

‘‘இதயே அவர்ட்ட சொல்லுங்க... அவர் ஒண்ணும் சொல்ல மாட்டாரு'' என்றேன்.

‘‘சேச்சே.  அதெப்படி அப்படிச் சொல்ல முடியும். அந்த மனுசனப் பத்தி நல்ல விதமா பேப்பர்ல படிச்சிருக்கேம்த்தா'' என்றார்.

பயணம் போகிறோம் என்கிற எண்ணமே அவருக்கு அத்தனை  உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. மறுநாள் குமரவேலை அழைத்துக்கொண்டு, அவரது காரில் புறப்பட்டோம். அத்தா வழக்கம் போல முன்னிருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டார்.  கடந்த ஆறு நாட்களாக அவர் படுக்கையில் இருந்தவர் என்பதற்கான சுவடுகள் எதுவும் அவரிடம் தென்படவில்லை. வேடிக்கை பார்த்தபடியே பாடிக் கொண்டுவந்தார். மதியம் பன்னிரண்டு மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து சேர்ந்தோம்.  சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்துக்கொண்டிருந்தார் விஜய் சேதுபதி. 

‘‘அத்தா இங்கயே இருங்க'' என காரிலேயே அவரை அமர வைத்துவிட்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு நானும் குமரவேலும் சென்றோம். அப்பா வந்திருக்கிறார் எனச் சொன்னதும் சேதுவிற்கு முகம் மலர்ந்தது. ‘‘அவர இங்க அழைச்சிட்டு வர வேண்டாம் சார், நாம போய் அவரைப் பாப்போம். ஒரு பெரிய மனுசனை நாம தேடிப்போறதுதான் முறை'' என்றார். இருவரும் அந்த ஷாட் படம் பிடிக்கும் வரை காத்திருந்தோம்.  ஷாட் முடிந்ததும் சார் வாங்க அப்பாவை பாத்துட்டுவரலாம் என்றார் சேது.  இருவரும் அந்த அறையைக் கடந்து வாசலுக்கு வந்த போது ஹாலில் இருந்த சோபாவில் அத்தா அமர்ந்திருந்தார்.  தயாரிப்பு நிர்வாகி ஜாகீர் உசேன் அவரை அழைத்து வந்திருந்தார்.

அத்தாவை அறிமுகம் செய்து வைத்ததும் சேது ஒரு மலர்ந்த முகத்துடன் ‘‘வாங்கப்பா'' என்றார். நெடுநாள் நண்பரைப்போல, அத்தா வாஞ்சையாக சேதுவின் தோள்பற்றி, ‘‘பத்திரிகை வாயிலாக உன்னுடைய ஈகையையும் அன்பையும் பற்றி வாசித்து அறிந்துகொண்டேன். ஒரு மாமனிதனை சந்திக்கும் மகிழ்வோடு வந்தேன். என் உளமார வாழ்த்துகிறேன்.  இந்த ஈகையும் அன்பும் வெற்றியும் தொடரட்டும்'' என வாழ்த்தினார்.

அத்தாவின் பேச்சில் எப்போதும் ஒரு உரைநடைத் தன்மை இருக்கும். அது பல சமயங்களில் ரசிக்கும் விதமாகவே இருக்கும். சேது அதை ரசித்தபடி  நின்றார்.  ‘‘பார்க்கின்ற எல்லோருக்கும் நீ முத்தம் குடுக்கற. உனக்கு யாராவது முத்தம் குடுத்திருக்கறாங்களா.! ‘இப்ப நான்குடுக்கறேன்' என்று சொல்லி விஜய் சேதுபதியின் நெற்றியில் முத்தமிட்டபடி சிரித்தார். அவரது முத்தத்தை ரசித்தபடியே. ‘அப்பா நீங்க அழகா இருக்கீங்கப்பா' என்றார் சேது. 

அத்தாவின் காதில் அது விழவில்லை போல  ‘‘என்ன சொன்னே'' என்று திரும்பக் கேட்டார்.  நான் கொஞ்சம் சத்தமாக ‘‘ நீங்க அழகா இருக்கீங்கன்னு சொல்றார்'' எனச் சொன்னேன்.  அப்பா என் சொல்லை நிராகரித்துவிட்டு நீ சொல்லு என்பது போல சேதுவைப் பார்த்தார். 

சேது மீண்டும் ‘‘அப்பா நீங்க அழகா இருக்கீங்கப்பா'' என்று சொன்னதும், ஒரு கணம் கண் மூடி அதை அனுபவித்தவராக. ‘‘இந்தச் சொல்லை இதுக்கு முன்னால யார் சொல்லி இருக்கா தெரியுமா? என் மனைவி சொல்லுவா.  நசிமாத்தா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொல்லுவா. அவ போனதுக்குப் பிறகு யாருமே இதச் சொல்லல. 

நீதான் சொல்லி இருக்கறே'' என்று சொன்னார்.  இதைச் சொல்லும் போதே அவரது கண்கலங்கி இருந்தது. சேது அத்தாவிடம் ‘‘அப்பா நா உங்கள ஒருமுறை கட்டிப் பிடிச்சிக்கட்டுமா' இருவரும் ஆரத் தழுவினார்கள். அத்தாவின் முகத்தில் ஒரு தெளிவும், மகிழ்வும் தெரிந்தது. அத்தா மீண்டும் அம்மாவோடு வாழ்ந்த அந்த ஒரு கணத்தை மீட்டுவிட்டார் என்றே தோன்றியது.

அக்டோபர், 2020.