சிறுகதைகள்

தெரியலயே

டாக்டர் சோம வள்ளியப்பன்

வெளியில் சற்று நேரம் நடந்து, அப்படியே இரவு உணவை ஏதாவது ஒரு கடையில் முடித்துக்கொண்டு வரலாம் என்று கிளம்பினேன். அறைக்கதவை பூட்டி விட்டு வெளியே வந்தவன் குளத்தை சுற்றி இருந்த பாதையில் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்.

மாலை மணி ஆறேமுக்கால். தெரு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. தெருவில் போவோர் வருவோர் மற்றும் வீடுகளை பார்த்தபடியே மெதுவாக நடந்தேன். தற்கால கட்டடங்கள் போலிருந்த வீடுகளுக்கு நடுவில், அதிக அகலத்துடனும் உயரம் குறைவாகவும் இருந்த ஒரு பழைய காலத்து செட்டிநாட்டுப் பாணி வீடு கண்ணில் பட்டது.

வீட்டு நுழைவாயிலின் இருபக்கமும் பெரிய திண்ணைகள், அவற்றில் குட்டையான ஆனால், தடிமனாக இருந்த மரத்தூண்கள் என அந்த வீடு வித்தியாசமாக இருந்தது. நெருங்கிப் போனேன்.

இப்போது இன்னும் சிலவும் என் கண்ணில் பட்டன. விசாலமாக இருந்த திண்ணைகளின் தரையில் ஆங்காங்கே காரை பெயர்ந்திருந்தது. வலது பக்கத் திண்ணையின் ஓரத்தில் இருவர், அருகருகே கால் நீட்டிப் படுத்தபடி பேசிக்கொண்டிருந்தது அங்கே எரிந்து கொண்டிருந்த முட்டை பல்பின் மஞ்சள் வெளிச்சத்தில் தெரிந்தது.

திண்ணைகளை ஒட்டிய சுவர்கள் இரண்டிலும் பக்கத்துக்கு ஒன்றாக கரும்பலகைகள் போல கருப்பாக வர்ணம் பூசப்பட்டிருந்தது. அவற்றின் மேலே வலது பக்க மூலையில் சாக்பீசால்,தேதி மற்றும் இன்னும் என்னவோ சில வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. அது பள்ளிக்கூடம் ஆக இருக்குமோ என்று நினைத்துக்கொண்டேன்.

இப்போது அந்த வீட்டின் வாசலருகில் வந்துவிட்டேன். வீட்டுக்கு வெளியில் சற்று வித்தியாசமான மூன்று சக்கர ட்ரை சைக்கிள்கள் சில நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மீது சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த வண்டிகளைப் போலவே அந்த இளைஞர்களும் வித்தியாசமானவர்களாகத் தெரிந்தார்கள். அவர்களுடைய கால்கள் மெலிந்துபோயும், இடுப்புக்கு மேல் உடல் பருமனாகவும் இருந்தது. போலியோ பாதிப்பாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். அந்த இளைஞர்களில் ரோஸ் கலர் சட்டை போட்டிருந்த ஒருவன் மட்டும் என்னைத் திரும்பிப் பார்த்தான்.

அந்த வீட்டு காம்பவுண்டில் உடைந்துதொங்கிக் கொண்டிருந்த இரும்பு கேட்டுக்கு சற்றுத் தள்ளி, சவுக்கக் கட்டைகள் அடித்து பெயர் பலகை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் இளம்பச்சை வர்ணத்தில் மழையிலும் வெயிலும் பாதி அழிந்துபோன வெள்ளை எழுத்துக்களில் ‘...தன் செட்டியார் மாற்றுத்திறனாளிகள் இல்லம்' என்று எழுதி இருப்பது மங்கலாகத் தெரிந்தது.

‘யாரைப் பார்க்கிறீங்க?' என்பது போல ஒரு சிறுவன் சைகை காட்டிக் கேட்டான். அவனுக்குப் பேச வராது போல. நான் பதில் சொல்வதற்குள் அவனே, ‘உள்ள போய் பாருங்க. இருக்கார்' என்பது போல மீண்டும் சைகை காட்டினான்.

கைகடிகாரத்தைப் பார்த்தேன். மணி ஏழாகவில்லை. சாப்பிடப் போக இன்னும் நிறைய நேரமிருக்கிறது. உள்ளே போனேன்.

வலுவான அந்தக்காலத்து வேலைப்பாடு நிறைந்த, உயரம் குறைவான செங்கருப்பு நிறத்து நிலை. பெரிய சாவித்துவாரம் வைத்த கனமான கதவுகள். செருப்பைக் கழற்றிவிட்டு முகப்பைத் தாண்டி உள்ளே போனேன். நீள் சதுரமாக இருந்த அந்த முன் கட்டுப் பகுதியின் இடது பக்கமும் வலது பக்கமும் வரிசையாக மும்மூன்று அறைகள். வீட்டின் நடுவில் வானம் பார்த்த பெரிய நடுவாசல்.

செட்டிநாட்டுபக்கம் முற்றத்தை அப்படித்தான் அழைக்கிறார்கள். அறைகளுக்கு வெளியே நடுவாசலை சுற்றிலும் பட்டியக்கற்கள் பதித்த அகலமான வளவு எனப்படும் சுற்றுப் பத்தி. பத்திகளுக்கும் முற்றம் இருந்த தரைக்கும் இடையே ஓரடி உயர வித்தியாசம். அறைகளும் பத்தியும் இருந்த அளவைக்காட்டிலும் முற்றம் இருக்குமிடம் மொத்தமும் ஆழம் குறைவான பெரிய தொட்டி போல இருந்தது. முற்றத்துக்கு அட்டைப்பெட்டிகள், பேப்பர் பண்டில்கள் 8 நாற்காலிகள், வாட்டர் கேண்கள், செருப்புகள் மற்றும் பெஞ்ச்கள். மேலே கூரையில்லாமல் திறந்தவெளியாக இருந்தது.

முற்றம் தவிர, சுற்றுப்பத்தி முழுக்க பிரித்து வைக்கப்பட்டிருந்த ஓர் அரிசி மூட்டை, கூடைகளில் காய்கறிகள், தார் டிரம்கள், கேஸ் சிலிண்டர்கள், என எங்கும் பலவிதமான சாமான்கள் அடைசலாக இருந்தன. அதனாலோ என்னவோ அங்கே, முற்றத்தின் காற்றோட்டத்தையும் மீறி, கிராம்பு, வெல்லம், துவைக்கும் சோப்பு போன்ற பலவும் சேர்ந்த ஒரு மளிகைக் கடை வாசனை அடித்தது.

வலது பக்க பத்தியின் சுவரோரம் பல டிரங்க் பெட்டிகள், சுருட்டி வைக்கப்-பட்டிருந்த பாய், தலையணைகள் இருந்தன. அவற்றுக்கு மேலே ஆணிகளில் மாட்டப்பட்டிருந்த சட்டை பேண்ட்டுகள் தொங்கிக்கொண்டிருந்தன. தரையில் அமர்ந்து சில பையன்கள் எதையோ அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அருகில் மர நாற்காலியில் அமர்ந்திருந்த நடுத்தரவயதுப் பெண்மணி, அவற்றை எப்படி அடுக்க வேண்டும் என்ற விவரம் சொல்லிக்கொண்டிருந்தார்.

அவர்களை விடுத்து அடுத்த பக்க வளவின் மீது பார்வையை செலுத்தினேன். அங்கே நடு அறைக்கு வெளியே ஒரு மேசை, நாற்காலி. அதில் சரிந்து அமர்ந்திருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க, சற்று பருமனான, பழுப்பேறிய வெள்ளை பனியன் மற்றும் லுங்கி அணிந்திருந்த ஒருவர். நெற்றியில் லேசாய் திருநீறு. அவருக்குப் பின்னால் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான்.

சரியாகப் பார்த்ததில்தான் தெரிந்தது, அவன் அவருக்கு தலை பின்னிக் கொண்டிருந்தான் என்பது.

அவருக்கு பக்கவாட்டில் காற்றை விட அதிக சத்தம் கொடுத்துக்கொண்டிருந்த ஒரு பெடெஸ்டல் ஃபேன். அவர்தான் அனேகமாக அந்த இல்லத்தின் பொறுப்பாளராக இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

எதையோ எழுதிக் கொண்டிருந்தவர் என் காலடிச் சத்தம் கேட்டு முகத்தை லேசாக நிமிர்த்திப் பார்த்தார். அவருடைய இடது கண் சற்று மாறுகண் போல இருந்தது. நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டார். உடன் அந்தப் பையன் அவர் தலையை விட்டுவிட்டு நகர்ந்து நின்றுகொண்டான். என்னைப் பார்த்து, ‘‘சொல்லுங்க.. என்ன வேணும்'' என்று கேட்டார்.

‘‘இந்த இல்லம் பற்றித் தெரிஞ்சுக் லாமின்னு....''

‘‘நீங்க யாரு.. ?''

‘‘என் பெயர் சுந்தரம். சென்னையில் பேராசிரியரா வேலை பார்க்கிறேன். காரைக்குடி அழகப்பா யுனிவர்சிட்டியில் ஒரு செமினார். கலந்துக்குகிறதுக்காக வந்திருக்கேன். கோயில் பின்னாடி இருக்கிற லாட்ஜிலதான் தங்கியிருக்கேன். இந்தப் பக்கமாக நடந்து வரும்போது போர்டு கண்ணில பட்டுச்சு. உள்ள வந்தேன்''

‘‘அப்படியா? சும்மா பார்க்க வந்திருக்கீஹகளா? உக்காருங்க''

அதற்குள் அந்தப் பையன் விந்தி விந்தி நடந்துபோய், ஒரு மர ஸ்டூலை சிரமப்பட்டு நகர்த்தி வந்தான். பரவாயில்லை என்றவன், இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தேன்.

அப்போது மற்றொரு பையன் நாங்கள் இருக்கும் இடம் நோக்கி வேகமாக வந்தான். அவனுடன் இருபது வயது மதிக்கத்தக்க இளைஞனும் வந்தான்.

‘‘சார்... இவரு உங்களப் பார்க்கணுமாம்'' என்றான் அவரைப் பார்த்து.

என் அருகில் வந்து நின்ற அந்த இளைஞன் கையில் ஒரு கனமான துணிப்பை புடைத்துக்கொண்டு இருந்தது. அதிலிருந்து ஏதோ ஒரு இனிப்பு வாசம் வந்தது. ‘‘சொல்லுப்பா'' என்றார் அவர்.

‘‘இதல அதிரசம் இருக்கு. பசங்களுக்கு கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்''.

‘‘நீ..?''

‘‘நானும் காரைக்குடிதான் சார். துபாயில வேலை பார்க்குறேன். லீவுல வந்திருக்கேன். இந்த பசங்களுக்கு ஸ்வீட் கொடுத்துட்டு போலாம்னு..''

‘‘அப்படியா. சரி. மொத்தம் 45 பசங்க மற்றும் பத்து ஸ்டாப்''

‘‘இதுல எண்பது, எண்பத்து ஐந்து இருக்கும் சார்''

‘‘நல்லதுப்பா. அந்த டிரம் மேல வைச்சிட்டுப் போ. பை திரும்ப வேணுமா?''

‘‘இல்ல சார். இருக்கட்டும்''

‘‘உங்க அப்பா என்ன பண்றாரு?'' என்று நான் கேட்டேன்.

‘‘அப்பா இல்ல சார். சின்ன வயசுலேயே இறந்திட்டாரு. அம்மா மட்டும்தான்..''

'வேற என்ன?' என்பது போல அவர் அவனைப் பார்க்க, அவன் சொல்லிக்கொண்டு கிளம்பினான். அடுத்து அவர் என்னைப் பார்த்து, ‘‘அப்பறம்'' என்றார்.

‘‘நீங்கதான் சொல்லணும்''

‘‘பாத்தீங்க இல்ல. இது உடல் ஊனமுற்றோர் இல்லம். நான்தான் பாத்துக்கிறேன். என் பேரு பெருமாள். இந்தப் பசங்க எல்லாராலையும் ஸ்கூல் போக முடியாதுங்கறதால இங்கயே பள்ளிக்கூடமும் நடத்துறோம். முதல் புண்ணியம் குமரப்பன் அப்பாவைத்தான் சேரும். இந்த பில்டிங்கை பிள்ளைகளுக்காக விட்டுட்டுப் போயிருக்கிறார். பில்டிங்குக்கு இப்ப 150 வயசு ஆச்சு.

இங்க படிச்ச பிராமணப் பிள்ளைங்க சில பேரு இப்ப வேதபாட சாலையில் படிச்சுக்கிட்டு இருக்காங்க. டீச்சர்களுக்குச் சம்பளம். ரூ 5000தான் 3 ஆம் தேதி கொடுத்திடுவேன். காலை 9 மணியில் இருந்து சாயங்காலம் 4 மணிவரை கிளாஸ்.

மடமடவென்று சொல்லிக்கொண்டு வந்தவர், எனக்கு ஸ்டூல் இழுத்து வந்து போட்டவனை அருகில் அழைத்து, ‘‘இவன் ஒன்பதாம்ப்பு பெயில். வேற ஸ்கூல் போனால், பத்தாங் கிளாஸ் மாடியில இருக்கு. இவனைத் தூக்கிட்டுத்தான் போகணும். இவனுக்கு தோதான ஸ்கூல்ன்னு சொல்லி இங்க எங்ககிட்ட அனுப்பிட்டாங்க. இவன் பொறக்கையில எடை குறைவு. 1700 கிராம்தான் இருந்திருக்கிறான். போகப் போக கால் இப்படியாயிடுச்சு'' என்றார். அவன் என்னைப் பார்த்துப் புன்னகைத்தான்.

நாங்கள் பேசிக்கொண்டிருந்த விஷயம் காதில் விழுந்தோ என்னவோ அடுக்கி வைக்கும் பையன்களுடன் எதிர் பத்தியில் அமர்ந்திருந்த பெண்மணி நடுவாசலில் இறங்கி, எங்கள் பக்கம் வந்தார்.

பெருமாள், அந்தபெண்மணியின் கையைப் பிடித்துக்கொண்டு, ‘‘நான் இங்க வந்தப்ப எனக்கு 30 வயசு. அதுக்கு அப்புறம்தேன் இவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். பேரு மங்கை. தெரிஞ்சேதான் என்னையக் கட்டிக்கிட்டா'' சத்தமாக சிரித்தார்.

கையை அவர் பிடியில் இருந்து விலக்கிக்கொண்டே மனைவி சொன்னார், ‘‘அப்பெல்லாம் இவருக்கு 440 டிகிரி பிரஷர் இருக்கும். கக்கூஸ் போயிட்டு வந்து உட்கார்ந்தா, தூக்கித்தூக்கிப் போடும். எப்ப வந்து பார்த்தாலும் டாக்டர் இன்னும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்தில் போயிறும்பார். இப்ப அதெல்லாம் இல்லை. மட்டன், டீ, காபி எல்லாம் விட்டுட்டு முழுநேரமும் இதே வேலைதேன். இவருக்கு எப்பவும் பசங்க நினைப்புதான். இவர் செல் நம்பர் ஸ்கூல் பையன்கள் எல்லார்கிட்டயும் இருக்கு. எப்ப வேணா கூப்பிடுவாய்ங்க''

அப்போது 18, வயது மதிக்கத்தக்க ஒரு பையனும் அவனை விட ஒன்றிரண்டு வயது அதிகம் இருக்கக்கூடிய பாவாடை, தாவணி அணிந்திருந்த பெண்ணும் எங்களைக் கடந்து போனார்கள். பார்க்க மற்ற பிள்ளைகளில் இருந்து வித்தியாசமாகத் தெரிந்தார்கள். அவர்களுக்குள் ஏதோ சுவாரசியமாக பேசியபடி போனபோதும், இருவருமே என் முகம் பார்த்து சினேகமாக புன்னகைத்தார்கள்.

நான் கேட்காமலேயே அவர் சொன்னார், ‘‘என் பசங்கதேன். பொண்ணு, டிகிரி பர்ஸ்ட் இயர். பையன் எலெக்ட்ரிக்கல் டிப்ளமா படிச்சிருக்கேய்ன். வேலை தேடிக்கிட்டிருக்கேய்ன். கோயிலுக்குப் போயிட்டு வர்றாய்ங்க''. அந்தப் பிள்ளைகள் முன் கட்டைத் தாண்டி, இரண்டாம் கட்டிற்குள் நுழைந்தார்கள்.

அப்போது காற்றில் லேசாக மண் வாசம் வந்தது. மழை வரும் என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் சடசடவென மழை கொட்ட ஆரம்பித்தது. வீட்டின் நடு முற்றம் திறந்தவெளி என்பதால் மழைச்சாரல் எங்கள் மீது தெறிக்க, நான் எழுந்தேன். அவரும் எழுந்தார். அதற்குள் வேகம் பிடித்து விட்டது மழை.

25 அடிக்கு 15 அடி அகலத்தில் இருந்த முற்றம் முழுக்க வானில் இருந்து நேடியாக மழை கொட்டுவதை பார்க்க அற்புதமாக இருந்தது. உடனே வெளியில் விளையாடி பேசிக் கொண்டு இருந்தவர்களும் படுத்துக் கொண்டு இருந்தவர்களும், பத்தியில் அமர்ந்து அடுக்கிக்கொண்டிருந்தவர்களும் ஒரு சேர நாங்கள் இருந்த முன் கட்டுக்குள் ஓடி வந்தார்கள். அத்தனை பேரும் சாரல் படுமாறு பத்தி மீதிருந்த பொருட்களையெல்லாம் வேகவேகமாக சுவற்றின் ஓரங்களுக்குத் தள்ளிவிட்டார்கள் கூடவே  சண்முகத்தின் மனைவியும் பிள்ளைகளும் சில பொருட்களை நகர்த்தினார்கள்.

மழையின் வேகம் கூடியது. அவ்வப்போது பளீர்பளீரென்ற மின்னல். அடுத்த சில வினாடிகளில் தொடர்ந்த பெரும் இடிச் சத்தம்.. காற்று அதிகம் இல்லை. ஹோ என்ற இரைச்சலுடன் கனமாகக் கொட்டியது மழை.

மங்கைதான் சொன்னார்கள். ‘‘முத்தத்துல தூப்பாய் அடைச்சிருக்கும் போல. அதேன் தண்ணி வடியமாட்டேங்குது. தூப்பாய் என்பது முற்றத்தின் நான்கு மூலைகளிலும் இருக்கும் தண்ணீர் வெளியேறும் வழி. முற்றத்தில்விழும் தண்ணீர் முழுவதும் வீட்டிற்கு அடி வழியாகவே தூப்பாய் வழியாக வெளியேறி கம்மாய், குளத்துக்குப் போய்விடும்.

உடனே பையன்கள் பலரும் ஒன்றாக முற்றத்தில் இறங்க முயற்சிக்க, ‘‘டேய் நீங்க இறங்கவேணாம். தொரட்டிக் கம்பை எடுத்தாந்து எங்கிட்ட தாங்க. அடைப்பை நான் குத்திவிடுறேன் என்று சொல்லியபடி லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு பெருமாள் தண்ணீரில் இறங்குவதற்கு ஆயத்தம் ஆனார். ஒரு பெரிய இடி இடித்தது. உடன் பட்டென கரெண்ட் போய்விட்டது. வீடு முழுக்க இருட்டு. ‘‘நீங்க இறங்கிறம்னவுடன என்ன ஆச்சு பார்த்தீகளா?'' என்று மங்கை சிரித்தபடி சொன்னார். பையன்களும் கூட சேர்ந்து சிரித்தார்கள்.

முற்றத்தை நிறைத்தே தீருவது என்ற தீர்மானம் போல மழை கொட்டிக்கொண்டிருந்தது. முற்றத்தின் தண்ணீர் மட்டம் மெல்ல மெல்ல ஏறிவந்துகொண்டிருந்தது. நிறைந்து, பத்திக்கும் மேலே வந்து விட்டால் பிறகு தரையெல்லாம் பரவி, அடுத்து அங்கிருந்து அறைகளுக்குள்ளும் தண்ணீர் போய்விடும். அங்கே தரையில் என்னென்ன வைத்திருக்கிறார்களோ!

அதுவரை என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்த எனக்கு ஒரு யோசனை வந்தது. மெதுவாக நகர்ந்து போய் என்  செல்போனில் இருந்த லைட்டை ஆன் செய்து தார் டிரமிற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்தேன். நல்ல வேளையாக அதில் இரண்டு சின்ன பிளாஸ்டிக் வாளிகள் மட்டும் இருந்தன. தோதாகப் போய்விட்டது என்று நினைத்துக்கொண்டு, டிரமிற்குப் பக்கத்தில் இருந்த பெரிய அண்டாவையும் முற்றத்தில் இறக்கவேண்டும் என்று உதவிக்குப் பையன்களைக் கூப்பிட்டேன்.

‘‘சார் அதெல்லாம் எதுக்கு? வேணாம்.'' என்று சொன்ன பெருமாளுக்கு மங்கை பதில் சொன்னார்.

‘‘சார் முத்தத்திலிருந்து தண்ணிய டிரம்முக்கு மாத்திப்புட்டா தண்ணி பத்திக்குப் போகாதுன்னு ஐடியாப் பண்ணுறார் போல''

என் யோசனை அதுதான். ‘‘டிரம்மை கீழ இறக்க வேணாம் சார். அப்படியே ஓரத்துக்கு இழுந்து வந்தாப் போதும். மோந்து ஊத்தலாம்'' இருட்டில் கொட்டுகிற மழையில் இரண்டு பையன்கள் இறங்கி வாளிகளில் மொண்டு கொடுக்க, நான், மங்கை அவர்கள் மகன் ஆகிய மூவரும் பத்தியில் நின்றபடி நனையாமல் வாங்கி வாங்கி, ஊற்றினோம்.

தொடர்ந்து மழை பெய்ததால் என்ன மொண்டும் தண்ணீர் குறைவதாக தெரியவில்லை. பெருமாளாலால் ஓரளவிற்கு மேல் குனிய முடியவில்லை. இயலாமல் நிமிர்ந்து பெருமூச்சு விட்டார். அப்போது திடீரென அவர்கள் எல்லாம் வாண்டு என்று அழைக்கும் ஒரு சின்ன பையன் தடுத்தும் கேட்காமல் தடாரென்று தண்ணிக்குள் இறங்கி, தூப்பாய்க்கு நேராக குனிந்து கையை விட்டுத் துழாவினான். அவனுடைய பாதி முகமும் தலையும் தண்ணீருக்குள்.

‘‘வேணாண்டா, வாண்டு '' என்று பெருமாளும் மங்கையும் சத்தம் போட்டும் அவன் கேட்கவில்லை. ஒரு நிமிடம் கூட இருக்காது. ‘‘இதோ பாருங்க சார்..'' என்று அவன் எதையோ பிடித்து தூக்கி மேலே காட்டியது இருட்டில் சரியாக தெரியவில்லை. சுருட்டி வைத்த கோணிப்பையாக இருக்கலாம்.

அடைப்பு நீங்கிவிட்டது. சளக் புளக் என்ற சத்தத்துடன் தண்ணீர் சுழித்துக் கொண்டு தூப்பாய் வழியாக வேகமாக இறங்க ஆரம்பித்தது. முற்றத்தில் இருந்தவர்கள் பத்திக்கு ஏறினார்கள். சற்று நேரத்தில் மழையின் வேகம் குறைந்தது.

சட்டையையும் பேண்டையும் எல்லோரும் உதறிக்கொண்டிருக்க, ‘‘டேய் கோபால், சாருக்கு ஒரு துண்டு கொடு. உள்ள கண்ணாடி பிரோல்ல புதுசு இருக்கு பார்'' என்றார் பெருமாள். மங்கையும் அவர் மகளுமாக பத்தியில் இருந்த தண்ணீரை சரட்சரடென விளக்குமாறால் முற்றத்தில் தள்ளிவிட்டார்கள்.

மழை நின்று விட்டது. மங்கை உள்ளே போனார்கள். ‘‘அப்ப நான் கிளம்புறேன் சார். இன்னொரு நாள் வருகிறேன்'' என்று சொன்னேன். ‘‘மழை முழுசா வுடட்டும் சார். லாட்ஜ்லதானே இருக்கீங்க. பக்கம் தானே. போகலாம், இருங்க'' என்றார்.

பெருமாள் சொல்லி, அவர் மகன் போய் தேன்குழல் எடுத்துவந்து பையன்கள் எல்லோருக்கும் கொடுத்தான்.

‘‘பசங்களா, குளிச்சிட்டு வேற டிரஸ் போட்டுக்குங்க'' என்றார்.

ஸ்டூல் மீது அமர்ந்தேன். தலையைத் துவட்டிக் கொண்டிருக்கையில் மங்கை டீ கொண்டுவந்தார்கள். ‘‘தா பசங்களுக்கும் டீ போடு'' என்று அவர் சொன்னதற்கு பதில் இல்லை. பால் இல்லையோ என்னவோ. அடுத்து டிராயரை திறந்து பணத்தை எடுத்து, ‘‘கோபால், கடையிலிருந்து பத்து டீ வாங்கியாடா. பெரிய பிளாஸ்க் எடுத்துப்போ'' என்றார்.

சூடாக இருந்த டீயைப் பருகியபடியே, ‘‘சொல்லுங்க சார்'' என்றேன். ‘‘எங்க விட்டேன்?'' என்று கேட்டுவிட்டு அவரே சொல்ல ஆரம்பித்தார்.

‘‘இவுங்களுக்கு தாய் தகப்பேன் இல்ல. யாராவது வந்து கூட்டிபோனாத்தேன் வீடுகளுக்குப் போலாம். மொத்தம் 40 பசங்க. அஞ்சு பொம்பளைப் பிள்ளைஹ. வகுப்பு 9 மணிக்கு. முடியறது 4 மணிக்கு. புள்ளைஹ வெளியில் இருந்தும் வருவாஹ.

பெரிய பசங்க இங்கிருந்து அழகப்பா காலேசுக்கு படிக்கப் போறாய்ங்க. கவர்மெண்ட் ஸ்கூட்டி கொடுக்குது. மோட்டரைசுடு. நாலு பேத்துக்கு கெஞ்சினா, இரண்டு பேத்துக்கு கிடைக்கும். வேலை கிடைச்சதும் இங்கயிருந்து போயிடுவாய்ங்க. இதுவரை 45 பிள்ளைஹ கவர்மெண்ட் ஜாப்க்கு போயிருக்காய்ங்க.

கேரம்போர்டு விளையாடுவாய்ங்க, அவைங்களுக்குள்ளாற பேசிக்கிவாய்ங்க. ராத்திரி 9 மணியானப் படுத்திடுவாய்ங்க. காலையில ஐந்து, ஐந்தரைக் கெல்லாம் டாண்ணு எந்திரிச்சிடுவாய்ங்க. பண்டிகைகளுக்கு ஊருக்கு போவாய்ங்க. பொம்பளைப் புள்ளைஹளுக்கு தனியா இடம் இருக்கு. மூணு பேர் வாய் பேசமாட்டாய்ங்க.''.

மவுனமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

‘‘அவங்ககளால யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்ல. சாமி இருக்கார். பையன்க ஜாலியாக இருப்பாய்ங்க. எங்கிட்ட 45 அறிவாளிகள் இருக்காங்கன்னு நினைச்சுப்பேன். என்ன.. அவைங்களுக்கு கை கால் இல்லை. நாம் வைச்சிக்கிட்டு என்ன பெரிசா செய்றோமின்னு அவைங்களுக்குத் தெரியும்.

பெருக்கக் கழுவ ஆயா வைச்சிருக்கோம். சமையலுக்கு இரண்டு ஆள் இருக்கு. ஆளுக வராதப்ப மங்கையே செஞ்சிறுவா. ஆள் வரட்டுமுண்ணு காத்திருக்க முடியுமா? பிள்ளைஹ கிளாஸ்சுக்குப் போகணுமே!

நான் படிச்சது பி.எஸ்.சி. ஏ.எம்.ஐ.இ. இயற்கையாக வந்துசேர்ந்துவிட்டேன். 24 மணி நேரமும் 7 நாட்களும் இதேதேன். மங்கை எம்.ஏ. பி.எல். இந்த வேலை செய்ய, படிப்புத் தேவையில்ல. தெரியாம படிச்சுப்புட்டோம்''. சொல்லிக்கொண்டு கிளம்பினேன்.

*

இட்லி சாப்பிடும் கடையில் கடைசி பெஞ்சில் போய் உட்கார்ந்தேன். என் பின்னமேயே வேகமாக வந்த ஒருவன் என் பெஞ்சிலேயே மற்றொரு கோடியில் சற்றுத் தள்ளி உட்கார்ந்தான். என்னையே பார்த்தான். முகம் கொஞ்சம் பரிச்சயமாகத் தெரிந்தது.

யோசித்ததில், இல்லத்துக்கு வெளியில், டிரை சைக்கிள் மேல் அவன் உட்கார்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. அட! ஆமாம். அந்த ரோஸ் கலர் சட்டைக்காரன்தான்.

‘‘என்னப்பா?'' என்றேன்.

‘‘சார் நீங்க பேப்பர்காரரா?''

‘‘பேப்பர்காரரா என்றால்..?''

‘‘பத்திரிகைக்காரரா?''

‘‘இல்லை''

‘‘அவர் சொல்றதையெல்லாம் நம்பிடாதீங்க. ஸ்கூலைப் பார்த்துக்குறேன்னு வந்தவர், புள்ளைங்களைக் காட்டி நிறைய பணம் பண்றார். கவர்மெண்டு, ரோட்டரி, இன்னர் எல்லார்கிட்டயும். மேக்கொண்டு ஜனங்க அவுங்க பிறந்த நாள், கல்யாணமான நாள்ன்னு அடிக்கடி காசு கொண்டுவந்து கொடுப்பாங்க. இந்த வீட்டைக் குடுத்தவங்க பேரன் பேத்திங்க இடத்தைக் கேட்டா, இவர் காலி பண்ணமாட்டேங்குறார். கவர்மெண்ட் வேற இடம் கொடுத்தாலும் ஒத்துக்க மாட்டேங்குறார்''

சர்வர் வந்தார். ஒரு தட்டில் இலை வைத்து அதன் மீது நான்கு இட்லிகள் வைத்தார். ‘‘சாம்பாரா? சட்னியா?'' என்று கேட்டார்.

யோசனையில் இருந்த நான் பதில் சொல்வதற்குள் சர்வர் அடுத்த வாடிக்கையாளரைப் பார்க்கப்போய்விட்டார்.

*

நான் சரியாக முகம் கொடுத்துப் பேசாததால் ரோஸ் சட்டைக்காரன் எழுந்துபோய்விட்டான். எவர் சில்வர் தூக்குவாளியுடன் மீண்டும் வந்த சர்வர்,

‘‘சார், அந்த ஆள் சொன்னதை நம்பாதீங்க. அந்த சிறார் இல்லத்துக்கு பக்கத்து வீட்டுக்காரரு அவரு. அவருக்குத் தொந்திரவா இருக்குன்னு ரொம்ப நாளா அதை இடம் மாத்தச் சொல்லி பெட்டிஷன் போட்டுக்கிட்டு இருக்காரு. இதே வேலைதான் அவருக்கு'' சொல்லிவிட்டு மீண்டும் கேட்டார், ‘‘சார், இட்லி பேன் காத்துல காய்ஞ்சுக்கிட்டு இருக்கு. சாம்பார் ஊத்தவா? சட்னியா?''

ரோஸ் கலர் சட்டைக்காரன் போன திசையையே பார்த்தபடி இருந்தேன்.

செப்டம்பர், 2021