ஓவியம் ஜீவா
சிறுகதைகள்

துரோகம்!

அன்புக்கரசி ராஜ்குமார்

விரலிடுக்கில் பற்ற வைத்த ஆறு சென்டிமீட்டர் அரக்கனை பாதியிலேயே கீழே போட்டு மிதித்துவிட்டு,அது கொடுத்த கடைசித் துளி நச்சையும் காற்றில் கலக்கவிட்டபடியே எதிரிலிருந்தவரைப் பார்த்தார் நல்லசாமி. சதாசிவம் இன்னும் தன் ஆழ்ந்த யோசனையிலிருந்து வெளிவந்தபாடில்லை.  தன் சிந்தனையின் வெளிப்பாடாய் கீழே கிடந்த எதையோ ஒன்றை வெறித்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘என்ன சதா, பகல் கனவா?என்னை வர சொல்லிட்டு நீ உன் பாட்டுக்கு கனா காண்ற?‘

‘கனவா?அட போப்பா,நீ ஒண்ணு. எனக்கு தூக்கம் போய் பல நாள் ஆச்சு!'

விஷயம் எங்கு வருகிறது என்று ஒருவாறு ஊகித்துவிட்டார் நல்லசிவம்.

‘உனக்கு தூக்கத்துக்கு என்னய்யா கொறச்சல்?என்னவோ ரொம்பதான் அலுத்துக்கற,' புகை தந்த இருமலுக்கு இடையே கேட்டார்.

‘உனக்கு ஒண்ணுமே தெரியாது பாரு', அந்த 'ஒண்ணுமே' வில், ஒண்ணை சற்று தேவைக்கு அதிகமாகவே அழுத்தி சொன்னார் சதா.

‘என்னயா, அந்த வாத்திச்சி மேட்டர் தான? போய்யா, அவள்ளாம் ஒரு ஆளுன்னு பேச வந்துட்ட. . . '

‘நீ என்ன இவ்வளவு சாதாரணமா சொல்லிட்ட. அவ ஆட்டம் ஓவரால இருக்கு. என்ன பண்றதுனே புரியலயே நல்லா. எதையும் வெளிப்படையா சொல்லவும் முடியாது'

‘விட்டுப் புடிப்போம் பா. புதுசுக்கு கொஞ்சம் ஆட்டம் இருக்கதான் செய்யும், அப்புறம் அடங்கிதான ஆகனும்?'

‘அப்படிங்கறே? கணக்கெல்லாம் ரொம்ப துருவு துருவுனு துருவறா. இங்க அவ செல்வாக்கு வேற நாளுக்கு நாள் கூடிட்டே போகுது. எதாவது கேக்கனும்னா இதுங்கல்லாம் நேரா அவகிட்டதான் போகுதுங்க. போற போக்குல நம்மள டம்மி பீஸ் ஆக்கிடுவா போல இருக்கே'

‘அப்டிலாம் விட்டுடுவோமா நாம? நாம பாக்காததா?பாத்துக்கலாம் விடுய்யா'

இருவரும் இன்னும் சிறிது நேரம் வாத்திச்சி எனப்படும் தமிழ்செல்வியைப் பற்றியும் அவளுடைய அதகளத்தைப் பற்றியும் பேசிவிட்டு கலைந்தார்கள். இந்தப் புறம் பேசுவதில்தான் எத்தனை ஒரு சுகம்?. சதாசிவத்திற்கு மனம் லேசானது போல் இருந்தது. இரவு நல்ல தூக்கம் வரும். வந்தது.

குறிஞ்சி நகர் நல சங்கம் ஆரம்பித்து பத்து வருடங்களும் சில மாதங்களும் ஆகிவிட்டிருந்தது. இப்போது இருப்பது போலவா பத்து வருடங்களுக்கு முந்தைய குறிஞ்சி நகர் இருந்தது?அப்போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வீடுகளே இருக்காது. மனித ஜீவராசிகளைத் தவிர,சகல ஜீவராசிகளும் அந்த ஏரியாவில் வாழ்ந்துக் கொண்டிருந்தன. எங்கும் ஒரே முட்காடாய் இருக்கும். நல்ல சிவம் இடம் வாங்குவதற்காக முதல் முதலாய் இங்கு வந்த போது பயத்தில் வாயைப் பிளந்தது நிஜம். பாம்பு,பூரான்,தேள் இன்னபிறவும் காலுக்கு அடியிலேயே ஊர்ந்து போய்க் கொண்டிருக்கும். அங்கு வீடு கட்டுவதற்கான சாத்தியம் இருப்பதாய் தலையில் அடித்து சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள். இருப்பினும், நகரின் மையத்தில் இடமோ,வீடோ வாங்குவது என்பது,சுத்தமான காற்று, சுத்தமான நீர் போன்றவற்றிற்காக ஏங்கும் இன்றைய தலைமுறையின் பரிதாப நிகழ்வாய் ஆகிவிடும் என்பதால் மனதை தேற்றிக் கொண்டு, சதுர அடி இருபத்தைந்து ரூபாய் என ஒரு கிரவுண்ட் இடத்தை வாங்கிப் போட்டு வீடு கட்ட ஆரம்பித்தார். அடுத்து சில நாட்களுக்குள் சதாசிவமும், இன்னும் சிலரும் அங்கு இடம் வாங்கி வீடு கட்ட, குறிஞ்சி நகர் மெல்ல மெல்ல மனிதன்(மட்டுமே) வாழும் இடம் ஆகிப் போனது.

குடிநீர் இணைப்பு, மின்சாரம்,தெருவிளக்கு என ஒவ்வொன்றுக்குமாய் அப்பகுதி மக்கள் எல்லாம் சேர்ந்து அலைய ஆரம்பிக்கையில்தான் இப்படி ஒரு சங்கம் ஆரம்பித்தால் என்ன எனத் தோன்றியது . முழு மூச்சாய் காரியத்தில் ஈடுபட்டு, அப்போதைக்கு உள்ளவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து குறிஞ்சி நகர் நல சங்கம் ஆரம்பித்தார்கள். நல்லசாமிதான் தலைவர், சதாசிவம்தான் துணைத்தலைவர். இதில் போன ஆறு மாதம் முன்பு வரை ஒரு வைரஸ் அளவும் மாற்றமில்லை. வினை ஆரம்பித்தது போன தேர்தல் சமயம்தான். சட்டமன்றமா, நாடாளுமன்றமா எனக் கேட்கிறீர்களா? இது குறிஞ்சி நகர் நல சங்கத் தேர்தல்.

நலசங்கம் ஆரம்பித்து முதல் ஆறு வருடங்கள் இந்த ஆடம்பரங்கள் எல்லாம் கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாய் குடியிருப்பு விஸ்தரிக்கத் துவங்க, மக்களை ஆசுவாசப்படுத்த நல்லாவும், சதாவும் கொண்டு வந்ததே இந்த தேர்தல் திட்டம். தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு வேறு வேட்பாளர்கள் இல்லை(இருக்க முடியாது) என்பதால் அவர்கள் இருவருமே அந்தப் பதவியை அலங்கரிந்த்துக் கொண்டிருந்தார்கள். பொருளாளர்,செயலாளர் இன்னும் பிற உறுப்பினர் பதவிகளுக்கெல்லாம் அவர்கள் யாரை முன் மொழிகிறார்களோ மற்றவர்கள் அவர்களை வழி மொழிவார்கள்.

நிற்க. இந்த நல சங்கம் வேறு என்ன மாதிரியான நலன்களை செய்யும்?பொங்கல்,தமிழ்ப் புத்தாண்டு போன்ற விசேஷ நாட்களில், உள்ளூர் பிரமுகர்களை அழைத்து கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். சுதந்திர நாள்,குடியரசு நாட்களில் கொடி ஏற்றி மிட்டாய் வினியோகிக்கப்படும். கூடவே மதிய உணவும். புதிதாய் அங்கு குடிவருகிறவர்கள், பழைய ஆட்களிடம் ஏதேனும் தகராறு செய்தால், அவர்கள் வாடகைக்கு குடிவந்தவர்கள் எனில் மிரட்டி வைக்கப்படும்,சொந்த வீட்டுக்காரர்கள் எனில் சமரசம் ஏற்படுத்தி வைக்கப்படும். பல வருடங்கள் ஒன்றாய் அக்கம் பக்கம் வசிக்கப்போகிறவர்கள் பகைமை பாராட்டக் கூடாது இல்லையா?இது போன்ற சில நல்ல காரியங்களை இந்த சங்கமும், அதன் உறுப்பினர்களும் சேவையாய் செய்து கொண்டிருந்தார்கள். என்னதான் சேவை என்றாலும் அதை சொந்தக் காசில் மட்டுமே செய்துவிட முடியாதாகையால் மாதா மாதம் சந்தா வசூலிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மாதத்திற்கு 75 ரூபாய். இது போக விசேஷ நாட்களின் செலவுகளுக்கென தனியாக நன்கொடைகளும் வாங்கப்படும். வசூலித்த அத்தனைப் பணத்தையும் பொது செலவுக்கு மட்டுமே பயன்படுத்த முடியாது என்கிற பொது விதி இருப்பதால், சமயங்களில் போனால் போகிறதென சொந்த செலவுக்கும் பயன்படுத்திக் கொண்டார்கள் தலைவரும் துணைத் தலைவரும்.

இப்படி எல்லாமும் நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்த வேளையில்தான் தமிழ்செல்வி அங்கு வீடு வாங்கிக் குடியேறினாள். சதாவின் தூக்கத்தையும் கெடுத்தாள். அவள் அரசினர் நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியை. தன் இத்தனை வருட சேமிப்பையும் குறிஞ்சி நகரில் 1200 சதுர அடியில் அடக்கினாள். காதல் வழிய கரம் பிடித்தவனை, ஐந்து வருடங்களுக்கு முன் விபத்து ஒன்றில் பறிகொடுத்துவிட்டு, தன் ஒரே மகள் தென்றலுக்கு தந்தையுமானாள். இப்போது தென்றல் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறாள்.

புதிய இருப்பிடம். புதிய மக்கள். புதிய வாழ்க்கை. மாற்றங்களுக்குப் பழக்கப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன என்பதால் இந்த இட மாற்றத்தையும் மகிழ்ச்சியாகவே ஏற்றுக் கொண்டாள். புது வீட்டிற்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்த, ஒரு ஞாயிறு மாலை, பத்தாயிரத்து ஒன்றாவது தடவையாக பாரதியின்,‘அக்கினிக் குஞ்சொன்றை‘ படித்துக் கொண்டிருக்கையில் சங்க உறுப்பினர்கள், தலைவர், துணைத் தலைவர் சகிதமாய் கதவைத் தட்டினார்கள். இந்த வருடத்தின் சங்க தேர்தல் அன்றுதான் நடக்க இருப்பதால், புதிதாய் வந்த அவளுக்கு அழைப்பு விடுக்கும் பொருட்டு வந்திருந்தார்கள். முன்பு வாடகைக்கு இருந்தப் பகுதியில் இது போன்ற நல்ல அம்சங்களை எல்லாம் கேள்விப்படாததால், இதெல்லாம் ரொம்பவே ஸ்வாரஸ்யமாக இருந்தது தமிழுக்கு.

‘தேர்தலா?பரவாலையே. இதெல்லாம் கூட இங்க நடக்குமா?குட். குட். எங்க சார் நடத்துவீங்க?’ ஆர்வம் பொங்க விழிவிரித்து விசாரித்தாள்.

‘நம்ம அசோசியேஷன் ஆஃபீஸ்ல தாங்க. தோ தெரியுதே தண்ணித் தொட்டி, அதுக்கு அந்தப் பக்கம் தான் இருக்கு நம்ம ஆஃபீஸ். நீங்க இப்பதான வந்துருக்கீங்க. போக போக எல்லாம் தெரிஞ்சுப்பீங்க. எங்க வீட்டம்மா வருவாங்க, அவங்களோட சேந்து ஆறு மணிக்கெல்லாம் வந்துடுங்க' பெருமை பொங்க பதில் அளித்தார் நல்லசிவம்.

‘கட்டாயம் வரேன் சார். இருங்க எல்லாம் டீ குடிச்சுட்டு போலாம்'

‘மேடம், குறிஞ்சி நகர்ல இன்னிக்கு சாயந்தரம்  ஒருத்தர் வீட்லயும் டீ,காபி கிடையாது. எல்லாம் நம்ம சங்கத்துலதான். மீட்டிங் முடிஞ்சு டீ, மிச்சரு எல்லாம் நாங்களே தருவோங்க,' சங்க உறுப்பினர் ஒருவர் போகிற போக்கில் சொல்லிக் கொண்டு போனார்.

தேர்தல் களை கட்டியிருந்தது. பெண்கள் எல்லாம் பின் வரிசையில் அமர்ந்து மிச்சர் கொறித்துக் கொண்டிருக்க, ஆண்கள் தேர்தல் பணியை செவ்வனே நடத்திக் கொண்டிருந்தார்கள். தலைவர் பதவிக்கும், துணைத் தலைவர் பதவிக்கும் போட்டி வேட்பாளர்களே இல்லாத பட்சத்தில், ஏகமனதாக முறையே நல்ல சாமியும், சதாசிவமும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். முடிவை அறிவித்துக் கொண்டிருக்கையில் கூட்டத்தில் சிறு சலசலப்பு.

‘இந்தப் பொம்பளைங்க வாயே ஓய மாட்டீங்களே?

என்னமா அங்க பேச்சு?'

‘புதுசா வந்த வாத்தியாரம்மா என்னமோ கேள்வி கேக்குறாங்க,' கூட்டத்திலிருந்து வந்தது ஒரு பெண் குரல்.

‘சொல்லுங்க டீச்சரம்மா? என்ன கேள்வினாலும் தயங்காம கேளுங்க. எத்தன நாளைக்குதான் ஸ்கூல் புள்ளைங்ககிட்டயே கேள்வி கேப்பீங்க?' சதாசிவம் அடித்த பெரிய ஜோக்கிற்கு கூட்டம் சிரித்து ஓய்ந்தது.

‘இல்ல சார், லேடீஸ்லாம் தேர்தல்ல நிக்க மாட்டாங்களானு கேட்டேன். அதுக்குப் போய் எல்லாம் சிரிக்கறாங்க,' தான் எதோ கேட்கக் கூடாததை‚ கேட்டு விட்டதைப் போல் உணர்ந்தாள் தமிழ்செல்வி.

‘பரவாலையே இதுவரைக்கும் எங்க யாருக்குமே வராத யோசனை உங்களுக்கு வந்துருக்கு. வரவேற்கிறேன். இதுவரைக்கும் இவ்வளவு ஆர்வமா ஒரு லேடி கூட இங்க கேட்டது இல்ல. அதனால் நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். உங்க எல்லாரோட சம்மதத்தோட இந்த தடவை ஒரு புதுமை பண்ண போறேன். இந்த வருஷம் நம்ம குறிஞ்சி நகர் நல சங்க செயலாளர் நம்ம டீச்சரம்மாதான். புதுசா வந்தவங்களுக்கு சில நெளிவு சுளிவு தெரியாது. அதனால தலைவர் பதவியோ,துணைத் தலைவர் பதவியோ தர முடியாது. ஆகையால,செயலாளர் பதவி. என்ன சொல்றீங்க?' நல்லசாமி, சதாசிவத்தை ஒரு ஆழப்பார்வைப் பார்த்துவிட்டு,பின் கூட்டத்தைப் பார்த்து கேட்க, ‘உங்க முடிவுதான்,எங்க முடிவும்' என்று பலமாகவே தலையாட்டினார்கள் அந்தத் தெருவாசிகள்.

‘சார், என்ன சார் இதெல்லாம். நான் எனக்கு பதவி கொடுங்கனு கேக்கல. ஏன் லேடீஸ்  கலந்துக்கவே இல்லன்னுதான்கேட்டேன்' அவளுக்கு தர்மசங்கடமாய் இருந்தது.

‘பாத்தீங்களா?வாய்ப்பு கொடுத்தா வேணானு ஓடுறீங்க. இந்த பொம்பளைங்க எல்லாமே இப்படிதான்பா. முந்திக்கிட்டு வர்றது,கொஞ்சம் கை தூக்கி விட வந்தா, தட்டிவிட்டுட்டு ஓடியே போயிடுறது'.

ஒரு நிமிட யோசனைக்குப் பின்,தமிழ்செல்வி தீர்க்கமாய் சொன்னாள். ‘சரி சார், நான் செயலாளரா இருக்க ஒப்புக்கறேன்.'

அப்படி ஆரம்பித்ததுதான் இந்த சனி. தமிழ்செல்வி பதினொன்றாய் இருந்துவிடுவாள் எனத் தப்புக்கணக்குப் போட்டதுதான் தப்பாகிவிட்டது. சாதாரணமாகவே மிஸ். கச்சிதமாய் இருப்பவள், பொது விஷயம் என்பதால் தேவைக்கும் அதிகமாகவே பெர்ஃபெக்டாய் இருந்தாள். ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு கேட்க ஆரம்பித்தாள். இது எதற்கு, அது எதற்கு என ஒவ்வொன்றுக்கும் பல நூறு கேள்விகள்.

‘சார், சாப்பாடுலாம் எதுக்குப் போட்டுகிட்டு? எப்படியும் ஒரு பத்தாயிரமாவது அதுக்கு செலவு ஆகும். முதல்ல அடிப்படை தேவைகளை கவனிப்போம் சார். நம்ம சங்க ஆஃபீஸ் இருக்குற ரிசர்வ் சைட் சும்மாதானா இருக்குது, அதை ஒரு பார்க்கா மாத்திட்டா என்ன? ஒண்ணொண்ணா வாங்கிப் போடுவோம். ஒரு தூரி, ஒரு சறுக்கல், ஒரு சீசா. நம்ம எம்.எல்.ஏ கிட்ட இது சம்பந்தமா ஒரு மனு கொடுப்போம். முழுசா  அரசாங்கத்தையே நம்பி இருக்காம, நம்மால முடிஞ்சத பண்ணுவோம். அப்புறம் ஒரு வாசக சாலை ஒண்ணு போடலாம். முக்கியமான பத்திரிகைகள வாங்கிப் போடுவோம். பின்னால அதுவே ஒரு நூலகமா மாற வாய்ப்பிருக்கு. இப்படி நெறைய பண்ணுவோம் சார். ஒரு நேரம் சாப்பாடு போட்டு என்ன ஆகப் போகுது?. சாப்பாடுனா, எல்லாரும் சாப்ட்டுட்டு அப்பவே மறந்து போய்டுவாங்க. ஆனா நான் சொல்றதெல்லாம் காலத்துக்கும் நிலைக்கும். எல்லாருக்கும் உபயோகமாவும் இருக்கும். என்ன சார் சொல்றீங்க?'

குடியரசு தின விழா நிகழ்ச்சி பற்றிய பேச்சு வார்த்தையின் போது தமிழ் அதீத ஆர்வமாய் இப்படிச் சொன்னாள்.

‘பேசுறதுக்கு எல்லாம் இனிப்பாதான் மேடம் இருக்கும். பண்ணிப் பார்த்தாதான் தெரியும் அதோட கஷ்டம்‘

சதா எரிச்சலை மறைத்துக் கொண்டு நக்கலாக சொல்ல, ‘அதேதான் சார், நானும் சொல்றேன், பண்ணிப் பாத்தாதானே தெரியும். ஆரம்பிப்போம் சார்.'

மற்ற சிலருக்கும் கூட அவள் சொன்ன கருத்து பிடித்துப் போகவே, கூட்டத்தில் ஒரு ஆதரவு அலை அடிக்கத் துவங்கியது. சதாசிவம் தாடையை இறுக்கிக் கொண்டார். அவர் அருகில் சென்ற நல்லசிவம்,‘விடு சதா,அடக்கிடுவோம்.'

சங்க அலுவலகத்தில் நல்லசாமியும், சதாசிவமும் இன்னும் சிலரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

நல்லசிவம் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டார். புகையை மெதுவாய் வெளியிட்டவாறே, எதோ யோசனையில் இருப்பதைப் போல முகத்தில் ஒரு இறுக்கத்தை உண்டாக்கிக் கொண்டார். ஒருபெண்ணை அடக்கென்னொரு பெரியாயுதம் அவளுக்கு எதிராய் எடுத்து விடமுடியும்? அவள் ஒழுக்கத்தைத் தவிர?

நிறுத்தி நிதானமாய் வெளி வந்து விழுந்தன வார்த்தைகள்.

‘என்னமோ போப்பா,முகத்தைப் பார்த்து ஆளுகளை எடப் போடக்கூடாதுங்கறது எவ்வளவு பெரிய உண்மை'.

‘ஏன் தலைவரே?ஏன் அப்படி  சொல்றீங்க?என்னாச்சு?' ஒரு அடிப்பொடி கேட்டது.

‘இந்த வாத்தியாரம்மா குடி இருந்த பழைய இடத்துல என்னனவோ சொல்றாங்கப்பா. என் உறவுக்காரன்  ஒருத்தன் வீடு அங்க இருக்கு, பாக்கலாம்னு போய், நம்ம குறிஞ்சி நகர் விஷயத்தைப் பேசிட்டு இருக்கும்போதுதான் அவன் இப்படி ஒரு விஷயத்தை சொல்றான்'.

‘என்ன தலைவரே சஸ்பென்ஸ் வச்சு இழுத்துட்டு இருக்கீங்க,என்னான்னு சீக்கிரம் சொல்லுங்க' இன்னொரு விசுவாசம் கேட்டது.

‘இல்லப்பா. அந்தம்மா நடவடிக்கை ஒண்ணும் சரியில்லையாம். கூட வேலைப்பாக்குற ஆள் கூட ஒரு இதுவாம்,' விருப்பமே இல்லாமல் சொல்வது போல் சொல்லிவிட்டு,சதாவைப் பார்க்க,கண்களின் பாஷை புரிந்த சந்தோஷத்தில், சதா சொன்னார்.

‘நான் கூட கேள்விப்பட்டேன்பா. நமக்கெதுக்கு அடுத்தவங்க வம்புன்னுதான் இதுநாள் வரை பேசாத விட்டுட்டேன். ஸ்கூல்ல கூட அவ பேரு நாறிக் கெடக்கு'.

அங்கிருந்த அடிப்பொடிகள் வெகு கவனமாய் கேட்டுக் கொண்டிருந்தன. காற்று காலில் சக்கரத்தையும்,முதுகில் இறக்கையையும் கட்டிக் கொண்டு ‘விர்'ரென்றது.

அன்புக்கரசி ராஜ்குமார்,  தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியை.  'மீண்டும் வா' எனும் இவரது நாவல் பிரசுரம் ஆகி உள்ளது.  சிறுகதைகள் மற்றும் குறுங்கதைகள் பல பத்திரிகைகளில் வெளி வந்திருக்கின்றன. இவரது சிறுகதைகள் பரிசுகளும் பெற்றுள்ளன.

ஜனவரி, 2023.