சிறுகதைகள்

சாப்பாடு

ராம் ஸ்ரீதர்

என் கவனம்  முழுவதுமே உப்புமா  கிண்டுவதிலிருந்தாலும் மனம் முழுவதும் என் கணவர்  எப்போதும் போல கோபத்தில் சொல்லி விட்டுப்போன வார்த்தைகள்தான்  சுழன்று கொண்டிருந்தன.

“40 வருடத்திற்கு முன்னால் நான் செய்த  பெரிய தப்பு, என் அத்தை பேச்சைக் கேட்டு உன்னைக் கல்யாணம் செய்து கொண்டது.  என் அப்பா எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. இப்போது தினமும் அதை உணர்கிறேன்.  இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த சாப்பாட்டுக் கண்றாவியைச் சகித்துக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை!''

“ஒன்று செய்யுங்கள்.  சாப்பாட்டில் கலந்து சாப்பிடுவதுபோல்  ஏதாவது விஷம் இருந்தால் வாங்கிக் கொடுங்கள்.  தின்றுவிட்டு ஒழிந்து விடுகிறேன். உங்கள் நெடுநாளைய  பிரச்னையும் தீர்ந்துவிடும்''

“ஏன்,  நீ செத்து ஒழிந்து  அந்தப் பழி என்மேல்  விழ வேண்டுமா? சாவதற்கு  வேறு பல சுலபமான வழிகள் இருக்கின்றனவே''

அவ்வளவுதான்.  செருப்பை மாட்டிக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.  எனக்கு இப்போது வயது 58. அவருக்கு 65 நடக்கிறது.  இந்த வயதிலும் இப்படி தினமும் சுடுசொல் கேட்காவிட்டால்  அன்று இரவு தூக்கம் வராது என்பது போன்ற கேவலமான நிலைமை என்னுடையது.

மிகச்சிறிய வயதிலேயே  எங்களுடைய திருமணம். முன்னோர் செய்த பாவமோ,  எங்கள் இருவரில் ஒருவர் செய்த பாவமோ... என்னவென்று தெரியாத  காரணம். எங்களுக்கு குழந்தைகள் இல்லை.

எல்.ஐ.சி யில்  வேலை பார்க்கும் வரை  தினமும் காலை ஒரு முறை, பிறகு இரவு ஒரு முறை என்றுதான்  என்னைத் திட்ட முடிந்தது. அவருடைய பதவி ஓய்வுக்குப் பிறகு,  நிறைய நேரம் கிடைப்பதால், நிறைய என்னை திட்ட முடிகிறது.

பணத்திற்கு என்றுமே பஞ்சமில்லை. சொந்த வீடு, அவருடைய பென்ஷன், என்னுடைய சேமிப்பு, என் அப்பா எனக்கும், என் சகோதரி வேணிக்கும் எங்களுடைய ஊரான கோமலில் விட்டுச் சென்ற நிலத்திலிருந்து வரும் வருமானம்.....எல்லாமே இருக்கிறது.....குழந்தையின் சிரிப்பு, அழுகை....மனதில் நிம்மதி தவிர...

எனக்கு காரணம் தெரியவில்லை.  என்னுடைய சகோதரி வேணியின் குழந்தைகளோ,  அவருடைய சகோதரி அம்சாவின் குழந்தைகளோ எப்போது வந்தாலும், நான் சமைப்பதை / நான் செய்பவற்றை எல்லாம் விரும்பித் தான் சாப்பிடுவார்கள்.

‘‘ இதுபோல மிளகு ரசம் சாப்பிட்டதே இல்லை''  என்று நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டு, வேணியின் மகன் பிரபு இரண்டு மூன்று முறை டம்ளரில் ஊற்றிக் கொண்டு குடிப்பான்.

‘‘ உங்கள் உருளைக்கிழங்கு  ரோஸ்ட்டுக்கு என் மகள் செல்வி அடிமை.  அப்படி என்னதான் செய்கிறீர்களோ?'' இது அம்சா அடிக்கடி என்னை கேட்கும் கேள்வி.

‘‘ போன பொங்கலுக்கு,  ஒரு மாதிரியாக மசால் வடை  செய்தீர்களே பெரியம்மா நினைவிருக்கிறதா?  அதுமாதிரி இன்னொரு முறை செய்ய முடியுமா?'' இது  பிரபுவின் கேள்வி.

 நினைவுகள்... நினைவுகள்...

‘‘சாப்பாட்டிற்கு என்று ஏதாவது ஆஸ்கார் விருது இருந்தால்  அது பெரியம்மாவுக்கு தான்'' என்று சொல்லும் பிரபுவை பார்த்து என்னால் புன்னகைக்க மட்டுமே   முடியும்.

40 வருடங்களில் ஒருமுறைகூட  என்னுடைய சமையலைக் குறை சொல்லாமல்  அவர் சாப்பிட்டதே இல்லை. அதுமட்டுமல்லாமல்,  குழந்தைகள் இல்லாத குறையும் என்னால்தான் என்ற பழியும்  என் மீது அடிக்கடி விழும்.

‘‘என் அப்பா சொன்ன மாதிரி,  அகிலாவைத் திருமணம் செய்து கொண்டிருந்தால்,  இப்போது அவளுக்கு இருப்பது போல எனக்கும் வீடு நிறைய மூன்று செல்வங்களும்,  பேரக்குழந்தைகளும் இருந்திருக்கும். எல்லாம் விதி. எதுவும் நடக்கவில்லை. உன்னைப்போன்ற  ஒரு உதவாக்கரையை என் தலையில் கட்டிவிட்டு, என் அத்தை போய்ச் சேர்ந்து விட்டாள்'' மடைதிறந்த வெள்ளம் போல,  எழுத்து மாறாமல், குற்றச்சாட்டு மழை பொழியும். எனக்கு இது சகஜமாகிவிட்டது.

திருமணம் நடந்து,  மூன்று, நான்கு ஆண்டுகள் கழிந்த பின்,  பொங்கல், தீபாவளி என்று எதற்கும் அவர் புதுத்துணி எடுத்ததில்லை.  ஒவ்வொரு வருடமும் என் சகோதரி வேணி வீட்டில் இருந்தோ, அல்லது அவர் சகோதரி அம்சா வீட்டில்  இருந்தோ தான் புதுத் துணிகள் வரும்.

 பிரபு சம்பாதிக்க ஆரம்பித்த வருடம்,  எங்கள் திருமண நாளன்று புது துணிகளோடு  வீட்டிற்கு வந்தபோது ஆரம்பித்தது பூகம்பம். ‘‘நீ வேலை செய்கிறாய்,  சம்பாதிக்கிறாய். உன்னைப் பெற்றவர்களுக்கு துணி வாங்கிக் கொடுத்தால்  அது புண்ணியம். எங்களுக்கு எதற்கு ?''

கேள்வி கேட்டவரை  அதிசயமாக பார்த்துவிட்டு, ‘‘ என்ன பெரியப்பா,  நினைவில்லையா? இன்று உங்கள் திருமண நாள்!'' என்று பிரபு சிரித்தபோது,

‘‘அது ஒன்றுதான் குறைச்சல்.  இந்தக் கருமத்தை நான் மறக்க வேண்டும் என்று ஒரு வருடம் கூட அதைக் கொண்டாடுவது இல்லை.  உனக்கு விஷயம் தெரியாது என்று நினைக்கிறேன். இப்போது அந்தத் துணி எதற்கு?''

பிரபுவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ‘‘ஆசையுடன் வாங்கி வந்துவிட்டேன்.  உங்கள் இஷ்டம்.'' வீட்டிற்கு வந்துவிட்டு ஒரு காபி கூட குடிக்காமல் சென்றுவிட்டான்.

அந்த துணிகள்,  அந்த வருட தீபாவளிக்கு  உபயோகமாயிற்று.

தொலைபேசி மணி அடிக்கும் சத்தம் கேட்டு என் கவனம் கலைந்தது.

‘ஹலோ....‘

நான் மேற்கொண்டு எதுவும் கேட்பதற்கு முன் ஒரு ஆண் குரல் குறுக்கிட்டது.

‘‘இன்று  லஞ்ச் சாப்பிட எனக்கு ஒரு தாய் நூடுல்ஸ்,  கார்லிக்

 சிக்கன் கிரேவி, ஸ்வீட் அண்ட் சால்ட்  லஸ்ஸி... இது போதும். நான்கு நாட்களுக்கு முன்னால்  பெப்பர் சிக்கன் என்ற பெயரில் ஒரு கிரேவி கொடுத்தீர்கள்.  அதில் பெப்பர் தான் அதிகமிருந்தது. சிக்கன் மிகக் குறைவு.  350 ரூபாய் வாங்கும்போது அநியாயம் செய்யாதீர்கள்'' என்று படபடப்பாக  அந்தக் குரல் பேசிக் கொண்டே போனது.

‘‘நான் சொல்வதை...''  என்னை முழுவதும் பேச விடவில்லை.

‘‘இல்லை,  நான் அனாவசியமாக    பழி சொல்ல மாட்டேன். தினமும் வேறு யாரையும் எதிர்பார்க்காமல்  உங்களிடமே ஆர்டர் சொல்கிறேனே, அதைப் பாராட்டுங்கள். பசியோடு இருக்கிறேன்.  உடனே அனுப்புங்கள்'' முடிக்கும் முன் நான் குறுக்கிட்டேன்.

‘நீங்கள் யாரோ என்று  நினைத்துக்கொண்டு...'' மறுபடியும் அந்தக் குரல் குறுக்கிட்டது.

‘‘அதே கார்த்திக் தான்.  கிட்டத்தட்ட ஒரு வருடமாக உங்களிடம் தினமும் லஞ்ச் ஆர்டர் செய்து  சாப்பிடும் அதே கார்த்திக் தான்''

 நான் ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். பசி என்று இருப்பவன் சாப்பிட ஏதாவது கேட்கும்போது அதைத் தயார் செய்து கொடுப்பது தவறா?

 ‘சரி,  உங்கள் விலாசம்? ‘

‘‘ஹலோ,  இது என்ன புதிதாக கேட்கிறீர்கள்?  அதே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைதான்,  அதே சிட்டி சென்டர் தான், அதே இரண்டாவது  மாடி தான்'' நான் மேற்கொண்டு எதுவும் பேசும்முன்  தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

 சமைப்பதை தவிர,  வீட்டில் வேறு பெரியதாக எந்த வேலையும் இல்லாததால்,  சரசரவென்று அந்தத் தொலைபேசிக்குரல் கேட்டவற்றையெல்லாம்  அவசர அவசரமாகத் தயார் செய்துவிட்டேன். அழகாக பாக்கிங் செய்வதற்குத் தேவையான  பொருட்கள் வீட்டில் இருந்ததால் (பிரபு உபயம்), எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன்.

சிட்டி சென்டர்  என்ற பிரபலமான ஷாப்பிங் மாலை  அடைந்து, இரண்டாவது மாடி சென்றபோது  அங்கே இருந்த செக்யூரிட்டியிடம் கார்த்திக் பற்றி விசாரித்தேன்.  அவன் கார்த்திக்கை மேசை மேலிருந்த தொலைபேசி மூலம் அழைத்தான்.

 கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு  வெளியே வந்த கார்த்திக், என் சகோதரி மகன் பிரபு வயதில்தான்  இருப்பான்.

என்னைச் சந்தேகமாகப் பார்த்துவிட்டு, ‘‘என்ன வேண்டும்?''  என்றான்.

கையிலிருந்த பையை அவனிடம் கொடுத்துவிட்டு, ‘‘உங்கள் லஞ்ச் ஆர்டர்''  என்றேன் சிரிப்புடன்.

என்னுடைய  வயதான தோற்றமா,  அல்லது என் பேச்சா  எது என்று தெரியவில்லை. ‘‘இதுவரை  உங்களை பார்த்ததே இல்லையே? கேட்டரிங்  சர்வீசில். உங்களை மாதிரி பெரியவர்களை எல்லாம்  சேர்க்கிறார்களா என்ன?'' அவனுடைய சந்தேகமும் கேள்வியும்  நியாயமானது தான்.

தொலைபேசியில் வந்த    ராங்க் காலை பற்றிச் சொன்னேன்.

பெரிதாகச் சிரித்துவிட்டு, ‘‘அதற்காக,  இவ்வளவையும் தயார் செய்துகொண்டு நீங்கள் வரவேண்டுமா?  உங்களுக்கு நான் மிகப் பெரிய நன்றி சொல்கிறேன். இதற்கு எவ்வளவு பணம் தரவேண்டும்?''  என்றான்.

நான் பதிலுக்கு சிரித்துவிட்டு, ‘‘நீங்கள் சாப்பிடும் வரை இங்கே காத்திருக்கிறேன்.  சாப்பிட்டுவிட்டு பாத்திரங்களை திரும்பக் கொடுத்தால் போதும்'' என்றேன்.

கார்த்திக், நான் வயிற்றில் சுமந்து பெறாத மகனாக, எனக்குக் கிடைத்த கதை இதுதான்.

ஜனவரி, 2020.