‘கிளம்பிடாதே... நானும் வரேன் உன்கூட...” பாத்ரூமிலிருந்து அவள் கத்தினாள்.
இவனுக்கு அய்யோ என்றிருந்தது. பாத்ரூம் கதவைக் கலவரத்துடன் பார்த்து இவனும் கத்தினான்:
“இல்ல... நான்... எனக்கொரு மீட்டிங் இருக்கு... நான் உடனே போணும்...”
“எல்லாம் எனக்குத் தெரியும்.... நீ எங்கே போறேன்னு... இருன்னு சொல்றனில்ல”
பாத்ரூமிலிருந்து வெளியே வந்தவளைப் பார்த்தவன் கண்களை அகல விரித்தான். என்னதிது என்று அவன் வாயைத் திறக்கும் முன் “எப்டியிருக்கு?” என்றபடி அவன் முன் வந்து நின்றாள் - சிவப்பிலும் பச்சையிலும் கட்டங்கள் போட்ட பளீரென்று தெறிக்கும் அவனுடைய முழுக்கை சட்டையையும் முழங்காலில் சாயம்
வெளுத்த அவனுடைய கிரே கலர் ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸையும் போட்டுக்கொண்டு! சட்டைக் கையை இரண்டு மடிப்பும் ஜீன்ஸை மூன்று மடிப்புகளுக்கு மேலும் மடித்துவிட்டிருந்தாள். எப்போதும் சுடிதாரிலேயே பார்த்துப் பழகிவிட்டு, இந்த மாறுவேடத்தில் கொஞ்சம் மாடர்னாகத்தான் தெரிந்தாள். இப்போதுதான் அவனால் என்னடி இது என்று வாயைத் திறக்க முடிந்தது.
பீரோ கண்ணாடியின் முன்பு தலை வாரியபடி “நீ இப்ப எங்கே போறியோ அங்க நானும் வருவேன்.” என்றவள் அவனைத் திரும்பிப் பார்த்து, “இன்னிக்கு ஞாயித்துக் கிழமை. இன்னிக்கும் மோட்டு வளையைப் பாத்து உக்காந்துட்டிருக்க முடியாது. எத்தனை நாளாச்சுடா என்னை வெளிய கூப்டுப் போயி...”
“சாயந்தரமா ரெண்டு பேரும் வெளிய போலாம்... ப்ராமிஸா சொல்றேன்.”
லூஸ்ஹேரில் நடுவே கிளிப்பை சொருகி பின்னங்கூந்தலை சிலுப்பியபடி அவன் முன் வந்து இடுப்பில் கைவைத்து நின்றாள்: “இந்த சத்திய மெல்லாம் நிறைய பாத்தாச்சு. இன்னிக்கு விட முடியாது.”
”இல்ல. வாசுதேவன் அவசரமா ஒரு விசயம் டிஸ்கஸ் பண்ணனும்னான். அதான். இப்ப 11 மணிக்கு செல்வபுரம் வந்துருவான்.”
”வாசுதேவன் தானே... வரட்டும்... நானும் உங்ககூட அந்த முக்க்க்க்கியமான டிஸ்ஸ்ஸ்ஸ்கசன்ல சேந்துக்கறேன்.” என்றபடி வெடுக்கென்று அவனுடைய பைக் சாவியையும் ஹெல்மெட்டையும் டேபிளில் இருந்து எடுத்துக்கொண்டு ஓடிப்போய் வாசல் கதவுக்கு வெளியே நின்றுகொண்டாள்.
கல்யாணத்துக்கு முன்பே அவன் அவ்வப்போது குடிப்பான் என்பது அவளுக்குத் தெரியும். அவள் வீட்டில் மட்டுமல்ல, அவளுடைய சொந்தங்களின் வீடுகளிலும் குடி என்பது பெரும் பாவம்; குடிப்பவன் துஷ்டன். இருந்தாலும் கலைஞர்கள் என்றால் கொஞ்சம் இசகுபிசகாய்த்தான் இருப்பார்கள் என்பது அவளுக்கு தோழிகளால் அருளப்பட்ட ஞானம்.
கல்யாணத்துக்குப் பிறகு எப்போதாவது குடித்துவிட்டு வருவான். அவள் அருகில் வந்து முகர்ந்து பார்த்து முகத்தை எட்டுக் கோணலாக மடித்து அவனை ஒரு ஜந்துவைப் போல் பார்த்து மடித்த முகத்தை அவன் கைகளில் திணித்து படுக்கையறைக்குப் போய் முதுகைக் காட்டிப் படுத்துக் கொள்வாள்.
அடுத்த நாள் காலை அவன் எழுந்து குளித்து சுத்தமாகி வந்து கோணல்களை நீவி அயர்ன் செய்து க்ளோஸப் மவுத் வாஷ் முத்தம் ஒன்று அளித்து அவள் முகத்தை அதே இடத்தில் திரும்பப் பொருத்தியபிறகுதான் இறுக்கிக் கட்டிக்கொள்வாள்.
அந்த நாட்களில் ஒரு முறை அவளுக்கு ஒரு வாக்கு அளித்திருந்தான். ஒரு நாள் குடிக்கப் போகும்போது அவளையும் அழைத்துச் செல்வதாக. இன்றுதான் அந்தத் திருநாள் என்று முடிவு செய்துவிட்டாள் போல.
அவன் வாசலுக்குச் சென்று அவள் தோளில் கைவைத்தான். அவள் முகத்தைத் திருப்பி அவனை ஏறிட்டு புருவங்களை உயர்த்தி ‘என்ன’ என்றாள். ‘பணம் கம்மியாத்தான் இருக்கு... வாசுவும் வருவான்... அதனால லோக்கல் பாருக்குத் தான் போவோம். அங்க எல்லாம் நீ வந்தா நல்லா இருக்காது” என்று இழுத்து சொன்னவன், பின் வேகமெடுத்து, “அடுத்த வாரம் ஒரு ஸ்டார் ஹோட்டல் போறோம். அங்க கூப்டு போறேன்.” என்றான்.
அவள் எதுவும் பேசாமல், ஜீன்ஸின் பின் பாக்கெட்டிலிருந்து சாவிக்கொத்தை எடுத்து, வீட்டுக் கதவை இழுத்துச் சாத்திப் பூட்டிவிட்டு திரும்பி நின்று சொன்னாள்: “ராமன், சீதை, அயோத்தி! வேறெவர் யூ கோ ஐ’ல் பி தேர்... பேசாம வா”
படிகளில் திரும்பி இறங்குகையில் அவனுக்குத் தோன்றிவிட்டது: இன்று சரியாக மாட்டிக்கொண்டோம். வேறு வழியில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கமாக போகும் நகரத்து பார்களுக்குப் போகாமல் மலைக்கோவில் சாலையில் 8 கிலோமீட்டரும் 500மீட்டரும் போய் வலதுபுறம் இன்னும் 500 மீட்டர் போனால் இருக்கிற அரசமர டாஸ்மாக்குக்குப் போவது அவர்களின் வழக்கம். அந்த டாஸ்மாக் பாரின் ஓனர் அவனுக்குத் தெரிந்த ஒரு பெரிய புள்ளி. மாபெரும் வட்டமாக இல்லாமல் சின்ன வட்டத்தில் ஒரு பெரிய புள்ளி. அவர் அங்கே இருக்க மாட்டார். முதல் முறை அவன் போனபோது அவர் இருந்தார். முதலாளிக்குத் தெரிந்தவன் என்ற மரியாதையுடன் துவங்கிய தொழிலாளிகளுடனான அவன் உறவு, மாமன்-மச்சான் அண்ணன் தம்பி பங்காளி வரைக்கும் வந்து சேர்ந்திருந்தது. அவனும் வாசுவும் மட்டுமே அங்கு போவார்கள். அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும். அவர்களுக்காக ஒரு டேபிளும் நாற்காலிகளும் ஒரு ஓரத்தில் பிரத்யேகமாக போட்டு வைத்துவிடுவார்கள். மற்ற நாட்களில் மற்ற நண்பர்களுடன் நகரத்திலிருக்கும் கசகச கண்றாவி பார்களிலேயே ஓர் ஓரத்தில் உட்கார்ந்துவிடுவார்கள்.
அவள் ஹெல்மெட்டையும் சாவியையும் அவன் கையில் கொடுத்துவிட்டு கேட்டைத் திறந்தாள். ஹெல்மெட்டைப் போட்டுக்கொண்டு பைக்கைக் கிளப்பினான். எப்போதும் ஒரு பக்கமாக அமர்பவள் இன்று ஸ்டைலாக இரண்டு பக்கமும் கால்களைப் போட்டுக்கொண்டு அவனை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். ஹெல்மெட்டை ஒட்டி முகத்தை வைத்துக் கொண்டு, “இந்த ஹெல்மெட் ஒரு தொல்லைடா... காதைக் கடிக்க முடியல...” அவனுக்கும் முழுக்க நனைந்துவிட்டோம் என்று தெரிந்துவிட்டதால் உற்சாகமாகவே வண்டியை ஓட்டினான். அவள் ஏதோ பாடலை முணுமுணுத்தபடியே வந்தாள். உற்றுக் கேட்டும் சரியாக விளங்கவில்லை. இறுதியாக ‘லாயி லாயிலாயி’ வந்தபோதுதான் தெரிந்தது அவனுக்கு. “நீ யின்றி நானும் இல்லை... என் காதல் பொய்யும் இல்லை...” அவள் எப்போதும் அப்படித்தான். ஆண் குரல் பாடல்கள்தான் பிடிக்கும். அதைத்தான் முணுமுணுத்துக் கொண்டிருப்பாள். இப்போது பாடலை நிறுத்தி விட்டு வசனத்துக்கு தாவிவிட்டாள்: “ஆமா, வாசு வருவான்னு சொன்னே?” “வருவான்... நீ இருக்கிறது தெரிஞ்சா வரமாட்டான். நானே அவனுக்காகத் தான் இன்னிக்கு வந்தேன்.. ஏதோ பெர்சனலா டிஸ்கஸ் பண்ணணும்னான்” அவன் சத்தமாகக் கத்திச் சொன்னான். “கேக்குது... என்ன பெரிய பெர்சனல் அவனுக்கு? அண்ணி அண்ணின்னு கூப்டறான்... எங்கிட்ட சொல்ல மாட்டானா?” என்றவள், அவன் மலைக்கோவில் சாலையில் வண்டியைத் திருப்பியதும் “ஹேய்... எங்கப்பா போற?” என்றாள். “சாமி கும்பிட...ஹஹஹா..” என்று உரக்கச் சிரித்தான். “ஒத விழும்டா... கீழ குதிச்சிடுவேன்...” என்றாள். “புருசன் சாமி கும்பிடப் போலாம்னு சொன்னா... வேண்டா டாஸ்மாக்குக்குப் போலாம்னு பொண்டாட்டி சொல்றா... இந்த நாடு உருப்படுமா?” அவள் அவனுடைய முதுகில் இரண்டு கைகளாலும் குத்தினாள். ”சரி... பேசாம... பாடாம வா... நீ கோவிலுக்குப் போற நாள் இல்லன்னு எனக்குத் தெரியாதா?” என்றான்.
அரசமரத்துக்குக் கீழே வண்டியை நிறுத்தி இறங்கியதும் அவள் கலைந்திருந்த முடியை பின்னால் ஒதுக்கிவிட்டவாறு கேட்டாள்: “இவ்ளோ தூரம் வரணுமா? ரெகுலரா இவ்ளோ தூரம் வந்து குடிப்பியா? அடப்பாவி... வண்டிக்கு பெட்ரோல் செலவு என்னாகறது?” என்றவள் நிறுத்தி, அவன் தொந்தியைக் குத்தி “வயித்துக்கு எவ்ளோ பெட்ரோல் போடுவ?” என்றாள். அவன் ஏதும் பேசாமல் நடக்கத் துவங்கினான். அவள் ஓடிவந்து அவனுடன் ஒட்டி நடந்தாள்.
கடைக்குள் அரைச்சுவர் சாக்னா தடுப்புக்குள் நின்றிருந்த மருதுராஜாவும் ராஜாமணியும் திடுக்கிட்டுப் போய் இவர்களையே பார்த்தார்கள். வாங்ணே என்று வழக்கமான வரவேற்பை அளிக்கலாமா என்ற சந்தேகத்துடன் மணி மாமாவைப் பார்த்தார்கள். கறுப்பேறிப் போயிருந்த சீனச் சட்டியில் புகை கிளப்பிக் கொண்டிருந்த மணி மாமா இவர்களைப் பார்த்து இரண்டுங்கெட்டதாக ஒரு அசட்டுப் புன்னகை புரிந்தார். செமி-கிராமத்துக் கடை என்பதால், முற்பகலில் அவசர அவசரமாக வந்து கட்டிங் அடித்து விட்டு, மத்தியானம் வயிறு முட்ட, கறி அடித்துவிட்டு, இரவின் குவார்ட்டர்களைக் கனாக் கண்டு தூக்கம் போடலாம் என்று ஒரு டேபிளைச் சுற்றி அமர்ந்து சத்தமாகப் பேசிக் கொண்டிருந்த நான்கைந்து முண்டாசுப் பெருசுகள் மட்டும் இவர்களைப் பார்த்து ஒரு நிமிடம் அமைதியாகி ஒரு பெருமூச்சை விட்டுத் திரும்பிக்கொண்டார்கள். ஓரிருவரை அவ்வப்போது அவன் பார்த்திருக்கிறன். அவர்களைக் கடக்கும்போது ‘கலி’ என்ற ஏதோ வார்த்தை கேட்டதுபோல் தோன்றியது அவனுக்கு. கொஞ்ச தூரத்தில் ஒரு கல்லூரி இருக்கிறது. மாணவ மணிகள் எல்லாம் நேற்றைய சனி நீராடுதலில் இருந்து எழுந்து ஞாயிறு நீராட எழுந்து வருவதற்கு எப்படியும் மதியம் ஆகிவிடும்.
அவள் மூக்கை விரல்களால் மக்கள் திலகம் பாணியில் ஸ்டைலாக உரசியபடி, “ஒரே நாத்தம்..” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும்படி. அவன் அவளுடைய தோளில் கைபோட்டு, -முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வலுண்கண் வேய்த்தோள் உனக்கு- என்று வள்ளுவனை உருப்போட்டபடி கடைசி மூலையில் இருந்த டேபிளுக்குக் கூட்டிச் சென்று பிளாஸ்டிக் நாற்காலியில் படிந்திருந்த வேப்ப இலைகளைத் தட்டிவிட்டு அவளை உட்காரச் சொன்னான். சுற்றுமுற்றும் பார்த்து இப்போது மேலே பார்த்து பிறகு நாற்காலியின் கைகளை மெல்லத் தூக்கி ஒரு உதறு உதறிவிட்டு உட்கார்ந்தாள். இரு வரேன் என்று கைகாட்டிவிட்டு சால்னா தடுப்பை நோக்கிச்
சென்றான் அவன். அவள் மீண்டும் மேலே பார்த்தாள். மிக உயரத்தில் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் ஓட்டைகளுக்கு நடுவே வேப்ப மரம் தெரிந்தது. அவன் தடுப்புக்குள் நின்றிருந்தவர்களிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். சமையல் செய்து கொண்டிருந்த வயசானவர் அவ்வப்போது அவளைப் பார்த்து பின்னர் அவனைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தார். அவளைப் பார்த்து முழித்துக் கொண்டிருந்த பையன்கள் இப்போது புன்னகைத்தார்கள்.
திடீரென்று ‘ஹோ ஹோ ஹோ’ என்ற ஒரு கர்ண கடூர வெடிச்சிரிப்போசை கேட்டு திடுக்கிட்டுப் போய் இடது பக்கம் திரும்பிப் பார்த்தாள். பெரிசு கும்பலில் உருமாலை கட்டிய பெரிசு ஒன்று “அதத்தேனொ நானுஞ் சொன்னன் தங்கராசு... வளுசுப் பசங்கன்னா அப்பிடிதேனொ...” என்று சொல்லி இன்னும் சிரித்தபடி அவளைப் பார்த்தது.
அவள் சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவன் அவளுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான். இருவருக்கும் அங்கிருந்து பார்க்கும்போது கடையின் வாசல் கதவு வரை தெரிந்தது. அவள் அவனை ஒரு நிமிடம் வரை பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தான். “யாருன்னு கேட்டாங்களா?” என்றாள். ”ம்ம்ம்...” “என்ன சொன்னே?” “நீயே சொல்லு...” “நீயே சொல்லு...” “என் வைஃப் தான். அவளும் கதை கவித எல்லாம் எழுதுவா... டாஸ்மாக் பத்தி ஒரு கத எழுதணும்னு சொன்னா... கூப்ப்டு வந்தேன்னு சொன்னேன்...” அவள் சிரித்தாள். “உனக்கு பொய் சொல்லவா கத்துத் தரணும்?” என்றவள் “சரி... சீக்கிரம்... என்ன குடிக்கப் போறே?” என்றாள். “அதெல்லாம் பசங்க கொண்டு வந்திருவாங்க...” என்றான்.
மருதுராஜா வெளியிலிருந்து வெகுவெகுவென்று வந்து அவன் முன் நின்று ஆஃப் பாட்டிலையும் தண்ணீர் குப்பியையும் பிளாஸ்டிக் டம்ளரையும் வைத்தான். பின் தயக்கத்துடன் அவளைப் பார்த்தான். அவள் அவனை ஏறிட்டு, “பேர் என்னப்பா?” என்றாள். ”மருது ராசுங்க்கா” “என்ன வயசாச்சு தம்பி உனக்கு?” “18ங்க்கா” அவள் மீண்டும் ஏதோ கேட்க வாயெடுக்கும் முன் மணி மாமா அவனைக் கூப்பிட்டு “இந்த சாலடை எடுத்துட்டுப் போய்க் குடுடா” என்றார். அவன் நகர்ந்தான்.
கட்டியிருந்த லுங்கியின் மடிப்பை கீழே விட்டபடி மேசைக்கு அருகில் கொஞ்சம் தள்ளி வந்து நின்ற மணி மாமா அவளைப் பார்த்துப் புன்னகைத்தார். “நீங்க ஏதாவது சாப்டறீங்களாம்மா?” அவள் கேள்வியுடன் அவனைப் பார்த்தாள். “இல்லீங்மா... கூல் ட்ரிங்ஸ் எதாவது... இல்ல... காப்பி சாப்டறீங்களா... நா அப்பப்ப காப்பிதான் போட்டுக் குடிப்பேன்... போட்டுக் குடுக்குட்டுங்களா... கடுங்காப்பி தான்... நல்லா இருக்கும்... குடிச்சுப் பாருங்க” என்றார். அவள் புன்னகைத்துத் தலையாட்டினாள். அதற்குள் அவன் பாட்டிலைத் திறந்து ஒரு லார்ஜ் ஊற்றி தண்ணீர் கலந்து வைத்திருந்தான்.
“டாஸ்மாக் கடையில உக்காந்து காப்பி சாப்டாலும் ரம்னுதான் நினைப்பாங்க” என்றான் அவன். அவள் அவனை முறைத்துப் பார்த்தவள் மீண்டும் உற்சா கத்துக்குத் திரும்பி “ம்ம்ம்... குடிடா... வேடிக் கை பாத்துட்டிருக்கே?” என்றாள். அவன் டம்ளரை எடுத்து வாய்க்கு அருகில் வைத்தபோது கையைப் பிடித்துக்கொண்டாள். “சியர்ஸ் எல்லாம் சொல்ல மாட்டியா...?” அவன் பெருவிரலை உயர்த்திக் காட்டினான். அவள் கைவிரல்களை மடக்கி அவன் கைவிரல்களில் தட்டி ‘சியே...ர்ஸ்” என்றாள். அவன் ஒரு மிடறு உறிஞ்சிக் கீழே வைத்தான். ஒரு பைனாப்பிள் துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான். அவள் முழங்கைகளை மேசையில் ஊன்றி அவன் முகத்துக்கு அருகே முகத்தைக் கொண்டு வந்து அவள் கண்களையே உற்றுப்பார்த்தாள். “ஏதாவது ஆகுதாடா...?” என்றாள். “ஏய்... தள்ளுடீ... ஒரு லார்ஜ் அடிச்சா என்ன ஆகும்?” என்று அவள் முகத்தை விலக்கினான். அவள் உதட்டைச் சுழித்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தாள். ஒரு பைனாப்பிள் துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டவளின் முகம் பலவித சுழிப்புகளும் மடிப்புகளும் சுருக்கங்களுக்கும் ஆட்பட்டு கண்களில் ஒரு புளிப்பு சுவை வழிந்தது. மேசைக்குக் கீழே மணலில் தூ என்று துப்பினாள்... அதே அஷ்டவக்கிர முகத்துடன் அவனைப் பார்த்து “என்னடா இது?” என்றவள் அவன் அடுத்த சிப் உறிஞ்சி இன்னொரு பைனாப்பிளை எடுத்து வாயில் போட்டதும் திடுக்கிட்டு கண்களை அகல விரித்தாள். “எப்படிடா இத சாப்டுற? பறிச்சு வருஷக்கணக்கா ஆயிருக்கும் போலிருக்கே... அப்படியொரு ஸ்மெல் அடிக்குது” “அப்படியா... அவிச்ச கடலை வேணா ஒரு பிளேட் சொல்லட்டுமா?” அவள் கையெடுத்துக் கும்பிட்டு “சாமீ... ஆளை விடுப்பா” என்றாள். மருது ஒரு கண்ணாடி டம்ளரில் கடுங் காப்பி கொண்டு வந்து அவளுக்கு முன் தயங்கிக்கொண்டே ”டம்ளர் நல்லா களுவிருக்கங்கா...” என்றபடி வைத்தான். அசல் ஓல்ட் மாங்க் ரம் மாதிரியே இருந்தது. இங்கே எல்லாமே அசல் மாதிரிதானே என்று நினைத்து சிரித்துக்கொண்டான். அவள் மருதுவைப் பார்த்து “உன்னைப் பாத்தா, 18 வயசு மாதிரி தெரியலையே” “அவனுக்கு 15 வயசுதான் முடியப்போகுது. யாரு கேட்டாலும் அப்படித்தான் சொல்வான்.” “நீ இதே ஊர்தானா தம்பீ?” என்றாள். “இல்லிங்க்கா... தேவகோட்டை தெரியுங்க்ளா? காளையார் கோவில்...” அவள் தோளைக் குலுக்கிக் கொண்டாள். “இந்த ஊர்ல பார்லயும் ஹோட்டல்லயும் வேலை செய்யுற எல்லாப் பசங்களும் தேவகோட்டை பக்கம்தான். அது பின்னால ஒரு பெரிய வரலாறே இருக்கு.” என்றான் அவன். வேப்ப மரத்திலிருந்து ஒரு காகம் கத்துவதைக் கேட்டு மேலே பார்த்தபடியே “உன் வரலாறு ஜியாக்ரஃபி எல்லாம் நீயே வச்சுக்க... என் பிரச்னையே பெரிய பிரச்னையா இருக்கு” என்றாள்.
திடீரென்று “மணி மாமா” என்று ஒரு அலறல் கேட்டு திடுக்கிட்டு வாசல் பக்கம் பார்த்தாள். அவன் ஒரு புன்னகையுடன் அங்கே பார்த்தான். கத்தியபடி வந்தவன் அவளைப் பார்த்தவுடன் பேயறந்தது போல் நின்றுவிட்டான். அவளும் இப்போது புன்னகைத்து தலை சாய்த்து அவனைப் பார்த்தாள். “ஏன் மாப்ளே நின்னுட்டே? நம்ம ரைட்டரு மேடமும் வந்திருக்காங்க... அட வா உள்ள...” என்றார் மணி மாமா.
அவன் அவர்களின் அருகே வந்து ஆச்சரியமாய் அவளைப் பார்த்தான். “உக்காரு வாசு” என்றாள் அவள். “அண்ணீ...” என்றவன், நாற்காலியை எடுத்துப் போட்டு உட்கார்ந்து அவனைப் பார்த்து கண்களாலேயே “என்னடா?” என்றான். “குடிக் கறதப் பார்த்தே ஆகணும்னா... அதான் கூப்டு வந்தேன்...” “ஏண்டா... வீட்டுக்கு வாங்கிட்டுப் போயிருக்கலாம்ல? இல்லைன்னா ஒரு ரெஸ்டாரண்ட் பாருக்காவது போயிருக்கலாமில்ல...” என்றவன் அவளைத் திரும்பிப் பார்த்து, “என்ன அண்ணீ இது, நீங்கல்லாம் இங்க வரலாமா? அவனுக்குத்தான் அறிவில்லைன்னா நீங்களாவது...” “நாந்தான் டாஸ்மாக்குக்கு வந்தே ஆகணும்னு சொன்னேன்... ஏன் நாங்கள்லாம் வரக்கூடாதா? நாங்க குடிக்கக் கூடாதா...? இதப் பாத்தியா... ரம்...!” என்றாள். வாசு டம்ளரையே விறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். பின் கூர்ந்து பார்த்து டம்ளரைத் தொட்டான். புன்னகைத்தான். வாசுவின் முகத்தில் ஒரு நிம்மதி படர்ந்தது. பின் திடீரென்று யோசித்தவனாக, “டேய்... காலேஜ் பசங்கள்லாம் வர எடம்டா... அவனுக வந்தா கழுவி ஊத்த ஆரம்பிச்சிருவாங்களே...” “வரட்டும்... நானும் பாக்கறேன்...” என்றாள். ”சரி... அப்ப நான் கிளம்பட்டா? நீங்க ரெண்டு பேரும் எஞ்சாய் பண்ணுங்க” என்றான் வாசு. “இருடா...” என்றான் அவன். “அண்ணிக்கு முன்னாடி உக்காந்து சரக்கு, தம்மெல்லாம் அடிக்கற அளவுக்கு கல்நெஞ்சக் காரனில்லடா நான்...” என்று வசனம் பேசினான் வாசு. அவள் வாசுவைப் பார்த்து “நீயும் இரு வாசு. உங்க அண்ணன் வேஸ்ட்... குடிச்சிட்டு உம்மணாமூஞ்சியா உக்காந்திட்டிருக்கு... என்னமோ பெர்சனலா பேசணும்னு சொன்னியாம்... என்கிட்டயும் சொல்லக்கூடாதா...
சுனிதாகூட ஏதாவது பிரச்சினையா?” என்றாள் அவள்.
வாசு யோசனையில் மூழ்கினான். மருது ஒரு பிளாஸ்டிக் டம்ளரையும் ஒரு பிளேட் வெள்ளை சுண்டலையும் ஒரு பாண்டியன் ஊறுகாய் பாக்கெட்டையும் வாசுவின் முன் வைத்துவிட்டுச் சென்றான். வாசுவையும் அவளையும் பார்த்தவன், மனதுக்குள் சிரித்துக் கொண்டான்: வாசுவுக்குப் பித்த உடம்பு. ரெண்டு ரவுண்டிலேயே ஏறிவிடும். ஆனாலும் விட மாட்டான். ஏதோ பிரச்சினையை வேறு கொண்டு வந்திருக்கிறான். இன்னிக்கு சீன் தான்.
பெரிசுகள் கூட்டம் தங்கள் முற்பகல் கோட்டாவை முடித்துவிட்டு வெளியேறத் துவங்கியது. அவள் பக்கவாட்டில் திரும்பி அவர்களை கவனித்தாள். முன்னால் போய்க்கொண்டிருந்த பெரிசு திடீரென்று வாசலில் நின்று திரும்பி இவளைப் பார்த்து தலையைக் குனிந்து வணக்கம் சொல்லி, “வர்றன் தாயி...” என்றபடி திரும்பி நடந்தார். மற்ற பெரிசுகள் பெரும் சிரிப்புடன் பின்னால் சென்றார்கள். அவள் புன்னகைத்து, “நக்கல் பாத்தியா தாத்தாவுக்கு” என்று அவனைப் பார்த்தாள். வாசு புன்னகையுடன் டம்ளரில் சரக்கை ஊற்றி தண்ணீரையும் ஊற்றி சுட்டு விரலால் ஒரு துளி எடுத்து வெளியே உதறி “சியர்ஸ் அண்ணி” என்று சொல்லி ஒரே மிடறில் குடித்து கீழே வைத்து பாண்டியனின் மூலையில் ஒரு கடி கடித்து சுட்டு விரலில் தேய்த்து நாக்கில் தடவிக்கொண்டு “ஸ்ஸ்...” என்றான். அவள் வாசுவையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். வாயில் கைவைத்து “அடப் பாவீ...” என்றாள். “நானெல்லாம் இப்படித்தான் அண்ணி. ஒரே மொடக்குதான். இவனை மாதிரி சிப்பு சிப்பா ரெண்டு மணி நேரம் அடிச்சிட்டு... எவனால ஆகறது?” என்றவன் ஒரு விக்கு விக்கி அவளைப் பார்த்தான். இரண்டு சுண்டல் கடலைகளை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு அவளைத் தீவிரமாகப் பார்த்து “என்ன ஸொல்றீங்க அண்ணி... நான் ஸொல்றது கரெக்டுதான?” என்றான். முதல் ரவுண்டிலேயே ’ச’ ‘ஸ’ ஆகிவிட்டது. அடுத்த ரவுண்டில் ‘ஷ’ ஆகிவிடும் என்று அவனுக்குத் தெரியும். மவுனமாக தன் டம்ளரிலிருந்த மிச்சத்தை உறிஞ்சி கீழே வைத்தான்.
“அண்ணி... நீங்களும் இவனும் எவ்வளவு ஒத்துமையா இருக்கீங்க... பாத்தாலே எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா இந்தத் தம்பிக்கு?” என்றவன் ஒரு சிகரெட்டை வாயில் வைத்துப் பொருத்தியபடியே “சாரி அண்ணீ... அண்ணிக்கு முன்னால சிகரெட் அடிக்கறன்...” என்றவன், அவளையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு மீண்டும் பாட்டிலைத் திறந்தான். மீண்டும் வேகவேகமாக அதே செயல்முறை வேகவேகமாக நடந்தது. சரக்கு, தண்ணீர், பாண்டியன், கடி, சுட்டு விரல், நாக்கு! மீண்டும் “உஸ்ஸ்...” என்று அவளையே பார்த்தான். “எனக்கு வாச்சவ ஸெரியில்ல அண்ணீ...” என்றவன் அவள் முறைப்பதைப் பார்த்து அவனிடம் திரும்பினான்.
“நீ சொல்லுலியா மச்சான்... அண்ணிகிட்ட?” அவன் தலையாட்டினான். அவளிடம் திரும்பி, “அண்ணீ... ஆஃபீஸ்ல வேலை கொன்னெடுக்கறாங்க... அந்த டென்ஸன்ல ஒரு கோட்டர அடிச்சிட்டு வீட்டுக்குப் போனா இவ டார்ச்சர் தாங்க முடீல அண்ணீ...” என்றான். அவள் அமைதியாக அவனைப் பார்த்து, “நல்லா வாயில வருது எனக்கு... நீன்றதால அமைதியா பேசறன்... இதுதான் உன் பிரச்னையா... நாள் முழுக்க வெட்டியா உங்களை நெனச்சுட்டு விட்டத்தைப் பாத்துட்டு நாங்க உக்காந்திருப்போம்... வீட்டு வேலைகளையும் வருமானத்தையும் பாத்துட்டு இனி வர்ற குழந்தைகளுக்கு எப்படி நல்ல லைஃப தரதுன்னு டென்சன்ல நாங்க உக்காந்திருப்போம்... எங்களுக்கு இருக்கிற பிரஷருக்கு நாங்களும் குடிக்கலாமில்ல... வாசு... நீங்க எல்லாம் எஸ்கேபிஸ்டுக... பிரச்சினைகள்ளருந்து எஸ்கேப் ஆயிட்டே இருக்கிறது எப்படின்னு நல்லா கத்து வச்சிருக்கீங்க.... குவார்ட்டர் அடிச்சிட்டா நிம்மதியா தூக்கம் வந்துரும் உங்களுக்கு.... நீங்க எங்க கூடவே இருக்கிற மாதிரி மத்தவங்களுக்குத் தெரியும்... நீங்க வீட்டிலயே இருந்தும் நாங்க தனியாத்தான் இருக்கோம்... எல்லா விதத்திலயும்....” என்றவள் இவனை ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் வாசுவிடம் திரும்பி, “இதுதான் உன் பிரச்சினைன்னா அதைப் பேசவே வேண்டாம்... போலாம்...” என்றாள். இவன் அடுத்த ஸ்மாலை ஊற்றிக்கொண்டிருந்தபோது வெளியே நாலைந்து பைக்குகள் சீறிப் பாய்ந்து சடன் பிரேக் போட்டு நிறுத்திய கிறீச் ஒலி கேட்டது. ஆறேழு கல்லூரி மாணவர்கள் ஆரவாரத்துடன் உள்ளே நுழைந்தார்கள்.
மேசைகள் இழுபடும் ஓசை, நாற்காலிகள் இழுபடும் ஓசை, ஹெல்மெட்டைக் கழற்றி மேசையில் வைக்கும் ஓசை... மச்சி மச்சான் ஓசைகள்...
வாசு “இதுக்குத்தான் வேண்டாம்னு ஷொன்னேன்...” என்றான். அவன் எதுவும் பேசவில்லை. அவளோ மாணவர்களைப் பார்த்தவுடன் உற்சாகமாகி விட்டாள். குறுகுறுப்புடன் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். எல்லோரும் இவளைப் பார்த்து அமைதியானார்கள். தங்களுக்குள் தணிந்த குரலில் உரையாடத் துவங்கினார்கள். ஒருவன் அங்கிருந்து அவளைப் பார்த்து “மேம்” என்று அழைத்தான். அவள் அவனைப் பார்த்தாள். “ஆர் வி டிஸ்டர்பிங் யூ மேம்?” அவள் உற்சாகத்துடன், “நாட் அட் ஆல் கய்ஸ்... யூ கேரி ஆன்... எஞ்சாய் யுவர்
செல்வ்ஸ்” என்று கையாட்டினாள். “தாங்க் யூ மேம்” என்றார்கள் கோரசாய்.
இவன் தன் கடைசி சிப்பை குடித்துமுடித்துவிட்டு பிளாஸ்டிக் டம்ளரைக் கசக்கி மூலையில் இருந்த பக்கெட்டை நோக்கி வீசினான். “அவ்வளவுதானா?” என்றாள் அவள். தோளைக் குலுக்கிக் கொண்டான். ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டான். வாசுவை நோக்கி “நீ?” என்றாள் அவள். வாசு அமைதியாக “போதுங்க அண்ணி” என்றபடி தானும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டான்.
அவள் மாணவர்களை நோக்கி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவர்களுக்குள் உற்சாகமாகப் பேசியபடி தங்களின் பானங்களை அருந்திக்கொண்டிருந்தார்கள். அவள் குரலெடுத்து அழைத்தாள்... “ஹேய்...” அவர்கள் திரும்பினார்கள். இவனும் வாசுவும் குறுகுறுப்பாய்ப் பார்த்தார்கள். “என்ன படிச்சிட்டிருக்கீங்கப்பா?” என்றாள். அவர்கள் ஒவ்வொருவராய் சொல்ல, “சோ எஞ்சாயின் யுவர் ஸ்டடீஸ் வித் ட்ரிங்ஸ்” என்றாள் அவள். “நோ மேம்... திஸ் இஸ் ஜஸ்ட் ஃபார் ஃபன்... வீ ஆல் ஆர் டுவார்ட்ஸ் அ குட் கேரீர் அண்ட் ஃப்யூச்சர்” என்றான் விஸ்காம் மாணவன் ஒருவன். “தட்ஸ் க்ரேட்!” என்றாள் அவள்.
மருது ஒரு சிகரெட் அட்டையில் பில் கொண்டுவந்தான். அவள் பிடுங்கிக் கொண்டாள். “அடப்பாவீ... இந்த சுண்டல் முப்பது ரூபாயா... பைன் ஆப்பிள் ... மை காட்... அந்தக் காஞ்ச கருவாடு மாதிரி இருந்ததுக்கு முப்பத்தஞ்சு ரூபாயா... மொத்தம் நானூத்து இருபது ரூபா.... கொடுமைப்பா... டெய்லி இவ்வளவு செலவு பண்றீங்க... இல்ல?” என்ற அவர்களைப் பார்த்துக் கேட்டவள் தன் கைப்பையிலிருந்து ரூபாய் நோட்டை எடுத்து மருதுவிடம் கொடுத்தாள். “என்னோட ரம் பில்லில இல்ல... ஃப்ரீயா?” என்று அவனுடைய கன்னத்தைத் தட்டினாள். வாசு மணி மாமாவிடம் ஏதோ சைகை செய்தான். அவர்கள் எழுந்தார்கள்.
அவள் மாணவர்களின் அருகில் சென்று நின்று “ஓகே பா... வீ ஆர் லீவிங்” என்றபடி கை நீட்டினாள். ஒவ்வொருவரிடமும் கைகுலுக்கிக் கொண்டாள். “ஆல் த பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்” என்றாள். “தாங்க் யூ மேம்... சோ நைஸ் ஆஃப் யூ” என்றார்கள்.
வெளியே வந்ததும் வாசு “எதையும் மனசில வச்சிக்காதீங்க அண்ணி... ஸ்ஸாரி” என்றான். “பரவால்ல வாசு... சுனிதாவயும் அப்பப்ப நினச்சுக்கோ” என்றாள்.
அவன் வாசுவை பரிதாபமாய்ப் பார்த்து “கிளம்பட்டா?” என்றான். “சரிடா, நானும் கிளம்பறேன்” என்றவன் சைகையில் மொபைலில் பேசுவதாக தெரிவித்தான்.
பைக்கில் போகும்போது கொஞ்ச தூரம் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
சட்டென்று அவனுடைய இடுப்பைச் சுற்றி இறுக்கிப் பிடித்துக்கொண்டாள். ஹெல்மெட்டின் ஓரமாக முகத்தை வைத்து “சாரிடா... ஒரு சண்டேய வேஸ்ட் பண்ணிட்டனா?” என்றாள். அவன் இல்லை என்று தலையாட்டியபடி இடது கையால் அவன் வயிற்றின் மேலிருந்த அவளுடைய கையைத் தடவிக் கொடுத்தான். அவள் அவனுடைய கையை தன் வலது கையால் வருடியபடி, “போதுண்டா... நிறுத்திடுடா... ப்ளீஸ்” என்றாள்.அவளுடைய குரலில் கண்ணீரின் இடறலும் எதிர்காலம் பற்றிய கனவும் இருந்தது.
நவம்பர், 2015.