யுவராஜ் அந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்து இன்றோடு ஒரு மாதம் ஆகிறது. ஒருவருக்கொருவர் பட்டப்பெயரிட்டே அழைத்துக்கொண்ட அவ்வகுப்பில் பட்டப் பெயரில்லாத ஆளே கிடையாது. அவனுடன் புதிதாய் சேர்ந்த ஒன்றிரண்டு பையன்களும்கூட சேர்ந்த ஓரிரு வாரங்களிலேயே பட்டப்பெயர் வாங்கிவிட்டனர். ஒரே விதிவிலக்கு யுவராஜ்தான். யானைக்கு தும்பிக்கை மாதிரி.. நாய்க்கு வால் மாதிரி.. பெயருக்கு முன்னோ பின்னோ எந்தப் பட்டப்பெயரும் வாங்கிவிடக்கூடாது என்பதில் அப்பள்ளியில் சேர்ந்த நாள் முதலே உறுதியாய் இருந்தான். காரணம், முந்தைய பள்ளியில் அவன் வாங்கிய பட்டப் பெயரால் ஏற்பட்ட பெருத்த அவமானம்.
யுவராஜ் என்றவுடன் ஏதோ யுவராஜ் சிங் போல் ஆறு பந்தில் ஆறு சிக்ஸர் விளாசுவான் என்று நினைத்துவிடாதீர்கள். அப்பா வாங்கிக் கொடுத்த கிரிக்கெட் பேட்டில் ஆடிய முதல் மேட்ச்சில் அவன் அடித்த ரன்கள் . . . மன்னிக்கவும் ‘டக் அவுட்’. இரண்டாம் மேட்ச்சில் அவன் ரன்னர் கிரீசில் நின்று கொண்டிருக்கும் போதே ஸ்ட்ரைக் எடுத்த அனைத்து பேட்ஸ்மேன்களும் அவுட் ஆகிவிட அவன் மட்டும் நாட் அவுட்டாக வெளியேறினான். அன்று அவன் எடுத்திருந்த ரன்கள் . . . மீண்டும் மன்னிக்கவும் ‘டக் பட் நாட் அவுட்’. தமிழில் ‘வாத்து முட்டை ஆனால் உடையாத முட்டை’.
அன்றிலிருந்து ‘பேட்’ ராசியில்லை என அவன் தூக்கி எறியவில்லை. கிரிக்கெட்டே ராசியில்லை என தூக்கி எறிந்தான். அன்று முதல் யுவராஜ் என்ற பெயர் “டக் யுவராஜ்” ஆனது. பின்னாளில் அதுவே வெறும் “டக்” ஆகி “வாத்து” ஆகி கடைசியில் “வாத்து மடையனாகி” அவன் மானத்தை வாங்கியது.
ஆனாலும் அப்படி ஒரு பட்டப்பெயர் இருந்ததை புதுப்பள்ளியில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டதில் இருந்தது அவனது கெட்டிக்காரத்தனம்.
இப்படி வெற்றிகரமாய் அவன் தக்கவைத்துக்கொண்டிருந்த முப்பது நாள் சாதனைக்கு வேட்டு வைக்கும் சம்பவம் இன்று மாலை நிகழ்ந்தது. காரணம் ஜீசசும் பாஸ்போர்ட்டும். அவர்கள் அவ்வகுப்பின் பழைய மாணவர்கள். “பழைய” என்பது ‘பெயிலாகி பெயிலாகி அதே வகுப்பில் படிப்பவர்கள்’ என்பதின் கௌவரச் சுருக்கம்.
“ஜீசஸ்” என்பது இயற்பெயரல்ல. ‘அட்டென்டன்ஸ்’ எடுக்கும் ஆசிரியரைத் தவிர மற்ற அனைவரும் கூப்பிடும் பெயர். அவனுடைய வருகைப் பட்டியல் பெயர் ராபர்ட். ராபர்ட் வாழ்க்கையில் பார்க்காத விஷயம் “பாஸ்மார்க்”. எந்தப் பரிட்சையிலும் அவனுடைய ரிசல்ட் “ஃபெயில்”. இது அவனுக்கும் தெரியும். திருத்தப்போகும் ஆசிரியருக்கும் தெரியும். அப்புறமெப்படி ஆறாம் வகுப்பு வரை வந்தான் என்கிறீர்களா? அது தனி நாவல். எனவே நிறுத்திக் கொள்வோம். ஆனாலும் வகுப்பாசிரியர் அவன் பெயிலானதற்கு அப்பாவை கூட்டி வரசொல்லி அவமானப்படுத்திய போதுதான் அவன் வருத்தப்பட்டுச் சொன்னான்,
“பேசாம நான் ஜீசசா பொறந்திருக்கலாம்டா”
“ஏன்” என்றதற்கு “ஏன்னா Jesus Nevr Fails” என்றான் நண்பர்களிடம். அன்றிலிருந்து அவன் ஜீசசானான்.
‘பாஸ்போர்ட்’ டின் நிஜப்பெயர் ஆனந்த். அவன் முதன்முதலில் ஆறாம் வகுப்பு வந்தபோது... நிறுத்திப்படிக்க... அவன் முதன்முதலில் ஆறாம் வகுப்பு வந்தபோது ஜெரால்டு சார்தான் வகுப்பாசிரியர். அவர் வந்தார் என்றால் வகுப்பறையே மாணவர்களின் கழிப்பறை ஆகும் அளவுக்கு “டெரர்” ஆசிரியர். அவர் ஜெரால்டு அல்ல ‘எம’ரால்டு என்பார்கள் சீனியர் வகுப்பு பையன்கள்.
ஒரு விடுமுறை நாளில் பள்ளி அடையாள அட்டைக்கு ‘பாஸ்போர்ட்’ சைஸ் ஃபோட்டோ எடுக்க யுனிபார்மில் வரச்சொல்லி இருந்தார் அவர். ஆனந்த் யுனிபார்ம்
சட்டையும் ஜீன்ஸ் பேன்ட்டும் அணிந்து வந்திருந்தான். அவர் கண்ணில்பட்டதும் அழைத்தார். அலட்டிக் கொள்ளாமல் போனான்.
“என்னடா இது”
“எது சார்”
“யூனிபார்ம்லதானே வரச் சொன்னேன்”
“பாஸ்போர்ட் சைஸ் போட்டோதானே சார். ஜீன்ஸ் தெரியாது சார்”.
அடுத்த பத்து நிமிடங்களுக்கு என்ன நடந்ததென்று நிதானிப்பதற்குள் அவன் ஜீன்ஸ் பேன்ட் ஈரமாகி அவனாகவே கழற்றியிருந்தான். அதற்குப்பின் அவன் வீட்டில் எடுத்த போட்டோவுக்குக்கூட அவன் ஜீன்ஸ் அணிந்ததில்லை. அன்றிலிருந்து அவன் ஆனந்த் இல்லை, ‘பாஸ்போர்ட்’
இனி யுவராஜின் சாதனைக்கு வேட்டு வைத்த சம்பவத்துக்கு வருவோம். இன்று மாலை பள்ளி முடிந்து கிளம்பிய போதுதான் அது நிகழ்ந்தது.
ஜீசஸ் டி.வியில் பார்த்த படம் பற்றி ரொம்பவே அலட்டிக்கொண்டே சைக்கிள் ஸ்டாண்டுக்கு வந்தான். பாஸ்போர்ட்டும் அப்படத்தின் ஹீரோ பற்றி ஓவர் ‘பில்ட் அப்’ கொடுக்க அந்த படத்தை இதுவரை பார்த்திராத யுவராஜ் மட்டும் கடுப்பாகிக் கொண்டே நடந்தான்.
“டேய் அதுல அவன் மிலிட்டரிமேன்டா பெரிய பெரிய கன் எல்லாம் வச்சிருப்பான்” என்றான் ஜீசஸ் யுவராஜைப் பார்த்து.
“டேய் அவன்லாம் தீபாவளி துப்பாக்கிக்கே பயப்படறவன். அவங்கிட்ட போய் நீ மிலிட்டரி பத்தி பேசற. விடுடா” என்று யுவராஜை சீண்டினான் பாஸ்போர்ட்.
எங்கிருந்து எப்படி வந்த ரோஷமோ தெரியவில்லை. இதுவரை யாரிடமும் சொல்லாத ஒரு ரகசியத்தை திடீரென்று போட்டு உடைத்தான் யுவராஜ்
“எங்க தாத்தாவும் மிலிட்டரிதாண்டா” என்றான் வெண்கலக்குரலில். இரண்டு மூன்று முறை அது அங்கே எதிரொலித்தது.
பாஸ்போர்ட்டும் ஜீசசும் அடக்க முடியாமல் சிரித்தனர்.
“டேய் ப்ராமிசாடா” யுவராஜ்
“எந்த மிலிட்டரிடா”
“எங்க தாத்தா டெல்லில இருக்காரு”
“டெல்லில என்ன பண்றாரு”
“...ம்ம் வடசுடறாரு”
யுவராஜின் ஒவ்வொரு பதிலுக்கும் கேலி செய்தபடியே இருந்தனர் ஜீசசும் பாஸ்போர்ட்டும்.
கோபமாய் அவர்களை முறைத்துவிட்டு “எங்க தாத்தா கேப்டனா இருக்கார்” என்றான் யுவராஜ்.
“ஓ விஜயகாந்த்தான் உங்க தாத்தாவா. சொல்லவே இல்ல” பாஸ்போர்ட்.
யுவராஜிக்கு கோபம் தலைக்கேறி கண்கள் சிவந்தது.
“டேய் ரொம்ப பேசுனா எங்கப்பாக்கிட்டயே சொல்லி டுவேன்” என்றான்.
“தாத்தாக்கிட்ட சொல்லுடா அவர்தான் கன் வச்சிருப்பாரு எடுத்து சுட்டுடுவாரு” ஜீசஸ்.
“நீங்க சொன்னாலும் சொல்லலனாலும் எங்க தாத்தாக்கிட்ட கன் இருக்கு போங்கடா” என்று கோபத்தோடு அவர்களை விட்டு வெளியேறினான். கோபத்தில் டியூஷன் கூட செல்லாமல் வீட்டுக்கு வந்தவன்தான். கோபம் தீராமல் சோபாவை ஓங்கிக் குத்திக் கொண்டேயிருந்தான். சோபாவுக்கு வலிக்காது. கைக்கு வலிக்குமில்லையா. சற்று நேரத்தில் நிறுத்தி விட்டு சீருடை கூட கழட்டாமல் படுத்தான்.
மாடியிலிருந்து துணிகளை எடுத்துக் கொண்டு வந்த வேலைக்காரம்மா அவனைக் கண்டவுடன் “என்னடா கண்ணு உடம்பு சரியில்லையா சீக்கிரம் வந்துட்ட” என்றாள் பதட்டமாய்.
“இல்ல” கவிழ்ந்து படுத்துக் கொண்டு யோசிக்கத் தொடங்கினான்.
அவனுடைய தாத்தாவை அவன் ஓரிரு தடவைதான் நேரில் பார்த்திருக்கிறான். அதிலும் சினிமாவில் வருவது மாதிரி மிலிட்டரி டிரஸ்ஸில் இல்லை. சாதாரண பேண்ட் ஷர்ட்டில்தான். சின்ன வயதில் பாட்டியிடம் சண்டை போட்டுக்கொண்டு பிரிந்து போனதிலிருந்து தாத்தா வீட்டுக்கு வந்ததில்லை. இவையெல்லாம் அம்மா சொல்லக் கேட்டதோடு சரி. வேறொன்றும் தெரியாது. இருந்தும் தாத்தாவை கேப்டன் என்று எப்படி சொன்னோம் என்று அவனுக்கே தெரியவில்லை.
அலுவலகம் முடிந்து அவனுடைய அப்பாவும் அம்மாவும் வந்தார்கள். அம்மா அவனை தொட்டுப் பார்த்து, “என்னடா யுவா ஆச்சி. சீக்கிரம் வந்துட்ட” என்றாள்
“சொல்றா ஏன் டியூஷன் போகல” கேட்டார் அப்பா.
அப்பாவுக்கு பதில் சொல்லாமல், “அம்மா தாத்தா மிலிட்டரிலதானே இருக்காரு” என்றான் அம்மாவிடம்.
“டியூஷனுக்கு போனியான்னு கேட்டா நீ என்ன
சொல்ற” அம்மா.
“அம்மா சொல்லுமா”. மீண்டும் அப்பாவை பார்க்காமல் கேட்டான்
“ஏன்டா கண்ணா”
“டியூஷனுக்கு போகாதவன கொஞ்சுடி”
“இருங்க புள்ள சொல்லட்டும்”
“இப்படி வெட்டிச் செல்லம் குடுத்தீனா உங்கப்பா மாதிரி டிரைவராத்தான்டி அவன் வருவான்”.
“டிரைவரா?” ஒரு கணம் இடி மின்னல் சுனாமி சூறாவளி எல்லாம் அவனுக்குள் வந்து போனது.
“தாத்தா டிரைவராம்மா...? மிலிட்டரில இருக்காருன்னு
சொன்ன”
“ஆமாம்பா மிலிட்டரிலதான் டிரைவரா இருக்காரு”
டக் அவுட் ஆன பேட்டால் மண்டையில் ஓங்கி அடித்தது போலிருந்தது.
“அப்படின்னா தாத்தா கேப்டன் இல்லையா”
“கேப்டனா கிழிஞ்சது போ. அவரு டிரைவராயிருக்கிறதுக்கே உங்கம்மா இந்த ஜம்பமடிக்கிறா.. இன்னும் கேப்டனா இருந்துட்டா அவ்ளோதான்”
“ஆமா இவங்கப்பா பெரிய கலெக்டரு., எங்கப்பாவ பத்தி பேச வந்துட்டாரு எங்கேயோ பெட்டிக்கடையில கணக்கு எழுதிட்டு இருந்துட்டு. . .”
அதன் பின்னான நிகழ்வுகள் தனியொரு டி.வி சீரியலுக்கான கதைக்களம். அவன் காதில் எதையும் வாங்காமல் தூங்கிப் போனான்.
மறுநாள் பள்ளிக்கு வந்தவுடனேயே கொக்கி போட்டனர் ஜீசசும் பாஸ்போர்ட்டும். வகுப்பு பையன்கள் எல்லோரிடமும், “டேய் யாரும் யுவராஜ்கிட்ட
வச்சிக்காதீங்க. அவங்க தாத்தா கேப்டன். கன் எடுத்து ஷீட் பண்ணிடுவாரு”.
தீ வைத்த ராக்கெட் போல யுவராஜுக்கு கோபம் ‘புஸ்’ஸென்று ஏறியது. என்ன செய்வது, டிரைவர் தாத்தாவை கேப்டன் தாத்தா என்று சொன்னதற்கு கோபத்தை அடக்குவதைத்தவிர வேறு வழியில்லை. புடைத்த நரம்புகள் அடங்கின. சிவந்த கண்கள் வெளிறி இயல்புக்கு வந்தன. மூக்கின் நுனிவரை வந்துவிட்ட தும்மலை அடக்கும் சிரமத்தோடு கோபத்தை அடக்கினான். ஆனாலும் அவர்கள் அவனை விட்ட பாடில்லை.
“இனிமே யாராவது எங்க தாத்தாவ பத்தி பேசினீங்க எங்கப்பாவ கூட்டிட்டு வந்து ஹெட்மாஸ்டர்கிட்டயே கம்ப்ளெயின்ட் பண்ணிடுவேன்”. எல்லோரையும் எச்சரிப்பது போல் ஜீசசுக்கும் பாஸ்போர்ட்டுக்கும் எச்சரிக்கை விடுத்தான்.
“என்னடா எல்கேஜி பையனாட்டம் ஹெ.எம் கிட்ட போவேன், அப்பாகிட்ட போவேன்னு. நீ மட்டும்
சிக்ஸ்த் படிக்கிற பையனாயிருந்தா, உண்மையிலேயே உங்க தாத்தா கேப்டனாயிருந்தா... ப்ரூவ் பண்ணுடா. அப்புறம் ஏன் நாங்க அவரபத்தி பேசப் போறோம்” -பாஸ்போர்ட்.
“எப்படி பண்றது”
“உங்க தாத்தாவோட கன்ன எடுத்துட்டு வந்து காட்டு”
“அதெல்லாம் வீட்டுக்கு எடுத்துட்டு வர மாட்டாரு”
“அப்படின்னா கன் வச்சிருக்கிற போட்டோவை
எடுத்துட்டு வந்து காட்டு”
“போட்டோ எடுக்கக்கூடாது. மிலிட்டரி ரூல்ஸ் தெரியும் இல்ல”
“அப்ப உங்க தாத்தாவ கூட்டிட்டு வந்து காட்டு”
“அவரு என்ன உங்க தாத்தானு நினைச்சிட்டியா, வீட்லருந்து கூட்டிட்டு வர்றதுக்கு. அவர் டெல்லில இருக்காரு”
“அப்ப உங்கப்பாவ சொல்லச்
சொல்லு”. பாஸ்போர்ட்டும் ஜீசசும் குறியாய் இருந்தார்கள். யுவராஜ் அவர்கள் வாய்க்குள் சிக்கிய சூயிங்கம் போல் மாட்டிக் கொண்டான். இதற்கு மேல் தப்பிக்க முடியாது. மென்று துப்பிவிடுவார்கள்.
“ஓகேடா. பண்றேன்”
“ப்ரூவ் பண்றே. இல்லனா இனிமே உன் பேர் பக்கெட்”
“பக்கெட்டா?”உமட்டுகிற சாப்பாட்டில் காக்கா எச்சமும் விழுந்தது போலிருந்தது யுவராஜுக்கு.
“கேப்டன்னுதானே பேர் வைக்கனும் அதெப்படிடா பக்கெட்னு வரும்”
“ஆமா நீ சொல்ற பேர வக்கிறதுக்கு நாங்க ஒண்ணும் நீ வச்ச ஆள் இல்ல. பக்கெட் தான் பேரு”
கோபத்தில் சைக்கிள் ஸ்டாண்டை உதைப்பதை தவிர வேறு வழியில்லை. ஜீசசையும் பாஸ்போர்ட்டையும் இரண்டு பெடல்களாய் நினைத்து மிதித்தான். சாதனை வேகத்தில் சீறியது சைக்கிள். வீட்டுக்கு போகிறோம். அப்பாவிடம் விஷயத்தைச் சொல்கிறோம். நாலு அறை வாங்குகிறோம். கண்ணீர் சிந்துகிறோம். ஒத்துக்கொள்ள வைக்கிறோம். மீண்டும் மீண்டும் மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
வீட்டிற்குள் நுழைந்தபோது வழக்கத்திற்கு மாறாய் அம்மா சீக்கிரமே வந்திருந்தாள். அவன் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. நுழைந்தவுடனே
“அப்பா எங்கம்மா” என்றான்
“ஏன்டா டென்ஷனா இருக்க?”
“அப்பா எங்கம்மா?” லட்சியத்தில் குறியாய் இருந்தான்
“அர்ஜென்ட்டா திருச்சிக்கு போயிருக்கார்ரா. நம்ம கலா ஆன்ட்டி வீட்ல ஒரு வயசான தாத்தா இருப்பாருல்ல, அவரு இறந்துட்டாரு. அதுக்காக போயிருக்காரு. நாளைக்கு வந்துடுவாரு.”
ஓட்டிக் கொண்டிருக்கும் சைக்கிளில் சக்கரம் மட்டும் தனியே கழன்று ஓடுவது போலிருந்தது அவனுக்கு.
நாளைக்கு வெள்ளிக்கிழமை. அப்பா வந்தால் பேசி சம்மதிக்க வைத்து நிரூபிக்க சனிக்கிழமைதான் முடியும்.
சனிக்கிழமை பள்ளி விடுமுறை. ஆக திங்கட்கிழமைதான் சாத்தியம், அதுவும் அப்பா ஒத்துக் கொள்ளும் பட்சத்தில். சோபாவிலிருந்து எழுந்து அம்மாவிடம் சென்றான்.
திடீர் அழுகையோடு அவளிடம் நின்றான்.
“நீதாம்மா என்ன காப்பாத்தனும்”
“என்னடா யுவா ஆச்சி?”
“நீ மட்டும் எனக்கு ஓகே சொல்லலைனா நாளைலேர்ந்து ஸ்கூல்ல என் பேரு யுவராஜ் இல்லம்மா, பக்கெட் மா”
“என்னது”
விஷயத்தைச் சொல்லி, ‘நீ அவங்ககிட்ட வந்து தாத்தா கேப்டன்னு சொல்லனும்”
“யுவா முகம் கழுவிட்டு படிக்கிற வேலய பாரு. அம்மா இதெல்லாம் செய்ய மாட்டேன்” கண்டிப்புடன்
சொல்லிவிட்டு கணினியில் உட்கார்ந்து விட்டாள்.
இதற்குமேல் பிரயோஜனமில்லை. அவனுக்குத் தெரியும். அம்மா கடிகார முள்ளைப் போல் தீர்மானமானவள். நின்றாலும் நிற்பாளேத் தவிர பின்னோக்கி ஓடமாட்டாள்.
நெடுநேரம் விதவிதமான பக்கெட்கள் அவன் நினைவிலும் கனவிலும் வந்து போயின.
அப்பா வராததற்கு எந்த காரணம்
சொன்னாலும் எடுபடாது. எனவே அப்பா இல்லாமல் போனால் பட்டப் பெயரோடுதான் திரும்பி வரவேண்டியிருக்கும். நாளையை எப்படி தவிர்ப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
“என்னடா டல் லாவே இருக்க. சரியாக் கூட சாப்பிடல” என்று நெற்றியிலும் கழுத்திலும் அம்மா தொட்டுப் பார்த்தாள்.
அவனுக்குள் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது. “தெரியலம்மா, ஜூரம் அடிக்கிற மாதிரி இருக்கு”.
தெர்மாமீட்டர் வைத்துப் பார்த்தாள். யுவராஜ் பொய்
சொல்வான். தெர்மாமீட்டர் பொய் சொல்லாது.
“நார்மலாத்தானே இருக்கு”
“இல்லம்மா ஜூரம் இன்னும் வரல. வர்ற மாதிரியே இருக்கு” என்று சொல்லி கொஞ்ச நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் உண்மையிலேயே ஜூரம் வந்ததுபோல் இருந்தது. அம்மா அவனை டாக்டர் வீட்டுக்குக் கூட்டிச் கொண்டு கிளம்பிவிட்டாள். ஜூரம் மட்டுமல்ல, ஊசி மாத்திரைகளை நினைத்து கூடவே நடுக்கம் வேறு.
“குளிர் நடுக்குதாப்பா” என்று போர்த்திவிட்டாள்.
ஆம் என்பதா இல்லை என்பதா? கழுதையை பிடிக்கப் போய் காண்டாமிருகத்திடம் மாட்டிக்கொண்ட கதையாயிற்று அவன் கதை. மௌனமாகவே இருந்தான். சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாய் டாக்டர் வீட்டுக்குள் சென்றான். அங்கேயும் தெர்மாமீட்டர். வாய்க்குள்ளும் கண்களுக்குள்ளும் டார்ச் அடித்துப் பார்த்தும் அவன் பொய்யை டாக்டரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
“பிராப்ளம் எதுவும் இல்ல. மே பி டயர்டா இருக்கலாம். எதுக்கும் ஃபீவர் வந்தா மட்டும் இந்த மெடிசின்ஸ் கொடுங்க” என்று இல்லாத ஜூரத்திற்கு ஒரு பக்கத்துக்கு அசைன்மென்ட் போல் மருந்து எழுதி கொடுத்தார். நல்லவேளை ஊசி மட்டும் இல்லை.
காலையில் அம்மா கிளம்பும்வரை அவன் எழவேயில்லை. தட்டி எழுப்பிப் பார்த்தாள். ஜன்னி காய்ச்சல் வந்தவன் போல் கண்களை திறக்காமல் முனகினான் அவன் நடிப்புக்கு ஆஸ்கர் கிடைத்தது. அம்மா நம்பி விட்டாள். வேலைக்காரம்மாவிடம்
சொல்லிவிட்டு அலுவலகத்துக்கு கிளம்பினாள். ஆக இந்த நாளை தவிர்த்தாயிற்று.
மறுநாள் காலைதான் அப்பா வந்தார். அவன் நேற்று பள்ளிக்கு செல்லாததை கேள்விப்பட்டதுதான் தாமதம், அம்மாவுக்கு அர்ச்சனை ஆரம்பித்தது.
“ஏன்டி இட்லி குக்கர் மாதிரி உட்கார்ந்திருக்கான், அவனுக்கு போயி ஜூரம்னு லீவ் எடுக்க வச்சிருக்க. கொஞ்சமாவது மூளை இருக்கா. அவன் ஸ்கூல் என்ன நீ படிச்ச ஸ்கூல் மாதிரின்னு நினைச்சிட்டியா மருதாணி வைக்கிறதுக்கு நகம் வெட்றதுக்கெல்லாம் லீவ் குடுக்கறதுக்கு. கவர்மெண்ட் ஆபீஸ் மாதிரி மெடிக்கல்
சர்டிபிகேட் குடுத்தாதான் ஒத்துப்பான் அந்த ஹெச்.எம். இல்லனா இவனுக்கு பதில் நான் ஸ்கூல் வாசல்ல முட்டி போடணும்.” அப்பா இனி எந்த விதத்திலும் தாத்தாவை கேப்டன் என்றல்ல டிரைவர் என்று கூட
சொல்லப்போவதில்லை. பக்கெட் பட்டம் உறுதி ஆகிவிட்டது.
க்ளைமேக்ஸ் நாளும் விடிந்தது. அதிகாலையிலேயே எழுப்பப்பட்டான். தலைமை ஆசிரியரிடம் லீவ் லெட்டர் கொடுத்து வகுப்பாசிரியரிடம் விஷயத்தைச்
சொல்லி அப்பா விட்டு வரவேண்டும். ஏறக்குறைய புதிதாய் பள்ளியில் படிக்க சீட் வாங்கி வகுப்பில் சேர்த்துவிட்டு வருவதற்கு இணையான நடைமுறை.
யுவராஜுக்கு உடம்பில் இரத்த ஓட்டமே இல்லை. பல் துலக்கியது,
குளித்தது சாப்பிட்டது எதுவுமே அவன் சுயநினைவோடு நிகழவில்லை.
பள்ளி வாசலில் பைக் நின்றது. இன்று முதல் வரலாறு மாறப் போகிறது. புதுப்பெயர் அவப்பெயர் சூட்டப்பட போகிறது. அவர்கள் உள்ளே நுழைய ப்ரேயர் பெல் அடித்தது. பட்டப்பெயரளிப்பு விழாவிற்கான அபாய மணிபோல் ஒலித்தது. தலைமையாசிரியர் அறைக்கு வந்தபோது அவர் ப்ரேயருக்கு சென்றிருந்தார். அப்பா தன் சட்டைப்பையிலிருந்த லீவ் லெட்டரை எடுத்தார். டாக்டர் சர்டிபிகேட் வாங்கிவிட்டாரா இல்லையா என அவனுக்குக் கேட்கத் தோன்றியது. வேண்டாம் கேட்டால் உண்மையிலேயே டாக்டர் சர்டிபிகேட் கொடுக்கும்படி ஏதாவது நிகழ்ந்தாலும் நிகழ்ந்துவிடும் என்று சாந்தமானான்.
ப்ரேயர் முடிந்து தலைமையாசிரியர் வந்தார். உள்ளே அவர்களை அழைத்தார். கோபமாய் அப்பாவிடம் லீவ் லெட்டரை வாங்கியவர் படித்ததும் சாந்தமாகி கையெழுத்திட்டுக் கொடுத்தார். அவனுக்கு ஆச்சர் யமாயிருந்தது.
அப்பாவுடன் வகுப்பறைக்குச் சென்றான். பாஸ்போர்ட்டும் ஜீசசும் தாமதமாய் வந்ததற்காக வகுப்பறை வாசலில் நின்றிருந்தனர். யுவராஜுக்கு அவர்களைப் பார்த்ததும் பட்டப்பெயரளிப்பிற்கு ஆரத்தி எடுக்க வாசலில் நிற்பது போலவே இருந்தது.
வகுப்பாசிரியர் கையில் பிரம்பை சுழற்றிக் கொண்டே அவர்களை உள்ளே அழைத்தார்.
முதலில் ஜீசசிடம் “ஏன்டா லேட்’?’ என்றார்
“சைக்கிள் பஞ்சர் சார்”
அவன் பட்டக்ஸ் பஞ்சரானது. கதறிக்கொண்டே போய் இருக்கையில் அமர்ந்தான்.
அடுத்து பாஸ்போர்ட். “நீ ஏன்டா லேட்?”
“சைக்கிள் பஞ்சர் சார்” என்றான் அவனும். உடனே
வாட்ச்சை கழற்றி வைத்துவிட்டு அவன் காதைத் திருகி,
“அதெப்படிடா ரெண்டு பேர் சைக்கிளும் ஒரே நேரத்துல பஞ்சராகும்?” என்று அடி பின்ன,
“ஐயோ சார் நாங்க ரெண்டு பேரும் டபுள்ஸ் வந்தோம்” என்றான். வகுப்பே ஒரு நிமிஷம் சிரிப்பில் குலுங்கி அடங்கியது. பாஸ்போர்ட் மட்டும் வாங்கிய அடிக்கு வஞ்சனை இல்லாமல் அழுதுகொண்டு இருக்கைக்குச் சென்றான்.
ஆசிரியர் யுவராஜையும் அவனுடைய அப்பாவையும் உள்ளே அழைத்தார். லீவ் லெட்டரை படித்ததும் அப்பாவை அனுப்பிவிட்டு அவனிடம் அதை கொடுத்தார். அதை லீவ் லெட்டர் மாட்டும் வளையத்தில் மாட்டிய போதுதான் படித்தான். மனதுக்குள் உற்சாகம் கொப்பளித்தது. வெளிக்
காட்டிக் கொள்ளாமல் இருக்கையில் சென்று அமர்ந்தான்.
“ஏன்டா நேத்து வரல?” பாஸ்போர்ட் கேட்டான்.
“யுவராஜ யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க. பாவம் அவங்க தாத்தா இறந்துட்டாரு” என்று ஆசிரியர் சொல்ல,
பாஸ்போர்ட்டும் ஜீசசும் “எந்த தாத்தாடா?” என்றனர் கோரசாய்.
“கேப்டன் தாத்தா” என்றான் யுவராஜ் பெரும் சோகத்துடன்.
நவம்பர், 2014.