ஓவியம் ஜீவா
சிறுகதைகள்

கேன்சர் வார்டு

யூமா வாசுகி

தன்னை விரைவிலேயே மரணம் அழைத்துக்கொள்ளுமென்று அக்காவுக்கு இந்த நிமிடம் வரை தெரியாது. மிகக்கவனமாக அவளிடமிருந்து இதை மறைத்து வைத்திருக்கிறோம். அடிக்கடி மயங்கி வீழ்கிறாளேயென்று கும்பகோணத்தில் டாக்டரிடம் காட்டிய போதே அவர் என்னிடம் ரகசியமாகத் தெரிவித்துவிட்டார். ரத்தத்தில் புற்று.

எனக்கு உடம்புக்கு என்ன? டாக்டர் என்ன சொல்றாரு.. என்று அக்கா கேட்கும்போதெல்லாம், “ரத்தம் கெட்டுருச்சின்னு டாக்டர் சொல்றார். புதுசா ரத்தம் ஏத்துனா உடம்பு தேறிடும்” என்று சொல்லி வைத்தேன்.

சென்னை அரசாங்க ஆஸ்பத்திரியில் அக்காவை கொண்டு வந்து சேர்த்து பத்து நாட்களாகின்றன. ஆரம்பத்தில், ஒருவர் தான் நோயாளியுடன் இருக்கலாம் என்று நர்சுகள் கெடுபிடி செய்ததால் அக்காவின் கணவர் ராஜேந்திரனின் தங்கை அருகிலிருந்து பார்த்துக்கொண்டாள். நானும் உமர் அத்தாவும் கீழே உலவிக்கொண்டிருந்து, மூன்றாவது மாடியிலிருக்கும் கேன்சர் வார்டிற்கு அவ்வபோது செல்வோம். அக்கா விழித்திருந்தால் சில வார்த்தைகள் பேசுவேன். உமர் அத்தா அடுத்த கட்டிலில் படுத்திருக்கும் தன் நான்கு வயது மகள் ரஹமத்தின் கால்களை எடுத்து மடியில் வைத்து பிரார்த்தனையை முணுமுணுப்பார்.

அரசாங்க ஆஸ்பத்திரியாயிருந்தாலும் இதுவரை முப்பதாயிரத்திற்கு மேல் செலவாகியிருக்கிறது. தினமும் இரத்தம் செலுத்த வேண்டியிருக்கிறது அக்காவுக்கு. தவிரவும் பார்ப்பதற்கு வரும் உறவினர்களையெல்லாம் நன்றாக உபசரித்து அனுப்ப வேண்டும் என்பது அக்காவின் விருப்பம். “ஜெயங்கொண்டம் மாமா பிரியாணின்னா விரும்பி சாப்புடுவாங்க, அழைச்சிக் கிட்டுபோய் வாங்கிகொடு” என்று என் காதில் சொல்வாள். “ சித்தப்பா கால்ல செருப்பில்லாம நிக்கறாங்க பாத்தியா.. ஆஸ்பத்திரிக்குள்ள செருப்பில்லாம நடக்கக்கூடாது. நல்ல செருப்பா வாங்கிக்கொடு” என்று யாருமறியாமல் கட்டளையிடுவாள். அவள் சொல்வது அனைத்தையும் எப்பிசகும் இல்லாமல் நிறைவேற்றி வருகிறேன் நான். அப்பா பணம் ஏற்பாடு செய்வதற்காக கும்பகோணம் சென்றிருக்கிறார். இந்த வருடம் விவசாயமுமில்லை. கையில் பணமுமில்லை. எங்கெங்கே கடனுக்கு அலைகிறாரோ...

நான் ஜிஹெச்சுக்கு இதுவரையில் வந்ததில்லை. இதுதான் முதல் தடவை. வந்த அன்று ஞாயிற்றுக்கிழமையாகப் போய்விட்டது. ஒருவர் கூட என்ன ஏது என்று கேட்கவில்லை. காரை கொண்டு வந்து நிறுத்திவிட்டு அக்காவை இறக்கி உட்கார வைத்திருக்கிறோம். காரில் வரும்போதே அக்கா சொன்னாள், “குளிக்கணும் போலருக்குடா தம்பி... குளிச்சிட்டு ஆஸ்பத்திரிக்குப் போகலாம்” “டாக்டரைப் பார்த்துவிட்டு பிறகு குளிக்கலாம்” என்று மறுத்தார் ராஜேந்திரன். மருத்துவ செலவுக்கு தன்னால் பணம் புரட்ட இயலாத கவலையும் பயமும் வெளிப்படையாகத் தெரிந்த்து அவர் முகத்தில். சிறிது சிறிதாக பல தொழில்கள் செய்து பார்த்து எல்லாமும் விரயமாகி இறுதியில் வெளிநாடு செல்லுகின்ற யோசனைக்கு வந்திருந்தார். டாக்டர் யாருமே இல்லை. இருந்த அலுவலர்கள் அட்மிஷன் போடுவதற்கு மறுக்கிறார்கள். இந்த நோய் இத்தகையது என்று அக்காவுக்குத் தெரியாமல் விளக்கிக் கெஞ்சிய பிறகு பணம் வாங்கிக்கொண்டு அட்மிஷன் போட்டார்கள்.

கொடுக்கப்பட்டது மிகவும் மோசமான நிலையில் இருக்கிற படுக்கை. பல வித நோயாளிகள் முன்னூறு பேர் தங்கியிருக்கின்ற பெரிய ஹால் அது. அதன் நடுவே ஒரு படுக்கை தயார் செய்து கொடுத்தார்கள். ஹாலுக்குள் நுழைந்தவுடன் குடலைப்பிடுங்கியெறியும் தீவிரத்துடன் கெட்ட நாற்றம் தாக்கியது. எந்த அசிங்கத் தையும் எவ்வளவு கேவலத்தையும் அந்த இடத்திற்கு இணையாகச் சொல்ல முடியாது. பிரசவ வார்டும் சேர்ந்த இடம். கழிப்பறைகளின் பயங்கரமான நிலையை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. வராண்டா முழுவதும் எச்சில், வாந்தி.

 “என்னால இங்க இருக்க முடியல... ரொம்ப வலிக்குது..வீட்டுக்கு போயிருவோம்” என்று அழுதாள் அக்கா. எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் டாக்டரிடம், அக்காவை முதலில் பரிசோதனை செய்த எல்லா காகிதங்களையும் கொடுத்து, இது இன்ன வியாதி கேன்சர் வார்டுக்கு மாத்துங்க என்று கேட்கிறேன். “நாங்களும் ஒரு தடவை டெஸ்ட் எடுத்துதான் முடிவு செய்யணும்” என்கிறார் டாக்டர்.

ரத்தம் எடுக்கிறார்கள்...சோதனை செய்கிறார்கள்...பிறகு சதையை எடுத்து சோதனை செய்கிறார்கள்... அப்புறம் முடிவு செய்து இது ரத்தப்புற்று நோய்தான் என்று ஒத்துக்கொள்கிறார்கள். அதற்குப்பிறகும் லஞ்சம் கொடுத்து கெஞ்சிக்கூத்தாடிய பிறகுதான் ஐந்தாவது நாள் கேன்சர் வார்டுக்கு மாற்றப்பட்டாள் அக்கா.

அந்த இடத்துக்குச் சென்றவுடன் அக்கா சற்று இயல்பாக, தெளிவாகக் காணப்பட்டாள். அது சுத்தமான வார்டு. அக்காவுடன் சேர்த்து மொத்தம் அங்கே எட்டுபேர். எட்டு பேருக்கும் கேன்சர். ரஹமத்துவும் அதில் ஒருத்தி. அக்காவுக்கு அடுத்த கட்டில் அவளுடையது. பிறந்ததிலிருந்தே ரத்தப்புற்று நோயாளியாம் அவள். அக்காவைப்போல் முற்றிய நிலைமை இல்லையென்றாலும் அவளுடைய நாட்களும் எண்ணப்படுபவைதான்.

அழகான சின்னஞ்சிறுமி அவள். மிகப்பூஞ்சையாக, நோயினால் வெளுத்து - கோழிக்குஞ்சின் பஞ்சு ரோமங்களினால் செய்யப்பட்டதைப் போன்ற மென்மையுடன் இருப்பாள். வற்றிய உடலாயிருந்தாலும், பேச்சும் - சுடரும் குழந்தைமையும் அவளை அங்குள்ள அனைவருக்கும் பிரியமானவளாக்கியிருந்தன. பெண் குழந்தை இல்லையென்ற பல வருட ஏக்கம் அக்காவை சட்டென்று பிணைத்தது ரஹமத்திடம். அக்காவுக்கு பாரதி என்று ஒரு பையன்தான். அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரவேண்டாம் என்று கண்டிப்பாக அக்கா சொன்னதால் ஊரிலேயே விடவேண்டியதாயிற்று.

பாரதி சிறுவனாயிருக்கும்போது அவனுக்கு லிப்ஸ்டிக் பூசி, பூச்சூடி, ஸ்கர்ட் அணிவித்து ஒரு சிறுமியைப்போல் போட்டோ எடுக்க விரும்பி அலங்கரித்துக் கொண்டிருந்த போது, அவன் வியர்வைக்காக ஸ்கர்ட்டை உயர்த்தி ஜட்டி தெரிய முகம் துடைக்கவும் அக்கா குபீரென்று பொங்கிச் சிரித்தாள். அவள் சிரிப்பதைக் கண்டு பாரதி மீண்டும் மீண்டும் அதைப்போல் செய்யவே, கண்களில் நீர் துளிக்க உரக்கச்சிரித்து செல்ல அடிகளுடன் ஸ்கர்ட்டை அக்கா இறக்கிவிடுவாள்.

உமர் அத்தாவின் இரண்டு பெண் குழந்தைகளில் ரஹமத் மூத்தவள். ஆன வைத்தியம் அத்தனையையும் செய்து பார்த்துவிட்டு அவளை கடைசியில் இங்கே கொண்டு வந்திருக்கிறார். சொந்த ஊரான ஏர்வாடியில் இவருடைய இரண்டு மீன்பிடிப் படகுகளும் அடமானத்திலிருப்பதாகச் சொன்னார். குத்துக்காலிட்டமர்ந்து முழங்காலில் தாடையழுந்த, அக்காவிடம் விளையாடிக்கொண்டுருக்கும் மகளையே பார்த்து உதடுகள் முணுமுணுப்பில் நடுங்க தஸ்டி மணிகளை உருட்டியபடியிருப்பார். பெருங்கலக்கமும் துக்கமும் இமைகளில் படிந்திருக்க மகளின் கட்டிலருகில் குரான் படித்திருப்பாள் அவர் மனைவி பரிதா. முன்பெல்லாம் அந்த வார்டில் தேவையில்லாமல் யாரும் யாருடனும் பேசுவதில்லையாம். கனமான மௌனத்தின் கால்களடியில் அந்த அறை அழுந்திக் கிடந்திருக்கும் போலிருக்கிறது. பீதியும் துயரமும் உடலசைவுகளில் பாவனைகளில் உதிருமாயிருக்கும். மரணத்தின் அண்மை அனுபவப் படும்போது விரிந்து உறையும் விழிகளில் சூன்யப் பிரபஞ்சம் ஒளிருமாயிருக்கும்.

ரஹமத்தின் கன்னங்களில் அக்கா வைத்த முத்தங்கள் சம்மட்டிகளாகி அந்த அறையின் இறுக்கத்தை இளக்கிப் பொடித்துவிட்டன. இருவருக்கும் இடைப்பட்ட பழக்கம் உற்சாகத்தின் இழைகளை பரத்திவைத்தது வார்டில். வலியற்ற பொழுதுகளில் அக்கா கதைகள் சொன்னாள். நோயின் தீவிரத்தால் தன் தலைமுடி வேகமாக உதிர்வது குறித்து அக்கா கவலை கொள்ளவில்லை. ரஹமத்துக்கு தலைவாரி பூச்சூடி அழகு பார்த்தாள். நான் அழைப்பதைப் பார்த்து ரஹமத்துவும் அக்கா வென்று கூப்பிடுவதை ஆரவாரத்துடன் சொல்லி மகிழ்ந்தாள்.

இரவுகளில் இருவரும் ஒரே கட்டிலில் படுத்தார்கள். சில தடவைகள் இரவின் அமைதியில் மென்குரலில் அக்கா ரஹமத்துவுக்கு விடுகதைகள் போடுவாள். அறையின் மூலையில் வலியால் முனகிக் கொண்டிருப்பவர்  முனகலை சற்றுநேரம் நிறுத்தி இதுதான் விடை என்று ஏதாவது சொல்வார் விளையாட்டாக. டூட்டி நர்சும் உற்சாகமாக கலந்துகொள்வாள்.

சீக்கிரம் குணமடைய பிரார்த்தித்து அர்ச்சனை செய்து கொண்டு வந்த விபூதியை உறவினர்கள் அக்காவின் நெற்றியில் பூசுகையில் அக்கா ரஹமத்தை இழுத்து மடியில் வைத்து அவளுக்கும் பூசச்சொல்வாள்.

அக்கா கேட்டதற்காக அடிக்கடி மாம்பழ ஜூஸ் வாங்கிகொடுத்தேன். சளி பிடித்துக்கொள்ளும் ஜுரம் வரும், வாங்கிகொடுக்காதீர்கள் என்றார்கள். சளி பிடித்து தும்மிக்கிடந்தது ரஹமத்துதான். அவளுக்காகத்தான் வாங்கி வரச்சொல்லியிருக்கிறாள் அக்கா. காதோடு காதாக அது வேணும் இது வேணும் என்று ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பாள் ரஹமத்து. அவள் உதடுகள் செவிமடலில் உரசுகின்ற கூச்சத்தில் புன்னகைத்துக் கேட்பாள் அக்கா.

அக்கா சொல்லி கேரம்போர்டு வாங்கிக் கொடுத்தேன். பந்தும் பிளாஸ்டிக் பேட்டும் வாங்கிக்கொடுத்தேன். கூச்சலும் கும்மாளமுமாக கேரம் விளையாட்டு நடக்கும் தினமும். கேன்சர் வார்டு இந்த மாதிரி கலகலப்பா இருந்து பார்த்ததே இல்லை என்கிறாள் நர்சு.

பேசிக்கொண்டிருக்கும்போது ரஹமத்துக்கு கோபம் வந்துவிடும். அறையின் மூலையில் போய் விரைப்பாக நின்று “நான் கோபமாக இருக்கேன்” என்று பலமாக அறிவிப்பாள். “ தங்க மயிலுக்கு என்னா கோபம்” என்று பரிதா கேட்கும்போது அவள் “தெரியல” என்று பட்டென்று சொல்லும்பதில் அனைவரது உதடுகளையும் மலர்ந்துவிடும். அக்கா சொல்லிக்கொடுப்பாள் “ சொல்லுடா. அக்கா ஏபிசிடி சொல்லச்சொன்னாங்க.. எனக்குத் தெரியல, திட்டுனாங்க, அதான் கோவம்னு சொல்லு”. ஆமாம், என்று ஆமோதித்து அக்காவின் விரிந்த கரங்களை நெருங்கி அணைவாள்.

அவள் சாப்பிட முரண்டு பிடிக்கும்போது அக்காவிடம் புகார் செய்வாள் பரீதா. “நான் பத்து எண்ணுறதுக் குள்ள நீ சாப்புட்டுடனும்” என்று பொய் முறைப்பாக அக்கா கண்டிக்கவும், “ நீ எதுக்கெடுத்தாலும் ஏங்க்கா எண்ணிக்கிட்டிருக்க... பத்து எண்ணுறதுக்குள்ள யாராச்சும் சாப்புட முடியுமா? முப்பதாச்சும் ஆவும், சரி நீ முப்பது எண்ணு அதுக்குள்ள சாப்புடுறேன்” என்று வரும் உடன்பாடு. சீக்கிரம் வா என்று சொல்லத்தெரியாமல் அவசரமாக சீச்சீ வா அக்கா என்றழைப்பதை ரத்தம் கசியும் ஈறுகள் தெரிய சிரித்து ரசிப்பாள் அக்கா.

அக்காவுக்கு ஓ பாசிட்டிவ் ரத்தம் தினமும் ஏற்ற வேண்டியிருந்தது. உறவினர்கள் தெரிந்தவர்கள் அனைவரும் ரத்தம் கொடுத்தார்கள். வேறு குரூப் ரத்தமாயிருந்தாலும் அதை எடுத்துக்கொண்டு ரத்த வங்கியில் ஓ பாசிட்டிவ் ரத்தம் கொடுப்பார்கள். ரத்தம் கொடுப்பதற்கு சமயங்களில் ஆள் கிடைக்காவிட்டால் திண்ட்டாட்டம்தான். ரத்த வங்கியிலும் ஸ்டாக் இல்லாமல் போனால் பெரும் அல்லாட்டமும் அழைக்கழிப்புமாகப் போய்விடும். அதுபோன்ற அபாயகரமான தருணங்களில் உமர் அத்தா ஆட்டோவில் சுற்றியலைந்து நகரத்தில் உள்ள அவரது உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து வருவார். இரண்டு தடவை அவருக்கு ஆட்டோ செலவுக்கு பணம் கொடுக்க முயன்றபோது அவரால் கோபத்துடன் கடிந்து கொள்ளப்பட்டேன். அக்காவுடன் ரஹமத்து சந்தோஷமாக இருப்பதில் அவருக்கும் அவர் மனைவிக்கும் பெரிய ஆசுவாசம்.

அக்காவை பார்க்க வருகிறவர்கள் கொண்டு வருகிற திண்பண்டங்களில் பாதி ரஹமத் கட்டிலுக்குச் சென்றுவிடும். “ வௌயாடலாம் அக்கா” என்று சகலபொழுதும் ஒட்டி இழைந்தாள் அவள்.

ஓவியம்

“ சின்னப்புள்ள, உள்ளாரயே இருக்காளே.. வெளியே கொஞ்சம் கூட்டிட்டுப் போயிட்டு வா” என்று அக்கா சொன்னாள் என்னிடம். மூன்றாவது மாடிலேர்ந்து இரண்டாவது மாடிக்கு இறங்கும் வரையில் மரப்படிக்கட்டு. லேசாக காலை வைத்தாலே பெரிதாக சப்தம் எழுப்பும். ரஹமத்து தொம் தொம் என்று ஏறுவதும் இறங்குவதுமாக குதித்து விளையாடும் போது படியில் கால் தவறி உருண்டு விடாதபடி அச்சத்துடன் நான் மிகச்சுதாரிப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவளுக்குப் பிடித்த விளையாட்டு இது.

“எனக்கு உடம்புக்கு ரொம்ப முடியாமப்போயி செத்துப்போய்ட்டேன்னா எம் புருசன் என்ன ஆவாரோன்னு தான் கவலையாயிருக்கு. உருப்படியா வேலன்னு ஒண்ணு அமையாம இவ்ளோ காலம் போயிடுச்சி அவருக்கு, என்ன செய்யப் போறாரோ தெரீல. எம்மகனப் பத்தி எனக்கு கவலையில்லை. நீயும் அப்பாவும் நல்லா படிக்கவச்சி பார்த்துக்குவிங்க” என்று அக்கா சொன்னாள் பேச்சோடு பேச்சாக. “இப்படியெல்லாம் பேசாதே! உனக்கு சீக்கிரம் சரியாயிடும்...வீட்டுக்குப் போயிடுவோம்” என்று அதட்டிப்பேசி வாயடைத்தேன்.

அன்றைக்கு இருபத்து மூன்றாவது நாள். அப்பா ஊரிலேருந்து வந்து இரண்டு தினங்களாகின்றன. அக்காவின் கணவர் துயரம் மிகுந்து படிக்கட்டின் ஓரத்தில் ஒடுங்கியமர்ந்திருந்தார். காலையில் டூட்டிக்கு வந்த நர்சு எதனாலோ சாப்பிடவில்லை. கொண்டுவந்த டிபன் கேரியர் திறக்கப்படாமலேயே இருக்கிறது. அக்காவை ஏறிட்டு நோக்கி துயரார்ந்த வாஞ்சையுடன் முறுவலிக்கிறாள். லெட்ஜரில் செல்வி என்று குறிப்பிட்டிருக்கின்ற பக்கத்தில், என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்று பார்த்துவிட்டு மாத்திரை மருந்துகளை எடுத்து வருகிறாள். அக்காவின் கையைப்பிடித்து பார்க்கும்போது நர்சின் கண்கள் பணிந்தன. தலைமை மருத்துவர் வந்தார். லெட்ஜரில் செல்வி எனும் பெயருக்கு நேராக சிவப்புப் புள்ளி வைத்துவிட்டுச் சென்றார். அதைப் பார்த்துவிட்டு வெகுநேரம் தலை கவிழ்ந்திருந்தாள் நர்ஸ். “ ஏன் சாப்பிடல. காலைல வந்ததுமே சாப்புடுவீங்களே” எனும் அக்காவின் கேள்விக்கு பசிக்கல... இப்ப வேண்டாம் என்று சொல்லும்போது தடையற்று வழிந்தது கண்ணீர். “ வீடல ஏதோ பிரச்சனை போலருக்கு” என்று ஊகமாய் சொன்னாள் அக்கா என்னிடம்.

வழக்கம்போல அக்காவுக்கு ரத்தம் ஏற்றினார்கள். ஒரு பாட்டில் ஏறிவிட்டது. அடுத்த பாட்டில் ஏற்ற வேண்டும். ரத்த வங்கியில் வாங்கிவரப் புறப்பட்ட உமர் அத்தாவை தடுத்துச் சொல்கிறார் டாக்டர், “இனிமே ரத்தம் கொடுத்தாலும் வேஸ்ட்தான்..வேண்டாம்” அவர் சொன்னதை சற்றும் பொருட்படுத்தாமல் தடதடவென்று படியிறங்கி ஓடுகிறார் உமர் அத்தா.

அவர் வாங்கி வந்த ரத்தத்தை ஏற்ற முடியவில்லை. அக்காவின் கைகளில் மொத்தம் 19 இடத்தில் குத்தி ரத்தம் ஏற்றப் பார்த்தார்கள். ரத்தம் ஏறவில்லை. ரஹமத் அழுகிறாளே என்பதற்காக வலியரற்றலை மட்டுப்படுத்த சிரமப்படுகிறாள் அக்கா. கைகள் முழுவதும் ஊசி துளைத்த புண்கள். நர்ஸ் பல இடங்களில் ஊசி ஏற்ற ஏற்ற மிகப்பதட்டமாகி நரைத்தாடியை பரபரவென்று சொறிந்துவிட்டுக்கொள்கிறார் உமர் அத்தா. அங்குமிங்குமாக விழிபிதுங்க முறைத்துப்பார்க்கிறார். ஒரு கட்டத்தில் அவரையறியாமலேயே பட்டென்று ஊசி ஏற்றும் நர்சின் கையைப் பிடித்து தடுத்துவிட்டார்.

குத்துபட்ட இடமெல்லாம் நீர் வடியும் பச்சைநிறப் புள்ளிகளாயின. உள்ளே வர தைரியமின்றி அப்பா படபடத்து நிற்கிறார் வெளியே. தம்பீ இந்த ஊசியெல்லாம் வேணாம்ன்னு சொல்லுடா தம்பி என்று அக்கா அழுகிறாள். அழுவதற்குக் கூட அவளுக்கு சக்தியுமில்லை. பலகீனமாக “ ஈ..” என்று சப்தம் வராமல் அழுகிறாள். பல் ஈறுகளில் அதிகமாக ரத்தம் கசிந்து வருகிறது.

அழுவாத தாயி..அழுவாத ..என்று உமரத்தா அக்காவின் கைப்புண்களை தடவிக்கொடுக்கிறார். அக்கா பொறுக்க முடியாத வலியுடன் உரத்து அழும் ரஹமத்தை வலது பக்கமாக அணைத்துக் கொள்கிறாள். “ வேண்டாம் இதற்கு மேல் ஊசி ஏற்றாதீர்கள்” என்று நர்சிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுகிறேன்.

சற்று நேரம் கழித்து எழுப்பிய உமர் அத்தா “ ஒரு சான்ஸ் கொடுத்தாக்கா கால் வழியா ரத்தம் ஏத்திப் பாக்கலாமுன்னு அந்த நர்ஸ் சொல்லுது தம்பி... என்ன செய்யலாம்” என்று கேட்கிறார்.

கால் வழியாக ரத்தம் ஏறிக்கொண்டிருக்கும்போதே அக்காவுக்கு மூச்சு முட்டுகிறது. மிகவும் பிரயாசைப்பட்டு மூச்சை இழுத்து “ ஹா..ஹா..” என்று விடுகிறாள். சுவாசத்திற்காக பொறுத்தப்பட்ட சிலிண்டர் வேலை செய்யவில்லை. அக்காவின் நெஞ்சைத் தடவுகிறாள் பரீதா.

“பக்கத்துல வேற வார்டுல சிலிண்டர் இருக்கு போய் சீக்கிரம் எடுத்துகிட்டு வரச்சொல்லுங்க” என்று அவசரப் படுத்திய நர்சின் டிபன்கேரியர் மாலை நெருங்கியும் கூட திறக்கப்படாதிருக்கிறது. ஓட்டமாக ஓடி அந்த வார்டில் இருக்கும் ஊழியரிடம் முறையிட்டு அழைக்கிறோம் உமர் அத்தாவும் நானும்.

கேன்சர் வார்டுக்கு நான் ஆக்ஸிஜன் சிலிண்டரை எடுத்துகிட்டு வரமாட்டேன் என்று எடுப்பிலேயே தீர்மானமாக சொல்கிறார் ஊழியர். எவ்வள்வு வேண்டுமானாலும் பணம் தருகிறேன் என்று கண்ணீருடன் கெஞ்சுகிறேன் நான். ரொம்ப அவசரம்..ஒரு உயிரே போகப்போகுது தயவு செஞ்சி சிலிண்டரை எடுத்துட்டு வாங்க.. என்று கதறியும் ஊழியர் “ என்னோட வார்டு இதுதான். நான் வேற எங்கேயும் வரமாட்டேன் என்றார் சாவகாசமாக வேறு வழியின்றி அவர் காலில் விழப்போன என்னை கட்டிப்பிடித்து தடுத்த உமர் அத்தா அவரை ஒருகணம் தீர்க்கமாக முறைக்கிறார். அடுத்த நொடி அவரின் முரட்டுக்கரம் கொடுத்த அடியில் சுவரோடு ஒன்றி நிலை தடுமாறி கீழே விழுகிறார் ஊழியர். அதே நேரம், அக்கா போய்ட்டாடா தம்பி..என்று அலறிக்கொண்டு அப்பா ஓடிவரும் சப்தம் கேட்கிறது.

இரண்டு மாதங்கள் கழித்து சென்னைக்கு ஒரு வேலையாக வரும்போது, ஜிஹெச்சுக்குச் சென்று ரஹமத்தையும் உமர் அத்தாவையும் பார்த்துவிட்டு வர மிகவும் ஆசைப்பட்டேன். அவளுக்கு கொஞ்சம் ப்ளம்ஸ் பழங்களும் பிஸ்கட்டுகளும். அவளுக்கு மிகவும் பிடித்தமான மாம்பழ பானமும் வாங்கிகொண்டேன். ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து மூன்றாவது மாடிக்குச் செல்கிற மரப்படிகளில் ஏறுகிற போதுதான் அந்தப் படிகளில் அவள் குதித்து விளையாடியது நினைவுக்கு வந்தது. “ ஒருக்கால் இறந்திருப்பாளோ” என்ற சிந்தனை திடுமென்றெழுந்தது. அதற்கு மேல் செல்லத் துணிவில்லை. திரும்பி நடந்தேன்.

பிப்ரவரி, 2016.