ஜீவா
சிறுகதைகள்

கிரௌஞ்சப் பறவை

பா. கண்மணி

காலை  முதல், குளிக்கிறேன், சாப்பிடுகிறேன், கிளம்புகிறேன் என்றெல்லாம் தொடர் வருணனை கொடுப்பவனிடமிருந்து இன்று இதுவரை ஒரு தகவலுமில்லாததால் ஏனோ தானோவென்று கிளம்புகிறேன். பாராட்டு, கரிசனம், காதல் இவற்றை மாறி மாறிப்  பூசிய பதில்களை யோசித்து யோசித்து  நடுநடுவே  அனுப்பத் தேவையில்லாததால்   சீக்கிரமே  கிளம்பி அலுவலகம் வந்துவிட்டேன். இச்சிறு மாற்றத்திற்கு  டீம் லீடரின்  தடித்த கண்ணாடி ஊடாகத்  தெரிந்த வியப்பை, கேள்வியை - சந்திக்காமல்   வெகுசாதாரணமாக முகத்தை வைத்துக் கொண்டு  கையெழுத்திட்டு என் இருக்கையை அடைகிறேன். அதீதமான  கவனம் என்  எரிச்சலைக் கிளப்புகிறது.

மூளையின் ஆணையை மீறி மீண்டும் கைபேசியைப் பார்க்கிறது கண். நப்பாசையில் இன்-பாக்ஸைத் திறந்து பார்க்கிறேன். ஒன்பது வேண்டாத மின்னஞ்சல்களில் ஒன்றுகூட அவனது இல்லை. வலி கண்டாலும் மாறி மாறிக் குறுஞ்செய்திப் பெட்டியையும் வாட்ஸப்பையும் ஓய்ச்சலின்றித் திறந்து மூடியபடி விரல்கள்.....

சோதனையாக இன்று   வேலையே இல்லை . இவ்வளவு நேரமாகியும் அவனிடமிருந்து ஒரு தகவலுமில்லையே. என்னாச்சு? உடல்நிலை.... நேற்று அவன் அனுப்பிய செல்ஃபியில்  கூட ஜான்ஸன் பேபி போல திரண்ட தாடையுடன் செழிப்பாகத்தானே இருந்தான். அதற்குள் என்ன ஆகிவிடக் கூடும்? ஜுரம் கிரமென்று வீட்டிலிருந்தால் அவ்வப்போது வெப்பமானி காட்டும் உடல் சூட்டையும்   வலியையும் குளிரையும் தெரிவித்துக் குழந்தை போலச் சலுகையை நாடுபவன் இப்படிச்  சும்மாயிருக்க மாட்டான்.

சிறு விபத்து ஏதேனும் நடந்திருந்தால்....குளிக்கும் ஈரத்திலும் கைபேசியின் சிறிய பொத்தான்களை வழுக்காமல் ஒற்றும் வித்தையறிந்த அவனது  கணுதுருத்தாத மழுமழு  விரல்கள் செய்தியனுப்பாமல் ஓய்ந்திருக்காது. தவிர,பெருவிபத்தில் சிக்குமளவிற்கு கவனக் குறைவானவனல்ல அவன். தான் வாகனம் ஓட்டுகையில் சென்றடையும் என் ஓலைகளுக்கு சிக்னல் நிறுத்தங்களில் மட்டுமே பச்சை பச்சையாக பதில் ஓலைகளை அனுப்புவான். அவனிடம் எனக்குப் பிடித்ததே இந்த நேரடித் தாக்குதல் தான். சுற்றி வளைத்து நேரத்தை வீணடிக்க மாட்டான்.

ஒருவேளை அவனுக்கு இந்தப் பரந்த உலகில்  வேறு லைன் எதுவும் சிக்கியிருக்குமோ? மெல்ல நடுங்குமென் கிரௌஞ்சப் பறவையைக் கதகதக்க  அணைத்து, ‘எத்தனையோ உறவுகளைப் பறந்து தாண்டியிருக்கிறாய், உடைந்த சிலவற்றின் விளிம்புகூடக் கீறாமல். என்றாவது ஒருநாள் நடக்கக் கூடியதுதானே இது’, ஆற்றுகிறேன். இவ்வளவு சீக்கிரம் அது நடக்கச் சாத்தியமில்லை என எனது  தோற்றமும் திறமையும் எனக்கு நம்பிக்கையளிக்கின்றன.

அவன் அப்படியொன்றும் அழகனல்ல என்றாலும் தனக்குக் கைவந்த நகைச்சுவையாலும் ஓரளவு பேச்சுத்  திறமையாலும் பெண்களைக் கவர வல்லவன். ஆனால் அவனுக்குத் தன் உருவத்தைப் பற்றிய பெருமையுண்டு. அவனை மகிழ்விக்கச் சாத்தியமான அனைத்தையும்  இதோ-இந்தக் கையளவு கைபேசி மூலம் அனுப்பினேனே! அலைக் கற்றைகள் கூச்சமறியாததால் அப்படியே சுமந்து சென்றன.

அப்படி எதுவும் நடந்திருந்தால் ....இந்தப் படபடப்பு  எனக்குப் புதிது. மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது எனும்போது-இப்போது ராதையாக ஏங்கும்  இந்த நானும் நானாகத்தானே இருக்கமுடியும்?

கைபேசியைப் பிரிய மனமில்லாமல் பிராவுக்குள்  வைத்துக் கழிவறை செல்கிறேன்.அந்நேரம் பார்த்து அந்தப் பக்கத்திலிருந்து அனக்கமேதும் கண்டால்.....  பதிலனுப்புகையில் கழிவறையின் சப்தங்கள் பதிவாகவா போகிறது?பேசுவதைவிட இதுதான் வசதி. எண்ணியது போலவே  கைபேசி உயிர்பெற்று என் மார்பில் அவன் விரல் நுனிகளாக அதிர்வுகள்   பரவ, கடினமாகிறேன். உருவியெடுத்துப் பார்த்தால்-தோழியிடமிருந்து சப்பென்ற வாட்ஸப் செய்தியொன்று.

பசியின்றிக்  கொறித்து வைக்கிறேன். அப்பாடா....இந்த மதியம் ‘சாப்பிடாமல் உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே’ என்று அவனிடம் பாட்டி வசனம் பேசவேண்டிய அவசியமில்லை. கிறுக்கன்கள் ! ஏழு கழுதை வயதானாலும் காதலியிடம், தோழியிடம், மனைவியிடம் தன் தாயை எதிர்பார்ப்பான்கள்-கோழைகள். நன்றாகக் கொட்டிக் கொள்ளுமிவன் நேரத்திற்கு மட்டும் சாப்பிடமாட்டான். ‘டிங்...டாங்....’, கைபேசி அறிவிக்க,  ஒரு கைப்பிள்ளையைப் போல அதை  அருமையாகத் தூக்கிப் பார்க்கிறேன். வோடஃபோனிலிருந்து வீணான  குறுஞ்செய்தி.

அறைக்குள்  ஒரே கசகசப்பாக இருக்கிறது.மொட்டை மாடிக்குப் போனால் தேவலை.சோர்வை இழுத்துக்கொண்டு படியேறி   இருளில்   துவைக்கும் கல்மேல்  மல்லாந்து படுக்கிறேன். வருடும் காற்றில் அவன் வியர்வையில் நனைந்த நைஸில் பவுடரின் மணம்.....கைபேசியிலிருக்கும் அவனது புகைப்படத்தைப் பெரிது செய்து, கொழுத்துப் பழுப்பேறிய  இதழோடு இதழ் வைக்கச் சில்லிட்டு மீசை குறுகுறுக்கிறது. கற்பூரம் நாறவில்லை,கமலப் பூ நாறவில்லை. சிகரெட்   நாறுகிறது..... பரந்த வானம் பயமுறுத்த,  பனியில் உடல் கூசக் கீழிறங்குகிறேன்.

வாட்ஸப் படத்தில் அவனது நமுட்டுச் சிரிப்பைப் பார்க்கப் பார்க்க,‘பெரிய்ய புடுங்கியா?’, வன்மம் கொப்பளிக்கிறது. சரவணன்-இவனைவிட மேலானவன்,ஒழுங்கானவன், உண்மையானவன் - இந்த கசப்புக் கணமே என்னை  என் ஆக்கினைகளுடன் ஏற்கத் தயாராக இருக்கிறான்.ஆனால் பாழாய்ப் போன மனம் முரண்டு பிடிப்பது எதனாலென்று  இந்த முள்நொடி வரை    புரியவில்லை . அது  புரியும்போது கிரௌஞ்சம் அமைதியடைய வாய்ப்புண்டு.

அவன் வெளியூர் போயிருக்கலாம். போன இடத்தில் வலைத்தொடர்பு சிக்காமலிருக்கலாம். அவன் அனுப்பிய   இனிமையான வாக்கியங்கள் இந்தப் பெருவெளியில்   திசையறியாது என்னைப்போல் தவித்துக் கொண்டிருக்கலாம். சில சமயம் போகுமுன்பு தெரிவிப்பான். அப்போது இதுபோன்ற   பதற்றமிருக்காது. சில நேரங்களில்  இப்படித்தான் தவிக்க விடுவான். ’ஐ ச்ட் ணணிt ச்ணண்தீஞுணூச்ஞடூஞு tணி தூணித’, என்று எனக்கு ஞாபகப்படுத்துவதற்காகத்   திமிர்பிடித்தவன் அவ்வப்போது இப்படிச் செய்வதுண்டு. அப்போதெல்லாம் நான்  ஒரு பக்த மீராவாகத் தவிப்பின் வலியை அனுபவித்து சுகங்காணுவேன்.ஒரு இருபத்தோராம் நூற்றாண்டுப்  பெண்ணாக வலம் வரும் எனக்குள்ளிருக்கும் ஆண்டாளையும் மீராவையும் ராதையையும் நான் வெற்றிகரமாக அவனிடமிருந்து  மறைத்தே வைத்திருக்கிறேன்.

விரல்நுனிகள் சொட்டையாகுமளவிற்குக் கைபேசியின் எழுத்துக்களால் விளிகளின், கேள்விகளின்  சிறு சிறு சொற்களை  மீள மீள எழுதியலைக்கிறேன்.சொற்கள் உள்ளீடற்றவை என்றாலும் அவற்றின்  உத்திரவாதம் தேவையாகத்தான் இருக்கிறது. தன்னை அறிவுஜீவி என்று இறுமாந்து கொள்ளும்   இந்த மனம் கூட அவனிடமிருந்து பயணித்து வராத எளிய வார்த்தைகளுக்காகத்  தானே அரற்றுகிறது.

இந்தக் குறுகிய காலத்தில் இவனுக்கு அனுப்பியிருக்கும்  வாழ்த்துக்களும் மன்னிப்புகளும் மற்ற  பிறவும்-இதுவரை என்னைச் சூழ்ந்த எல்லா பாத்திரங்களுக்குமாகச் சேர்த்து மொத்த வாழ்நாளில் நான் சொன்னதில்லை. இத்துணை பலவீனமாக முன்பெப்போதும் உணர்ந்ததில்லை. சமயங்களில் என்னை நானே வெறுக்கச்   செய்யும் இந்தப்  போதை அவசியமா? எது அவசியம், அவசியமில்லை என்பது தீர்மானிக்கப்படுவதல்ல; உணரப்படுவது.

பல்வேறு விதமான யோசனைகள் மண்டையோட்டுக்குள்ளிருந்து நெற்றிப் பொட்டை இடிக்க,தலை வலிக்கிறது. கண்ணாடியில்   முகங்கழுவாத, தலை கலைந்த என்னுருவம்  வெடித்த இதழ்களோடு  அச்சுறுத்துகிறது. ஓ....இன்று போதிய தண்ணீர்கூட அருந்தவில்லை. அவன் ஒரு ஈயாகப் பறந்து வந்து  இந்தக் கோலத்தைக் கண்டுவிட்டால் என்னாகும்?!

ஆகட்டுமே. அப்படி ஆனால் இனி  தொமா,தொமாவென்று கால்வரை ஐந்து மீட்டர் ஸல்வாரையும் அதன்மேலே இரண்டரை மீட்டர் துப்பட்டாவையும் அவனுக்குப் பிடிக்குமென்று சுமக்காமல் (உபரியாக லெக்கிங்ஸ் வேறு) ஜீன்சும் சட்டையுமாக லேசாகத் திரியலாம்... அவனது பக்குவமற்ற கடந்தகால அஃபெயர்களைப் போலி  ஆர்வம் காட்டிக் கேட்கவேண்டாம். யாவற்றிற்கும் மேலாக அவனது ஈகோவை  திருப்தி படுத்துவதற்காக ஒரு டீனேஜ்  பெண்ணின் வேடமணிந்து  அந்த முட்டாள் பெண்களைப் பற்றிப் பொறாமையோடு  அவனிடம்  விசாரிக்கத் தேவையில்லை.

பிதற்றும் தொலைக்காட்சியை நிறுத்தியதும் வெறுமை.... வெறுமை. உறைந்திருக்கும்  வெறுமையில் மூச்சைக்கூட ஆழ இழுத்து விட முடியவில்லை.அவன் தொடர்பறுந்து முழுதாக இருபத்திநான்கு மணிகள் கடந்துவிட்டன. புரண்டு புரண்டு படுக்கிறேன். ஸோ வாட்? இந்த உலகின் ஒவ்வோர் அணுவும் தனித்து இயங்கவல்லவை.தனிமை ஒன்றுதான் நிஜமானது.

வெட்கம், மானம், சூடு, சுரணை,இத்யாதி.....இத்தனை அரண்களைக் கடந்து இன்பத்தை அடைவது எளிதல்ல. ஒற்றிய ‘ஹய்ய்ய்’ இம்முறை விரல் நழுவிப் போயேவிட்டது-அவன் எண்ணுக்கு! கைபேசியை நிறுத்திவிட்டு எழுந்து மடக்,மடக்கென்று நீரருந்துகிறேன். நள்ளிரவின் ஒவ்வொரு பருத்த மணித்துளியும் என்மேல் ஒலியின்றி சொட்டுகின்றன. பாரம் தாளாத நான் ஐந்தே நிமிடத்தில் கைபேசியை உயிர்ப்பிக்கிறேன்.

‘ஹாய், இன்னும் தூங்கவில்லையா?’,அவனது இயல்பான விசாரிப்பு வாட்ஸப்பில் காத்திருக்கிறது. என்னுள்   உதிரம்  அநியாயத்திற்குப் பாய்ந்து பாய்ந்து ஓடுகிறது. நானும் இயல்பாகவே,‘படித்துக் கொண்டிருக்கிறேன்’, என்றனுப்புகிறேன்.

‘எந்தப் பரீட்சைக்கு?’மின்னலாய்த் தெறிக்குமிந்த கேலிக்கும் தெனாவெட்டுக்கும்  தான்   நான் அடிமையாகி விட்டேனோ? இதில் என்னால் அவனுக்கு ஈடு கொடுக்கவியலாது.

ஆனால் மெயின்  விஷயத்தில் அவன் சற்று சிரமப்பட்டே எனக்கு ஈடுகொடுப்பதை நானறிவேன்.அவனது கவலையை  அதிகப்படுத்தி  என் ஆற்றலை நிரூபித்துக்  காட்டவேண்டி  நான் வெட்கமின்றி  ஒரு மோகினிப் பிசாசாக  நடந்து கொள்வதும்  உண்டு.

‘கோபமா டார்லிங் ?’ நானென்ன உன் பெண்டாட்டியா-கோபப்பட? ‘புறநகர் தாண்டிப்  போகவேண்டியிருந்தது. தொடர்பு கிடைக்கவில்லை.’ அமர்த்தலாக வருகின்றன சிறு சொற்சரங்கள். ‘இட்ஸ் ஓகே.ஒன்றும் தெரியாமல் சற்று கவலையாக இருந்தது’, வெள்ளைப்  புறாவை  அனுப்புகிறேன்.

‘நீ ஃபோன் செய்து,அல்லது குறுஞ்செய்தி அனுப்பிக் கேட்டிருக்கலாமே ’. அப்படியானால் உள்ளூரில்தான் எந்தத் தடியனோடோ தாகசாந்தி செய்துகொண்டு பொறுக்கிக் கொண்டிருந்திருக்கிறான். இந்த இடத்தில் நான் ஒரு மோப்பநாயைப் போலத் துப்பறிந்து அக்கறையாகக் கண்டிக்க  வேண்டும். இன்றதை நான் செய்யப் போவதில்லை. அப்படிச் செய்தால் அந்நியோன்னியம் கூடும். அடுத்த சந்திப்பில்  மூச்சுத்திணற இறுக்கியணைப்பான். ஒரு பிரம்மாண்டமான   கரடி பொம்மைக்குள்  புதையுண்டு கிடைப்பதைப்போல அவனுக்குள் சுகமாக என்னைத் தொலைக்கலாம்.

‘வழக்கமாக நீதானே முதலில் செய்தியனுப்புவாய்?’ என்ற என் பதிலுக்கு, ‘நீ முதலில் அனுப்பினால் ராஜத் துரோகமாகி விடாது.’ ஆமாம், இவன் பெரிய்ய ராஜா..... மாதக் கடைசியில் நான் ரீசார்ஜ் செய்துகொடுத்த  பஞ்சப் பரதேசி, பரதேசி! இப்போது  ஜியோ வந்துதான்   அந்தச்  செலவு மிச்சமானது.  அவனது செக்ஸியான லோ பேஸ் குரலை, அட்டகாசமான  சிரிப்பை-உடன்   கேட்டாக வேண்டுமென்று கையைக் காலை உதைத்த  மனதைக் காலைவரை பொறு  என்று கிள்ளி அடக்கினேன்.

‘இன்றைய உன் நாள் எப்படிக் கழிந்தது?’ கைபேசியைக் குத்தி நிற்கிறது அவன் கேள்வி. படுத்திவிட்டு  ஆழம் பார்க்கிறான் திருடன். இவனுக்காக  எப்பவும் பரப்பிக்கிட்டுக் காத்திருக்கிறேனாக்கும் !

சில உணர்வுகளுக்கு என்னை நான் விரும்பி ஒப்புக் கொடுத்தால் அதற்கு ஏமாளியென்று அர்த்தமில்லையடா நண்பா. ‘வேலைப்பளு நிறைந்த பரபரப்பான நாள்’, என்று மட்டும்  பதிலனுப்புகிறேன். புழுங்கி சாகட்டும் சனியன்!

ஜூன், 2017.