சிறுகதைகள்

கிடா வெட்டு

காமுத்துரை

கண்கள் மூடிப் படுத்திருந்தான். கதகதவென உடம்பு சுகமாய்த்தான் இருந்தது.  இமைகளைத் திறந்தால் வானத்துச் சூரியனின் கிரணங்கள் விழிகளில் வந்து இறங்கும். ஒருச்சாய்த்துப் படுக்கலாம்தான், ரெட்டை மாட்டுவண்டியின் நுகத்தடியில் அதற்குமேல் புரண்டு படுக்க வசதி யில்லை. கீழே விழுத்தாட்டிவிடும்.

மூடிய கண்களுக்குள் புறவுலகம் ஒடுங்கி, அகவுலகம் விரிந்தது. ஆழமான சுவாசத்தில் ஆனந்தமும், சஞ்சலமற்ற உறக்கமும் வந்தமர்ந்தது. சற்றே நீடித்த பெருமூச்சில் உதடுகள் மெல்ல விலகிட சீழ்க்கை ஒலியாய் மெலிதான குறட்டையும் வெளிப்பட்டது.

“ சிட்டப்பா”

கல்லெறிபட்ட குளம்போல உடம்பு சிலிர்க்க இமைகள் திறந்தான், விழிகள் பக்கவாட்டில் நின்று குல்பி ஐஸ் சுவைத்துக் கொண்டிருந்த சிறுவனைக் கண்டன. அழைத்தது கயத்துக்கடை வைத்திருக்கும் நடு அண்ணனது மகன். 

சிறுவனது உடையும் கையில் கழுத்தினில் தொங்கிக்கொண்டிருந்த விளையாட்டு சாமான்களும் இது வீடு அல்ல. மாரியம்மன் திருவிழா நடந்து கொண்டிருக்கிற இடம் என்பதை அவனுக்கு நினைவுபடுத்தின.

பெரியண்ணன் மகனுக்கு இன்று நிறைவருசம் அக்கினிச்சட்டி எடுத்து கிடா வெட்ட குடும்பத்தோடு மாட்டுவண்டியில் புறப்பட்டு வந்திருப்பதும்; சற்று முன்பு ஆற்றங்கரையில் அக்கினிச்சட்டி வளர்த்து அருளிறக்கி கொட்டுமுழக்கோடு கோயிலில் செலுத்திவிட்டு கூட்டத்தோடு வந்து கூடாரத்தில் சேர்ந்ததும், தான்மட்டும் தனியே பிரிந்து வந்து மாட்டுவண்டியில் கிடத்தியதும்; என நிகழ்வுகள் நொடிப்பொழுதில் வந்தடைந்தன. ஆட்டுக்கிடா அடுப்பில் வெந்து கொண்டிருந்தது. காற்றில் மிதந்துவந்த மசால் வாசனை மூக்கைத் துளைத்தது.

“ என்னா?” தலையை உயர்த்திக் கேட்டான்.

“ அப்பாயி ஒன்னியக் கூட்டுச்சு . .”

“நீ சாப்ட்டியா?” குட்டிப்பயல்களோடு பேச்சுக் கொடுத்தால் குமைச்சல் கலையும்.

அவனது கேள்விக்குப் பதில் சொல்லாமல் “ட்ரும் ட்ரும்” என ஒலிஎழுப்பியபடி தனது வண்டியைக் கிளப்பினான் சிறுவன்.

தூரத்தில் கொட்டு முழக்கங்கள் விதவிதமாய்க் கேட்டன. பம்பையும், தவிலும், பறையும் சேர்ந்தும் தனித்தும் ஒலித்த வண்ணமிருந்தன. இன்று வியாழக்கிழமை மூணாம்நாள் திருவிழா. நேற்றுத்தான் அதிகக் கூட்டம்கூடும். முதல்வருசம் சட்டி எடுப்பவர்களும் பட்டிகளிலிருந்து வருகிற தாய்க்கிராமத்துப் பொதுமக்களும் புதன் கிழமையைத்தான் விரும்புவர். அதற்கடுத்து வியாழக்கிழமை அதிகாலை அம்மன் முத்துப்பல்லக்கில் பவனிவருவதால் வெள்ளிக்கிழமையில் ஒருகூட்டம் வரும்.  இது இரண்டுக்கும் இடைப்பட்ட இந்த நாளில் கிடா வெட்டினால் அரிபறி இல்லாமல் சொந்த பந்தங்களோடு ஆரஅமர உட்கார்ந்து சாமி கும்பிட்டு சாப்பிட்டு எழலாம். அதனால் நடுத்தர மக்கள் விரும்பும்நாள் வியாழன்தான்.

“ஏண்டா, எத்தனதேரந்தான் ஒன்னிய ஆள்விட்டுக் கூப்புடுறது ? அம்பிட்டுக்குப் பெரியாளாயிட்டியா?” அம்மா வந்து நிலம் அதிரச் சத்தம் போட்டது. பக்கத்தில் மனைவி சந்திரா பதுமையாய் வந்து நின்றாள்.

“வாங்க, எல்லாரும் சங்கடப்படுறாகள்ல. வந்தாச்சு. ஆளோட பேரோட நின்னுட்டு போலாம்.”

மனைவியின் பேச்சு அம்மாவுக்கு பிடித்தமில்லை. “ஏன் இப்பென்னா செஞ்சிட் டாக இவன?  ஒழுங்கு மருவாதியா எந்திரிச்சிவந்து அங்கன வந்து நில்லு. சம்பந்தஞ்சாடி வந்திருக்க எடம். நாலுபேர் பாத்து மூணுபேர் சிரிக்க வச்சிடாத ” எச்சரிப்பதுபோல சொல்லி விட்டு மனைவியை அழைத்துக் கொண்டு சென்றது. திரும்பித் திரும்பி பார்த்தபடி சென்ற மனைவியை பதிலுக்கு முறைத்துவிட்டு வண்டியின் நேக்காலில் கால்களிரண்டையும் ஆட்டியபடி உட்கார்ந்தான்.

முதலாமாண்டு சட்டியெடுத்தபோது கங்கணம் கட்ட ஆரம்பித்த நாளிலிருந்து சட்டி செலுத்தி கங்கணக்கயறு அறுத்து ஆற்றில் மிதக்கவிடுவதுவரை பட்டியல் போட்டு அத்தனையும் செய்தவன். அண்ணன் மகனுக்காக தாடிசிரைக்காமல் விரதமிருந்தான். அடுத்தவீட்டில் தண்ணீர் குடிக்காத அளவுக்கு தீவிரவாதியாயிருந்தான்.அய்யப்பனுக்கு மாலைபோட்ட நாளில்கூட இத்தனை கடும்விரதம் மேற்கொண்டதில்லை. அம்மா நெக்குருகிப்போனது. எல்லோரிடமும் அவன் புகழ்பாடலாயிற்று. “ சின்னவெ எப்பவும் என்னப்போல. ஆருக்கு ஒரு இதுன்னாலும் தனக்கானதாத்தான் பாப்பான். அண்ணம் பிள்ளவேற தம்பிள்ளவேறயா ? வகுத்துல பொறந்தாத்தான் கணக்கா ?”

அந்தவருடம் புதன்கிழமை சட்டியெடுக்க முடிவானது.  பகற்பொழுது நெரிசல் அதிகம் வெய்யிலும் தாங்காது. மதியத்துக்குப் பிறகு இறங்குபொழுதில் எடுக்கவும் கூடாது. செல்லம்மா அத்தை சொன்ன யோசனைப்படி அதிகாலையில் கிளம்பினார்கள். குஞ்சு குளுவான்களைப் பூராவும் மாட்டுவண்டியில் ஏற்றிவிட்டு, மற்றவர்கள் வண்டிக்குப் பின்னால் எட்டுமைல் தொலைவு நடந்தே கோயிலுக்கு வந்தார்கள். பாலத்துக்கு முன்புறம் வண்டியை கிடைபோட்டு சட்டிவளர்க்க ஆற்றுக்குள் இறங்கினார்கள். அத்தனை விடியலில் ஆளிருக்கமாட்டார்கள் என்று செல்லம்மா அத்தையின் கணக்கு அங்கே தப்புக்கணக்காகியிருந்தது. முல்லையாற்றின் நீண்ட கரையெங்கும் மருளாளிகள் மஞ்சள் ஆடைகளோடும் கைகளில் வேப்பிலைக் கொழுந்துகளோடும் உடம்பெல்லாம் விபூதிப் பூச்சோடும் ஆடிக்கொண்டிருந்தனர்.

“ண்ண் டக்குந் நக்குன்; ண்ண் டக்குந் நக்குன்;ண்டநக்குந் னக்குன்; ண்டநக்குந் னக்குன் ண்ண் டக்குந் நக்குன்; ண்ண் டக்குந் நக்குன்;ண்டநக்குந் னக்குன்; ண்டநக்குந் னக்குன்”

என்கிற ஒரேமாதிரியான தாளத்தை பம்பையும் உறுமியும் மாறிமாறி கொடுக்க சற்று ஏறக்குறைய அதேதாளத்தை பறையடியும் தனதுபாணியில் முழங்கிக்கொண்டிருந்தன. அந்த அதிகாலையில் ஆற்றங்கரையெங்கும் மொட்டு மொட்டாய் தீ ஜுவாலைகளும் புகைமண்டிய முகங்களுடன் மருளாளிகளும் மங்கையரும் மேல்சட்டைஅணியாத ஆண்களுமாய் அலைகிற காட்சி ஆற்றுநீரிலும் பிரதிபலித்து அன்றைய பொழுதையே ஒரு அற்புதத்தன்மை மிக்கதாகக் காண்பித்தது.

அண்ணன் மகனுக்கும் அருளிறக்க ஒரு இடம் தேர்வு செய்தார்கள். பெரியண்ணன்  ஐம்பது ரூபாயென பேரம்பேசி மூன்று கொட்டுக்காரர்களை அழைத்துவந்து நிறுத்தியிருந்தார். ஆண்களெல்லோரும் மேல்சட்டையை அவிழ்த்துப் போட்டு நிற்க மருளாளியை குளிப்பாட்டி அழைத்துவர  நடுஆற்றுக்குள் இறங்கினான். “குளுர்து சித்தப்பா” மருளாளி நடுங்கினான். “சாமி வாரப்ப அப்பிடித்தே இருக்கும்” என்றவன், “ கொட்டடிச்சு தின்னீறு போட்டதும் நாஞ்சொன்ன ஸ்டெப்ப போட்றணும் சரியா ?” மருளாளி தலையாட்டினான். “போதுஞ் சித்தப்பா” பற்கள் கிட்டிக்கக் கெஞ்சினான். “ மூணுவாட்டி முங்கணுண்டா”

ஆற்றுக்குள்ளிருந்து கைப்பிடிக்குள் அடங்காத நடுக்கத்துடன் மருளாளியை கரைக்கு அழைத்து வந்தான். “யேம் மாப்ள, கொட்டடிக்கல, கொலவ

சத்தம் கூவல, அட,சூடமே பத்தவக்கெல அதுங்குள்ள இம்பிட்டுக்கு ஆடுது சாமி” பாளையத்து மாமா பரிகசித்தார். “கங்கணம் கட்ன நாளையிலிருந்துல்ல ட்ரெய்னிங் தந்துருக்கான்” கயத்துக்கடை அண்ணன் அவருக்குமட்டும் கேட்கிறாப்படி ரகசியமாய்ச் சொன்னார்.

பொதுவாக மருளாளிகள் யாருமே முதல் வருசம் சாமியாட திணறிவிடுகிறார்கள். சீலையம்பட்டி முருகனுக்கு அப்படித்தான் சுத்தமாய் சாமியே வரவில்லை. அவனது அம்மா நிலைகுலைந்து போனார். என்ன குத்தம் செஞ்சோம் என கோயில்கோயிலாக ஏறி இன்னமும் பரிகாரம் தேடிக்கொண்டிருக்கிறது. அதுபோல அண்ணன் வீட்டில் நடந்தால் அண்ணன் சம்சாரமும் அந்தமாதரி ஆகிப்போகும்.

சட்டிவளர்க்க வீரம்மா கிழவியை ஊரிலிருந்து அழைத்து வந்திருந்தார்கள். அதுபாட்டுக்கு வேப்பிலைக் கொழுந்தை பச்சையாக மென்றபடி சட்டியை வாங்கி கிழக்கு நோக்கிக் கும்பிட்டுவிட்டு, பச்சைநெல் தவிட்டில் பசும்பாலும் பசுமாட்டுக் கோமியமும் சேர்த்துப் பிசைந்து சட்டியில் மெத்தியது. அதன்மேல் விபூதியைக் கொட்டிப் பரத்தி, ஒருபாக்கட் சூடவில்லைகளைப் போட்டு பற்றவைத் தது. அதன்மேல் விரல்நீளத்திற்கு வெட்டப்பட்ட வேப்பஞ்சிரகாய்களை ஒவ்வொன்றாய் அடுக்கியது. பெரியண்ணன் சிரகாய்களில் விளக்கெண்ணை ஊற்ற சட்டியில் நெருப்பு கொழுந்து விட்டு எறியத் துவங்கியது.

“ தேங்காய ஒடைங்க” தேங்காய் உடையும் சத்தம் கேட்டதுமே கொட்டுக்காரர்கள் தங்கள் வேலையைத் துவங்கி விட்டார்கள். “டக்குந் நக்குந் ந்ண்டக்குந் நக்குந்” கூடவே பெண்களின் குரவையொலி.

“சட்டியப்பாத்து சாமி கும்புடுப்பா .” மருளாளிக்கு உத்தரவு வந்தது. கையில் வேப்பிலையைப் பிடித்தபடி சித்தப்பனுக்கு எதிர்த்தாற் போல நின்று கும்பிட்டான். “கண்ணமூடிக் கும்பிடுடா” யாரோ குழப்பி விட்டார்கள்.

கண்ணை மூடியவனுக்கு உடம்பின் நடுக்கம் நின்று போனது. மூடிய கண்களுக்குள் உறக்கம்தான் வந்தது. கொட்டுக்காரர்கள் தாளத்தை மாற்றி மாற்றிப் போட்டார்கள். அது தாலாட்டாய்க் கேட்டது. மருளாளி குத்துக்கல்லாய் நின்றான். ஆளுக்காள் வந்து விபூதி போட்டு எழுப்பி விட்டார்கள். நினைத்தது போல பெரியண்ணன் சம்சாரத்திற்கு கிலிபிடித்துக்கொண்டது. அழுதபடி மருளாளியின் காலில் விழுந்தார். “அறிஞ்ச குத்தம் அறியாத குத்தம் எந்தக் குத்தமிருந்தாலும் மன்னிச்சு ஏத்துக்கணும் ஆத்தா. அறியாத பிள்ள.!”

வீரென சத்தம் கேட்டது. அத்தனைபேரும் அரண்டுபோனார்கள். “யேய்ய்” என உடம்பை முறுக்கி கண்களை உருட்டி கையில் வேப்பிலைக்கொத்தை ஏந்தியபடி குதியாட்டம் போட்டான் அவன். “அடிடா அடிடா ம்ம் “ மேளகாரர்களிடம் தனக்கு ஏற்ற தாளத்தைக் கேட்டு வாங்கினான். அதுவரை வெறுமனே அடித்து ஓய்ந்தவர்கள், பிரயோசனமாய் இருக்கட்டும் என உற்சாகமாய் அவனது ஆட்டத்துக்கு ஒப்ப தாளத்தை மாற்றினார்கள்.

“யேய் யேய் யேய்”  ஆடிக்கொண்டே தன்கூட்டத்தாரைச் சுற்றிச் சுற்றிவந்தான். அம்மாவுக்கானால் கண்களில் நீர்கோர்த்துக் கொண்டது. அண்ணி அவனை கும்பிட்ட கைகளை எடுக்காமல் நின்றது. இரண்டாவது சுற்றில் கைநிறைய விபூதியை அள்ளி மருளாளியின் தலையில் ஓங்கி அடித்தான்.“யேய்ய்ய்” அடித்த அடியில் மருளாளியின் கண்கள் திறந்து கொண்டன. எதிரே சித்தப்பாவின் ஆட்டம் கண்ட மருளாளிக்கு உடனே சாமிவந்து விட்டது. “யேய் யேய்” கைகளை ஏந்தி சட்டியை வாங்கிக்கொண்டு அவனும் சித்தப்பனும் கோயில்வரை அசராமல் ஆடிக்கொண்டே வந்தார்கள். இடையில் அண்ணிக்கும் அருள்வந்து அவரும் கொஞ்சதூரம் ஆடியது தனிக்கதை.

அப்போதெல்லாம் அவனுக்குக் கல்யாணம் ஆகவில்லை.

“சிட்டப்பா “ மறுபடியும் சிறுவன் வந்தான். இப்போது உடன் இன்னொரு பையன். இருவரது கைகளிலும் வாழைப்பழங்கள். “ யே வகுறி, எப்பப் பாத்தாலும் தீனியோடதே திரியற” சிரித்தபடி சிறுவனை இழுக்க கைநீட்டினான். எட்டவில்லை.

“ஒன்னிய பெரிம்மா கூட்டிச்சு”  

“சித்திய நா வரச்சொன்னேன்னு சொல்லு” மனைவியுடன் பேசவேண்டும். அவள் யார் பக்கமிருக்கிறாள் எனத் தெரியவில்லை.

“சிட்டியவா ? “ எனக் கேட்டவன், “வாப் பழம் வேண்மா?” கையிலிருந்த பழம் ஒன்றை நீட்டினான்.

“அவரு ஆசாரமானவரு தம்பி. அதுமில்லாம ரெம்ப ரோசக்காரரு. நம்மவீட்டுப் பண்டத்த கண்ணால பாக்கமாட்டாரு. என்னா கொழுந்தனாரே . .” அண்ணி இழுத்துக் கட்டிய சுங்கடிச் சேலையுடன் வந்தார். உடன்வந்த அவரது மகள்கள் இருவரும் பக்கத்து மரத்தடி நிழலில் நின்றனர். இங்கே மாட்டுவண்டி நிழலை முழுவதுமாய் கபளீகரம் செய்திருந்தது. இதுபோல் நிறைய மரங்கள் தோப்பில் இருந்தன. திருவிழா வரும் ஜனங்கள் ஆளுக்கொரு மரத்தில் தஞ்சம் கொண்டிருந்தார்கள்.

வண்டியைவிட்டுக் கீழிறங்கினான். “அசதியா இருந்துச்சு மதனி. அதேன் சித்த இங்கன ஒக்காந்தேன்” வாய்க்கு வந்ததை உளறினான். அண்ணியை மீறி இதுவரை அவன் பேசியதில்லை.

“ஆமாமா. . ! வயசாகுதில்ல. அசதிவரும் அலுப்புவரும் ” என்றவர், தொடர்ந்து “ வசதி வந்தாக்கூட எல்லாமே வரும்.‘ என்றார்.

“ என்னா சித்தப்பு இங்க ஒக்காந்துட்ட, திருவுழாப் பாக்கப் போகலாம்னு ஒன்னியத் தேடிக்கிருக்கம். ”

“எஸ்கேப் ஆகிடலாம்னு பாக்கறியா ? டாலர் வச்ச செய்ன் வாங்கித்தரேன்னு ப்ராமிஸ் பண்ணீருக்க” பெண்பிள்ளைகள் இருவரும் மிச்சமிருந்த நிழல் பார்த்து அருகில்வந்து அவனிடம் ஒண்டினார்கள்.

அவன் நிலை படு மோசமானது. பிள்ளைகளோடு பேசுவதா. அண்ணிக்கு பதில் சொல்வதா. ? ஆற்றிலிருந்து கோயிலுக்குப் போகும் பாதையில்தான் திருவிழாக் கடைகள் நிரம்பி இருந்தன. கோயிலின் மேல்பக்கம் சர்க்கஸ், ராட்சதராட்டிணம், குடைராட்டிணம், கோப்பைராட்டிணம், மரணக்கிணறு, மாயாஜாலக்காட்சிகள் என ஒவ்வொன்றாய் சுற்றிப்பார்க்க நாள் போதாது

“ஒங்க சித்தப்பு நம்மகூட சண்டையாம்” அண்ணி குட்டை உடைத்தார்கள். “சண்டையா . ? எப்பிடீ . .?” அவர்களால் நம்பமுடியாமல் சிரித்தார்கள்.

“நீதேங் கேளு. நேத்து இருந்து நம்ம வீட்ல சாப்ட மாட்டேன்னு சமத்துப் பண்றார். தெரிமா? ”

“ அச்சச்சோ ரெண்டுநாளா பட்டினியா?” சின்னப் பெண் அவனைக் கட்டிப்பிடித்து வயிற்றைத் தடவிக் கொடுத்தது. “சித்திகூடச் சொல்லல. அப்ப சித்தியும் சாப்டலியா?”

“ புருசெங் கைநனைக்காத எடத்தில பொண்டாட்டி மட்டும் சாப்புடுவாளா? ”       

“என்னா சொல்றான். வீட்டு எளவரசன்?” அம்மாவும் வந்தது.

“ வர்ரே மதனி போங்க. கண்டிப்பா வரேன். போங்க”அம்மாவைக்கண்டு பயந்தான்.

“வரவேண்டிதானடா. ஆளுக்கொரு பாதையா. வா” அம்மா கண்ணை மூடிக்கொண்டு பேசியது.

“அம்மா, வரேம்மா. போம்மா,

அசிங்கப்படுத்தாத”

“ ஆரு. ? நாங்களா அசிங்கப்படுத்தறம்? நீதாண்டா மூணுநாளா எல்லாரையும் கேணச்சி யாக்கிக்கிட்டிருக்க; நீ திங்கலேன்னு ஒம்பொண்டாட்டி திங்காமத் திரியறா, ஒங்க ரெண்டுவேரையும் விட்டு நாங்க மட்டும் எங்குட்டு கஞ்சியக் குடிக்க? ஆக மொத்தம் ஆக்குன சோறு, பூராம் குளுதாணி தொட்டிலதான் சேருது. வெலையரிசி வாங்கி இப்பிடி வீணாப்போகுது. என்னாதேன் ஒனக்கு வந்துச்சு. பெரச்சனையச் சொல்லு ”   

“ வேணாம் அத்தை. இப்ப பிரச்சனைய கேக்கவேணாம். இங்க நாம, சாமிக்கு கடன் செலுத்த வந்திருக்கம். நம்ம பாட்ட வீட்லபோய் தீத்துக்குவம். எம்மேல தப்பு இருந்தா மன்னிச்சிக்க பெரியமனுசா. ஒங்க அண்ணன் மேல தப்புன்னாலும் சொல்லு வரச்சொல்றேன். நீ மட்டும் கூட்டத்துல சேந்து நில்லுடா சாமி” அண்ணி மறுபடியும் கையெடுத்துக் கும்பிட்டார்.

“சித்தப்பு டபுள் கேம் ஆடுறியா. எங்ககூடவே இருந்துக்கிட்டு சாப்பாடு மட்டும் எடுத்துக்கலியா சூப்பர். இன்னிமே ஒன்னிய காந்தித் தாத்தான்னு தான் கூப்புடுவோம். அவருதான மத்தவங்களுக்காக தன்னையே வருத்திக்கிடுவார். பாய் காந்தித்தாத்தா” பிள்ளைகளும் அண்ணியோடு கிளம்பினார்கள்.

அம்மாவும் அவனும் தனித்து இருந்தார்கள். வெய்யில் நன்கு ஏறி இருந்தது. தோப்பில் வெக்கை பரவத் தொடங்கியது. உரித்த ஆட்டுத்தோலை சாக்குப்பையில் போட்டு ஊனீர் வழிய சைக்கிளில் வைத்து உருட்டிச்சென்றார் ஒருத்தர். “வாடா . . இன்னம் என்னாடா ஓசன. ஒம்பொண்டாட்டி எதும் சொன்னாளா . ? “

“சிட்டப்பா . மூள வேணுமா?” கையில் சிறுதட்டுடன் மூளைக்கறியை எடுத்து வந்திருந்தான் சிறுவன்.

“குடு. மூள கெட்டவனுக்கு” என அம்மா சொல்லிக் கொண்டிருந்தபோது மனைவியும் வந்து சேர்ந்தாள்.

“ என்னம்மா, கல்லுல நாரு உறிச்சரலாம்போல இருக்கு! என்னாவாம்?”

“அவருக்கு வீதிலவச்சு அழைப்பு விட்டாராம் ஒங்க பெரிய மகெ.. நாங்க சின்னவங்கன்னாலும் எதோ எங்களுக்குன்னு ஒரு ஒட்டுவீடாச்சும் இருக்குள்ள, அங்கவந்து கூப்பிட்டிருக்களாம்ல”

“ ஒரு மூணாம் மனுசன்லயும் கேடாயிட்டனா நானு. “ சொல்லும்போதே அவனுக்கு துக்கம் பொங்கியது. 

“பாவிமக்கா இதான் பெரச்சனையா. ? நா என்னமோன்னு இருந்தேன். ஏய், அவெ ஒம் பிள்ளடா நீ தூக்கி மூக்குசீந்திவிட்ட நாயி. அதுக்கு ஒராள் அழைப்பு விட்டுத்தே வரணுமாக்கும்.”

“வீட்டுக்கு வாரேன்னுதான் சொன்னேன். அதுக்கு அவெந்தா, வீட்ல அந்தப்பிள்ள இல்ல. நாஞ் சொல்லிக்கறேன்னு சொன்னான். ” என பெரியண்ணன் அண்ணியிடம் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

“நேத்திக்கி வரைக்கும் அவெ ஒந்தம்பிப்பா. இன்னிக்கி இன்னொருத்திக்கி புருசன்னில்லியா. அந்த மருவாதிய நாமளும் தரணும்ல பெரியவணே” அம்மாவின்

பேச்சுக்கு பெரியண்ணன் செவி சாய்த்துக் கொண்டிருந்தார். அவன் கூட்டத்தில் கலந்துவிட்டதை அறிந்திடாத  சிறுவன் வறுத்த ஈரலை ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு தன் சிட்டப்பாவை மாட்டுவண்டியில் தேடிக் கொண்டிருந்தான்.

ஜூலை, 2015.