ஓவியம் ஜீவா
சிறுகதைகள்

காராச்சேவு

சீராளன் ஜெயந்தன்

பனங்காய் வண்டியை நீளமான கவட்டைக் குச்சியால் ஓட்டியபடி ஓடிக்கொண்டிருந்தான் பாண்டி. அவனுக்குப் பின்னால், கர கரவென்ற தகர சப்தத்துடன் வேகமாய் வந்தது இன்னொரு வண்டி. பழைய

சைக்கிளின் கம்பிகளற்ற ரிம் ஒன்றை சிறு குச்சியின் உதவியோடு உருட்டியபடி ஓடிவந்தான் பழனிச்சாமி.

‘டேய் பாண்டி, எங்கடா போற?’

‘பலகாரக் கடைக்கி போறேன். சேவு வாங்க,’

 ‘ஏதுடா காசு?’

‘எங்க அப்பத்தா வந்திருக்கு, அஞ்சு காசு கொடுத்துச்சு.’ பாண்டியின் முகமெங்கும் பெருமிதம். சேவு என்றால் அவனுக்கு அத்தனை விருப்பம் மட்டுமல்ல நண்பர்களிடையே அது ஒரு பெருமை. அந்தக் கிராமத்திற்கே, சேவு வாங்கித் தின்பது வசதியானவர்களால் மட்டுமே முடிகிற செயல்.

 காராச்சேவை நொறுக்கியபடி அவர்கள் கடையில் நின்று கொண்டிருந்த போது அந்த ஆளரவமற்ற சாலையில் அமைதியாக கடந்து சென்றது ஒரு பிளை மவுத் கார். ‘டேய், டேய் காமராஜர் போறாருடா’ என்றான் பழனிச்சாமி. காராச்சேவு கடைக்காரர் கிருஷ்ணன் எழுந்து நின்றார் மரியாதையாக. அதற்குள் கார் ஊரின் கடைசி வளைவு தாண்டி போய்விட்டிருந்தது. இந்தக் கண்ணுக்கு எட்டும் தூரமும் அந்தக் கண்ணுக்கு எட்டும் தூரமும்தான் அந்த ஊரின் மொத்த நீளம். மதுரையிலிருந்து விருதுநகர் போகிற சாலை. அதிக போக்குவரத்து இல்லாததால் சாலை சிறுவர்களின் விளையாட்டுத் திடலாகவே இருக்கும். நேரக் கணக்கு வைத்து வருகிற ஜெயவிலாஸ், ஜெயக்குமார் பேருந்துகளும், இப்படி எப்போதாவது வருகிற கார்களும்தான் அந்த வழித்தடத்தின் போக்குவரத்து.

இரண்டு பேர் என்பதால் சேவு ரொம்ப சீக்கிரம் தீர்ந்துவிட்டது. ஒரு நாளைக்காவது பத்து பைசாவுக்கு சேவு வாங்கித் திங்கணும்டா என்றான் பாண்டி. கிருஷ்ணன் சிரித்துக் கொண்டார். அந்த ஊருக்கே அவர் கடை ஒன்றுதான் பலகாரக் கடை. மற்ற பலகாரங்களைவிட, அவர் போடுகிற காராச்சேவும், சீரணியும், ஊர் மக்களுக்கு பிடித்தமானது. ரேஸ் விடலாமா என்றான் பழனிச்சாமி. பாண்டிக்குத் தெரியும், ரிம் வண்டியோடு தன் பனங்கொட்டை வண்டி போட்டிப் போட முடியாது என்று. ‘இல்லடா நான் கஞ்சி எடுத்துக்கிட்டுப்போறேன். அம்மா காட்டுக்குப் போயிருக்கு’ என்றான். ஊரிலிருந்து ஒரு மைல் தள்ளி, சாலையிலிருந்து இறங்கி மாட்டுவண்டித் தடத்தில் ஒரு கிலோ மீட்டர் நடந்து போனால் இவர்களுடைய காடு. கம்பும், சோளமும் வளர்ந்து முதிர்ந்து நின்றது. அம்மா அமர்ந்திருக்கக்கூடிய கருவேல மர நிழல் தெரியும். அம்மாவும் அக்காவும் சோளக் கொல்லைக்குள் கதிர் அறுத்துக் கொண்டிருந்தார்கள். கஞ்சி கொண்டு  சென்ற தூக்குபோணியை மரத்தடியில் வைத்துவிட்டு, பிஞ்சாக கம்பங்கதிரில் ஒன்றை பிடுங்கித் தின்ன ஆரம்பித்தான். இவன் மேட்டில் நிற்பதைப் பார்த்ததும் அம்மாவும் அக்காவும் மரத்தடிக்கு வந்தார்கள்.

‘எங்கடா உங்க அண்ணேன், நீ படிக்கறத விட்டுட்டு ஏன் வந்த?’ என்றாள் அம்மா.

‘அது தூங்குது.., ஐயா வேற கல்லுப்பட்டிக்கு போயிருக்காவலா.. இது படுத்துத் தூங்கிக்கிட்டு இருக்கு.’

‘நீ கஞ்சி குடிச்சியா...’

‘போம்மா, காத்தாலயும் இதே கஞ்சி, இப்பயும் அதேவா..’

‘ராத்திரிக்கு செய்யறேன்டா, சாம்பார் சோறு.. உங்க ஐயா பருப்பு வாங்கிட்டு வருவாரு..’

அம்மாவும் பொண்ணும் செம்புகளில் பகிர்ந்து அண்ணாந்து வாயில் ஊற்றி குடித்தார்கள் கஞ்சியை. பாட்டி சரியான அளவாய், கம்பஞ் சோற்றையும், நீச்சத் தண்ணியையும் மோருடன் கலந்து குடிக்க ஏதுவாயும், ருசியாயும் கலந்து கொடுத்திருந்தாள். தொட்டுக்கொள்வதற்கு, உப்பில் ஊறிய நீளமான பச்சை மிளகாய்கள் இருந்தன. வாசம் கமகமவென்று இருந்தது. வீராப்பு பார்க்காமல் வீட்டில் போய் ஒரு செம்பு குடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

கிளம்பும்போது மடியில் கட்டி வைத்திருந்த சிறிதளவு பருத்தியை எடுத்து அவனிடம் நீட்டினாள் அம்மா. ‘போற வழில, சேவு வாங்கிக்கிட்டு போடா’ என்றாள். இதை வைத்திருந்து நாளைக்குதான் சேவு வாங்கவேண்டும், இன்றைக்கு அப்பத்தா கொடுத்த காசில் சேவு வாங்கித் தின்றாகிவிட்டது என்று மனதில் கணக்கு போட்டுக் கொண்டான். அம்மா எங்கோ பக்கத் துக்காட்டில் பருத்தியைத் திருடியிருப்பது தெரிந்தது. ஐயாவிற்குத் தெரிந்தால் திட்டுவார்.

மறுநாள் பள்ளியிலிருந்து திரும்பும்போது, மதுரை நோக்கிப் பஞ்சு லாரி போய்க்கொண்டிருந்தது. பஞ்சு ஏற்றிச் செல்லும் லாரிகள் எடையின் காரணமாக ரொம்பவே மெதுவாகத்தான்  செல்லும். பாண்டியின் நண்பர்கள் சிலர் ஓடிப் போய் மெதுவே செல்லும் லாரியில் தொங்கிக் கொண்டு இயன்ற மட்டும் பருத்தியை பிய்த்துக் கொண்டு இறங்கினார்கள். முன்பொரு முறை லாரியிலிருந்து குதிக் கும்போது தாவாங்கட்டை அடிபட்டுவிட்டது பாண்டிக்கு, அதிலிருந்து இந்த விளையாட்டில் இறங்குவ தில்லை. மேலும் நேற்று அம்மா கொடுத்த பருத்தி பத்திரமாய் இருப்பதால் அந்த லாரியைத் துச்சமாகப் பார்த்தான்.

வேகமாய் வீட்டிற்கு ஓடி வந்து, அடுப்பங் கரையிலிருந்த பரண் மேல் ஏறி நேற்று வைத்த பருத்தியைத் தேடினான் கிடைக்கவில்லை. கத்தினான். ‘டேய் எங்கடா, பருத்தியை எடுத்தியாடா?’

கீழே துவரை மூட்டைமேல் படுத்திருந்த அண்ணன் நாராயணசாமி, ‘நாங்க ஒண்ணும் எடுக் கல்ல..’ என்றான் பதில் கத்தலாக. அண்ணனுக்கும் தம்பிக்கும் சண்டை சூடுபிடித்தது. அப்போதுதான் உள்ளே வந்த அம்மா, ஏன்டா கத்துறிங்க... தெருமுக்கு வரைக்கும் கேக்குது... மானம் போகுதுடா... ’

‘இவன் பருத்தியை நான் தான் எடுத்தேன்னு சண்டைக்கி வாரான்ம்மா...’ என்றான் நாராயணசாமி.

 ‘ஆமா, இவன்தான் எடுத்திருப்பான்’ ‘டேய்.. காலைல உங்க அக்காவப் பொண்ணு பாக்க வந்தாங்கடா, சட்னிக்கிப் பொட்டுக்கடலை வாங்கலாம்னுட்டு நான்தான் எடுத்தேன்டா’ என்றாள் அம்மா.

அதிர்ச்சியான பாண்டி ‘போம்மா...’ என்று ஓடிப்போய் ஒரு மூட்டையின் மேல் குப்புற விழுந்து அழத் தொடங்கினான். நீண்ட அழுகை ஓய்வதாய் இல்லை. தகப்பன் டவுனிலிருந்து வாங்கி வந்த ஜிலேபியை கொடுத்த போதும் வாங்கிக் கொள்ளவில்லை.

‘இந்த பாருடா முத்தழகி கல்யாணத்துக்கு ஆகுற செலவுல, உனக்கு ஒரு கிலோ காராச்சேவு வாங்கிக் கொடுக்குறேன்டா. இல்லைனா அவ கல்யாணத்துக்கு வராதே..’ என்று கண்டிப்பாய்ச் சொன்னாள் அம்மா. ‘போம்மா..’என்று வெட்கி ஓடி ஒளிந்த அக்காவின் குரல் அவனுக்குக் கேட்டது.

விம்மியவாறே தூங்கிப் போனான் பழனி. நள்ளிரவில் ஏதோ சப்தங்கள் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தான். ஏதோ களேபரம், புரியவில்லை. வீட்டில் யாரையும் காணவில்லை. அப்பத்தா தெருவில் நின்று பேசுவது கேட்டது. வெளியே மக்கள் ஓடுவது தெரிந்தது. சட்டென்று எழுந்து வெளியே ஓடி வந்தான்.

‘என்ன ஆச்சு அப்பத்தா...’

‘எவனோ, வைக்கப் படப்புக்கு நெருப்பு வைச்சுட்டான்டா, ஊரே அல்லோல கல்லோலப்படுது...’ என்றாள்.

ஊரின் வடகிழக்கே, குளத்தின் மறுகரையில் ஒரு பொட்டல் காட்டில் பத்து பனிரெண்டு சம்சாரிகளின் இருபதுக்கும் மேற்பட்ட வைக்கோல் போர்கள் இருந்தன. ஒரே இடமாய் இருந்தால் பராமரிப்பதும், பாதுகாப்பதும் எளிது என்பதால் அந்தப் பொட்டலில் சீமைக் கருவேலச் செடிகளால் வேலி செய்து படப்புகள் வேயப்பட்டிருந்தன. ஒரு படப்பு எரிகிறது என்றால், எல்லாமும் அழிந்தது என்றே பொருள்.

ஓவியம்

வேகமாய் ஓடிச் சென்று குளத்தங்கரையில் நின்றான். நெருப்பு, அனல், முகத்தில் அறைகிற வெளிச்சம் அப்படியொரு காட்சி அவன் பார்த்ததேயில்லை, பூமியே பற்றியெரிகிற மாதிரி. கிட்டத்தட்ட இருபது படப்புகள், பனை உயரத்திற்கு எழுந்து நெருப்பு படமெடுத்து ஆடியது. வற்றிப்போன குளத்திலிருந்தும், குளத்தின் நடுவேயிருந்த நல்ல தண்ணீர் கிணற்றிலிருந்தும் இறைத்து இறைத்து தண்ணீரை ஊற்றினார்கள், ஆண்களும் பெண்களும், சிறியவரும் பெரியவரும். இறைக்கப்பட்ட நீர், வாளியோ, குடமோ, கை மாறி கை மாறிப் பயணித்து எரியும் ‘வைக்கோல் போருக்குச்’ சென்று சேர்ந்தது. பெருநெருப்பை எச்சில் துப்பி அணைப்பது போலத்தான் இருந்தது அவர்கள் முயற்சி. மனிதனின் இயலாமை வெட்ட வெளிச்சமாய் தெரிந்தது. இந்தக் கரையில் நின்றிருந்த பெண்கள் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர். அக்கா முத்தழகி அங்கு நின்றிருந்தாள். அம்மாவும், அய்யாவும் தண்ணீர் இறைத்து ஊற்றிக் கொண்டிருக்கிறார்களாம்.

‘அக்கா, ஏன்க்கா அழுவுற என்றான்,?‘ பாண்டி.

முகத்தை திருப்பிக்கொண்டு வீட்டைப் பார்த்து ஓடிவிட்டாள் முத்தழகி.

குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த பொடிசுகளில் பழனிச்சாமி தென்பட்டான். அவனருகே போய் அமர்ந்துகொண்டான். ‘என்னடா ஆச்சு?’ என்றான்.

‘அது மொத ஆட்டம் சினிமா வுடறதுக்குள்ளயே எரிய ஆரம்பிச்சுடுச்சு. சினிமாக் கொட்டகை யிலிருந்துதான் போன் பண்ணித் ‘தீ’ வண்டி வரச்

சொல்லியிருக்காங்க.’ என்றான் பழனி.

‘இன்னும் வரலையா..?’

’இந்நேரம், வந்துருக்கணும், காணோம்..’

‘எப்படிடா ஆச்சு?’

எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். எவனாவது வேண்டாதவனை அழிக்க நினைத்தால், பழிக்குப் பழி வஞ்சகம் வைக்கப் படப்புதான் பற்றி எரியும். ஏதாவது கைச்செலவுக்கு ஆகும் என்று அவனவன் ‘வைக்கோல் போரை’ காப்பாற்றி வைத்திருப்பான், தேவை வரும்போது விற்றுக்கொள்ளலாம் என்று. ஆனால் கயவர்களுக்கும் அதுதான் போட்டியை வீழ்த்தும் உயிர்நாடி.

“திருமங்கலத்திலிருந்து தீ வண்டி வரணும்.. இன்னும் வரக்காணோம்’ என்றான் ஒருவன்.

அம்மாவும், அக்காவும் அழுதுகொண்டிருந்ததை நினைக்கும்போது, தன் குடும்பத்திற்கும் ஏதோ பெரிய துயரம் வந்துவிட்டது என்று புரிந்தது பாண்டிக்கு. அக்காளின் கல்யாணப் பேச்சு வரும்போதெல்லாம், ‘இருக்கும் இரண்டு படப்புகளையும் விற்றுவிட்டால் நம்ம மாட்டுக்கு தீனிக்கு எங்க போறதாம்?’ என்பாள் அம்மா. ‘பொண்ணு கல்யாணத்தைவிட, மாடு முக்கியமா போச்சா உனக்கு’ என்று அதட்டுவார் அய்யா. அக்காவின் கல்யாணச் செலவோடு செலவாக நிறைய காராச்சேவு வாங்கித் தருவதாகவும் சொல்லியிருந்தார்.

தூரத்திலிருந்தே தீ வண்டியின் மணியோசை கேட்டது. வேகமாய் வந்த தீயணைப்பு வாகனங்கள் சுறுசுறுப்பாய் செயல்பட்டன. அவர்கள் வேகமாய் ஓடுவதும், வருவதும் போவதும், குழாய்களை மாட்டி தண்ணீரை பீய்ச்சி அடிப்பதும் சினிமா காட்சி போல் இருந்தது சிறுவர்களுக்கு. பெரியவர்கள் கிணற்றில் இறைத்துக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். எரிந்து கொண்டிருந்த படப்புகள் மீது பரவிய நீர் மெல்லிய சப்தத்துடன் மடிந்துபோனது. வேலி ஓரமாய் இருந்த வைக்கோல் போர்களின் மீது முதலில் நீரை பாய்ச்சி அடித்தார்கள். முழுதும் எரிந்துவிட்ட படப்புகளைத் தாண்டி எரியாமல் இருக்கிற படப்புகளை  சென்று சேரமுடியவில்லை தீயணைப்பு வீரர்களால். நெருப்பில் விழுந்த நீர் திரும்ப தரைவழி ஓடி வந்து அருகே நிற்பவர்களின் கால்களில் சுடுநீராய் சுட்டது. ஓரமாய் இருந்த படப்புகள் கரிகட்டையாய், சாம்பலாய் உதிர்ந்தன.

ஒரு மணி நேரத்தில் இரண்டு வாகனங்களின் நீரும் தீர்ந்ததே தவிர, உள் வரிசையிலிருந்த படப்புகள் ஓங்காரமாய் எரிந்து கொண்டுதான் இருந்தன. ‘தண்ணி எங்க கிடைக்கும்’? என்று வீரர்கள் கேட்க, எல்லோரும் கையைப் பிசைந்தார்கள். இந்தக் கிணறு, அந்த ஊரணி என்று ஆளாளுக்கு சொல்ல, நல்லாண் கிணற்றில்தான் கொஞ்சம் தண்ணீர் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று பலர் கூற, இரண்டு வண்டிகளும், சில உள்ளூர் வாசிகளும் கிளம்பினார்கள். ‘அடக் கிரகமே, இவிங்க எப்ப போயி தண்ணீ எறச்சு, எப்ப வந்து இந்த தீயை அணைக்கிறது?’ என்று அங்கலாய்த்தாள் ஒரு பெண். தண்ணீரைத் தேடி குளம் குளமாய், கிணறு கிணறாய் அலைந்தார்கள். அவர்களுக்கும் தெரியும் இந்த வறட்சியிலும் வெயிலிலும் தண்ணீர் கிடைக்காது என்று. நெருப்பை வைத்த அந்த மனிதனுக்கும்தான் தெரிந்திருக்கும், தண்ணீர் பற்றாக்குறையால், எல்லாமும் எரிந்து சாம்பலாகும் என்று.

பாண்டிக்கு உறக்கம் கலைகையில், காலை ஏழு மணி. எழுந்து குளத்தங்கரைக்கு ஓடினான். வெளிச்சத்தில் கரும்புகை வானைத் தொட முயன்று கொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் திரும்பிச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார்கள். அநேகமாக எல்லா படப்புகளும் சாம்பலாகிக் கிடந்தன.

வீட்டில் துயரம் அப்பியிருந்தது. அக்காள் மூலையில் சுருண்டுபடுத்து யாருக்கும் தெரியாமல் அழுதுகொண்டிருந்தாள். அப்பா தெருவில் உட்கார்ந்து பீடியோடு ஐக்கியமாகியிருந்தார். வீட்டில் எல்லாம் அசைவற்றிருந்தது. புரிந்தும் புரியாமலும் பள்ளிக் கூடத்திற்கு கிளம்பினான். அக்கா பாவம், இவனுக்காக படிப்பை விட்டுக்

கொடுத்தவள். ஒன்பதாம் கிளாஸில் பெயிலாகிப் போன முத்தழகி, ஒன்பதாம் கிளாஸுக்கு வந்துவிட்ட தம்பியுடன் சேர்ந்து ஒரே வகுப்பில் படித்தால் பார்க்க அசிங்கமாக இருக்கும் என்பதால் படிப்பை நிறுத்திக்கொண்டாள். இப்போ கல்யாணப் பேச்சும் நின்று போனது. ‘தனது காராச்சேவு கனவு அவ்வளவுதானோ?’ என்று நினைத்துக்கொண்டான்.

ஒரு வாரம் கழித்து மெல்ல இயல்பிற்கு திரும்பிக் கொண்டிருந்தது வீடு. அக்காவும் அப்பத்தாவும்,  சாணி மெழுகிய தரையில் தாயக்கட்டை உருட்டிக் கொண்டிருந்தார்கள். அம்மா ஏதோ வேலையாய் அடுப்பங்கறையில் இருந்தாள். வாசலில் ஓடுகிற கால்வாயில் சிறுநீர் கழித்துவிட்டு, கால்வாய் மேற்குக்கரை குட்டை சுவற்றில் அமர்ந்தான் பாண்டி. பக்கத்தில், இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுகளும், கொஞ்சம் வெற்றிலை பாக்கும் இருந்தது. ஆச்சரியப்பட்ட பாண்டி எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினான், ‘அம்மா, அம்மா, இங்க பாரேன், பத்து ரூபாய்!’

வெளியூர் செல்பவர்கள் பஸ்ஸிற்காக காத்திருக்கும் போது அந்தக் குட்டைச் சுவரில் அமர்ந்திருப்பது வழக்கம். அவர்களில் யாரோ விட்டுச் சென்றிருக்கலாம். அம்மாவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி அவனையும் தொற்றிக்கொண்டது. ‘யார்ட்டயும் சொல்லிடாதே’ என்றாள் அம்மா. ‘சரிம்மா‘ என்று வெளியே ஓடி நண்பர்களின் கபடி ஆட்டத்தில் சேர்ந்து கொண்டான். கொஞ்சம் ஒல்லியான தேகம் என்பதால், பாண்டி, எப்போதும் ‘ஒப்புக்கு’ சப்பாணிதான். சிறிது நேரத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே, அந்த குட்டைச் சுவரின் அருகே யாரோ எதையோ தேடுவதைப் பார்த்தான்.

‘தாத்தா, என்ன தேட்றிங்க?’ என்றான் அருகில் சென்று. அவர் தனது இரண்டு ஐந்து ரூபாயைக் காணவில்லை என்றார். ‘இங்க வாங்க, நான்தான் எடுத்து எங்க அம்மாகிட்ட கொடுத்தேன்’ என்று அவரை வீட்டிற்குள் இட்டுச் சென்றான். ‘அம்மா வையுமோ’ என்று நினைத்தான். விவரமறிந்து கொண்டு அம்மா அந்த இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுகளையும், அவரது வெற்றிலைப் பொட்டலத்தையும் கொண்டுவந்து கொடுத்தாள். இவனைப் பார்த்து ஓரக்கண்ணால் ஒரு முறை முறைத்தாள். தொலைத்தவரின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, இருட்டிய வீட்டில் கரண்ட் திரும்பி வந்ததுபோல் இருந்தது. பாண்டியை அப்படியே கட்டிக் கொண்டு, ‘என் ராசா, நல்லா இருப்படா,’ என்றார். ‘என்னம்மா, பிள்ளை வளர்த்திருக்கே! நல்ல பிள்ளை, ஒளிக்காம மறைக்காம சொல்றானே.. நல்லா இருப்பான்ம்மா’, என்றார் அம்மாவிடம். ‘இப்பத்தாம்மா ஒரு மூட்டை கம்பு கொண்டு வந்து போட்டுட்டு, சங்கரநாராயணன் கடையில பத்து ரூபா வாங்குனேன், தொலைஞ்சு போச்சுன்னா, நான் என்ன ஆவுறது? ஊரு திரும்பக்கூட கையில காசு இல்லை. பஸ்ஸுல சீட்டு வாங்க சட்டைப்பையில கையவுடுறேன், காசக் காணோம். பதறிப் போயி ஓடிவந்தேன். நீ மவராசனா இருக்கணும்டா ராசா... ’

‘சரிங்க அய்யா, உட்காருங்க, ஏதாவது காப்பித் தண்ணி போட்டுத்தாரேன்’ என்றாள் அம்மா. ‘இப்போதானே முறைத்தாள், அப்புறம் எப்படி காப்பித் தண்ணி கொடுக்கட்டுமான்னு கேக்குறா அம்மா?’ என்று நினைத்தான்.

‘அதெல்லாம் வேணாம்மா, உன் பிள்ளை என் வயித்துல பாலை வார்த்திருக்கு, வாடா ராசா வா, உனக்கு ஏதாவது வாங்கித் தாரேன்’ என்றவர். ‘இதென்னம்மா, வயசுக்கு வந்த பிள்ளைய இன்னும் வீட்டுல வச்சுருக்கிங்க.?’

முத்தழகி குனிந்து கொண்டாள்.

‘ஆமாங்கய்யா, கோபிநாயக்கன்பட்டியில மாப்பிள்ளை பார்த்தோம், போன வாரம் வைக்கப்படப்பு எரிஞ்சு போனதுல எல்லாமே நின்னு போச்சு’ என்றாள் அம்மா, சிறிது கண்கள் கலங்க.

‘கோபிநாயக்கன்பட்டியா? யாரும்மா அது?’

‘தெற்குத் தெரு ராஜுவோட புள்ள, கண்ணன்னு பேரு...’

‘ராஜுவா, நம்ம புள்ளைதான், கவலையவுடும்மா... நான் பாத்துக்குறேன். ராசா வா ராசா..’ என்று பாண்டியை இழுத்துக் கொண்டு எதிரே இருந்த கிருஷ்ணன் கடைக்குச் சென்றார் அந்தப் பெரியவர்.

அரை கிலோ காராச்சேவு வாங்கி பொட்டலத்தோடு அவன் கையில் திணித்துவிட்டுக் கிளம்பினார். பாண்டிக்கு மகிழ்ச்சி எல்லை தாண்டியது. பள்ளிக்கூட அசெம்பிளியில் அனைவரும் கைதட்டி பாராட்டியதைப் போல் மகிழ்ச்சி. இத்தனை பெரிய பொட்டலத்தை அவன் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. தூக்கிக் கொண்டு ஓடினான் வீட்டிற்குள். அம்மா உட்பட எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

‘உன் கடன் கழிஞ்சாதான், உங்க அக்காவுக்குக் கல்யாணம் ஆகும் போல...’ என்றாள் அம்மா நிம்மதிப் பெருமூச்சோடு.

ஜூலை, 2017.