ஓவியம் கே.கே.துரை
சிறுகதைகள்

கரை சேராத மகள்

அகரமுதல்வன்

தெருப்புழுதியைக் காற்றெழுப்பியது. பூ ராணி செத்துப்போனாள் எனும் செய்தியை அறிந்து ஊரே அவள் வீட்டுவாசலில் நின்றது.

பூ ராணியின் கரை சேராத மகள் மூச்சறுந்து நின்றாள். தலைமாட்டில் எரியும் குத்துவிளக்கிலிருந்து ஒளி அலைந்து தெறித்தது. மிக வேகமாக பூ ராணி செத்துப் போய்விடுவாள் என்று கம்பித்தோட்டம்  சாத்திரி போனகிழமை சொல்லியிருந்தான். அவன் சொல்லி எட்டு நாட்களில் நடந்துவிட்டது.

பூ ராணியின் கரை சேராத மகள் தாயின் இரண்டு கால்களையும் கண்களால் ஒற்றிக் கண்ணீரால் கழுவிக்கொண்டிருந்தாள். கரை சேராத மகளுக்கு இப்போது ஒரு கண்ணும் இரண்டு கால்களும் இல்லை. இன்றைக்கு இயக்கம் இருந்திருந்தால் பூ ராணிக்கு நாட்டுப்பற்றாளர் பட்டம் கொடுத்திருப்பாங்கள் என்று சொல்லத் தொடங்கினான் கதைசொல்லி.

ஆயிரத்து தொள்ளயிராத்து எண்பத்தெட்டில் பூ ராணிக்கு புழுகுத் திரவியத்தோடு கலியாணம் நடந்தது. புழுகுத் திரவியத்திற்கு வேலைக்குப் போவதென்றால் தேசத்திற்கு துரோகமிழைப்பது மாதிரி. பூ ராணிக்கு வயிற்றில் பிள்ளை தங்கிய பிறகேனும் அவன் வேலைக்குப் போகவில்லை. வீட்டின் பின்னாலுள்ள அரைப்பரப்புக் காணியில் தோட்டமென்றாலும் செய்யுங்கோ, இப்பிடி பூ ராணி கெஞ்சும் போதெல்லாம் புழுகுத்திரவியம் கோபப்பட்டு வீட்டிலிருந்து வெளியே போய்விடுவான். பிறகு மதியச் சோறுக்காக வந்துவிடுவான். பூ ராணிக்கு பிள்ளை பிறந்த அன்றைக்குக் கடுமையாக குடித்திருந்த புழுகுத்திரவியம் குளக்கரையில் படுத்திருந்தான். இரவு வீட்டிற்கு வந்து கத்திக் கூச்சலிட்டவனுக்கு பிள்ளை பிறந்திருக்கும் விஷயத்தைப் பக்கத்து வீட்டு செட்டிதான் சொன்னான். எனக்கு சொல்லாமல் பிள்ளையைப் பெத்திருக்கிறாள் வேஷை என்று புழுகுத்திரவியம் பேசினான். பிறகான காலங்களிலும் அவளை அப்படியேதான் கூப்பிட்டான். தினக்கூலி போல அடியும்,உதையும் பூ ராணிக்கு விழுந்துகொண்டேயிருந்தது. ஆத்திரம் தாங்காமல் ஒருநாள் திருவலைக்கட்டையால் புழுகுத்திரவியத்தின் நடுமண்டையை பிளந்தாள். இரத்தம் ஒழுகிய மண்டையைக் கைகளால் பிடித்தபடி வீட்டைவிட்டு ஓடிப்போன புழுகுத்திரவியம் மாலைதீவுகள் அரசை அகற்றப் போராடிக்கொண்டிருந்த புளொட்டில் இணைந்திருந்தான்.

சாப்பாட்டுக்காய் ஓலை பின்னி உழைத்தாள் பூ ராணி. தென்னந்தோப்பில் நிறைய பேர் வேலை செய்தாலும் யாரோடும் பெரிதாகக் கதைக்கமாட்டாள். பிள்ளையை நித்திரையாக்கி ஒரு பாயில் கிடத்திவிட்டு பின்னத் தொடங்கினாள் என்றால் மதியத்திற்குள் அம்பது ஓலைகளை முடித்துவிடுவாள். தோப்பில் வேலை பார்க்குமொருவன் பூ ராணியை வளைத்துவிடலாமென எளிதாகக் கணக்குப்போட்டுத் திரிந்தான். இதையறிந்த அன்றிலிருந்து அவள் தோப்புக்கு வேலைக்குப் போவதில்லையென முடிவெடுத்தாள். புருஷன் இல்லாத பெம்பிளை கேட்கிறவன் எல்லாருக்கும் கால்விரிக்கத்தானே வேணுமென்று தோப்பில் வேலை பார்க்குமவனே பூ ராணியின் வீட்டிற்கு முன்னால் வந்துநின்று கத்தினான். கிழிந்திருந்த சட்டையொன்றை தைத்துக்கொண்டிருந்த அவளுக்கு ஆத்திரம் மிகுந்தது. கைக்கெட்டும் தூரத்தில் கிடந்த மீனரியும் அரிவாளைத் தூக்கிக் கொண்டு பூ ராணி படலைக்கு நடந்துவருவதைக் கண்ட அவன் நின்றதற்கு தடயமேயில்லாமல் மறைந்தான்.

குழந்தை பிறந்து ஆறு வருடங்களாகியதன் பிறகு இராணுவத்தின் மினி காம்ப் அவளின் வீட்டுக்கருகில் அமைக்கப்பட்டது. அவளின் பிள்ளையை இராணுவத்தினர் பெயர் சொல்லிக் கூப்பிடுவார்கள்.

பூ ராணி போகவேண்டாம் என்று மறித்தும் அவளோடிப் போய் என்ன என்று கேட்பாள். ரம்புட்டான் பழங்களைக் காட்டி வேலிக்கருகில் அழைப்பார்கள். பூ ராணியின் பிள்ளைக்கு ரம்புட்டான் பழத்தை அறிமுகப்படுத்தியது இராணுவத்தினர்தான். அவளுக்கு ரம்புட்டான் என்றால் இதயம் நழுவித் துடிக்கும். ரம்புட்டானை வாங்கி நன்றி சொல்லுவாள். அம்ம எங்க? இராணுவம் கேட்கும் போது நித்திரை என்று சைகை செய்து கொண்டே கால்களைப் பின்வைத்து நடக்கத் தொடங்குவாள். ரம்புட்டான் பழங்கள் பூ ராணிக்காய் தருவிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன. அவள் வீடு மாறிப்போகவேண்டுமென்று நினைத்துக் கொண்டு கதவை இறுகச் சாத்தினாள்.

அதிகாலையில் சுடுபடும் சத்தம் கேட்டு எழும்பினாள். நித்திரையில் இருந்து எழும்பியவுடன் மூத்திரத்திற்கு போகுமொரு பழக்கம் அவளுக்கு. வெளியில் போக பயமாகவிருந்தது. பக்கத்து காம்ப்பிலிருந்து பரபரப்பாக சிங்களத்தில் கத்தும் சத்தம். பூ ராணிக்கு மூத்திரம் முட்டி கஷ்டமாகவிருந்தது. கதைவைத்திறந்து வெளியே போனாள். முகத்தில் மோதுவது போல வெடிச்         சத்தம் திசைகளில் வீசியது. பக்கத்து முகாமிலிருந்து வாகனமொன்று வெளியே விரைந்து போனது. பறவைகள் மரக்கிளைகளிலிருந்து இறகுகளை அலகுகளால் உதிர்த்தன. அவள் கால்களைக் கழுவிக்கொண்டு வீட்டிற்குள் நுழைகையில் ரம்புட்டான் பழங்களோடு கண்களைக் கசக்கினாள் மகள். அன்றைக்கு காலையில் நடந்த சண்டையில் மூன்று இயக்கப்பெடியள் செத்துப்போயிருந்தார்கள். ஆனால் இராணுவத்தினர் பத்துக்கும் மேற்பட்டவர்கள் செத்துப்போன கோபம் பார்க்கிறவர்கள் மீது வெறியாகப் பாய்ந்தது. ஊரிலுள்ள வீடுகளுக்குள் புலிகள் ஒளிந்திருப்பதாகச் சொல்லி இராணுவத்தினர் சோதனைகளை நடத்தினர். கிராம சேவையாளராக இருந்த கணபதிப்பிள்ளையின் வீட்டையே

சுற்றிவளைத்து சோதனை செய்த இராணுவத்தினர் பூ ராணியின் வீட்டிற்குள் இறங்கவில்லை. காலையில் கோயிலுக்குச் சென்ற அவளை வீட்டுக்குத் திரும்பிப் போகும்படி ரம்புட்டான் ஆர்மி சொன்னான். அவனின் கண்களுக்குள் விஷம் கொண்ட பாம்பு அசைவதை பூ ராணி கண்டாள். வீடு மாறவேண்டுமென்று நினைப்பு அவளைத் தீண்டத்தொடங்கியது. ஆர்மிக் காம்ப்புக்கு பக்கத்தில இருக்கிறதில நிறையப் பயமிருக்கு ராணி, அதுவும் ஆம்பிளை இல்லாமல். அது சரிவராது. நீ கொப்பரோட போய் இரு என்று பார்க்கிற சொந்தக்காரர்கள் எல்லோரும் சொன்னதன் அர்த்தம் அவளுக்குத் தெரிந்தது. நீரூறி இடிந்து சரியுமொரு மண்சுவராய் பிள்ளையை அணைத்தபடி வீட்டிற்குள்ளேயே இருந்தாள்.

ஆறு வருடங்கள் கழித்து ஓடிப்போன புளொட் புழுகுத் திரவியமெழுதிய கடிதமொன்று பூ ராணிக்கு வந்திருந்தது. கைக்குழந்தையாக விட்டிட்டுப் போனவன் பிள்ளை வாசித்தறியும் காலத்தில் கடிதம் எழுதியிருக்கிறான் எனக் கொதித்துக்கொண்டிருந்தாள். தகப்பனின் முகமே நினைவிலில்லாப் பிள்ளை கடிதத்தை வாசித்தாள். கடிதம் வந்த அன்றைக்கு இரவு கழுத்துளுக்கி பூ ராணியின் வீட்டிற்கு வந்திருந்தான். அவனை, தனது அறையிலேயே பூட்டிவைத்து உடுப்புகள் அடுக்கியிருந்த சூட்கேசால் மறைத்து வைத்தாள். தன்னைப் பேர் சொல்லி அழைக்கும் ஒருவனாக கழுத்துளுக்கியிருந்ததால் பூ ராணியின் மகளுக்கு அவன் மீது தனிவிருப்பமிருந்தது.

சாதனா என்று அழைத்தவுடன் துள்ளலோடு அவனின் மடியில் ஏறிநின்று முடியைப்பிடித்து இழுப்பாள். நேற்றைக்கு அதிகாலை நடந்த சண்டையைக் கழுத்துளுக்கியே தலைமை தாங்கி நடத்தியதாகவும், அதில் வீரச்சாவு அடைந்தவர்களின் உடல்களை இராணுவம் கைப்பற்றியது கவலை அளிப்பதாகவும் மிக ரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தான். கழுத்துளுக்கிக்கு பூ ராணி அரிசி மாக்குழைத்து உருண்டையாக்கிக் கொடுத்தாள். நேற்று காலையிலிருந்து காட்டிற்குள் பதுங்கிக் கிடந்தவனை பசி நெருங்கியிருக்காத போதும் சாப்பிட்டு பிளேன் டீயையும் குடித்தான்.

ஓவியம்

ஆர்மி தேடித்திரியும் ஆளாகவிருக்கிற கழுத்துளுக்கி பூ ராணிக்கு எதையோ சொல்லிக் கொண்டேயிருந்தான். ஓசை எழாத இருவரின் உரையாடல் பெருத்த சத்தத்திற்கான அறிகுறி. கழுத்துளுக்கி பெருகும் இறுமாப்போடு கைகளை அசைத்து அசைத்து முன் நகர்ந்து சொல்லும் போது அவள் கண்கள் வியப்பில் திறந்து மூடியபடி இருந்தன. கழுத்துளுக்கி வீட்டிலிருந்து வெளிக்கிட்டு போகும்போது இரவின் மீது பனையோலை வீழ்ந்தது. அவன் அசையாமல் நிலத்தோடு இருந்து பின்னர் இருளோடு மறைந்தான். ஒரு பெருமூச்சுக்குப் பின்னர் பூ ராணிக்குத் தலைவிறைத்தது.

சிலநாட்களின் பின்னரான அமாவாசை இரவொன்றில் மழை பெய்து கொண்டிருந்தது. பிள்ளையோடு வீட்டிற்குள் கிடந்த பங்கருக்குள்ளேயே படுத்திருந்தாள் பூ ராணி. மின்னல் சதிகாரனைப் போல வெளிச்சமிட்டுக் கொண்டேயிருந்தது. வழமைக்கு மாறாக பூ ராணியின் மகளிடமிருந்து மழலைத்தனம் நீங்கியிருந்தது. பனைப் பொந்தினுள்ளே இடிவிழ மிரளும் கிளிக் குஞ்சாய் தாயின் நெஞ்சைப் பற்றிக்கொண்டிருந்தாள். மழையின் பாதங்கள் வேட்கையோடு விழுந்தன. பொழுதுகளற்ற நாளில் தனித்தவளாய் தனது கண்களை மூடிக் கொண்டாள். பக்கத்துக் காம்ப்புக்குள் வெடிகள் விழத்தொடங்கின. இரண்டு பக்கத்தில் இருந்தும் சூடு சொரிந்தது. மழையின் இரைச்சலைக் குண்டுகள் வீசியெறிந்தன. தோட்டாக் களின் வெறும் கோதுகள் மழை நீரில் நீந்தும் காட்சியைக் கற்பனை செய்து பார்த்தாள். கொஞ்சம் கூட அவளுக்குப் பயம் பிறக்கவேயில்லை. காம்பிலிருந்த இராணுவம் சிங்களத்தில் கத்திக்கொண்டு இவள் வீட்டுக்காணியால் ஓடிய சத்தம் மழையின் ஈரலிப்பை சூடாக்கியது. துவக்குச் சூடு தன் வீட்டை நோக்கி வராது என்று பூ ராணிக்கு உறுதியாக தெரிந்திருந்தாலும் பங்கருக்குள்ளேயே இருந்தாள்.

சண்டைச் சத்தம் ஓய்ந்து முடிந்து கொஞ்ச நேரத்தில் ஊரின் நாய்கள் குரைக்கத் தொடங்கின. தப்பியோடிய இராணுவத்தினர் பத்தைகளுக்குள் இருந்து தீப்பற்றி எரியும் காம்ப்புக்குள் போகத் தொடங்கினார்கள். அடுத்த நாள் காலையில் இராணுவம் ஊரையே சுற்றி வளைத்திருந்தது. இந்த காம்ப் தாக்குதல் கழுத்துளுக்கிக்கு இயக்கத்தில் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. தாக்குதலுக்கான வேவுத்தகவல்களை வழங்கிய பூ ராணி பற்றி இயக்கத்தின் தலைமைக்கு தகவல் வழங்கப்பட்டது. சிலகாலம் கழித்து ஆனையிறவை மீட்டதற்காய் நடந்த வெற்றிவிழா நிகழ்வில் பூராணிக்கும் சாதனாவுக்கும் முக்கியப் பிரமுகர்கள் அமரும் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. இயக்கப்பாடல்கள் இசைக்கும் பொழுது எழும்பியாடவேண்டும் என்ற ஆர்வம் அவளுக்குள் எழும்பியது.

2006ம் ஆண்டு இயக்கம் வீட்டிற்கு ஒருவரை படையில் சேருங்கள் என்று அறிவிப்பை வெளியிட்டது. பதினாறு வயதாகியிருந்த சாதனா இயக்கத்திற்குப் போகப்போவதாக தாயிடம் சொன்னபோது பூ ராணி மறிக்கவில்லை.

சின்னப்பிள்ளை நீ, இயக்கம் உன்னைச் சேர்க்காது, அப்பிடிச் சேர்த்தாலும் படிக்கத் தான் விடுவினம் என்றாள். ஆனால் சாதனா அடம்பிடித்துக் கொண்டிருந்தாள். தமிழினியை சந்திரிக்கா என்று கூப்பிடுமளவுக்குத் தெரிந்திருந்த பூ ராணி அடுத்தநாளே தமிழினியைச் சந்தித்தாள். அவளைப் படிக்கச் சொல்லுங்கோ, பதினாறு வயசில போராட்டத்தில இணைச்சதெல்லாம் எங்கட காலத்திலதான். இப்ப அதெல்லாம் இல்லையெண்டு விளங்கப்படுத்துங்கோ ராணி அக்கா என்று தமிழினி கூறியதை சாதனாவிடம் சொன்னாள். தமிழினிச் சித்திக்கு எரிச்சல், நானும் போராளி ஆகி சித்தி கட்டியிருக்கிற பிஸ்டலைக் கட்டிப்போடுவன் எண்டு நினைக்கிறா என்று ஏசினாள். உன்ர தமிழினிச் சித்தி நாளையிண்டைக்கு வீட்டவாறதாய் சொல்லியிருக்கிறாள் வந்ததும் இதைச்சொல்லு வாயிலேயே வெளுப்பாள் என்றாள் பூ ராணி.

சாதனா பள்ளிக்கூடத்திற்கு வெளிக்கிட்டு போன ஒரு திங்கட்கிழமை மதியத்தில் மயக்கமாகி வீட்டின் கிணற்றடியில் விழுந்துகிடந்தாள் பூ ராணி. பிறகு தானே தெளிந்து விழித்து எழுந்தாள். அன்றைக்குப் பின் நேரமே ஆஸ்பத்திரிக்கு போய்க் காட்டிக் கொண்டு வந்தாள். இதயத்தில் சில நேரங்களில் எழும் வலியைப்பற்றியும், தலைச்சுத்தல் பற்றியும் மருத்துவரிடம் சொல்லி ஒரு மாதங்கள் கடந்த பின்னர் அவளுக்கு இதயத்தில் ஓட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகான ஒரு இரவை சாதனா பூ ராணியைக் கட்டிப்பிடித்துக் கடந்தாள். யுத்தம் உக்கிரமடைந்து இடம்பெயர்ந்து போகும் வழிகளிலெல்லாம் மயக்கமடைந்து கொண்டேயிருந்த தாயின் அருகில் பாரமளுந்தக் கிடக்கும் பூச்சியாய் இருந்தாள் சாதனா. புதுமாத்தளன் ஆஸ்பத்திரியில் தாய் சிகிச்சை பெற்ற நாட்களில் சாதனாவிற்குத் தமிழினியின் பொறுப்பில் நின்ற ஒரு போராளிப் பிள்ளையே சாப்பாட்டைக்கொண்டு வந்து கொடுத்தாள். காயக்காரர்களும், பிணங்களும், அழுகுரல்களும் நிறைந்திருந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் நிகழ்ந்த எறிகணைத் தாக்குதலில் சாதனா காயப்பட்டாள். புதுமாத்தளன் ஆஸ்பத்திரியில் மருந்துகள் இன்றி செய்யப்பட்ட சிகிச்சையில் சாதனாவின் இரண்டு கால்களையும் மரமறுக்கும் சிறிய மிஷினால் நீக்கினார்கள். சிதைந்து கிடந்த கண்ணுக்கு மருந்திட்டு துணிகட்டினார்கள். போர்வலயப்பகுதிக்கு வந்து போய்க் கொண்டிருந்த ஐ.சி.ஆர்.சி கப்பலில்  பூ ராணியும் சாதனாவும் ஏற்றப்பட்டார்கள். கப்பலில் ஏறுகிற கடைசி நிமிடத்தில் பூ ராணி ஒரு பெண் போராளியின் கைகளைப் பற்றி “தங்கச்சி நாங்கள் தோத்துப்போடுவமோ, நாங்கள் தோற்கக்கூடாது” என்று கண்ணீரைத் துடைத்துக் கடல் நீரில் வீசினாள். அலைகளில் அசையத் தொடங்கிய கப்பலில் கால்களற்ற சாதனா சிறுத்துப்போன ரத்தக்கன்று போலிருந்ததை பூ ராணியால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. இயக்கத்தை விட்டு ஆர்மியிட்ட போகிறோம் என்கிற தவிப்பு ஒருபுறம், தனது நோயினால்தான் பிள்ளைக்கு கால்களும், கண்ணும் போய்விட்டது என்கிற குற்றவுணர்ச்சியும் பூ ராணியை சிதைத்து வதைத்தது.

சாதனா வலியால் துடிக்கிற போதெல்லாம் வெள்ளைக்கார மருத்துவர் அவளுக்கு மருந்துகளை ஏற்றிக்கொண்டேயிருந்தார். கப்பல் போய்நின்ற அந்தக்கரை முழுக்க இராணுவத்தினரே நின்றிருந்தார்கள். கப்பலிலிருந்து நடக்க முடிந்தவர்களை நிர்வாண சோதனைக்குள்ளாக்கி கரையில் அமரவைத்தனர். பூ ராணி கரை சேராத தன் மகளுக்காய் காத்திருந்த நேரத்தில் அவளைத் தூக்கிவந்தார்கள். அவளும்  சோதனை செய்யப்பட்டாள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆறேழு மாதங்கள் கழித்து செட்டிக்குளம் முகாமிற்குள் அடைக்கப்பட்டார்கள். இரண்டு ஆண்டுகளாய் முகாமிற்குள் இருந்து சனங்கள் ஊருக்கு வந்த சொற்பமாதங்களில் இறந்துபோயிருந்தாள் பூ ராணி.

பூ ராணியின் சாவையடுத்து சுடலையை ஊர்ப்பெடியள் சேர்ந்து துப்புரவு செய்தார்கள். பிணத்தை வைத்து எரிப்பதற்கான இடத்தை ஒரு மேடைபோல ஆக்கினார்கள். ஈமச்சடங்குகள் முடிந்து பூ ராணியின் உடல் வீதியால் தூக்கிச் செல்லப்பட்ட மதியத்தில் மழை தூற்றல் விழுந்தது. பிணத்தின் பின்னே ஊரில் உள்ளவர்கள் நடந்துபோய்க்கொண்டிருந்தனர். தாய்க்கு கொள்ளி போடுவதற்காய் இரண்டு கால்களுமற்ற சாதனா ஒரு வண்டியில் ஏற்றப்பட்டு சுடலைக்கு கொண்டு சேர்க்கப்பட்டாள். பூ ராணியின் உடலில் தீமூட்டிய சாதனாவின் நீக்கப்பட்ட கண்ணிலிருந்து கண்ணீர் ஒழுகியது. துப்புரவு செய்யப்பட்ட சுடலையில் எரிந்துகொண்டிருந்த பற்றைக்குள்ளிருந்து சன்னம் வெடித்தெழும்பியதும் கதை சொல்லி சுற்றுமுற்றும் பார்த்து நாட்டுப்பற்றாளர் பூ ராணிக்கு வீரவணக்கம் என்று கத்தினான். பூ ராணியின் கரை சேராத மகளின் கண்ணீர், தாயின் சிதை எரியும் வெக்கையில் காய்ந்தது. இந்தச்சம்பவம் நிகழ்ந்த மறுநாளே கதைசொல்லி காணாமலாக்கப்பட்டிருந்தான். 

டிசம்பர், 2017.