ஓவியம் வேல்முருகன்
சிறுகதைகள்

ஒரு நாள் பயணம்

சுபஸ்ரீ தேவராஜ்

ஐந்து மணி வரை டொக் டொக் என பந்து மட்டையில் படும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. சத்தம் ஓய்ந்ததும் தலையை வெளியே நீட்டினேன். சிலர் மட்டும் வீதியில் நடந்துகொண்டு இருந்தனர். இதுதான் தக்க சமயம் என்று நம் உறவுகளோடு வெளியில் வர வேண்டும் என்று நினைத்து வெளியே வந்தேன் ஒரு புற்றிலிருந்து. என்னைப் பாம்பு என்று நினைத்திட வேண்டாம். நான் ஈசல்.

இறகுடன் வானைச் சுற்ற வந்தேன். எதிரில் என்னைப்போல் ஈசல் ஒன்றைப் பார்த்தேன். நண்பராக பழகலாம் என்று நினைத்தேன். நினைத்த மாத்திரத்தில் உன் பெயர் என்னவென்று கேட்குமுன் “என் பெயர் ஜனவரி' என்று அறிமுகப்படுத்தியது. நாகரீகம் கருதி “என் பெயர் பிப்ரவரி' என்று நான் என்னை அறிமுகப்படுத்தினேன். உடனே “உன் பேர்போல் தான் உன் வாழ்க்கையும்' என்று கிண்டல் அடித்தது. பிறகு தான் புரிந்தது ஈசலின் வாழ்நாள் ஒருநாள் என்பது வாழ்நாள் எத்தனை நாட்களாக இருந்தால் என்ன நாம் சுதந்திரமாக பறப்போம் என்று பறக்க ஆரம்பித்தேன். எனக்கு என் தாய், தந்தை அவர்களின் அனுபவத்தை வைத்து எப்படி இந்த ஒரு நாளை கடக்க வேண்டும் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அம்மா, அப்பா பேச்ச யார் தான் கேட்பார்கள். நான் மட்டும் என்ன விதி விலக்கா? என்னதான் அப்பா, அம்மா அனுபவத்தை கடைப்பிடிக்க நினைத்தாலும் என் மனச வேற கட்டுப்படுத்த முடியல. இந்த வீதி விளக்கு “பூக்கள் வண்டுகளை அழைப்பதுபோல' என்னை இழுக்குது. இப்படி எத்தனை சோதனை இந்த ஒரு நாளுக்கே? என்னைப்போல் மனக்கட்டுப்பாடு யாருக்கு வரும் என்று பெருமைப்பட்டுக் கொண்டு இருந்தேன். வீதி விளக்கை நோக்கி படையெடுத்த ஈசல் நிலைமை படுமோசம். அதனை என்னவென்று சொல்வது வேடிக்கை தான் பார்த்துக் கொண்டு இருந்தேன். அறிவுரை யாருக்குதான் பிடிக்கும்.

எனக்கும் தான் பிடிக்காது. சில ஈசல்கள் தரையில் மேய அதனை தவளைகள் நாக்கை வெளியே நீட்டிப் பிடித்துத் தின்றன. இதுகூட பரவாயில்லை. புரட்டாசி மாசமா பார்த்து வெளியே வந்தாலும் எங்களைப் புடிச்சி பதப்படுத்தி வைத்து புரட்டாசி கழித்து தின்னக் காத்து இருக்கிறார்களே என்று புலம்பிக் கொண்டேயிருக்கையில், இருட்டில் சென்றால் நமக்கு ஆபத்து இல்லை என்று யோசித்து நுழைந்தேன். ஒரு கூரையின் மேல் இருந்து பார்ப்பதற்கு மின்மினிப்பூச்சி ஒளிபோல் இருந்தது. அதனால் மின்மினி பூச்சி ஒளியிலேயே வந்துவிடலாம் என்று எண்ணி நெருங்கினேன். நெருங்கும் தூரத்தில் இருந்தாலும் மின்மினிப் பூச்சி நம்மை தின்னாது. இதேபோல் நம் வாழ்நாள் நீடிக்கவும் வாய்ப்பு உள்ளது என்று நினைவலை ஓடி முடியும்முன் ஒளியை அடைந்துவிட்டேன். அது மின்மினி பூச்சி ஒளிஅல்ல. ஒரு பாட்டி வீட்டில் எல்லா விளக்கையும் அணைத்துவிட்டு, ஒரு அன்னக்கூடையில் தண்ணீர் ஊற்றிவிட்டு தண்ணீரின் நடுவில் ஒரு கனமான பொருளை வைத்து அதன்மீது விளக்கை வைத்துக் காத்துக் கொண்டு இருந்தார். எங்களைப் பிடிக்கத்தான். சில ஈசல்கள் பிணமாகி இருந்தன; தண்ணீரில் சில உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தன. ஈசல்கள் கால்களையும் தலைகளையும் அசைத்துக்கொண்டு இருப்பதைப் பார்த்துவிட்டு எட்ட நின்று தனிமையில் யோசித்தேன்.

குளியல் அறையில் வாளியிலுள்ள தண்ணீரில் இறகை நனைந்த நிலையில் பறக்க முடியாமல் துடிப்பதைப் பார்த்துவிட்டு கண்டும் காணாமல் பல்துலக்கி கொண்டே பார்வையிட்டு கொண்டே இருந்தாள் ஒருபெண். அந்த வாளி அருகில் நின்று அவள் முகம் கழுவும் தண்ணீரில் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். தண்ணீரில் அவள் முகம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. தண்ணீரில் எங்கள் இனத்தின் இறகுகள் தான் இருந்தன. முகம்தான் தெரியவில்லையே கையால் தான் அள்ளிப் போட்டால் என்ன சிலர் பிழைக்க வாய்ப்பும் இருந்தது. அவள் முகம் தெரியவும் வாய்ப்பு உண்டு. ஆனால் அவள் அதைச் செய்யவில்லை. தனிமையில் இருந்த நான் எங்கும் செல்ல விரும்பவில்லை. சரி புற்றுக்கே செல்ல நினைத்தேன். வந்து பார்த்தேன். யாரும் இல்லா அரண்மனையாய் காட்சி அளித்தது. பயத்தின் உச்சிக்கே சென்று என்னை அறியாமல் இறகு மேலும் கீழும் அசைக்கத் தொடங்கியது. மேலே செல்லத் தொடங்கினேன். ஒரு ஓட்டை மூன்று கம்பி இடையில் இருந்தது. உள் காற்றை இழுத்து வெளியேவிட்டு கொண்டு இருந்தது மின்விசிறி. குளியல் அறையில் ஒரே மூச்சாய் உடலுக்கும் இறகுக்கும் எந்த சேதாரமில்லாமல் நுழைந்தேன். ஆனால் மீள முடியவில்லை. இறகுகள் ஒட்டடையில் ஒட்டிக்கொண்டு இருந்தன. அருகில் விமானம் செல்லும் சத்தம், பைக் ரேஸ் சத்தம் என்று எத்தனையோ இடையூறு அதிர்வுகள். ஆனால் ஒட்டிக் கொண்ட இறகு பிரிய மனமில்லாமல் அந்தரத்தில் பறந்து மாலை சாத்தும் பக்தனின் வேண்டுதல்போல் ஆனது. எனது நிலைமை எந்த பக்தனுக்கு வரும். எந்த பக்தன் இரவு முழுவதும் வேண்டுதலை நிறைவேற்றுவான். வேண்டுதலே இன்றி நிறைவேற்றினேன்.

அந்த ஓட்டையின் வழியாக பல வண்ணங்கள் தெரிந்தன. அதனைப் பார்த்துக் கொண்டே இரவை கழித்தேன். காலையில் காற்று, மழை எனத் தொடங்கியது. வீசிய காற்றில் நான் ஒட்டடையில் இருந்து விடுதலை அடைந்தேன். சுதந்திரமாகப் பறக்க நினைத்தேன். காற்றின் விசையாலும் மழையின் சாரலாலும் எனது இறகு லேசாக நனைந்ததாலும் பறக்க முடியாமல் ஒரு பக்கமாக தள்ளப்பட்டேன். மூலையில் இருந்த வாளியில் இறகுகள் முதலில் விழ, என்னை நனையாமல் பார்த்துக் கொண்டது. கையில் பொருள் இன்றி உடற்பயிற்சி செய்துகொண்டு இருப்பதுபோல் இருந்தன. எனது உடல் அசைவுகள். அவள் இரவில் பல் துலக்கினாள். அதை பார்த்த எனக்கு, காலையிலும் அச்செயலை கண்டவுடன் இரவா? பகலா? என்ற ஐயவினா தோன்றியது. என்னைப்போல் அவளுக்கும் ஐயம் வந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை. இரவு பகலாகவும் பகல் இரவாகவும் விடுதி மாணவர்களுக்குக் காட்சி அளிப்பதில் வியப்பொன்றுமில்லை. ஒரு வழியாக அவள் என்னைப் பார்த்துவிட்டாள் என்பதை அவள் என் ஒரு இறகை மட்டும் தூக்கும்போது அறிந்துகொண்டேன். இறகில் இருந்த ஒரு சொட்டுத் தண்ணீர் என்னை முழுவதும் ஈரமாக்கியது. அருகில் விசில் சத்தம் கேட்டது. அவள் உயரத்தில் இருந்து என்னை ‘பொத்‘தென்று போட்டுவிட்டுச் சென்றாள்.

இறகை இழுத்துக்கொண்டு நகரத் தொடங்கினேன். என்னை மறந்துவிட்டு அவள் வேலையில் மூழ்கினாள். எனது அருகில் கால் அதிர்வு சத்தம் கேட்டது. அவள் என் அருகில் நான் உணர்ந்தேன். எனது ஒரு இறகை மீண்டும் தூக்கினாள். நான் துடித்துப் போனேன். கையில் நகவெட்டியைப் பார்த்தேன். பதறிபோய் விட்டேன். என்னை சமைக்கத்தான் போகிறாள் என்று பல கற்பனையுள் நுழைந்தேன். அதற்குள் என் இறகை உலர்த்த வெயிலில் விட்டாள். நான் சுருண்டேன். என்னை நிழலில் விட்டபோது இறகு காய்வதற்குள் நான் கருவாடாகிவிடுவேன் என்பது அவளுக்கு புரிந்ததுபோல் உணர்ந்தேன். வெட்டினாள் இறகை மட்டும், உயிர்பெற்றேன். ஆனால் பறக்கமுடியவில்லை. கொஞ்ச தூரம் கடக்கும்முன் என்னை எறும்புகள் மொய்க்கத் தொடங்கின. இரவு எட்டு மணி இருக்கும். பரவாயில்லை என் வாழ்க்கையின் நோக்கம் ஒரு நாளை தாண்ட வேண்டும். ஒரு நாள் கடந்து 3 மணி நேரம் ஆகிவிட்டது. வலியிலும் மகிழ்ச்சியான யோசனையில் மூழ்கிய என்னை நான்கு எறும்புகள் சேர்ந்து தூக்கிச் சென்றன. எறும்புகளின் புற்றுக்குள் சென்றேன். இன்று பிப்ரவரி 29 ஞாயிற்றுக்கிழமை, எறும்புகளுக்கு தகுந்த உணவுதான் நான். என் ஆயுளைக் கிண்டல் அடித்த ஜனவரியை தின்றுக் கொண்டு இருந்த எறும்புகள் என்னை நோக்கிப் படையெடுத்தன. நான் மகிழ்ச்சியின் ஓரத்திற்கே சென்று கண்ணை மூடினேன்.

பஸ்ரீ தேவராஜ் (43) திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு படிக்கிறார்.

ஜனவரி, 2023.