பி.ஆர்.ராஜன்
சிறுகதைகள்

உத்தரவு

எம்.கோபாலகிருஷ்ணன்

பாபநாசம் சாலை விலக்கிலிருந்து கிழக்கில் வலங்கைமான் போகும் பாதையில் ஐந்து கிலோமீட்டருக்கு அப்பால் வயல்வெளிகள் சூழ உள்ளடங்கிக் கிடந்தது நல்லூர். நாணற்புதரிடைய வெள்ளைப் பூக்களை ஏந்தி நின்ற தண்டஞ்செடிகள் இருபுறமும் அடர்ந்திருக்க சலசலத்தோடிய வாய்க்கால் கரையில் தலைசாய்த்து நின்றிருந்தன கொக்குகள். மூங்கில் புதரைத் தாண்டியதும் வண்டிப் பாதை வளைந்து ஊருக்குள் நுழைந்தது. கருத்த வளையோடுகளும் பழுப்படைந்த சுவர்களுமாய் சிறிய வீடுகள்.  தெரு முனையில் நொறுங்கிய பனையோலைகள் மூடிய பழம்தேரின் சக்கரங்கள் ஒடிந்து நின்றன. கார் சத்தம்கேட்டு டீக்கடையிலிருந்து உருமாலை கட்டிய நெடிய உருவம் எட்டிப் பார்த்தது.

கார் நின்றதும் பெருமூச்சுடன் கதவைத் திறந்து இறங்கினாள் மங்களா ‘‘பகவானே...'' கிழக்கு கோபுரத்துக்கு எதிரில் சப்தசாகர குளம். வெயில் பட்டு தகதகத்திருந்த தண்ணீர் படிகளைத் தொட்டிருந்தது. வேங்கை மரத்திலிருந்து சரிந்திறங்கிய காகம் படியில் தத்தி நின்றது. தலை சாய்த்துப் பார்த்தது. வடக்குக் கரையில் முங்கியெழுந்த உருவம் இடுப்புத் துண்டை பிழிந்தபடி மேலேறியது.

‘‘ஆளே வரமாட்டாங்க போல...'' கோபுர வாசலைத் தாண்டியதும் சங்கரனிடம் கேட்டேன். கொடிமரத்தைக் கண்டதும் மங்களா கன்னத்தில் போட்டுக்கொண்டாள். நிறம் மங்கிய பிரகாரத்து கோபுரத்தில் கறுத்திருந்தன சுதை சிற்பங்கள். விளக்குத் தூணின் அடிவாரத்தில் பாம்புகள் பின்னி நிற்கும் சிற்பம் எண்ணெய் பூச்சுடன் பளபளத்தது.

‘‘இன்னிக்கு வியாழக்கிழமை. பெரிசா யாரும் வர வாய்ப்பில்லை'' சங்கரன் வேட்டி நுனியை தூக்கிப் பிடித்தபடி இடதுபக்கமாய் ஓலைச்சாய்ப்பிலிருந்த கடையை நோக்கி நடந்தார்.

‘‘வாங்கோண்ணா...'' வில்வத்தை தொடுத்த படியிருந்தவர் தலை நிமிர்ந்து சிரித்தார்.

‘‘நடை தெறந்தாச்சா?'' சங்கரன் செருப்புகளை உதறி ஓரத்தில் விடுத்தார்.

‘‘ஆச்சு. குருக்கள் இதோ வந்துருவார். நீங்க உள்ள போங்க'' வெற்றிலை கறை படிந்த பற்களுடன் சிரித்தார்.

பிரம்புக்கூடையில் கிடந்த வில்வ இலையொன்றை எடுத்து நீட்டினார் சங்கரன். ‘‘தெரியுதா?''

‘‘வில்வந்தானே...''

‘‘வில்வம்தான். ஆனா இது மகா வில்வம். நல்லா பாரு. ஏழு இலை இருக்கும்'' என்று தொட்டுக் காட்டினார்.

மங்களா ஆவலுடன் வாங்கிப் பார்த்து தலையாட்டினாள். ‘‘ஆமாமா. வழக்கமா பாக்கற வில்வ எலை இல்லே. இதுதான் கனாவுல நான் பாத்தது.'' அவள் கண்களில் உற்சாகம் கொப்புளித் தது.

வேட்டியை இடுப்பில் இறுக்கியபடியே கடைக்குள்ளிருந்து வெளியில் வந்தார் கடைக்காரர் ‘‘அதோ நந்தவனத்துக்குள்ள நிக்குது பாருங்க. இங்க அர்ச்சனைக்கு இதுதான் விசேஷம்.''

இரண்டுமுழ வில்வத்துடன் பிரகாரத்துக்குள் நுழைந்து இடதுபக்கம் திரும்பினார் சங்கரன். மீண்டும் வலதுபுறம் திரும்பியதும் மேலேறின படிகள். ‘‘இது மாடக்கோயில். கர்ப்பகிரகம் மேலேதான். திருவானைக்கா கதை தெரியுமில்லையா. அதுமாதிரி யானையெதும் வரக்கூடாதுன்னு செங்கணச் சோழன் கட்டினதா சொல்லுவாங்க.''

சுற்றுச் சுவர்மீது ‘கீச் கீச்' என ஓசை எழுப்பியபடி தத்திய பச்சைக்கிளிகளின் வரிசையைக் கண்டு சந்தோஷத்துடன் நின்றிருந்தாள் மங்களா. வேர்வைத் துடைத்தபடியே ஓரச்சுவரில் அமர்ந்தாள். காதிலிருந்த கல்வைத்த தோடு டாலடித்தது. ‘‘இது ரெண்டாவது அடையாளம். சரியா வருதில்ல.''

‘‘எனக்கென்னவோ இந்தக் கோயிலுக்கெல்லாம் ஏதும் விசேஷ நாள்லதான் ஜனங்க வருவாங்கன்னு தோணுது. நீயென்னவோ இங்கதான் உனக்கு உத்தரவு கெடைக்கும்னு வந்திருக்கே'' முழங்காலைப் பற்றியபடி சொன்னதும் மங்களா சிரித்தாள்.

‘‘உனக்கு இன்னும் நம்பிக்கை வரலேன்னு தெரியறது. இருக்கட்டும். வந்தாச்சு. கொஞ்ச நேரத்துல தெரிஞ்சுடப் போறது. இத்தனை நேரம் பொருத்துட்டே. இன்னுங் கொஞ்ச நேரம் எனக்காக பொறுத்துக்கோயேன்'' எழுந்து படிகளில் ஏறினாள். மங்களா அப்படித்தான். நினைத்த காரியம் நடக்கும்வரையிலும் ஓயமாட்டாள்.

இடுங்கிய மேல்பிரகாரத்தில் நுழைந்ததும் சில்லென்ற காற்று முகத்தில் மோதியது. கருங்கல் தளத்தின் குளிர்ச்சி உள்ளங்காலைத் தொட்டது. சங்கரன் உள்ளே எட்டிப் பார்த்தான். கற்தூண்களுடனான சிறிய மண்டபத்தை அடுத்து கிழக்கு நோக்கி கர்ப்பகிரகம். ஊஞ்சல் விளக்கில் ஒற்றைச் சுடர்.

சின்னஞ்சிறு லிங்கமாய் பஞ்சவர்ணேஸ்வரர்.

‘‘வாங்கோண்ணா. பால் வரதுக்கு சித்த நாழியாயிடுத்து'' என்றபடியே இடுப்பில் சிவப்புத் துண்டுடன் குருக்கள் உள்ளே நுழைந்தார். வலதுகையில் துணிப்பை. இடதுகையில் தூக்குவாளிகள் இரண்டு. மங்களாவும் நானும் கைகூப்ப தலையாட்டியபடியே படிகளிலேறி கர்ப்பகிரகத்தை நோக்கி நடந்தார். தடதடவென சத்தம் எழுப்பியபடி பின்னாலேயே ஓடிவந்த சிறுவனின் கையில் பெரிய பூக்கூடை.

‘‘பத்தே நிமிஷம். ரெடி பண்ணிடறேன். நீங்க அப்பிடியே சித்த உக்காருங்கோ'' உள்ளிருந்து குரல் வந்தது.

தென்புறம் நோக்கி நின்ற கிரிசுந்தரியையும் உள்ளிருந்த கல்யாணசுந்தரரையும் பார்க்கும்படியாக மங்களா அமர்ந்ததும் எதிரில் உட்கார்ந்தேன். சங்கரன் என்னருகில் உட்கார்ந்தான் ‘‘மாசி மகத்தன்னிக்குத் தான் இந்த கோயில்ல விசேஷம். அன்னிக்கு ஒருநா இங்க கால்வைக்க எடமிருக்காது. காசில போய் காரியம் பண்ண முடியாட்டியும் இங்க பண்ணா போதும்னு சொல்லுவாங்க.''

‘‘மத்த நாள்ல யாரும் வரமாட்டாளா?'' மங்களா என்முகத்தைப் பார்த்தபடியே கேட்டாள். காதோரத்தில் அலைந்த கூந்தல் கற்றையை இழுத்துச் செருகினாள்.

‘‘கும்போணத்துக்கு வர டூரிஸ்டுகளுக்கு இந்தக் கோயிலைப் பத்தி பெரிசா தெரியாது. யாராச்சும் சொன்னாத்தான் உண்டு. பிரதோஷம், அமாவாசைனு நாள்பாத்து வருவாங்க. மத்தபடி இதுமாதிரி எடநாள்ல ஒண்ணுமிருக்காது.''

மங்களா கிரிசுந்தரியை ஏறெடுத்துப் பார்த்தாள். ஒற்றைச் சுடரின் ஒளியில் பச்சைப் பட்டு மினுமினுத்தது. ‘‘அவதான் அழைச்சிருக்கா. பாப்போம்.''

‘‘கோச்சுக்காதே. இந்த நாள்தான்னு எப்பிடி நீ உறுதியா சொல்றே?'' நான் தயங்கியபடியே கேட்டேன். சென்னையிலிருந்து நேற்று காலை புறப்பட்டதிலிருந்து நான்காவது முறையாக கேட்கும் கேள்வி இது.

மங்களா கண்களை மூடியபடியே புன்னகைத்தாள். சின்னஞ்சிறு மூக்குத்திப் பொட்டு மின்னி நின்றது. ‘‘நேக்கு நன்னா நெனவிருக்கு. ஐப்பசி மாசம் இருபத்தி ரெண்டு இன்னிக்குத்தானே. விசாக நட்சத்திரம். இதே நாள்தான். அவ கனவுல வந்து சொன்னது என்கிட்டதானே. எனக்குத்தானே தெரியும்.''

நான் சிரித்தபடியே சொன்னேன் ‘‘கனவுங்கறதுனாலதான் கேக்கறன்.''

மங்களா கைகூப்பினாள் ‘‘சித்த சும்மா இருக்கியா. வந்தாச்சில்ல. என்ன நடக்குதுன்னுதான் பொறுமையா பாரேன்.''

சங்கரன் என் தொடையில் கைவைத்து அழுத்தினான் ‘‘இவ்ளோ தூரம் தேடி வந்தாச்சில்ல. சும்மா இரேன்டா.''

‘‘நீ சொல்லலேன்னா இந்த கோயிலை கண்டுபிடிச்சிருக்க முடியாது சங்கரா. என்ன மங்களா, ரெண்டு மாசம் இருக்குமா. திடீர்னு ஒரு நா காலைலே போன்ல கூப்பிட்டா. இந்த க்ஷணமே வந்தாகணும்னு. இவ இருக்கறது நங்கநல்லூர்ல. நான் இருக்கறது காஞ்சிபுரத்துல. அடிச்சிபுடிச்சு ஓடினா நேத்து ராத்திரி கனவு கண்டேன், அதப் பத்தி பேசணும்னு சொன்னா எப்பிடி இருக்கும்.'' மங்களாவை முறைத்தேன்.

‘‘உன்னைவிட்டா யாரைக் கூப்பிடி முடியும். பொண்ணுங்க ரெண்டும் கண்காணா தேசத்துல. அப்பிடியே அவங்ககிட்ட சொன்னாலும் காதுகொடுத்து கேக்க நேரமிருக்கா.''

‘‘அப்பிடி என்ன கனா. அதச் சொல்லு மொதல்லே. விஷயம் என்னன்னு இதுவரைக்கும் சொல்லலை.''

 சங்கரன் இடதுகாலை நீட்டி மடக்கினான்.

‘‘விஷயம் என்னன்னு அப்பறமா சொல்லுவா. ஆனா அப்ப எங்கிட்ட சொன்னது கனாவுல பாத்த கோயிலைப் பத்தி. நெறைய கிளிச்சத்தம். படியேறிப் போணும். ஏழிலை வில்வம். நாழிகை கணக்கில சுவாமி நெறம் மாறுவார். வண்டுக பறக்குது. இப்பிடி துண்டுத்துண்டா சொல்லிட்டு, இப்பிடி ஒரு கோயில் எங்க இருக்குன்னுதான் கேட்டா. அதுவரைக்கும் நான் அப்பிடி எதும் கேள்விபடலை. அப்பறந்தான் உங்கிட்ட விசாரிச்சேன்.''

‘‘கும்போணத்துல இருந்துட்டு இது தெரியலேன்னா எப்பிடி? இப்பல்லாம் கூகுள்ல போட்டாவே வந்துடுதில்ல.''

அதே நேரம் உள்ளிருந்து குரல் வந்தது ‘‘உள்ள வாங்கோ.''

கருங்கல் தரையில் கால்வைத்ததும் ஈரம் சில்லிட்டது. வெண்கல பாவை விளக்குகள் இரண்டும் ஒளிர்ந்து நின்றன. அருகில் தலையில் ருத்ராட்ச மாலையுடன் இறைவன் திருவடி சூடிய அப்பரின் வெண்கலச் சிலை. தீபத்தின் ஒளிவிரிந்த கர்ப்பகிரகம். ஊஞ்சல் விளக்கின் பிரகாசம் கூடியிருந்தது. வில்வ மாலையும் செந்தாமரை மொக்குகளும் அரளிப் பூக்களுமான அலங்காரத்தில் கல்யாணசுந்தரர்.

‘‘சுவாமி இப்ப இளஞ்சிவப்பு நெறத்துல இருக்கார். ஒரு நாளைக்கு அஞ்சு கலர்ல தெரிவார். நல்லா உத்துப் பாருங்க. சின்னச் சின்னதா துளைகள் தெரியறதா. வண்டுக தொளைச்சதுன்னு ஐதீகம். இதுக்கு அபிஷேகம் கெடையாது'' என்றபடியே தீபம் காட்டினார்.

பின்பக்க சுவரில் இருந்த சுதைச் சிற்பங்கள் ஒளியில் துலங்கின. அர்ச்சகரின் குரல் கணீரென ஒலித்து நின்றது. பூஜை மணியோசை. மலர்களின் வாசனை. தீபாரதனை தட்டை முன்னால் நீட்டியபோது மங்களா ஒருகணம் கண்மூடி நின்றாள். கைகுவித்து பிரார்த்தித்தாள். ‘‘நீதான் இங்கே என்னை அழைத்திருக்கிறாய். இதுதான் நீ சொன்ன இடம் என்பது தெளிவாகிவிட்டது. அடுத்தது ஒன்றுமட்டுமே பாக்கி. உன் அருளும் கருணையும் கைகூடட்டும். காத்திருக்கிறேன். எம்பெருமானே...''

வில்வத்தையும் விபூதியையும் கையில் வைத்தார் ‘‘அண்ணா எல்லாத்தையும் சொன்னார். உங்க மனசு போல நடக்கும்.''

ரோஜா மாலை சூடி நின்ற கிரிசுந்தரியை வணங்கி முடித்ததும் குங்குமத்தையும் பூசைத் தட்டையும் கையில் கொடுத்த அர்ச்சகர் சொன்னார் ‘‘அப்பிடியே கோயில பிரதட்சணம் வந்துடுங்கோ. இன்னும் நாழி இருக்கு.''

நெற்றியில் குங்குமத்தை வைத்ததும் மங்களா என் முகம் பார்த்தாள் ‘‘மணி என்ன இப்ப?''

‘‘ஏழரைதான் ஆறது. இன்னும் டைம் இருக்கு. பிரதட்சணம் வருவோம். அப்பறமா பாக்கலாம்.''

படிகளில் இறங்கும்போது விநாயகர் கோயில் மாடத்தில் தத்தி நின்ற கிளிகள் கீச்சிட்டபடி பறந்தன. ‘‘இதுவரைக்கும் நாம மட்டுந்தான் இங்க இருக்கோம். வேற யாருமே வரா மாதிரி தெரியலை. அவரிட்ட கேக்கலாமா.''

தேக்கும் புன்னையும் மாவும் அடர்ந்த நந்தவனத்தையடுத்த சுற்றுச்சுவர் இடிபாடுகளுடன் நின்றது. சிதைந்த சிற்பங்களுடன் மரங்களின் நிழலினூடே தென்பட்டது மேற்கு கோபுரம். ஒழுங்கற்ற பாதையில் கற்களும் நெருஞ்சிகளும் பாதத்தை பதம்பார்த்தன. உருண்டையான வில்வம் பழங்கள் மதிலோரத்தில் கிடந்தன. உக்கிரம் காட்டத்தொடங்கியிருந்தது வெயில். மங்களாவின் முகமும் கழுத்தும் முன்கைகளும் சிவந்திருந்தன.

அறுபத்திமூவர் வரிசையாய் நின்ற மண்டபத்தின் அருகே மூவரும் அமர்ந்தபோது சங்கரன் கேட்டான் ‘‘இப்பவாவது நாம எதுக்கு இங்க வந்திருக்கோம்னு தெரிஞ்சுக்கலாமா?''

நான் மங்களாவைப் பார்த்தேன். சிரித்தாள்.

‘‘எதுக்குன்னு மட்டும் சொல்லு நீ. எப்பிடிங்கறது அப்பறமா அவரே பாத்துக்கட்டும்.''

‘‘இவ வீடு நங்கநல்லூர்ல. அந்த காலத்தில இவங்க தோப்பனார் வாங்கிப் போட்ட நெலம். ரெண்டரை ஏக்கர். ஏரியா டெவலப் ஆனபோது தேவைக்கு ஒரு வீடு மட்டும் கட்டிட்டு மீதியை அப்பிடியே போட்டு வெச்சுட்டார். இவ கல்யாணமாகி ரெண்டு கொழந்தை பெத்ததெல்லாம் அங்கதான். மொதல்ல ஆத்துக்காரர் போனார். அப்பறமா தோப்பனார். கொழந்தைங்க படிச்சாங்க. கல்யாணம் முடிச்சாங்க. ஒருத்தி டெக்ஸாஸிலயும் இன்னொருத்தி சிட்னிலயுமா இருக்காங்க. ரெண்டு வருஷத்துக்கொரு தரம் வருவாங்க. பறந்துருவாங்க. ஒண்ணு ரெண்டு தடவை கூட போனா. இப்ப அங்க போறதில பெருசா விருப்பமில்லை. அந்த வீட்ல தனியாதான் கெடக்கறா. ரெண்டு ஏக்கர் நெலத்தையும் சும்மா விடலை. நெறைய மரங்களும் செடி கொடிகளுமா குளுகுளுன்னு கெடக்கு. போறாததுக்கு வத்தாத கெணறு. கல்கண்டு மாதிரி தண்ணி. பொழுதுபோனுமேன்னு பாட்டு கிளாஸ் எடுக்கறா. இந்தியும் கத்து தரா. இப்பிடியொரு நெலமும் கெணறும் இருந்தா சும்மா இருப்பாங்களா. நாலஞ்சு வருஷமாவே பெரிய தொல்லை. ரியல் எஸ்டேட் காரனுகளும் அரசியல்வாதிகளுமா நெருக்கிட்டே இருக்காங்க. இவளுக்கு அப்பிடி தர விருப்பமில்லை. தண்ணியை காசாக்கறதும் நெலத்தை வித்துட்டு பெட்டி பெட்டியா வீடு கட்டறதும் வேணாம். நா இருக்கற வரைக்கும் இப்பிடியேதான் இருக்கணும்னு பாக்கறா. ஆனா விடுவாங்களா. தனியா வேற இருக்கா. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடுச்சுன்னா என்ன பண்ண. சொந்தம்னு இருக்கறவாளையும் நம்ப முடியலை. அவங்களும் மனுஷங்கதானே. என்ன செய்யறதுன்னு ஒரே யோசனை. பொண்ணுங்க போன் பண்ணும்போதெல்லாம் எங்கிட்டதான் பொலம்புதுங்க. ‘எல்லாத்தையும் விட்டுட்டு வரச்சொல்லுங்க அங்கிள். நீங்க சொன்னாகேப்பாங்க'ன்னு நச்சரிக்குதுங்க. இவ எங்க நா சொல்றதை கேக்கறா. காஞ்சிபுரத்துல இருந்துட்டு நா என்ன பண்ண முடியும். முடிஞ்சப்ப போறேன். வர்றேன்.''

சொல்வதை நிறுத்தினேன். பிரகாரத்தில் பேச்சரவம். லேசான கொலுசொலி. மங்களா ஆவலுடன் பார்த்தாள். இருட்டில் உருவங்கள் நகர்ந்தன. வெளிச்சத்துக்கு வந்ததும் பெருமூச்சுடன் என்னைப் பார்த்தாள். எங்களைக் கண்டதும் இளம் தம்பதி பேச்சை நிறுத்திவிட்டு சிரித்தபடியே கடந்தனர்.

‘‘ஒரு வருஷத்துக்கு முன்னாடி திடீர்னு ஒரு யோசனை. எப்பிடி இருந்தாலும் ஏதாவது ஒரு வழியில இந்த எடத்தையும் கெணத்தையும் புடுங்கிக்க வழி இருக்கு. அதுவே கோயில்னா கைவெக்க மாட்டாங்க. அதனால இந்த எடத்துல ஒரு கோயிலை கட்டிட்டா பிரச்சினையே இருக்காதுன்னு யோசனை வந்துச்சு. சாஸ்திரிகள்கிட்ட கேட்டோம். காஞ்சிபுரத்துல மடத்துலயும் போய் கேட்டேன். எல்லாருமே ஒண்ணுபோல சொன்னது ‘அம்பாள் உத்தரவு குடுத்தா தாராளமா செய்ங்கோ. அவ உத்தரவு இல்லாம தலைகீழா நின்னாலும் ஒண்ணும் நடக்காது'ன்னுதான். அம்பாள் உத்தரவுக்கு எங்க போறது?''

மீண்டும் கொலுசொலி கேட்டது. இந்தமுறை அது சீரான ஓசையாக இருக்கவில்லை. ஓடுவதும் தத்துவதும்போல சீரற்று ஒலித்தது. மங்களா பரபரப்புடன் எழுந்தாள். பாட்டிலைத் திறந்து தண்ணீர் குடித்தாள்.

மண்டபத்தின் கூரை இடுக்கு வழியே வெளிச்சம் இறங்கிய இடத்தில் அந்தச் சிறுமி தாவி நின்றாள். பச்சை பாவாடை. பொன்னிற மேல்சட்டை. காதில் அசைந்தன சின்னஞ்சிறிய தொங்கட்டான்கள். மேலிருந்து இறங்கும் வெளிச்சக் கற்றைகளை விலக்குவதுபோல் கைகளை வீசினாள். ஒளிரும் உள்ளங்கைகளை வியப்புடன் பார்த்தாள். துள்ளிக் குதித்தபோது கொலுசுகள் சிணுங்கின.

கண்கள் கசிந்திருக்க மங்களா அவளையே பார்த்து நின்றாள்.

வாகனத்தின் சாவியை விரலில் சுழற்றியபடி வந்தவனைப் பார்த்து வெயிலைக் காட்டினாள் சிறுமி. அவனருகே நீலப்புடவையுடன் வந்தவளின் கையில் செந்தாமரை மொட்டுடன் கூடிய பூஜைத் தட்டு.

இருவரும் முன்னால் நடக்க சிறுமி கொலுசொலிக்க ஓடினாள். பிள்ளையார் கோயிலருகே நின்றாள். அம்மாவைத் திரும்பிப் பார்த்தாள். ‘‘ம்மா... பாலும் தெயிதேனும் உம்மாச்சிதான.'' அவள் தலையசைத்ததும் கண்ணை மூடி நின்றாள். உதடுகள் முணுமுணுத்தன. சிறிய கால்களை மடக்கி தோப்புக்கரணமிட்டாள். சுற்றி வந்ததும் எந்தப் பக்கம் போகவேண்டுமென்பதுபோல அப்பாவைப் பார்த்தாள். படிகளை கைகாட்டியதும் ‘‘ஏறட்டுமா...'' என்று கேட்டாள்.

மங்களா மெல்ல பின்னால் நடந்தாள். நானும் சங்கரனும் தொடர்ந்தோம். அவள் எதிர்பார்த்த தருணம் இதுதானா?

அவள் காதருகில் கிசுகிசுத்தேன் ‘‘இவதானா?''

என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை. அவளது பார்வை சிறுமியிடமிருந்து சிறிதும் விலகவில்லை. ‘‘அவசரப் படாதே. இன்னும் முழுசா சொல்ல முடியலே. நட்சத்திரம் சரியா வரணும். நான் குடுக் கறதை வேணான்னு சொல்லாம வாங்கிக்கணும். பாக்கலாம்.''

மேல் மாடத்தின் பிரகாரத்தில் அவர்கள் மூவரும் நுழைந்த பின் படிகளில் ஏறும்போது மங்களா மூச்சிரைக்க சொன்னாள் ‘‘இன்னும் ரெண்டு விஷயந்தான். அதும் செரியா வந்துடுத்துன்னா... அம்மாடி. ரொம்ப படபடப்பா இருக்கு. உள்ள போவே பயமா இருக்கு.''

கிரிசுந்தரியின் முன்னால் நின்று எட்டிப் பார்த்தோம். சிறுமி தடுப்புக் கம்பியின் மேல் கால்வைத்து எம்பி நின்றாள். அவள் கண்கள் துறுதுறுவென அலைந்தன.

‘‘உம்மாச்சி எங்கம்மா?'' மழலையுடன் குரல் ஒலித்தது.

‘‘அங்க பாரு. உள்ளே'' அம்மா கைகாட்டினாள்.

சிறுமி உற்றுப் பார்த்தாள். அர்ச்சகர் பூக்கூடையை வாங்கிக்கொண்டு கேட்டார் ‘‘அர்ச்சனைக்கு பேர் சொல்லுங்க.''

‘‘இவ பேருக்குத்தான். மக நட்சத்திரம்...'' அம்மா சொன்ன நொடியில் மங்களா கிரிசுந்தரியை நோக்கினாள். கைகளைக் கூப்பியபடி முன்னால் கால்மடங்கி விழுந்தாள். பதற்றத்துடன் குனிந்தேன். ‘‘என்னம்மா...''

அவள் தலை அசைந்தது. வணங்கினாள். நிதானமாக எழுந்தாள். நீர் தழும்பின கண்கள். உதடுகள் நடுங்கின. பூஜை மணியொலித்தது. உள்ளே திரும்பிப் பார்த்தாள். தீபாரதனையில் லிங்கரூபம் சுடர்ந்தது. சிறுமி கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.

மங்களாவும் கன்னத்தில் போட்டுக்கொண்டாள். மனமுருகி நின்றாள். சிறுமியின் மீதிருந்த பார்வையைத் திருப்பாமலே மெல்லக் கேட்டாள் ‘‘கொழந்தைக்கு என்ன பேர் சொன்னாங்க?''

நான் சங்கரனைத் திரும்பிப் பார்த்தேன். அவனும் உதடுகளைப் பிதுக்கினான். ‘‘சரியா காதுல விழலை. நீ வேற கீழ விழுந்தா மாதிரி இருந்துதா...''

மூவரும் வெளியில் வருவதைப் பார்த்ததும் மங்களா அவசரமாக விலகினாள். பாசுரங்கள் எழுதிய சுவருக்கு அருகே அமர்ந்தோம். பையிலிருந்து தண்ணீர் பாட்டிலையும் பூசைத் தட்டிலிருந்த வாழைப் பழங்களையும் வெளியில் எடுத்தாள். மறுபடி தண்ணீர் பருகினாள்.

அம்பாளை வணங்கியானதும் சிறுமி முகத்தை ஏந்தி நெற்றியை காட்டியபடி நின்றாள். சந்தனக் கீற்றை இட்டு குங்குமத்தை நடுவில் வைத்துவிட்டு நிமிர்ந்தார் அப்பா. சிறுமியின் கையில் பத்து ரூபாய் தாள் படபடத்தது.

‘‘உண்டியல்...'' அம்மாவிடம் கேட்டபடியே தேடினாள்.

சிறுமிக்கும் உண்டியலுக்கும் நடுவில்தான் ஓரமாக நாங்கள் அமர்ந்திருந்தோம். துள்ளி நடந்தாள். ஒருமுறை எங்களைப் பார்த்தாள். மங்களா அவளைப் பார்த்து கண்ணில் நீர் மல்க சிரித்தாள். சிறுமி திரும்பி அம்மாவைப் பார்த்தாள். அவள் தலையசைத்து அனுமதி தந்ததும் கொலுசொலிக்க சீரடி வைத்து உண்டியலை நெருங்கினாள். பணத்தாளை உள்ளே செலுத்திவிட்டு திரும்பிப் பார்த்து சிரித்தாள். ஓரக்கண்ணால் மங்களாவைப் பார்த்தபடியே ஓடினாள்.

‘‘கொழந்தே...'' நடுங்கும் குரலுடன் மங்களா அழைத்ததும் சிறுமி திரும்பிப் பார்த்தாள். முகம் மலரச் சிரித்தாள்.

‘‘இந்தா... வாங்கிக்கோ'' என்று வாழைப் பழத்தை நீட்டினாள்.

அம்மா ‘‘வாங்கிக்கோ'' என்றதும் குழந்தை திரும்பி நின்றது. அடியெடுத்து அருகில் வந்தது. நீட்டிய கைகளையும் மங்களாவின் முகத்தையும் கனிவுடன் பார்த்தது. ஒற்றை பொன் வளையல் அணிந்த வலது கையை நீட்டி பழத்தை வாங்கிக் கொண்டு திரும்பி சன்னமாய் கொலுசொலிக்க நடந்தது.

‘‘தேங்க்ஸ் சொன்னியா...'' அப்பா கேட்டதும் திரும்பிப் பார்த்தது.

மங்களாவைப் பார்த்து சிறுமியின் அம்மா தலையசைத்தாள்.

‘‘உம் பேரு என்ன குட்டி'' மங்களா மெல்லக் கேட்டாள்.

‘‘சொல்ல மாட்டேன்'' சிரித்தபடியே பழத்தை கையில் பிடித்தபடி அம்மாவிடம் ஒட்டிக்கொண்டு நகர்ந்தாள் சிறுமி. படிகளில் இறங்கும்போது கொலுசொலித்தது. மங்களா எழுந்து வாசலில் நின்றாள். அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘‘உத்தரவு கெடச்சிருச்சா மங்களா'' நான் மெதுவாகக் கேட்டேன்.

கண்களில் நீர்பெருக ஆமோதிப்பதுபோல தலையசைத்தாள். சிறுமி ஒவ்வொரு படியாக தத்தி இறங்கினாள். மதில்மேல் கீச்சிட்டு நடந்த கிளிகளைப் பார்த்து உற்சாகத்துடன் கத்தினாள்.

மங்களா முதல்படியருகே நின்று சத்தமாக அழைத்தாள் ‘‘குட்டிம்மா. உன் பேர் என்னன்னு சொல்லலியே''. கிளிகளைப் பார்த்து கையசைத்து நின்ற சிறுமி மங்களாவைத் திரும்பிப் பார்த்தாள். சிரித்தாள். சற்றே குனிந்து உரக்கச் சொன்னாள் ‘‘சொல்லமாட்டேன் போ.''

சிறுமியின் அம்மா அவளை எச்சரிப்பதுபோல் பார்த்துவிட்டு மங்களாவை ஏறிட்டாள். மங்களா தலையசைக்கவும் சிறுமியின் கைபற்றி நடந்தாள்.

‘‘அவ சொல்லாட்டி என்ன இப்ப. கிரிசுந்தரி, பர்வதவர்த்தினி, திரிபுரசுந்தரின்னு எத்தனை இருக்கு. என்ன பேர் வேணா வெச்சுக்கலாம்.''

மங்களா சொன்னபோது கிளிகள் இன்னும் உரக்கக் கீச்சிட்டன.

பிப்ரவரி, 2021