பி.ஆர்.ராஜன்
சிறுகதைகள்

இரவுக்காவலாளியின் தனிமை!  

எஸ்.ராமகிருஷ்ணன்

மாநகரில் தன்னைப் போல ஆயிரம் பேருக்கும்  மேலானவர்கள் இரவுக் காவலாளியாக இருக்கக் கூடும் என்று ஜோசப் நினைத்துக் கொண்டான். மற்றவர்களுக்கும் அவனுக்குமான வேறுபாடு முக்கியமானது.

அவன் ஒரு தேவாலயத்தின் இரவுக்காவலாளியாக இருந்தான். கர்த்தருக்கும் திருடனுக்கும் நடுவே தானிருப்பதாக உணர்ந்தான்.

புனித மரியன்னை தேவலாயம் நூற்றாண்டு பழமையானது. கோயிலின் பெரிய கோபுரம் நூற்று இருபது அடி உயரம் கொண்டது. கோயிலின் உட்பகுதியில் எட்டு பெரிய சாளரங்கள் இருந்தன. அவற்றில் நிறப்பதிகைக் கண்ணாடி அமைக்கப்பட்டு, சூரிய வெளிச்சம் கோயிலின் உள்ளே வண்ணமயமாக ஒளிரும்படி அமைக்கபட்டிருந்தது நகரின் பிரதான சாலையொன்றில் இருந்த அந்தத் தேவாலயத்தின் நுழைவாயிலில் பைபிள் மற்றும் பிரசுரங்கள் விற்கும் கடை ஒன்றிருந்தது. உள்ளே இரண்டு வீடுகள். ஒன்றில் தோட்டவேலை செய்யும் தங்கசாமி குடியிருந்தார். மற்றது பாதர் சேவியருக்கானது. அந்த வளாகத்தின் உள்ளே சிறிய அச்சுக்கூடம் ஒன்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இயங்கிவந்திருக்கிறது. தற்போது மூடப்பட்டிருந்தது. பைபிள் கடையின் இடதுபுறமிருந்த கண்ணாடி பெட்டிக்குள் பெரிய பைபிள் ஒன்று வைக்கபட்டிருந்தது. அதில் தினமும் ஒரு பக்கம் வாசிக்கும்படியாகத் திறந்து வைத்திருப்பார்கள். இரவிலும் அந்த வாசகங்களைப் படிக்க விளக்கு பொருத்தப்பட்டிருக்கும்.

சில நாட்கள் பின்னிரவில் ஜோசப் அந்த வாசகங்களைத் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருப்பான். ‘‘ஆண்டவர் என்னைத் தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்; நான் மன்றாடும் போது அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார்'' என்று ஒரு நாளிரவு அவன் படித்த வாசகம் அவன் மனதை வெகுவாக கவர்ந்தது. தான் இரவுக்காவலாளியாக நியமிக்கபட்டதும் இதனால் தானோ என்று நினைத்துக் கொண்டான்.

தேவாலயத்தினைச் சுற்றிலும் பெரிய மதிற்சுவர்கள் கட்டப்பட்டிருந்தன. சிறிய கெபி ஒன்றும் இருந்தது. அந்த தேவாலயத்தின் வெண்கலமணி லிஸ்பனிலிருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டது என்பார்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாளிரவு யாரோ விஷமிகள் அந்தத் தேவாலய சுவரில் ஆபாச சுவரொட்டிகளை ஒட்டிச் சென்றுவிட்டார்கள். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாதர் சேவியர் தண்ணீர் ஊற்றி சுவரை சுத்தம் செய்ய வைத்ததோடு இரவுக்காவலாளி ஒருவரையும் பணியில் நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அவனுக்கு முன்பாக வேலையில் இருந்தவர்கள் யார் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் வேலையில் சேரும் நாளில் பாதர் சேவியர் அவனிடம் சொன்னார்

‘‘நைட் எப்போ வேணும்னாலும் நான் வந்து செக் பண்ணுவேன். ஒரு சொட்டு தூங்க கூடாது. கேட்டை விட்டு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போகக் கூடாது. ஏதாவது அவசரம்னா இந்த மணியை அடிக்கணும். நான் வருவேன்'' என்று கேட்டை ஒட்டி இருந்த அழைப்பு மணியின் பொத்தானைக் காட்டினார்.

ஜோசப் வேலையை ஏற்றுக் கொண்ட சில நாட்களிலே பத்து மணிக்கு பாதர் உறங்க ஆரம்பித்தால் காலை ஆறரை மணிக்கு தான் எழுந்து கொள்வார் என்பதை அறிந்து கொண்டுவிட்டான். தோட்டக்கார தங்கசாமி இருமலால் அவதிப்படுவதால் சில நேரம் பின்னிரவிலும் உறங்காமல் இருமிக் கொண்டேயிருக்கும் சப்தம் கேட்கும். ஒரு நாள் விடிகாலையில் தங்கசாமிக்கு மூச்சிரைப்பு வந்து அவதிப்பட்ட போது அவரை ஜோசப் தான் மருத்துவமனைக்கு அழைத்துப் போய் வந்தான்.

ஜோசப் அருகிலுள்ள வீராச்சாமி தெருவில் ஒரு மாடி அறையை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தான். மிகச்சிறிய அறை. ஒரு மனிதன் பகலில் உறங்குவதற்குப் போதுமான இடம். கீழே இருந்த வீட்டின் குளியல் அறையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சில நாட்கள் அவனுக்குப் பகலிலும் உறக்கம் வராது. பாயை விரித்துப் போட்டு படுத்துக் கொண்டு கடந்தகாலத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பான்

துயரமான கடந்த காலத்தைக் கொண்டவர்களால் மட்டுமே இரவில் விழித்துக் கொண்டிருக்க முடியும். ஏதாவது ஒரு பழைய நினைவு போதும் அந்த நாளை உறங்க விடாமல் செய்துவிடும். அப்படித்தான் அவனும் இரவில் விழித்துக் கொண்டிருந்தான்.

..

தேவாலயத்தின் நுழைவாயில் தெற்கு நோக்கியதாக இருந்தது. ஆள் உயர இரும்பு கேட்டுகள். அதை ஒட்டி மடக்கு நாற்காலி ஒன்றை போட்டு இரவில் காவலிருப்பான்.

கையில் ஒரு டார்ச்லைட். பிளாஸ்டிக் கூடை ஒன்றில் தண்ணீர் பாட்டில். பிஸ்கட் பாக்கெட், கொஞ்சம் திராட்சை பழங்கள் வைத்திருப்பான். அவனுக்கு வயது நாற்பதைக் கடந்துவிட்டிருந்தது. இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவனை விட மூன்று வயது மூத்த அக்கா சாராவிற்கே இன்னமும் திருமணம் நடக்கவில்லை. இதை எல்லாம் பற்றிக் கவலைப்படுவதற்கு எவருமில்லை. அவனது அம்மாவும் அப்பாவும் இறந்து போய்ப் பலவருசமாகிவிட்டது.

அவனது அப்பா மோசஸ் முதலாளியிடம் கார் டிரைவராக இருந்தவர். ஒரு விபத்தில் கைஎலும்பு உடைந்து போகவே கார் ஓட்ட முடியாமல் போனது. அதன்பின்பு மோசஸ் முதலாளியின் பீடிக்கம்பெனியில் அவருக்கு ஒரு வேலை போட்டுக் கொடுத்தார்கள். அவரது குடியால் அந்த வேலையிலும் நிலைக்கமுடியவில்லை. குடிக்கக் காசில்லாமல் திருடத்துவங்கி பலவிதங்களிலும் அவர்களுக்கு அவமானத்தைத் தேடி தந்தார்.

அவர் ஏற்படுத்திய அவமானத்திற்காக அம்மா குனிகூறுகிப் போனாள். வீட்டு கதவை பகலிலும் அடைத்து வைத்தே இருந்தாள்.

மைக்கேல் வாத்தியாரின் மகன் ஒரு நாள் நடுத்தெருவில் அப்பாவை அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தபோது அவனுக்குத் தடுக்க வேண்டும் என்று தோன்றவேயில்லை. போதுமான அவமானங்களைச் செய்து முடித்த அவனது அப்பா ஒரு நாள் கல்லறை தோட்டத்து மரம் ஒன்றில் நிர்வாணமாகத் தூக்கில் தொங்கினார்.அவரது மரணத்திற்காக அம்மா கண்ணீர் வடிக்கவில்லை. ஆனால் மனதிற்குள் அழுதிருப்பாள். இது நடந்த மூன்றாம் வாரம் அம்மா உறக்கத்திலே இறந்து போயிருந்தாள்.

அதன்பின்பு அவனும் அக்காவும் மட்டுமே வசித்தார்கள். அவர்களுக்குள் பேசிக் கொள்வதும் குறைந்துவிட்டது. அக்கா சில நாட்கள் பகலிரவாகப் பைபிள் படித்துக் கொண்டிருப்பாள். சமைக்கமாட்டாள். சாப்பிடமாட்டாள். ஞாயிற்றுகிழமை பிரார்த்தனைக்குப் போகையில் சப்தமாக அழுது பிரார்த்தனை செய்வாள். சில நேரம் மெழுகுவர்த்தியை கையில் பிடித்தபடியே இருட்டிற்குள் அமர்ந்திருப்பாள். அவளது மௌனம் அவனைத் துன்புறுத்தியது. அவனால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. இதற்காகவே ஊரை விட்டு வெளியேறினான்.

நகரம் தன்னை மறைத்துக் கொண்டு வாழ்பவர்களுக்கானது. இங்கே எந்த அடையாளத்துடனும் எவரும் வாழ முடியும். இரவுக்காவலாளி என்பதும் அப்படி ஒரு அடையாளமே.

கிராமத்தில் கண்விழித்துப் பாதுகாக்க வேண்டிய அரும்பொருள் எதுவும் கிடையாது. அத்தோடு இப்படி ஒருவர் இரவெல்லாம் விழித்திருக்க முடியாது. ஊர் அறிந்துவிடும். வயல்வெளியில் காவலுக்கு இருப்பவர்கள் கூடக் கயிற்றுகட்டில் போட்டு உறங்கத்தான் செய்வார்கள். ஆனால் நகரின் இரவு விநோதமானது. இருள் பழகிய மனிதர்கள் இருந்தார்கள். இரவில் அரங்கேறும் குற்றங்கள் விநோதமானவை.

அவனது தேவலாயம் இருந்த சாலை ஒரு வெள்ளைக்கார கர்னலின் பெயரில் இருந்தது. அந்தக் கர்னலின் வீடு ஒருவேளை இந்தத் தெருவில் இருந்திருக்கக் கூடும். அந்தச் சாலையில் ஒரு காலத்தில் நிறைய மருதமரங்கள் இருந்ததாகக் கேள்விபட்டிருக்கிறான். இப்போது வணிக வளாகங்களும் அடுக்குமாடி அலுவலகங்களும் நகைக் கடைகளும் பெரியதொரு ஷாப்பிங் மாலும் இருந்தன. அதற்கு நடுவே சிறார் பூங்காவும் இருந்தன. அந்தச் சாலையில் மட்டும் இருபத்தியாறு இரவுக்காவலாளிகள் இருந்தார்கள்.

இரவுக்காவலாளிகளுக்கு என்று தனியுலகமிருக்கிறது. அவர்கள் விரும்பி இந்த பணியை ஏற்றுக் கொண்டவர்களில்லை. ஏதோ நெருக்கடி அவர்களை இரவில் விழிக்க செய்கிறது. இரவுக்காவலாளிகளின் முகத்தில் புன்னகையை காண முடியாது. ஜோசப் இருந்த வீதியில் பின்னிரவு நேரத்தில் தேநீர் விற்பனை செய்யும் சபரி வருவதுண்டு. அவன் தரும் சூடான இஞ்சி டீ பகலில் கிடைக்காதது. சில வேளை அவர்கள் விடிகாலையில் ரவுண்டாவில் ஒன்றுகூடுவார்கள். அதிகாலையின் முதல் தேநீரை ஒன்றுகூடி கூடிப்பார்கள். அப்போது ஷியாம் ஆளற்ற சாலையைப் பார்த்து பாட்டு பாடுவதுண்டு.

நேஷனல் பேங்க் ஏடிஎம் இரவுக்காவலாளி படம் வரையக் கூடியவர். இரவெல்லாம் பெரிய நோட்டு ஒன்றில் படம் வரைந்து கொண்டேயிருப்பார். ரெப்கோ பர்னிச்சர் கடை காவலாளிகள் இருவரும் விடியும்வரை சீட்டாடுவார்கள். நியூலைப் கம்பெனியின் காவலாளி ஒரு மலையாளி. அவன் சிறிய வெளிச்சத்தில் செக்ஸ் புத்தகங்களை ஆசையாகப் படித்துக் கொண்டிருப்பான். வங்காளதேசத்திலிருந்த வந்த ஒருவர் கூட அங்கே இரவுக்காவலாளியாக இருந்தார். அவர் தனிமை தாளமுடியாமல் நாய் பூனைகளிடம் பேசிக் கொண்டிருப்பார். ஒன்றிரண்டு இரவுக்காவலாளிகள் தனிமை தாங்க முடியாமல் குடிப்பதும் உண்டு. அதிலும் சின்னையாவின் குடித்தோழன் சாலையில் வசிக்கும் வலதுகை இல்லாத பிச்சைக்காரன். இருவரும் போதையில் அன்பை பொழிவார்கள். முத்தமிட்டுக் கொள்வதும் உண்டு.

சிட்டியூனியன் பேங்க் ஏடிஎம் காவலாளியான தவராஜா ஜோசப்போடு மிகுந்த நட்போடு பழகினார். எழுபது வயதைக் கடந்த அவர் ஒரு செக்யூரிட்டி நிறுவனம் மூலம் வேலைக்கு நியமிக்கபட்டிருந்தார். நடிகர் சந்திரபாபுவிற்கு வயதாகியிருந்தால் எப்படியிருக்குமோ அது போன்ற தோற்றம். நீல நிற யூனிபார்ம் அணிந்திருப்பார். அவர் சில வேளையில் கண்டசாலா குரலில் பாடுவதுண்டு. அதுவும் அலையும் நீர் மேவும் குமிழாதல் போலே ஆவது பொய் ஆவதெல்லாம் ஆசையினாலே எனப்பாடும் போது கேட்பவர் மனதில் மறைந்து போன துயரநினைவுகள் பீறிடும். அதுவும் ஆவது பொய் ஆவதெல்லாம் ஆசையினாலே என நிறுத்தி இரண்டாம் முறை சொல்லும் போது தவராஜாவின் குரல் உடைந்துவிடுவது வழக்கம்.

பெரும்பான்மை நாட்கள் அவர் தனது ஏடிஎம்மிலிருந்து நடந்து வந்து தேவாலய வாசலில் இருந்த அவனை அழைத்துக் கொண்டு தேநீர் அருந்த செல்வார். அது போன்ற நேரத்தில் மறக்காமல் கண்ணாடிப் பெட்டியில் உள்ள பைபிளில் எந்தப் பக்கம் திறந்து வைக்கபட்டிருக்கிறது என்பதை அவர் ஆர்வமாகப் பார்ப்பதுண்டு. சில நாட்கள் அந்த வாசகங்களை ஒவ்வொரு எழுத்தாக அவர் வாசிப்பதை ஜோசப் பார்த்துக் கொண்டிருப்பான்.

சூடான தேநீரை அவர் விரும்புவதில்லை. அதை ஆறவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக்குடிப்பார். திரும்பி வரும் போது தேவாலய வாசலில் நின்றபடி இருவரும் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். பழைய கதைகளைச் சொல்வார். அதில் அவரது இளமைக்காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பலமுறை சொல்லியிருக்கிறார்.

‘‘ஜோசப்பு. உனக்குத் தெரியுமா.. அப்போ எனக்கு இருபத்தைந்து வயசிருக்கும். நல்லா கர்லிங் கேர் வச்சி ஜம்னுயிருப்பேன். டெர்லின் சட்டை தான் போடுவேன். தினம் எங்க தெரு வழியா ஒரு பொண்ணு குடை பிடிச்சிகிட்டு போவா. அழகில ரம்பை தோத்திடுவா. அவ குடையோட நடக்கிற அழகை கண்ணை மூடாம பாத்துகிட்டு இருப்பேன். காத்துல நடக்கிற மாதிரி நடந்து போவா. அவ பின்னாடியே நானும் நடந்து போவேன். மடத்து பள்ளிக்கூடத்துல டீச்சரா வேலை பார்த்தா. அந்த ஸ்கூல் வேப்பமரமா இருந்திருந்தா கூட அவளைப் பாத்துகிட்டே இருந்திருக்கலாமேனு தோணும் அவ முகத்துல எப்பவும் ஒரு சாந்தம். கீற்று மாதிரி புன்னகை. அவ என்னைத் திரும்பி பார்க்க மாட்டாளானு ஏங்கிட்டே இருந்தேன்.

ஒரு நாள் அவ பின்னாடி போய்கிட்டு இருந்தவன் சட்டுனு அவ குடைக்குள்ளே போயிட்டேன். அவ அதை எதிர்பார்க்கலை. கோவத்துல திட்டுவானு நினைச்சேன். ஆனா அவ என்னைப் பார்த்துச் ''சின்னக் குடைக்குள்ளே ரெண்டு பேர் நடக்க முடியாதுனு சொன்னா''. அதைக் கேட்டு அடைந்த சந்தோஷம் இருக்கே. சொல்லி முடியாது. அவ கிட்ட ‘‘எப்பவும் இந்தக் குடையைப் பிடிச்சிகட்டு நான் கூட வரணும்னு ஆசைப்படுறேனு'' சொன்னேன். அதுக்கு அவ சிரிச்சா. அன்னைக்குக் கூடவே பள்ளிக்கூடம் வரைக்கும் நடந்தேன். உள்ளே போகும்போது அவ சொன்னா ‘‘ஆசையிருந்தா மட்டும் போதாது. எங்க வீட்ல வந்து கேட்கவும் தைரியம் வேணும்''.

அவ்வளவு தான். எனக்குத் தலைகால் புரியலை. அடுத்த நாளே பெரியவங்களைக் கூட்டிட்டு போயி அவ வீட்டில பேசினேன். அவங்க பொண்ணு குடுக்க மாட்டேனு சொல்லிட்டாங்க. எவ்வளவோ பேசி பார்த்தேன். அவங்க ஒத்துகிடவேயில்லை.

அதுக்கு அப்புறம் அவளை எங்க தெருவில பாக்கவே முடியலை. பள்ளிக்கூட வேலையை விட்டுட்டா. எங்கே போனானு தெரியாது. அவளைத் தேடி அவங்க சொந்தங்காரங்க இருக்க ஊர் ஊராக அலைஞ்சது தான் மிச்சம் அவளைத் திரும்பப் பாக்கவே முடியலை. பிரம்மை பிடிச்ச மாதிரி ஆகிட்டேன். நாலு வருஷம் நடைபிணம் மாதிரி இருந்தேன். அப்புறம் வீட்ல எங்கப்பாரு சொல்றதுக்காகச் சாந்தியை கட்டிகிட்டேன். அது கூட முப்பது வருஷம் வாழ்ந்து எனக்கும் வயசாகிப்போச்சி.. சாந்தியும் செத்துப் போயிட்டா. ஆனா அவளை மறக்கமுடியலை. சாகுறதுக்குள்ளே அவளை இன்னொரு தடவை பாத்துட்டா போதும். இல்லாட்டி என் கட்டை வேகாது. ''

இதைச் சொல்லும் போது அவரது கண்கள் கலங்கிவிடும். பேச்சு வராது. மௌனமாக எதிரெ ஒளிரும் சிலுவை பார்த்துக் கொண்டிருப்பார். பின்பு அமைதியாகத் தனது ஏடிஎம் நோக்கி நடந்து போகத் துவங்குவார்..

ஒவ்வொரு நாளும் புதிய கதை சொல்வது போல அவரது வீதியில் குடை பிடித்தபடி வந்த பெண்ணைப் பற்றிச் சொல்லுவார். நேற்று சொன்னது நினைவிருக்காது என்பது போல விவரிக்க ஆரம்பிப்பார்.

அந்த நினைவுகளைத் திரும்பப் பேசும்போது அவர் அடையும் சந்தோஷத்திற்காக ஜோசப்பும் அதைக் கேட்டுக் கொண்டு வருவான். ஒரு நாளும் அந்தப் பெண்ணின் பெயர் என்னவென்று அவர் சொன்னதேயில்லை.

குடைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஏற்பட்ட சந்தோஷத்தை விவரிக்கும் போது அவரது முகத்தில் இருபது வயதின் மகிழ்ச்சி தோன்றி மறையும். அப்போது ஜோசப்பிற்கு மனிதர்கள் நினைவில் வாழுகிறவர்கள். அந்தச் சந்தோஷமே போதுமானது என்று தோன்றும். ஆனால் அவனுக்கு இப்படி நினைத்துச் சந்தோஷம் கொள்ளும் நினைவு ஒன்று கூடக் கிடையாது. அந்த ஏக்கத்தாலே அவர் சொல்லும் காதல்கதையைத் திரும்பத் திரும்பக் கேட்டான்.

ஒவ்வொரு முறை அவர் சொல்லும் போதும் அந்தப் பெண்ணைப் பற்றிய கூடுதலாக ஒரு விஷயம் அவனுக்குத் தெரிய வரும்.

ஒரு நாள் கதையை முடிக்கும் போது சொன்னார்.

‘‘ஜோசப்பு இந்த ஊர்ல தான் அவ இருக்கானு கேள்விப்பட்டேன். அவளை ஒரேயொரு தடவை பாத்தா போதும். நானும் முப்பது வருஷமா இதே ஊர்ல இருக்கேன் என் கண்ல படவேயில்லை''

‘‘நேர்ல பாத்தா என்ன பேசுவீங்க'' எனக்கேட்டான் ஜோசப்.

‘‘தெரியலை. ஆனா அழுதுருவேன். அவ முன்னாடி அழுறதுக்காக என்கிட்ட கொஞ்சம் கண்ணீர் இருக்கு''

ஆண்களும் அழ விரும்புகிறார்கள். ஆனால் யார் முன்பு எதற்காக என்பதில் தான் மாறுபாடு இருக்கிறது. தூரத்து நட்சத்திரம் போல அவரது மனதில் அந்தப் பெண் ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறாள் என்பதை ஜோசப் உணர்ந்து கொண்டான்.

...

புயல்காரணமாக மூன்று நாட்கள் பகலிரவாக மழை பெய்தது. மின்சாரம் போய்விட்ட ஒரு நாளில் இருளுக்குள் மின்னல்வெட்டி பயமுறுத்தியது. தேவாலயத்தினுள் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அந்த இரவில் அவன் தங்கசாமி வீட்டில் ஒதுங்கிக் கொண்டான். தவராஜாவை சந்திக்க முடியவில்லை. வழக்கம் போல அவர்கள் தேநீர் அருந்த செல்லவுமில்லை. ஒவ்வொரு நாளும் மழையின் சீற்றம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. தேவாலயத்தை சுற்றிலும் மழைத்தண்ணீர் நிரம்பியது. தேங்கிய தண்ணீரை பகலில் இயந்திரம் மூலம் வெளியேற்றினார்கள்.

மழை வெறித்த நான்காம் நாள் காலை வெயிலை கண்ட ஜோசப் கைகளை உயர்த்தி வணங்கினான். நீண்ட நேரம் வெயிலில் நின்று கொண்டேயிருந்தான். அந்த வெயில் காணும் மனிதர்கள் முகத்தில் புன்னகையை உருவாக்கியிருந்தது. அன்றிரவு பணிக்கு வந்தபிறகு தவராஜாவின் எண்ணிற்குப் போன் செய்து பார்த்தான். போன் வேலை செய்யவில்லை. தானே நடந்து சென்று பார்த்தான் , ஏடிஎம் வாசலில் வேறு ஒரு காவலாளி தலைக்குல்லா அணிந்து உட்கார்ந்திருந்தான்.

‘‘தவராஜா இல்லையா'' எனக்கேட்டான் ஜோசப்

‘‘மழையில அவருக்கு உடம்புக்கு முடியலை. என்னை மாற்றிவிட்டுட்டாங்க''

‘‘அவர் வீடு எங்க இருக்கு தெரியுமா''

‘‘பெரம்பூர்லனு நினைக்குறேன். நீங்க எந்த செக்யூரிட்டி சர்வீஸ்லே வேலை செய்றீங்க''

‘‘நான் சர்ச் வாட்ச்மேன்'' என்றான் ஜோசப்.

‘‘நாங்க ரெண்டு பேரும் முன்னாடி எஸ்கேஎம் ஸ்கூல் வாட்ச்மேனா இருந்தோம். அப்போ விடிய விடிய பேசிக்கிட்டேயிருப்போம் ''. என்றான் அந்தப் புதிய காவலாளி.

ஜோசப் பதில் சொல்லாமல் தனியே தேவாலயம் நோக்கி நடந்தான்.

இத்தனை நாட்கள் பழகியும் தவராஜாவின் வீடு எங்கேயிருக்கிறது, யாருடன் வசிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவில்லையே என்று ஆதங்கமாக இருந்தது.

அந்த வாரம் சனிக்கிழமை மதியமாகத் தவராஜா வேலை செய்த செக்யூரிட்டி நிறுவனத்தைத் தேடிச் சென்று அவரது முகவரியை பெற்றுக் கொண்டு பெரம்பூருக்குச் சென்றான். குறுகலான சந்து ஒன்றின் உட்புறமிருந்த சிறிய வீட்டில் அவரது மகள் மட்டுமே இருந்தாள்.

‘‘தவராஜாவை பாக்கணும்'' என்றான்.

‘‘அவர் செத்துபோயி மூணு நாள் ஆச்சு. அய்யாவுக்கு ரொம்பக் காச்சல் அடிச்சது. ஆஸ்பத்திரியில சேர்த்தோம். அன்னைக்கு நைட்டே செத்துட்டாரு... நீங்க செக்யூரிட்டி கம்பெனில வேலை பாக்குறீங்களா'' எனக்கேட்டாள் அவரது மகள்.

‘‘இல்லே அவரோட பிரண்ட்'' என்றான் ஜோசப்.

‘‘உங்க கிட்ட கடன் வாங்கியிருந்தாரா'' எனக்கேட்டாள்.

‘‘இல்லை. நான் தான் அவர்கிட்ட கடன் வாங்கியிருந்தேன்'' எனத் தனது பர்ஸில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அவள் தயக்கத்துடன் வாங்கிக் கொண்டாள்.

அவளுக்கு தவராஜா காதலித்த பெண்ணை பற்றி தெரிந்திருக்குமா, ஆணும் பெண்ணும் சில ரகசியங்களை குடும்பம் அறியாமல் கடைசிவரை ஒளித்துக் கொள்கிறார்கள். அந்த ரகசிய செடி இரவில் மட்டுமே மலர்கிறது.

அவளிடம் விடைபெற்றுக் கொண்டு திரும்பும் போது கடைசிவரை தவராஜா தான் விரும்பிய பெண்ணைக் காணவேயில்லை என்பது அவனது துயரை அதிகப்படுத்தியது.

...

அதன்பிறகான நாளில் எப்போதும் போல ஜோசப் இரவுக்காவல் பணிக்காக தேவாலயத்தின் வாசலில் அமர்ந்திருந்தான். அவன் மனதில் அந்த பெண் நடந்து போகத் துவங்கினாள். தவராஜா நிழல் போல அவள் பின்னால் போய்கொண்டிருந்தார்.

ஏப்ரல், 2023 அந்திமழை இதழ்