அரஸ்
சிறுகதைகள்

ஆட்டம்

ஜி.கார்ல் மார்க்ஸ்

மார்கழிக் குளிரின் நல்ல உறக்கத்தில் இருந்தவர்களுக்கு மெலிதாக கேட்கத் தொடங்கிய தப்பு சத்தம் தூக்கம் கலையக் கலைய தீவிரமாய் காதில் ஒலித்தது. எப்போதும் திண்ணையிலேயே படுத்திருக்கும் பெருசுகள் கூட, ஐப்பசி, மார்கழி மாதங்களில் வீட்டின் உள்ளே சென்று படுத்துக் கொள்வதால் தெருவில் அந்த அதிகாலை நேரத்தில் வழக்கமாக இருக்கும் குறைந்த அரவம் கூட இல்லாமல் இருந்தது.

அதிகாலையில் கோலம் போடுவதற்காக எழுந்த வயசுப்பெண்களும், அவர்களுக்கு பூசணிப்பூவும் எருக்கம் புல்லும் பறித்துத் தர துணைக்கு எழுந்த சிறுவர்கள் மட்டுமே கவனித்தார்கள், பாதி முடிந்திருந்த கோலங்களின் மீது ஊர்ந்து வந்த  ஆம்புலன்ஸ் வாகனத்தை. விஷயம் புரிந்து விட்டது. ஆம்புலன்ஸில் வந்திருப்பது அவரல்ல. அவரது உடல்.

ஒரு சில நிமிடங்களில் உடலை இறக்கி வைத்த வாகனம் உடன் அதே வழியாக திரும்பிச் சென்றது. பாதி முடிந்திருந்த கோலங்களை எப்படியோ கோடிழுத்து அவசரமாக பூர்த்தி செய்துவிட்டு பெண்கள் உள்ளே போயிருந்தார்கள். முடிந்த கோலங்கள் சிலவற்றின் மீதிருந்த சாணி பிள்ளையாரையும், பூசணிப் பூவையும் ஆம்புலன்ஸின் சக்கரம் சிதைத்திருந்தது.

நன்றாகத் தானே இருந்தார். போன வாரம் காய்ச்சல் என்று ஆஸ்பத்திரிக்கு போனார். ஊசி போட்டுக்கொண்டு மருந்து மாத்திரை வாங்கிக்கொண்டு வந்தவர் இரண்டு நாள் கழித்தும் காய்ச்சல் நிற்காததால் மீண்டும் போனபோது, பெட்டில் சேர்க்கச் சொல்லியிருந்தார்கள். இதோ நான்கு நாட்கள் ஆகிறது இன்றோடு. ஆம்புலன்ஸ் வந்து இறக்கி வைத்துவிட்டு போகிறது.

அதற்கடுத்த அரை மணி நேரத்திற்குள், தப்படிப்பவர்கள் வந்திருந்தார்கள். சூரியன் மெல்ல எழுந்தது. சூரியக் கதிர்களைப் போல் எழவு செய்தி ஊர் முழுக்க ஊடுருவியது.

இன்னும் கொஞ்ச நேரம் போர்வைக்குள்ளேயே இருக்கலாம் என்று நினைத்தவர்கள் கூட, செத்தவர் குறித்த அதிர்ச்சியில் மெல்ல வெளியே வந்தார்கள். அதிர்ச்சி செத்தவர் குறித்து என்று சொல்வதை விட அவரது மனைவி மீது என்று தான் சொல்லவேண்டும்.

ஐம்பதைக் கடந்த அவர், போன வருடம் தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இருபத்தைந்து வயது இருக்குமா அவளுக்கு?? இந்த ஆறு மாத கர்ப்பத்தால், உடம்பு கொஞ்சம் பூசி வயதைக் கூட்டி காட்டுகிறது. அதை விட ஓரிரண்டு வயது குறைவாகத் தான் இருக்கும் அவளுக்கு.

பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கூட அவளது அழுகுரல் இதுவரை கேட்கவில்லை. அந்த பெண் இவ்வளவு கனத்தை தாங்குவாளா  என்று கிழவிகள் பரிதவித்தார்கள். ஆண்கள் வெளிப்படையாக துயரத்தைக் காட்டிக்கொள்ளாமல் தாங்கள் ஆண்கள் என காட்டிக்கொள்ள முயன்றார்கள்.

இளவயது பெண்களுக்கும் வருத்தமாகத் தான் இருந்தது. ஆனால் இவரைத் திருமணம் செய்து கொள்ள ஏன் அவள் சம்மதித்தாள் என்பது புரியாமல் அவர்கள் குழம்பியிருந்தார்கள். அதை அவளிடம் எத்தனையோ முறை கேட்கவும் முயன்றிருக்கிறார்கள். அவள் பதில் சொன்னால் தானே.

இவ்வளவு அழகான பெண்ணொருத்தி, இவ்வளவு முதிர்ந்தவனை எப்படி கல்யாணம் பண்ணிக்கொள்ள சம்மதித்தாள் என்ற ஆதங்கம் இருந்தது தெரு பெண்களுக்கு. அவளது குடும்பத்தைப் பற்றியும் கூட சரியான தகவல் தெரியவில்லை யாருக்கும். அவளது உறவினர்கள் என்று யாரும் வந்ததையும் அவர்கள் பார்த்திருக்கவில்லை.

அவரிடமும் யாரும் கேட்டிருக்க முடியாது. தனக்கு சரியென்று தோன்றியதை செய்யக்கூடியவரல்லவா அவர். மனைவி இறந்து போய் பத்து வருடங்களாகியும், இருந்த ஒரே பெண்ணையும் கட்டிக்கொடுத்து மூன்று வருடங்கள் ஆகியும், அவர் தனியாகத் தானே இருந்தார். ஒரு சொல் உண்டா அவரைப் பற்றி.

“என்ன மாமா ராத்திரிக்கு நம்ம வீட்ல சாப்புட்றது” என்று கிண்டலடிக்கும் உறவுமுறைப் பெண்களிடம் கூட பதில் பேசாமல் சிரித்துக்கொண்டே கடந்து போவார். அன்பொழுகும் வெள்ளந்தியான சிரிப்பு அது.

யாரும் எதிர்பார்க்கவில்லை, இப்படி ஒரு கல்யாணத்தை அவர் செய்து கொண்டுவருவார் என்று.

மருமகன் எகிறிய போது தான் கொஞ்சம் விசனப்பட்டார். மகள் தான் அவ்வளவு வாஞ்சையாக அப்பனைப் பார்த்தாள். அவளுக்குப் புரிந்தது. அப்பனுக்கு முத்தம் கொடுப்பதெல்லாம் கிராமத்தில் பழக்கமா என்ன. அப்பனை கட்டிக்கொண்டு,“நீ பண்ணினது ஒண்ணும் பெரிய தப்பு இல்லப்பா, நீ தலையை குனிஞ்சிகிட்டு இவங்களுக்கெல்லாம் எதுக்கு  பதில் சொல்ற” என்று மாறி மாறி அவரது கன்னத்தில் முத்தமிட்டாள்.

அதற்குப் பிறகு அவளது புருசனுக்கே பேசுவதற்கு ஒன்றுமில்லை. அப்புறம் ஊருக்கு மட்டும் பேசுவதற்கு என்ன இருக்கும்.

ஆட்கள் வர வர அக்கம் பக்கத்து வீட்டிலிருந்து பெஞ்சும், நாற்காலிகளும் கொண்டு வந்து போடத் தொடங்கினார்கள். வயசு ஆட்கள் வீடுகளிலிருந்து காய்ந்த மூங்கில்களைக்  பந்தல் போடுவதற்காக வாசலில் கொண்டுவந்து போட்டார்கள். கிழித்த தென்னம் பாளையில் தண்ணீர் தெளித்து கீற்று வேய்வதற்கு தயார் செய்தார்கள். தட்டு வண்டியில் கீற்று வந்து சேர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தப்பு சத்தத்தையும் தாண்டி அழுகைச் சத்தம் கேட்கத் தொடங்கியது.

உடன்பங்காளி சொந்தங்களுக்கு  தகவல் சொல்ல ஆள் அனுப்பினார். பக்கத்து வீட்டிலிருந்து காப்பி போட்டு கொண்டுவந்து குழந்தைகளுக்கும் பெண்களுக்கும், பெஞ்சில் உட்கார்ந்திருந்த முதியவர்களுக்கும் கொடுத்தார்கள்.  மணி பத்தைத் தொடும்போது, அது முழு எழவு வீடாக ஆனது. சூரிய வெளிச்சம் கண்ணைக் கூசும் வெண்மையோடு படர்ந்தது. கர்ப்பிணியின் விசும்பல் கமறிக் கமறி மெலிதாக கேட்டது.

பூ, பன்னீர், செண்ட், காகிதப் பூக்கள் வாங்குவதற்காக இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் டவுனுக்கு போனார்கள்.

அடிவயிற்றுக் கதறலோடு மகளும் வந்து சேர்ந்தபோது பந்தல் நிறைந்தது. பேன்ட் வாத்தியக் குழு ஒன்றும், உறுமி மேளத்தோடு குறவன் குறத்தி செட் ஒன்றும் வந்து சேர்ந்தது.

வயித்து புள்ளையோட பொண்டாட்டியை விட்டுட்டு போயிருக்காரு, இது என்ன கொண்டாட்ட சாவா, உறுமி மேளமும் கொறவன் கொறத்தி டான்ஸும் கொண்டாந்திருக்கானுங்க என்று கொஞ்ச பேர் கிசு கிசுக்கத் தொடங்கினார்கள்.

“எங்க சித்தப்பன் சாவு சந்தோசமான சாவுதான். எல்லாம் ஆண்டு அனுபவிச்சிட்டு தான் போயிருக்காரு, நீங்க போயி சீக்கிரம் ரெடியாவுங்க, ஆட்டம் அதிரணும் ஆமா...” என்று குறவன் குறத்தியை சொல்வது போல் பொதுவாக சொன்னான் அவரது அண்ணன் மகன். எழுந்த வேகத்தில் அடங்கிப்போனது கிசுகிசுப்பு.

சித்தப்பா கடைசி காலத்துல கல்யாணம் பண்ணினதுக்கு இவன் கணக்கு தீர்க்குறான் போல என்று முனகினார் ஒரு பெருசு. அவரும் மெல்ல நகர்ந்து கொல்லைப்புறம் பக்கமாக போனார். சரக்கு வந்து சேர்ந்திருந்தது.

“பெரிய தம்பி வீட்டு திண்ணை கொஞ்சம் பெருசா இருக்கும். ஒரு தட்டி மறைவும் கூட இருக்கும் அங்க போய் ரெடியாய்க்கங்க போங்க” என்றார் திண்ணை வீட்டு பெரியப்பா குறவன் குறத்தி செட்டிடம்.

கண்ணை உறுத்தும் ரோஸ் பவுடர், மைத்தீற்றல், கொண்டையை சுற்றி பஞ்சாலான வட்டி, கண்ணாடிகள் மின்னும் உடை என குறத்திகள் ஆடத் தயாராகியிருந்தார்கள். கறுத்து மெலிந்து காய்ப்பேறிய உடலோடும், சுரந்த கண்களோடும் சலங்கையை வலிந்து ஆட்டிக்கொண்டு குறவனும் ஆடத் தயாரானான்.

வீட்டின் பின்புறம் குடி தொடங்கியிருந்தது. பெரியவர் சிறியவர் என்ற பேதமில்லாமல், பந்தலில் இருந்தவர்கள் கொல்லைப்பக்கம் போய் விட்டு வந்து பெஞ்சில் மீண்டும் அமர்ந்தார்கள். திண்ணை வீட்டு பெரியப்பா முகத்தை விசித்திரமாக கோணிக்கொண்டார். வெள்ளை மீசை கன்னம் வரை போய்விட்டு வந்தது. போதையில் கண்களும் நெளிந்தன. 

“லே, அந்த கொறவனை கூப்பிடுங்கடா, அவனுக்கும் அப்பப்ப ஊத்தி குடுங்க, அப்பதான் ஆட்டம் நல்லாருக்கும்”

“கொறத்திவோ ரெண்டு பேர்ல ஒருத்தி ரொம்ப சுமாரா இருக்காளேடா” என்றார் மாடி வீட்டு பெருசு.

“ஆமா மாமா எப்பவுமே இப்டித்தான் ஒருத்திய கிழவியா கொண்டு வந்துடுவானுவோ”

“வயித்தையும் ஆளையும் பாரு, நடக்கும்போதே முக்குறா எங்க ஆடப் போறா அவ”

“இன்னொருத்தி பரவால்ல,

சின்ன வயசாத்தான் தெரியுது, ஆனா முகம்தான் கொஞ்சம் சோர்வா இருக்கு. கொஞ்சம் சரக்கு போட்டா அவளும் சரியாய்டுவான்னு நினைக்கிறேன்” என்று சிரித்தார்கள்.

“நம்ம சின்னவருக்கு வேற சொந்தம் நிறைய. வாய்க்கரிசி கூடை நிறைய வரும். தெருமுனைல போயி ஆடி ஆடி எல்லாரையும் கூட்டிட்டு வரணும்ல, கழண்டு போய்டும் இன்னக்கி அவளுவோளுக்கு...“

குறவனைக் கூப்பிடப் போனவன், முதிய குறத்தியையும் கூட்டி வந்தான். தண்ணி கலக்கப் போனவனிடம், அய்ய.. தண்ணி கலந்து குடிச்சா எப்புடி ஆடுறது, அப்புடியே ஊத்துங்க என்றார்கள் இருவரும். அவன் குத்த வைத்து உட்கார்ந்துகொண்டான். அவள் நின்று கொண்டே கிளாஸை வாங்கினாள். குடித்துவிட்டு புறங்கையால் வாயைத் துடைத்துக்கொண்டாள். 

போதுமா என்று கேட்ட ஊற்றிக்கொடுத்தவனின் கைலிக்குள் கையை விடுவது போல் பாவனை செய்தாள் அவள். அவன் கூச்சத்தில் நெளிய,  கொல்லென்ற சிரிப்பு நிறைந்தது.

ஏன், அது குடிக்காதா? என்று மற்றவளை காண்பித்து கேட்டான் ஒருவன். இல்லை, இல்லை அதுக்கு இந்த பழக்கம் இல்லை என அவசரமாக மறுத்தாள் முதிர்ந்தவள். ஆட்டம் தொடங்கியது. இருவரும் சேர்ந்து பந்தலில் ஆடினார்கள். குறவனும் இணைந்து கொண்டான்.

உறுமியின் அதிர்வில், இறுக்கம் குறைந்து பெண்களும் கூட வேடிக்கை பார்க்கத் தொடங்கியிருந்தார்கள். குரலே வெளியில் வராமல் கணவனின் தலைமாட்டில் அமர்ந்து  விசும்பிக் கொண்டிருப்பவளை இங்கிருந்து பார்க்கும் போது தெரிந்தது. அவளாலும் ஆடுபவர்களை பார்க்க முடிந்தது. ஆலோடியை ஒட்டிய கூடத்தின் வாசலில் தானே அவரை கிடத்தியிருந்தார்கள்.

பந்தலில்தான் தொடர்ந்து ஆடவேண்டும். முதிர்ந்தவள் வாய்க்கரிசிக் கூடை வருவதோடு ஆடி வரப் போய்விட்டாள். நீண்ட நாட்களாக ஆடுபவளில்லையா, ஆடுவது போன்ற பாவனையில், எல்லோருடைய கிண்டலையும் சமாளித்துக்கொண்டு மெலிதான போதையோடு அந்த சூழலில் தன்னை சாதாரணமாக பொருத்திக்கொண்டாள்.

இளையவள் பந்தலில் ஆடிக்கொண்டிருந்தாள். நன்றாக உற்சாகமாக ஆடக்கூடியவள் தான். சமீபத்தில் தான் குழந்தை பெற்றிருந்தாள். வேகமாக ஆட கொஞ்சம் சிரமமாக இருந்தது. தொடையும் கணுக்கால்களும் இறுகிப் போயிருந்தன. வயிறு மட்டும் இன்னும் குழைவு குன்றாமல் இருந்தது.  கொஞ்சம் அதிகமாகத் துடிக்கும்போது சுருக்கென்று வலித்தது.

ஜாக்கெட்டில் போட்டிருந்த மயில் கண் டிசைனும், சுற்றி இருந்த பூக்களும், இரு வேறு வண்ணங்களில் தைக்கப் பட்டிருந்த கை பார்டரும், அவளது மார்பகம் சிறியதா பெரியதா என்ற குழப்பத்தைப் பார்ப்பவர்களுக்கு உண்டு பண்ணியிருந்தது.

ஆண்கள் அத்தனை பேரும் லஜ்ஜையற்று அவளை பருகிக்கொண்டிருந்தார்கள். கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும் பெண்களும் ரசிக்கத் தான் செய்தார்கள்.

சிறுவர்கள் உறுமி மேளத்தை சுற்றி கிளுகிளுப்போடு அலைந்தார்கள். காலியாக இருந்த பெஞ்சின் மீது ஏறிக் குதித்து விளையாடினார்கள். சிரிப்பு பீறிட்டுக் கொண்டிருந்தது அவர்களுக்கு.

அவர்கள் கொஞ்சம் வேகமாக சிரிக்கும்போது, “டேய் அந்தாண்ட போய் விளையாடுங்கடா போங்கடா” என்று பெருசுகள் அடிக்குரலில் துரத்திக்கொண்டிருந்தார்கள்.

கொஞ்சம் படித்தவர்கள் எழவுப் பந்தலில் விளையாடும் தங்கள் வீட்டு சிறுவர்களைப் பார்த்து ரகசியமாக முறைத்தார்கள்.

வெயில் ஏறிக்கொண்டே போனது. ஓரிரண்டு  உறவினர்களைத் தவிர எல்லாரும் வந்துவிட்டிருந்தார்கள். பாடை தயாராகிக்கொண்டிருந்தது.  வெட்டப்பட்ட பச்சை மூங்கிலைப் பிளந்து பிலாச்சாக்கி காகிதப் பூவை சொருகுவதற்காக அதன் மீது வாழைப் பட்டியை கட்டி முடித்திருந்தார்கள். ஒப்பாரி சத்தம் உயர்ந்து எழுவதும்  அடங்குவதுமாகவும் இருந்தது.

“அண்ணே கொஞ்சம் மெதுவா அடிங்க, ரொம்ப வேகமா ஆட முடியல” என்று ஆடிக்கொண்டே போய் உறுமி அடித்துக் கொண்டிருந்தவன் காதில் அவள் கிசுகிசுத்தாள்.

“டேய், என்ன வேணுமாம் அவளுக்கு, சரக்கா” என்று கேட்டு விட்டு அது ஒரு பெரிய நகைச்சுவையைப் போல சிரித்தார் ஒரு பெருசு.

“இல்லீங்க கொஞ்சம் தண்ணி வேணும்னு கேக்குது” என்று சொல்லிவிட்டு அடியின் வேகத்தைக் கொஞ்சம் குறைத்தான் உருமியடித்தவன்.  மீண்டும் ஆடிக்கொண்டே நடந்து போய் அவன் தோளைத் தொட்டு திரும்பினாள் அவள்.

ஒரு சிறிய வினாடி அவர்களது கண்கள் சந்தித்துக்கொண்டன. கனிவின் சிறிய ஒளி. உறுமியது உறுமி. கெண்டைக்கால் சதை ஆட, ஆட்டத்தைத் தொடர்ந்தாள் அவள்.

தெருவின் முனையிலிருந்து, வாய்க்கரிசிக் கூடையோடு ஆடிக்கொண்டு வந்த முதியவள் பந்தலை அடைய இந்த முறை கொஞ்சம் நேரம் எடுத்தது. பந்தலில் ஆடிக்கொண்டிருந்தவளுக்கு சற்று ஓய்வெடுக்க வேண்டும் என்று தோன்றியது. சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது.

குழந்தையை தூக்கி வந்திருக்கலாமோ என்று நினைத் தாள்.

நேரம் ஆக ஆக நெஞ்சில் அடர்த்தி கூடியது போல் இருந்தது. மொத்த உடம்பிலிருந்தும் மார்பு தனித்திருப்பதுபோல்  தோன்றியது. விண்விண்ணென்று வலி உயர்ந்தது.

பால் கட்டிக்கொண்டது என்பதை அவள் புரிந்துகொண்ட போது, காம்பிலிருந்து வலி நீண்டு நெஞ்சின் உள்பகுதியைத் தொட்டது.

அவரை குளிப்பாட்டுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. தண்ணீர் தேங்குவதற்காக சிறிய குழியை வெட்டி அதன் மேல் குறுக்குவாட்டாக ஒரு பெஞ்சைக் கொண்டுவந்து போட்டார்கள். நான்கைந்து வேட்டிகளை ஒன்றாக்கி கருவை முள்ளால் கோர்த்து ஒரு மறைவிடமும் தயாரானது.

ஆடிக்கொண்டிருந்தவளுக்கு சற்றே ஒய்வு கிடைத்தது. ஆனால் உட்கார இடம் இல்லை. பந்தல்காலில் சாய்ந்து கொண்டு நின்று பார்த்தாள். வலி குறையவில்லை. பந்தலின் ஓரம் கொண்டு வந்து வைத்திருந்த பானையில் கொஞ்சம் தண்ணீர் மொண்டு அண்ணாந்து குடித்தாள். மூச்சை நன்றாக இழுத்து விட்டுப்பார்த்தாள். வலி குறைந்த பாடில்லை. 

வேறு வழியில்லை, பாலைப் பீய்ச்சியாக வேண்டும் என்று தோன்றியது. காலையில் வெறும் டீ மட்டும் தானே குடித்தோம் என்று நினைத்துக்கொண்டாள். முதிர்ந்தவள் பக்கமாக நகர்ந்து தயங்கித் தயங்கி அவளிடம் சொன்னாள்.

“என்னாடி இப்புடி சொல்ற, நண்டு ஊருற மாதிரி சுறுக்கு சுறுக்குனு வலி ஊருமேடி, கஷ்டம் தான் சரி வா அப்டி கொல்லைப்பக்கம் போகலாம்” என்று அழைத்தாள்.

இருவரும் அங்கு போனபோது, மறைவாக ஒரு இடமும் இல்லை. குடித்துக் கொண்டிருந்தவர்களால் நிறைந்திருந்தது கொல்லைப்புறம். பக்கத்து வீடுகளின் இருபுறமும் காம்பவுண்ட் சுவர் ரயிலைப் போல் முடிவற்று நீண்டிருந்தது.

மறைவிற்குப் போகவேண்டும் என்றால் கொஞ்ச தூரம் நடந்து, குடித்துக் கொண்டிருப்-பவர் களைக்  கடந்து தான் போகவேண்டும். வலி பொறுக்க மாட்டாத இளையவள் போகலாம் என்றாள். கிழவி தயங்கினாள். அனுபவசாலி இல்லையா.

இருவரும் தயங்கித் தயங்கி நின்றுகொண்டிருந்த போது, உள்ளிருந்து அந்த கர்ப்பிணிப் பெண் வெளியே வந்தாள். அழுததில் சிவந்து உப்பியிருந்தது அவளது முகம்.

அவளது தலையை வெளியில் கண்டவுடன் குடித்துக்கொண்டிருந்தவர்கள் கொஞ்சமாக டம்ளர்களை மறைத்துக் கொண்டார்கள். குடிக்காமல் நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் பந்தல் பக்கமாக நகர்ந்தார்கள்.

இவளைக் கையைக் காட்டி அருகில் வருமாறு அழைத்தாள். இவள் அங்கிருந்த ஆண்களைத் திரும்பி பார்த்துவிட்டு தயங்கி மறுத்தபோது, சிறிய அதட்டலோடு இங்கே வா என்றாள். இவள் அருகில் சென்ற போது காய்ந்த விறகுகள் அடுக்கி வைத்திருக்கும் சிறிய தட்டி மறைப்பு கண்ணில் பட்டது.  இவள் அதை நோக்கி நகர முற்பட்ட போது, அவள் நெருங்கி வந்து இவளது கையைப்பற்றி வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றாள்.

கிழவி சென்று பந்தலில் ஆட்டத்தைத் தொடர்ந்தாள். அதிர்ந்து பரவியது உறுமியின் ஒலி.

பிப்ரவரி, 2015.