ஓவியம் ஜீவா
சிறுகதைகள்

ஆ...சந்திரா!

அரவிந்த்குமார்

காசிமேட்டு கடலில் இருந்து கால்களை நனைத்துவிட்டு அப்படியே கரையேறினால் ஈரம் காய்வதற்குள் சாலையை தாண்டி கபாலி தெருவுக்கு வந்து விடலாம். கடற்கரை எந்த அளவுக்கு பரந்து விரிந்து காணப்படுமோ, அதற்கு நேர்எதிராக  ஒன்றை ஒன்று ஒட்டியபடி ஓங்கி நிற்கும் ஏராளமான குவார்ட்டசுகள். கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு

நீண்டிருக்கும் தெருவின் இரண்டு பக்கங்களிலும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட ஒவ்வொரு குவார்ட்டசிலும் சுமார்  40 வீடுகள். 

எஸ் ப்ளாக் அருகே காலை நேரத்திலேயே கோலி விளையாடிக் கொண்டிருந்தனர் நாலைந்து சிறுவர்கள்.  அவர்களுடன் கோலி ஆட களமிறங்கியிருந்த கஜேந்திரன் அருகே  பைக்கில் வந்து இறங்கினான் ரவி. கபாலித் தெருவுக்கு அடுத்த தெருவில் டிபன் பாக்ஸ் உற்பத்தி செய்யும் சில்வர் பட்டறை நடத்தி வருபவன் தான் ரவி. ஊருக்குள் டிபன் பாக்ஸ் ரவி என்ற பெயரும் உண்டு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆயுதபூஜையின் போது மொத்தமாக 100 டிபன் பாக்சுகளை கஜேந்திரன், ரவியிடம் ஆர்டர் எடுக்க அப்போது துவங்கியது இவர்களின் நட்பு. இப்போது வீட்டுக்குள் உரிமையாக சென்றுவரும் அளவுக்கு மாறியிருந்தது.

வீட்டுக்குள் நுழைந்த இருவரையும் பார்த்த கஜேந்திரனின் மனைவி சந்திரா, ‘காலையிலேயே வேலைக்கு கௌம்பாம சின்ன பசங்களாண்ட ஜோடி போட்டுக்குனு ஆடிக்கிட்டு இருந்தா ஆச்சா, இந்த வயசுல ரோட்ல லுங்கிய தூக்கினு கோலியாண்டா... பாக்குறவங்க சிரிக்க மாட்டாங்க‘ என்று திட்டியபடியே இருவருக்கும் டீ போட்டு கொடுத்தாள். ஈ என்று இளித்தபடி ‘கோச்சிக்காத சந்திரா, நான் குளிச்சிட்டு வந்துர்றேன், எனக்கு டீ வேணாம், ஒரேடியா இட்லி சாப்டுக்கிறேன், ரவிக்கு மட்டும் கொடு‘ என்று சொல்லிவிட்டு அந்த சிறிய வீட்டிற்குள் இருந்த மிகச்சிறிய குளியலறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டான்.

கஜேந்திரன் குளியலறைக்குள் சென்ற அடுத்த நொடி டீ டம்ளரை வைத்துவிட்டு சந்திராவை தாவி அணைத்தான் ரவி. பதறிப்போன சந்திரா, மிக சன்னமான குரலில் ‘யோவ் வுடுய்யா, வுடுய்யா‘ என்று அவனை தள்ளிவிட்டாள். ‘அறிவிருக்கா, அவரு வூட்லயே இருக்காரு இப்படி பண்ணா, என்னா நெனச்ச என்ன' என்று கோபத்தில் டீ டம்ளரை எட்டி உதைத்தாள். இதைப்பார்த்த ரவி அமைதியாக கட்டிலில் உட்கார்ந்தான். சந்திரா அடுக்களை பக்கம் திரும்பி வேலையை பார்க்க ஆரம்பித்தாள். குளித்து முடித்துவிட்டு வெளியே வந்த கஜேந்திரன், ‘என்னாடா டீயை கீழ கொட்டிட்டியா? சந்திரா, வேற டீ போட்டு தர்ற வேண்டியது தானே' என்றான். ‘பால் இல்லங்க, அதா போடல' என்று சந்திரா பதில் கொடுத்தாள். ‘சரி மச்சான் நான் கௌம்புறேன்‘என்று ரவி எழ, ‘என்னடா வந்ததும் அதுவுமா கௌம்புற, இருடா ரெண்டு இட்லி சாப்பிட்டு கௌம்பலாம். என்னை பஸ் டிப்போல வுட்டுட்டு போடா' என்றான். ‘இல்ல மச்சி பசியில்ல, நீ ரெடியாவு, உன்னை வுட்டுட்டே போறேன்' என்றான். கஜேந்திரன் அவசரம், அவசரமாக சாப்பிட்டு விட்டு காக்கி நிற பேண்டையும், காக்கி நிற சட்டையையும் அணிந்து தயாரானான். ‘கௌம்புறேன் சந்திரா‘ என்று சொல்லிவிட்டு வெளியே சென்று ரவியின் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான்.

தங்கம் திரையரங்கம் பக்கத்தில் இருந்த சுங்கச் சாவடி பேருந்து நிலையத்தில் கஜேந்திரன் இறங்கி கொண்டான். ‘இன்னிக்கு என்னா ரூட் மச்சி' என்று ரவி கேட்க, ‘10ஏ தாண்டா...  சுங்கச்சாவடி டூ மேற்கு சைதாப்பேட்டை. ரூட்ட மாத்தி தரச் சொல்லி டிப்போ மேனேஜர் கிட்ட கேக்குறேன், அந்த ஆளு மசிய மாட்றான்' என்று கடுப்பில் பாக்கெட்டில் இருந்த கர்ச்சீப்பை உதறி சட்டைக் காலர் அழுக்காகாமல் இருப்பதற்காக சொருகினான். ரவி பைக்கை திருப்பினான். கஜேந்திரன் சுங்கச் சாவடி டிப்போவுக்குள் நடக்கத் துவங்கினான்.

நேராக கஜேந்திரன் வீட்டுக்கு வந்த ரவி, குளித்து முடித்திருந்த சந்திரா அருகில் போய் நின்றான். அவன் முகத்தை நிமிர்ந்து இறுக்கமாக பார்த்த சந்திரா, ‘யோவ் நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல, என்னமோ ஒரு தபா நா மனசு நெலமாறி தவிச்சிக் கிட்டு இருந்தப்போ உன்னான்ட படுத்துட்டேன்னு எப்போ பார்த்தாலும் காத்துக் கிட்டு இருப்பேனு நெனக்காத, அதுவும் அந்த மனுஷன் உன்ன நம்பி வூட்டுக்குள்ள வுட்டு இருக்கு, அது இருக்கோ சொல்லோ இதுமாரி நடக்குறியே நீயெல்லா ஒரு ஜென்மமா?' என்று படபடவென்று ஆத்திரத்தைக் கொட்டினாள்.

‘இல்ல சந்திரா, அப்டிலா நெனக்கல, என்னமோ உன்ன பார்த்ததும் அப்படியே வாரிக்கணும்னு தோணுச்சு, அதா கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்' என்று தலைகுனிந்து கூறினான் ரவி.

‘ஏண்டா இப்டி பண்ணிட்டோம், அந்த மன்சன் நம்க்கு என்னா கொற வச்சாரு, ஏன் என் புத்தி இப்டி போச்சுனு ஒவ்வொரு நாளும் நா குமிட்டி அடுப்பு மாதிரி குமுறிக்கினு இருக்கேன் மனசுக்குள்ள.... ஆம்பள எந்த பொம்பளைய பாத்தாலும் ஈஈஈனு வழிஞ்சு கேக்கதா செய்வான், நாமதா உசாரா இருந்து இருக்கணும்னு என் ஜென்மத்தை நானே நொந்துக்குறேன், நீ என்னடானா வரசொல்லோ, போறசொல்லோ எல்லாம் எகிறி எகிறி புடிக்கிற' என்று சொல்லிவிட்டு சுவரில் சாய்ந்து அழுதாள் சந்திரா.

சட்டென்று மண்டியிட்டு அவள் பாதங்களை தொட்டு, ‘என்னை மன்னிச்சுடு சந்திரா, என்னை மன்னிச்சிடு, உன்னை அழவச்சி என் ஆசைய தீத்துக்கணும்னு நெனக்கல, ஆனா என்னால கண்ட்ரோல் பண்ண முடியல‘ என்று அவள் பாதங்களில் மாறி மாறி முத்தமிட்டான்.

ச‘யோவ், யோவ் கால வுடுயா கால வுடுயா‘ என்று சந்திரா தடுக்க முயல, மெல்ல மெல்ல பாதங்களில் ஆரம்பித்த முத்தத்தை உயர்த்திக் கொண்டே போனான் ரவி. கணக்கிலடங்கா முத்தங்களால் சந்திராவின் கைகளில் இருந்த மயிர்க்கால்கள் எல்லாம் சிலிர்த்து நின்றன. இதற்குள் அவள் புடவையை தொடை வரை உயர்த்தி விட்டு ரவி முத்தமிட முயன்றான். ஒருகணம் தலையை குலுக்கிக் கொண்ட சந்திரா, ‘சீ போ நாயே, இவ்ளோசொல்லிட்டு இருக்கேன், வந்து நக்கிகினு இருக்க, தூ...' என்று எச்சில் துப்பினாள்.

கீழே விழுந்த ரவி எழுந்து, ‘தொடையில ஏதோ கடிச்ச மாதிரி இருக்கு, கஜேந்திரன் கடிச்சானா, பல்லு பட்ட மாதிரி இருக்கு' என்று புருவத்தை உயர்த்தி கேள்வி எழுப்பினான்.

தலையில் மடார் மடாரென்று அடித்துக் கொண்ட சந்திரா, ‘கருமாரியம்மா என்னை ஏம்மா இப்பிடி சோதிக்கிற, நான் பண்ண பாவத்துக்கு இன்னும் என்னெலா அனுபவிக்கணுமோ‘ என்று சொல்லி மூக்கை சிந்திவிட்டு, ‘வந்துட்டு போற நாய் நீயே இவ்ளோ கேக்குற, கட்டுன புருஷன்டா எனக்கு அவரு, என்ன வேணா பண்ணுவாரு என்ன, அவருக்கு கொடுக்காம எதுக்கு இந்த ஒடம்பு, அதக் கேக்க நீ யாருடா, ...டியா பயலே?' என்று சாமி வந்தவளாக கொந்தளித்தாள்.

‘உன் வாழ்க்கைய கெடுக்கணும், உன்னை நாசம் பண்ணணும்னு எனக்கு ஒண்ணும் வேண்டுதல் இல்ல, ஆனா எனக்கு நீ கெடக்கலனா, என்னமோ மாதிரி ஆகுறேன், மண்டை கொடையுது, நெஞ்சு பத்திக்கினு வருது, அந்த கோவத்தை என்னால அடக்க முடியல' என்று விரல்களை மடக்கி பலம்கொண்ட மட்டும் அருகில் இருந்த பீரோவை குத்தினான் ரவி. அந்த வேகத்தில் பீரோ மீது வைக்கப்பட்டிருந்த தலையணைகள் கீழே சரிந்தன.

இரண்டு கைகளையும் கூப்பி, ‘ரவி உன்னை கெஞ்சி கேட்டுக்குறேன் ஏதோ அறியாம நான் பண்ணிட்டேன், அதுக்காக ஒவ்வொரு நாளும் கூசிப் போறேன், இப்படி அடிக்கடி  வந்து தொந்தரவு பண்ணா, என்னால முடியல ரவி.. தூக்குல தொங்கிடலாம் போல இருக்கு.. ஆனா நான் செத்தா எங்க அந்த மனுஷனுக்கு கெட்ட பேர் வந்துருமோ, போலீசு கேசுனு அந்த மனுஷன அலைய வுட்றுவனோனு என் உசுர மாச்சிக்காம இருக்கேன், புரிஞ்சுக்கோ ரவி, என்னை வுட்டுடு, போயிடு‘ என்று அழுது கொண்டு சரிந்து விழுந்தாள்.

பகல் முழுவதும் சில்வர் பட்டறையில் கொழுந்து விட்டெரிந்த லேத் மெஷின் அருகே நின்று கொண்டிருந்தான் ரவி. பட்டறையில் வேலை செய்த எல்லோரையும் திட்டித்தீர்த்தான். போதாக்குறைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த சில்வர் டிபன் பாக்சுகளை எட்டி உதைக்க அவை சரிந்து விழுந்து சொட்டையாகின. உற்பத்தி செய்த அனைத்தும் வீணாகி போனது. அந்த எரிச்சலும் சேர்ந்து கொள்ள, கடையிலேயே மது அருந்த துவங்கினான். மெல்ல மெல்ல போதை தலைக்கேற ஆரம்பித்தது. கடையில் வேலை பார்த்தவர்கள் மாலையானதும் ஒவ்வொருவராக வெளியேறினர். அப்போது வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த கஜேந்திரனிடம், ரவி கடையிலேயே குடித்துக் கொண்டிருப்பதாக வேலை பார்ப்பவர்கள் சொன்னார்கள்.

கடைக்குள் வந்த கஜேந்திரன், ‘என்னாடா ஆச்சு எதுக்கு இப்டி கடையில வச்சே குடிக்கிற, நீ இப்டி பண்ண மாட்டியே' என்று ஆச்சர்யத்துடன் கேட்டான்.

கஜேந்திரனின் முகத்தை நிமிர்ந்து பார்த்த ரவிக்கு சந்திராவின் முகம் தான் தெரிந்தது. கிளாசில் ஊற்றி வைத்திருந்த மதுவை மடக்கென்று வாய்க்குள் சரித்தான்.

‘டேய் நான் கேட்டுக்கிட்டே இருக்கேன், இப்பிடி குடிச்சிக்கிட்டு இருந்த என்னா அர்த்தம்‘  என்று அக்கறையுடன் கேட்ட கஜேந்திரன் அருகில் இருந்த ஸ்டூலில் அமர்ந்தான்.

ஒன்றும் பேசாமல் மற்றொரு கிளாசில் மதுவை ஊற்றிய ரவி, கஜேந்திரனிடம் நீட்டினான்.

‘ஏண்டா குடிக்கிறனு உன்ன கேட்டா, எனக்கு ஊத்திக் கொடுக்குற, என்னா ஆச்சு உனக்கு' என்று கேட்டான்.

‘குடி சொல்றேன்‘ என்று அழுத்தமாக கஜேந்திரன் முகத்தின் முன்பாக ரவி நீட்ட, வேறுவழியின்றி அதனை வாங்கி குடித்தான்.

மெல்ல மெல்ல இருவரும் சீராக மதுஅருந்தி தள்ளாடும் நிலைக்கு வந்தனர். அப்போது ரவி தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான்.

‘மச்சான் என்ன மன்னிச்சிடு நான் உனக்கு துரோகம் பண்ணிட்டேண்டா' என்று சொல்லிவிட்டு கஜேந்திரனை கட்டியணைத்துக் கொண்டு அழத் துவங்கினான் ரவி.

வாய் குழறியபடி ‘நீ எனக்கு என்னாடா துரோகம் பண்ண, நீ என் பிரெண்டுடா, குடிச்சிட்டு ஔறாதே' என்று ரவியை தோளைப் பிடித்து குலுக்கினான் கஜேந்திரன்.

‘இல்ல மச்சி, உனக்கு தெரியாது, தெரிஞ்சா தாங்க மாட்ட' என்று சொல்லியபடியே மதுபாட்டிலை அப்படியே வாயில் கவிழ்த்தான் ரவி.

‘டேய், டேய், ராவா குடிக்காதாடா' என்று அதனை பிடுங்க முயன்றான் கஜேந்திரன்.

‘கைக்கு கெடக்குறத வாய்க்கு கெடைக்காம பண்றதே உன் வேலை, மரியாதையா பாட்டிலை கொடுடா' என்று கொந்தளித்தான் ரவி.

‘என்னடா வித்தியாசமா பேசுற, உன்னோட எத நா பறிச்சேனு இப்டிலா பேசுற' என்று பற்களை நறநறவென்று கடித்தான் கஜேந்திரன்.

கஜேந்திரன் பற்களை கடிப்பதை பார்த்து ஆத்திரம் தலைக்கேறிய ரவி, ‘என்கிட்ட பல்லு கடிக்கிற வேலைய வச்சிக்காத, அதா டெய்லி டெய்லி உன் பொண்டாட்டிகிட்ட கடிச்சி வெளையாட்றியே, அவகிட்ட போய் காட்டு உன் பல் வித்தைய.. அதா தொடையில அவ்ளோ பெரிசா கடிச்சி வச்சிக்கிறியே' என்று சொல்லிவிட்டு ஒருகணம் அமைதியாகி தலையில் கை வைத்து அப்படியே பின்னால் அட்டை பெட்டிகள் மீது சரிந்து விழுந்தான். 

தன் காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் அப்படியே திக்கென்று எழுந்து நின்றான் கஜேந்திரன். தலையில் கைவைத்துக் கொண்டு குனிந்து அழுது கொண்டிருக்கும் ரவியையும், மதுபாட்டில்களையும் மாறிமாறி பார்த்த கஜேந்திரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘அதா தொடையில அவ்ளோ பெரிசா கடிச்சி வச்சிக்கிறியே‘  ‘அதா தொடையில அவ்ளோ பெரிசா கடிச்சி வச்சிக்கிறியே‘ என்ற வார்த்தை மட்டுமே காதுக்குள் கேட்டுக்கொண்டு இருந்தது.

இடது காதை கையால் தட்டினான் கஜேந்திரன். காதுக்குள் கொய்ங்ங் என்ற சத்தம் எழுந்தது. கூடவே ‘அதா தொடையில அவ்ளோ பெரிசா கடிச்சி வச்சிக்கிறியே‘  என்ற வார்த்தையும் கேட்டது. படார் படாரென்று காதை வேகமாக அடிக்கத் துவங்கினான். இப்போது இரண்டு காதுகளையும் இரண்டு கைகளால் பட் பட்டென்று அடித்துக் கொண்டான்.

சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த ரவி, தள்ளாடியபடியே எழுந்து வந்து ‘மச்சி என்ன மன்னிச்சிடு, நான் ஏதோ தெரியாம சொல்லிட்டேன், நான் சொன்னது பொய், நீ ஏண்டா அடிச்சிக்கிற, என்ன அடிடா‘ என்று அவன் கைகளை தடுத்தான்.

ரவி சொன்னதை பொருட்படுத்தாத கஜேந்திரன் அவனை தள்ளிவிட்டுவிட்டு மீண்டும் காதுகளை அடிக்கத் கொண்டான். பிறகு எதுவும் பேசாமல் பட்டறையில் இருந்து வெளியே நடக்கத் துவங்கினான்.

பின்னால் செல்லலாமா? வேண்டாமா? என்ற தயக்கத்தில் நெற்றியை பிடித்தபடி நின்று விட்டான் ரவி.

பள்ளிவாசலைத் தாண்டி கபாலித் தெருவுக்குள் நுழைந்த பின்னும் கூட காதுகளை தட்டியவாறும், தலையை குலுக்கியவாறும் நடந்து கொண்டிருந்தான் கஜேந்திரன்.  ‘என்ன கஜா, சரக்கு ஓவரா, தலை நிக்க மாட்டேங்குதா' என்று கேலி பேசியபடியே தெருவாசிகள் கடந்து சென்றனர். அது கஜேந்திரனுக்கு கேட்டதா என்றுகூட தெரியவில்லை. மூக்கை இழுத்து இழுத்து உறிஞ்சியபடியே காதுகளை அடித்துக் கொண்டான். கண்கள் நிலைகுத்தி எங்கோ பார்த்திருக்க நடந்து வந்தவன், தெருவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த நாயை கவனிக்கவில்லை. அதன் முன்னங்கால்களை மிதித்துவிட, அது வவ்வ் என்ற சத்தத்துடன் எழுந்து படக்கென்று கஜேந்திரன் காலை கடித்தது. காலை உதறிய கஜேந்திரன் அதுபற்றிய சிந்தனை இல்லாமல் நடக்கத் துவங்கினான்.

‘டேய், டேய் கஜா நாய் இருக்குறது கூட தெரியாம என்னடா நடக்குற, என்ன ஆச்சு, நாய் கடிச்சிடுச்சா, ரத்தம் வருதா, நில்லுடா பாக்கலாம்' என்று தெரிந்தவர்கள் ஓடிவந்தனர்.

அவர்கள் யாருக்கும் பதில் சொல்லாமல் நடக்கத் துவங்கிய கஜேந்திரன் வீடு வந்து சேர்ந்தான். கலங்கிய கண்களுடன் கதவைத் திறந்த சந்திரா, அவனைத் பார்த்ததும் ‘வாய்யா, சுடுதண்ணி வச்சி இருக்கேன், குளிச்சிட்டு வா, டீ போட்டு வைக்கிறேன்' என்றாள். அவள் சொல்வதை கேட்காமல் கட்டிலில் போய் அமர்ந்த கஜேந்திரன் காதுகளை தட்டிக் கொண்டான்.

‘காது வலிக்குதா, காதுல ஏதாச்சும் பூந்துடுச்சா, என்னா ஆச்சு, ஏன் காதை தட்டிக்கிட்டே இருக்க‘ என்று கஜேந்திரன் அருகில் சென்றாள் சந்திரா.

அவளை தடுத்து நிறுத்திய கஜேந்திரன் எதுவும் பேசாமல் உற்றுப் பார்த்தான்.

‘என்னாபா ஆச்சு, ஏன் வித்தியாசமா பண்ற, எனக்கு பயமா இருக்கு' என்று குரல் இடறினாள்.

அவன் படுத்துவிட்டதை பார்த்த சந்திரா, ‘என்கிட்ட எதுவும் சொல்லலனா பரவாயில்ல, அமைதியா படு.எல்லாம் சரியாகிடும்‘  என்றாள். கட்டில் கால் அருகே அப்படியே சரிந்து அமர்ந்து விசும்ப துவங்கினாள்..

சற்று நேரத்தில் பற்களை கடித்தபடி எழுந்து அமர்ந்து அடித்தொண்டையில்  இருந்து ர்ர்ர்ர்ர் என்று சப்தம் எழுப்பி மூக்கை சுருக்கி காதுகளை பட்பட்டென்று அடித்தான். அவன் வாயில் இருந்து கோழை வழிந்தது. இப்படி வாயெல்லாம் நுரைநுரையாக எச்சில் வழிந்ததை பார்த்திராத சந்திரா அலறிப்போய் ‘ஐயோ, ஐயோ என்னாயா, என்னா ஆச்சா, ஏன் நுரையா தள்ளுது‘ என்று வீரிட்டாள்.

சந்திராவின் அலறல் சத்தத்தைக் கேட்ட தெருவாசிகள் கும்பலாக கூடிவிட்டனர். ‘என்னா சந்திரா என்ன ஆச்சு‘ என்று கேட்டபடி ஐந்தாறு பேர் அவள் வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கு கட்டிலில் நாய் போல் இரண்டு கைகளை முன்னால் ஊன்றி முட்டிப் போட்டுக் கொண்டு ர்ர்ர்ர் என்று கத்தியபடி இருந்தான் கஜேந்திரன்.

அவனது கோலத்தைப் பார்த்த எல்லோரும் அப்படியே நின்று விட்டனர். அருகில் செல்வதற்கு யாருக்கும் துணிச்சல் இல்லை. ஆட்களை விலக்கிக் கொண்ட வந்த ஒருவர், ‘ஏம்மா கஜேந்திரன நாய் கடிச்சிடுச்சும்மா, நான் பார்த்தேன், நாய் கடிச்சது கூட தெரியாம எங்கடா போறனு கேட்டுட்டு நான் போய்ட்டேம்மா, ஆஸ்பித்திரி போய் இருப்பானு நெனச்சேன், போலயா? சாயந்திரம் கடிச்சுதுமா, இப்போ ராவாயிடுச்சே, இவ்ளோ நேரத்துக்கு வெஷம் தலைக்கேறிடுச்சு போல' என்று சொல்ல பொம்பளைகள் அலறியடித்துக் கொண்டு வெளியே செல்ல, ஆண்கள் செய்வதறியது திகைத்தனர்.

தைரியத்தை வரவழைத்துக் கொண்ட இரண்டு பேர் கஜேந்திரனிடம் செல்ல, பற்களை பயங்கரமாக காட்டியபடி தடாலென்று கட்டிலில் இருந்து எழுந்தான். அவன் எழுந்த வேகத்தைப் பார்த்த எல்லோரும் இடித்துப்பிடித்தபடி வீட்டை விட்டு வெளியே ஓடினர். வந்த வேகத்தில் கதவை வெளிப்பக்கமாக மூடினர். ‘கஜேந்திரனுக்கு வெறிபுடிச்சிடுச்சி போல, நம்மள கடிச்சா நாமளும் அவ்ளோதா‘ என்று எல்லோரும் பேசினர்.

‘ஐயோ சந்திரா உள்ள மாட்டிக்கிட்டாளே, அவள வெளிய ஓடி வர சொல்லுணுமே‘ என்று பேசியபடி தாழ்ப்பாளை மெதுவாக சத்தமிடாமல் திறந்து ஓரங்குல இடைவெளிக்கு கதவை திறந்து உள்ளே எட்டிப்பார்த்தனர். அங்கு கட்டிலில் கஜேந்திரன் காதுகளை தட்டியபடி அமர்ந்திருக்க, அவன் வாயில் எச்சில் வழிந்து கொண்டிருந்தது. அவன் கால்களை பற்றியபடி சந்திரா அழுது கொண்டிருந்தாள்.

‘சந்திரா, சந்திரா, சந்திரா வெளிய வந்துடு, உள்ள இருக்காத, அவனுக்கு என்னமோ ஆயிடுச்சு, உன்ன கடிச்சி, கிடிச்சி வெக்கப் போறான், ஓடியாந்துடு‘ என்று கூறினர். அவர்களை திரும்பி பார்த்த சந்திரா தலையை பலமாக ஆட்டினாள்.

‘நான் வரமாட்டேன், என் வூட்டுக்காரர் கூடதான் இருப்பேன், இவர் வுட்டுட்டு எப்பிடி வர்றது, நான் செத்தாலும் பரவாயில்ல, யாராச்சும் டாக்டர கூட்டியாங்களேன்‘ என்று கத்தினாள்.

வீட்டுக்குள் சட்டென்று தாவாங்கட்டையை உயர்த்தி காற்றில் பறக்கும் ஈக்களை பிடிக்கும் நாய் போல மேல்வரிசை மற்றும் கீழ்வரிசை பற்களை வேகமாக தட்டியபடி கடித்தான் கஜேந்திரன். இதைப்பார்த்து பதறிப்போன சந்திரா, அவனது இரண்டு கன்னங்களையும் பலம்கொண்ட மட்டும் அழுத்தி அமைதிப்படுத்த முயன்றாள். அவன் சட்டென்று சந்திராவின் புடவையை தொடை வரை உயர்த்தி ஏற்கனவே பல் தடம் இருந்த இடத்தை நாய் கடிப்பதை போல கீழ்தாடையால் பட்பட்டென்று கடித்தான்.

அதிர்ச்சியில் உறைந்து போன சந்திராவுக்கு அவன் என்ன செய்கிறான் என்பதை புரிந்து கொள்ள சிலநிமிடங்கள் ஆனது. ‘ஐயோ தெய்வமே என்ன இது, ஏன் இப்பிடி‘ என்று கத்தினாள். அவளது அலறலைக் கண்டு கொள்ளாத கஜேந்திரன் தொடர்ந்து அதே இடத்தில் பட்பட்டென்று ஈக்களைப் பிடிக்கும் நாய்போல கடிக்கத் துவங்கினான். நெஞ்சு விம்ம, முகமெல்லாம் சிவந்து மூக்கில் இருந்து சளிஒழுக தலையில் அடித்தபடி கால்களை அகட்டிக்காட்டியபடி அழத் துவங்கினாள் சந்திரா.  மெதுவாக கடிக்கத் துவங்கிய கஜேந்திரன் ஒருகட்டத்தில் வேகமெடுத்து கடிக்க ஆரம்பித்தான். வலியில் துடித்தாலும் கஜேந்திரனின் முடியை இறுகபற்றியபடி அவன் தலையை தன் தொடையோடு அழுத்தி வைத்திக் கொண்டாள்.

கதவிடுக்கின் வழியாக உள்ளே பார்த்த தெருவாசிகள் ‘ஐயயோ, ஐயயோ‘ என்று அலறினர். ‘சந்திராவை கடிச்சி சாகடிக்கிறான்பா கஜேந்திரன்‘ என்று கத்திக்கொண்டே ‘யாராச்சும் கட்டை, கயிறு இருந்தா எடுத்து வாங்களேன், உள்ளே போய் சந்திராவ காப்பாத்துவோம்‘ என்று கூறினர். ஆனால் யாருக்கும் உள்ளே செல்ல தைரியம் வரவில்லை.

கடித்துக் கொண்டே இருந்த கஜேந்திரன் அப்படியே விலுக் விலுக்கென்று உடலை இரண்டுமுறை வெட்டிக்கொண்டு சந்திராவின் தொடை மீது சரிந்தான். அவன் பற்களின் இடுக்கில் மாட்டிக்கொண்ட தொடையின் சதை இழுத்தபடியே விழுந்த கஜேந்திரனை வாரி எடுத்த சந்திரா, ‘என்னாங்க, என்னாங்க கண்ணை தொறந்து பாருங்க, முழிச்சி பாருங்க‘ என்று கத்தினாள். அவனிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. கண்கள் வெறித்து பார்க்க, வாயில் வழிந்த கோழையோடு, இரண்டு காதுகளை கைகளால் பொத்திக்கொண்டு விறைத்துப் போயிருந்தான். ‘ஐயோ கடவுளே, நான் பண்ண பாவத்துக்கு எனக்கு தண்டனை கொடுக்கக் கூடாதா?‘ என்று அடித்தொண்டையில் இருந்து குரலெடுத்து அழதாள் சந்திரா.

அவளது சத்தத்தை கேட்ட தெருவாசிகள் கதவை முழுவதுமாக திறந்துகொண்டு உள்ளே ஓடி வந்தனர். செத்துக்கிடந்த கஜேந்திரனையும், தலைவிரி கோலமாக அழுது கொண்டிருந்த சந்திராவையும் பார்த்து வாயைப் பொத்தி குமுறத் துவங்கினர். அதற்குள் டாக்டரை ஒருவன் அழைத்து வர, அவர் வந்து நிலைமையை பார்த்தார். சந்திராவை கஜேந்திரன் கடித்ததை டாக்டரிடம் அங்குள்ளவர்கள் கூறினர். பெண்கள் இரண்டு பேர் சந்திராவை கைத்தாங்கலாக இழுத்து நிற்க வைக்க, அவளது இடுப்பில் இரண்டு ஊசிகளை போட்டார் டாக்டர்.

‘இது ஆண்டிஇன்பெக்ஷன் இன்ஜெக்ஷன் இப்போதைக்கு பிரச்னை இல்ல, சாவு எடுத்த பிறகு இந்த பொண்ணை ஹாஸ்பிட்டல் -க்கு கூட்டிகிட்டு வாங்க‘ என்று சொல்லிவிட்டு பணம் எதுவும் வாங்காமல் வெளியே சென்றார்.

அதேநேரம் சில்வர் பட்டறையில் காஸ் சிலிண்டர் வெடித்து பெரிய தீவிபத்து ஏற்பட்டு விட்டதாகவும், ரவி அதில் இறந்து போய்விட்டதாகவும் தகவல் வந்தது. பாதிப்பேர் அதனைப் பார்க்க கிளம்பி ஓடினர். ‘ப்ரெண்ட்ஸ்னா இப்படிதான் இருக்கணும், ரெண்டு பேரும் ஒரே சமயத்துல போய் சேர்ந்தானுங்க பாரேன்‘ என்று தெருவாசிகள் வியந்து பேசினர்.

சிலமாதங்கள் கழித்து குவார்ட்டர்சின் வாசலில் இட்லிக்கடை போட்டாள் சந்திரா. கஜேந்திரன் இறந்தபிறகு அவளுக்கு ஒரு குணம் வந்துவிட்டது. சீரான இடைவெளியில் தோளை ஒடித்து காற்றில் பற்களை கடிக்க ஆரம்பிப்பாள். முதலில் பார்த்து பயந்துபோன தெருவாசிகள், கஜேந்திரன் கடித்ததில் அவளுக்கு இப்பிடி ஆகியிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டனர். டாக்டரிடம் காண்பித்ததில், ‘அவளுக்கு உடம்பில் எந்த சிக்கலும் இல்லையென்றும், ஆனால் ஏன் அப்பிடி செய்கிறாள் என்று தெரியவில்லை‘ என்று டாக்டரும் சொல்லிவிட்டார். அவளது அந்த செய்கையை பார்த்த தெருவாசிகளும், சிறுவர்களும் அவளை  மெல்ல மெல்ல நாய் சந்திரா என்று அழைக்க ஆரம்பித்தனர். இதற்கு எந்த கோவமும் படாத அவள், அவ்வாறு அழைத்தாலும் திரும்பி பார்ப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டாள்.

இப்போது போனாலும் பார்க்கலாம், காற்றில் பறக்கும் ஈக்களை பிடிக்க முயல்வது போன்று பற்களை பட்பட்டென்று அடித்துக் கொண்டும், தோள்களை ஒடித்து கன்னத்தில் இடித்துக் கொள்ளும் சந்திராவை... நாய் சந்திராவை..

செப்டெம்பர், 2018.