மனோகர்
சிறுகதைகள்

அப்போதும் அவன் அங்கு இல்லை

சிவபாலன்

அம்மா, இனிமே நீ இப்படி அவசரம் அவசரமாய் கிளம்ப வேண்டாம் இல்ல, ஜாலியா வீட்டிலேயே இருக்கலாம், மெதுவா எழுந்து, மெதுவா சமைக்கலாம்” என்றாள் கீதா, கொஞ்சம் நைந்து போயிருந்த துடைப்பத்தை வைத்து தரையை பட்டும் படாமல் பெருக்கி கொண்டிருந்தாள்.

சரளா அவள் கேள்விக்கு எதுவும் பதில் சொல்லவில்லை, வாணலியில் அரிசி பொன்னிறமாய் மாறிக் கொண்டிருந்தது, அதை உடைந்து விடாதவாறு மெதுவாக வறுத்துக் கொண்டிருந்தாள், வறுத்த அரிசியின் மணம் அந்த வீடு முழுவதும் பரவியது.

மணி ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது. அரிசியை சன்னமாக அரைத்துவிட்டு சுடு தண்ணியைக் கொஞ்சம் மிதமாக சூட்டில் கலந்து விரல் அளவு உப்பை அதில் போட்டு நன்றாக கரைத்தாள்.

“என்னமா நான் பாட்டுக்கு கேட்டுட்டு இருக்கேன், நீ பதிலே சொல்ல மாட்டேங்கற” என்று துடைப்பத்தை எடுத்துக்கொண்டு சமையலறைக்கே வந்துவிட்டாள் கீதா. சரளா அவளைத் திரும்பிப் பார்க்காமலே “ஆமாம் ஜாலிதான்” என்றாள், அவள் குரலில் ஒருவித சலிப்பு தெரிந்தது, மேலும் அவளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற விருப்பமின்மை நன்றாகவே தெரிந்தது.

கீதாவுக்கும் அது புரியாமல் இல்லை. ஆனால் அவளுக்கும் வேறு வழியில்லை. அம்மா அப்படித்தான். அதற்காக அப்படியே விட்டு விட முடியாது. வரும்போது கணவன் சொல்லிதான் அனுப்பி விட்டான் ‘உங்க அம்மா ரிட்டையர்ட் பணத்தில பாதி பங்க எப்படியும் கேட்டு வாங்கி வந்துடு, வாங்கிட்டு நீ பொறுமையாவே வீட்டுக்கு வா, அது வரை பசங்களை எல்லாம் நான் பார்த்துக்குறேன்’ என்று தெளிவாகவே சொல்லியிருந்தான்.

கீதா மட்டுமல்ல சரளாவின் ரெண்டாவது பொண்ணு ராதாவும் நேற்று இரவே வந்துவிட்டாள், அவள் இன்னும் தூங்கி எழவில்லை, நைட் ரொம்ப நேரம் டிவி பார்த்துட்டு லேட்டாதான் தூங்கினாள், எப்படியும் எழுவதற்கு பத்து மணியாகும்.

சரளாவின் கணவன் ரெண்டு மாதமாக பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகக் கிடக்கிறான்.

சரளாவே அத்தனை சிரத்தையாக அவனை கவனித்துக் கொள்கிறாள், அவனது கழிவுகளை சுத்தப்படுத்துவதோ அல்லது கழிவுகள் அப்பிய அவனது துணிகளைத் துவைப்பதோ அவளுக்கு எந்த முகசுழிப்பையோ அல்லது சிரமத்தையோ தரவில்லை. ஏனென்றால் அவளுக்கு இது ஒன்றும் புதிதல்ல, ஒரு ஸ்டாப் நர்சின் இயல்பான வேலைதான் அது, என்ன இவ்வளவு காலம் ஆஸ்பத்திரியில் அதைச் செய்தாள், இனி வீட்டில் செய்யப் போகிறாள். அவ்வளவு தான் வித்தியாசம் அதைத் தவிர இந்த ரிட்டையர்மெண்ட் அவளுக்கு வேறு எந்த ஆசுவாசத்தையும் தரப்போவதில்லை.

ரெண்டு பொண்ணுங்களும் எதற்கு வந்திருக் கிறார்கள் என்பதும் அவளுக்கு தெரியாமல் இல்லை, ஒருத்திக்கு ஊர் முழுக்க கடன், வீட்டுக்காரன் சரியில்லை, பணம் வாங்கிட்டு வாடினு அனுப்பியிருப்பான். இன்னொருத்திக்கு குழந்தை இல்லை வைத்தியத்துக்கு பணம் வாங்க வந்திருப்பாள். ரிட்டையர்மெண்ட் பணம் வரப்போவது அவர்களுக்கு தெரியாமல் இருக்குமா என்ன?

பணம் கொடுப்பதில் அவளுக்கு ஒன்றும் பெரிய வருத்தம் இல்லை தான். வருத்தப்பட்டால் கூட என்ன ஆகப் போகுது. எப்படி இருந்த மனுஷன் இவரு, கால் கை வராம ஆஸ்பத்திரில கடந்தப்ப கூட ரெண்டு பொண்ணுங்களும் வந்து எட்டி கூட பார்க்கவில்லை என்பது தான் கோபமாக இருந்தது.

கணவனுக்கு கஞ்சியைப் புகட்டிவிட்டு சரளா வேக வேகமாக உடையை மாற்றிக் கொண்டு, ஸ்கூட்டியில் கிளம்பினாள்.

அந்த மனநல மருத்துவமனையின் பெரிய வாயிலைத் தாண்டி உள்ளே செல்லும்போது அவள் மனம் கொஞ்சம் லேசாய் மாறியது போல் இருந்தது. வழக்கத்தை விட வண்டியை இன்னும் மெதுவாக ஓட்டினாள். ஏதோ முதல் முறை அந்த மருத்துவமனைக்கு வருவது போல ஒவ்வொரு இடத்தையும் பொறுமையாகப் பார்த்தாள். சமீபத்தில் வீசிய புயலில் நிறைய மரங்கள் சாய்ந்திருந்தன.

சரளா பதினேழு ஆண்டுகள் இதே ஆஸ்பத்திரியில் தான் வேலை பார்க்கிறாள். நிறைய மரங்கள் விழுந்த போதிலும் கூட அந்த மனநல மருத்துவமனை மிச்சமிருக்கும் அடர்த்தியான பசுமையான மரங்களால் சூழப்பட்டு தனது வனப்பை கொஞ்சம் கூட குறைத்துக் கொள்ளாமல் இருந்தது.

கடைசி நாள் கவர்மெண்ட் சர்வீஸ் மனநிலை என்பது ஒரு புதிரானது. இத்தனை நாள் ஒரு நாள் லீவுக்காக ஏங்கிய மனம், காலம் தரும் இந்த நிரந்தர லீவை அத்தனை சந்தோஷத்தோடு ஏற்றுக் கொள்வதில்லை. தனக்கான வேலைகள், தன் இருப்பு சார்ந்த நியாயங்கள், அதன் தேவைகள் எல்லாமும் ஒரே நாளில் முடிந்து போவது ஒன்றும் அத்தனை சந்தோஷமானது அல்ல.

இந்த ஆஸ்பத்திரியின் ஒவ்வொரு சுவரும் சரளாவிற்குத் தெரியும். இங்கிருக்கும் அத்தனை நோயாளிகளும் அவளுக்கு நெருங்கிய பழக்கம், இந்த ஆஸ்பத்திரிக்கு வெளியே தன்னிடம் இருந்து பறிக்கப்பட்டது எல்லாம் இந்த ஆஸ்பத்திரி உள்ளே அவள் பெற்றிருக்கிறாள். இந்த ஆஸ்பத்திரி அவளுக்கு எல்லாமுமாக இருந்திருக்கிறது. நிபந்தனையற்ற, சுயநலமற்ற அன்பை இந்த ஆஸ்பத்திரியின் சுவரைத் தாண்டி வேறு எங்கும் பெற முடியாது என்பதை சரளா தீர்க்கமாக நம்பினாள் அதற்கு அவளிடம் நிறைய காரணங்களும் இருக்கவே செய்தன.

“என்னக்கா கடைசி நாளா” என்ற குரலை கேட்டு யோசனையை கலைத்து விட்டு நிமிர்ந்து பார்த்தாள் புது மேட்ரன் எலிசபெத் புதிய உடையில் ஜொலிப்பாக இருந்தாள்.

“ஆமாம் எலிசபெத், என்ன பிரமோஷன் வந்திடுச்சா ஒரு வழியா”

“ஆமாக்கா புது டைரக்டர் வந்து எல்லா பெண்டிங் பைலையும் கிளியர் பண்ணச் சொல்லிட்டார் அப்படியே நம்மதும் மூவாயிடுச்சு”

“சந்தோஷம் எலிசபெத், வாழ்த்துக்கள்”

“தேங்க்ஸ்க்கா, எங்க சாப்பிடவா போறிங்க”

“இல்ல, வார்ட் 20 போறேன், அங்க லட்சுமிய ரிலீவ் பண்ண இன்னும் யாரும் வரலயாம், நம்ம போய் கொஞ்சம் நேரம் இருந்தா அவ கிளம்புவா பாவம்”

“ஆமாக்கா, அன்பு   தான் அந்த வார்டு, தினமும் லேட்தான், நீங்க இருந்த வரைக்கு எல்லாத்தையும் கண்டுக்காம விட்டுட்டீங்க, இனி நான் எல்லாத்தையும் ஒரு பிடி பிடிச்சிர்றேன்” என சொல்லிச் சிரித்தாள்.

சரளாவும் பதிலுக்கு சிரித்து விட்டு 20ம் வார்டை நோக்கி நடந்தாள்.

லட்சுமி 20ம் நம்பர் வார்டின் வாசலிலேயே நின்றிருந்தாள். சரளாவை பார்த்ததும்தான் அவளுக்கு நிம்மதி வந்தது. “சாரி, மேட்ரன் வீட்டில் ஒரு விஷேசம் சீக்கிரம் போகணும் அதுதான், இல்லனா வெயிட் பண்ணியே போயிருப்பேன்” என்றாள் குழைவாக.

“பரவாயில்லை லட்சுமி போய்ட்டு வா, அன்பு வர வரைக்கும் நான் பார்த்துக்குறேன்”.

லட்சுமி அவசர அவசரமாக உள்ளே சென்று ரிலீவிங் நோட்டை எடுத்து வந்து சரளாவிடம் கையெழுத்து வாங்கி கொண்டாள்.

“எவ்வளவு சென்சஸ் லட்சுமி”

“42 மேட்ரன்”

“ஏதாவது பிராப்ளம் இருக்கா?”

“ஒண்ணும் இல்ல மேட்ரன், எல்லாரும் நல்லா இருக்காங்க”

“சரி, நீ கிளம்பு, நான் பார்த்துக்குறேன்”

“தேங்க் யூ மேட்ரன்” என சொல்லிவிட்டு லட்சுமி விறு விறுவென கிளம்பினாள்.

சரளா நிதானமாக வார்ட் உள்ளே சென்று பார்த்தாள். சுவரெல்லாம் வெள்ளை அடிக்கப்பட்டு

பளிச்சென்று இருந்தது. புது டைரக்டர் வந்ததில் இருந்து ஆஸ்பத்திரியில் நிறைய மாற்றங்கள். அத்தனை வார்டுகளும் வெள்ளை அடிக்கப்பட்டு, கழிவறைகள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு, தெரு விளக்குகள் எல்லாம் போடப்பட்டு மொத்த மனநல மருத்துவமனையுமே செம்மையாக்கப்பட்டுவிட்டது. என்ன இடையில் இந்த புயல் வந்து தான் ஒரு பாடு படுத்தி விட்டது என மனதுக்குள் அந்தப் புயலை கருமினாள்.

அதற்குள் அன்பு வந்து விட்டாள். சரளாவைப் பார்த்ததும் அவளுக்கும் ஒரு நிம்மதி, லட்சுமி என்றால் காய்ச்சி எடுத்து விடுவாள்.

“சாரி மேட்ரன், லேட்டாயிடுச்சி”

“அது தான் நீ வர நேரத்திலேயே தெரியுதே” என புன்னகைத்தாள் சரளா.

“மேட்ரன் இன்னைக்கு தான் ரிட்டயர்மெண்ட் இல்ல, ஆபிஸ்ல சொன்னாங்க, வாழ்த்துக்கள் மேட்ரன்”

“ம்ம்ம், நன்றி, என்ன ஐஸ் வைக்கிறியா”

“அய்யோ இல்ல மேட்ரன், இனி எலிசபெத் சிஸ்டர் தான் மேட்ரனாமே,

கஷ்டம் தான்”.

“யாரு வந்தா உனக்கென்ன? உன் வேலைய நீ சரியா செஞ்சா யார் வந்தாலும் நீ பயப்பட வேணாம்” எனச்  சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

“தேங்க் யூ மேட்ரன்” என சொல்லிவிட்டு அவளும் வார்டுக்குள் சென்றாள்.

சரளா நேராக மேட்ரன் அறைக்கு சென்று ட்யூட்டி ரிப்போர்ட் எல்லாவற்றையும் சரி பார்த்துவிட்டு, அன்றைக்கு வந்த லீவ் லெட்டர் அத்தனையும் சரி பார்த்து விட்டு கையெழுத்து போட்டுவிட்டு எழுந்தாள். 10 மணிக்கு ஆபிஸ் போய் டைரக்டரை பார்த்து கடைசி நாள் ரிப்போர்ட் கையெழுத்து வாங்க வேண்டும் அப்போது தான் மாலைக்குள் ரிலீவிங் ஆர்டர் வந்து சேரும் என மனதில் நினைத்துக் கொண்டே அவளது அறைக்குள் நுழைந்தாள். அட்டெண்டர் சாப்பாடு வாங்கி அவளது மேசையில் வைத்திருந்தான்.

மெதுவாகக் கை கழுவி விட்டு சாப்பாடு பொட்டலத்தை திறந்தாள். இட்லியும் கொத்தமல்லி சட்னியும் இருந்தது. புது கேண்டின் சாப்பாடு நல்ல மணமாக இருந்தது. ஒரு இட்லியை பிட்டு வாயில் போடும் போது அவளது போன் அடித்தது. இட்லியை அப்படியே வைத்துவிட்டு “ஹலோ” என்றாள்

“மேட்ரன், அன்பு பேசறேன்”

“ம்ம், சொல்லு அன்பு”

“மேட்ரன், இங்க வார்டில் ஒரு பேஷண்ட் இல்ல, டாக்டர் ரவுண்ட்ஸ்ல தான் பார்த்தாங்க”

“அப்படியா எந்த பேஷண்ட்”

“வசந்தகுமார்”

“எப்ப இருந்து இல்லையாம், காலையில் லட்சுமி கூட ஏதும் சொல்லலயே”

“அதுதான் மேட்ரன், நைட்ல இருந்தே இல்லனு பக்கத்து பெட் பேஷண்ட்லாம் சொல்றாங்க, லட்சுமி செக் பண்ணல போல, நீங்களூம் ரிலீவிங் நோட்ல 42 பேஷண்ட்னு கையெழுத்து போட்டு இருக்கீங்க”

சரளாவிற்கு பகீரென்றது. ஏதோ விபரீதமாக நடப்பது போல இருந்தது.“சரி நான் அங்க வர்றேன் பார்த்துக்கலாம்” என போனை கட் செய்து விட்டு இட்லி பொட்டலத்தை அப்படியே மூடி வைத்து விட்டுக் கிளம்பினாள்.

வாழ்க்கையில் கல்யாணத்திற்கு முதல் நாளும் கவர்மெண்ட் சர்வீஸில் கடைசி நாளும் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சொல்வார்கள். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சரளா முப்பத்தைந்து வருடம் சர்வீஸில் இருக்கிறாள், இந்த ஆஸ்பத்திரியில் மட்டும் பதினேழு வருடம், ஒரு கலங்கம் கூட கிடையாது. அவ்வளவு பொறுமையாய் நிதானமாய் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்வாள், இன்று இது எதிர்பார்க்காதது.

லட்சுமியின் தவறு தான் ஆனால் அவளை நம்பியிருக்க கூடாது. தானும் ஒரு முறை செக் செய்து பார்த்திருக்க வேண்டும் என யோசித்து கொண்டே வார்ட் வந்து     சேர்ந்தாள்.

கோமதி டாக்டர் கொஞ்சம் கோபமாகத்தான் இருந்தாள். சரளா வந்தவுடன் “என்ன மேட்ரன் நீங்க கூட பார்க்கலையா” என்றாள் கோபமாக.

சரளாவிடம் அந்த கேள்விக்குப் பதில் இல்லை,          ‘நீங்க கூட’ என்பது அவளுக்கு அவ்வளவு உறுத்தலாக இருந்தது அது வெறும் வார்த்தையல்ல.இந்தப் பதினேழு வருடம் அவள் சம்பாதித்த நம்பிக்கை, இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் இப்படி ஒரு கேள்வியை அவளால் நிச்சயமாக எதிர்கொள்ள முடியவில்லை. ஒரு மாதிரி சங்கடமாய் நெளிந்தாள்.

“அன்பு, அப்ஸ்காண்ட் ரிப்போர்ட் ரெடி பண்ணுங்க சைன் பண்றேன். போலிஸ் அவுட் போஸ்ட்க்கு அனுப்பிடுங்க”

“டாக்டர், கொஞ்சம் வெயிட் பண்ணலாம் டாக்டர், இங்கேயே தேடி பார்க்கலாம், இங்க தான் எங்காவது இருப்பார் டாக்டர்” அன்பு அவளிடம் அவ்வளவு பணிவாகக் கேட்டாள்.

“அப்படியெல்லாம் பண்ண முடியாது அன்பு, அவங்க ரிலேட்டிவ்லாம் கொஞ்சம் பிரச்சினைக்குரிய ஆளுங்க அதுவும் இல்லாமல் வசந்தகுமார் நல்லா இருக்க பேஷண்ட், சிம்டம்லாம் கூட ஏதும் இல்ல அவருக்கு”

சரளாவும் “அன்பு, டாக்டர் சொல்றது தான் சரி, நீ உடனே ரெடி பண்ணு இப்போதைக்கு நமக்கு பேஷண்ட் தான் முக்கியம், போலிஸ்ல ரிப்போர்ட் பண்ணா அவங்க தேடவாவது செய்வாங்க” என்றாள்.

“சரி சிஸ்டர் நீங்க ரிப்போர்ட் ரெடி பண்ணிட்டு வாங்க நான் டைரக்டர்கிட்ட போய் ரிப்போர்ட் பண்றேன் முதல்ல, அப்படியே பேஷண்ட் ரிலேட்டிவ் கிட்டயும் இன்பார்ம் பண்ணனும்” என்று சொல்லி விட்டு கோமதி அங்கிருந்து கிளம்பினாள்.

அன்பு சரளாவைப் பரிதாபமாக பார்த்தாள். “சாரி மேட்ரன், என்னால தான் உங்களுக்கு இந்த பிரச்சினை இல்ல”

“அப்படியெல்லாம் இல்ல அன்பு, நான் தான் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கணும்” எனச் சொல்லி விட்டு அவளும் டைரக்டர் ஆபிஸ் கிளம்பினாள்.

வசந்தகுமார் சரளாவிற்கு நன்றாகத் தெரிந்த பேஷண்ட் தான். சில சமயங்களில் சரளாவிடம் வீட்டில் சமைத்து வரச்சொல்லி எல்லாம் சாப்பிட்டு இருக்கிறான், அவன் இங்கு வந்து ஐந்து வருடங்கள் ஆகிறது, வரும் போது அப்படியொன்றும் பெரிய மனநோயெல்லாம் இல்லை, ஒரு மாத வைத்தியத்திலேயே முற்றிலுமாக குணமாகி விட்டான், ஆனால் அதன் பின் அவன் வீட்டில் இருந்து யாரும் வந்து கூட்டிச் செல்வதாய் இல்லை. மூன்று மாதத்திற்கு ஒரு முறை தவறாமல் அவன் வீட்டிற்கு கடிதம் அனுப்பப்படுகிறது ‘குணமடைந்து விட்டான் வந்து கூட்டி செல்லுங்கள்’ என ஆனால் ஒரு பதிலும் இல்லை, யாரும் வரவும் இல்லை, போனை யாரும் எடுப்பதில்லை.

வசந்தகுமாரும் இங்கிருந்து எப்படியாவது போக வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் வாழ்க்கையைப் பற்றி நிறைய கனவுகள் இருந்தன கடைசியாக சரளாவை பார்த்தபோது கூட “என்ன சிஸ்டர் என்ன இங்கேயே நிரந்தரமாக வைத்துக் கொள்ள போகிறீர்களா” என்று கேட்டான். அவளால் தான் என்ன செய்ய முடியும் யாரேனும் அவனுடைய சொந்தம் என்று வந்து ‘நான் இவனை கவனித்துக் கொள்கிறேன்’ என்று எழுதிக் கொடுத்தால் மட்டுமே இந்த மருத்துவமனை நிர்வாகம் அவனை டிஸ்சார்ஜ் செய்யும். ஆனால் அப்படி யாருமே வரவில்லையே. இவனை வீட்டிற்குள் வைத்திருப்பது சமூகத்தில் அவர்களுக்கு அசிங்கம் என நினைத்திருக்கலாம். அதனால் நிரந்தரமாக இங்கேயே இவனை அனுப்பி விடலாம் என அவர்கள் நினைத்திருக்க கூடும் என யோசித்து கொண்டே டைரக்டர் ஆபிஸ் வந்து சேர்ந்தாள்.

டைரக்டர் முன்பே வந்திருந்தார். கோமதி டாக்டரும் டைரக்டரும் மட்டும் அங்கிருந்தனர். கோமதி சரளா வந்ததை கண்டுகொள்ளவே இல்லை டைரக்டர் மட்டும் நிமிர்ந்து பார்த்து “வாங்க மேட்ரன் வந்து உட்காருங்க” என்றார்.

டைரக்டர் முகத்தில் எந்தப் பதட்டமோ கடுகடுப்போ அல்லது கோபமோ இல்லை அவ்வளவு நிதானமாக இருந்தார். சரளாவிற்கு அது நிம்மதியாக இருந்தது. டைரக்டரும் “என்ன மேட்ரன் நீங்க கூடவா” என கேட்டுவிடுவாரோ என பயந்திருந்தாள்.

“நீங்க ஏன் மேட்ரன் கடைசி நாள் அதுவுமா வார்ட் டூட்டி எல்லாம் எடுக்கிறீங்க” என்று மட்டும் கேட்டார்.

“இல்ல சார், லட்சுமி சீக்கிரம் போகணும்னு சொன்னா அது தான்” என்று இழுத்தாள்.

“ரிலேட்டிவ்க்கு இன்பார்ம் பண்ணியாச்சா” என்றார் கோமதியை பார்த்து,

“ம்ம், பண்ணியாச்சு சார் சென்னை தான் அவங்க ஒரு மணி நேரத்தில் வந்துடுவாங்க”

“ஒரு மணி நேரத்தில் வரக்கூடிய தூரத்தில் இருந்துட்டு ஒரு முறை கூட பேஷண்ட்ட வந்து பார்க்கல இல்ல, டிஸ்சார்ஜ் பண்ணாலும் கூட்டிட்டுப் போக மாட்டாங்க, நல்லா இருக்க ஒருத்தர் இங்க எப்படி இருப்பார், எப்படியாவது தப்பிச்சுப் போகணும்னுதான் பார்ப்பார்”

கோமதி “ஆம்” என கடமைக்குத் தலையாட்டினாள், அவளுக்கு டைரக்டர் சொல்வதில் உடன்பாடு கிடையாது, ‘எத்தனை பேர் இருந்தாலும் அவர்களை நாம் தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும், நமது அலட்சியத்தை நாம் மற்றவர்கள் மீது திசை திருப்பக் கூடாது’ என மனதில் நினைத்தாள்.

“ஓகே, மேட்ரன், வார்டர், அட்டெண்டர் எல்லாரையும் வைத்து கொண்டு தேடச் சொல்லுங்க, பேஷண்ட் ரிலேட்டிவ் வரட்டும், அப்புறம் பார்க்கலாம், நீங்க இப்ப கிளம்புங்க” என்றார் டைரக்டர்.

சரளாவும் அங்கிருந்து கிளம்பி பேஷண்டை தேடுவதற்கான வேலைகளைப் பார்க்கத் தொடங் கினாள். இவ்வளவு பெரிய மருத்துவமனையில் ஒரு பேஷண்டை தேடுவது ஒன்றும் அவ்வளவு சுலபமானது அல்ல அது சரளாவிற்கும் தெரியும். அதற்கு முன் பேஷண்ட் உள்ளேதான் இருக்கிறாரா அல்லது வெளியே சென்று விட்டாரா என்பது தெரிய வேண்டும். மெயின் கேட்டில் உள்ள செக்யூரிட்டிகளிடம் விசாரிக்க வேண்டும். நேற்று இரவு டூட்டி பார்த்த                     செக்யூரிட்டிகளை உடனடியாக வரச் சொல்ல வேண்டும். மேலும் பக்கத்து பெட்டில் உள்ள மற்ற பேஷண்டுகளை விசாரிக்க வேண்டும். கடைசியாக யாரிடம் வசந்தகுமார் பேசிக் கொண்டிருந்தார் அல்லது யார் அவரை கடைசியாக பார்த்தது என்பதை விசாரிக்க வேண்டும். அதற்கு லட்சுமியை வரச்  சொல்ல வேண்டும். லட்சுமி வீட்டில் ஏதோ விசேஷம் என சொன்னாள், வருவாளா எனத் தெரியவில்லை என அனைத்தையும் யோசித்துக் கொண்டே மேட்ரன் ஆபிஸ் வந்து சேர்ந்தாள்.

எலிசபெத் பரபரப்பாக இருந்தாள், நாலைந்து ஸ்டாப் நர்ஸ்களை கூப்பிட்டு நிற்க வைத்து திட்டிக் கொண்டிருந்தாள். சரளாவைப் பார்த்ததும் “என்னக்கா கடைசி நாள் அதுவும் போய் இப்படி மாட்டிகிட்டீங்களே ரிட்டயர்மெண்ட்ல ஏதாவது பிரச்சினை ஆச்சுனா என்ன பண்றது” என வருத்தப்பட்டாள். அதாவது வருத்தப்படும் சாக்கில் இத்தனை வருட சரளாவின் அணுகுமுறையை உதாசீனப்படுத்திக் கொண்டிருந்தாள்.

எல்லோரையும் வரச்சொல்லி விசாரித்துக் கொண்டிருந்தார்கள். யாருக்கும் எதுவும் தெரியவில்லை. அன்பு தான் டூட்டிக்கு வந்ததில் இருந்தே அவனைப் பார்க்கவில்லை என்றாள். அப்படியென்றாள் அவன் எப்போது அந்த வார்டில் இருந்து கிளம்பியிருப்பான்? எங்கு சென்றிருப்பான்?

பேஷண்ட்டுடைய உறவினர்கள் சில பேர் வந்து விட்டதாக சரளாவை டைரக்டர் ஆபிஸ் கூப்பிட்டார்கள்.  சரளா எலிசபெத்தையும் கூட்டிக்கொண்டு சென்றாள்.

இரண்டு விலை உயர்ந்த கார்கள் டைரக்டர் ஆபிஸ் முன் நின்றிருந்தது. பேஷண்டின் உறவினர்களுடைய கார்களாக இருக்கக் கூடும். சரலாவும் எலிசபெத்தும் வேக வேகமாக டைரக்டர் ரூம் உள்ளே சென்றார்கள்.

“காணாப்போய்ட்டார்னா எப்ப சார்? நைட்டா? காலையிலா? இல்ல கொஞ்ச நாள் முன்னாடியா?” என ஒருவர் வேகமாக கத்திக்கொண்டிருந்தார். இன்னொரு பெண் “உங்கள நம்பித்தானே இங்க விட்டுட்டு நிம்மதியா இருக்கோம், இப்படி பொறுப்பு இல்லாம நடந்துக்கிறீங்க” என தனியாகக் கத்திக்கொண்டிருந்தாள். கோமதி யாரோ ஒரு வயதான ஆளிடம் பொறுமையாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த அறையில் ஒரே இரைச்சலாக இருந்தது. டைரக்டர் யாருக்கு பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருங்கள் என எல்லோரையும் பார்த்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

சரளாவும் எலிசபெத்தும் ஒரு ஓரமாகப் போய் நின்று கொண்டார்கள். எல்லோரும் கத்தி முடித்து ஒரளவுக்கு அமைதியாக இருக்கும்போது டைரக்டர் ஆரம்பித்தார். “ஆறு மாதம் முன்னாடி, மூன்று மாதம் முன்னாடி, ஒரு மாதம் முன்னாடி என மூன்று முறை உங்கள் பேஷண்ட் குணமாகி விட்டார் வந்து அழைத்துச்        செல்லுங்கள் எனக் கடிதம் அனுப்பினோம். ஏன் அப்போது எல்லாம் நீங்கள் வரவில்லை, இன்னைக்கு கால் செய்த அதே நம்பருக்குத்தான் இத்தனை நாளாக கால் செய்து கொண்டிருக்கிறோம் நீங்கள் ஒரு முறை கூட எடுக் கவில்லை, இன்னைக்கு பேஷண்ட் அப்ஸ்காண்ட்னு ஒரே ஒரு மெசேஜ்க்கே இத்தனை பேர் வர முடிகிற உங்களால் ஏன் இத்தனை நாள் வந்து பார்க்க முடியவில்லை” என்றார் பொறுமையாக.

“அதெல்லாம் நீங்க ஏன் சார் கேட்கறீங்க? அது எங்க இஷ்டம் இது என்ன உங்க வீட்டு ஆஸ்பத்திரியா? பைத்தியக்கார ஆஸ்பத்திரி தானே, இவங்கள எல்லாம் வீட்ல வச்சிக்க முடியாதுனு தானே அரசாங்கம் இந்த ஆஸ்பத்திரியக் கட்டி வச்சிருக்கு, நாங்க எதுக்கு கூட்டி போகணும்? உங்கப் பையனுக்கு பைத்தியம் பிடிச்சா தான் தெரியும் வீட்ல வச்சிகிட்டா என்ன என்ன பிரச்சினை வரும்னு” என அந்தப் பெண்மணி டைரக்டரை பார்த்துக் கத்தினாள்.

“மனநிலை சரியில்லாதவங்கள நாங்க குணப்படுத்தறோம். அவங்க நல்லா ஆகிட்டாங்கன்னா அவங்க நம்ம மாதிரியே நார்மலா ஆகிடுவாங்க. அவங்களால இங்க இருக்க முடியாது, அவங்களத் திரும்பவும் சமூகத்தோடு தொடர்புபடுத்த வேண்டியது உங்கள மாதிரி குடும்பத்தில் உள்ளவங்க செய்ய வேண்டியது. ஆஸ்பத்திரில நோய மட்டும் சரி பண்றோம், அத தாண்டி நிறைய இருக்கு, சக மனிதர்களோட அன்பும் பரிவும் அவர்களுக்கு தேவைப்படும். அத ஆஸ்பத்திரி எப்படி கொடுக்கும்? வாழ்க்கையைப் பற்றிய அவர்களுக்கும் கனவுகளும் ஆசைகளும் இருக்கும் அத இந்த பெரிய கேட்டுக்குள்ளேயே எத்தனை நாள் அடைச்சி வைப்பது? அது கஷ்டம் இல்லையா? முதலில் அது நியாயமா?” என்றார் டைரக்டர் பொறுமையாக.

“நியாயத்தைப் பத்தி நீங்க பேசாதிங்க சார், ஒரு பேஷண்ட ஒழுங்கா பத்திரமா பார்த்துக்க முடியல, நீங்க நியாயத்தைப் பத்தி எங்களுக்குக் கிளாஸ் எடுக்கிறீங்க. சரி சார் நாங்க எங்க பேஷண்ட கூட்டிட்டுப் போறோம் அனுப்பி வைங்க எங்க கூட, முடியுமா உங்களால இப்ப?, இப்ப நாங்க போறோம் இன்னும் ஒரு மணி நேரத்தில் வருவோம். பேஷண்ட்ட ரெடி பண்ணி வைங்க நாங்க கூட்டிட்டு போறோம், அப்படி பேஷண்ட் இல்ல அவ்வளவு தான் உங்கள எல்லாத்தையும் ஒரு வழி பண்ணிடுவோம், மினிஸ்டர் எல்லாம் எங்ககிட்ட இருக்காங்க தெரியும்ல” என கிட்டத்தட்ட மிரட்டும் தொனியில் சொல்லிவிட்டு எல்லோரும் அங்கிருந்து  சென்றார்கள்.

சரளாவிற்குப் பதட்டம் அதிகமானது. எல்லோரும் போன பிறகு டைரக்டரைச் சென்று தனியாகப் பார்த்தாள். டைரக்டர் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தார். “சாரி மேட்ரன், பேஷண்ட் கிடைக்கலனா எனக்கு வேறு வழியில்லை, உங்க மேல நடவடிக்கை தான் எடுத்தாகணும், இது ஏதோ காம்ப்ளிக்கேட் ஆகும்னுதான் எனக்கு தோணுது”

“அது பரவாயில்லை சார் பார்த்துக்கலாம், உங்களுக்கு பிரச்சினை ஆய்டுச்சேன்னு தான் கவலைப்படறேன்”

“எனக்கு என்ன பெரிய பிரச்சினை? கடைசி நாள்  சர் வீஸ்ல இது போல மாட்டிகிட்டா என்ன ஆகும்னு உங்களுக்கு தெரியும் தானே? இவ்வளவு காலம் நீங்க சேமிச்ச எந்தப் பணமும் வராது பென்ஷனும் வராது. அது தான் மேட்ரன் பெரிய பிரச்சினை, நான் அதுக்குத் தான் வருத்தப்படறேன்”

“எனக்கு எல்லாம் தெரியும் சார், பார்த்துக்கலாம் சார் நான் சமாளிச்சிக்கிறேன், இந்த ஆஸ்பத்திரி எனக்கு எந்த கெடுதலையும் இது வரை பண்ணியது இல்லை அது என்ன கை விடாதுனு எனக்கு நம்பிக்கை இருக்கு சார்” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

டைரக்டர் ஆபிஸில் இருந்து வெளியே வந்து நடந்தாள். மதிய வெயில் முழுவதுமாக அவள் மீது இறங்கியது. அந்த வெப்பமும் மன உளைச்சலும் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாததும் சேர்ந்து அவளுக்கு மயக்கம் வருவது போல இருந்தது. போன் அடித்தது. எடுத்தாள். ரெண்டாவது பெண் ராதா பேசினாள் “அம்மா அவரு போன் பண்ணிணார் பணம் எப்ப கிடைக்கும்னு கேட்கச் சொன்னார், உடனே கிடைக்குனா இந்த சைக்கிள்ளேயே ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சிடலாம்னு சொன்னார்” என்றாள்.

சரளா ஒரு கணம் அமைதியாக இருந்தாள் “வீட்டுக்கு வர்றேன் வந்து பேசிக்கலாம்” எனச்  சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தாள். சரளா மனம் முழுக்க அவ்வளவு தனியாக உணர்ந்தாள்.

வெயில் இன்னும் உக்கிரமாக கொதிக்கத் தொடங்கியது. மெல்ல மெல்ல நடந்து மேட்ரன் ஆபிஸ் வந்து  சேர்ந்தாள். யாரும் இல்லை. அவ்வளவு அமைதியாக இருந்தது. தண்ணீரை எடுத்துக் குடித்தாள். கொஞ்சம் தேவலாம் போல் இருந்தது. ஃபேனை வேகமாக வைத்துவிட்டு அந்த நாற்காலியில் சாய்ந்தாள். அதற்குள் போன் அடித்தது எலிசபெத் கால் செய்திருந்தாள் “க்கா, பேஷண்ட் கிடைச்சாச்சு, சீக்கிரம் வார்ட் 20 வாங்க” என்றாள். அவள் குரலில் அத்தனை சந்தோஷம் இருந்தது.

சரளாவிற்கு ஒரே நொடியில் அத்தனையும் சரியாகி விட்டது போல் இருந்தது. நம் மனம்தான் எவ்வளவு ஆச்சரியமானது. அது சோர்வாகி விட்டால் உடலில் உள்ள அத்தனை செயல்களையும் முடக்கிப் போட்டு விடுகிறது. அதுவே மனம் சந்தோஷமாக இருந்தால் உடலில் என்ன பிரச்சினை இருந்தாலும் அத்தனையும் கலைந்து ஒரு புத்துணர்ச்சி வந்து விடுகிறது.

சரளா வேக வேகமாக வார்டுக்குச் சென்றாள். அங்கு ஒரு கட்டிலில் வசந்தகுமார் தலையை குனிந்தபடியே உட்கார்ந்திருந்தான். எலிசபெத் அவனை கடுமையாக திட்டிக் கொண்டிருந்தாள், சரளா அவளை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு அவனருகில் சென்று அவனின் தலையைக் கோதினாள். அவன் நிமிர்ந்து பார்த்தான்    “சிஸ்டர் நேத்து சாயங்காலம் 10 ஆவது வார்டுக்கிட்ட ஒரு காலி கிணறு இருக்குல்ல அதில் இறங்கிப் பார்க்கலாம்னு இறங்கினேன், கடைசி வரை இறங்கிட்டேன், ஆனா ஏற முடியல சிஸ்டர். நைட் முழுக்க உள்ள இருந்து கத்திட்டே இருந்தேன், யாரும் வரல, இப்ப தான் வந்து பார்த்தாங்க, சாரி சிஸ்டர் இனி மேல் இப்படி சொல்லாம போக மாட்டேன்” என்றான். சரளா அவனது தலையை தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.

“உங்க அண்ணன் அண்ணி எல்லாம் வந்தாங்க உன்ன கூட்டிட்டு போய்டறதா சொல்லியிருக்காங்க தெரியுமா” என்றாள் அன்பு. “அப்படியா சிஸ்டர், அப்ப நான் கிளம்ப போறேனா இங்கிருந்து, அப்படினா நான் போய் ரெடியாகிறேன்”

“சரி போய் ரெடியாகு” எனச் சொல்லிவிட்டு சரளா டைரக்டர் ஆபிஸுக்கு கிளம்பினாள்.

டைரக்டர் சந்தோஷமாக இருந்தார். “ரிலேட்டிவ்க்கு இன்பார்ம் பண்ணியாச்சு, உங்க பேஷண்ட் இங்கதான் இருக்காரு வந்து கூட்டிட்டுப் போங்கனு சொல்லியாச்சு, வரட்டும் ஒரு பிடி பிடி பிடிக்கறேன்” என்றார்.

சரளா அவரை கேலியாகப் பார்த்தாள் “பேஷண்ட் கிடைச்சாச்சுனு சொன்னதுக்கு அப்புறமும் அவங்க இங்க வருவாங்க, வந்து பேஷண்டக் கூட்டிட்டு போவாங்கனு நீங்க நினைக்கிறீங்களா சார்” என்றாள்.

“ஆமாம் அவ்வளவு பேசுனாங்கல்ல, வருவாங்க, வந்து கூட்டிட்டுப் போவாங்க” என்றார்.

சரளா மெலிதாகச் சிரித்துவிட்டு “என்னோட ரிலீவிங் ரிப்போர்ட் ரெடி பண்ணியிருக்கேன், நீங்க கையெழுத்து போட்டீங்கனா, சாயந்தரத்துக்குள்ள எனக்கு ஆர்டர் வந்துடும்” என அவரிடம் நீட்டினாள்.

“ஹாப்பி ரிடையர்மெண்ட் லைப் மேட்ரன்” எனச்     சொல்லிவிட்டு அதில் கையெழுத்திட்டார்.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு சரளா அங்கிருந்து கிளம்பினாள். மேட்ரன் ஆபிஸில் மிச்சமிருக்கும் தனது அலுவல்களைப் பார்க்கத் தொடங்கினாள்.

வசந்தகுமார் அதற்குள் குளித்து முடித்துவிட்டு அந்த வார்டின் வராண்டாவில் வந்து உட்கார்ந்து கொண்டு மெயின் கேட்டையே ஏதாவது கார் வருகிறதா என பார்த்துக் கொண்டிருந்தான். எந்தக் காரும் வருவதற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை. அது ஒருபோதும் நடக்கப் போவதும் இல்லை; அவனுக்கு அது தெரியப் போவதும் இல்லை.

செப்டெம்பர், 2017.