ஓவியம்: ரஞ்சித் பரஞ்சோதி
சிறுகதைகள்

வெயில் தணியும்

பொள்ளாச்சி அபி

‘’அப்பா..!” மகள் பாரதி, அந்த அறையின் நிலைப்படியில் லேசாக சாய்ந்து நின்றபடி, ஏதோ சொல்ல அனுமதி கேட்கும் பாவனையோடு அழைத்ததைக் கேட்டு, நாளைய இலக்கியக் கூட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டிய கவிதை தொகுப்பிற்காக லேப்டாப்பில் மும்முரமாக ஓர் அறிமுக உரையை தயாரித்துக் கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு நிமிர்ந்தான் பூபாலன்.

பாரதியின் குரலில் இருந்த கெஞ்சும் தொனி, ஏதோ பெரிய விசயத்தை சொல்ல எத்தனிக்கும் முனைப்பு எனப் புரிந்து கொண்டவன்,மிகவும் வாஞ்சையோடு “சொல்லுடா..”

“மண்டே உங்களை ஸ்கூலுக்கு வரச் சொல்லியிருக்காங்கப்பா..,” பூபாலனுக்கு ‘கருக்’கென்றிருந்தது. அவனின் திடுக்கிடல், விரிந்த கண்களில் துருத்திக் கொண்டு தெரிந்தது.

திங்களன்று அலுவலகத்தில் இருக்கும் அவசரப் பணிகளின் பட்டியல் மண்டைக்குள் ஓயாத அலாரங்களை அடித்தது.

“மண்டேயன்னிக்கே கண்டிப்பா வரணுமாடா.?”

“ஆமாப்பா.. அப்படித்தான் பிரின்சிபல் மேடம் சொல்லிருக்காங்க..”

‘திடுதிப்பென்று பள்ளிக்கு வரச்சொல்லி இருக்கிறார்கள் என்றால், ஏதேனும் பேரண்ட்ஸ் மீட்டிங்காக இருக்குமோ.? இல்லையே.. போன வாரம்தானே மீட்டிங் போய்வந்தோம்.அதற்குள் என்னவாயிருக்கும்.?’அவன் மனதிற்குள் மின்னலாய் கேள்விகள் தெறித்த நொடியில், சமையலறையிலிருந்து தனது முந்தானையால் கைகளைத் துடைத்துக் கொண்டே வந்த மனைவி வித்யா, பாரதிக்குப் பின்னே வந்து நின்றாள்.

எதற்காக வரச் சொல்லியிருக்கிறார்கள்.? என்ற கேள்விக்கு வித்யாவிடம் ஏதேனும் பதில் இருக்கும்  என்ற எதிர்பார்ப்போடு அவளைப் பார்த்தான் பூபாலன். அவனுக்கு இருந்த அதே சந்தேகம் வித்யாவிற்கும் இருந்திருக்க வேண்டும். “எதுக்கு வரச்சொன்னாங்க.. ன்னு நானும் நாலு தடவை கேட்டுப் பார்த்துட்டேனுங்க..  தெரியலை.. அப்பாவை வரச் சொன்னாங்கன்னே சொல்லிட்டுருக்கா..”

மீண்டும் பாரதியை நோக்கினேன். அவள் சுவரில் இல்லாத கறையை, தனது விரல் நகங்களால் சுரண்டிக் கொண்டிருந்தாள். தனது முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கிறாளோ..?

“பாரதி... சொல்லுடா... எதுக்கு வரச்சொன்னாங்க..ன்னு உனக்குத் தெரியாமயா இருக்கும்.?”

பாரதி அம்மாவைத் திரும்பிப் பார்த்தாள். மகள் சொல்லப்போகும் பதிலுக்கு வித்யாவும் காத்திருப்பது போல்தான் இருந்தது. மீண்டும் பூபாலனை நோக்கித் திரும்பியவள், “அதான் எனக்குத் தெரியாது..னு சொன்னேனில்லப்பா..” அவளுடைய வேகமான குரலில்  வெளிப்பட்ட அவசரமும் பதட்டமும் பாரதி பொய் சொல்கிறாள் என்று அப்பட்டமாகத் தெரிந்தது. ‘அல்லது அம்மாவின் முன் சொல்ல விருப்பமில்லையோ..’

வழக்கமாய் இவ்வாறெல்லாம் நடந்து கொள்ளாதவள்தான் பாரதி.

எதுவென்றாலும் படபடவென தயக்கமில்லாமல் பேசக்கூடியவள்தான். தனக்கு ஒரு விசயம் புரியவில்லை என்று தோன்றினால் அதற்கான விளக்கத்தை கேள்விகளாய்க் கேட்டு புரிந்துகொள்ளக் கூடியவள்தான். ஆனால்இ ன்றைக்கு இவ்வளவு தயங்குகிறாள் எனில் ஏதோ பெரிய விசயம்தான் போல..,

இவளிடம் மெதுவாகத்தான் விசாரிக்க வேண்டும். அம்மாவின் முன்னால் அவள் பேச நினைப்பதில் ஏதோ தயக்கம் இருக்கும் போலிருக்கிறது..

பாரதியைக் கொஞ்சுவதில் எந்த அளவு பரிவும், பாசமும் காட்டுகிறாளோ, அதே அளவில், மகள் பேசுவதில் ஏதும் தவறாக இருந்தது எனில் தயக்கமில்லாமல் ‘பளிச்’சென்று அறைந்து விடுவாள் வித்யா.

அம்மாவைவிட அப்பாவிடம்தான் பாரதிக்கு அதிகச் செல்லம்.அப்பாவின் நிதானமான பேச்சும்,அணுகுமுறையும் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.ஜாலியாக ஏதேனும் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று “நண்பா..”என்றுகூட அப்பாவைக் கூப்பிட்டிருக்கிறாள். வித்யாவின் முறைப்புக்கு பயந்து சிலசமயம் மிக ரகசியமாகவும் அவள் அழைப்பதுண்டு.

எதற்கும் வித்யாவிற்கு தெரியாமல் முதலில் விசாரித்துப் பார்ப்போம். “சரிடா..நாளைக்கு சண்டேதானே..? மண்டே ஆபீசுலே லீவு சொல்லிட்டு உங்க ஸ்கூலுக்கு வரேன்.சரியா..? சரி..இப்ப போய்த் தூங்கு.மணி பத்தரையைத் தாண்டியாச்சு. ஸ்கூல் ஹோம் வொர்க்கெல்லாம் முடிச்சுட்டியா.?”

“இல்லேப்பா..இன்னும் கொஞ்சம் இருக்கு.காலையிலே முடிச்சுருவேன்..”

“ஓகே..டா.. .குட்நைட்..”

பத்தாம் வகுப்பு படிக்கும் பாரதி படிப்பில் படுசுட்டி. வகுப்பிலும் முதல் மூன்று இடங்களுக்குள் தேர்ச்சியடைந்து விடுவாள்.விளையாட்டிலும் அப்படித்தான். அதேபோல பள்ளியளவில் நடக்கும் கலை இலக்கியப் போட்டிகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளிக் குவிப்பவள்.

“பாரதியின் அப்பா கவிஞர்ங்கிறதாலே அவளுக்கு கவிதைகளை சொல்லிக்குடுத்து எழுத வெச்சிருவாரு. அதான் அவ பிரைஸ் வாங்குறா..ன்னு வகுப்புத் தோழிகள் சொன்னபோது, “எப்படி எழுதனும்னு சொல்லிக் குடுத்துருக்கார். ஆனா எதையெல்லாம் எழுதனும்னு அவர் சொல்லிட்டே இருக்கமாட்டார். நானே சொந்தமா எழுதுவேன்..”என்று அவள் சொன்னபோது நம்பாத நண்பிகளிடம், “நீங்களே ஒரு தலைப்பு சொல்லுங்கடி..இப்ப, இன்னும் பத்து நிமிசத்துலே ஒரு கவிதை எழுதிக்காட்டுறேன்” என்று சவால் விடுபவள்தான். அதனை சாதித்தும் காட்டியிருக்கிறாள்.

அவளே எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பும் கடந்த ஆண்டே வெளியிட்டாயிற்று. அவளது கவிதை ஆர்வமும்,மேடையேற்றமும், உணர்ச்சி மிக்க கணீர்க் குரலும் பெற்றோர் என்ற நிலையில் தங்களை கர்வம் கொள்ளவும் வைத்திருக்கிறது.மேலும் ஓய்வு நேரங்களில் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசிப்பதையும் வழக்கமாக்கி வைத்திருந்தாள்.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு என்பதால் கவிதை எழுதுவது, அதனை வாசிப்பதையெல்லாம் சற்றே மூட்டை கட்டி வைத்திருக்கிறாள். தாங்கள் சொல்லாமலே அவளாகவே தனது படிப்பில் அக்கறை காட்டுவது பூபாலனுக்கும், வித்யாவிற்கும் சற்று பெருமையளிக்கக் கூடியதாகவே இருந்தது.

‘இப்போது இவளுக்கு என்ன வந்தது.? ஏன் இவ்வளவு தயக்கமும் தவிப்பும்..?’ பூபாலனின் எண்ணங்கள் எதையெதையோ நினைத்து குழம்பிக் கொண்டிருந்தது.

மறுநாள் மதியம், இலக்கியக் கூட்டம் முடிந்தபின் விருந்தினர்களை வழியனுப்பிவிட்டு வீட்டுக்குள் பூபாலன் நுழையும்போது ஹாலில் இருந்த கடிகாரம் மூன்றுமுறை அடித்து ஓய்ந்தது.

“ஏங்க..சாப்பாடு எடுத்துவைக்கவா.?” வித்யாவின் குரல் படுக்கையறையிலிருந்து கேட்டது.

“வேண்டாம்ப்பா..நான் சாப்பிட்டு வந்துட்டேன்.நீ ரெஸ்ட் எடு..” என்றபடியே கையிலிருந்த புதிய நூல்களை வைக்க தனது அலுவலக அறைக்குச் சென்றான். ஹாலில் சோபாவில் அமர்ந்து பள்ளிப்பாடத்தை எழுதிக் கொண்டிருந்த பாரதி, “அப்பா..கொஞ்சம் சாப்பிடலாமில்லேப்பா..இன்னிக்கு அம்மா வெச்ச சிக்கன் குழம்பு சூப்பர்..”,

“இல்லடா..கெஸ்ட்டுகளோடப் போயி, நல்லா சாப்பிட்டுத்தான் வந்திருக்கேன். நீ சாப்பிட்டியா.?அம்மா சாப்பிட்டாங்களா.?”

“ம்..ம்..சாப்பிட்டோம். அம்மா எப்பவும்போல கொஞ்சநேரம் படுக்கிறேன்ன்னு படுத்துட்டாங்க”.

“ம்..ம்..”என்றவனுக்கு இப்போதுதான் மகளிடம் தனியாகப் பேச நல்ல சந்தர்ப்பம் என்று தோன்றியது. “பாரதி..நிறைய எழுத வேண்டியது இருக்காடா..?”

“ட்யூஸ்டே அன்னிக்கு ஒரு சைன்ஸ் ரெக்கார்ட் சப்மிட் பண்ணனும்.அதான் அதை முடிச்சுரலாம்னு..இந்த பேஜ் எழுதினா முடிஞ்சதுப்பா..”

“ஓ..சரி முடிச்சுட்டு, அப்பாவோட ஆபீஸ்ரூமுக்கு வரியா..? சற்று சன்னமான குரலில் கேட்டான் பூபாலன்.

விலுக்கென்று நிமிர்ந்து பார்த்த பாரதி, உடனடியாகத் திரும்பி படுக்கையறையைப் பார்த்தாள்.சந்தடி எதுவும் இல்லை. “ம்..இதா வரேன்ப்பா..”

சில நிமிடங்கள் கழித்து, பாரதி இப்போது பூபாலனுக்கு நேர் எதிர் இருக்கையில் தலை குனிந்தபடி மௌனமாக அமர்ந்திருந்தாள்.வெளியே திரளான மேகங்கள் சூரியனைக் கடக்கும்போதெல்லாம் வீட்டின் ஜன்னல்கள் வழியாக வந்த வெளிச்சம் குறைவதும், அதிகமாவதுமாக இருந்தது.

பாரதி இன்னும் அமைதியாகத்தான் இருந்தாள்.அதைக் கலைத்தான் பூபாலன். “பாரதி..சொல்லுடா.. அவளுடைய முகத்தைத் தொட்டு நிமிர்த்திய பூபாலன், அவளது கண்களை நேராகப் பாhத்துக் கேட்டான். “எதுக்கு என்னை ஸ்கூலுக்கு வரச் சொன்னாங்க? பேரண்ட்ஸ் மீட்டிங்கும் போன மாசம்தானே முடிஞ்சது. பங்சன் ஏதாவது வெச்சுருக்காங்களா... டொனேசன், ஸ்பான்சர்..னு கேட்க கூப்பிட்டுருக்காங்களோ..?”

“இல்லை..”இடம் வலமாக, வேகமாகத் தலையை ஆட்டிய பாரதி,பூபாலனை நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் லேசாய் கண்ணீர் திரையிட்டிருந்தது போலிருந்தது.

 “வழக்கமா நீ தகவல் சொல்ற மாதிரி இந்த தடவை அப்படித் தோணலையே.. ஸ்கூல்லே உனக்கு ஏதாவது பிராப்ளமா..? எப்பவும் போல தயங்காம சொல்லுடா..”

அப்பாவின் முகத்தையே பார்த்த பாரதியின் முகத்தில், குழப்ப ரேகைகள் மின்னி மறைந்தன. ‘ என்னசொல்வது எப்படி சொல்வது..?’ என்று தவிப்பதாகத் தெரிந்தது.

சில விநாடிகளுக்குப் பின் ஏதோ சொல்லத் தயாரானாள். தொண்டையை செருமிக் கொண்டாள்;. “நான் என் க்ளாஸ்மேட் நிம்மியை ஓங்கி அறைஞ்சுட்டேன்ப்பா..” பூபாலனுக்கு பகீர் என்றிருந்தது.

“நீயா..நீயா..அறைஞ்சே..அய்யய்யோ..அப்புறம்..?” அவனது குரலில் தாளமுடியாத ஆச்சரியம்.

எதிர்பார்த்ததைவிட பெரிய சிக்கல் போலிருக்கிறதே..? பூபாலனுக்குள் ஒரு தவிப்பும், தர்மசங்கடமும் வந்து அமர்ந்து கொண்டது.. “என்னடா சொல்றே..எதுக்கு அறைஞ்சே..உங்க கிளாஸ்லே மொத்தமே பதினாறு பேர்தான், எல்லாரும் நல்ல ப்ரெண்ட்ஸ்..னு சொல்லுவியே..என்னாச்சுடா.?”

“நான் அறைஞ்சப்போ அவ அப்படியே தரையிலே விழுந்து மயங்கிட்டாப்பா.அப்றம் டீச்சர்ஸ்செல்லாம் வந்து அவ முகத்திலே தண்ணி தெளிச்சு எழுப்பி ரிலாக்ஸ் பண்ணி விட்டாங்கப்பா..இப்ப அந்தப் பிரச்சினைக்காகத்தான் உங்களைக் கூப்பிட்டுருக்காங்க”

“ம்.ம்..சரி. எதுக்கு அவளை அறைஞ்சே.? ன்னு மிஸ் கேட்டிருப்பாங்களே..’’

ரீசன் சொன்னியா..?”

“சொன்னேன்ப்பா.ஆனா டீச்சர்ஸ்சும் நிம்மி பக்கம்தான் பேசறாங்க. அதுவும் அவ மயங்கிவேற விழுந்துட்டாளா..இப்ப அவ பக்கம் இன்னும் ரொம்ப ஸ்ட்ராங்கா பேசறாங்க..”

“ஓ..சரி..என்ன இருந்தாலும் நீ நிம்மியை அறையலாமா.? அது தப்பில்லையாடா..?”

“தப்புதான்ப்பா..ஆனா எவ்ளோ சொல்லியும் அவ கன்வின்ஸ் ஆகமாட்டேங்கிறா..எப்போ பார்த்தாலும் கேலி கிண்டல்..னு சில சமயம் ரொம்ப வல்கராக் கூட பேசறாப்பா..”

“ப்ரெண்ட்ஸ்..னா ஜாலியாப் பேசறதுதானே..அதுக்காகவா அறைஞ்சே.?”

“அதுக்கு இல்லேப்பா..”

“சரி என்ன ரீசன்னு.. சொன்னாத்தானே நாளைக்கு அவங்க ஏதாவது கேட்டா நான் பேசமுடியும்.?”

“ஆமாப்பா..”

“அப்ப சொல்லு”

“என் க்ளாஸ்மேட் ரேவதியைத் தெரியுமில்லேப்பா..”

“ஆமா..உன்னோட பர்த்டே..க்கு கூட புக்ஸ் வாங்கிட்டு வந்து ப்ரெசன்ட் பண்ணினாளே.அவதானே..?”

“யெஸ்.அவளேதான்ப்பா..அந்த ஸ்கூல்லே சேர்ந்தப்போ இருந்து அவதான் க்ளாஸ்லேயே எனக்கு பெஸ்ட் பிரெண்டு. பட்.., இப்பல்லாம், என் க்ளாஸ்மேட்ஸ் பதினாலு பேரும் ரேவதிகூட சேராதே.அவ நடத்தையே சரியில்லே..னு அவளை ரொம்ப மோசமா பேசறாங்கப்பா..”

“ஓ..அப்படியென்ன அவ வித்தியாசமா நடந்துக்குறா.?”

“அது வந்துப்பா..இப்பல்லாம் கொஞ்சநாளா அவளோட ஹேர்ஸ்டைலை ஒரு பாய் மாதிரி கட் பண்ணிகிட்டுருக்கா..அவ நடக்குறது பேசறது எல்லாமே ஒரு பையன் மாதிரி.. குரல் கூட லேசா மாறி இருக்குப்பா..இப்ப ஆட்டோலேகூட வர்றதில்லே.புது சைக்கிள் வாங்கிகிட்டு அதுலேதான் வர்றா. ஸ்கூல் முடிஞ்சு ஈவ்னிங் டைம்லே, பசங்களோட போய் கிரிக்கெட், புட்பால்..னு விளையாடுறா.. இப்பல்லாம் அவளுக்கு லேசா மேலுதட்டுக்கு மேலே குட்டிகுட்டியா முடிகூட முளைச்சிருக்குப்பா..குரல் கூட லேசா மாறியிருக்கு.., அவகிட்டே கேட்டா, “எனக்கு ஏன் இப்படியாகுதுன்னு தெரியலை பாரதி. ஆனா, இப்படியிருக்கறது எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு.ஒரு பாய் மாதிரி மனசுக்குள்ள என்னை நான் பீல் பண்ணிகிட்டா ரொம்ப சந்தோசமாவும்இ ருக்கு ”..னு சொல்றாப்பா..”

ரேவதிக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பூபாலனுக்கு லேசாய் புரிந்து கொண்டிருந்தது.

 பாரதி மேலும் பேசிக்கொண்டிருந்தாள். “அவங்க மம்மி, டாடிக்கு, ரேவதி இப்படியிருக்காளே..? னு தெரியாமயா இருக்கும். அவங்களுக்கும் தெரிஞ்சுதானே அவ ஸ்கூலுக்கே வர்றா..? அவளுக்கு எப்படியிருக்க இஷ்டமோ அப்படியிருக்க அலோவ் பண்ணிருக்காங்க.? இதுவொரு பெரிய வியாதி மாதிரி..னு அவங்க பீல் பண்ணிருந்தா அவளாலே சந்தோசமா வீட்லேருந்து ஸ்கூலுக்கு வர முடியுமாப்பா..? ரேவதியோட அம்மா அப்பா மாதிரி டீச்சர்ஸ் ஏன் நடந்துக்க மாட்டேங்குறாங்க.?” பாரதியின் கேள்விகள் ஒவ்வொன்றும் மறுத்துச் சொல்ல முடியாததாக இருந்தது.அவளின் எண்ண ஓட்டங்களும், சிக்கலை அணுகும் தர்க்கமும் பூபாலனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

“ஆனா ரேவதிக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது..? ன்னு எனக்கும் முழுசாத் தெரியலை.அவளோட உடம்புலே ஏதோ ஹார்மோன் சேஞ்ச் ஆகிட்டுருக்கு போல.அதுதான் அவளோட ஆக்டிவிட்டீஸ்,பேச்சு..னு வித்தியாசமா தெரியுது..னு தான் நான் நினைக்கிறேன்ப்பா..”

“ம்ம்..”

“ஆனா அவளை மீறி, அவளோட உடம்புக்குள்ளே நடக்குற மாறுதலுக்கு ரேவதி எப்படிப்பா பொறுப்பாவா.? இதெல்லாம் யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க.. இந்த நேரத்திலே அவளை நாம ஒதுக்கி வெக்குறது அவளோட கான்பிடன்ஸை டேமேஜ் பண்ற மாதிரியாயிரும்..அப்புறம் அவளாலே ஒழுங்கா படிக்கக்கூட முடியாது..னு நானும் பல தடவை ப்ரெண்ட்சுகிட்டே சொல்லிட்டேன். ஒருத்தருக்கும் அது மண்டையிலேயே ஏறலை..”

பாரதியின் மனதிலிருந்து மடைதிறந்த வெள்ளம்போல வெளிப்படும் பேச்சில் ஆதங்கமும்,ஆத்திரமும் இருந்தது. பிரச்சினையின் ஆழத்தை அறிந்து கொள்ள முடியாவிட்டாலும், அவளுடைய வயதிற்கு ஏற்றார் போல மனிதர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சரியாகவே புரிந்து வைத்திருக்கிறாள்.அதற்கு காரணம் பள்ளிப் புத்தகம் கடந்து மற்ற நூல்களையும் வாசித்த பழக்கம்தான் என்று பூபாலனுக்குப் புரிந்தது.

“எப்பவும்போல எங்க எல்லார்கிட்டேயும் நல்ல ப்ரெண்ட்ஷிப் மெய்ண்ட்டெய்ன் பண்ணனும்னு அவ நினைச்சாலும் அவகிட்டே யாரும் உக்கார்றதில்லே. அவ ஏதாவது குடுத்தா சாப்பிடறதில்லே.சரியாப் பேசக்கூட மாட்டேங்கிறாங்கப்பா..க்ளாஸ்லே அவளை ரொம்ப லோன்லியா பீல் பண்ண வெச்சுட்டாங்க..”

“அதைவிட, ப்ரைடே அன்னிக்கு நிம்மிகிட்டே என்னவோ கேட்க வந்த ரேவதி, நிம்மியோட தோள்லே கைபோட்டுப் பேசிட்டாப்பா.அதுக்கு இந்த நிம்மி ரொம்ப கோபமா “சீ..இனிமே என்னைத் தொட்டுப் பேசற வேலை வெச்சுக்காதே... எனக்கு அருவருப்பா இருக்கு..”னு சொல்லி கையை தட்டிவிட்டுட்டு அப்படியே அவளை தள்ளி விட்டுட்டா. அவ தடுமாறி கீழேயே விழுந்துட்டா. ரேவதிக்கு அது எவ்ளோ பெரிய அவமானம்.? அதுக்கப்புறம் அவ ரொம்ப தேம்பி தேம்பி அழுதாப்பா..”

“அட..டா..”

“இந்த நிம்மிக்கு அறிவேயில்லை.எனக்கும் ரொம்ப கோபம் வந்துருச்சு. ஏய் எதுக்கு அவளைத் தள்ளி விடறே.? ..னு கேட்டதுக்கு..ஏன் அவ என்ன உன்னோட லவ்வரா..? னு அசிங்கமா கேட்டாப்பா. அதான் கன்னம் பழுத்துப்போற மாதிரி விட்டேன் ஒரு அறை..” பாரதி பொறுமையாக எல்லாமும் சொல்லி முடித்தாள்.அவளது குரலில் எவ்வித குற்றவுணர்ச்சியும் தென்படவில்லை.மேலும் இப்போது ஒரு பெருமிதம் கூடியிருந்தது.

“ம்..ம்..அப்புறம்.?”

“அப்புறம் க்ளாஸ் டீச்சர், பிரின்சிபல்..னு கம்ப்ளெயின்ட் போயிருச்சு.அவங்க கூப்பிட்டு விசாரிச்சாங்க.நானும் ரேவதியும் எல்லாத்தையும் சொன்னோம்..”

“ஆனா.., பிரின்சிபல் மேடமும், டீச்சர்சும் “உன்னை டி.சி குடுத்து அனுப்பிருவோம்.உன் ஒருத்தியாலே மொத்தக் க்ளாஸும் டிஸ்டர்ப் ஆகுது. இப்படியிருந்தா டென்த் ரிசல்ட் எப்படி நாங்க அச்சீவ் பண்ணமுடியும்.? சிட்டிக்குள்ளே டாப் ரேங்க்லே இருக்கோம்னுதானே இந்த ஸ்கூல்லே கொண்டு வந்து உங்க பேரண்ட்ஸ் சேர்த்து விட்டாங்க. இப்ப உங்களாலேயே எங்க ஸ்கூல் பேரு கெடனுமா..?”..னு இன்னும் என்னென்னவோ சொல்லி ரேவதியைத்தான் திட்டறாங்கப்பா. மண்டே அன்னிக்கு ரேவதியோட பேரண்ட்சையும் வரச் சொல்லியிருக்காங்கப்பா..”

பூபாலனுக்கு பிரச்சனையின் வீரியம் புரிந்தது.அடுத்து என்ன நடக்கும் என்று கூட ஓரளவு யூகிக்க முடிந்தது.

“பாரதியைக் கண்டிச்சு வைங்க..”ன்னு சொல்ல என்னையும், ரேவதியின் டி.சி வாங்கிக் கொள்ளச் சொல்லி அவளுடைய பெற்றோர்களிடமும் சொல்வது தான் அந்தத் தனியார் பள்ளியின் திட்டமாக இருக்கும். அப்படி மட்டும் நடந்துவிட்டால் ரேவதியைப் போன்ற பிள்ளைகளின் கதி.? மற்ற பள்ளியிலும்இ தேபோன்ற சிக்கல் வராது என்பதற்கு உத்தரவாதம் இல்லையே.? பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சின்னப் பெண் பாரதி. அவளுக்கு புரிந்தது கூட, படித்த ஆசிரியர்களுக்கு புரியவில்லையா.? குழந்தைகளின் நடவடிக்கையில் ஏற்படுகின்ற மாறுதல்களைக் குறித்த ஒரு தெளிவு வேண்டாமா.? உயிரியல், அறிவியல் என்று பாடம் எடுப்பவர்களுக்கு அறிவு வேண்டாமா.? பூபாலனின் மனதில் சொல்லொணாத எரிச்சல் மண்டியது.

 “ஊகும்.. பாரதியின் க்ளாஸ்மேட்டுகளைவிட முதலில் தெளிவடைய வேண்டியது அவளுடைய வகுப்பு ஆசிரியர்களும், பிரின்சிபலும்தான். மனதிற்குள் என்ன செய்யவேண்டும் என ஒரு திட்டம் ஓடியது.

“ம்..ம்.. சரிடா நோ பிராப்ளம்..நாளைக்கு நான் வரேன். நீ எப்பவும்போல ஸ்கூலுக்கு போயிரு.அப்பா வந்துருவாரு..னு சொல்லிரு”

“ஓகே..ப்பா.. தேங்க்யூப்பா..” பாரதியின் உதடுகளில் இயல்பான புன்னகை வந்தமர்ந்திருந்தது.

பூபாலன் தனது அலைபேசியை உயிர்ப்பித்துக் கொண்டே வீட்டுக்கு வெளியே வந்தான். மறுமுனையில் “ஹலோ.. பூபாலன் எப்படியிருக்கீங்க..?” என்றார் கவிஞர் ஆண்டன்பெனி. கோவையிலிருந்து சமீபத்தில் மாறுதல் பெற்று வேறு மாவட்டத்திற்கு சென்றுவிட்ட உயர்கல்வி அரசுஅதிகாரி.

பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பிறகு, பாரதியின் பள்ளியில் நடைபெற்றவை குறித்து சுருக்கமாகச் சொன்னான் பூபாலன்.

“அந்தப்பள்ளி மீது ஏதும் நடவடிக்கை எடுத்துரலாமா.?” ஆண்டன்பெனியின் குரலில் ஆர்வம் கொப்பளித்தது.

“நோ...நோ... இப்ப ஒரு கவுன்சிலிங்தான் தேவைப்படுது அவங்களுக்கு..”

“ம்..ம் சரிதான். இப்போதைக்கு அதான் சரியாகவும் இருக்கும் இல்லியா பூபாலன்..”

“ஆமாங்க சார்..”

“சரி..கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. கோவை அதிகாரிககிட்டே பேசிட்டு லைனுக்கு வரேன்..”

சரியாக இருபது நிமிடங்கள் கழித்து ஆண்டன்பெனி அழைத்தார். “திங்கக் கிழமை காலை பத்துமணிக்கு அரசு சார்பிலே ஆசிரியர்களுக்கு ஒரு அர்ஜெண்ட் மீட்டிங் இருக்கு..னு அதிகாரப்பூர்வமாச் சொல்லி அவங்களுக்கு மெயில் அனுப்பிட்டு, கூப்பிட்டும் சொல்லியாச்சு பூபாலன். இப்ப அந்த மீட்டிங்லே, கவுன்சிலிங் குடுக்க யாரை பிக்ஸ் பண்றதுனுதான் தெரியலை. வழக்கமா இதுமாதிரி விசயங்களுக்கு ஓடிவந்து உதவி செய்ற நம்ம டாக்டர் ராம்வசந்த் வெளிநாடு போயிருக்காரே..?”

“அப்படியா.? அது பிரச்சினையில்லே.இங்க நம்ம டாக்டர் சுடர்விழி இருக்காங்க அவங்களை வரச் சொல்லி பேசிறச் சொல்லிக்கலாம். அவங்களோட கவுன்சிலிங்கும் நல்லாருக்கும்..”

“யெஸ்.. யெஸ்.. குட் சாய்ஸ்.. ஓகே.. பாருங்க பூபாலன். நான் டாக்டர். சுடர்விழியோட பேரை மென்சன் பண்ணி அனுப்பிடறேன். நாளைக்கு ஈவ்னிங் மீட்டிங் என்னாச்சு.? எப்படிப் போச்சுனு சொல்லுங்க..”

“ம்..கண்டிப்பா..” பேசிமுடித்துவிட்டு உள்ளே வந்தவன் முன் எதிர்பட்டாள் வித்யா. “எதுக்கு ஸ்கூல் வரச் சொன்னாங்களாம்.? பாப்பா ஏதும் சொன்னாளா.?”

“ம்..ம்..ஸ்கூல்லே கொஞ்சம் பேருக்கு மனசு கோணிக்கிச்சாம்.. அவங்களுக்கு சுளுக்கு எடுக்கோனுமாம்..” என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டே உள்ளே போனான் பூபாலன். புரியாமல் விழித்த வித்யாவிடம், “உள்ளே வா..விவரமாச் சொல்றேன்..”

திங்களன்று காலை பத்துமணியளவில் அந்தத் தனியார் பள்ளிவளாகத்தினுள் டாக்டர் சுடர்விழியோடு, பூபாலனின் கார் நுழைந்தது.ரேவதியின் பெற்றோர் கவலை தோய்ந்த முகத்துடன் பள்ளி வராண்டாவில் காத்துக் கொண்டிருந்தனர். வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. மாலையில் எப்படியும் அது தணிந்துவிடும்.!

பொள்ளாச்சி அபி

இயற்பெயர் அக்பர்.இணையரின் பெயர் பிரேமா. இருவர் பெயரின் முதல்எழுத்துக்களையும், வாழ்வித்த ஊரின் பெயரையும் இணைத்து பொள்ளாச்சி அபி என்ற பெயரில் படைப்புகளை  எழுதிவருகிறார்.

தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்து, பின் விருப்ப ஓய்வு பெற்றபின் ஆதலினால் காதலித்தேன் எனும் நாவலும், எங்கேயும். எப்போதும், பாட்டையா எனும் இரு சிறுகதை தொகுப்புகளும் இதுவரை வெளிவந்துள்ளன.