பி.ஆர்.ராஜன்
சிறுகதைகள்

உருவிலிக் கண்ணி

என்.ஸ்ரீராம்

மியாவ்... மியாவ்...மியாவ்...''

ஐந்து தினமாகியும் கரும்பூனைக்குட்டியின் தீனமான குரல் ஓயவேயில்லை. ஆள் புழங்காத வீட்டின் எல்லாச் சுவர்களுமே அதன் குரலை சதா எதிரொலித்துக் கொண்டேயிருந்தது. வெளித்திண்ணையில் உட்கார்ந்திருந்த துளசிக்கு ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு வந்தது. மனதுக்குள் மொத்த பூனைகளையும் சபித்தாள். தாய்ப் பூனையை தனித்த கெட்ட வார்த்தையில் திட்டினாள். எழுந்து ஈரம் படிந்த மந்தாரைச் சருகுகளை மிதித்து படிக்கட்டில் மேலேறினாள். மேல்மாடத்து முற்றத்துத் தரை பச்சைப்பாசி படிந்து விட்டது.

அங்கும் மந்தாரைச் சருகுகள் இறைந்து கிடந்தன. மழைநீர் வடியும் தூம்புவாயிலிருந்து கரும்பூனைக்குட்டியின் குரல் இன்னும் ஓங்கிக் கேட்டது. துளசி சற்று கீழே குனிந்து தூம்புவாய் ஓரம் காதைக் கொண்டு போனாள். கரும்பூனைக்குட்டி முதல்நாள் விழுந்தபோது கத்திய அதே வீரியத்துடனேயே இன்னும் கத்தியது.

‘‘மியாவ்...மியாவ்....மியாவ்....''

துளசி நிமிர்ந்து மேல்மாடத்துக் கைபிடிச்சுவரில் போய் சாய்ந்து நின்றாள். தலைக்குமேலே ஆகாயத்தில் கார்த்திகை கருவோட்ட முகில்கள் இறுகி நின்றன. மறுபடியும் கனமழை இறங்கும் சாத்தியம் தென்பட்டது. துளசி நான்கு தினங்களாகவே பின்வளவு வீடுகளில் தினக்கூலி வேலைக்குப் போகும் ஆட்களுக்கு தகவல் சொல்லிவிட்டுக் கொண்டேயிருந்தாள். புயல்மழை பெய்யும் இச்சமயத்தில் ஆள்காரர்கள் எவரும் வீட்டுப்பக்கம் வரமறுத்தனர். நேற்று இருள் விலகாத வைகறையில் நீலாயி வீட்டுக்காரன் மட்டும் வாசலில் மிதிவண்டியை நிறுத்திவிட்டு குரலிட்டான். துளசி வெளிநடையில் போய் நின்று விவரத்தைச் சொன்னாள். நீலாயி வீட்டுக்காரன் சப்தமாகச் சிரித்தான்.

‘‘நானு வேறெ ஏதோன்னு நெனைச்சுட்டு ஓடி வந்தேனுங்க... இந்த மழ ஈரத்துல பூனக்குட்டிக் காக -வெல்லாம் கெடயாக் கெடக்கற கெணத்துல எறங்க முடியாதுங்க...''

நீலாயி வீட்டுக்காரன் மிதிவண்டியைத் திருப்பி ஏறி வீதியில் சென்று மறைந்தான். கரும்பூனைக்குட்டியின் அலறும் குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தது. துளசி மறுபடியும் ஈரம் படிந்த மந்தாரைச் சருகுகளை மிதித்து படிக்கட்டில் சூதானமாக கீழிறங்கினாள். விடாது பெய்த மழையினால் படிக்கட்டுகளும் பச்சைப்பாசி படிந்து வழுக்கத் தொடங்கியிருந்தன. ஓயாது ஒலித்த கரும்பூனைக்குட்டியின் குரலைக் கேட்கக் கேட்க துளசிக்கு பாவமாகவும் இருந்தது. எதுவும் செய்ய முடியாத வேதனையில் மறுபடியும் வெளித்திண்ணைக்கே வந்து உட்கார்ந்தாள். வாசல் மந்தாரை மரத்தை குளிர்கொண்டல் காற்று உலுக்கிக் கடந்தது.

சிட்டுக்குருவிகளும் காகங்களும் மௌனித்துக் கிடந்த மதியநேர வீதியில் வெள்ளைப் பெண்பூனை நிதானமாகக் குறுக்கே கடந்தது. வேகவேகமாக நடந்து கொண்டிருந்த துளசிக்கு வழிச் சகுனம் சரியில்லை எனப் பட்டது. போகிற காரியமும் நல்ல காரியமில்லையே என்று மனதைத் தேற்றிக் கொண்டாள். முந்தானையில் மறைத்து வைத்திருந்த சூரிக்கத்தியை ஒருமுறை தொட்டுப் பார்த்துக்கொண்டாள். ஊர்த்தலைவாசல் வந்து சேரும்வரை ஆட்கள் எவரும் எதிர்ப்படவில்லை. முனியப்பச்சி கோயில் பூவரசுமர நிழலடியில் செம்மறியாட்டு மந்தையோடு சல்லக்கத்தியை ஊன்றி நின்ற நீலாயி கண்டுகொண்டாள். அசைவாங்கிய செம்மறிகளிடையே புகுந்து கடக்க முயன்ற துளசியை தடுத்து நிறுத்தினாள்.

‘‘ பொண்ணையும் பையனையும் கண்டுபுடிச்சுட் டாங்களா..? ஏதாச்சும் சேதி கெடைச்சுதாங்க ஆத்தா...?''

‘‘ நாலாத் திக்கிலும் ஆள் போயிருக்கு....இன்னிக்கு ராத்திரிக்குள்ள முடிவு தெரிஞ்சிரும்...''

‘‘ அவனுக்கு என்ன தகிரியமிருந்தா உங்க வளவுப் பொண்ண இப்படி செஞ்சிருப்பே... உண்டவூட்டுக்கு ரெண்டகம் பண்ணின அவனெ சும்மா வுடக்கூடாது...''

துளசி மேற்கொண்டு நிற்காமல் ஊரின் வடக்குத் திசையில் நடந்தாள். அந்தப் பையனின் வளவு வந்தது. மண்வீதியில் உக்கிரத்திற்கு நாக்கு தொங்கிய ஒற்றைநாய் மட்டும் தூரமாய் ஓடிப் போய் நின்று குரைக்க தருணம் பர்த்தது. எங்கும் சிறிய தாழ்வாரம் கொண்ட பனையோலைக் கூரை வீடுகள். பெரும்பாலும் பூட்டியே கிடந்தன. வெள்ளாட்டுக் கொட்டங்கள் திறந்து விடப்பட்டிருந்தன. சேவல்கள் சில தப்பித்து கூவியலைந்தன. இந்த சம்பவத்துக் குப் பின்னால் சனங்கள் பயந்து வளவைக் காலி செய்து போயிருப்பதுபோல் தோன்றியது. எப்போதும் ஆக்காட்டிப் பாடல் பாடித்திரியும் கிழப்பித்தனைக் கூடக் காணவில்லை.

துளசி துணிந்து இந்த வளவுக்கு வந்ததே அந்த பையனின் அப்பா அம்மாவைச் சந்திக்கத்தான். அவர்களுக்கு பையனும் பொண்ணும் எங்கிருக்கிறார்கள் என்று நிச்சயம் தெரிந்திருக்கும். துளசியைப் பார்த்தால் மனம் மாறித் தலைமறைவாக இருக்கும் இடத்தை சொல்லிவிடக்கூடும். ஒருசமயம் இங்கேயே சிவகாமி இருந்து தன்னைக் கண்டதும் ஓடிவந்து கதறும்போது சூரிக்கத்தியால் குத்திக் கொன்றுபோட வேண்டியதுதான். இப்போது நினைக்கும்போதும் துளசிக்கு உடல் சிலிர்த்து நடுங்கிற்று. வெறி தணிவதற்குள் காரியத்தை முடிக்க வேண்டும் என எண்ணியபடியே மேலும் எட்டு வைத்தாள். காகங்கள் வட்டமிட்டுக் கரைந்தன. அந்த பையனின் பனையோலைக் கூரைவீடு தீக்கிரையாகிக் கிடந்தது. அருகிலும் நான்கைந்து வீடுகள் கொளுத்தப்பட்டிருந்தன. கரி படிந்த மண்சுவர்கள்கூட சிதிலமாகியிருந்தன. கருகிய மரவிட்டங்கள் சாய்ந்து நிலத்தில் விழுந்திருந்தன.அந்த இடமே சாம்பல் பூத்துக் கிடந்தது. துளசி யோசித்தபடியே சுற்றும் முற்றும் நோட்டமிட்டாள். எவரும் தென்படவில்லை.

துளசிக்கு முன்பும் ஒருமுறை இதுபோல் ஒரு பூனைக்குட்டி தூம்புவாய் வழியே சேந்துக்கிணற்றில் விழுந்திருந்தது ஞாபகம் வந்தது. அந்தப் பூனைக்குட்டி சிவகாமி பள்ளிக்கூடம் விட்டு வரும்வழியில் கண்டெடுத்துக் கொண்டு வந்தது. புலியின் செம்மஞ்சள் நிறம். முதுகில் வரிக்கோடுகள். சிவகாமி புலிப்பூனைக்குட்டி என்று பிரியமாகப் பெயர் வைத்து அழைத்தாள். மேல்மாடத்து முற்றமெங்கும் அது சுதந்திரமாக விளையாண்டு திரிந்தது. ஒரு நண்பகலில் வீட்டுக்கு வந்த நீலாயி மந்தாரை சருகை உருட்டி விளையாடிய புலிப்பூனைக்குட்டியைப் உற்றுக் கவனித்துவிட்டு சொன்னாள்.

‘‘ இது வலதுகால தூக்கி வெளையாடுது ஆத்தா...இது பொட்டப்பூனக்குட்டீங்க...''

நான்கு பூனைக்குட்டிகளில் புலிப்பூனைக்குட்டி மட்டும் அதிக உரிமையுடன் சிவகாமியிடம் ஒட்டிக் கொண்டது.

சிவகாமி பள்ளிக்கூடம் சென்ற மதிய வேளை ஒன்றில் புலிப்பூனைக்குட்டி மட்டும் சாப்பாட்டு வட்டிலில் வாய்வைத்ததைக் கண்ட துளசி ஈர்க்குமார் எடுத்து விரட்டினாள். மிரண்டோடிய புலிப்பூனைக்குட்டி ஒளிந்துக் கொள்ள தூம்புவாய்க்குள் நுழைந்தது. துளசி பார்த்துக் கொண்டிருக்கும்போதே வழுக்கி சேந்துக்கிணற்றுக்குள் போய் விழுந்தது. அந்தி வரை புலிப்பூனைக்குட்டியிடமிருந்து எவ்வித சலனமுமில்லை. துளசி புலிப்பூனைக்குட்டி செத்துப் போய்விட்டது என்று நினைத்து அமைதியானாள். பள்ளிக்கூடத்திலிருந்து வந்த சிவகாமி புலிப்பூனைக்குட்டியைத் தேட ஆரம்பித்தாள். துளசியிடம் கேட்டபோது சமாளிக்கப் பொய் சொன்னாள்.

‘‘ தாய்பூன புலிப்பூனக்குட்டிய மட்டும் கூட்டிக்கிட்டு வீதியில போனதெ பாத்தங் கண்ணு.....அப்புறம் அது புலிப்பூனக்குட்டிய எங்கோ கொண்டுபோய் உட்டுட்டு வந்துருச்சு... உனக்கு ஒண்ணு தெரியுமா கண்ணு தாய் பூனை தங்குட்டிகள ஆறு எடம் மாத்துமா....?''

மூன்றாம் சாமத்துக்கு பின்பு சேந்துக்கிணற்றுக்குள்ளிருந்து புலிப்பூனைக்குட்டி வீறிட்ட குரலில் கத்தத் துவங்கியது. தாய்ப்பூனையும் சேந்துக்கிணற்றடிக்கு வந்து பதிலுக்கு கத்தியது. மேல்மாடத்து முற்றத்து திண்ணை மூலையில் தானிய மக்கிரிகளுக்கிடையே பதுங்கியிருந்த மற்ற மூன்று பூனைக்குட்டிகளும் கத்தின. துயரம் தோய்ந்த பூனைகளின் குரலால் வீடு நிரம்பி விட்டது. படுக்கையிலிருந்து எழுந்த சிவகாமி அழுது ஆர்ப்பாட்டம் செய்ய தொடங்கி விட்டாள். சிவகாமியை சமாதானப்படுத்தும் வழி வீட்டில் எவருக்கும் தெரியவில்லை. ஒருநிலையில் சிவகாமியின் அம்மாக்காரிக்கு கோபம் வந்தது. சிவகாமியின் பொடணியில் ஓங்கி அறைந்தாள். துளசி ஓடிப்போய் சிவகாமியை உள்ஆசாரத்துக்கு அழைத்து வந்தாள். கேவிக்கேவி அழும் சிவகாமியை மடியில் படுக்க வைத்து ஆறுதல் கூறினாள்.

‘‘கன்னவரந்தேருக்கு காளக்கன்னு விக்கறதுக்கு போன உங்கப்பா ஊருக்கு வர ஆரேழு நாளாகும் கண்ணு....ஆரு வந்து பூனக்குட்டிக்காக பாங்கெணத்துக்குல எறங்குவா நீயே சொல்லு... பூனக்குட்டிதானே போயிட்டு போவுது வுடு....''

அந்த அர்த்தசாமத்தில் சிவகாமி அழுவதை மட்டும் நிறுத்தினாள். ஊருக்குள் ஆட்கள் எவரும் சேந்துக்கிணற்றுக்குள் இறங்கத் தயாராக இல்லை என்று தெரிந்தபோதும் புலிப்பூனைக்குட்டியை காப்பாற்றுவதில் உறுதியாக இருந்தாள். மேலும் மூன்று தினங்கள் கடந்தன. பூனைக்குட்டியின் ஓலம் அதிகமாயிற்று. தாய்பூனையும் மற்ற மூன்று பூனைக்குட்டிகளும்கூட கத்துவதை நிறுத்தி அமைதியாகிவிட்டன. சேந்துக்கிணற்றுக்குள் உயிர் போவதுபோல் கத்தும் புலிப்பூனைக்குட்டியின் குரலை அவை இயல்பாக எடுத்துக் கொண்டன.

 துளசிக்குக்கூட புலிப்பூனைக்குட்டி சீக்கிரமாக செத்துப் போய்விட்டால் நல்லதெனப் பட்டது.

ஆறாவது தினம் விடிந்து பொழுதேறியபோது சிவகாமி பள்ளிக்கூடம் போகவில்லை. மௌனமாக சேந்துக்கிணற்றடியில் போய் உட்கார்ந்துக் கொண்டாள். கண்கள் நீர்கட்டி கலங்கியிருந்தன. உச்சிப் பொழுதாகியும்கூட சிவகாமி ஆகாரம் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. புலிப்பூனைக்குட்டியும் பழைய வலிமையுடனே இன்னும் கத்திக் கொண்டிருந்தது. அதன் உயிர்ப் போராட்டம் துளசி மனதையும் கரையச் செய்தது. சிவகாமியின் அம்மாக்காரி சிவகாமியை எதுவும் செய்ய முடியாத சினம் மிகுதியால் மேல்மாடத்துக்கு விரைந்தாள். தாய்பூனையையும் மற்ற மூன்று பூனைக்குட்டிகளையும் அடித்து விரட்ட ஆரம்பித்தாள்.

துளசி அவசரமாக புறப்பட்டு பின்வளவுக்குப் போனாள். நீலாயி வீட்டுக்காரனை கூட்டி வந்தாள். வேண்டாவெறுப்பாக வந்த நீலாயி வீட்டுக்காரன் புலிப்பூனைக்குட்டியின் துயரம் மிகுந்த குரலை கேட்டதும் சட்டென காரியத்தில் இறங்கினான். முதலில் சேந்துக்கிணற்றை மூடியிருந்த சிமெண்ட் பலகையை உடைத்தெடுத்தான். சேந்துக்கிணற்றுக்குள் பாதியளவு கிடந்த நீர் கருமையாகத் தெரிந்தது. இருளோடு கூடிய மங்கல் வெளிச்சத்தில் புலிப்பூனைக்குட்டி கண்ணுக்குப் புலனாகவில்லை. கத்தல் மட்டும் சுவரின் எதிரொலிப்புடன் மேலே வந்துக் கொண்டேயிருந்தது. எல்லோரும் எட்டிப் பார்த்து தேடினர். சிவகாமிக்குத்தான் புலிப்பூனைக்குட்டி முதலில் தென்பட்டது. கிணற்றுப்புறாக்கள் அணையும் மேற்குபுறச் சுவற்றுப் பொந்து ஒன்றில் புலிப்பூனைக்குட்டி குறுகி உட்கார்ந்திருந்தது. மேலே வெளிச்சத்தை நோக்கி அண்ணாந்தபடியே கத்தியது. பசியால் வயிறு ஒடுங்கிப் போயிருந்தது. புலிப்பூனைக்குட்டியை மேலே எப்படித் தூக்கி வருவது என்று எல்லோருக்கும் யோசனை நீணடது. கூடவே புலிப்பூனைக்குட்டியை உயிரோடு மீட்க முடியுமாவென்கிற சந்தேகமும் எழுந்தது. சிவகாமி நகர்ந்து நீலாயி வீட்டுக்காரன் காதோரம் போய் குசுகுசுவென ஏதோ சொன்னாள்.

நீலாயி வீட்டுக்காரன் புரிந்துக் கொண்டு தலையசைத் தான். ஈயவாளியின் கைப்பிடியில் கயிற்றைக் கட்டி கிணற்றுக்குள் இறக்கினான். புலிப்பூனைக்குட்டி உட்கார்ந்திருந்த பொந்தோரம் நகர்த்தி ஆட்டினான். எல்லோர் கண்களும் கிணற்றுக்குள்ளேயே நோக்கியிருந்தன. புலிப்பூனைக்குட்டி ஒரே தாவலில் ஈயவாளிக்குள் குதித்தேறியது. நீலாயி வீட்டுக் காரன் கயிற்றை மெதுவாக சுண்டி இழுத்தான். ஈயவாளி அசைந்து கொண்டே மேலே வந்தது. புலிப்பூனைக்குட்டி நடுங்கிக் கொண்டிருந்தது. ஈயவாளி கைப்பிடிக் காரைச்சுவரோரம் வந்தவுடன் நீலாயி வீட்டுக்காரன் கையை நீட்டி லாவகமாக புலிப்பூனைக்குட்டியின் கழுத்தைப் பிடித்து தூக்கினான். கிண்ணத்தில் பசும்பாலுடன் காத்திருந்த சிவகாமியிடம் கொடுத்தான்.

அன்று வனச்செல்லியம்மன் கோயில் மாசித் திருவிழா. எட்டு ஊர்ச் சனங்களும் திரண்டிருந்தனர். துளசிதான் சிவகாமியை அழைத்து வந்திருந்தாள். பன்னிரண்டாம் வகுப்பு முழுப்பரிட்சைக்குப் படித்துக் கொண்டிருந்த பெண்ணை அவளின் அம்மாவும் அப்பாவும் கோயில் திருவிழா பார்க்க அனுமதிக்கவில்லை. சிவகாமிக்கு அழுகை வந்துவிட்டது. பின்கட்டு சேந்துக்கிணற்றடியில் கயிற்றுக் கட்டில் மீது பாய்விரித்து வடகம் காயப்போட்டு காகங்களுக்குக் காவல் இருந்த துளசியிடம் ஓடிவந்து முறையிட்டாள். துளசிக்கு மனம் இளகிற்று. நெடுநேரம் பேசி பெற்றோரைச் சமாதானப்படுத்தினாள். அந்தி இருள்சூழ வீட்டுக்கு திரும்பிவிடுவதாக வாக்கு கொடுத்தாள்.

அக்கினியாய் தகித்தெரிக்கும் நடுப்பகல் வெயிலிலேயே புறப்பட்டுவிட்டனர். கோயிலுக்கு வந்ததிலிருந்தே சிவகாமி உற்சாகமாகக் காணப்பட்டாள். கூடப்படித்த பெண்களோடு சேர்ந்து ராட்டிணத்தூரி ஆடினாள். வேப்பிலை எடுத்து அடியளந்து கும்பிட்டாள். கடைகடையாக ஏறி இறங்கினாள். துளசியால் சிவகாமியோடு சுற்றியலைய முடியவில்லை. வனசெல்லியம்மன்

சன்னதி உள்பிரகாரத்தூணில் போய் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். சிவகாமியின் மேற்படிப்பு குறித்தும் எதிர்காலத்தில் நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டியும் தொடர்ந்து பிரார்த்தித்தாள். சாயங்காலத்தின் மஞ்சள் ஒளிக்கிரணங்கள் படிய துவங்கியது. துளசி எழுந்து வெளியே வந்து சிவகாமியைத் தேடினாள். கூடப்படித்த பெண்கள் எல்லோரும் வீட்டுக்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். சிவகாமியை மட்டும் காணவில்லை.

துளசி மீண்டும் கோவிலுக்குள் நுழைந்து உள்பிரகாரம் எங்கும் தேடிப் பார்த்தாள். சிவகாமி தென்படவேயில்லை. துளசி பதட்டமடைந்தாள். வெளிக்காட்டிக் கொள்ளாமல் மேலும் தேடினாள். அந்தி இருள் சூழ்ந்துவிட்டது. துளசி கூட்டத்தினூடே புகுந்து கோவிலுக்கு வெளியே வந்தாள். கண்களில் நீர் முட்டி நின்றது. சிவகாமி திரும்பி வந்துவிடுவாள் என்கிற நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. வீட்டிற்கு போய் பெற்றவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது என்கிற அச்சம் எழுந்தது. திரும்பி வன செல்லியம்மனை நோக்கினாள்.   சிவகாமிக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டாள். அந்த சமயத்தில் கூடப்படித்த பெண்ணொருத்தி கிட்டத்தில் வந்து சொன்னாள்.

‘‘ மண்ணுருவார சாமிகிட்டத்தா..சிவகாமி கடேசியா போனத நாம் பாத்தேனுங்க அத்தே...''

கோவிலின் தென்கிழக்குப்புறம் நூறு தப்படித் தூரம் தள்ளி நெடுதுயர்ந்த ஆலமரத்தடியில் வரிசையாக மண் உருவாரச் சாமிகள் நின்றன. விழுதுகளை ஒதுக்கி ஒதுக்கி துளசி உள்நுழைந்தாள். மண்குதிரை உருவாரங்களிடையே புகுந்துபோய் தேடினாள்.

சிவகாமி தட்டுப்படவில்லை. இங்கு இருப்பதற்கான சாத்தியமுமில்லை எனப் பட்டது. வெளிச்சம் மங்கி வந்தது. கோவிலுக்குத் திரும்ப எத்தனித்தபோது மண்குதிரையின் நடுவயிற்றில் செதுக்கியிருந்த அந்த எழுத்துகள் கண்ணில் பட்டது. சின்னுவுக்கும் சிவகாமிக்கும் இடையே காதல் சின்னம் வரைந்து அம்பு துளைத்திருந்தது. துளசிக்கு எல்லாம் புரிந்துவிட்டது.

மந்தாரை மரத்தின் பழுப்பு இலைகள் உதிரும் மார்கழி தொடங்கியிருந்தது. துளசி மந்தாரை மரக்கட்டைகளைச் செதுக்கி மேல்மாடத்து தூம்புவாய்களை ஒவ்வொன்றாக அடைத்து வைத்தாள். தாய்ப்பூனையும் மூன்று பூனைக்குட்டிகளும் வீடு திரும்பாத தனிமையில் புலிப்பூனைக்குட்டி மேல்மாடத்து முற்றத்து திண்ணையிலேயே வளர்ந்தது. துளசி மேல்மாடத்திற்கு போனால் போதும் காலடியிலேயே உரசிக்கொண்டு கிடந்தது. சிவகாமியிடம் அதிகம் செல்லம் கொஞ்சியது.

சிவகாமியின் அம்மாக்காரியிடமும் அப்பக்காரனிடமும் கூட நெருக்கமாயிற்று. பெரிய பூனையானபின்பும் வீட்டினரிடம் அதே பிரியம் காட்டியது. முதல் ஈத்தில் நான்கு குட்டிகளை ஈன்றது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பூனைகள் பெருகி வீடெங்கும் அலைந்து திரியும்படி குட்டிகளை ஈன்று கொண்டேயிருந்தது. கரும்பூனைகள், வெள்ளைப்பூனைகள்,சுட்டிப் பூனைகள், புலிவரிப்பூனைகள் என விதவிதமான வண்ணப் பூனைகள் வீடு நிறைந்து உலவின.

காலம் மேலும் சில ஆண்டுகளை நகர்த்திக் கடந்தது.

சிவகாமியும் பெரிய மனுஷியானாள். கூடப்படித்த பெண்களோடு மிதிவண்டியில் தாயம் பாளையத்துக்குப் படிக்கப் போனாள். வீட்டிலும் குதூகலம் நிறைந்துக் கிடந்தது. மேற்கே மலைக்காட்டிலும் நல்ல பருவமழை. அமராவதி அணை நிரம்பி எல்லா வாய்க்கால்களிலும் நீர் கடைமடை வரை வந்தது. நெல்வயல்கள் கார்ப்போகமும் விளைச்சல் கண்டன. சிவகாமியின் அப்பாக்காரனுக்கு காட்டூர் கரைவெளி வயலைப் பார்க்க சரியான பருவக்காரர் யாரும் வாய்க்கவில்லை. புல்லட்டில் புறப்பட்டுப் போய் வடக்கே வஞ்சிபாளையம் பிரிவிலிருந்து ஒரு குடும்பத்தைக் கூட்டி வந்தான். அந்த குடும்பத்தினர் முதல் போகத்திலேயே காட்டூர் கரைவெளி வயலின் விளைச்சலை அமோகமாக்கினர். சிவகாமியின் அப்பக்காரன் பூரித்துப் போனான். அந்தக் குடுப்பத்தினரின் மூத்த பையன் சின்னுவை டிராக்டர் ஓட்ட வைத்துக் கொண்டான். சேற்றுழவு ஓட்டுவதில் சின்னு தனித்திறமை வாய்ந்தவனாக இருந்தான்.

சதா வயல்வெளியே கதியெனக் கிடந்தான். சின்னு ஊர்ப்பக்கமே வந்தவனில்லை. துளசிக்குகூட சின்னுவின் முகம் துலக்கமாக ஞாபத்தில் இல்லை. சிவகாமிக்கும் சின்னுவுக்கும் எப்படி சினேகிதம் ஏற்பட்டது என்பது பெரும்புதிராகவே இருந்தது.

துளசி வீடு வந்து சேர்ந்தபோது சிவகாமியின் அப்பக்காரன் பங்காளிகளோடு சிவகாமியை தேடுவதற்கு புறப்பட்டுப் போயிருந்தான். வீட்டின் ஆசா ரத்துத் திண்ணையில் சிவகாமியின் அம்மாக்காரி ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருப்பது கேட்டது. கூட பங்காளி வீட்டுப் பெண்கள் இருந்தனர். துளசியும் வெளித்திண்ணையில் வந்து மனச்சோர்வுடன் உட்கார்ந்து கொண்டாள். நேரம் கடக்க கடக்க புலிப்பூனையும் அதன் குட்டிகளும் இருப்புக் கொள்ளாமல் விநோதமாகக் கத்திக்கொண்டு வீடெங்கும் சுற்றிச்சுற்றி வந்தன. பூனைகள் சிவகாமியைத் தேடியலைவதை துளசி உணர்ந்துக் கொண்டாள். துளசிக்கு எரிச்சலும் கோபமும் பெருகின. மூன்றாம் சாமத்தில் மந்தாரைமர உச்சிக் கிளையில் குறுட்டாந்தைகள் எங்கிருந்தோ வந்தமர்ந்து கொடூரமாகக் குடுகியபோது பூனைகள் கத்துவதை நிறுத்தின. அப்போது ஊரின் வடக்குப்புறத்தில் தீ கங்குகள் புகையோடு கொழுந்துவிட்டு எரிவதும் தெரிந்தது. துளசிக்கு மனம் அச்சத்தில் தளர்வுற்றது.

வீடுகளிடையே புகுந்து வரும் திசையறியாக் காற்றுக்கு மேலெழும்பிப் பறக்கும் சாம்பல் துகள்கள் முகத்தில் மோதின. ஆக்காட்டிப் பாடல் பாடும் கிழப்பித்தன் மண்வீதியில் உள்நுழைந்து வந்துகொண்டிருந்தான். கிட்டத்தில் வந்ததும் முகத்தில் விழுந்த நரைத்த திரிசடைமுடியைக் கோதிவிட்டுக் கொண்டு சிரித்தான். துளசி விலகி நடந்தாள்.

கிழப்பித்தன் முன்னே வந்து சிரித்தான். ஏதோ சொல்ல முயன்றபடி சாடை காட்டி கைவீசி நடந்தான். பையனின் வளவுக்காரர்கள் எங்கோ அருகில் பதுங்கியிருப்பது கிழப்பித்தனுக்கு தெரிந்திருக்கக்கூடும் என்று துளசியின் உள்மனசுக்குப் பட்டது. பின்தொடர்ந்து நடந்தாள். கிழப்பித்தன் திடீரென ஆக்காட்டிப் பாடல் பாட ஆரம்பித்தான்.

‘‘ ஆக்காட்டி ஆக்காட்டி ஆவாரம்பூ ஆக்காட்டி

 எங்கெங்கே முட்டையிட்டே...

 கல்லக்குடஞ்சு காட்டுவழி முட்டையிட்டே

 இட்டது நாலு முட்டை பொரிச்சது மூணுகுஞ்சு...''

சிவகாமி இல்லாத வீடு வெறிச்சிட்டுக் கிடந்தது. அம்மாக்காரி வீதிப் பெண்களோடு ஓடிப்போனவர்களை சாபமிட்டு மண்வாரித் தூற்றினாள். ஒப்பாரிபாடி மாரடித்து அழுது ஓய்ந்துபோய் திண்ணையில் கிடந்தாள். அப்பக்காரன் ஆட்களைத் திரட் டிக்கொண்டு வெளியூருக்குத் தேடப் போய்விட்டான். ஊருக்குள் எங்கும் ஓடிப்போனவர்கள் பற்றிய பேச்சாகவே இருந்தது. விடிவதற்குள்ளாகவே பெண்ணையும் பையனையும் பிடித்து வந்துவிடுவார்கள் எனப் பேசிக் கொண்டனர்.

துளசியால் மனதை திடப்படுத்த இயலவில்லை. சிவகாமியை நினைத்து நினைத்து உருகினாள்.

 சிவகாமிதான் எல்லாம் என முடிவுசெய்து வாழ்ந்து வந்தாள். அப்போது பார்த்திப வருடத்துக் கார்த்திகை மாதம். நாளெல்லாம் கருவோட்டமான முகில்கள் மழையைப் பொழிந்துக் கொண்டேயிருந்தது. அமராவதியில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அக்கரை வயலில் நடவுநட்ட சம்பாநெல் நாற்றுகள் மழை நீர் தேங்கி இற்று மிதந்தன. நீரை வடிக்க வீட்டுக்காரன் நடுச்சாமத்தில் புறப்பட்டுப் போனான். நிறைமாத கர்ப்பிணியான துளசி எவ்வளவோ தடுத்தும் கேட்கவில்லை. கூரைநீர் சொட்டிடும் ஓசை தவிர ஊர் பேரமைதியில் ஆழ்ந்து கிடந்தது. இரண்டு தினங்கள் கழித்தும் வீட்டுக்காரன் வீடு திரும்பி வரவில்லை. விடாது கொட்டும் புயல்மழையில் வீட்டுக்காரனைத் தேடும் வழியும் தெரியவில்லை.

ஆகாயம் வெளிவாங்கி அமராவதி வெள்ளம் வடிந்தபோது கிழக்கே தடுப்பணையிலிருந்து உப்பிய ஆண் சடலமொன்று நீரின் மேலே மிதப்பதாக தகவல் வந்தது.வீட்டுக் காரனைப் புதைத்த குழியில் சிறுகோரைப்புற்கள் முளைத்தபோது துளசிக்கு பிரசவவலி கண்டது. தொப்புள்கொடி சுற்றிப் பிறந்த பெண்குழந்தை மூன்று தினங்களுக்கு மேல் ஜீவிக்கவில்லை. துளசி சூன்யத்துக்குள் தள்ளப்பட்டதுபோல் உணர்ந்தாள். மார்பு வீங்கி தாய்ப்பால் சுரந்தொழுகி வேதனைப்படுத்தியது. புருசனையும் புள்ளையையும் விழுங்கியவளாக ஊரும் தூற்றியது. வீட்டு முற்றத்துத் திண்ணையில் அழுது அழுது முடங்கிக் கிடந்தாள்.

அன்றும் மழை நிலைகொண்டு பெய்தது. பின்மதியத்தில் வெளிநடைக்கதவு பெருத்த ஓசையுடன் திறந்து கொண்டது. சிவகாமியின் அம்மாக்காரியும் அப்பக்காரனும் முற்றத்து வாசல் வந்து சவ்வாரி வண்டியிலிருந்து இறங்கினார்கள். வெகுநாட்கள் கழித்து வீடு வேற்று முகத்தைக் கண்டது. அப்பக்காரந்தான் முதலில் பேசினான்.

‘‘ நீங்க ஏன் இந்த வீட்டுல ஒத்தீல சிரமப்படனும்... நாங்க இருக்கோம்...எங்ககூட வந்திருங்க...இப்ப இவளுக்கு எட்டுமாசம்; இவளுக்கும் ஒத்தாசைக்கு ஒரு ஆள் தேவைப்படுது...உங்கள விட்டா எங்களுக்கு ஆரு இருக்கா..''

அதன்பின்புதான் துளசி வயிறு மேடிட்ட சிவகாமியின் அம்மாக்காரியை கவனித்தாள். எதைப் பற்றியும் யோசிக்கவில்லை.

சவ்வாரி வண்டியில் அவர்களோடு ஏறி ஊருக்கு வந்தாள்.

அந்த வருடம் மாசியில் வன செல்லியம்மன் திருவிழாவின்போதுதான் நடுச்சாமத்தில் சிவகாமி பிறந்தாள். அம்மாக்காரி பிழைக்கமாட்டாள் என்று மருத்துவமனை கைவிட்டுவிட்டது. துளசிக்கு மட்டும் நம்பிக்கையிருந்தது. அம்மாக்காரியையும் காப்பாற்ற முடியும் என்று வீட்டுக்கு கூட்டிவந்து கைவைத்தியம் பார்த்தாள். உடல்நிலை தேறி வந்தது. ஏனோ அம்மாக்காரியின் மார்பு தாய்ப்பால் சுரக்கவில்லை. குழந்தையும் சங்குப்பாலை ஏற்கவில்லை. அப்பக்காரன் குழந்தையும் பிழைக்காது என காட்டூர் கரைவெளிவயலில் போய் குடிசைக் கட்டித் தங்கிக்கொண்டான்.

துளசி மனம் தளரவில்லை. நீலாயியின் உதவியால் காட்டாமணக்கு இலை பறித்து வந்து தன் மார்பில் பற்றுப் போட்டுக் கொண்டாள். அம்மான்பச்சரிசி இலையை அரைத்துப் பசும்பாலில் கலந்து  குடித்தாள். முள்முருங்கை இலைகளைப் இணிங்கி வந்து துவையல் செய்து சுடுசோற்றோடு பிசைந்து சாப்பிட்டாள். நான்கு மாதத்திற்கு பின்பு துளசியின் மார்புக் காம்பிலிருந்து தாய்ப்பால் சுரந்ததை ஊரே அதிசயமாகப் பேசியது. சிவகாமியும் பிழைத்துக் கொண்டாள். அம்மாக்காரியும் பிழைத்துக்கொண்டாள். அப்பக்காரன் முன்புபோல வீட்டுக்கு வந்து தங்கினான்.

கிழப்பித்தன் நடந்து நடந்து ஏரியின் பனையடிக்கு வந்து சேர்ந்தான். கரை மீது காட்டாமணக்கு புதர்கள். தரையில் அம்மான்பச்சரிசி செடிகள். பார்க்க பார்க்க துளசிக்கு கண்களில் நீர் தளும்பிப் பெருகியது. மார்பு வெடித்துவிடும்போல் துடிதுடித்து வலித்தது. இப்போது சிவகாமி இருக்கும் இடம் தெரியவில்லை. பெற்ற தாயையும் வளர்த்த தாயையும் மறந்து ஓடிவிட்டாள். ஓடிப்போனவர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. காவல்துறையினரும் கைவிரித்து விட்டனர். மூன்று தினங்கள் ஆகிவிட்டதால் தேடிய பங்காளிகள் எல்லோரும் ஆத்திரத்தில் இருந்தனர். அப்பக்காரன் கத்தினான்.

‘‘ ஒண்ணுக்கு ரெண்டு பொம்பளைங்க ஊட்டுல இருக்கீங்க...இதுதா வளத்தின லட்சனமா...? இன்னிக்குள்ள எப்படியாவது கண்டுபுடிச்சு ரெண்டுபேரையும் கொல்லணும்...இல்ல நாம குடும்பத்தோட நாண்டுக்கிட்டுச் சாகணும்...''

துளசிக்கு சட்டெனக் கோபம் வந்தது.சூரிக்கத்தியை எடுத்துக்கொண்டு வந்து நீட்டிச் சொன்னாள்.

‘‘வளத்தின பாவத்துக்கு நானே பலியெ ஏத்துக்கிறேன்...''

எங்கும் உச்சிப் பொழுதின் அனல் வெய்யில். ஒற்றைக்கால் தடத்து வண்டல்மண் புழுதி சூடேறிக் கிடந்தது. கண்ணுக்கெட்டும் தொலைவு வரை சீமைக் கருவேல மரங்கள். இடையிடையே பெரும்பூளைப் பூச்செடிகளும் நரிவால் புற்களும் மண்டிய தரிசு. துளசி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள். மனித அரவமற்ற முள்வெளி. உக்கிரக்கோடை வெப்பக்காற்றுக்கு முட்கிளைகள் உராயும் ஓசை. கிழப்பித்தன் முட்கிளைகளை ஒதுக்கி ஒதுக்கி நடந்தான். துளசி சிறு இடைவெளிவிட்டு பின்னே நடந்தாள். மண் உருவாரங்கள் செய்ய மண்ணுடையார்கள் வண்டல்மண் எடுக்கும் குழி வந்தது. கிழப்பித்தன் கைகாட்டினான். துளசி குனிந்து பார்த்தாள். அந்த பையனின் பெற்றோர் பயத்துடன் எழுந்து வந்தனர்.

‘‘ இன்னிக்கு ராத்திரி திருவிழாவுல்ல பொண்ணோட வந்து எங்க பையன் சமாதானம் பேசறதா சொல்லியிருக்கானுங்க....வேற எந்த சேதியும் எங்களுக்கு தெரியாதுங்க ஆத்தா...''

அவர்கள் கையெடுத்துக் கும்பிட்டார்கள். துளசிக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. அவர்களைப் பார்த்தபடியேயிருந்தாள். கிழப்பித்தன் திரும்பிப் போனபடியே ஆக்காட்டிப் பாடலைப் பாட ஆரம்பித்தான்.

இடியுடன் கூடிய பெரு மழைக் கொட்டித் தீர்த்தபின் ஆகாயத்தில் கருமுகில்கள் சிதறுண்டு கிடந்தன. மறுபடியும் சேந்துக்கிணற்றுக்குள் இருந்து கரும்பூனைக்குட்டியின் கத்தல் விசையாக எழுந்தது. தாய்பூனையும்,கூடப்பிறந்த இரு பூனைக்குட்டிகளும் மேல்மாடத்திலிருந்து கீழிறங்கி சேந்துக்கிணற்றின் மூடாக்குப் பலகைமீது ஏறி நின்று பதிலுக்கு கத்தின.

‘‘ மியாவ்...மியாவ்...மியாவ்...''

இடைவிடாத பூனைகளின் கத்தல்களைக் கேட்க கேட்க துளசிக்கு மீண்டும் மீண்டும்  சிவகாமியின் நினைவுகள் ஒவ்வொன்றாக கிளர்ந்துக் கொண்டேயிருந்தன. மறப்பது கொடுந்துயராக இருந்தது. இனியும் பூனைகளின் கத்தல் இந்த வீட்டில் கேட்கக்கூடாது என்று தீர்மானித்தாள். கிண்ணத்தில் பாலை ஊற்றிக்கொண்டு பின்கட்டுக்கு போனாள். வாசற்படி மேல் பால்கிண்ணத்தை வைத்தாள். தாய்பூனையும் இரு பூனைக்குட்டிகளும் ஆவலாக ஓடிவந்து பாலை நக்கின. துளசி கூடவே எடுத்துப் போயிருந்த

சாக்குப்பையில் இருபூனைக்குட்டிகளையும் தாய்பூனையையும் பிடித்து உள்ளே போட்டாள். சாக்குப்பையைத் தூக்கிக்கொண்டு வீட்டைப் பூட்டி வெளியே வந்தாள். ஈரவீதியில் இறங்கி நடந்தாள். தாய்பூனையும் இருபூனைக்குட்டிகளும் சாக்குக்குள் துள்ளியபடியே கத்தின. துளசி இரக்கம் காட்டவில்லை. ஊரைக் கடந்து மேற்கே நிழலி ஓடையை குறிவைத்து நடந்தாள்.

துளசி வனசெல்லியம்மன் கோயில் வந்து காத்திருந்தாள். வாடைக் குளிர்காற்று வீசிற்று. இருள் சூழ்ந்தது. வனசெல்லியம்மன் சாட்டின் கடைசி தினம். எருமைக் கிடாய்கள் பலியிடும் சடங்கு நடந்தேறிக் கொண்டிருந்தது. தலைக்குமேலே எண்ணற்ற விண்மீன்கள். தரையிலோ எட்டூர்  சனத்திரள். துளசிக்கு காதலர்களைத் தேடித்தேடிக் கால்கள் இனி நடக்கமுடியாத நிலையில் ஓய்ந்து வலித்தன. ஒவ்வொரு முகத்தையும் பார்த்துப் பார்த்து கண்கள் அசதி கொண்டன. இனி எங்குபோய் தேடுவது என்கிற சோர்வான நிலை. துளசி சாட்டுக் கம்பத்தின் பக்கம் வந்தாள். வீச்சரிவாள் ஓங்கிய பூசாரியின் கண்கள் வெறித்து நின்றன. வெட்டுண்ட எருமைக் கிடாய்களின் தலைகள் ரத்தம் சொட்ட சொட்ட நிலத்தில் விழுந்தபடியிருந்தன. பறைகள் விசை மிகுந்தன. கொம்புகள் ஓங்கி முழங்கின. அருளாடிகள் பிரம்பு பிடித்து ஆடத் தொடங்கினர். வனசெல்லியம்மானாய் மாறி சாமி வாக்கு சொல்லினர். சனங்கள் பயத்தில் பக்திப் பூர்வமாக ஒடுங்கி நின்றனர். துளசியால் அதிகநேரம் அங்கு நிற்க முடியவில்லை. மீண்டும் கூட்டத்துக்குள் நுழைந்து காதலர்களைத் தேடத் துவங்கினாள்.

அந்த சமயத்தில் அப்பக்காரனின் ஆட்கள் மறைத்து வைத்திருக்கும் ஆயுதங்களுடன் கூட்ட நெரிசலுக்குள் புகுவதைக் கண்டாள். துளசிக்குப் பகீரென்றது. மனம் நிம்மதி இழந்தது. அப்போது கிழப்பித்தன் அருகில் வந்து பாடினான்.

‘‘ புல்லறுத்தான் புலவிற்கு புழுதின்னப் போகையிலே

மாயக்குறத்திமகன் வழிமறிச்சுக் கண்ணி வெச்சான்

 காலிரண்டும் கண்ணியிலே சிறகிரண்டும் மாரடிக்க

 நானழுத கண்ணீரும் எங்குஞ்சு அழுத கண்ணீரும்..''

துளசிக்கு ஆக்காட்டியின் நிலையில் தான் இருப்பதாகப் பட்டது. தாய்மனசை மறைத்து எதற்காக வேடம் போடவேண்டும் என்கிற கேள்வி எழுந்தது. சூரிக்கத்தியை முந்தானையிலிருந்து அவிழ்த்து வெளியே எடுத்தாள். கோயில் கிணற்றுக்குள் கொண்டுபோய் வீசியெறிய முடிவு செய்தாள். கிணற்றுத் தடமெங்கும் மனித முகங்கள். இருபுறக் கடைகளிலும் ஓயாத சப்தங்கள். துளசி ஆட்களிடையே புகுந்து நடந்தாள். தீர்த்தச் சொம் புடன் கிணற்றுப் படிக்கட்டில் மேலேறிய பெண்களிடையே இருந்து பரிச்சயமான குரல் கேட்டது.

‘‘ பெரியம்மா...பெரியம்மா...''

துளசி உற்று நோக்கினாள்.

சிவகாமி ஓடி வந்து எதிரே நின்றாள். புதுப் பட்டுப்புடவை. கழுத்தில் புது மஞ்சள் கயிறு. ஏனோ அந்தக்கணம் துளசிக்கு சட்டென அடங்காத சினம் பீறிட்டு எழுந்தது.

சன்னதம் வந்தவள் போல் கத்தினாள்.

‘‘ என்குலங்கெடுத்த சண்டாளி......''

சூரிக்கத்தி சிவகாமியின் வயிற்றில் இறங்கியது. இரத்தம் பட்டுப்புடவைக்கு வெளியே கொப்பளித்துக் கிளம்பியது. துளசி வனப்பத்தரகாளியின் உற்சவப் புறப்பாடுபோல நின்றாள். சனத்திரள் நெருங்கப் பயந்தது.

இலுப்பங்கிளைகளில் தலைகீழாகத் தொங்கும் பழந்தின்னி வௌவால்கள் இரைதேடப் வெளிக்கிளம்பின. பின் மதியத்தில் பெய்த மழைக்கு நிழலி ஓடையில் காட்டுவெள்ளம் கரைமேவிப் போயிற்று. காரைப் பாலத்தின் கைபிடிச்சுவர் மட்டுமே நீருக்கு மேலே நீட்டிக் கொண்டு தெரிந்தது. அக்கரையில் ஆட்களும் வாகனங்களும் வெள்ளம் வடிவதற்காக காத்துக் நின்றுக் கொண்டிருந்தனர். இக்கரையில் நின்றுக்கொண்டிருந்த ஒரே ஒருவனும் துளசியிடம் சப்தமாகப் சொல்லியபடி திரும்பிச் சென்றான்.

‘‘ தண்ணி வர்ற வெரசலப் பாத்த...பாலம் கொஞ்சநேரத்துல ஒடைஞ்சு உழுந்துரு...நீங்க தெரியாம எறங்கீராதீங்கம்மிணி...‘‘

துளசி பதிலேதும் பேசாமல் வலப்புறமாக நீரில் மூழ்கிக் கிடந்த நெல்வயல் வரப்பில் இறங்கி நடந்தாள். நீருக்கு மேலாக மழைத்தட்டான்கள் பறந்துக் கொண்டிருந்தன. ராஜவாகை மரமொன்றின் அடியில் சாக்குப்பையைக் கவிழ்த்துக் கொட்டினாள். தாய்பூனையும் இரு பூனைக்குட்டிகளும் சேற்று வரப்பில் விழுந்தன. துளசி திரும்பிப் பார்க்காமல் நீர்சேம்பு இலைகளை மிதித்து நடந்தாள்.

சிவகாமியைக் குத்திய வழக்கு முடிந்து வீடு திரும்பிய தினம்கூட இந்த ஓடையில் இதேமாதிரி காட்டுவெள்ளம் போயிற்று. துளசியும் சிவகாமியின் அப்பக்காரனும் காத்திருந்துதான் இக்கரை வந்து சேர்ந்தனர். வரும்வழியில்  சிவகாமியின் அம்மாக்காரியைப் புதைத்த குழிமேட்டில் எருக்கு முளைத்து வளர்ந்திருந்ததையும் கண்டனர்.

நூலாம்படை படிந்த வீட்டுக்குள்ளிருந்து பூனைகள் எதிர்கொண்டு கத்தியவுடன் துளசிக்கு சிவகாமியின் ஞாபகம் முட்டி கதறி அழ ஆரம்பித்தாள்.

சிவகாமியின் அப்பக்காரன் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கவில்லை. காட்டூர் கரைவெளி வயலில் மீண்டும் குடிசைக் கட்டித் தங்கிக் கொண்டான். பொலிவிழந்த வீட்டில் துளசிக்கு பூனைகளே துணையாயிருந்தன. இரவெல்லாம் சிவகாமியை நினைத்து நினைத்து அழுவதை பூனைகளே காதுக் கொடுத்துக் கேட்டன. பெருமழை பெய்து மறுபடியும் நிழலி ஓடையில் காட்டுவெள்ளம் வந்த தினத்தில் சிவகாமியின் அப்பக்காரன் இலுப்பை மரத்தில் கயிறுபோட்டு நாண்டுக் கொண்டான். உடலை வீட்டுக்கு எடுத்து வந்தபோது பூனைகள் ஓலமிடுவதுபோல் கத்தின. ஏனோ துளசிக்கு துளியும் கண்ணீர் வரவில்லை.

ஆகாயத்தில் மீண்டும் கருமுகில் மூட்டம் சூழ்ந்தது. பனிக்கால அந்தியில் இருள் சீக்கிரமாகவே கவிழ்ந்தது. துளசி சுருட்டிய சாக்குப்பையுடன் ஊர்ப்பாதையேறி நடந்தாள். எங்கும் அனாதியான மௌனம். கிழக்கேயிருந்து கார் ஒன்று படுவேகமாக நிழலி ஓடையை நோக்கி வந்தது. துளசி ஓரமாக ஒதுங்கி நின்றாள். சக்கரங்கள் மழைநீரை வாரி இறைத்தது. காரை தடுக்க வேண்டும் என்று நினைத்தாள். கை நீட்டுவதற்குள் கார் துளசியைக் கடந்து போய்விட்டது. துளசி திரும்பி பார்த்தாள். கார் நிழலி ஓடையை சமீபித்தும் விட்டது.

துளசிக்கு மனசு அடித்துக் கொண்டது. திடீரென கார் பெரும்முறைச்சலுடன் வலப்புறம் திரும்பிற்று. நெல்வயலுக்குள் போய் சக்கரங்கள் புதைய நின்றது. துளசிக்கு நிம்மதியாயிற்று. காரை நோக்கி விரைந்தாள். காரிலிருந்து கணவனும் மனைவியும் ஒரு பெண்குழந்தையும் இறங்கினர். நீர் தேங்கிய நெல்வயலுக்குள் நின்றபடி நிழலி ஓடையை ஒருகணம் பார்த்துவிட்டு அந்தப் பெண் சொன்னாள்.

‘‘ குட்டிகளோட பூனை மட்டும் குறுக்கே வராம இருந்திருந்தா...நாம இந்நேரம் ஓடைத்தண்ணீல உழுந்து செத்திருப்போமுங்க...தெய்வாதீனமா இந்தப்பூன வந்து நம்மள காப்பாத்திருக்குங்க...''

துளசிக்கு குரல் படுபரிச்சயமானதாகவே இருந்தது. கிட்டத்தில் நெருங்கினாள். சிவகாமியைப் பார்க்க பார்க்க ஆற்றாமையில் கண்ணீர் பெருகி வழிந்தது. சட்டென இழுத்து அணைத்துக் கொண்டாள். நிழலி ஓடைக்கு அக்கரையில் மழை இறங்கிப் பெய்யும் ஓசை கேட்டது. பாதையின் மறுபுறத்திலிருந்து தாய்பூனையும் இரு பூனைக்குட்டிகளும் கத்திகொண்டு துளசியை நெருங்கின. துளசிக்கு ஒருகணம் சேந்துக்கிணற்றுக்குள் விழுந்துக் கிடக்கும் கரும்பூனைக்குட்டியின் துயரம் தோய்ந்த குரல் கேட்டது.

மே, 2023