ஓவியம்: ஜே. கே
சிறுகதைகள்

சிலை விளையாட்டு

ஆங்கிலத்தில் குழலி மாணிக்கவேல் தமிழில் அ. முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்
பல மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் ஒரு நண்பர் தொகுப்பு நூல் ஒன்றைத் தந்தார். அது Flash Fiction, அதாவது மின்னல் கதைகளின் தொகுப்பு. உலகத்தின் பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்கள் எழுதியிருந்தார்கள். குட்டி குட்டி சிறுகதைகள். அதிலே `ஒரேயொரு தமிழ் எழுத்தாளருடைய கதையும் இருந்தது. அவர் பெயர் குழலி' மாணிக்கவேல். ஆச்சரியமாயிருந்தது. ஆங்கிலத்தில் எழுதும், நான் முன்னர் கேள்விப்பட்டிராத ஓர் எழுத்தாளர். அப்படித்தான் என் ஆராய்ச்சி தொடங்கியது. என் நண்பர்களிடம் விசாரித்தேன். அவர்களுக்குத் தெரியவில்லை. இந்தியாவில் சிலரிடம் கேட்டுப்பார்த்தேன். பலன் இல்லை. பொஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஒரு பகுதியாகச் செயல்படும் `அக்னி’ ஆங்கிலப் பத்திரிகையில் இவர் சிறுகதை ஒன்று வெளியானது மங்கலாக நினைவுக்கு வந்தது. அக்னி பத்திரிகை தங்கள் பெயருக்கு இப்படி விளக்கம் எழுதியிருந்தது. Literary magazine named after vedic fire god. அந்தப் பத்திரிகையில் வெளியாகியிருந்த இவருடைய சிறுகதையின் பெயர் The Statue Game. இது யூலை, 2010 ல் வெளியானது. குழலியை `தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தும் விதமாக இந்தக் கதையை மொழிபெயர்க்கலாம் என்று தீர்மானித்தேன். ஆங்கில எழுத்தாளர்களின் வழக்கம்போல இவருக்கும் ஒர் ஏஜெண்ட் இருந்தார். பெயர் கன்னா, நல்ல மனிதர். அவர் அக்னி பத்திரிகையுடன் தொடர்புகொண்டு அவர்களுக்காக என்னிடம் சில வழக்கமான கேள்விகளைக் கேட்டார். பின்னர் ஓர் ஒப்பந்தம் போட்டு, சன்மானம் பற்றி தீர்மானித்த பிறகு, கையெழுத்து வாங்கினார். அதன் பின்னர்தான் இந்தக் கதை இங்கே மொழியாக்கம் செய்யப்பட்டது. குழலியின் முழுப்பெயர் வண்டார்குழலி மாணிக்கவேல். அந்தப் பெயர்தான் என்னை முதலில் ஈர்த்தது. குழலியிடம் அதுபற்றிக் கேட்டபோது அவருடைய தகப்பன் தமிழ் பற்றாளர் என்று குறிப்பிட்டார். சிறுவயதில் இருந்தே எழுதவேண்டும் என்ற முனைப்புடன் தான் இயங்குவதாகச் சொன்னார். தனக்கு படைப்புக்கான ஆதர்சம் என்று ஒருவரும் இல்லை, தானே தன் பாதையை உருவாக்கியதாகப் பெருமைப்படுகிறார். இவர் பிறந்தது கனடாவில், வின்னிபெக் என்ற நகரத்தில். அங்கே 13 வயது வரைக்கும் வாழ்ந்த பின்னர் தன் சொந்த நாடான இந்தியாவுக்கு திரும்பினார். அங்கேயே படித்து முழுநேர படைப்பாளராக இன்று நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என எழுதி வருகிறார். இவர் எழுதிய சில நூல்கள்: Things we found during the autopsy How to love mathematical objects Eating sugar, Telling lies. இவருடைய சிறுகதைகள் Granta, Strange Horizons, Agni, Michigan Quarterly Review ஆகிய அமெரிக்க இலக்கியப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இந்தப் பத்திரிகைகள், தமக்கு அனுப்பிய சிறுகதைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டனவா, இல்லையா என்பதை அறிவிக்கவே கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் எடுக்கின்றன. சன்மானம், 1000 வார்த்தைகளுக்கு $50. பொதுவாக 100 கதைகள் சமர்ப்பித்தால் இரண்டு கதைகள் ஏற்கப்படும் இப்படியான சூழ்நிலையில்தான் குழலி ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார். இது தவிர, இலக்கியம் அல்லாத பத்திரிகை சிலதிலும் எழுதுகிறார். ஏன் என்று கேட்டபோது வீட்டு வாடகை கட்ட வேண்டுமே என்றார். இவருடைய The Statue Game சிறுகதையை தமிழில் ’சிலை விளையாட்டு’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறேன். பல இடங்களில் சிரித்தபடியே மொழி பெயர்த்ததால் களைப்பு தெரியவில்லை.

அஞ்சலி தன் அப்பென்டிக்சை விற்கும் முயற்சியில் இருக்கும்போது தன் பல்லைத் தொட்டுக் காட்டுவாள். ‘இது கனடா பல்’ அதை ஒரு தட்டுத் தட்டியபடி சொல்வாள். ’ரொம்ப வலிமையானது. இந்தப் பற்கள் இவ்வளவு திறமானவையாக இருந்தால் என்னுடைய அப்பென்டிக்ஸ் எத்தனை உயர்ந்ததாக இருக்கும்?’

அவளுடைய துரதிர்ஷ்டம் அதை வாங்க ஒருவரும் முன்வரவில்லை. இந்தியாவில் உடல்பாகங்கள் அறம்புறமாக விற்பனையாகும்போது ஏன் அப்பென்டிக்ஸ் விற்பதற்கு மட்டும் இத்தனை பிரச்சினை என்பது அஞ்சலிக்குப் புரியவில்லை. ’இங்கே அப்பென்டிக்சுக்கு அத்தனை பெரிய டிமாண்ட் இல்லை. உன்னுடைய சிறுநீரகம் அல்லது கல்லீரலை விற்கப்பார்,’ என்றேன் நான்.

‘ஏன் நான் அதை விற்கவேண்டும்? சிறுநீரகம் அளவுக்கு அப்பென்டிக்சும் முக்கியமானதுதான்’ என்றாள் அஞ்சலி. ‘என்னை கறுப்பு பட்டியலில் தள்ளி வைத்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நான் ஒரு கனடியன். என்னுடைய இந்த விநோதமான உச்சரிப்பு இல்லாவிட்டால் என் குடல்வாலை எப்போவோ விற்றுத் தள்ளியிருப்பேன்.’

‘உன்னுடைய உச்சரிப்பு அல்ல, உன்னுடைய இளஞ்சிவப்பு நிறமும், தசை முறுக்கும்தான் காரணம். அநேகமான இந்தியப் பெண்களுக்கு இளஞ்சிவப்பில் முறுகிய தசைகள் இருப்பதில்லை. இதுதான் ஆட்களை சந்தேகப்பட வைக்கிறது,’ நான் சொன்னேன்.

எனக்கு அஞ்சலி திரும்பிப் போவதுதான் விருப்பம். ஒரு கனடியருக்கு கனடாவைத் தவிர வேறு நல்ல இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவள் இங்கே சௌகரியமாக இருந்தாள். என்னுடைய பாட்டியிருக்கும் அதே வீதியில் ஒரு சின்ன அறையில் அவள் தங்கியிருந்துகொண்டு தன்னுடைய கனடா ஆட்களுக்கு தபால் அட்டைகள் அனுப்பினாள். தனக்கு நல்லாய் வாய்த்த இந்திய நகரத்தைப் பற்றி எழுதினாள். அங்கே அதிக மாடுகள் இல்லை ஆனால் ஓயாமல் வாயு பறிக்கும் பன்றிகளும் ஆடுகளும் நிறைய இருப்பது பற்றி எழுதினாள். குழாய்களில் ஒருநாளைக்கு இரண்டு தரம்தான் தண்ணீர் வந்தது. ஆனால் அந்த தண்ணீரை குடிக்க முடியாது. ஏனென்றால் அவற்றில் காலரா, குடல்காய்ச்சல், அம்மை மற்றும் மலேரியா காய்ச்சல் கிருமிகள் நிறைந்திருக்கும். பகலிலே தான் கண்ட இறந்த எலிகள் பற்றியும், மின்சாரம் அது நினைத்தபோது வந்து நினைத்தபோது போனது பற்றியும், சனங்கள் வீதியின் ஓரத்தில் சிறுநீர் கழிப்பது பற்றியும் எழுதினாள்.

மாதத்தில் ஒருதடவை அவள் சகோதரி 50 டொலர் காசு அனுப்பினாள். ஆனால் அவளுடைய இந்திய அனுபவங்களை போதுமான அளவிற்கு விஸ்தரிப்பதற்கு அந்தக் காசு போதவில்லை. அதற்குத்தான் அஞ்சலி தன் குடல்வாலை விற்பதற்கு விரும்பினாள். ஒருநாள் பாட்டியின் வீட்டுக்கு அவள் வந்து முன் கதவை இழுத்தாள். ‘என்ன வேண்டும்?’ நான் யன்னல் வழியாகக் கத்தினேன். வீட்டின் உள்ளே அவளை அழைக்க எனக்கு விருப்பம் இல்லை. ஏனென்றால் அவளை திரும்பவும் வீட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு வெகுநேரம் எடுக்கும்.

‘என்னுடைய சகோதரி வருகிறாள்,’ என்றாள். ‘இந்தக் கதவு பூட்டியிருக்கிறதா? எதற்காக கதவு பூட்டியிருக்கிறது?’

‘அவர் உன்னை திரும்பவும் கனடாவுக்கு கூட்டிச் செல்வாரா?’ ‘அவர் என்னுடைய சேமத்தை அறிவதற்கு விரும்புகிறார் என்பது உனக்குத் தெரியும்தானே.’

‘எங்கே அவர் தங்குவார்?’

‘உங்கள் வீட்டில் கூடுதலாக அறை இருப்பதால், நான் நினைக்கிறேன்….’

‘முடியாது.’

‘ஓகே, அப்ப என்னோடு அவர் தங்குவார். அவருக்காக ஒரு குளிரூட்டி யந்திரம் வாடகைக்கு எடுக்கமுடியும். நீ கதவைத் திறக்கப் போகிறாயா? இல்லையா?’

‘எவ்வளவு நாள் அவர் தங்குவார்?’

‘எனக்குத் தெரியாது. சில சமயம் நீயே அவரைச் சந்திக்கலாம்.’

‘ஒரு வேளை உன்னை அவர் திரும்பவும் கனடாவுக்கு கூட்டிப் போகலாம்’ நான் சொன்னேன்.

திருநெல்வேலிக்கும் நாகர்கோயிலுக்கும் இடையில், எங்கோ ஓர் இடத்தில் ஒரு வெள்ளை அம்பாசடர் காரில் தூக்கத்திலே என்னுடைய பாட்டி இறந்துபோனார். அவரை எரித்த பிறகு அவர் வீட்டுக்குச் சென்று சில்லறை காரியங்களை முடிக்குமாறு எனக்குச் சொன்னார்கள். அந்தச் சில்லறைக் காரியங்கள் என்ன என்பது எனக்கு முற்றிலும் தெரியாது. அவருடைய வீடு ஐதாகவும் மர்மமாகவும் இருந்தது. வைக்கோல் பாய்கள், ஓர் உடைந்த கிராமபோன் பெட்டி, பழைய பட்டுச் சேலைகள் அலமாரி, சமையல் பாத்திரங்கள், ஒரு சின்னக் குழந்தை அளவில் உடைந்துபோகும் நிலையில் காணப்பட்ட கிருஷ்ணரின் சிலை எனப் பலதும் இருந்தன. சிலையில் பல இடங்களில் சிராய்ப்புகளும், கீறல்களும் காணப்பட்டன. பல லட்சம் சிறு குருவிகள் சிலையை கொத்தியது போல இருந்தது. இரண்டு கைகளையும் சிலையில் காணவில்லை. வலது முழங்கால் இருக்கவேண்டிய இடத்தில் ஓர் ஓட்டை மட்டும் இருந்தது. கிருஷ்ணருடைய புல்லாங்குழல் அவருடைய வெடித்த உதட்டில் ஒட்டியிருக்கும் கறள்பிடித்த கம்பியாக எஞ்சியிருந்தது.

‘எனக்கு அதைத் தா.’ அஞ்சலி சொன்னாள்.

‘ஏன்?’

‘ஏனென்றால் கிருஷ்ணர் எனக்குப் பிரியமானவர். என்னுடைய அறையில் இந்தச் சிலை அழகாகவும், பொருத்தமாகவும் இருக்கும்.’

‘ஆயிரம் ரூபாய்.’

‘நான் என்னுடைய அப்பென்டிக்சை விற்றவுடன் நூறு ரூபாய் தருவேன்.’

கிருஷ்ணருடைய முழங்கால் ஓட்டையிலிருந்து ஒரு குளவி உள்ளேயும் வெளியேயுமாகப் பறந்தது. கிருஷ்ணருடைய கைகளுக்கு என்ன நடந்தது என்று யோசித்தேன். அவற்றை முறித்துவிட்டதுபோல பட்டது.

‘அப்ப எனக்குக் கிடைக்குமா?’ அஞ்சலி கேட்டாள்.

‘ஆயிரம் ரூபாய்க்கு உனக்கு கிடைக்கும்.’

வீதியின் எதிர்ப்புறத்தில் இருந்த கடைச் சொந்தக்காரர்தான் பாட்டி வீட்டின் பொறுப்பாளர். வீட்டின் திறப்புக்கும் அவர்தான் காப்பாளர். எனக்குத் தெரிந்த வரையில் என்னை அவருக்கு மூன்று காரணங்களுக்காக பிடிக்காது.

 எனக்கு மிச்சக் காசை கணக்குப் பார்க்கத் தெரியாது.

 இடது, வலது குழப்பம் எனக்கு இன்னும் இருக்கிறது.

 பத்து வரைக்கும்தான் என்னால் தமிழில் எண்ண முடியும்.

ஒருநாள் காலை கடைக்காரரிடம் கேட்டேன். ‘இந்தப் பழைய சிலையை நான் என்ன செய்வது?’ ‘வெளியே எறிந்துவிடு,’ அவர் சொன்னார்.

’கடவுள் சிலைகளை எறிவது பிழையல்லவா?’

‘எனக்கு நீ அதைச் சொல்லியிருக்கவேண்டும். எப்படி அது கடவுள் சிலை என்று எனக்குத் தெரியும்?’

‘அது கடவுள் சிலை.’

‘அதை நீ ஆற்றில் வீசவேண்டும்.’

’எனக்காக அதை உங்களால் ஆற்றில் எறிய முடியுமா?’

‘முடியாது.’

‘என்னுடைய பாட்டி அதை விரும்பியிருப்பார்.’’

‘ஏன் பொய் சொல்லுகிறாய்.’

‘நான் பொய் சொல்லவில்லை.’

’இல்லை நீ சொல்கிறாய்.’

நான் வீட்டுக்குப் போய் பின் தாழ்வாரத்தில் அந்தச் சிலையை மடியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன். அப்படி மனச்சோர்வு தரும் ஒரு கிருஷ்ணர் சிலையை நான் பார்த்ததில்லை. சிலையின் கண்ணில் காணப்பட்ட சிறிய குழி ஒரு ரத்தக் காட்டேரியை நினைவுக்கு கொண்டுவந்தது. அதே சமயம் குருட்டு தன்மையையும் கொடுத்தது. சிலையின் சிரிப்பு அதன் கைகள் போன அதே இடத்துக்கு விழுந்து போவதற்கான ஒரு தருணத்துக்கு காத்திருந்தது.

முழங்கால் ஓட்டைக்குள் உற்றுப் பார்த்தபடி ’நீ அந்த மனிதனை ஞாபகப் படுத்துகிறாய்’ என்றேன். ’சாகமுடியாத அந்த மனிதனை அவர்கள் வெட்டுக்கிளியாக மாற்றிவிட்டார்கள். எனக்கு அது உண்மையில் புரியவே இல்லை. என்னத்திற்காக ஒன்றை வெட்டுக்கிளியாக மாற்றவேண்டும்?’

கிருஷ்ணர் சிலையை உடைந்த பிள்ளைபோல என் இடையில் காவிக்கொண்டு வீட்டைச் சுற்றி சின்னச்சின்ன பொருட்களை தேடியபடி திரிந்தேன். பூட்டப்பட்ட மரப்பெட்டிகள் கட்டிலுக்கு கீழே காணப்பட்டன. அவற்றின் உள்ளே என்ன இருக்கும் என்று அறிய ஆவல்தான்; ஆனால் என் சோம்பல் தன்மையால் அவற்றை நான் திறக்கவில்லை.

’பெட்டிகளின் உள்ளே சின்னப் பொருள்கள் இருக்க முடியாது. சின்னப் பொருள்களை ஒருவரும் பூட்டி வைக்கப்போவதில்லை,’ என்று நான் சொன்னேன்.

சில அறையின் யன்னல்கள் இன்னொரு அறைக்குள் திறந்தன. யன்னல் கண்ணாடிகள் பச்சை, செம்மஞ்சள் நிறத்தில் இருந்தன. சட்டங்கள் வெள்ளை, பழுப்பு, பச்சை நிறங்களில் வண்ணம் பூசப்பட்டிருந்தன.

இங்கே வந்து தங்கும் ஒரு விருந்தாளியின் ஏமாற்றம் பற்றி நான் யோசித்தேன். அவர் ஒரு பக்க யன்னலை ஆவலோடு சூரியனையோ, ஆகாயத்தையோ பார்ப்பதற்கு திறப்பார். ஆனால் அவர் வீட்டின் இன்னொரு அறையை காண்பார்; அங்கே ஒரு வயதுபோன மனிதர் சத்தமாக மூச்சு விட்டுக்கொண்டு ஒரு மூலையில் கிடப்பதை பார்க்கலாம். நான் கிருஷ்ணரின் தலையை ஒரு யன்னல் கண்ணாடிக்குப் பக்கத்தில் வைத்தேன்.

’அங்கே ஏதோ அழுக்கான, சந்தேகத்தை ஏற்படுத்தும் ஏதோ ஒன்று இருப்பது போல தோன்றுகிறது. நீ என்ன நினைக்கிறாய்?’ நான் கிசுகிசுத்தேன்.

அந்தச் சிலையின் தலை ஒரு தாளத்துடன் ஆடத் தொடங்கியது. அது தன் தலையை பிளப்பதற்கு முயன்றது போல தெரிந்தது.

’எனக்கு மச்சான் முறையான ஒருவன் தன்னுடைய சின்ன வயதில் இப்படிச் செய்தான். அவன் இன்னும் அப்படிச் செய்யலாம் என நினைக்கிறேன்,’ என்றேன்.

வெகு சீக்கிரத்தில் அஞ்சலியின் சகோதரி சொந்தம் கொண்டாட வரவில்லை. அவர் அஞ்சலியை அழைத்துப் போக வருகிறார் அல்லது மாதம் ஐம்பது டொலர் காசு அனுப்பும் கரிசனை அப்படியே காய்ந்து முடிந்துவிட்டதால் அவரை தன்னிடம் இருந்து ஒரேயடியாகப் பிரிப்பதற்கு வருகிறார் என்பது தெரிந்தது.

’என்னுடைய அப்பென்டிக்சை என்னால் விற்க முடியுமானால் அவர் வந்தாலும் வராவிட்டாலும் எனக்கு ஒரு கவலையும் இல்லை. அவர் இழவு பிடித்தவர்; இந்த உலத்தின் அதி மோசமான இழவு பிடித்தவர்.’

நான் என்னுடைய விரலால் கிருஷ்ணரின் முகத்தையும் முடியையும் தடவினேன். சில இடங்கள் சிராய்ப்பாகி குட்டி குட்டி துவாரங்களுடன் தழும்பாகியிருந்தன.

’ஒரு கூட்டம் சின்னக் கரண்டிகளால் சிலையை தாக்கியதுபோல இருக்கிறது,’ என்று நான் கன்னத்து ஓட்டைகளைத் தட்டிக்கொண்டு சொன்னேன்.

‘நான் ஒருமுறை தூக்குகிறேனே’ என்றாள் அஞ்சலி.

‘இல்லை.’

’ஓ யேசுவே. என்னுடைய சகோதரி இங்கே வந்து என்னுடைய வாழ்க்கையை நாசமாக்கப் போகிறார். ஒருத்தரும் என்னுடைய அப்பென்டிக்சை வாங்கப் போவதில்லை. எனக்கு ஒன்றுமே வேண்டாம், இந்தக் கர்மத்தை ஒருக்கால் காவ விடு.’

அவள் சிலையை தன் மடியில் வைத்தாள், பின்னர் இடையில் வைத்தாள். சிலையின் புருவத்தையும் நெஞ்சோடு ஒட்டியிருந்த மாலையையும் தன் விரலினால் தடவினாள்.

‘இதை எனக்குத்தா. உனக்குத் தேவையில்லை. எனக்குத் தருவதில் உனக்கு என்ன பிரச்சினை?’

‘நான் இதை ஆற்றில் எறிய வேண்டும். இது சிக்கலானது.’

‘என்ன சிக்கல்?’

‘அது ஓர் இந்திய வழமை. உனக்குப் புரியாது.’

‘என்ன இழவு, எனக்குப் புரியாதா?’

‘நீ என்ன செய்யவேண்டும் என்பது உனக்குத் தெரியுமா? ஒரு நல்ல கிருஷ்ணர் சிலையை, கைகள், முழங்கால்கள் நல்லாய் வேலை செய்யும் ஒன்றை, காசு கொடுத்து வாங்கு.’

‘இதை எடுத்துப் போகவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.’

’நீ ஒரு புதிய கிருஷ்ணர் சிலையை உனக்கு சொந்தமாக்கவேண்டும்; பின்னர் கனடாவுக்கு போகலாம்.’

 அடுத்த நாள் நான் அஞ்சலியை பார்க்கவில்லை. நான் கடைக்காரரிடம் அஞ்சலியை பார்த்தாரா என்று கேட்டேன்.

அவர், ‘எனக்கு வேறு வேலை இல்லையா? யார் யார் எங்கே போகிறார்கள், வருகிறார்கள் என்று கண்காணிப்பதுதான் என் வேலையா?’ என்றார்.

‘நான் அப்படிச் சொல்லவில்லை. அப்படி ஒருவரும் கண்காணிப்பதில்லை, போலீஸ்காரர்களைத் தவிர,’ என்று சொன்னேன்.

‘உனக்கு வேறு ஏதாவது தேவையா?’ கடைக்கார கேட்டார்.

’நான் அந்த வீட்டில் வேறு என்ன கண்டுபிடித்தேன் என்று உங்களுக்கு தெரிய வேண்டுமா?’

‘நான் வேலையில் இருக்கிறேன்.’

‘அங்கே உள்ள யன்னல்கள் இன்னொரு அறைக்குள் திறக்கின்றன. எதற்கு அப்படி யன்னல்கள் வைத்திருக்கிறார்கள்? ஒரு வேளை பகிரங்கமாக வேவு பார்ப்பதற்காக இருக்கலாம்.’

கணக்குப் புத்தகத்தை எடுத்தபடி ‘வேறு ஏதாவது வேண்டுமா?’ என்றார் கடைக்காரர்.

நான் வீட்டுக்கு சென்று யன்னல் பக்கமாக அஞ்சலி வீட்டை பார்க்கக்கூடியதாக உட்கார்ந்தேன். பின்னர் சிலையை பழைய கார் கொட்டகை கதவுக்குப் பின் ஒளித்து வைக்கத் தீர்மானித்தேன். சிலையை ஒளித்து வைத்தபடி நான் பேசினேன். ’வெளிநாட்டவர்கள் இங்கே வருவதை அவர்கள் தடை செய்யவேண்டும். இந்தியா அவர்களுக்கு பைத்தியம் பிடிக்க வைக்கிறது. சூரியனுடைய அதீத வெப்பம் உடலை சீரழித்து மூளையை பேதலிக்க வைக்கிறது.’

நான் மேலே பார்த்தபோது வௌவால்கள் குட்டி குடைகளை சுருக்கியதுபோல கூரையிலே தொங்கின. எனக்கு ஏழு வயதாயிருந்தபோது அவற்றை இங்கே பார்த்திருக்கிறேன். ஒரு பையன் மூங்கில் கம்புகளால் கூரையை இடித்து சுத்தம் செய்தபோது சூரிய ஒளி உண்டாக்கிய தூசுத் திரையில் வௌவால்கள் இங்குமங்கும் சிதறிப் பறந்தன. வௌவால்கள் எம்மைத் தாக்கினால் ஒடுவதற்கு தயாராக நான் கதவுக்கு பக்கத்தில் நின்றேன். ஆனால் இப்போது முழுவதும் நல்லாய் வளர்ந்த நான் துணிச்சலாக இங்கே முழுத்தூரமும் நடந்து வந்திருக்கிறேன்.

சிலையை தலையில் தூக்கிக்கொண்டு ‘உன்னை நான் வீட்டில் வைத்திருக்கப் போகிறேன்’ என்று சொன்னேன். அன்றைய நாளின் மீதி நேரத்தை யன்னல் பக்கத்தில் உட்கார்ந்து கழித்தேன். சனங்கள் வலைப் பைகளைக் காவிக்கொண்டும், கைக்கடிகாரங்களைப் பார்த்துக்கொண்டும், தங்களை ஏமாற்றிய சம்பவங்கள் குறித்து பேசிக்கொண்டும் வீதியில் நடந்தார்கள்.

’அவர்கள் எதற்கு அப்படிச் செய்கிறார்கள்?’ நான் சொன்னேன். ’அவர்கள் அருகில் ஆண் நண்பர்கள் இருக்கும்போது, வாட்டிய இறைச்சி சாப்பிட தாராளமாக கிடைக்கும்போது இங்கே வந்து ஏன் பரிதாபமாக வாழ்கிறார்கள். இந்தியாவில் போதை அடிமைகள், சிறார் வசியக்காரர்கள், ஆவியோடு பேசுபவர்கள் ஆகியோர் இருக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

குனிந்த என் கன்னத்தில் சாய்ந்தபடி சிலை வெளியே உணர்ச்சியின்றி பார்த்தது. இந்தச் சிலை ஒன்றுக்குமே அசையவில்லை. மென்சிவப்பு நிறம் கூடிய, தசை முறுக்கு அஞ்சலி வந்து தன்னைக் கைப்பற்றிப் போகலாம் என்ற கவலை சிலைக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அஞ்சலி வீட்டுப் பக்கம்கூட சிலை தன் பார்வையைச் செலுத்தவில்லை.

அஞ்சலி திரும்பவும் அடுத்தநாள் மாலை செர்ரி மணம் எழுப்பியபடி, ஒரு நேர்ப் பார்வையற்று, கண்களில் கோபம் கொப்பளிக்க வந்தாள். ’நீ ஓர் இனிப்பு பண்டம் போல மணக்கிறாய்’ என்றேன். ‘பெனட்ரில், ஏதோ ஏதோ’ என்றாள். சுவரில் சாய்ந்து கொண்டு குறுக்கு கால் போட்டு நிலத்தில் அமர்ந்தாள்.

சிலையை மடியிலே வைத்தபடி நான் ஒரு பிளாஸ்டிக் கதிரையில் அவளுக்கு எதிராக உட்கார்ந்திருந்தேன்.

‘நான் வீட்டுக்கு போகிறேன்,’ அவள் சொன்னாள்.

’நல்லது.’

’என்னுடைய சகோதரி வருகிறார். நாங்கள் எல்லாச் சாமான்களையும் காரில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு கிளம்புவோம். நான் அங்கே போனபின் என்ன செய்வேன் என்று உனக்குத் தெரியுமா?’

‘நீ பேகிள் சாப்பிடுவாய். உன் நாயை மிருகவைத்தியரிடம் அழைத்துப் போவாய்,’

‘இல்லை.’

‘நீ ஹொக்கி விளையாட்டுகளை மதுக்கடையில் பீர் அருந்தியபடி பார்ப்பாய்.’

‘நாசமாய்ப்போன மூடத்தனம்,’ என்று தலையை ஆட்டியபடி சொன்னாள். ’நாங்கள் அதைத்தான் நாள் முழுக்க செய்கிறோம் என்று நினைக்கிறாயா?’

‘ஆம்.’

‘மூடத்தனம்,’ அவள் தலையை பிடித்தபடி சொன்னாள்.

அவள் சுவரைப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்றாள்; பின்னர் நடந்து வந்து கிருஷ்ணரின் தலையில் ஒரு பக்கத்தில் தன் விரலை வைத்தாள்.

‘என்ன அழுக்கான சிலை,’ அதன் தலையை மெல்ல ஆட்டியபடி சொன்னாள்.

‘கொஞ்சம் உடைந்த சிலை ஆனால் அழுக்கானது அல்ல’ என்றேன்.

‘அது உண்மையில் அழுக்கானது. என்னை நம்பு.’

‘இவ்வளவு அழுக்கான சிலையை ஏன் நீ வேண்டும் என்கிறாய்?’

அவள் தோளை அசைத்து ஒரு பட்டனை அழுத்துவதுபோல சிலையை அழுத்தினாள்.

சிலை ஆடி நழுவி கீழே விழுந்து உடைந்தது. நாங்கள் உடைந்த கைகள், கால்கள், முகம் ஆகியவற்றை குவியலாகப் பார்த்தோம்.

‘என்னை மன்னித்துவிடு. நான் இதை வேண்டுமென்றே செய்யவில்லை,’ என்றாள் அஞ்சலி. அவள் சிலையின் தோள்மூட்டையும், சில்லுகளையும் காலால் கூட்டிப் பெருக்கினாள்.

‘இது என்ன பெரிய விசயம். நான் புதிதாக ஒன்றை வாங்குவேன்,’ என்றாள்.

கிருஷ்ணரின் கறள் பிடித்த புல்லாங்குழல் அவளுடைய பின் பாக்கெட்டில் துருத்திக்கொண்டு தெரிய அஞ்சலி புறப்பட்டாள்.

நான் மீதிச் சில்லுகளை பொறுக்கி ஒரு பச்சை பிளாஸ்டிக் பையில் போட்டு என் தோள்மேல் எறிந்துவிட்டு வீட்டைச் சுற்றி நடந்தேன்.

பூட்டிய பெட்டிகளை என் காலினால் தட்டிப் பார்த்தேன். பின்னர் உள்பக்க யன்னல்களை திறக்க முயற்சி செய்தேன். ஆனால் அவை எல்லாம் ஆணி அடித்து மூடப்பட்டிருந்தன. ஆணிகள் கறள் பிடித்து யன்னல் சட்டங்களுக்கு மேல் வளைந்து தூங்குவது போலக் கிடந்தன.

‘இதன் பொருள் என்ன தெரியுமா?’ நான் சொன்னேன். ’உள்ளுக்கு வசித்த யாரோ போதும் என எழுந்து எதிர்வினையாற்றியிருக்கிறார்கள்.’

என்னுடைய பைக்குள் இருந்த சில்லுகள் இடம் மாறுவதை என் முதுகு உணர்ந்தது. ஒரு கறள் பிடித்த கம்பி என் முதுகை கீறி எனக்கு ஏர்ப்பு வலி தந்து விடுமா என்ற பயம் வந்தது.

அடுத்த நாள் காலை நான் வீட்டை பூட்டிவிட்டு எதிரே இருந்த கடைக்கு சென்றேன்.

‘இங்கே’ என்று சொல்லி வீட்டுத் திறப்பை மேசையில் வைத்து தள்ளினேன்.’

’நீ போகிறாயா? கணக்குகளை தீர்த்துவிட்டாயா?’

‘ஆம்’ என்று பிளாஸ்டிக் பையை மேசையில் வைத்தபடி பொய் சொன்னேன். ‘நான் உனக்குச் சொன்ன சிலை இதுதான்.’

‘எனக்குத் தேவையில்லை.’

‘நான் உனக்குத் தரவில்லையே.’

‘நீ இங்கே அதை வைக்க முடியாது.’

‘நான் அதை செய்யப் போவதில்லை. அந்தச் சிலையை அந்தப் பைத்தியம் பிடித்த கனடாக்காரி உடைத்துவிட்டாள். நேற்று என் வீட்டுக்கு அவள் வந்து தன் விரலால் ஒரு காரணமும் இல்லாமல் சிலையை உடைத்துவிட்டாள்.

‘நான் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறாய்.’

‘நான் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுடைய கடைக்கு வந்து அவள் பொருள்களை உடைக்கக்கூடும். அவள் தன் ஒரு விரலால் சாமான்கள் அனைத்தையும் உடைப்பாள். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? ஏனென்றால் அதைத்தான் அவள் எனக்குச் செய்தாள்.’

அரைமணி நேரத்துக்கு பின்னர் நான் ஒரு பஸ்சில் ’என்ன நேரம்?’ என்று திரும்பத் திரும்ப கேட்ட ஒரு பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன். நான் அவளுக்கு பலமுறை என்னிடம் கைக்கடிகாரம் இல்லை என்று சொன்னபோதும் அவள் நிறுத்தவில்லை.’

’உன்னிடம் ஒரு செல்பேசி இல்லையா?’

‘இல்லை.’

‘ஏன் இல்லை? என்னுடைய மகளிடம் செல்பேசி உள்ளது.’ அவளுடைய நிறுத்தம் வந்ததும் என்னை உரசிக்கொண்டு இறங்கினாள். அவள் விட்டுப்போன பெரிய காலி இடம், பழைய வெற்றிலை மற்றும் செத்துப்போன மல்லிகை மணத்தால் நிறைந்தது. நான் என்னுடைய பையை அந்தப் பெண் இருந்த ஈரமான, சூடான, அருவருப்பான இடத்தில் வைத்தேன். இரண்டு பேர் வந்து தாங்கள் உட்காருவதற்கு அந்தப் பையை அகற்றச் சொன்னார்கள். நான் மறுத்தேன். அவர்கள் என்னைப் பற்றியும், என் வளர்ப்பு பற்றியும் கூடாத வார்த்தைகளை முணுமுணுத்தபடி அகன்றனர். நான் ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பியபோது என் பையை மறந்துவிட்டது நினைவுக்கு வந்தது. ஏனோ திரும்பிப் பார்த்தேன். ஆட்டோ ஓட்டுநர் ‘ஏதாவது மறந்து விட்டீர்களா?’ என்றார். நான் ‘என்னுடைய பை’ என்று சொன்னேன். ’அதற்குள் காசு இருந்ததா? செல்பேசி இருந்ததா?’

‘என்னிடம் செல்பேசி இல்லை,’ என்றேன்.

யாராவது அந்தப் பையை திறந்து இரண்டு விரல்களை விட்டு மூக்கைச் சுருக்கிக்கொண்டு துளாவுவார்கள். உடைந்த சில்லுகளைப் பார்த்து ’அட மண்’ என்று சொல்லி தங்கள் ஏமாற்றத்தை மறைக்கப் பார்ப்பார்கள். அல்லது சிலையின் உடைந்த கைகள் அல்லது முகத்தைப் பார்த்து ‘அட’ என்பார்கள். பின்னர் அவர்கள் தாங்கள் போகவேண்டிய இடத்துக்குப் போய் அங்கே சந்திப்பவர்களுடன் பேசும்போது அட, பஸ்சிலே என்ன நடந்தது தெரியுமா? நான் என்ன கண்டேன், தெரியுமா? என்பார்கள். பின்னர் ஒரு சமயத்துக்கு எதிரானவர்கள் சிலைகளை உடைத்து பஸ்களில் விடுகிறார்கள் என்ற வதந்தியைக் கிளப்பி விடுவார்கள்.

ஆனால் இதுவெல்லாம் நடக்கும் முன்னர், அவர்கள் அந்தப் பையை போதிய பலத்துடன் வீதியின் கரையை எட்ட வீசுவார்கள். பின்னர் அது பின்னோக்கிச் சென்று மெலிந்துபோன எருமைகளுடனும், முடிக்கற்றைகளுடனும் தொடக்கத்தில் இருந்தே புழுதியில் கலந்திருந்ததைக் காண்பார்கள்.