ஓவியம்: பி.ஆர். ராஜன்
சிறுகதைகள்

அவன் மாதிரி ஒருத்தன்

அ.முத்துலிங்கம்

கெவினிடம் மழைக் கோட்டு இல்லாததால் அவன் அதை அணியவில்லை. அவன் மாட்டியிருந்த மழைக் காலணிகள் மேலே அவனுடைய இரவு ஆடையின் கீழ்ப்பகுதி சுருண்டுபோய் உட்கார்ந்திருந்தது. அவனுடைய இடது தோளின்மேல் தட்டையான மடிக் கணினி ஒன்று தொங்கியது. அது அவனுடைய பள்ளிக்கூடத்தில் தொலைந்த பொருட்களின் பெட்டியில் நாலு மாதமாகக் கிடந்தது. கெவின் அதை தனக்காக மீட்டெடுத்திருந்தான். இப்பொழுது அது ஒருவித தாளத்துடன் அவனுடைய இடுப்பை இடித்தபடி கிடந்தது. அதனுள்ளே அப்படி ஒன்றும் இல்லை, ஆனால் அது அவனுக்கு ஒரு தொழில்முறை தோற்றத்தை கொடுத்தது என அவன் நினைத்தான்.

அந்தச் செவ்வாய் பின்னேரம் கெவின் மாத்திரமே வெளியே வந்திருந்தான். அவன் வீட்டை விட்டு புறப்பட்ட பின்னர் இருள் பரவத் தொடங்கியிருந்தது. மழைத் தூறல் முகத்தில் அடித்தது.

தகப்பனிடம் அவன் தான் வெளியே காற்று வாங்கப் போவதாகச் சொல்லியிருந்தான். தகப்பனுக்கு அது கேட்டதோ என்பது அவனுக்கு நிச்சயமில்லை. காசை மீட்பதற்கு வெற்றுப் போத்தல்களை சேகரிக்கும்போது அவருக்கு ஒன்றுமே கேட்பதில்லை.

ரோட்டின் கரையோரமாக கெவின் நடந்துகொண்டிருந்தான். எப்போதாவது கார்கள் வருகின்றனவா என்று அவன் நிமிர்ந்து பார்த்தான். அவன் நடந்த அரை மணி நேரத்தில் ஒரேயொரு பாரவண்டி மட்டுமே அவனைத் தாண்டி போயிருந்தது.

அவன் அயல் கிராமத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். இவ்வளவு தூரம் அவன் என்றும் சென்றது கிடையாது. உண்மையில் அது அவனுடைய கிராமத்துக்கு அண்மையில்தான் இருந்தது. ஆனால் அவனுடைய தகப்பன் அவனை அந்தப் பக்கம் அழைத்துச் சென்றதில்லை.

‘எதற்காக நாங்கள் அங்கே செல்லவேண்டும்?’ என்று ஒருமுறை கெவின் தேவாலயத்துக்கு பக்கத்தில் இருக்கும் வழிகாட்டிப் பலகையை சுட்டிக்காட்டிக் கேட்டபோது தகப்பன் சொன்னார். ’அது ஒரு முக்கியமில்லாத சின்னக் கிராமம். அங்கே பார்ப்பதற்கு ஒரு நாசமும் கிடையாது. அதைத் தாண்டிப் போவதுதான் சிறந்த காரியம்.’

அந்தக் கிராமத்தின் பெயர்ப் பலகையைப் பார்த்தபோது அது அப்படியொன்றும் சின்னக் கிராமம் அல்ல என்று கெவினுக்கு தோன்றியது. மெல்லிய ஒளிவீசும் விளக்குக் கம்பங்கள்கூட தென்பட்டன. ரோட்டுக்கு நடுவாக வெள்ளைக் கோடுகள் ஓடின. ஆரம்பத்தில் நல்ல இடைவெளிவிட்டு இருந்த வீடுகள் பின்னர் நெருக்கமாக காட்சியளித்தன.

ஒரு வீட்டின் முகப்பில் எழுதிவைத்த எழுத்துகள் கழன்று கொண்டிருந்தன. கோப்பி. புகையிலை. பந்தயம். உள்ளே சில விளக்குகள் எரிந்தன. ஒரு யன்னலில் கையினால் எழுதிய பேப்பர் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. பேப்பரின் எழுத்துக்கள் மற்ற எல்லையை அடையும்போது கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாகிக் காட்சியளித்தன.

 சந்திப்புக்கு ஏற்க திறக்கப்படும்.

ஆனால் அழைப்பதற்கு தொலைபேசி எண் கொடுக்கப்படவில்லை.

கெவின் நுனிக்காலில் நின்றுகொண்டு முன்னே சாய்ந்தான். அவனுடைய நெற்றி, கண்ணாடியில் முட்டி நின்றது. அந்தக் கடை யன்னலை நிறைத்து தலையிலே பின்னல் தொப்பி அணிந்த சீனப் பொம்மைகள் காணப்பட்டன. தோளோடு தோள் ஒட்டிக்கொண்டு அந்தப் பொம்மைகள் ரோட்டை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தன. இரண்டு மேடம் பிலாவின் வடிகட்டிகளுடன் ஒரு சோடி மருத்துவமனை ஊன்றுகோல்கள். அத்துடன் உள்ளே பழைய காலத்து கைராட்டையும், ஒரு மேசைக் கணினியும் அதற்கான விசைப்பலகையும் காணப்பட்டன. எல்லாவற்றுக்கும் விலைக்குறிப்புகள் ஒட்டப்பட்டிருந்தன.

யாரோ தும்மினார்கள். மீண்டும் ஒரு தும்மல். அது ‘நோ’ என்ற சத்தமாக இருந்தது. கெவின் குதிக்காலுக்கு மாறி வீட்டைச் சுற்றி நடந்தான். உயரமான படிக்கட்டுகள் வீட்டின் கதவுக்கு இட்டுச் சென்றன. பாசியில் செய்த ஒரு ரெடிக் கரடியை உச்சிப் படியில் பார்த்தான். அவன் கையை உயர்த்தி, வீட்டைத் தட்டுவதற்கு உபயோகப்படும் சாதனத்தை இறுக்கிப் பிடித்தான். அது பித்தளையில் செய்த காலணிபோல தோற்றம் கொண்டிருந்தது. ஆனால் அவன் அதைக் கதவில் தட்ட முன்னர் வீட்டினுள்ளே வெளிச்சங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணைந்தன.

உலகின் பல மனிதர்களை நீ சந்திக்கவே மாட்டாய். அவன் அந்த பித்தளை காலணியை அது இருந்த அதே இடத்தில் வைத்துவிட்டு பழையபடி ரோட்டுக்கு சென்றான்.

அடுத்த வீட்டுக்கு முன்னர் ஒரு நாரையின் உருவம் நின்றது. அதனுடைய கழுத்தில் இளஞ்சிவப்பு ரிப்பன் ஒன்று தொங்கியது. விளக்குகள் எரியவில்லை. இருந்தாலும் அவன் கதவுக்குக் கிட்டப்போய் சிலமுறை தட்டினான். யாராவது கதவைத் திறந்தால் என்ன சொல்லவேண்டும் என்று திட்டமிட்டதை நினைவுக்குக் கொண்டுவர முயன்றான். அப்போது பின்னுக்கிருந்து ‘நான் எப்படி உதவலாம்?’ என்ற குரல் வந்தது. கெவின் சுழன்று திரும்பியபோது அவனுக்கு முன்னால் சதுரமான தோள்களுடனும், ஒட்டவெட்டிய முடியுடனும் ஒரு மனிதர் நின்றார்.

‘ஏனென்றால் நான் ஸ்டிக்கர்ஸ் விற்கிறேன்…..’

கெவினின் ஈரத்தலைமுடியில் பார்வையைச் செலுத்துவதுபோல அந்த மனிதர் குனிந்தார். அவர் கெவினை மேலும் கீழுமாகப் பார்த்த பின்னர் தன் கோட்டின் சிப்பை இழுத்து மூடினார். அது ஒரு உள்ளூர் விளையாட்டுச் சங்கத்தின் கோட்டு. அதிலே பல்வேறு அனுசரணையாளர்களுடைய சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவற்றிலே சிலதை கெவினால் அடையாளம் காணக்கூடியதாக இருந்தது.

‘அப்ப, உன்னுடைய பெயர் என்னவாக இருக்கும்? அவர் கேட்டார்.

‘கெவின்.’

‘என்ன கெவின்?’

‘கெவின் ஜோர்கென்ஸன்.’

‘உனக்கு பெரிய துணிச்சல்தான்’ அவர் சொல்லியபடியே கைகளை மடித்தார்.

கெவின் அவர் கண்களைப் பார்த்தான். கண்ணோடு கண் பார்ப்பது முக்கியம் என்று அவன் கேள்விப்பட்டிருந்தான். ஆனால் அந்த மனிதனின் கண்கள் விலகின.

’நீ உன் முகத்திலுள்ள இளிப்பை அகற்றிவிடு. இது உனக்கு நல்லதல்ல.’

ஒரு குழந்தை வீட்டினுள்ளே அழுதது; அதைத் தொடர்ந்து ஒரு பெண்ணின் குரல் அழைத்தது. அந்த மனிதர் உடனே உள்ளேபோய் கதவை மெதுவாக சாத்தி பூட்டுகின்ற கிளிக் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து உள்ளே வெளிச்சம் வந்தது.

கெவின் திரும்பி மறுபடியும் ரோட்டை அடைந்தான். மழை இப்போது பலமாக பெய்தது. காலணி கணுக்காலில் எரிச்சல் ஏற்படுத்தியது. அவன் சில குறுணிக் கற்களை காலணியிலிருந்து அகற்றினான்.

கெவின் கிராமம் வழியாக சிறிது தூரம் நடந்து வீடுகள் கட்டுமானம் நடைபெறும் ஓர் இடத்துக்கு வந்து சேர்ந்தான். நடைபாதையை புதிய கேபிள் உருளைகள் நிறைத்திருந்தன. பதியப்பட்ட சில கற்கள் அவன் பாதம் பட்டு அசைந்தன. ஒரு வீடு ஏறக்குறை முடிந்துவிட்டது போல தோன்றியது. வீட்டில் பெரிய யன்னல்கள் பல அமைக்கப்பட்டிருந்தன. அதன் கண்ணாடிகளில், பாதுகாப்பு நிறுவனத்தின் கண்காணிப்பு காமிரா பற்றிய விவரங்கள் விளம்பரங்களாக ஒட்டப்பட்டிருந்தன. தோட்டத்தில் சின்னச் சாக்குகளில் பல்லாண்டுகள் நின்றுபிடிக்கும் கன்றுகள் நடுகைக்காக காத்திருந்தன. தட்டைக் கற்களும், தரையைக் கெட்டியாக்கும் சாதனங்களும் நிறைந்திருந்தன. அது ஓர் இரண்டு மாடிக் கட்டடம். சில விளக்குகள் எரிந்தன, வாசலில் ஒரு பூசணி விளக்கில் சுடர் மின்னியது. அஞ்சல் பெட்டியில் மூன்று வரிகள் எழுதியிருந்தன.

மெழுகுவர்த்தி காட்சி அறை

அத்துடன் ரொன்பேர்க் மாட்ஸென் குடும்பம்

அவர்களுடைய முதல் பெயர்கள் பிரிட்ஜிட் மற்றும் ஹெண்டிரிக். ஒவ்வொரு வருடமும் சில பெட்டிகளில் மெழுகுவர்த்திகளை அவர்கள் பள்ளிக்கூடத்துக்கு கிறிஸ்துமஸ் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்கள்.

அவன் கதவுக்கு கிட்டச் சென்று தன் முகத்து தண்ணீரை கையினால் வழித்தான். தன் பற்களைச் சரி செய்துகொண்டு அழைப்பு மணியை அடித்தான். ஒரு சிக்கலான மெல்லிசை உள்ளே ஒலித்தது ஆனால் ஒருவரும் கவனித்ததாக தெரியவில்லை.

மீண்டும் ஒரு முறை விரலினால் மணியை அழுத்திப் பிடித்தபடி நின்றான். பழைய படி இசை ஒலித்தது, ஆனாலும் ஒரு பயனுமில்லை.

சிறிது நேரம் கழித்து, அவன் பின்னுக்கு காலடி வைத்து திரும்ப எத்தனித்தபோது கண்ணாடிக்கு பின்னால் ஒரு விளக்கு எரிந்தது.

ஒரு பெரிய நிழல் விழுந்த கணம், கெவினுடைய கன்னங்களில் ஒருவித கூச்ச உணர்வு ஏற்பட்டது. சமையல் மேலாடை அணிந்த ஒரு பெண் அவன் முன்னே நின்றார்.

‘ஆம்’ என்றார் பெண்.

‘ஆம்’ கெவினால் அந்த வார்த்தையைத்தான் சொல்ல முடிந்தது.

’விளம்பரமா?’

‘விளம்பரம்’ அவன் சொன்னான்.

‘அவற்றை அங்கே அஞ்சல் பெட்டியில் போட்டுவிடுங்கள்.’

அஞ்சல் பெட்டியை சைகை மூலம் காட்டிவிட்டு உள்ளே போகத் திரும்பினார்.

‘உண்மையில் இது விளம்பரம் இல்லை.’

ஒரு நறுமணம் உள்ளேயிருந்து வந்தது. சத்தம் வெளியே வராமல் அந்த மணத்தை உள்ளே இழுத்தான். அது கறுவாவும், வேறொன்றும்போல இருந்தது. அவனால் அந்தப் பெண்ணைத் தாண்டி பளபளக்கும் தரை ஓடுகளைக் கொண்ட சப்பாத்து அறையையும் , மேலே போகும் நீளமான படிக்கட்டுகளையும் பார்க்க முடிந்தது.

’அப்ப வேறு என்ன வேண்டும் உனக்கு?’

பிரிட்ஜிட் தன் தலைமுடியை காதுக்கு பின்னால் தள்ளினாள்.

‘என்னவென்றால், அதாவது … ஒரு செக்கண்ட் பொறுங்கள்.’ கெவினுடைய கை அவனுடைய மடிக்கணினியை கண்டுபிடித்தது. கரகரவென்று சத்தமிட்ட வெல்கிரோவை இழுத்து கையை நுழைத்து பிளாஸ்டிக் அட்டையை வெளியே எடுத்தான்.

‘இதோ. இந்த குளிர் நாளில் இவற்றைத் தனித்தனியாகப் பிரிப்பது சிரமம்’ என்றான்.

‘இந்தக் குளிர் நாளில் நீ கொஞ்சம் கதகதப்பான் உடுப்பை அணிந்திருக்கவேண்டும்.’

’இல்லை, நான் சேமமாகத்தான் இருக்கிறேன்,’ அவன் முதிர்ந்த குரலில் சொன்னான். ’நான் வெளியே புறப்பட்டது இந்தப் பொருட்களை விற்பதற்குத்தான், நீங்களே பாருங்கள்.’

‘அவை என்னவாயிருக்கும்?’

‘இதோ ஸ்டிக்கர்ஸ்.’

‘ஸ்டிக்கர்ஸ். ஒட்டிகளா?’

‘ஆமாம்.’

‘எதற்கு?’

ஒவ்வொரு தாள் விற்கும்போதும் உங்களுக்கு ஐந்து குரோனர் காசு கிடைக்கும். மீதி ஒரு நல்ல காரியத்துக்கு பயன்படும். அவனுக்கு இரண்டு கட்டு தாள்கள் கொடுத்திருந்தார்கள். ஆனால் அத்தனை பேர் அந்த சுற்றுப்புறத்தில் வசிக்கவில்லை.

‘நீங்கள் அவற்றை கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளில் ஒட்டலாம்,’ அவன் சொன்னான்.

அவன் அவருக்கு ஒரு தாளை நீட்டினான். அவர் அதை பார்த்துவிட்டு அவனிடம் திருப்பிக் கொடுத்தார்.

‘கிறிஸ்துமஸ் வருவதற்கு இன்னும் பல நாட்கள் இருக்கின்றனவே.’

’48 நாட்கள்.’

‘ஓ, அத்தனை நாட்கள்.’

‘நீங்கள் சாதாரண கடிதங்களிலும் அவற்றை ஒட்டலாம்.’

‘ஓ, அப்படியா.’

‘உங்கள் விருப்பப்படியே செய்யலாம்.’

அவன் அசைவதாகக் காணவில்லை. இறுதியில் பெண் தலையை திருப்பி வீட்டை நோக்கி கத்தினார்.

‘ஹெண்டிரிக்.’

 ஒரு செக்கண்டுக்கு ஒருவரும் பேசவில்லை. மேலேயிருந்து இசை வந்தது. ஒரு மனிதன் அந்த இசையுடன் சேர்ந்து பாடினான்.

‘ஹெண்டிரிக்’ மீண்டும் கத்தினார். ‘ஹெண்டிரிக், அந்த சத்தத்தை குறையுங்கள். எங்களிடம் சில்லறைக் காசு இருக்கிறதா? எங்கள் கிறிஸ்துமஸ் அட்டைகளில் ஒட்டுவதற்கு ஏதோ ஒன்று. அதைக் குறையுங்கள், அப்பொழுதுதான் நான் பேசுவது கேட்கும். அல்லது கீழே வாருங்கள். ஒரு தாளில் இருக்கும் ஒட்டிகளுக்கு கொடுக்க பணம் தேவை. ஒரு பையன் இங்கே நிற்கிறான்.’

’ஒரு தாளின் விலை 20 குரோனாக்கள்.’ கெவின் சொன்னான். ‘அது மிக நல்ல காரியத்துக்கு பயன்படும்.’

‘ஹெண்டிரிக், ஒரு தாளின் விலை 20 குரோனாக்கள்தான்.’

‘சரி,’ ஒரு குரல் சொன்னது, அத்துடன் இசையும் நின்றது. ஒரு பெருமூச்சும், ஒருவர் படிகளில் இறங்கும் பலத்த சத்தமும் கேட்டன. கட்டம் போட்ட சேர்ட் அணிந்த ஒரு மனிதர் கண்ணில் பட்டார். அவர் கெவினை விசாரிப்பது போல பார்த்துவிட்டு தன் மனைவியின் பக்கம் திரும்பினார்.

’எங்களிடம் 20 குரோனாக்கள் இருக்கின்றனவா?’ மனைவி கேட்டார்.

‘எதற்கு?’

‘இந்தப் பையன் தன் கைச்செலவுக்கு சிறிது பணம் சேர்க்கிறான்,’

ஹெண்டிரிக் மழைக்குள் கையை நீட்டிச் சோதித்தார்.’

‘என்ன மோசமான காலநிலை,’ அவர் சொன்னார்.

‘நல்ல காலமாக காயப்போட்ட துணிகளை உள்ளே எடுத்துவிட்டோம்.’

’கோடைகாலம் எப்பொழுதோ முடிந்துவிட்டது,’ கெவின் சொன்னான். ஒரு மழைத்துளி அவன் கழுத்தில் இறங்கியதை அவனால் உணர முடிந்தது.

‘பிரிட்ஜிட், அந்த குக்கீக்களை ஏன் வெளியே எடுக்கக்கூடாது,’ ஹெண்டிரிக் சொன்னார்.

‘அதுக்கு இன்னும் நேரம் இருக்கு.’

‘போ, போய் எடு.’

அந்தப் பெண் அவனைத்தாண்டி உள்ளே போனார்.

‘இதில் கிடைக்கும் பணம் …’ கெவின் ஆரம்பி்த்தான். ஆனால் பாதியிலேயே அவன் குரல் தடைபட்டது. பிரிட்ஜிட் திரும்பி வந்துவிட்டார். அவர் கையில் ஒரு தட்டும் அதன் மேல் குக்கீக்களும் காணப்பட்டன. கையை மெலிதாக ஆட்டினார். தட்டிலே ஒட்டியிருந்த குக்கீக்கள் விடுபட்டு அசைந்தன.

‘ஒன்றை எடு,’ பிரிட்ஜிட் கெவினிடம் சொல்லியபடி தன் கணவனைப் பார்த்தார்.

’ஒன்றே ஒன்று மட்டும்தான்,’ ஹெண்டிரிக் சொன்னார்.

கெவினுடைய கைவிரல்கள் குக்கீக்களின் மேல் அங்குமிங்கும் சிறிது அசைந்த பிறகு ஒரு நடுத்தரமான குக்கீயை தேர்வு செய்தன. ’நன்றி,’ என்று சொல்லிவிட்டு குக்கீயை வாய்க்குள் எறிந்தான்.

மழையில் நனையாமல் சிறிது முன்னுக்கு நகர்ந்தான். சூடாக்கப்பட்ட தரையிலிருந்து மேலெழும்பிய வெப்பக் காற்று அவன் முகத்தில் வீசியது.

‘எனக்கு உன்னை யாரென்று தெரியும்,’ ஹெண்டிரிக் சொன்னார்.

பிரிட்ஜிட் தன் கணவனை ஆச்சரியத்தோடு பார்த்தார்.

கெவின் அவர்களைத் தனக்குத் தெரியும் என்று சொல்ல நினைத்தான் ஆனால் அவன் வாயில் குக்கீ தடையாக இருந்தது.

’எனக்கு இதில் சந்தேகமே இல்லை,’ ஹெண்டிரிக் சொன்னார். பிரிட்ஜிட் ஏதாவது சொல்லவேண்டும் என எதிர்பார்த்தார். ‘உனக்குத் தெரியவில்லையா?’

அவர் கெவினை உற்றுப் பார்த்தார்.

‘அதே ஜோர்கென்ஸனுடைய மகன்,’ ஹெண்டிரிக் சொன்னார்.

பிரிட்ஜிடிடம் இருந்து மூச்சுத் திணறல்போல காற்று வெளியேறியது.

‘அப்படித்தான், இல்லையா?’ ஹெண்டிரிக் சொன்னார், பின்னர் கெவினுடைய ஆடைகளை உற்றுக் கவனித்தார். தன் கைவிரல்களால் சாப்பிடும் வாயை சுட்டிக் காண்பித்து தான் பேசமுடியாத காரணத்தை கெவின் உணர்த்தினான்.

இறுதியில் உணவை விழுங்கி முடித்துவிட்டு பெருமையோடு கெவின் சிரித்தான்.

‘ஆம், அது நான்தான்.’

‘எனக்கு அது தோன்றவேயில்லை,’ பிரிட்ஜிட் சொன்னார். முதலில் கெவினையும் பின்னர் தன் கணவனையும் பார்த்தார்.

‘உங்களுக்கு என் அப்பாவைத் தெரியுமா?’ கெவின் கேட்டான்.

‘ஓ, எங்களுக்கு உன் அப்பாவைத் தெரியாது,’ முகபாவம் மாறிப்போக ஹெண்டிரிக் சொன்னார். ‘ஆனால் அவர் எப்படிப்பட்டவரென எங்களுக்குத் தெரியும்.’

கெவின் ஒன்றும் புரியாமல் விழித்தான்.

’இங்கே அவர் வாழ்ந்த காலங்களில்,’ ஹெண்டிரிக் விளங்கப்படுத்தினார்.

’இங்கேயா?’ என்றான் கெவின்.

‘ஆமாம்,’ என்றார் ஹெண்டிரிக்.

‘ஆனால் அவர் இங்கே வாழ்ந்ததே கிடையாது.’

அவர்கள் எல்லோரும் மௌனமானார்கள்.

‘நீ ஜான் தானே,’ ஹெண்டிரிக் ஓர் இடைவெளி கடந்து சொன்னார்.

‘ஜான் அல்ல ஜொன்,’ கெவின் சொன்னான்.

‘ஜொன்.’

‘ஆம், ஜொன், அவன் என்னுடைய தம்பி.’

‘ஆம், உனக்கு ஒரு தம்பி இருக்கவேண்டும்,’ பிரிஜிட்டை மறுபடியும் பார்த்தபடியே ஹெண்டிரிக் சொன்னார்.

‘ஒரு வழியில் பார்த்தால் இரண்டு. என்னுடைய அப்பாவின் புதுச் சிநேகிதியின் மகனையும் கணக்கில் சேர்க்கவேண்டும். ஆனால் அவர்கள் தாய்லாந்தில் பட்டாயா என்னும் இடத்தில் வசிக்கிறார்கள்.’

‘அப்படியா,’ என்று கெவின் ஒரு நகைச்சுவையான விசயம் சொன்னதுபோல ஹெண்டிரிக் சிரித்தார்.

‘நீங்கள் அங்கே போயிருக்கிறீர்களா?’ என்று கெவின் தன் உடுப்பின் முன்பக்கத்தை நீவியபடி கேட்டான்.

‘இல்லை, நாங்கள் அங்கே போகவில்லை,’ என்று ஹெண்டிரிக் அவசரமாகச் சொன்னார்.

‘நானும் போகவில்லை,’ கெவின் சொன்னான். அவனுடைய தலைக்குள் தகப்பனின் குரல் கேட்டது: ஒருநாள் நாங்கள் இருவரும் அங்கே போவோம். ஒரேயொரு பிரச்சினைதான். நாங்கள் எல்லோரும் போவதானால் செலவு அதிகமாகும்.

இழுப்பறை பெட்டகத்தின் மேல் எரிந்த மெழுகுவர்த்தி அணைந்துபோனது. பிரிட்ஜிட் இழுப்பறையை திறந்து ஒரு நீண்ட விளக்கு கொளுத்தியை எடுத்து மெழுகுவர்த்தியை மறுபடியும் பற்ற வைத்தார்.

‘அவை அருமையான மெழுகுவர்த்திகள்,’ கெவின் சொன்னான்.

‘நாங்கள் அவற்றை உற்பத்தி செய்கிறோம்,’ ஹெண்டிரிக் சொன்னார்.

 ’எனக்குத் தெரியும்.’

‘அரைவாசி கிராமத்துக்கு இது வேலை வாய்ப்பு கொடுக்கிறது,’ ஹெண்டிரிக் சொன்னார். ‘ஆனால் உன்னுடைய பெயர் ஜொன் இல்லையென்றால் உன்னுடைய உண்மைப் பெயர் என்ன?’

‘கெவின் ஜோர்கென்ஸன்.’

‘கெவின்,’ ஹெண்டிரிக் சொன்னார்.

‘ஆம்.’

‘பிரிட்ஜிட்,’ அவருடைய தோளில் கையை வைத்துக்கொண்டு ஹெண்டிரிக் சொன்னார், ‘கெவினுக்கு இன்னொரு குக்கீ கொடுத்தால் என்ன?’

பிரிட்ஜிட் குக்கீ தட்டத்தை எடுத்து நீட்டினார். கெவின் இன்னொரு குக்கீயை தேர்ந்தெடுத்து தன் கால்சட்டை பையினுள் வைத்தான்.

‘மிக்க நன்றி,’ அவன் சொன்னான்.

‘இன்னும் இரண்டு, மூன்று எடுக்கலாமே.’

கெவின் மறுபடியும் குக்கீ தட்டத்தை ஆராய்ந்தான்.

‘வேண்டுமென்றால் எத்தனை வேண்டுமோ அத்தனையும் எடுக்கலாம்,’ என்றார் ஹெண்டிரிக். கெவின் முதலில் ஒன்று, இரண்டு, மூன்று என எடுத்து கால்சட்டை பையை நிரப்பிக்கொண்டான்.

’அவ்வளவுதானா? இன்னும் எடுக்கலாமே,’ ஹெண்டிரிக் சொன்னார்.

‘நன்றி, பரவாயில்லை.’

கெவினுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக ஹெண்டிரிக்குக்கு சொல்ல இருந்தது.

‘நீ அப்படியே அச்சொட்டாக இருக்கிறாய்,’ அவர் சொன்னார்.

‘அச்சொட்டாக?’

‘ஆமாம். நீ உன்னுடைய அப்பாவைப் போலவே இருக்கிறாய். ஒருவர் இன்னொருவர்போல அச்சொட்டாக இருப்பது அற்புதம்தான்,’

கெவினுடைய தகப்பன் உயரமாகவும் அடர்த்தியான ரோமத்துடனும் இருப்பார். நெற்றியிலே சுருக்கம் இருக்கும். ஓய்வெடுக்கும்போது அது மறைவதில்லை. அவனுடைய தகப்பனின் ஐந்து ஆபாச காணொளித் தட்டுகள் மெத்தைக்கு கீழே மறைத்து வைக்கப்பட்டிருக்கும். படுக்கைக்கு பக்கத்தில் ஒரு துடுப்பும் இருக்கும். அவனுடைய தகப்பன் சற்று நொண்டிக்கொண்டுதான் நடப்பார். ஒவ்வோர் இரவும் கழுவுநீர் தொட்டியில் சளியை துப்புவார் ஆனால் அதை கழுவமாட்டார். உடல் குறைபாடு இருந்தாலும் ஊதியத்துக்கு முழு வேலை செய்ய வேண்டும் என்பதால் அவர் அரசாங்கத்தை வெறுத்தார். அவருடைய ராசி துலாம். அவனுடைய தகப்பனுக்கு பச்சை கண்கள்.

‘எனக்கு என்னுடைய அம்மாவின் கண்கள்,’ என்று கெவின் சொல்லியபடி தன்னுடைய கண்களை விரித்து ஹெண்டிரிக்குக்கும் பிரிட்ஜிட்டுக்கும் காட்டினான்.

‘உன்னுடைய மூக்குத்தான் உன்னை காட்டிக்கொடுக்கிறது,’ தன்னுடைய மூக்கைச் சுட்டுவிரலால் தொட்டபடி ஹெண்டிரிக் சொன்னார். ’அவர் இப்பொழுது என்ன செய்கிறார்?’

‘இப்பொழுதா?’

‘ஆம், இப்பொழுதுதான்.’

‘நான் அவரை தொலைபேசியில் அழைக்கலாம். ஆனால் அவர் அழைப்பை ஏற்கமாட்டார் என்றே நினைக்கிறேன்.’

‘நிச்சயமாக?’

‘ஏனென்றால் வீட்டில் ஒரு மின்னூட்டிதான் உள்ளது. எங்கள் நாய் அதைக் கடித்து விடுகிறது.’

‘அது நல்லதில்லை.’

‘இல்லை, அது எல்லாவற்றையும் கடித்து வைக்கிறது.’

‘நாய்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும், அல்லாவிட்டால்..’

‘அல்லாவிட்டால் என்ன நடக்கும்?’ பிரிட்ஜிட் கேட்டார்.

‘அல்லாவிட்டால் நாயை வைத்திருக்கக்கூடாது.’

‘அது கொஞ்சம் கற்றுக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான். அது இன்னும் குட்டிதானே,’ கெவின் சொன்னான்.

பிரிட்ஜிட் ஏதோ சொல்ல நினைத்தார் ஆனால் அதற்கிடையில் கணவன் முந்திவிட்டார்.

‘உன்னுடைய அப்பா பேப்பரில் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்தேன். அது என்ன வாசகம்? மறந்துபோய்விட்டது.’

‘மாட்டுக்கு குளம்பை வெட்டவல்ல

என்னை நாடுங்கள் நான் புதிதல்ல,’ கெசின் பாடினான்.

‘அதேதான். அந்த வாசகத்துக்கு விலையே இல்லை,’ ஹெண்டிரிக் சொன்னார்.

கெவின் மகிழ்ச்சியில் சிரித்தான்.

‘என்னுடைய அப்பா கூடுதல் வருமானதுக்காக செய்யும் சில்லறை வேலை அது. அவர் ஒரு நிரந்தர வேலையை தேடி அலைகிறார். ஆனால் வேலை கிடைப்பது ஒன்றும் சுலபமாயில்லை.

‘அப்படியா?’

‘ஆமாம், முதலாளிகள் அப்பா அனுப்பும் விண்ணப்பங்களுக்கு ஐந்து நிமிடம் செலவழித்து பதில்கூடப் போடுவதில்லை.’

’பதிலே போடுவதில்லை?’

‘இல்லை, அவர்கள் பெருமை பிடித்தவர்கள்.’

‘ போதிய வேலை இருக்கு உண்மையான தேடல் கொண்டவர்களுக்கு,’ ஹெண்டிரிக் சொன்னார்.

ஹெண்டிருக்குக்கு சொந்தமான நீண்ட புகைக்கூடுகள் கொண்ட தொழிற்சாலையில் அப்பா வாரத்துக்கு 20 மணிநேரம் மெழுகுவர்த்தி செய்வதை கெவின் கற்பனைசெய்து பார்த்தான். அப்பா தொழிற்சாலை உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்து எப்படி வேலை நாள் சென்றது என்று தனக்கு சொல்வதை கற்பனைசெய்து பார்த்தான். மாதம் ஒருமுறை சம்பளம் கிடைத்து தன்னை சினிமாவுக்கு தகப்பன் அழைத்துப் போவதையும் கெவின் நினைத்துப் பார்த்தான்.

‘அதுதான் அவர் பழையபடி காரை ஓட்டிச் செல்கிறார், அப்படித்தானே,’ ஹெண்டிரிக் சொன்னார். ’அவர் இப்போது வர்த்தக லைசென்ஸ் பிளேட் பொருத்திய ஒரு பழுப்பு நிற லாடா காரை ஓட்டுவதாகவும், அதிலிருந்து பெரிய சத்தத்துடன் இசை வருவதாகவும் கேள்விப்பட்டேன். அப்படியா?’

‘ஆம், அந்தக் காரில் உயர்தர ஸ்டீரியோ பொருத்தப்பட்டிருக்கிறது,’ கெவின் சொன்னான்.

‘அது சரிதான். இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரதான வீதியில் காரைக் கண்டிருக்கிறார்கள்.’

‘யார் சொன்னது?’ பிரிட்ஜிட் கேட்டார்.

‘தச்சுவேலை பார்க்கும் ஸ்வென் சொன்னார்.’

‘நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா?’ பிரிட்ஜிட் கைகளை நெஞ்சுக்கு மேல் கட்டிக்கொண்டு சொன்னார். ’ஸ்வென் தன் வேலையை பார்க்கவேண்டும். அந்தப் பையனை இதற்குள் இழுக்கக் கூடாது. அவன் பாவம், என்ன குற்றம் செய்தான்?’

ஹெண்டிரிக் ஒரு கணம் அவரை பரிசீலிப்பதுபோல உற்றுப் பார்த்தார்.

‘தகப்பனுக்கு அவன் பொறுப்பல்ல,’ பிரிட்ஜிட் சொன்னார்.

‘உங்களுக்கு சம்மதமானால் நான் இன்னொரு முறை வருகிறேன். நாளைக்கு இதை தள்ளிப்போடுவதில் ஒரு பிரச்சினையும் இல்லை,’ கெவின் சொன்னான்.

‘உனக்கு என்ன வயது?’ ஹெண்டிரிக் கேட்டார்.

’பத்து,’ என்றான் கெவின்.

’பத்து,’ ஹெண்டிரிக் வேறு யாரோவுடைய குரலில் சொன்னார்.

‘ஏறக்குறைய பத்து.,’ கெவின் சொன்னான். ‘உண்மையில் ஒன்பதே முக்கால். அடுத்த பிப்ரவரி எட்டாம் தேதி எனக்கு பத்து வயது நிறைவாகும்.’

‘அப்பொழுது உனக்கு விருந்து கொண்டாட்டம் இருக்கும்.’

‘ஆம்,’ என்று கெவின் சொன்னான். அவனுடைய கன்னங்கள் சூடுபிடிப்பதை அவனால் உணர முடிந்தது. அவனுடைய படுக்கைக்கு கீழே ஒரு பிறந்தநாள் பெட்டி இருந்தது. அதற்குள் போன வருடக் கொண்டாட்டத்தில் மிஞ்சிய குட்டி குடைகள் பொருத்திய உறிஞ்சு குழாய்கள் இருந்தன, எல்லாமாக பதினைந்து. அவற்றை எப்படிப் பங்கிடுவது என மூளையால் கணக்குப் போட்டான். தாத்தா, அவரை யாராவது காரில் அழைத்துவர முடியுமானால். அப்பாவும் ஜொன்னும். அம்மா, அவர் அப்பாவுடன் சமாதானமாய் இருந்தால். ஹெண்டிரிக்கும் பிரிட்ஜிட்டும். கெவின் அவர்களைப் பார்த்து சிரித்தான். பிரிட்ஜிட் சிரித்தார்.

’அது பெரிய கொண்டாட்டமாக இருக்காது,’ கெவின் சொன்னான்.

‘ஏன்,’ என்றார் ஹெண்டிரிக்.

’இந்த தடவை முடியாது. பள்ளியில் அரைத் தவணை விடுமுறை இருக்கிறது. ஆட்கள் கிராமத்துக்கு வெளியே போய்விடுவார்கள். அது தவிர அப்பாவுக்கு தொல்லையாக இருக்கும். ஆனாலும் அது நல்ல நாளாகவே இருக்கும்,’

‘என்ன தொல்லை? மகனின் பிறந்தநாள்?’

‘அவருக்கு விருப்பம் இல்லாமல் இல்லை.’ கெவின் தன்னுடைய காலை காலணிக்குள் உதறினான். நீண்ட நேரம் நின்றதால் அது விறைத்துப் போய்விட்டது.

‘இதை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ ஹெண்டிரிக் பிரிட்ஜிட்டைப் பார்த்து சொன்னார். ’அவருடைய சொந்த மகனின் பிறந்தநாள்.’

‘அப்பாவுக்கு அடிபட்ட அதிர்ச்சியில் மூளைப் பாதிப்பு இருக்கிறது.’

‘அப்படியா?’

‘இனிப் போதும்,’ பிரிட்ஜிட் சொன்னார்.

‘அத்தோடு அவருக்கு ஆடும் முழங்கால்கள்,’ கெவின் சொன்னான். ‘பாவம். நடமாடுவது அவருக்கு சுலபமில்லை.’

இருட்டிலே காற்று வேகம் பிடித்து அடித்தது. தூரத்திலே பெரும் சலசலப்பு கேட்டது. ஏதோ பெரிய சாமான் கீழே விழுந்து உடைந்து சிதிலமாகும் சத்தம். ஒருவேளை கூரை ஓடாகவோ, சாடிலைட் கிண்ணமாகவோ இருக்கலாம். புல்தரையில் தண்ணீர் நிரம்பி குட்டைகள் தோன்றிவிட்டன. மழை பாளம் பாளமாக விழுந்தது.

‘மழைக்குள் நிற்கவேண்டாம். நீ முழுக்க நனைந்துபோவாய்,’ அப்படி பிரிட்ஜிட் சொல்லியபடி கெவினுடைய கையைப் பிடித்து கொஞ்சம் முன்னே இழுத்தார். ’நீ விற்கும் தபால் தலைகள் பற்றி,’ என்றார் பிரிட்ஜிட். ’அவை தபால் தலைகள் அல்ல. அவை ….’

‘யோசித்துப் பார்த்தால் பத்து வருடத்துக்கு மேலாக இருக்கும்,’ என்று ஹெண்டிரிக் சொன்னார்.

பிரிட்ஜிட் சொன்னார், ‘ஹெண்டிரிக் நீங்கள் உள்ளே போனால் நல்லது என்று நினைக்கிறேன்.’ அவரை வாசல் பக்கத்திலிருந்து அகற்றி மூட்டைகட்டி அனுப்புவதுபோல பிரிட்ஜிட் விளையாட்டாக நடித்தார். ஆனால் ஹெண்டிரிக் அசையவில்லை.

’பிலிப்,’ என்று அமைதியாகவும் யோசனையுடனும் சொல்லியபடியே தலையை ஆட்டினார்.

‘ஹெண்டிரிக் உள்ளே’ என்றார் பிரிட்ஜிட்.

‘பிலிப்,’ ஹெண்டிரிக் சொன்னார்.

’ஆமாம் பிலிப்தான்.’ ஹெண்டிரிக் ஏதோ தனக்குத்தான் அந்தப் பெயர் சொந்தமானதுபோல வெடுக்கென்று கத்தினார்.

‘என்ன அழகான பெயர்,’ ஏதோ சொல்லவேண்டும் என்று ஹெண்டிரிக்குக்கு தோன்றியது ஆனால் என்ன என்று தெரியவில்லை.

‘அவன் கைப்பந்து பயிற்சிக்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான்’ ஹெண்டிரிக் சொன்னார். ’அவனுக்கு ஐந்து நிமிடம் எடுத்திருக்கும். காலநிலை நல்லாயிருந்த ஒரு சாதாரண இரவு அது

கெவினுக்கு தான் மூச்சு விடுவது கேட்டது.

‘அது ஒரு விபத்து,’ பிரிட்ஜிட் சொன்னார்.

கெவின் தன்னுடைய கால்சட்டை பைக்குள் கையை நுழைத்து ஒரு குக்கீயை எடுப்பதற்கு நினைத்தான், ஆனால் செய்யவில்லை.

‘விபத்து?’ ஹெண்டிரிக் சொன்னார். ‘அதற்கு பெயர் விபத்தா?’

‘ஆம்,’ பிரிட்ஜிட் சொன்னார். அவர் பேசியது அழுவது போலவே கேட்டது. ’மோசமான அந்த விபத்தைப் பற்றி நாங்கள் இப்போது பேசத் தேவையில்லை, ஹெண்டிரிக்.’

‘குடிபோதையில் புத்தி தடுமாறி இருக்கும்போது காரின் ஓட்டு வளையத்தை தொடலாமா?’

‘ஹெண்டிரிக்,’ பிரிட்ஜிட் அவருடைய கையை எடுத்து வைத்து இறுக்கிப் பிடித்துக்கொண்டு மறுபடியும் சொன்னார். ’அந்தப் பையனுக்கு பாவம் ஒன்றுமே தெரியாது என்பது நிதர்சனமான உண்மை.’

‘எதைப் பற்றி,’ என்றான் கெவின்.

‘எங்கே அந்த ஸ்டிக்கர்களைப் பார்ப்போம்,’ பிரிட்ஜிட் அவனைப் பார்த்து சிரித்தபடியே சொன்னார். அவன் ஏறக்குறைய அதை மறந்தே விட்டான்.

‘அதை விபத்து என்று நான் சொல்லமாட்டேன்,’ ஹெண்டிரிக் தொடர்ந்தார்.

அப்பொழுது கெவின் அவனுடைய தகப்பன் தொலைக்காட்சியில் அப்படி ஒரு சம்பவம் காட்டப்படும்போது சொல்லும் வாசகத்தை சொன்னான். ‘என்ன பயங்கரம்?’

‘நீ அப்படியா நினைக்கிறாய்?’

பிரிட்ஜிட் அவரை வீட்டின் உள்ளே தள்ளுவதற்காக அவருடைய நெஞ்சில் தன் கையை வைத்தார்.

‘நான் அந்தப் பையனுடன் கதைக்கிறேன். அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது,’ என்றார் ஹெண்டிரிக்.

‘இதைப் பற்றி பேச உரிமையில்லை.’

‘நான் முன்பு சொன்னதுபோல, ஒரு நல்ல காரியத்துக்காக இதைச் செய்கிறேன்,’ என்று மடிக்கணினி பையை தட்டியபடி கெவின் சொன்னான்.

ஹெண்டிரிக் மிகக் கனமாக மூச்சை விட்டார். பின்னர் மெதுவாக எல்லாம் அமைதியாகியது.

’அது சரி, அது என்ன நல்ல நோக்கத்துக்கான நன்கொடை?’ ஹெண்டிரிக் கேட்டார்.

‘எனக்கு நோக்கம் மறந்துபோய்விட்டது,’ கெவின் சொன்னான்.

‘நினைவில்லையா?’

‘குழந்தைகள் சம்பந்தப்பட்டதா?’ பிரிட்ஜிட் சொன்னார்.

‘ஆமாம்.’

ஹெண்டிரிக் வெளியே தோட்டத்தைப் பார்த்தார்.

‘இதுதான் அந்த ஸ்டிக்கர்கள்,’ பிளாஸ்டிக் கவரில் அவற்றை வைத்து ஹெண்டிரிக்கிடம் கொடுத்தான் கெவின்.

ஹெண்டிரிக் அவற்றை பார்த்தார். ‘உண்மையில் இவை தேவையா என்பது எனக்கு தெரியவில்லை.’

அவற்றை திரும்ப கவரில் போடாமலே கெவினிடம் கொடுத்தார். மழை பெய்தபடியால் கலர்கள் கரையத் தொடங்கின. தேவதைகள் மேகத்தில் மறைந்தனர். புகைக்கூடு கூட்டுபவர்கள் கறுப்பு திட்டாக மாறி சுண்டெலியை காணாமல் செய்தனர். மீதமான கறுப்பு வண்ணம், நட்சத்திரங்களையும், கிறிஸ்துமஸ் இதயங்களையும், மரங்களையும் மாற்றியது.

ஹெண்டிரிக் உள்ளே போய்விட்டு திரும்பினார்.

‘உனக்கு இன்று அதிர்ஷ்டம்தான். அவருடைய கையில் கடுதாசி உருளை ஒன்று இருந்தது.

அதை கையினால் அமத்தியபோது ஒன்று , இரண்டு என பல நாணயங்கள் வெளியே வந்து விழுந்தன. எல்லாமாக 16 நாணயங்களை கெவின் நீட்டிய கையில் கொடுத்தார்.

‘உன்னுடைய ஸ்டிக்கர் அனைத்தையும் நாங்கள் எடுக்கிறோம்.’

’முழுவதையுமா?’ என்றான் கெவின். எல்லாமே ஒளிவிடும் ராணியின் தலை போட்ட பளபளக்கும் நாணயங்கள்.

‘ஆமாம், முழுவதையும்தான்,’ என்றார் ஹெண்டிரிக்

‘மிக்க நன்றி’ என்றபடி நாணயங்களை பையினுள் வைத்தான்.

’ஒரு நிபந்தனை, இதற்குப் பதிலாக நீ ஓர் உதவி செய்யவேண்டும்,’ என்றார் ஹெண்டிரிக்.

‘நிச்சயமாக,’ என்றான் கெவின்.

‘உன் அப்பாவுக்கு ஹெண்டிரிக் ரொன்பேர்க் மாட்ஸெனிடம் இருந்து ஹலோவென்று சொல்லவேண்டும்.’

‘அது தேவையில்லை,’ என்றார் பிரிட்ஜிட்.

‘நீ இதற்குள் நுழையவேண்டாம்,’ என்றார் ஹெண்டிரிக்.

பிரிட்ஜிட் கோபத்துடன் நிலத்தை உதைத்தபடி நடந்து உள்ளே சென்றார்.

‘ஹெண்டிரிக் ரொன்பேர்க் மாட்ஸென்.’ அந்தப் பெயரை மெதுவாகவும் நிதானமாகவும் சத்தம் வர உச்சரித்தார். இந்தப் பெயர் சரியாகக் கேட்டதா?’

‘ஆம், ஹெண்டிரிக் ரொன்பேர்க் மாட்ஸென்,’ என்றான் கெவின்.

‘சரி, இதுதான் ஒப்பந்தம்,’ என்றார் ஹெண்டிரிக்.

 ’சரி, நான் அப்படியே செய்கிறேன். உங்கள் வியாபாரத்துக்கு நன்றி. இனிய மாலையாக அமையட்டும்,’ என்றான் கெவின்.

‘மகிழ்ச்சி,’ என்றார் ஹெண்டிரிக்.

ஒரு கணம் சாத்தப்பட்ட கதவுக்கு முன்னே இன்னும் ஏதோ நடக்க இருக்கிறது என்பதுபோல கெவின் நின்றான். பாதையில் இறங்கி கீழே போனபோது மேல்மாடி யன்னலில் ஹெண்டிரிக் கைவைத்த நாற்காலி ஒன்றில் பொத்தென்று சாய்ந்தது தெரிந்தது. சில நிமிடங்களில் சற்றுக் கூடிய சத்தத்துடன் இசை தொடங்கியது. மடிக்கணினியின் பட்டியை தோளில் வசதியாக மாட்டியபடி ரோட்டில் கெவின் மெதுவாக நடந்தான்.

அவன் தன் காலடிகளை ஒன்று, இரண்டு, மூன்று என மனதை அமைதிப்படுத்த எண்ணினான். அவன் அந்தக் கிராமத்தில் நுழைந்தபோது முதலில் பார்த்த வீடுகளைத் தாண்டி நடந்தான். நிலத்திலே ஊன்றப்படாத பொருட்கள் மீது சவுக்கடிபோல காற்று வீசியது. மழை நீரோடையாக அவனை நோக்கி பாய்ந்து அவனது இரவு ஆடை நுனியை நனைத்து கனமாக்கியது. பஸ் நிறுத்தக் கூடாரத்தில் அவன் ஒரு வாங்கில் அமர்ந்தான். ஒரு முடிந்துபோன புகையிலை டின் நிலத்திலே கிடந்தது. அதைக் காலால் அடித்து தள்ளினான். ஒரு பழைய கால அட்டவணை ஒன்று உள்சுவரில் ஒட்டப்பட்டிருந்தது. கண்ணாடியிழைச் சுவரில் சில வார்த்தைகள் கிறுக்கியிருந்தன.

ரோர்கில்ட் லுண்ட் ஒரு கோமாளி

அந்த வேசை மகனுடைய பெரிய தலையை இந்த இடத்தில் வைத்துத்தான் 13.8.2007 அன்று அடித்தார்கள். அவனுக்கு வேண்டும்.

தகவலுக்கு நன்றி

படுப்பதற்கு நல்ல ஆள் தேவையானால் அழைக்கவும் 97528252

பொய்

பொய் இல்லை

நம்பர் வேலைசெய்யாது

வேலை செய்யாது

நம்பர் சரியில்லை

அவனுடைய விரல்கள் விறைத்துப் போய்விட்டன. எவ்வளவு மழை சேர்ந்தால் பெருவெள்ளமாகும் என்பதை யோசித்தான். தலையை வளைத்து மேகத்தை பார்த்தான். அவனுடைய அப்பா ஒருமுறை தாய்லாந்தில் உள்ள பட்டாயாவில் காணப்படும் சந்திரனைப் பற்றி சொல்லியிருக்கிறார். அது அங்கே மிகப் பெரிதாக ஒரு தோடம்பழம்போல செம்மஞ்சளாக இருக்கும். இங்கே அது சிறியதாக வெளிறிப்போய் இருக்கிறது.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

வெளிநாட்டுப் பத்திரிகைகளில் சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வந்தால் அவற்றை தேடிப் பிடித்து படித்துவிடுவது என் வழக்கம். ஆசியாவில் இருந்து ஏதாவது கதை மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறதா என்பதை உன்னிப்பாக கவனிப்பேன். என் கண்களுக்கு அவை தென்படுவதில்லை. ஸ்பானிஷ் மொழி, யப்பான் மொழி, ஜேர்மன் மொழி, பிரெஞ்சு மொழிக் கதைகளை எல்லாம் மொழிபெயர்ப்பில் பார்ப்பேன். நியூ யோர்க்கரில் டேனிஷ் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கப்பட்ட கதை ஒன்று வெளியாகியிருந்தது. அதன் ஆசிரியர் பெயர் தோமஸ் கோர்ஸ்கார்ட். மூன்று நாவல்களும், இரண்டு சிறுகதை தொகுப்புகளும் வெளியிட்டிருக்கிறார். டென்மார்க்கின் அதி உயர் Golden Laurels விருதை பெற்றவர். இவருடைய கதையை மொழிபெயர்க்கலாம் என முடிவு செய்தேன்.

ஒரு பத்து வயதுச் சிறுவன் பற்றிய கதை இது. அவனுடைய அப்பாவித்தனமும், தன்னைப் பெரியவனாக வெளிப்படுத்த அவன் எடுக்கும் முயற்சிகளும் பரிதாபமாக இருக்கின்றன. பெரியவர்கள் உலகத்தில் ஒரு சம்பவம். அதற்குள் சிறுவன் சிறிது சிறிதாக உள்ளே இழுத்துச் செல்லப் படுகிறான். பாதி அவனுக்குப் புரிகிறது மீதியை அவன் ஒருநாள் புரிந்துகொள்வான்.

இதை மொழிபெயர்க்க நான் எடுத்த முயற்சி பற்றியும் சிறிது சொல்லவேண்டும். ஆசிரியரைத் தொடர்புகொண்டபோது அவர் ஏஜண்டிடம் கைகாட்டிவிட்டார். ஏஜண்ட் பதிப்பாளரைத் தொடர்புகொண்டு ஒப்பந்தம் போட்டார். நூறு டொலர் அவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று பேசி முடிவு செய்யப்பட்டது. இந்த விசயத்தில் அவர்கள் காட்டிய ஆர்வமும், கறார்த்தன்மையும் என்னை ஆச்சரியப்பட வைத்தன. வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்பது தமிழ் வாசகர்களுக்குத் தெரிய வேண்டும் என நான் நினைத்ததால் அதை இங்கே எழுதுகிறேன்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram