சிறுகதைகள்

அன்புபேசி

சிறப்புப் பரிசு ரூ.2500 பெறும் கதை

கல்பனா சன்யாசி

உணவு மேஜை மேல் அலைபேசி இருந்தது. அதன் மேல் பதி்னைந்து வயது ஷைலஜாவின் கை இருந்தது. அது அலைபேசித் திரை மீது மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தது.

“தட்டைப் பார்த்து சாப்பிடு ஷைலு”, அலைக்கழித்துக் கொண்டிருந்த மகளிடம் சொன்னாள் பாவனா.

ஷைலஜாவின் குனிந்த தலையோ நிமிரவே இல்லை. அவளின் பார்வையும் ஒரு கையும் அலைபேசியை விட்டு அகலவும் இல்லை.

இன்னொரு கை தட்டில் இருந்த உணவை இயந்திரத்தனமாக அளைந்து கொண்டிருந்தது.

அவளிடமிருந்து ஒரு முணுமுணுப்பான, “ம்” மட்டுமே பதிலாக கிடைத்தது அம்மா பாவனாவின் பேச்சுக்கு.

சடாரென ஷைலஜாவின் கையிலிருந்து அலைபேசியைப் பறித்தாள் பாவனா. “எத்தனை தடவை சொல்லியிருக்கேன் நான்? சாப்பிடும் போது மொபைலைப் பார்க்காதேன்னு? சொன்னா கேக்கமாட்டியா?”

“அப்புறம் கேக்கிறேன். இப்ப மொபைலைக் கொடும்மா. பாதி சாட்டிங்கில் இருக்கேன்.”

“அதென்ன எப்ப பாரு சாட்டிங்? முதல்ல சாப்பிடு. அப்புறமா சாட் பண்ணலாம்.”

“இப்ப மொபைலைக் கொடுக்கப் போறியா இல்லியா?”

“சாப்பிட்டு முடி. தர்றேன்.”

“ச்சே”, உணவுத் தட்டை வேகமாக தள்ளிவிட்டாள் ஷைலஜா. அது ‘தடால்’ என ஒரு பெரும் சத்தத்துடன் மேஜையிலிருந்து கீழே விழுந்தது.

உணவு தரையெங்கும் சிதறியது.

முறைத்தபடியே அங்கிருந்து அகன்றாள் ஷைலஜா.

மகளைப் பார்த்து விக்கித்துப் போனாள் பாவனா.

அறைக்கதவு ‘டமால்’ என்ற பெரும் சத்தத்துடன் சாத்தப்பட்டது, ஷைலஜாவால்.

பாவனா தன்னருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த கோமதியைப் பார்த்தாள். கோமதி பாவனாவின் அம்மா. ஷைலஜாவின் பாட்டி.

“என்னப் பண்ணிட்டுப் போறாப் பாத்தியா உன் செல்லப் பேத்தி?”

சிதறிக் கிடந்த உணவுப் பருக்கைகளை துடைத்துக்கொண்டே சொன்னாள் பாவனா. “அம்மா மேலயும் மரியாதை இல்லை. சாப்பாடு மேலயும் மரியாதை இல்லை.”

“சின்ன வயசுதானே? இந்த வயசு அப்படிம்மா. நாமதான் புரிஞ்சி நடந்துக்கணும் பாவனா.” என்றாள் கோமதி.

“என்னமோ போ. எப்பவும் நீ உன் பேத்திக்கே சப்போர்ட் பண்ணு.” மேலும் உணவைத் தொடர மனமில்லாமல் எழுந்துகொண்டாள் பாவனா. அவளின் உள்ளமெங்கும் ஷைலஜா குறித்தக் கவலை அலைகள் திரண்டெழுந்தன.

அவளுக்கு ஒன்றுமே புரிபடவில்லை. அப்படி என்னதான் இருக்கிறதோ அந்த அலைபேசியில்? அப்படி இருபத்து நாலு மணி நேரமும் அதைக் கட்டிக்கொண்டு அழுவதற்கு?

நள்ளிரவில் விழிப்பு வந்து பார்க்கும் போதெல்லாம் போர்வைக்குள்ளிருந்து அலைபேசி வெளிச்சம்.

“இந்த நேரத்துல என்ன ஷைலு மொபைல்?”

“லெஸன்ஸ்தான் படிக்கிறேம்மா.”

“இந்த நேரத்துலயா? பாடமா? அதுவும் போர்வைக்குள்ளேருந்து?”

“அ..அது.. இதோ அணைச்சிட்டேன்.”

சரி போனை அணைத்துவிட்டாள் என்று திரும்பிப் படுத்தால், அஞ்சு நிமிடம்தான் அமைதி. அஞ்சே நிமிடம்தான். அடுத்த நிமிடம் மறுபடியும் அலைபேசியின் “பீப்.. பீப்..” ஓசை. “தட்.. தட்..” என்று அதில் ஏதோ டைப் செய்யும் சத்தம்.

“அப்படி என்ன ரகசியம்?” ஒரு நாள் ஷைலஜாவின் போர்வையைப் பிடித்து இழுத்துவிட்டாள் பாவனா.

அவ்வளவுதான்!

“நான் என்ன சின்னக் குழந்தையா? நீ வேவு பாக்கிறதுக்கு? நான் ஒரு வளர்ந்த பொண்ணு. எனக்குன்னு ப்ரைவஸி கிடையாதா? நினைச்சதை நினைச்ச நேரத்தில் செய்ய எனக்கு சுதந்திரம் கிடையாதா இந்த வீட்டில்?” கத்தி தீர்த்துவிட்டாள் ஷைலஜா.

அடுத்த நாள் தேர்வு இருந்தாலும் அதற்கு முதல் நாள் அலைபேசியோடுதான் பொழுது செலவாகிறது ஷைலஜாவுக்கு.

“பரிட்சையை வச்சிக்கிட்டு என்னம்மா இது போன்ல கேம்ஸ் விளையாடிக்கிட்டு இருக்கே?”

“மேத்ஸ் போரடிக்குதும்மா. இந்த சைன் தீட்டாவும் காஸ் தீட்டாவும் எதுக்கு படிக்கிறோம்னே தெரியலை. நம்ம கல்வி முறையே சரியில்லை.” சலித்துக்கொள்வாள் ஷைலஜா.

“இந்த சைன் தீட்டாவும் காஸ் தீட்டாவும் தெரிஞ்சாதான் நீ விளையாடற வீடீயோ கேம்ஸை உருவாக்கவே முடியும் ஷைலு. நிலாவுக்கு சந்திராயன் அனுப்ப எத்தனை கோடானு கோடி கணக்கிடுதல்கள் தேவைப்பட்டிருக்கும் தெரியுமா?” தனக்குத் தெரிந்த வரையில் விளக்கம் அளித்தாள் பாவனா.

அதைக் கேட்டு ஒரு நொடி மௌனமாக இருந்தாள் ஷைலஜா. பிறகு உடனேயே, “அம்மா நான் நிச்சயம் ராக்கெட் அனுப்பப் போறதில்லை என் வாழ்க்கையில்.”

“அதில்லை ஷைலு, இஞ்சினியர் ஆகணும்னா கட்டாயம் மேத்ஸ்-“, பாவனா பதிலளிக்கும் முன்,

“நான் இஞ்சினியராக ஆகப் போறதில்லை.”

“அப்ப டாக்டருக்குப் படிக்கப் போறியா?”

“எனக்கு டாக்டர் ஆகவும் பிரியமில்லை.”

“பின்னே? நீ என்னதான் ஆகப் போறே? உன் வாழ்க்கையில்?”

“ஓவியராகப் போறேன்.”

“என்னது?”

“ஆமாம்மா. எனக்கு வரையுறது ரொம்பப் பிடிக்குது.”

“சரிதான் ஷைலு. படம் வரையப் பிடிச்சா போர் அடிக்கிறப்போ ஏதாவது வரை. ஆனா அது வாழ்க்கைக்கு சரியா வராது.”

“ஏன் வராது? இதோ பார், நான் வரைஞ்ச காந்தி தாத்தாக்கு பேஸ்புக்கில் எத்தனை லைக்ஸ், எத்தனை ஷேர்ஸுன்னு?” தன் அலைபேசியை பாவனாவிடம் நீட்டினாள் ஷைலஜா.

அலைபேசியைப் பார்த்ததுமே பாவனாவின் எரிச்சல் அதிகரித்தது.

“எல்லாம் இந்தப் பாழாப் போன மொபைலால்தான் நீ கெட்டுப் போயிட்டே. இதை ஏன்தான் வாங்கிக் கொடுத்தேனோ உனக்கு நான்?” தலையில் கையை வைத்துக்கொண்டு புலம்பினாள் பாவனா.

பாவனாவின் புலம்பல்கள் ஷைலஜாவிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

முக நூல், இன்ஸ்டா என்று தன் மகள் சமூக வலை தளங்களில் அதிக நேரம் செலவழிப்பது ஒரு அம்மாவாக பாவனாவுக்கு பெரும் அச்சத்தைக் கிளப்பியது.

வளர் இளம் பருவத்தில் ஷைலஜா ஏதேனும் ஆபத்தை தேடிக் கொள்வாளோ என்று பயந்தாள். இது குறித்து எப்படி பேசுவது என்றும் புரியாமல் திணறினாள்.

இருந்தாலும் சொல்லப்பட வேண்டியவை சொல்லப்பட்டாக வேண்டுமே?

ஒரு ஞாயிறு முன் மாலைப் பொழுதில் மகளிடம் பேசினாள் பாவனா.

“காலம் ரொம்ப கெட்டுக் கிடக்கு ஷைலு.”

“ஆமாம்மா. ரொம்ப.”

“பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.”

“உண்மைதான்.”

“இந்த சமூக வலைதளங்களில் ஆண்கள் பெண்களை ரொம்ப ஏமாத்துறாங்களாம். அதுவும் உன் மாதிரி சின்னப் பொண்ணுங்களை.”

“இப்ப நீ என்ன சொல்ல வர்றே? என்னை நீ சோசியல் மீடியாப் பக்கமே போகாதேன்னு சொல்றியா?”

“அதில்லை ஷைலு. என்ன சொல்றேன்னா நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்னு…”

“என்னைப் பாத்துக்க எனக்குத் தெரியும். நீ ஒண்ணும் கவலைப்படாதே” படாரென்று பேச்சை முறித்துவிட்டு சரெலென்று விலகிப் போனாள் ஷைலஜா.

பாவனாவின் அடிவயிறு மகளை எண்ணி ரொம்பவே கலங்கியது.

ஒரு நள்ளிரவில் விழிப்புத் தட்டியது பாவனாவுக்கு.

அருகில் பார்த்தாள். மகளைக் காணோம். பதறிப்போய் தேடினால், ஹாலில் அரை வெளிச்சத்தில் யாருடனோ சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள் ஷைலஜா, அலைபேசியில்!

“யார்க்கிட்டே ஷைலு பேசறே?”

“ஃப்ரெண்டும்மா.”

“பேரென்ன?”

“அஸ்வின். கூடப் படிக்கிறான்.”

ரௌத்திரமானாள் பாவனா.

ஒரே பாய்ச்சலில் மகளிடமிருந்து போனைப் பிடுங்கினாள். ஓங்கித் தரையில் கடாசினாள். அது உடைந்து சிதறியது. மகளிடம் திரும்பினாள் பாவனா.

“பார் ஷைலு. உன் தனிமை, உன் சுதந்திரமெல்லாம் நீ வளர்ந்த பிறகு உன் வீட்டில் வச்சிக்கோ. இது என் வீடு. நான் சொல்றதைக் கேட்டே ஆகணும் நீ. புரியுதா? போ. போய்த் தூங்கு.”

அம்மாவிடம் இவ்வளவு பெரும் கோபத்தை எதிர்பார்த்திராத ஷைலஜா, அழுதுகொண்டே தூங்கிப் போனாள்.

அந்த சண்டைக்குப் பிறகு பாவனாவிடம் சரியாகப் பேசவில்லை ஷைலஜா. சரியாக சாப்பிடவும் இல்லை.

பாவனாவுக்கே தான் ரொம்ப கோபப்பட்டு விட்டோமோ என்று தோன்றியது. பேசலாம் என்று போனாலும் எதுவும் பேசாமல் ஊமையாக அகன்று போகிற மகளை எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல் திணறினாள் பாவனா.

பாவனா-ஷைலஜா இடையிலான அம்மா-மகள்-மொபைல் யுத்தங்களை கவனித்துக் கொண்டிருந்த பாவனாவின் அம்மா கோமதி, அன்றைக்கு, “ஆனாலும் நீ செய்தது, பேசியது எல்லாம் கொஞ்சம் அதிகம்தான் பாவனா”, என்றாள் தன் மகளிடம்.

“என்னம்மா பேசறே நீ? நட்டநடு ராத்திரியில் எவன் கூடவோ…”

“ஆனாலும் உன் வீடு - என் வீடு பேச்சு கொஞ்சம், இல்லை இல்லை ரொம்பவே அதிகம் மகளே.”

பாவனா அமைதி காத்தாள். அவளின் அம்மா தொடர்ந்தாள்.

“ஷைலஜா சின்னப் பொண்ணு. பதின் பருவம். அந்தப் பருவத்தில்தான் தன்னைப் பற்றிய தன் சுயம் பற்றிய தேடல் தொடங்கும். சுய கர்வம் கொஞ்சம் தலை தூக்குற நேரம். அப்பப் போய் நீ உன் வீடு என் வீடுன்னு பேசறது உன் மகளோட சுய மரியாதை மேலான தாக்குதல் பாவனா.”

“என்னை என்னம்மா பண்ண சொல்றே? எப்பப் பாரு சாட்டிங், டெக்ஸ்ட்டிங் பேஸ்புக் ட்விட்டர்னு ஆன்லைன் உலகமே கதின்னு இருந்தா? உடல் ஆரோக்கியம் மன நலம் எல்லாம் கெட்டு இந்த சின்ன வயசுலியே அவ சீர்கேடாப் போறதை வேடிக்கை பாக்க சொல்றியா?”

“வேடிக்கை பாக்க வேணாம் பாவனா. அந்த உலகத்தைப் பத்தி தெரிஞ்சுக்க. புரிஞ்சுக்க. முடிஞ்சா அதில் பங்கெடுக்கவும் செய்.”

“நீ சொல்றது ஒண்ணும் எனக்குப் புரியலை”, முணுமுணுத்தாள் பாவனா.

தொண்டையை செருமிக்கொண்டு ஒரு நீண்ட பிரசங்கத்துக்குத் தயாரானாள் கோமதி.

“என் சின்ன வயசில் நான் என் அம்மாவோடு எவ்வளவு சண்டை போட்ருப்பேன் தெரியுமா?”

“ஏன்?”

“எப்பவும் கதைப் புத்தகமும் கையுமாத் திரியுறேன்னு. அதுவும் சாப்பிடும் போதும் கதைப் புத்தகம் படிக்கிறேன், ராத்திரி தூங்காம முழிச்சிக்கிட்டு கதைப் புத்தகம் படிக்கிறேன்னு என் அம்மா என்னோட எப்பவும் ஒரே சண்டைதான்.”

“புத்தகம் படிக்கிறது நல்லப் பழக்கம்தானேம்மா?”

“இப்ப சொல்றே நீ? அந்தக் காலத்தில் அப்படி இல்லை. இருந்தாலும் என் அம்மாவுக்கு அது அவ்வளவா புரியலை அப்டீன்னுதான் சொல்லணும்.”

“நீ கதைப் புத்தகம் படிச்சதுக்கும், இப்ப ஷைலு பத்தின பிரச்சனைக்கும் என்ன சம்மந்தம்? ஒண்ணும் புரியலை எனக்கு.”

“அவசரப்படாதே பாவனா. நான் சொல்ல சொல்ல உனக்குப் புரியும்.”

“சரி. சொல்லு.”

“உன்னோட சின்ன வயசு, அந்தப் பாவாடை தாவணி காலம் உனக்கு ஞாபகமிருக்கா?”

“நல்லாவே ஞாபகமிருக்கும்மா.”

“நீயும் நானும் எவ்ளோ சண்டை போட்டிருப்போம் அப்போ?”

“ம். நிறையதான். அதுவும் நான் டிவி பாத்தாலே உனக்குப் பிடிக்காது. என்ன எப்பப் பாரு டிவீி முன்னாலேயே உக்காந்துகிட்டு இருக்கேன்னு கத்தி தீத்துடுவே நீ“, பழைய ஞாபகங்களில் புரண்டது பாவனாவின் மனது.

“எனக்குப் புத்தகம். உனக்கு தொலைக்காட்சி. உன் மகளுக்கு அலைபேசி.”

தன் அம்மாவின் பேச்சு ஏதோ புரிவது போல் தோன்றியது பாவனாவுக்கு.

கோமதி தொடர்ந்தாள்.

“பார் மகளே. காலங்கள் மாறும். பழக்க வழக்கங்கள் மாறும். சாதனங்களும் பயன்பாடுகளும் மாறும். ஆனால் தலைமுறை இடைவெளி என்பது மாறாது. அப்பா சொல்வது மகனுக்குப் பிடிக்காது. அவன் ஒரு தந்தையாகிற வரைக்கும். அம்மா சொல்வது மகளுக்குப் புரிவதில்லை அவள் ஒரு தாயாகிற வரைக்கும்.”

“எல்லாம் சரிதாம்மா. ஷைலு பிரச்சனைக்கு என்ன தீர்வு? அதைச் சொல்லு” என்றாள் பாவனா கொஞ்சம் பொறுமை இழந்தவளாக.

“எனக்கு ஒரு புத்தகத்தை முதன் முதலில் பரிசாக கொடுத்தது யாருன்னு தெரியுமா உனக்கு?”

“என்னோட அப்பாவா?”

“இல்லை. என்னோட அம்மா. மாக்ஸிம் கார்க்கி எழுதுன ‘தாய்’ என்கிற புத்தகம்.”

“நல்ல அம்மா. நல்ல புத்தகம்.” புன்னகைத்தாள் பாவனா.

“டிவீயில் குக்கரி ஷோவும் சீரியலும் பாத்துக்கிட்ருந்த எனக்கு டாக் ஷோக்கள் டாக்குமெண்டரின்னு அறிமுகப்படுத்துனது யாரு தெரியுமா?”

“யாரு?”

“நீதான் பாவனா”, என்ற கோமதி தொடர்ந்து, “தகவல் தொடர்பும், பரிவர்த்தனையும் ஒரு நிறுவனத்துக்கு மட்டுமில்லை, ஒரு குடும்பத்துக்கும் உறவுகளுக்கும் கூட முக்கியமான விஷயம் மகளே.”

சட்டென்று எட்டி கோமதியின் கைகளைப் பிடித்துக்கொண்டாள் பாவனா. “அம்மா, என் அறிவுக் கண்ணைத் திறந்துட்டே. பார், நான் ஷைலு – அலைபேசி விஷயத்தை எப்படி டீல் பண்றேன்னு”, என்றாள் உற்சாகமாக.

“ஷைலு- அலைபேசி சமாச்சாரம் முக்கியமில்லை மகளே. அம்மா பாவனா – மகள் ஷைலஜா விஷயம்தான் அதி முக்கியம்.”

“டன் தாயே”, கைகளை குவித்தாள் பாவனா.

ரோஜா நிற காகிதத்தில் ஜரிகை ரிப்பன்கள் சகிதம் இருந்தப் பெட்டியை தன் மேஜை மேல் எதிர்பார்த்திருக்கவில்லை ஷைலஜா.

“என்னம்மா இது?”

“கிஃப்ட். உனக்குதான்”, என்றாள் பாவனா.

“என்ன கிஃப்ட்?”

“பிரிச்சிதான் பாரேன்.”

பிரித்தாள். பார்த்தாள். “ஹை… புது போன்!” ஆனந்த அதிர்ச்சிக்குப் போனாள் ஷைலஜா. “அம்மான்னா அம்மாதான்”, பாவனாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

பாவனாவும் கோமதியும் ரகசியமாக ஒரு புன்னகையைப் பரிமாறிக்கொண்டார்கள்.

“நீ செஞ்ச பணியார வீடியோவை பேஸ்புக்கில் போஸ்ட் பண்ணேன். எவ்ளோ லைக்ஸ், எவ்ளோ ஷேர்ஸ் பாரேன்”, ஷைலஜா குதிக்க, “எங்கே காமி?” பாவனாவும் மகிழ்ச்சியானாள்.

கூடவே, “இன்ஸ்டாவிலும் போடு”, என்றாள். இப்போது மகிழ்ச்சியானது ஷைலஜா.

அன்று தன் மேஜைமேல் ஏதோ மும்முரமாக இருந்த ஷைலஜாவை கையில் ஹார்லிக்ஸ் கரைசலோடு நெருங்கினாள் பாவனா.

அம்மாவைப் பார்த்ததும் எதையோ சட்டென்று மறைத்தாள் மகள்.

“என்ன ஷைலு அது? நான் பாக்கக் கூடாதா?”

“உனக்குதான் நான் வரைஞ்சா பிடிக்காதே?” என்றாள் ஷைலஜா மெல்லிய குரலில்.

“யார் சொன்னா? உனக்கு அஞ்சாறு வயசில் யானை, பூனை போதாக்குறைக்கு பானை எல்லாம் வரைய சொல்லிக் கொடுத்ததே நான்தான். நீ என்ன வரைஞ்சாலும் எப்டி வரைஞ்சாலும் எனக்குப் பிடிக்கும்.”

அம்மா சொன்னதைக் கேட்டதும் தான் வரைந்ததை தானே எடுத்து அவளிடம் காட்டினாள் ஷைலஜா.

“அட, மயில்!. மயில் மாதிரியே இருக்கே?”

செயற்கையாக அதிசயித்தாள் பாவனா.

“அம்மா..” செல்லமாக சிணுங்கினாள் மகள்.

“சும்மா ஜோக்குக்கு சொன்னேன் ஷைலு. நிஜமாவே நல்லாத்தான் வரைஞ்சிருக்கே” மகளை சமாதானப்படுத்திய பாவனா, கூடவே, “உன் ப்ரெண்ட்ஸ் கூட வாட்ஸப்பில் ஷேர் பண்ணு”, எடுத்தும் கொடுத்தாள்.

அடுத்த பத்தாவது நிமிடம் பாவனாவிடம் குதித்துக்கொண்டு வந்தாள் ஷைலஜா. “பதினஞ்சு எக்சலண்ட், பத்து அமேசிங், பத்து ப்யூட்டிஃபுல்”, என்றாள் உற்சாகமாக.

“என்னது இதெல்லாம்?”

“என் மயில் ஓவியத்தின் ஸ்கோர்”, ஏராள உற்சாகம் ஷைலஜாவிடம்.

“எங்கே காமி?” மகளிடம் மொபைலை வாங்கிப் பார்த்த பாவனா, “ம். ஆஷிஷும் பென்னும் அமேஸிங்குன்னு கமெண்ட் பண்ணிருக்காங்க. ஆர்த்தியும் ப்ரீத்தியும் ப்யூட்டிபுல்னு சொல்லிருக்காங்க. வெரி குட். வெரி குட். ஆனா ஷைலு..” என்று இழுத்தபடியே மகளிடம் மொபைலைத் திரும்பக் கொடுத்தாள் பாவனா.

“ஆனா? என்னம்மா?”

“ஆஷிஷும் ஆர்த்தியும் சைன் தீட்டாவும் காஸ் தீட்டாவும் கத்துக்கிட்டு ஐஐடி ஐஐஎம்மில் படிச்சிட்டு கோடியில் சம்பாதிப்பாங்கன்னு தோணுது. ஆனா நீ கவலைப்படாதே. அப்பவும் உன் நண்பர்கள் உன் ஓவியத்தை கண்டிப்பா லைக் பண்ணுவாங்க. ஷேர் பாண்ணுவாங்க.”

பாவனா இப்படிப் பேசியதைக் கேட்டதும் ஷைலஜாவின் முகம் பாறையாக இறுகியது. “அம்மா நீ என்னை கிண்டல் பண்றே”, என்றாள் அதே இறுக்கத்துடன்.

“உண்மையை சொன்னேன் மகளே”, என்ற பாவனாவுக்கு கோபமாக பதில் சொல்லப்போன ஷைலஜாவை குறுக்கிட்டு அழைத்தது அவளின் அலைபேசி.

எடுத்துப் பேசினாள் ஷைலஜா.

“வாட்? பிக்காஸோ ஆர்ட் ஸ்கூலா? ஆமாம். நான்தான் ஷைலஜா. ஆமாம். பாவனா மேடம் என் அம்மாதான். ஓகே. ஷ்யூர். தாங்க்யூ.”

படபடவென்று பேசிவிட்டுத் திரும்பிய ஷைலஜா, அந்த படபடப்போடு, “பாடத்தை படிக்காம படம் வரையுறேன்னு என்னை கிண்டல் பண்றே. ஆனா எனக்குத் தெரியாம என்னை டிராயிங் ஸ்கூலில் சேத்துவிட்ருக்கே. உன் மனசுல என்னதாம்மா நினைச்சிக்கிட்ருக்கே?”

“பெண்ணைப் பெத்த எல்லா அம்மாவும் என்ன நினைச்சிக்கிட்டு இருக்காங்களோ, நானும் அதையேதான் நினைச்சிக்கிட்டு இருக்கேன்.”

“அது என்னதான் அது?”

“என் மகளோட - உன்னோட எதிர்காலமும் பாதுகாப்பும்.”

“புரியுற மாதிரி சொல்லும்மா.”

“பாரு ஷைலு, பிடிச்ச தொழிலை செய்யணும். அது முக்கியம். அந்த தொழில் உன் காலில் நீ நிக்கவும் உதவி செய்யணும் அதுவும் முக்கியம்.”

“அப்ப நான் வரையவே கூடாதாம்மா?”

“அப்படி சொல்லலை. ஆனா வாய்ப்புகளை மூடாதே. பாடமும் படி. படமும் வரை. எது உனக்கானதுன்னு நீ தெளிவா தீர்மானிக்கிற வரைக்கும் எந்தப் பாதையையும் மூடாதே.”

ஷைலஜா மௌனமாக இருந்தாள். மகளின் அமைதி, தான் சொல்வதை அவள் தீவிரமாக யோசிக்கிறாள் என்பதை அந்த அம்மாவுக்கு உணர்த்தியது.

நெருங்கி மகளை தோளோடு அணைத்துக்கொண்ட பாவனா, “எது செஞ்சாலும் சராசரியா செஞ்சா பத்தாது ஷைலு. அதை சிறப்பா செய்யணும். அதில் உச்சத்தை எட்டணும். சாதிக்கணும்.”

“சரி டிராயிங் கிளாசுக்கு ஏற்பாடு பண்ண மாதிரி எனக்கு மேத்ஸ் ட்யூஷனுக்கும் ஏற்பாடு பண்ணு.”

“நானே மேத்ஸ் மேஜர்தான். கணிதவியல் பட்டதாரி. நானே சொல்லித் தர்றேன் உனக்கு. அப்புறம் இன்னொரு விஷயம்.”

“சொல்லு.”

“இரவில் ரகசியமாய் ஒரு ஆணோடு பேசுற வயசு வரலை இன்னும். உனக்கும் சரி. உன் கிளாஸ்மேட்டுக்கும் சரி. அதுக்கு இன்னும் காலம் இருக்கு. நான் சொல்றது உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்.”

உதட்டைக் கடித்தபடி சற்று நேரம் மௌனம் காத்த ஷைலஜா, “உன் அறிவுரை பிரசங்கம் முடிஞ்சிருச்சா? இன்னும் இருக்கா?”

“இப்போதைக்கு இவ்வளவுதான்.”

“சரி ஆளை விடு.” சொல்லியபடியே மறுபடியும் அலைபேசியை எடுத்து யாருடனோ பேச ஆரம்பித்துவிட்டாள் ஷைலஜா.

“ஆமாண்டா. நான் டிராயிங் கிளாஸ் சேந்துருக்கேன். வீக் எண்ட் மட்டும்தான். நீ மேத்ஸ் அசைன்மெண்ட் முடிச்சிட்டியா? நானும் இன்னும் முடிக்கலை. ஆனா முடிச்சிடுவேன். அம்மா ஹெல்ப் பண்றேன்னு சொல்லிருக்காங்க. அப்புறம் ஒரு விஷயம். இனிமே ஈவ்னிங் ஏழு மணிக்கு மேல எனக்கு போன் பண்ணாதே. டெக்ஸ்ட்டும் பண்ணாதே. ஓகே?”

ஷைலஜாவின் இந்த அலைபேசி உரையாடல் அவளின் அம்மா பாவனாவுக்கு பெரும் நிம்மதியை அளித்தது.

எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த கோமதி, புரிதலுடன் கூடிய ஒரு புன்னகையை பாவனாவுடன் பகிர்ந்து கொண்டாள்.

கல்பனா சன்யாசி

கல்பனா சன்யாசி. சென்னைவாசி. வாழ்வியல் களமே அதிகமாக எழுதுவதாகச் சொல்லும் இவரின் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் பல முன்னணி பத்திரிகைகளால் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகள் போட்டிகளில் பரிசுகளும் வென்றுள்ளன.  தங்கச்சி கல்யாணம் என்னும் இவரது சிறுகதைத் தொகுப்பு வெளியாகி உள்ளது.