பி.ஆர்.ராஜன்
சிறுகதைகள்

305 ஆம் எண் வீட்டில் ஒரு கிழவர்

எம்.கோபாலகிருஷ்ணன்

கதவைத் திறந்ததும் மூக்கைப் பொத்திக் கொண்டாள் சரசு. சகிக்கமுடியாத பீடியின் நெடி. மெல்ல எட்டிப் பார்த்தாள். நீண்ட கூடத்தில் யாருமில்லை. 305 எதிர் வீடு என்றாலும் வாசலுக்கு நேர் எதிரில் கிடையாது.

மெல்ல வலதுபக்கம் எட்டு வைத்து கொலுசொலி எழாமல் நடந்தாள். 305ஆம் எண் வாசல் கதவருகே அவர் சுவரைப் பிடித்தபடி குனிந்து நின்றிருந்தார். எதையோ தேடுவது போலிருந்தது. அந்த வீட்டின் கதவு திறந்திருக்கும்போதுதான் கூடத்தை புகைநெடி நிறைக்கும். கிழவர் நிமிர்ந்து பார்ப்பதற்குள் விலகி விடும் எண்ணத்தில் சரசு விறுவிறுவென நடந்து மின்தூக்கியின் பொத்தானை அழுத்திவிட்டு மெல்ல எட்டிப் பார்த்தாள். கிழவர் அவள் வந்ததைக் கண்டுகொள்ளாதவர்போல சிறிதும் அசையாமல் நின்றிருந்தார்.

மின்தூக்கிக்குள் நுழைந்து, கதவு சாத்திக்கொண்டதும் ஆழமாய் மூச்செறிந்தாள். இரண்டாம் தளத்தில் நின்று கதவு திறந்தது. மல்லிகை மணக்க பூரணி உள்ளே வந்தாள். உடனடியாக முகம் சுளிக்க சரசுவை உற்றுப் பார்த்தாள்.

‘‘அய்யோ அக்கா. நானில்லை. அந்தக் கெழவன்தான் கதவைத் தெறந்து வெச்சிருக்கான். அதான் இப்பிடி நாறுது. நல்லவேளை மல்லியப்பூ வாசத்தோடு வந்தீங்க. இல்லேன்னா அவ்ளோதான்'' சரசு பூரணியின் கைவளையலைப் பார்த்தாள். தடிமனான வளையல் சதைப்பற்று மிகுந்த அவள் கையில் பொருத்தமாக படிந்திருந்தது.

‘‘இந்நேரத்துல அந்தாளு வெளிய வரமாட்டானே. இருட்டு உழுந்ததுக்கு அப்பறமாதானே வருவான்'' கண்ணாடியைப் பார்த்து சேலைத் தலைப்பை சரிசெய்து முடிக்க மின்தூக்கி கீழ்தளத்தை எட்டியிருந்தது.

‘‘இல்லக்கா. செவுத்தப் புடிச்சுட்டு எதையோ தேடறாப்பல நிக்கறான். தண்ணி கிண்ணி போட்டுருக்கானா தெரியலை. தலை தொங்கிக் கெடந்துச்சு. எங்களுக்குன்னு எதிர்வீடு வாச்சிருக்கு பாருக்கா.''

பூரணி பதிலேதும் சொல்லாமல் கார் நிறுத்தத்தை நோக்கி நடந்தாள்.

கழுத்தை நொடித்தபடியே சரசு அடுக்ககத்தின் வாசலில் நின்ற காய்கறி வண்டியை நெருங்கினாள்.

*

மேலே வந்த மின்தூக்கியின் கதவு திறந்ததும் மீண்டும் முகத்தில் அறைந்தது புகைநெடி. வெளியே வந்து தயக்கத்துடன் எட்டிப் பார்த்தாள் சரசு. கிழவர் தரையில் கிடந்தார். ஒருகணம் திடுக்கிட்டு நின்றாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். எப்போதும்போல எல்லா வீட்டுக் கதவுகளும் மூடிக் கிடந்தன. ஆளரவமே இல்லை. குப்பைகளைக் கூட்டிப் பெருக்கும் பாப்பாத்தியக்கா இன்னும் வரவில்லைபோல. தலையைக் குனிந்தபடி வேகமாக அந்த இடத்தைக் கடந்தாள். இதயம் படபடத்தது. அவரசமாக கதவைத் திறந்துகொண்டு உள்ளே போய் வேகமாய் சாத்தினாள். மூச்சிறைத்தது. முகத்தைத் துடைத்தபடியே மின்விசிறியின் வேகத்தைக் கூட்டினாள். இண்டர்காமில் கந்தசாமியை அழைத்தாள். அடுக்ககத்தின் மேலாளர். மாதாந்திர பராமரிப்புக் கட்டணத்தை வசூலிப்பதிலிருந்து வேளாவேளைக்கு நீரேற்றுவது, தபால்களை வாங்கி வினியோகிப்பது, அவசரத்துக்கு ஆட்டோ வரவழைப்பது என்று எல்லாவற்றுக்கும் கந்தசாமிதான்.

‘‘சொல்லுங்கக்கா...''

‘‘கந்தசாமி, அந்த கெழம் வாசல்ல விழுந்து கெடக்குது.''

‘‘யாருக்கா?''

‘‘அதான் எங்க எதுத்த வீடு. 305.''

‘‘விழுந்து கெடக்கறாரா?''

‘‘ஆமா கந்தசாமி. நீங்க கொஞ்சம் மேல வந்து பாருங்களேன். எனக்கு பயமாருக்கு. எதுக்கும் கிருஷ்ணனையும் அழைச்சுட்டு வாங்க.''

‘‘செரிக்கா. நீங்க பதட்டப் படாதீங்க. வரேன்.''

கதவருகே சென்று உற்றுக் கேட்டாள். சத்தம் எதுவுமில்லை. திறந்து பார்க்கலாம் என்று எண்ணியவள் அந்த நினைப்பை உதறிவிட்டு மீண்டும் இண்டர்காமை எடுத்தாள். முதல் தளத்திலிருக்கும் சுகுணாவை அழைத்தாள். மணி அடித்துக் கொண்டேயிருந்தது. எடுக்கவில்லை. மறுபடியும் முயன்றாள். ‘என்னடி பண்ணிட்டிருக்கே?' எரிச்சல் மேலோங்கிய கணத்தில் மறுபக்கம் ஒலிவாங்கியை எடுக்கும் ஓசை.

‘‘அலோ''

‘‘சுகுணா. பிஸியா இருக்கியா?''

‘‘நீங்களாக்கா. துணி காயப் போடலாம்னு மேல போனேன். வந்து எடுக்கறதுக்குள்ள கட் ஆயிருச்சு.''

‘‘இங்க அந்த கெழம் கீழ விழுந்து கெடக்குது. வாசல்ல.''

‘‘உங்க வீட்டு வாசல்லயா?''

‘‘இல்லடி. அதோட வீட்டு வாசல்லதான். கந்த சாமிய வந்து பாக்க சொல்லிருக்கேன். எதுக்கும் நீ இங்க வாயேன். பயமா இருக்கு.''

‘‘நீங்க உள்ளாறதானே இருக்கீங்க. ஒலை கொதிக்குது. அரிசியப் போட்டுட்டு வந்தர்றேன். ரெண்டே நிமிசம்.''

வேர்வையைத் துடைத்துக்கொண்டு வேறு யாரையாவது அழைக்கலாமா என்று யோசித்தபோது வெளியே அரவம் கேட்டது.

கதவருகே நின்று கேட்டாள்.

‘‘அய்யா'' கந்தசாமியின் குரல்தான்.

கதவைத் திறந்தாள். பீடிப்புகையின் நெடி. சுவரோரமாக மெல்ல நகர்ந்து எட்டிப் பார்த்தாள்.

கந்தசாமி குனிந்து கிழவரின் தோளைத் தொட்டு உலுக்கினார் ‘‘அய்யா''

இதற்குள் நீலச் சீருடையில் கிருஷ்ணன் மேலே வந்தார்.

தலையை சற்றே நிமிர்த்தினாற்போல கிடந்தார் கிழவர். அடர்ந்த நரைதாடி. வழுக்கைத் தலையின் ஓரங்களிலும் நரைமுடி. அழுக்கான காவி வேட்டி முழங்காலுக்கு மேலாக சுருண்டிருக்க கணுக்காலில் ஆழமான ஒரு வெட்டுத் தழும்பு. வலதுகை உடலுக்கு அடியில் மடங்கிக் கிடந்தது. இடதுகையை மேலே உயர்த்தியிருந்தார். அசப்பில் ஒருக்களித்துப் படுத்திருப்பதுபோலவே இருந்தது.

‘‘எழுந்திருக்க மாட்டேங்கறாரே'' கந்தசாமி மண்டியிட்டு தலையை திருப்பினார்.

‘‘மப்பா இருக்குமா?'' கிருஷ்ணனும் அருகில் குனிந்தார்.

துப்பாட்டாவை நைட்டியின் மேலே போர்த்திக்கொண்டு படியிறங்கிய சுகுணா, ஆட்களை கண்டதும் நடைதளர்த்தினாள். சரசுவின் அருகில் வந்து தோளைத் தொட்டாள். இருவரும் சற்றே பின்னகர்ந்ததும் சரசு கிசுகிசுத்தாள் ‘‘ஒண்ணுமே இல்ல. எனக்கு பயமாருக்கு சுகு.''

உடலைப் புரட்டியதும் தலை ஒருமுறை அசைந்து மறுகணம் ஒருபக்கமாய் சாய்ந்தது. கண்கள் மேலேறியிருக்க வாயோரத்தில் எச்சில் வழிந்திருந்தது.

‘‘மணி சார் வீட்ல இருக்காறா பாருங்க கிருஷ்ணா. உடனே வரச் சொல்லுங்க'' கந்தசாமி கிழவரின் கையைப் பற்றினார். வெதுவெதுப்பு அவருக்கு நம்பிக்கை கொடுத்தது.

‘‘போயிருச்சாப்பா?'' கிருஷ்ணன் கிழவரின் முகத்தையே உற்றுப் பார்த்தார்.

‘‘அட நீயொண்ணு. போய் மணி சாரை வரச் சொல்லுன்னா...'' கந்தசாமி அதட்டினார்.

சரசுவின் நடுங்கும் கைகளை சுகுணா இறுகப் பற்றினாள்.

மணியும் கந்தசாமியும் கிழவரின் தோள்களைப் பற்றித் தூக்கினர். கால்கள் துவள கனத்த உடல் தரையில் இழுபட்டது. கிருஷ்ணன் வீட்டுக் கதவை விரியத் திறந்து பிடித்துக் கொண்டதும் கிழவரை உள்ளே இழுத்தனர். பீடியின் கடுமையான நெடி. பழைய சோபா ஒன்று ஓரமாய் கிடந்தது.

கிருஷ்ணன் ஸ்விட்சைத் தட்டியதும் விளக்கெரிந்தது.

கிழவரைத் தூக்கி சோபாவில் படுக்கவைத்தனர். தலை இன்னும் தொங்கியே இருந்தது. கை கால்களை நேராக்கி வைத்துவிட்டு மணி மார்பில் காதை வைத்துக் கேட்டார்.

‘‘112ல நம்ம ஆனந்த் டாக்டர் இருக்காரா? கேட்டீங்களா கிருஷ்ணன்'' மணி கிழவரின் கன்னத்தை தட்டினார்.

‘‘சொல்லிட்டங்க சார். வரேன்னாரு'' கிருஷ்ணன் டீ பாயின் மீதிருந்த புட்டியை எடுத்து தண்ணீரை கையில் வார்த்து கிழவரின் முகத்தில் இறைத்தார்.

நம்பிக்கை இழந்தவராய் கந்தசாமி விலகி நின்று வேர்வையைத் துடைத்துக்கொண்டார். கூடத்தின் தரை முழுக்க அழுக்கு அப்பியிருந்தது. வழக்கமாக கிழவர் புழங்கும் இடங்களைக் காட்டுவதுபோல சமையல் அறைக்கும் படுக்கை அறைக்குமாய் இரண்டு கிளை பாதைகள். சிகரெட் பெட்டிகள், கிழித்துப் போடப்பட்ட மசாலா பாக்கின் உறைகள், காய்ந்த வெற்றிலைகள், மாத்திரை அட்டைகள், சாக்லெட் காகிதங்கள் என குப்பைகள் காற்றில் அலைந்தன.

சோபாவிற்கு அடியில் பழைய செய்தித்தாள் கட்டுகள். கிழிந்த பத்து ரூபாய் தாள் ஒன்று. தூசியடர்ந்த மேசையின் மேல் தொலைக்காட்சி பெட்டி. அதன் மேலே சிரிக்கும் புத்தர். அருகே சிறு ஆமை. எளிதில் நீங்காத மக்கிய வாடை வீட்டை நிறைத்திருந்தது.

தண்ணீர் கழுத்தில் இறங்கி வழிந்தது. கிழவர் அசையவில்லை.

‘‘செருப்பு போட்டுட்டே வாங்க டாக்டர்''

கந்தசாமி சொன்னதைக் கேட்காமல் ஆனந்த் செருப்பை உதறிவிட்டு உள்ளே வந்தார். கையில் ஸ்டெதஸ்கோப். அறையின் அழுக்கு வாடையை விரட்டுவதுபோல ஒருகணம் அவரிடமிருந்து நறுமணம்.

கிழவரின் கண்களை விலக்கிப் பார்த்தார். காதில் ஸ்டெதஸ்கோப்பை பொருத்திக்கொண்டு நாடியை பரிசோதித்தார். சுத்தமாக மழிக்கப்பட்ட முகத்தில் எந்த சலனமும் இல்லை. மார்பின் மேல் கையை அழுத்திப் பார்த்தார். கிழவரின் உடல் தொய்ந்து அசைந்தது.

‘‘ஆஸ்பிட்டல் எடுத்துட்டு போலாமா ஆனந்த்?'' மணியின் குரலில் தயக்கம்.

‘‘சான்ஸ் இல்ல மணி சார். உயிர் பிரிஞ்சு கொஞ்ச நேரமாயிருச்சு'' ஆனந்த் பெருமூச்சுடன் விலகி நின்றார்.

நீண்ட வராந்தாவில் ஆட்களின் சலசலப்பு. சரசு தான் கண்ட காட்சியை திரும்பத் திரும்ப ஓயாமல் விவரித்தாள்.

‘‘கீழ போம்போது நின்னுட்டுதான் இருந்தாரு. தலையை குனிஞ்சுட்டு செவுத்தப் புடிச்சு எதையோ தேடறாமாதிரி. பீடி நாத்தம் பொறுக்க முடியலை. காயெல்லாம் வாங்கிட்டு திரும்ப வந்தா கீழ கெடக்கறாரு. ஒடனே கந்தசாமியக் கூப்பிட்டேன். ஆனா அப்பவே தலை தொங்கிருச்சு. பாவம், எதுத்து வீடுன்னுதான் பேரு. ஒரு வார்த்தை இதுவரைக்கும் பேசினதில்லை. மூஞ்சிய கண்ணெடுத்துப் பாத்ததில்லை.''

‘‘நல்ல தெகிரியந்தான் இந்தாக்காவுக்கு. நானெல்லாம் ஓடிருவேன். இவங்க பாருங்க. தண்ணியெல்லாம் எடுத்து மூஞ்சில அடிச்சு, கந்தசாமிய வரச் சொல்லி, டாக்டரையும் வரச்சொல்லி பயப்படாம இருந்திருக்காங்க'' பாப்பாத்தி இன்னொரு பக்கமாய் சக வேலைக்காரம்மாவிடம் கிசுகிசுத்தாள்.

கந்தசாமி விறுவிறுவென மேலே வந்தார் ‘‘ஒரு போன் நம்பர்தான் இருக்கு. ரொம்ப நேரமா எடுக்கலை. இவரோட அக்கா மகனாம். கணபதில இருக்கார்னு நெனக்கறேன். எப்பவாவது வருவாரு. ஒண்ணு ரெண்டு தடவை போன்ல கூப்பிட்டு கேட்டிருக்காரு.''

‘‘வீட்டுக்கு மெயின்டனன்ஸ் யார் கட்டறா?'' அடுக்ககத்தின் குடியிருப்போர் சங்கத்தின் துணைத் தலைவர் வழுக்கைத் தலையில் வேர்வையைத் துடைத்தார்.

‘‘மாசா மாசம் ஒண்ணாந்தேதி அக்கவுண்டுக்கு டான்னு வந்துரும். இவரோட தம்பி மவ. கன்யான்னு. துபாய்ல இருக்கு. ஒரு தடவை இங்க வந்துருக்கு'' மணி தன்னுடைய அலைபேசியை எடுத்தார்.

‘‘வீடு யார் பேர்ல இருக்கு?''

‘‘இவரோட பேர்லதான்னு நெனக்கறேன்.''

‘‘இல்ல சார். இவங்க சம்சாரத்தோட பேர்லதான். நம்மகிட்ட ஓனர்ஸ் ரெஜிஸ்டர் இருக்கில்ல. நான் பாத்திருக்கேன். அவங்க பேருகூட மாலதியோ என்னவோ. இருங்க, எடுத்துட்டு வரேன்''

கந்தசாமி படிகளில் விரைந்தார்.

‘‘இதுக்குத்தான் நான் சொல்றது. ஒவ்வொரு வீட்லயும் யாரு இருக்காங்க, அவசரத்துக்கு யாரைக் கூப்பிடணும், சொந்தக் காரங்க யாருன்னு எல்லாம் ஒரு டேடாபேஸ் இருக்கணும்னு. இப்ப பாருங்க. இந்த மனுசன் செத்துக் கெடக்கறாரு. யாருக்கு சொல்லணும்னே நமக்குத் தெரியலை. வெரி பேட்'' கண்ணாடியைத் துடைத்துக்கொண்டு உதட்டைப் பிதுக்கினார் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான சுந்தரம்.

‘‘இருக்கற எண்பது வீட்டுக்கும் அதுக்கான ஃபார்ம் அனுப்பிச்சிருக்கோம். பதினெட்டு பேர்தான் அப்டேட் பண்ணிருக்காங்க. மத்தவங்கெல்லாம் ரெஸ்பாண்டே பண்ணலை. நாம என்ன பண்ண முடியும்?'' மணி சற்றே குரலுயர்த்தினார்.

ஆட்சேபிப்பதுபோல சுந்தரம் தலையாட்டினார் ‘‘நாமதான் சார் பண்ணணும். இப்ப போலிஸ் கேஸ் ஆச்சுன்னா யாரு பதில் சொல்றது? அசோசியேசன்தானே பொறுப்பெடுக்கணும்.''

‘‘எடுக்கும் சார். அதானே பண்ணிட்டிருக்கோம். அப்பிடியே விட்டுட்டு போயிர்லயே.''

கந்தசாமி டைரியுடன் ஓடி வந்தார் ‘‘நான் சொன்னதுதான் சார். மாலதிங்கற பேர்லதான் வீடு. இவங்க சம்சாரம்தான்.''

‘‘நம்பர் எதும் இல்லயா?''

‘‘இங்கயும் அந்த ஒரு நம்பர்தான் எழுதிருக்கு.''

வீட்டுக்குள்ளிருந்து கிருஷ்ணன் வெளியே வந்தார். கையில் ஒரு தோள் பை. மணியிடம் நீட்டினார் ‘‘இவரு இந்த பையை தோள்ல மாட்டிட்டுதான் எப்பவும் வெளியில போவாரு. இதுல எதாச்சும் இருக்கா பாருங்க.''

*

‘‘ஏய் அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்லை. ஹார்ட் அட்டாக்தான். வராந்தாவில கெடந்திருக்கார். யாரோ பாத்துட்டு தூக்கிட்டு வந்து படுக்க வெச்சிருக்கா. இங்கயே ஒரு டோக்டர். அவர் வந்து பாத்தப்பவே பிராணன் போயிடுத்தாம். என்னோட நம்பர்தானே இங்க இருக்கு. இவா பாவம் நாலஞ்சு தடவை கூப்பிட்டுருக்கா. போன்ல சார்ஜ் இல்லை. கால் வந்ததும் தெரியலை. இப்ப செத்த முன்னாடிதான் பாத்தேன். பெறப்பட்டு வந்துட்டேன். அவனும் கூடதான் இருக்கான். நீங்க லேட் பண்ணாம கௌம்பறதுக்கு வழிய பாருங்கோ. சீக்கிரமா வரணும். அதான். இப்பவே நேரமாயிட்டிருக்கு. அபார்ட்மெண்ட் இல்லியோ'' காதையொட்டி அலைபேசியை வைத்தபடி மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தவருக்கு இன்னும் பதற்றம் தணிந்திருக்கவில்லை.

அவருடன் வந்த இளைஞன் அடிக்கடி தாடியை நீவியபடியே இல்லாத திசையில் எதையோ தேடுவதுபோலவே நின்றான். தொளதொளப்பான அரைக்கால் சட்டை. நிறம் மங்கிய பனியன். மார்பில் என்னவென்று புரியாத ஒரு படம்.

போனை அணைத்துவிட்டு மணியின் அருகில் வந்தார் ‘‘கன்யாகிட்ட சொல்லியாச்சு. உடனே பொறப்பட சொல்லிருக்கேன். என்ன ஏற்பாடுன்னு முடிவானதும் கூப்புடுவாங்க.''

‘‘இங்க வேற யாரும் இல்லியா?''

‘‘சித்தி பொண்ணு ஒருத்தி திருவனந்தரத்துல இருந்தா. இப்பதான் ரெண்டு மாசம் முன்னாடி ஆஸ்திரேலியா போயிட்டா. பாலக்காடு பக்கத்துல இருந்த மாமா ஒருத்தர் போன மாசம் தவறிட்டார். மத்தவங்க யாரும் இங்க இல்லை. ஆமதாபாத்துல அத்தையோட சித்தப்பா வழியில ஒருத்தர் உண்டு. ஆனா யாருக்குமே இவரோட காண்டாக்ட் இல்லை.''

மணி அலுப்பைக் காட்டிக்கொள்ளவில்லை ‘‘இருக்கட்டும். துபாய்ல இருந்து வரதுன்னா நாளைக்குத்தானே முடியும். அது வரைக்கும் என்ன செய்யறது?''

இளைஞன் நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்களில் கலக்கம்.

‘‘இல்ல சார். கன்யா உடனே ஏற்பாடு பண்றேன்னு சொல்லிருக்கா. அத்தையை அழைச்சிட்டு வந்துடுவா. நீங்க ஒண்ணும் கவலப்படாதீங்க.''

‘‘இப்ப நாங்கதானே கவலப்பட வேண்டி இருக்கு. மனுஷன் செத்துப்போய் நாலு மணி நேரமாயிடுச்சு. இருட்டிடும். ஒரு பார்மாலிட்டியும் பண்ணாம அப்பிடியே போட்டுல்ல வெச்சிருக்கு. ஏதாச்சும் ஒரு முடிவைச் சொல்லுங்க. நீங்கதான இங்க இருக்கீங்க.'' சுந்தரம் கண்ணாடியைக் கழற்றித் துடைத்தார்.

இளைஞன் முகத்தைத் துடைத்தபடியே முன்னால் வந்தான் ‘‘இல்ல அங்கிள். ஐஸ் பாக்ஸ் இப்ப வந்துரும். பார்மாலிட்டி என்னன்னு நீங்க கேட்டு பண்ணிடுங்கோ. மத்தபடி கிரிமேஷன் நாளைக்குத்தானே பண்ண முடியும்.'' சொல்லி முடிப்பதற்குள் அவன் முகம் சிவந்திருந்தது.

இதைக் கேட்டவுடனே உடைந்து அழுதார் ‘‘மனுஷனுக்கு இப்பிடியா சாவு வரணும். யாருமில்லாம அனாதையாட்டமா? அப்பிடியென்ன வைராக்கியம். ரெண்டு பேரும் மொகம் பாத்து வருஷம் பத்து பதினாலு வருஷமாயிடுச்சு. அவளாவது அனுசரிச்சு போயிருக்கலாம். ரெண்டு பேருக்கும் அப்டியொரு ரோஷம். கண்றாவி.''

*

படிகளின் வழியே ஐஸ் பெட்டியை மேலே கொண்டு வர முடிந்தது. ஆனால், வீட்டுக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. வாசலிலிருந்து கூடத்துக்கு உள்ளே திருப்பும்போது சுவரில் இடித்தது.

‘‘ஒண்ணும் பண்ண முடியாது. இங்க இப்பிடியே வராந்தாவுலதான் வெக்கணும்'' கந்தசாமி தயக்கத்துடன் சொன்னதும் ஆட்சேபணை குரல்கள் எழுந்தன.

‘‘அதெப்பிடி. நாலுபேர் நடமாடற எடத்துல பொணத்தைப் போட்டு வெக்க முடியுமா?''

‘‘கொழந்தைகெல்லாம் இருக்காங்க. பயந்துறாதா?''

‘‘ராத்திரியெல்லாம் யாரும் வெளியில வர முடியாது. போ முடியாது. அதெல்லாம் முடியாது.''

‘‘விடிஞ்சும் விடியாம பொணத்து மூஞ்சில முழிக்க முடியாது.''

தர்மசங்கடத்துடன் இளைஞன் நகத்தைக் கடித்தபடி நிற்க, மணி கையமர்த்தினார் ‘‘நம்ம வீட்ல ஒண்ணுன்னா இப்பிடியா பேசிட்டிருப்போம். சம்பந்தப்பட்டவங்களும் இங்க இல்ல. பாவம், இவங்கதான் இப்போதைக்கு இருக்காங்க. இப்பிடி வெளியில வெச்சிருவோம். ஒரு ராத்திரிதான். கொஞ்சம் சப்போர்ட் பண்லாமே.''

‘‘ஆமா உங்க வீட்டு வாசல்ல வெக்கலான்னா ஒத்துக்குவீங்களா?''

‘‘எனக்கொண்ணும் பிரச்சினையில்லை. அங்கதான் வெக்கலாம்னா தூக்கிட்டு போலாம்.''

‘‘அதெல்லாம் வேணாங்க. பாவம், யாருமில்லாம தனியா போன உசுரு. இனியும் அதை அலைக்கழிக்க வேணாம். இங்கயே வெச்சிக்கலாம்'' சரசு கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

*

303 ஆம் எண் வீட்டிலிருந்து மணி இரண்டு நாற்காலிகளை வாங்கி வந்தார் ‘‘ரெண்டு பேரும் எத்தனை நேரம் நிப்பீங்க? உக்காருங்க.''

சுவரில் சாய்ந்து நின்ற அவர்கள் இருவரும் மறுத்தனர் ‘‘பரவால்லேங்க. வேணாம். இப்பிடியே உக்காந்துக்கறோம்.'' தரையில் அமர்ந்தனர்.

லேசான உறுமல் சத்தத்துடன் ஐஸ் பெட்டி இயங்கிக்கொண்டிருக்க உள்ளே வைக்கப்பட்டிருந்தது கிழவரின் உடல்.

‘‘எத்தனை மணிக்கு வந்து சேருவாங்க?''

‘‘நாளைக்கு மத்தியானம் கொச்சின் வந்து சேருவாங்களாம். அங்க இருந்து அப்பறம் நாலு மணி நேரம். இருட்டறதுக்குள்ள வரணும்னு கேட்டிருக்கேன். வந்துருவாங்க.''

‘‘எத்தனை பேர்?''

‘‘அத்தையும், கன்யாவுந்தான். இவரோட தம்பி மக. இவர் மேல பாசம் காட்டறது அவ ஒருத்திதான். எங்க யாருக்கும் இவரோட ஒத்து வராது. அங்க வந்து இருந்துருன்னு பல நாள் சொல்லிருக்கா. இவர்தான் புடிவாதமா இங்கயே இருந்துட்டார்.''

‘‘சார், இவர் பேர் என்ன? டாக்டர் சர்டிபிகேட் வேணும்னு சொன்னீங்கல்ல.''

மணியின் முகத்தை ஏறிட்டார். யோசனையில் நெற்றி சுருங்கிற்று ‘‘பேரு... என்னவோ சொல்லுவாங்களே.''

இளைஞன் பையிலிருந்து அலைபேசியை எடுத்தான். விரல்கள் தாடியில் அலைந்தன.

‘‘ஞாபகத்துக்கு வர்ல. கன்யாகிட்ட கேட்டு சொல்றேன் சார்'' தலையைக் குனிந்துகொண்டார்.

‘‘பரவால்லே. காலையிலதான் டாக்டர்கிட்ட சொல்லணும். அப்பறமா யோசிச்சு சொல்லுங்க.''

பையிலிருந்த அலைபேசி ஒலிக்க எடுத்து பேசினார் மணி.

‘‘உங்க ரெண்டு பேருக்கும் டிபன் வாங்கிட்டு வரச் சொன்னேன். நீங்க கீழே போய் சாப்பிட்டு வாங்க.''

‘‘அய்யோ அதெல்லாம் ஒண்ணும் வேணாம். பாத்துக்கலாம்.''

இளைஞன் எழுந்தான். கைகளை நீட்டி மடக்கியபடி செருப்பை போட்டுக்கொண்டான். அவரும் எழுந்துகொண்டார்.

ஒருமுறை சவப்பெட்டியை வெறித்துப் பார்த்துவிட்டு இருவரும் படிகளில் இறங்கி நடந்தனர்.

ஏப்ரல், 2022