பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர் சமந்தா ஹார்வி என்பவருக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த நாவலுக்கான புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
அவர் எழுதிய ஆர்பிட்டல்(Orbital) என்கிற நாவலுக்கு இந்த பரிசு. இது அவர் கொரோனா காலகட்டத்தில் எழுதியது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் ஆறு விண்வெளி வீரர்கள் வாழ்வில் ஒரு நாளில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய புனைவு இது. தனிமனித வாழ்வு, கூட்டு மானுட வாழ்வின் மேன்மைகளைப் பற்றி பேசுவதன் மூலம் இவ்வுலகின் அழகை ரசிக்கக் கோரும் நாவல் இது என்கிறார்கள்.
புக்கர் பரிசு பெறும் முதல் விண்வெளி நாவல் இது எனலாம்.
இந்த ஆண்டு புக்கர் இறுதிப்பட்டியலுக்குத் தேர்வான ஆறு பேரில் ஐவர் பெண் எழுத்தாளர்கள். இதுவே ஒரு சாதனை.
சமந்தா ஹார்வி இதுவரை 6 நாவல்கள் எழுதி உள்ளார். தன் தூக்கமின்மை பற்றி எழுதிய புனைவல்லாத புனைவான ‘The shapeless Unease’ என்ற நாவலும் இதில் அடங்கும். 2009-இல் இவர் முதல் நாவலான The Wilderness வெளியானது.
புக்கர் பரிசு இந்திய மதிப்பில் சுமார் 53 லட்ச ரூபாய் மதிப்பிலானது. 1969-இல் இருந்து வழங்கப்படுகிறது.