கவிதை

சில வேற்றுமொழிக் காதல் கவிதைகள்

தேர்வும் மொழியாக்கமும்: சுகுமாரன்

சுகுமாரன்

ஒரு காதல் கவிதை

என்னிடம் சொல்லு, எப்போதாவது

உன்னைப் நெருங்கப் பிடித்து உன் பாத வளைவில்

நான் முத்தமிட்டிருந்தால்

பிறகு கொஞ்ச நேரம்

என் முத்தம் நசுங்கி விடக் கூடாதென்ற அச்சத்தில்

நொண்டித்தானே நடந்திருப்பாய்.

- நிகிதா ஸ்டானஸ்கியூ / ரொமானியா

இன்னும் கூட

இன்னும் கூடப் பாதுகாப்பில்லாமல் உணரும்

பொருத்தமற்ற புதுமணத் தம்பதியர்

இருவரில் ஒருவர்போல

கடவுளைத் தேடியபடியே சொல்லிக்கொண்டிருக்கிறேன்

'என்னை முத்தமிடேன்'.

- ஹபீஸ் / பாரசீகம்

தூரத்து வெளிச்சம்

 

காதல் மௌனமாக வந்தது

வெறுமொரு கனவுபோலத் தோன்றியது

எனவே   நான்

காதலை உள்ளே வரவேற்கவில்லை

காதல் கதவைத் தாண்டிச் சென்றதும் விழித்தெழுந்தேன்

அந்த உடலற்ற கனவின் பின் விரைந்து செல்கையில்

இருளில் கரைந்தது அது

காதலின் தூரத்து வெளிச்சம்

மிஞ்சியது உதிரச் சிவப்புக் கானலாக.

 -ரவீந்திர நாத் தாகூர்  

நெற்றியில் முத்தமிடுவது...

நெற்றியில் முத்தமிடுவது வேதனையைத் துடைப்பதற்காக

நான் உன் நெற்றியில் முத்தமிடுகிறேன்

கண்களில் முத்தமிடுவது உறக்கமின்மையை நீக்குவதற்காக

நான் உன் கண்களில் முத்தமிடுகிறேன்

உதடுகளில் முத்தமிடுவது நீர் அருந்துவதற்காக

நான் உன் உதடுகளில் முத்தமிடுகிறேன்

நெற்றியில் முத்தமிடுவது ஞாபகத்தைத் துடைப்பதற்காக

நான் உன் நெற்றியில் முத்தமிடுகிறேன்.

-மரீனா ஸ்வெதயேவா / ரஷ்யா

கருகிய கவிதை

நான் கருகித் தீரவிருக்கும்

ஒரு கவிதை

நீங்கள் யூகித்ததுபோலவே

ஒரு பெண்பிள்ளையின் காதல் கவிதை.

பெண்பிள்ளைகளின் காதல் கவிதைகள்

சில சமயங்களில் மட்டுமே

நெருப்பிலிருந்து தப்புகின்றன

அப்பாவின் நெருப்பிலிருந்தும் அண்ணனின் நெருப்பிலிருந்தும்

அம்மாவின் நெருப்பிலிருந்தும் கூட:

அவர்களுடைய அம்மாவிடமிருந்து பரவியது அந்த நெருப்பு.

சில பெண்பிள்ளைகள் மட்டுமே

இந்த நெருப்பிலிருந்து அரைகுறையாகத் தப்புகிறார்கள்

முழுவதும் கருகாத அவர்களை

நாம் சில்வியா பிளாத் என்று

அக்மதோவா என்று

கமலாதாஸ் என்று அழைக்கிறோம்

சில பெண்பிள்ளைகள்

நெருப்பின் விதியிலிருந்து தப்புவதற்காக

காதலுக்கு

பக்தியின் முகத்திரையை அணிவிக்கிறார்கள்

அப்போது ஒரு மீரா பிறக்கிறாள்

ஒரு ஆண்டாளும் ஒரு மகாதேவி அக்காவும் பிறக்கிறார்கள்

ஒவ்வொரு கன்னியாஸ்திரீயும்

நித்திய இளைஞரான யேசுவுக்கான

கருகிய காதல் கவிதையே

அபூர்வமாக, அதி அபூர்வமாக

ஒரு பெண்பிள்ளை உலகைப் பார்த்துச் சிரிக்கும்

வலிமை பெறுகிறாள்

பெண்களுக்கு மட்டும் சாத்தியமான மென் பரிவுடன்.

அப்போது நாம் அவளுக்கு

சிம்போர்ஸ்கா என்று பெயரிடுகிறோம்

அப்புறம்

சாப்போ தப்பியது

அவளுடைய காதல் கவிதைகளில்

பெண்பிள்ளைகளையே முன்வைத்துப் பேசியதனால்தான்.

- சச்சிதானந்தன்

உன்னிடம் மன்றாடுகிறேன், ஸோங்ஸி.  

உன்னிடம் மன்றாடுகிறேன், ஸோங்ஸி

எங்கள் முற்றத்தில் ஏறாதே

எங்கள் வில்லோ மரங்களை முறித்து விடாதே

நான் வில்லோ மரங்களைமேல் அக்கறைகொள்கிறேன் என்பதால் மட்டுமல்ல

என் தாய் தகப்பனுக்கு அஞ்சுகிறேன்

ஆம், உன்னைக் காதலிப்பது போன்றே

என் பெற்றோர் என்னசொல்லக் கூடுமென்றும் அஞ்சுகிறேன்

உன்னிடம் மன்றாடுகிறேன், ஸோங்ஸி

எங்கள் சுவரில் ஏறாதே

எங்கள் மல்பெரி மரங்களை முறித்து விடாதே

நான் மல்பெரி மரங்கள்மேல் அக்கறைகொள்கிறேன் என்பதால் மட்டுமல்ல

என் சகோதரர்களுக்கு அஞ்சுகிறேன்

ஆம், உன்னைக் காதலிப்பது போன்றே

என் உடன்பிறந்தோர்  என்னசொல்லக் கூடுமென்றும் அஞ்சுகிறேன்

உன்னிடம் மன்றாடுகிறேன், ஸோங்ஸி

எங்கள் தோட்டத்துக்குள்ளே ஏறாதே

எங்கள் எல்ம் மரங்களை முறித்து விடாதே

நான்  எல்ம் மரங்கள்மேல்  அக்கறைகொள்கிறேன் என்பதால் மட்டுமல்ல

ஊர்ப் பேச்சுக்கு அஞ்சுகிறேன்

ஆம், உன்னைக் காதலிப்பது போன்றே

ஊரவர் சொல்லும் புரளிக்கும்  அஞ்சுகிறேன்

- சீனப் பழங்கவிதை

பிப்ரவரி, 2019.