ஓவியம் ரோகிணி மணி
கவிதை

காதல் கவிதைகள் : பாப்லோ நெரூதா

அயலக காதல் கவிதைகள்

சுகுமாரன்

உனக்கு என்ன ஆயிற்று?

உனக்கு என்ன ஆயிற்று?

நமக்கு, நமக்கு என்ன ஆயிற்று?

காயப்படுத்தும்விதம்

நம்மை இறுகப் பிணைத்த முரட்டுச்சரடு நமது காதல்.

இந்தக் காயத்திலிருந்து விடுபடுவதெனில்

அது

 மீண்டும் ஒரு புதிய கட்டை உண்டாக்கி

இரத்தம்சிந்தி ஒன்றாக எரிந்துபோக

நம்மை சபிக்கும்.

உனக்கு என்ன ஆயிற்று?

உன்னிடம் நான் பார்ப்பது

எல்லாக் கண்களையும்போன்று இரண்டு கண்கள்

உன்னிடம் நான் பார்ப்பது

நான் முத்தமிட்டிருந்த ஆயிரம் வாய்களில் ஒரு வாய்

அவற்றைவிட அழகானதென்று வைத்துக்கொள்.

எந்த நினைவும் மீதமிராமல்

என் உடலின்கீழ் குழைந்திறங்கிய

பல உடல்களில் ஓர் உடல்.

ஒரு கோதுமைநிற ஜாடிபோல

காற்றில்லாமல்

ஓசையில்லாமல்

வெறுமையாக, எவ்வளவு வெறுமையாக

இந்த உலகத்தைத் தாண்டிப்போனாய் நீ!

பூமிக்கடியில் இடைவிடாமல் அகழ்ந்துகொண்டிருக்கும்

என் கைகளுக்கான வலுவை

உன்னிடம் பயனற்றுத் தேடினேன்.

உனது சருமத்துக்கிடையில்

உனது கண்களுக்கிடையில் ஒன்றுமில்லை.

விம்மி உயராத உனது இரண்டு முலைகளுக்கிடையில்

எதற்கென்று புரியாமல் பாடிக்கொண்டு ஓடுகிறது

கண்ணாடிப் பளபளப்புடன் ஒரு பிரவாகம்.

எதற்காக எதற்காக எதற்காக

என் அன்பே, எதற்காக?

உனது பாதங்கள்

உன் முகத்தைப் பார்க்க முடியாதபோது

உன் பாதங்களைப் பார்க்கிறேன்.

வளைந்த எலும்பாலானவை உன் பாதங்கள்,

திடமான சின்னப் பாதங்கள்

அவையே உன்னைத் தாங்குகின்றனவென்றும்

உனது இனிய பாரம்

அவற்றின் மேல்தான் உயர்கிறதென்றும்

எனக்குத் தெரியும்.

உன் இடை, உன் மார்பகங்கள்,

உன் முலைக்காம்புகளின் இரட்டைச் சிவப்பு,

சற்றுமுன் பறந்துபோன

உன் கண்களின் கூடுகள்,

உன் விரிந்த கனி வாய்,

உன் செந்நி்ற முடிச்சுருள்.

ஆனால்,

நான் உன் பாதங்களைக் காதலிக்கிறேன்.

ஏனெனில்,

அவை பூமியிலும் காற்றிலும்

நீரிலும் நடந்தன-

என்னைக் கண்டடையும்வரை.

பரிசுத்தமான இதயத்துடனும்

களங்கமற்ற கண்களுடனும்

என் அழகே,

உன்னைப் போற்றுகிறேன்.

என் ரத்தத்தைக் கட்டுப்படுத்துகிறேன்

அதனால்

அலைபுரளும் உன் வடிவைத் தொடர்கிறேன்

பூமியின் சுகந்தமுள்ள வனத்திலோ

கடலின் ஓசையுள்ள நுரையிலோ படுப்பதுபோல

என் கவிதையில் நீ கிடந்துகொள்ளலாம்.

நிர்வாண அழகியே!

ஒலி அல்லது காற்றின் புராதனத் தொடுகையால்

வளைகிற உன் கால்கள்

அமெரிக்கக்கடல்களின் பேரொளியில் பிறந்த

சுருள்சிப்பிகள்போன்ற உன் காதுகள்

உயிரொளியுடன் ததும்பும்

சமநிறைவுள்ள உன் முலைகள்

கண்களின் இரட்டை நிலக்காட்சிகளை

வெளிப்படுத்தவோ மறைக்கவோசெய்யும்

சோளப்பட்டுபோன்ற உன் இமைகள்

நிர்வாணத்தில் அழகு எது?

உனது முதுகுவிளிம்பு

வெளிப்பிரதேசத்திலிருந்து உன்னைப் பிரிக்கிறது

ஆப்பிளின் அரைக்கோளங்களாகித் ததும்புகிறது

உனது உடலின் கோட்டுருவம்

உனது அழகை

காய்ச்சிய பொன்னின் இருதூண்கள்போலவோ

தூய வெள்ளைக்கல் தூண்கள்போலவோ

பிரித்துக்கொண்டிருக்கிறது

உனது பாதத்தில் இணைக்கிறது

அதிலிருந்து

உனது உடற்பொருத்தமுள்ள இரட்டைமரம்

மீண்டும் உயர்கிறது; அனல் கொள்கிறது.

நெருப்பு மலராக

மெழுகுவர்த்திகளின் திறந்த வளையமாக

பூமியும் கடலும் சந்திக்கும்போது

முதிர்ந்த கனியாக உயர்கிறது.

எதிலிருந்து தொகுக்கப்பட்டது உன் உடல்?

வைடூரியத்திலிருந்தா

ஸ்படிகத்திலிருந்தா

கோதுமை மடல்களிலிருந்தா?

இளம் சூட்டில் அப்பம்போல உருவாக்கப்பட்டதா?

வெள்ளி படர்ந்த குன்றுகளின் சமிக்ஞையிலிருந்தா?

ஒற்றைமலரிதழின் பள்ளத்தாக்கிலிருந்தா?

சூரியகாந்தி ஆழத்தின் இனிமையிலிருந்தா?

தூய, நேர்த்தியான பெண்வடிவம்

அங்குதான் உருவாகிக் காத்திருந்ததா?

உனது உடல் விரிந்து

திணரச்செய்யும் பிரகாசமான பனித்துகளை

உன்னிலிருந்து கொட்டுகிறது,

உனக்குள்ளே நீ எரிந்துகொண்டிருந்ததுபோல...

பூமிமீது அத்தனை வெளிச்சம் விழுவதேயில்லை.

உனது சருமத்துக்குக் கீழே உயிரோடிருக்கிறது நிலவு.

நீ என்னை மறந்தால்...

நீ என்னை மறந்தால்...

ஒரு விஷயம் நீ தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்

அது இவ்வாறு:

பளிங்கு நிலாவையோ

எனது ஜன்னலில் தென்படும் மந்தமான இலையுதிர்காலத்தின்

சிவந்த கிளையையோ

நான் பார்த்தால்...

கணப்பருகே நுண்ணிய சாம்பலையோ

சுருங்கிய விறகுக்கட்டையையோ

நான் தொட்டால்...

வாசனைகளும் ஒளியும் உலோகங்களும்

இருக்கும் எல்லாமும்

எனக்காகக் காத்திருக்கும் உனது தீவுகளைநோக்கிப்போகும்

சிறு படகுகளாக

ஒவ்வொன்றும் என்னை உன்னிடமே கொண்டுசேர்க்கின்றன.

நல்லது,

இப்போது

என்னைக் காதலிப்பதை நீ

கொஞ்சம்கொஞ்சமாக நிறுத்தினால்

உன்னைக் காதலிப்பதை நானும்

நிறுத்தி்விடுவேன் கொஞ்சம்கொஞ்சமாக.

திடீரென்று

நீ என்னை மறந்தால்,

எனக்காகக் காத்திராதே,

நான் ஏற்கனவே உன்னை மறந்திருப்பேன்.

எனது வாழ்வில் கடந்துபோகும்

பதாகைகளின் காற்று

நீண்டதென்றோ கிறுக்குத்தனமானதென்றோ

நீ நினைத்தால்...

நான் வேரூன்றியிருக்கும் இதயத்தின் கரையிலேயே

என்னை விட்டுப்போகலாமென்றோ

நீ முடிவெடுத்தால்...

ஞாபகம் வைத்துக்கொள்,

அதே நாள்

அதே நேரம்

என் தோளை உயர்த்துவேன்

என் வேர்கள் வேறிடத்தில் பதியும்.

ஆனால்

ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு மணிநேரமும்

நீ எனக்கானவள் என்று

மாற்றமுடியாத இனிமையுடன் நீ உணர்ந்தால்...

ஒவ்வொரு நாளும்

என்னைத்தேடி உனது உதடுகளில் ஒரு மலர் படர்ந்தேறினால்...

என் காதலியே

என் சொந்தமே

எல்லா நெருப்பும் என்னுள் திரும்பவரும்

என்னுள் எதுவும் அணையாது...மறவாது.

அன்பே,

எனது காதல் உனது காதலால் வளர்கிறது.

நீ வாழும் காலம்வரை

என்னைவிட்டு விலகாமல் உன் அணைப்பிலிருக்கும்.

அரசி

நான்

உன்னை அரசியாக்கினேன்

உயரமானவர்கள், உன்னைவிட உயரமானவர்கள் உண்டு

தூய்மையானவர்கள், உன்னைவிடத் தூய்மையானவர்கள் உண்டு

அழகானவர்கள், உன்னைவிட அழகானவர்கள் உண்டு.

எனினும்

நீ ஒருத்திதான் அரசி.

தெருக்களைக் கடந்து நீ போகும்போது

எவரும் உன்னை அடையாளம் காண்பதில்லை

எவரும் உன் ஸ்படிகக் கிரீடத்தைக் கவனிப்பதில்லை

எவரும் நீ மிதித்து முன்னேறும் செம்பொன் கம்பளத்தைப் பார்ப்பதில்லை.

எனினும்

நீ என்முன் தோன்றும்போது

என் உடலில் எல்லா நதிகளும் ஒலிக்கின்றன

மணிகள் ஆகாயத்தைக் குலுக்குகின்றன

வாழ்த்துப் பாடல் பூமியை நிறைக்கிறது.

நீயும்

நானும் மட்டுமே

நீயும் நானும் மட்டுமே, என் அன்பே

அதைக் கவனிக்கிறோம்.

காதல் (வசன கவிதை)

உன்னால்தான், பூக்கள் மலரும் தோட்டத்தில், வசந்தத்தின் சுகந்தங்களால்

நான் வலியுணர்கிறேன்.

     உனது முகத்தை மறந்துபோய்விட்டேன்; இனியும் உன் கைகள் நினைவிலில்லை;

உனது உதடுகள் என் உதடுகளுக்கிடையில் எப்படி ருசித்தன?

     உன்னால்தான், பூங்காக்களில் தூங்கும் குரலும் பார்வையுமில்லாத வெண்ணிறச்

சிலைகளை நான் நேசிக்கிறேன்.

  மலர், அதன் மணத்துடன் பிணைந்திருப்பதுபோல நான், உன்னப்பற்றிய மங்கிய

நினைவுகளுடன் பிணைந்திருக்கிறேன்; ஒரு காயத்தின் வலியுடன் வாழ்கிறேன்; நீ

என்னைத் தொட்டால் பழுதுபார்க்கமுடியாத சேதத்தை எனக்குச் செய்தவளாவாய்.

     உனது வருடல்கள் துக்கத்தின் சுவரில் படரும் திராட்சைக்கொடிகள்போல

என்னை மூடுகின்றன.

     உனது காதலை மறந்துவிட்டேன் நான்; எனினும் ஒவ்வொரு ஜன்னலிலும்

உனது தோற்றத்தைப் பார்க்கிறேன்.

     உன்னால்தான் வசந்தத்தின் அடர்ந்த நறுமணம் என்னை நோகடிக்கிறது.

உன்னால்தான், உயர்ந்தெழும் நட்சத்திரங்கள், வீழும் எரிகற்கள் என்று ஆசையை

விரைவுபடுத்தும் அடையாளங்களைத் தேடுகிறேன்.

குளிர்கால ஒப்பந்தம்

மெட்டில்டே உருஷியா,

எனக்குள்ளதையும் இல்லாததையும்

நானாக இருந்ததையும் நானல்லாமலிருந்ததையும்

இங்கே உனக்காக விட்டுப்போகிறேன்.

என் அன்பு

உனது கைகளைவிட்டிறங்க மனமில்லாத ஒரு குழந்தை

அதை

என்றென்றைக்குமாக உன்னிடம் ஒப்படைக்கிறேன்

நீயே எனக்கானவள்.

நீயே எனக்கானவள்

தென் திசையிலுள்ள மெல்லிய மரங்களைவிட

ஆகஸ்டுமாத ஹேசல்மரங்களைவிட

காற்றால் அதிகம் பதப்படுத்தப்பட்டவள்.

எனக்கு நீ ருசியானவள்

மகத்தான இனிப்பகம்போல.

உனது இதயம் பூமியால் உருவானது

ஆனால், உனது கைகள் சொர்க்கத்தில் உருவானவை.

நீ சிவப்பானவள்; உறைப்பானவள்

நீ வெண்மையானவள்; வெங்காய ஊறுகாய்போல கரிப்பானவள்

மனித ஸ்வரம் ஒவ்வொன்றிலும் சிரிக்கும் பியானோ நீ

உனது இமைகளிலிருந்தும் கூந்தலிலிருந்தும்

என்மேல் கவிகிறது இசை.

உனது பொன்னிற நிழலில் புரள்கிறேன் நான்.

ஆழ்நீர்ப் பவழப்புற்றுக்களில்

முன்பே நான் பார்த்திருந்ததுபோன்ற

உன் காதுகளால் பரவசமாகிறேன்

உனது நகங்களைப் பெற

கடலில் மீன்களோடு போராடினேன்.

வேர்களில் இருளுள்ள கடற்குளிர்காலத்துக்காக

திராட்சைபோன்ற மூடுபனிக்காக

வசீகரமான நாட்டுப்புற சூரியனுக்காக

உன்னிடம் கடமைப்பட்டவன் நான்.

துக்கங்கள் தம்மையே தொலைக்கும் மௌனவெளிக்காக

ஒளிரும் மகுடத்துடன் மகிழ்ச்சியில் நிமிரும் சமவெளிக்காக

உன்னிடம் கடமைப்பட்டவன் நான்.

தளையிடப்படாத எனது  புறாவே,

கொண்டையுள்ள எனது காடையே,

எனது மலைக்குருவியே,

கோய்ஹியூகோவிலுள்ள எனது உழத்தியே,

எல்லாவற்றுக்குமாக உன்னிடம் கடமைப்பட்டவன் நான்.

நாம் நாமாவது சிலநேரம் தடைபட்டால்

நமது வருகையும் போக்கும் நின்றுபோனால்

ஏழு புழுதிப்படலங்களுக்கடியில்

மரணத்தின் வறண்ட காலடியில்

அன்பே,

உற்சாகத்துடனும் புதிராகவும் நாம் ஒன்றாவோம்.

நமது வேறுபட்ட சிறகுகள்

நமது பெருமிதமான விழிகள்

ஒருபோதும் இணையாத நம் கால்கள்

ஒருபோதும் பதியப்படாத நம் முத்தங்கள்

எல்லாம் மீண்டும் ஒன்றாகும்.

ஆனால்,

இந்தக் கல்லறை நெருக்கத்தால் நமக்கென்ன நன்மை?

வாழ்க்கை நம்மைப் பிரிக்காமலிருப்பதாக.

மரணத்தைக் குறித்து யாருக்கென்ன கவலை!

உனது விழிகள் தெற்கிலிருந்து தெற்காக விரிகிறது

உனது புன்னகை கிழக்கிலிருந்து மேற்காகப் படர்கிறது

உனது காலடிகள் காணக்கிடைக்காதவ

உனது கூந்தலில் விடிவதில் குதூகலிக்கிறது சூரியன்

என்னுடல்போலவே

உன் உடலும் முகமும்

இறுகிய பிரதேசத்தில் உருவானவை

மழையில் நீராடிய சடங்குகளிலிருந்து

புராதன பூமியிலிருந்து

பலிபீடங்களிலிருந்து உருவானவை.

இரத்தம்படிந்த நமது மண்ணிலெங்கும்

பியோ-பியோ நதி பாடுகிறது.

கானகத்திலிருந்து

ஒவ்வொரு ரகசிய சுகந்தத்தையும் நீ எடுத்துவந்தாய்

உனது பக்கவாட்டுத்தோற்றத்தின் ஒளிர்வு

இழந்துபோன அம்புபோன்றது

முதிர்ந்த படைவீரனின் பதக்கம்போன்றது.

ஆதிமொழியாலும் அன்பாலும்

நீ என்னை வென்றாய்.

ஏனெனில்

உனது வாய்

புராதன வாசகங்களைக்கொண்டுவந்தது

வேறொரு காலத்திலிருந்து

கானகச் சந்திப்புகளைக்கொண்டுவந்தது

இருண்ட பரம்பரைமுரசுகளைக்கொண்டுவந்தது

தொலைதூரத்தில் அவை தெளிவற்று முழங்குவதை

திடீரென்று கேட்டேன்.

புராதன கொடிப்புதர்களை நெருங்கினேன்.

அன்பான காதலியே, எனது அரவ்கானா,

உனது வாயில் என் இரத்தத்தைப் பதித்தேன்.

உனக்காக நான் எதை விட்டுப்போவேன்

மெட்டில்டே உருஷியா,

கருகும் இலைகளின் மணமும்

நாவற்பழங்களின் வாசனையும்

உனது ஸ்பரிசத்திலேயே இருக்கின்றன.

கோக்குவெனஸ் கடலின் அரைவெளிச்சமும்

சிலியின் பூங்கொடிகளின் சுகந்தமும்

உனது பரந்த முலைகளுக்கிடையிலேயே இருக்கின்றன.

மூடுபனியின் உச்சகட்டம்

மறைவிடங்களின் உச்சகட்டம்

பூமி மல்லாந்துபடுத்து மூச்சுவாங்குகிறது

இலைகள் மாதக்கணக்காக உதிர்கின்றன

நீயோ

எனது தெளிவற்ற கையெழுத்திலிருந்து

பூச்சிகளையும் சிலந்திவலைகளையும் பச்சைப்பதிவுகளையும்

வாசித்தெடுக்க

ஆர்வத்துடனும் நிதானத்துடனும்

என் கவிதைமேல் சாய்ந்திருக்கிறாய்.

சிங்கம்போல மெல்ல நடப்பவளே,

உனது கைகளின் நேர்வழி இல்லாமற்போனால்

நான் எங்கே உலவுவேன்?

மனமோ முடிவோ இல்லாமல்

நான் எங்கே உலவுவேன்?

நெருப்பாலோ பனியாலோ உந்தப்பட்ட

எந்தத் தொலைதூரப்பேருந்தில் பயணம்போவேன்?

குயவன்

உனது முழு உடலும்

எனக்கென்றே விதிக்கப்பட்ட

மதுக்குவளை அல்லது மெல்லிய இனிமையைத் தாங்கியிருக்கிறது.

எனது கைகளைப் படரவிடும் ஒவ்வொரு இடத்திலும்

எனக்கென்றே காத்திருக்கும் ஒரு புறாவை உணர்கிறேன்.

என் அன்பே,

எனது அந்தரங்கக் குயவனின் கைகள்

களிமண்ணால் உன்னை வனைந்ததுபோல.

உனது கால்கள், உனது முலைகள், உனது இடை

எதுவும்

தாகிக்கும் பூமியின் வெற்றுவெளியில்

வடிவமிழந்ததுபோல என்னுள் இல்லை.

ஆனால்,

ஒன்றிணைந்த நாமோ

ஒரு நதிபோல

ஒரு மணல் துகள்போல முழுமையானவர்கள்.

கவிதைகள்: பாப்லோ நெரூதா

தமிழில்: சுகுமாரன்

பிப்ரவரி, 2019.