விஷ்ணுபுரம் விருது விழா 
இலக்கியம்

‘அது ஒரு வெல்டிங் வேலை!’ - குமரகுருபரன் விருது விழா! 

அபூர்வன்

கடந்த ஞாயிற்றுக்கிழமை( 23 .06 .2024) சென்னை கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்ற குமரகுருபரன் -விஷ்ணுபுரம் கவிஞர் விருது விழா ஒரு முழுநாள் மகிழ்வாக அமைந்து நிறைவு தரும் ஒன்றாக இருந்தது.

காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்த விழாவில், முதலில் விஷ்ணுபுரம் வெளியீடாக உருவாகி இருக்கும் குமரகுருபரன் எழுதிய முழுக்கவிதைகள் தொகுதியை குமரகுருபரனின்  இளவல்களான ஒளிப்பதிவாளர் கார்த்திக் அம்ரே  மற்றும்  ஊடகவியலாளர் அதிஷா வெளியிட எழுத்தாளர் ரா.செந்தில்குமார் (டோக்கியோ) பெற்றுக் கொண்டார்.

முதல் அமர்வாக சிறுகதை ஆசிரியர்களுடன் உரையாடல் நடைபெற்றது. இதில் எழுத்தாளர் ஜெயன் கோபாலகிருஷ்ணன், அண்மையில் யுவபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டு இலக்கிய வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தது இனிய உரையாடலாக அமைந்தது. இந்த அமர்வைப் பேராசிரியர் பத்மநாபன் நெறிப்படுத்தினார். நெறிப்படுத்திய அவரே சம்பந்தப்பட்ட பங்கேற்பாளர்களின் படைப்புகளைப் படித்து விட்டு  சரியான முன் தயாரிப்புடன் வந்திருந்தார். பங்கேற்பாளர்கள் குறித்த அவரது அறிமுகமும்  கேள்விகளும்  அவரது ஈடுபாட்டைக் காட்டியது.

அடுத்து 11:15 -க்கு கவிஞர் அரங்கு அமர்வில் நடைபெற்ற கவிஞர்களுடனான உரையாடலில் கவிஞர்கள் வ. அதியமான் மற்றும் சம்யுக்தா மாயா பங்கேற்றனர். கவிதைகள் சார்ந்த பலவிதமான கேள்விகளைக் கவிதை எழுதும் கவிஞர்களும் வாசகர்களும் கேட்ட போது, சுவையாகவும் உள்ளடக்கத்தை விட்டு நழுவிச் செல்லாமலும் பதில் அளித்தார்கள். கவிஞர் அரங்கை கவிஞர் மதார் நெறிப்படுத்தியது பொருத்தம்.

அடுத்த அமர்வாக  அயல் மொழி அமர்வு இடம் பெற்றது. இதில் பிறமொழி படைப்பாளர்களுடனான உரையாடல் நடைபெற்றது.  தெலுங்கு இலக்கிய செயற்பாட்டாளர் அனில் குமார் சர்வ பள்ளியும், தெலுங்கு இலக்கிய உலகத்தைச் சார்ந்த மொழி பெயர்ப்பாளர்  பாஸ்கர் அவிநேநியும் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் தமிழ் இலக்கியத்தைத் தெலுங்கில் கவனப்படுத்தி வருபவர்கள். அவ்வகையில் அவர்கள் பொருட்படுத்தத் தக்க அழைப்பாளர்கள்தான் என்பதில் சந்தேகம் இல்லை. 

கவிதை நூல் வெளியீடு

இந்த அமர்வை காளி ப்ரஸாத் நெறிப்படுத்தினார். அவர்கள் பேச்சிலிருந்து தீவிர இலக்கியச் செயல்பாடுகள் ஒரு சிறுபான்மைக் கூட்டத்தால் தான் எல்லா மொழிகளிலும் முன்னெடுக்கப்படுகிறது என்பதை அறிய முடிந்தது. இம்மாதிரியான இலக்கிய முயற்சிகளுக்கு அச்சு ஊடகங்கள் ஆதரவு இல்லாத நிலையில் இணையம் பெரும் நல் வாய்ப்பாக அமைந்து இலக்கியத்தை வளர்க்க உதவுகிறது என்பதையும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இக்காலத்தில் நிறைய வாசிக்கிறார்கள், எழுதுகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. தீவிர இலக்கிய முயற்சிகளுக்குத் தமிழில் கூட அதே நிலை தானே?

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சிறப்பு விருந்தினர் அமர்வு இடம் பெற்றது. இதில் பல்வேறு விருதுகள் வாங்கிய பிரபல மலையாளக் கவிஞர் செபாஸ்டியன்  கலந்து கொண்டார். அவர் பேசியதே ஓர் இசைமையுடன் சங்கீதம் போல இருந்தது. அவர் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு உற்சாக முகத்துடன் காத்திரமான பதில்களைக் கூறி அந்த உரையாடல் நிகழ்வை ஆழமாக்கினார். 

'இன்று மலையாளத்தில் இளைஞர்கள் எழுதும் கவிதைகள் மிகவும் ஒளி கொண்டதாகவும் நம்பிக்கை கொண்டதாகவும் உள்ளன. எங்கள் காலம் போல் இல்லாமல் வேறு வகையிலான கவிதைகள் இன்று வருவதை நான் பார்க்கிறேன்.அவை எங்களுடைய கவிதை உலகத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இருக்கிறது. அன்று மலையாளக் கவிதைகள் பாடல்கள் போல எழுதப்பட்டன. அப்போது நாங்கள் தமிழ்க் கவிதைகளில் உள்ள சுருக்கம் நமக்கு வந்து சேருவதற்கு 30 ஆண்டுகள் ஆகும் என்று பேசிக்கொண்டோம். ஆனால் இன்று அவை மலையாளக் கவிதைகளில்  வர ஆரம்பித்துவிட்டன. அப்படி இன்று எழுத ஆரம்பித்து விட்டார்கள். இது பெரிதும் நம்பிக்கை தரும் வரவேற்கத்தக்க மாற்றம். மலையாளக் கவிதைகள் என்றிருந்தது, இப்போது மலையாளம் தவிர்த்த மொழிகளிலும் எழுதப்பட்டு, கேரளக் கவிதைகள் என்று மாறிவருவது ஒரு கால மாற்றம் " என்றார்.

மலையாளத்தில் கூறியவற்றை எழுத்தாளர் ஜெயமோகன் மொழி பெயர்ப்பாளராக இருந்து வாசகர்களுக்குத் தமிழில் மொழிபெயர்த்து வழங்கினார்.

தங்களுக்கு மலையாளம் புரியும் என்கிற நம்பிக்கையில் செபாஸ்டியன் கூறியதைப் பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான தமிழில் உள்ளுக்குள் மொழிபெயர்த்துப் புரிந்து கொண்டு இருந்தார்கள். ஜெயமோகன் மொழிபெயர்ப்பினைக் கேட்ட பிறகு அந்த நினைப்பு தவறு என்று உணர்ந்ததாகக் கூறினார்கள்.ஏனென்றால் அந்தக் கருத்து வேறாக இருந்ததாகக் கூறினார்கள். மொழியின் நுட்பம் என்பது அது தான்.அதுவும் கவிஞர் ஒருவர்  பேசும்போது அந்தச் சொற்கள் வேறு வகையிலான செறிவு கொண்டவையாக இருக்கும்  என்பது புரிந்தது என்றார்கள்.

அதனை அடுத்து மாலை 5.30 க்கு குமரகுருபரன் விஷ்ணுபுரம் கவிஞர் விருது விழா தொடங்கியது.இந்த விருது கடந்த ஏழு ஆண்டுகளாகக் கொடுக்கப்பட்டு வருகிறது இது எட்டாம் ஆண்டு.

பரிசுத்தொகை ரூபாய் ஒரு லட்சம்.இந்த ஒரு லட்சத்தில் பாதித் தொகையை  கவிதா சொர்ணவல்லி அளிக்கிறார்.

இதுவரை சபரிநாதன், கண்டராதித்தன், ச.துரை, வேணுவேட்ராயன், மதார் ,ஆனந்தகுமார், சதீஷ்குமார் ஆகியோருக்கு இவ்விருது  வழங்கப்பட்டுள்ளது. இப்போது 2024 க்கான விருதாளர் வே. நி.சூர்யா.

கவிதை அமர்வு

விருது விழாவுக்குக் கவிஞர் க. மோகனரங்கன் தலைமையேற்று குமர குருபரன் விருதாளர் கவிஞர் வே.நி. சூர்யாவின் கவிதைகள் குறித்து ஒரு சிறப்பான ஆய்வுரையை வழங்கினார். அப்போது அவர் சூர்யா சுயமாக எழுதும் கவிதைகள் குறித்தும் அவரது மொழிபெயர்ப்புக் கவிதைகள் குறித்தும் பேசி அவற்றின் இடையே நிலவும் வேறுபாட்டையும் எடுத்துக் கூறினார்.

வாழ்த்துரை வழங்க வந்த கேரளக் கவிஞர் செபாஸ்டியன் முதலில் சூர்யாவை வாழ்த்தி விட்டு உற்சாகமாகப் பேசினார்.

" 'யாருக்கும் உன் வடிவம் என்னவென்று தெரியவில்லை ',என்று குமாரன் ஆசான் கவிதையைப் பற்றிக் கூறினார். அந்தக் கவிதை என்னும் மாபெரும் வடிவின் முன்பு கைகூப்பி நிற்க மட்டுமே தகுதி கொண்டவர்களாக நாம் அனைவரும் இங்கே இருக்கிறோம். கவிதையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி ஒரு புகழ்பெற்ற கதை உண்டு. ராமகிருஷ்ண பரமஹம்சர் இளமைக்காலத்தில் ஒரு பனிக்காலத்தில் பால் வாங்குவதற்காக வயல்வெளிகளின் ஊடாகச் சென்று கொண்டிருந்தார். சூரியன் தோன்றிக் கொண்டிருந்தது. கொக்குகள் அதைக் கிழித்து பறந்து கொண்டிருந்தன. பனிக்காலத்து முத்துக்களைச் சூடிக் கொண்டு நின்றிருந்தன வயல்வெளிகள். நெற்கதிர்கள் விளைந்திருந்தன. அதைப் பார்த்த  ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆனந்த பரவசத்தில் மயங்கி வலிப்பு வந்து விழுந்துவிட்டார். 

நெடு நேரமாகியும் அவர் வராததால் பெற்றோர்கள் தேடி வருகிறார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் என்ன நடந்தது என்று கேட்கும் போது அவர் நான் கடவுளைக் கண்டேன் என்று  சொல்கிறார்.

கவிஞனின் பொறுப்பு என்பது  கடவுளைக் காண்பது மட்டும்தான்.  நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடவுளைக் காண விரும்பும் கவிஞர்கள் தான். கலில் கிப்ரானின் கவிதை வரி ஒன்றுண்டு. 'கவிஞன் தன் வழியாக இந்த பிரபஞ்சத்தை ஓட விடுகிறான்' என்று. கவிஞன் ஒரு மூங்கில் அதன் துளைகளினூடாக இப் பிரபஞ்சம் ஓடிச் செல்கிறது. அந்த இசையே கவிதை. பிரபஞ்சம் கவிதையால் ஆனது என்பதை அவன் அறிவான். பிரபஞ்சத்தின் ஊடாகவே கவிதையைச் சொல்ல முடியும் என்று கவிஞனுக்குத் தெரியும்.

கவிஞன் எட்ட முயல்வது இப் பிரபஞ்சத்திற்கு மேலான இன்னொரு பிரபஞ்சத்தை.மேலும் மேலும் பிரபஞ்சத்தை.

கிறிஸ்டோபர் கொய்லோ சொல்வார் 'குழந்தையாக ஆக முடியாதவன் கவிதைக்குள் நுழைய முடியாது 'என்று. அது பைபிளில் உள்ள சொற்றொடரின் இன்னொரு வடிவம்.

குழந்தையாக ஆகி மட்டுமே கவிதைக்கு அருகில் செல்ல முடியும். ஆகவே தான் இந்த யதார்த்த உலகத்தைப் பிரதி செய்வது கவிதைகள் அல்ல என்று திருப்பித் திருப்பிச் சொல்கிறேன்.

ஏனென்றால் அது பொதுவான உலகம். குழந்தைகளுக்கான பிறிதொரு உலகம் உண்டு. கவிஞன் கற்பனையால் மறு நிர்மானம் செய்யக்கூடிய உலகம் அது. அந்த உலகத்தில் நிறங்களுக்கு நாக்கு உருவாகி இருக்கலாம். கைகள் உரையாடலாம். கால்களுக்கு மனம் இருக்கலாம். மரங்கள் கைதட்டலாம். மலைகள் துள்ளிக் குதித்து நடனமிடலாம். அத்தகைய கவிதைக்கு என்ன பயன்? அது நம் அகத்தை அழகாக்குகிறது.அது நம் அகத்தை மிக ஈரமான ஒரு சொல்லால் நிறைக்கிறது; அன்பு என்னும் மிக ஈரமான சொல்லால் அது நிறைக்கிறது. நம்மை உலகை நோக்கித் திருப்புகிறது. உலகையே ஈரமயமானதாக ஆக்குகிறது.

எந்த நல்ல கவிதையையும் நாம் அற்புத உணர்வு இல்லாமல் படிக்க முடிவதில்லை. நம்முடைய உணர்வு என்பது வியப்பும் திகைப்புமாக இருக்கிறது.

கவிதை அந்தக் கணத்தில் அந்த அற்புத மொழியாக நம்மை உயிர்த்தெழச் செய்கிறது. கவிதையை மீட்டெடுப்பின் கலை என்றுதான் நாம் சொல்வோம். கவிதை நம்மை மீட்டெடுக்கும் கலை. இன்னொரு வகையில் கவிதை என்பது தன்னோடு தான் பேசும் கலை.நம்மோடு நாம் பேசும் கலை.

ஓவியரும் கவிஞருமான பைடோ காலா ஒருமுறை கூறினார் 'வாடிப் போகாமல் இருப்பதற்காக நான் அன்றாடம் மலர்களை வரைகிறேன்' என்று. ஒவ்வொரு நாளும் மலர்கள் வாடிப் போகின்றன ஆனால் நாம் வாடிப் போகாமல் இருக்க அவை தேவைப்படுகின்றன.

வியப்பிற்கு உடல் அளிப்பதே கலை என்று நான் சொல்வேன். வியப்புக்கு அளிக்கப்பட்ட உடல் தான் கவிதை.கற்பனை அவனை படைப்பாளியாக்குகிறது; கற்பனை அவனை அழிவற்றவன் ஆக்குகிறது.

கற்பனையினூடாகத் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக் கொண்டு முடிவின்மை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான் கவிஞன்.

பைபிள் கூறுகிறது மனிதனை அழிவில்லாதவனாகத்தான் படைத்து இந்த உலகத்திற்கு அனுப்பினேன் என்று.

அந்த அழிவின்மை நோக்கிச் செல்ல வேண்டியவர்கள் நாம். கவிதையினூடாக நாம் அப்படிச் சென்று கொண்டிருக்கிறோம்.

"என்று கவித்துவமாகப் பேசினார். அவர் தனது உரையில் வே.நி.சூர்யாவின் கவிதை வரிகள் சிலவற்றை மலையாளத்தில் உணர்ச்சியோடு வாசித்தும் காட்டினார். 

அவருக்கு அக்கவிதைகளை ஜெயமோகன் மலையாளத்தில் மொழிபெயர்த்து  அனுப்பியிருந்தார். அவருக்குப்பின் கவிஞர் மதார், சூர்யாவின்  கவிதைகள் குறித்து கூர்மையான விமர்சன உரை ஒன்றை வழங்கினார்.

அடுத்ததாக எழுத்தாளர் ஜெயமோகன் உரையாற்றினார். 

கவிஞர் செபாஸ்டியனுடன் ஜெ.மோ.

"ஒரு மனிதனின் வாழ்க்கை என்பதே கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை நோக்கி நகர்வது தான். ஒருவனுடைய இருப்பு என்பதே  இன்மையை  நோக்கி கரைந்து கொண்டே இருப்பதுதானே? இந்த எதார்த்தம் இங்கே இருக்கிற வரை எப்பொழுதுமே கவிதையில் அந்தத் தனிமை, துயர் ,கைவிடப்படுதல் இருந்து கொண்டே இருக்கும்.மனித வாழ்க்கையில் பிரிவு என்பது தான் எதார்த்தமாக இருக்க முடியும். ஏனென்றால் வாழ்க்கையே அதுதான்.கவிதைகள் மூலம் இந்தத் துயரங்களை எடை குறைந்ததாக மாற்றிக்கொண்டு அதை எளிதாகக் கடந்து போகும் வழியைக் கவிஞன் கண்டடைகிறான்.இங்கு உள்ள எல்லாருக்குமே ஒரு பிரிவு அனுபவம் ,இழப்பு வாழ்க்கையில் துயரங்களைச் சந்தித்த அனுபவம் இருக்கும். ஆனால் எதிலுமே கவித்துவம் இல்லை.அது வேறு ஒன்றாகவே இருக்கும். ஒரு ரேஸர் பிளேடின் ஈவு இரக்கமற்ற கூர்மையுடன் தான் வாழ்க்கையின் நிஜ அனுபவங்கள் இருக்கும். அதை எந்தக் கற்பனையாலும் மழுங்கிவிடச் செய்ய முடியாது. ஆனால் இப்படி எழுதப்படும் கவிதைகளில் ஓர் இனிய மயக்கம் உருவாகி அந்தத் துயரத்தை நாம் ரசிக்க ஆரம்பித்து விடுகிறோம்.

கவிஞர்கள் ஒரு தனிமனித அனுபவத்தைத் தங்களது சொற்கள் வழியாக, படிமங்கள் வழியாக, கற்பனைத் தாவல்கள் வழியாக,ஏதோ ஒரு மாயம் வழியாக பிரபஞ்சத்துடன் இணைத்து அனுபவமாக்கிடும் வெல்டிங் வேலையைச் செய்கிறார்கள். வே.நி. சூர்யாவின் கவிதைகளில் ஒரு பயணம் இருக்கிறது.ஒன்று அவருக்கு கிடைத்த தனி அனுபவம், அவருக்குக் கிடைத்த மொழியில் இருந்து செல்லும் பயணம். இன்னொன்று தன்னுடைய மொழியைச் செம்மைப்படுத்த பட்டை தீட்டிக் கொள்ள அவர் மொழிபெயர்ப்பைச் செய்கிறார் போலும். அவருடைய மொழிபெயர்ப்புகளில் கவிதையின் மொழி அமையவில்லை. ஆங்கிலத்தில் இருந்து கவிதை மொழிபெயர்க்கும் போது கவிதையை  மொழிபெயர்க்கவில்லை. இன்னொரு மொழியின் சொல்லாட்சியைத் தான் மொழி பெயர்க்கிறீர்கள். இப்படி ஆங்கிலத்தை நோக்கி தமிழைக் கொண்டு செல்லும்போது தமிழுக்கான மொழி அழகை நீங்கள் இழந்து விடுவீர்கள். பாரதியார் முதல் ஏராளமான கவிஞர்கள் மொழிபெயர்த்துப் பார்த்திருக்கிறார்கள். தமிழின் மிகச்சிறந்த எக்ஸ்பிரஷன் எனப்படும் கவி வெளிப்பாடுகள் ஆங்கிலத்தின் மொழி அமைப்பில் உருவானவை. சூர்யாவின் மொழிபெயர்ப்புகளைச் சொந்த மொழியில் இருந்து வெளியே சென்று செய்யும் பயிற்சியாகவே பார்த்தேன். அந்தப் பயிற்சியில் இருந்து திரும்பித் தன்னுடைய மொழிக்கு வரும்போது தமிழில் அவர் கவிதைகளில் காணும் தாளம்,ரிதம் ஆங்கிலத்தன்மை அற்றதாக இருக்கிறது.இந்தக் காரணத்தால்தான் அவர் தமிழில் முக்கியமான கவிஞராகப் பார்க்கப்படுகிறார்'' என்றார்.

கவிதை குறித்தும் இளம் கவிஞர்கள் குறித்தும் கவிதை உலகம் கடந்து வந்த பாதைகள் குறித்தும் குறுகிய கால அளவிலேயே தனது உரையின் மூலம் ஒரு முழுமையான சித்திரத்தை ஜெயமோகன்  வரைந்து காட்டினார்.

ஏற்புரை வழங்கிய விருதாளர் கவிஞர் வே. நி. சூர்யா சுருக்கமாக எழுதிக் கொண்டு வந்ததை அடக்கமாக வாசித்தார் .

இந்த விருது விழா முழுக்க தொகுப்பாளர் அகரமுதலன் ஆங்காங்கே குமரகுருபரனின் கவிதைகளை வாசித்து நிகழ்வு முழுக்கக் கவிதை மணம் கமழச் செய்தார். விழா நிறைவில் விஜயபாரதி நன்றி கூறினார். விழாவில் வாசகர்களுடன் ஏராளமான தீவிர இலக்கிய முகங்கள் தென்பட்டன.