பேட்டிகள்

மொழிகளின் மனிதர்!

Staff Writer

குஜராத்தின் பரோடாவில் இருந்து கடந்த ஆண்டு கர்நாடக மாநிலம் தார்வாருக்குக் குடிபெயர்ந்த ஆங்கிலத்துறை பேராசிரியர் கணேஷ் டேவி, ஓர் ஆச்சரியமூட்டும் மனிதர். சுதந்தர இந்தியாவில் முதன் முறையாக மொழிக்கணக்கீட்டை செய்து முடித்து, பல்வேறு மாநிலங்களில் புழங்கும் பல தாய்மொழிகளை ஆவணப்படுத்தி இருக்கிறார். இதுவரை 780 மொழிகளை இவரது குழுவினர் கணக்கில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

சாகித்ய அகாடமி விருதை அசோக மித்திரன் பெற்ற ஆண்டு, அவருடன் அந்த விருதைப் பெற்றவர்களில் ஒருவர் கணேஷ் டேவி. அவர் எழுதிய ஆங்கில நூலொன்றுக்காக அவ்விருது. ஆனால் அதை, சில ஆண்டுகள் முன்பாக கருத்துச் சுதந்தரம் ஒடுக்கப்படுவதைக் கண்டித்து திருப்பி அளித்துவிட்டார் . இந்திய மொழிகள் பற்றிய ஆழ்ந்த அறிவு கொண்ட இவரை தார்வாரில் சந்தித்தோம். உடன் அவரது மனைவியும் பேராசிரியருமான சுரேகாவும் இருந்தார். ‘‘என் எல்லா முயற்சிகளுக்குக் காரணம் சுரேகாதான் என்று மறக்காமல் எழுதுங்கள்'' என்று டேவி சொல்லும்போது சுரேகா புன்னகைக்கிறார். சுரேகா வேதியியல் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

மொழிகளுடனான உங்கள் பயணம் எப்போது தொடங்கியது?

 மகாராஷ்ட்டிர மாநிலத்தில் குஜராத்தி பேசும் குடும்பத்தில் நான் பிறந்தேன். மராட்டி மொழிப் பள்ளியில் படித்தேன். கல்லூரியில் ஆங்கிலம் படிக்கத் தீர்மானித்தேன். ஏனெனில் பள்ளியில் நான் ஆங்கிலம் படித்திருக்கவில்லை.  எழுபதுகளில் பிஎச்டி முடித்தேன். அக்காலகட்டத்தில்  ஒரு விஷயம் ஏனோ என் கவனத்தைக் கவர்ந்தது. 1961 மக்கள் தொகைக்கணக்கீட்டின் போது நாட்டில் உள்ள தாய்மொழிகளின் எண்ணிக்கை 1652. ஆனால் 1971 ஆம் ஆண்டின் மக்கள் தொகை அறிக்கை வெளியானபோது அதில் 108 பெயர்கள் மட்டுமே இருந்தன. சுமார் 1500 பெயர்கள் மறைக்கப்பட்டுவிட்டன. அவை இடைப்பட்ட பத்தாண்டுகளில் அழிந்துபோயிருக்க வாய்ப்பில்லை. எனவே அவை மறைக்கப்பட்ட விதத்தை நான் ஆராய விரும்பினேன். மொழி என்பது அரசியல்ரீதியாக மிக சக்திவாய்ந்ததாகக் கருதப்பட்டது. அந்த காலகட்டத்தில்தான் வங்கதேசப்போர் நடைபெற்றிருந்தது. போருக்கான முக்கிய காரணங்களில் ஒன்று உருது மொழிக்கும் வங்காள மொழிக்குமான மோதல். எனவே இந்திய அரசும் இதனால் உஷாரானது. மொழிகள் எவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் உள்ளனவோ அவ்வளவு நல்லது என்று முடிவு செய்யப்பட்டது.

அதே கொள்கைதான் இன்றும் தொடருகிறது. 2011 கணக்கீட்டின்போது எங்கள் தாய்மொழி என்று மக்களால் கூறப்பட்ட மொழிகளின் எண்ணிக்கையே சுமார் 3000 அளவுக்கு வந்திருக்கிறது. ஆனால் 1300 மொழிகள் மட்டுமே தாய்மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதாவது 1369. இவற்றை மொழிகளுக்குள் வகைப்படுத்தினர். கடைசியில் வந்திருப்பது 122 மொழிகள்தாம்.

எழுபதுகளில் கணக்கியலாளர்களின் மொழி அரசியலைப் பற்றி அறிந்ததும் அதை எதிர்த்து மோத விரும்பினேன். நாட்டில் முறையான மொழி கணக்கீடு செய்யப்படவேண்டும் என்று விரும்பினேன். அதற்கு முன்பாக ஜார்ஜ் ஆப்ரஹாம் கிரியர்சன் என்பவர் செய்த மொழிக் கணக்கீடு ஒன்று உண்டு. அது 1920களில் முடிக்கப்பட்டது. அது பர்மா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற பகுதிகள் ஆங்கில அரசின் ஆதிக்கத்தில் இருந்தபோது செய்யப்பட்டது. கிரியர்சன் தென்னிந்திய மொழிகளின் கணக்கீட்டையும் அப்போது முறையாகச் செய்யமுடியவில்லை. நிஜாமின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை!

1990-களில் நான் அரசை மொழிக் கணக்கீட்டைச் செய்யுமாறு வற்புறுத்தினேன். நான் மட்டுமல்ல; நிறைய பேர் வற்புறுத்திவந்தோம். கிரியர்சனின் மொழிக்கணக்கீட்டுக்கு அடுத்தபடியாக சுதந்தர இந்தியாவில் மொழிகளுக்காக எந்த கணக்கீடும் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டவில்லை. எனவே இதைப் புதிய மொழியியல் கணக்கீடு என்ற பெயரில் செய்யுமாறு கோரினோம். ஐமுகூட்டணி அரசு காலத்தில் இதற்கு அரசால் 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2000 மொழியியலாளர் உதவியுடன் இதைச் செய்து முடிக்க பத்தாண்டுகள் பிடிக்கும் எனக் கணக்கிடப் பட்டது. நம் நாட்டில் மொழி என்பது கல்வித்துறையுடன் மட்டும் தொடர்பு உடையது அல்ல. காவல்துறையைக் கட்டுப்படுத்தும் உள்துறை அமைச்சகமும் இதனுடன் தொடர்புடையது. உலகில் இப்படி எங்கும் இல்லை. உள்துறை அமைச்சகம் மொழிகளை தேசிய ஒருமைப்பாட்டுக்கு தடைக்கல்லாகவே பார்த்தது. இந்த இரு துறைகளுக்கு இடையிலான சச்சரவில் இந்த திட்டமே நொறுங்கிப்போனது.

2009-ல் இது பற்றி நான் அறிந்தேன். அரசால் இந்திய மொழிகள் பற்றிய கணக்கீட்டைச் செய்யமுடியாவிட்டால் போகட்டும். அந்தந்த மொழிகளைப் பேசும் மக்களே அதைச் செய்தாலென்ன என்ற முடிவுக்கு நான் வந்தேன். எனவே மிகப்பெரிய மொழி மாநாட்டுக்கு பரோடாவில் ஏற்பாடு செய்தேன். 320 மொழிகளின் பிரதிநிதிகள் அதில் கலந்துகொண்டனர். எனக்கு நம்பிக்கை வந்தது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நாட்டின் மொழிகளைக் கணக்கீடு செய்வோம் என்று அறிவித்தேன். அது மக்கள் மொழிகள் கணக்கீடு என்று அறியப்படும். இப்படி அறிவிப்பது எளிது. ஆனால் அதன்பிறகு அதைச் செய்வதுதான் கடினம். பல மாநிலங்களுக்குப் பயணம் செய்தேன். முதலில் ஹிமாசலபிரதேசத்தில் கெலாங் (Keylang) என்ற இடத்தில் ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், ஹிமாசல் ஆகிய மாநில பிரதிநிதிகளை அழைத்துப் பேசினேன். 11,000 அடி உயர இடம் அது. மிகவும் குளிர். எட்டு நாட்கள் நடந்த அந்த சந்திப்பில் கணக்கீட்டுக்கான முதல் மாதிரிப் படிவம் தயாரானது. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு மாதிரியான படிவம் தேவை. முதல் படிவம் சிறு மொழிகளுக்காகத் தயாரித்தோம். பின்னர் தெற்கு நோக்கி வந்து ஹைதராபாத்தில் சந்திப்பு நடத்தினேன். எல்லா தென்னிந்திய பெரிய மொழிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அனைவருமே தென்னிந்தியாவில் 30 மொழிகள் பேசப்படுவதாகக் கூறினர். ஆனால் எனக்குத்திருப்தி இல்லை. எனவே பள்ளி ஆசிரியர்கள் கொண்ட ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தேன். அவர்களின் மாணவர்கள் வீட்டில் பேசும் மொழிகள் எனென்ன என்று கேட்டேன். அவர்கள் பதினெட்டு பழங்குடி மொழிகளின் பட்டியலைத்தந்தார்கள். இதேபோன்ற சந்திப்பு கர்நாடகாவில் நடந்தபோது அவர்கள் மேலும் 12 மொழிகளின் பெயர்களைத் தந்தார்கள். 30 மொழிக்ளின் பெயருடன் தொடங்கிய இப்பட்டியலில் 80 மொழிகள் இடம் பெற்றன. அதாவது கூடுதலாக 50 மொழிகள். இவற்றைப் பற்றி எந்த ஆய்வும் செய்யப்பட்டிருக்கவில்லை! நாட்டின் எல்லா பகுதிகளிலும் இதுபோன்ற அனுபவமே எனக்குக் கிடைத்தது!

தினந்தோறும் மாநிலம் விட்டு மாநிலம் மாறி அலைந்துகொண்டேஇருப்பேன். ஒவ்வொரு நாளும் பயிற்சி முகாம்களை நடத்தினேன். சில ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடக்கும். சில பேருந்து நிலையங்களிலும் நடக்கும். எங்கே முகாம் நடக்கவேண்டும் என்பது பற்றி எனக்கு எந்த முன்முடிவும் இல்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் தங்கள் மொழியைப் பற்றி பேச விரும்பும் நபர்களை நான் சந்திக்கவேண்டும்.

ஒரிசாவில் ஒரு கார் ஓட்டுநரைச் சந்தித்தேன். அவர் ஒரு மாவட்ட கலெக்டருக்கு ஒட்டுகிறவர். சுமார் 55 வயது இருக்கலாம். கிராமப்புற கூட்டங்களுக்கு கலெக்டர் சென்றுவிடும் நேரங்களில் ஓட்டுநர் ஓய்வாக இருப்பார். அப்போது பல வீடுகளுக்குச் சென்று அவர் சொற்களைச் சேகரித்திருக்கிறார். அவர் நான்கு பழங்குடி மொழிகளின் சொற்களை சேகரித்து வைத்திருந்தார். எங்களுக்கு உதவினார். ஒரிசாவில் ஒரு கட்டத்தில் 62 பழங்குடி மொழிகள் இருந்திருக்கின்றன. நான் கணக்கீடு மேற்கொண்ட காலகட்டத்தில் இந்த எண் 44 ஆகக் குறைந்துவிட்டது.

மகாராஷ்ட்ராவில் குற்ற மரபினர் என்று சொல்லப்பட்ட சமூகத்தினரைச் சந்தித்தேன். அவர்கள் நிலை மோசம். அவர்கள் தொடர்ந்து திருடர்களாகவும் சமூகவிரோதிகளாகவும் கருதப்பட்டு துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்.  அவர்கள் 16 மொழிகளைப் பற்றிய தகவல்களைக் கொண்டுவந்தனர். உதாரணத்துக்கு ராமோஷி என்றொரு மொழி. இதைப் பேசும் ராமோஷி சமூகத்தினர் மரபுரீதியாக, மன்னர்கள் காலத்தில் இருந்தே குற்றம் செய்தவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றும் செயலைச் செய்துவந்தவர்கள். அதாவது தூக்கில் போடும் அல்லது கொலை செய்யும் பணி. ராமோஷி தனித்துவமான மொழி. கைகாடிகள் எனும் நாடோடிகள் உண்டு. அவர்களுக்கும் தனி மொழி உண்டு. இவர்கள் தங்கள் சொற்களை, சொற்றொடர்களை எனக்கு அளித்தனர். ஆனால் இதை கடும் சிரமத்தில்தான் அளித்தார்கள். ஏனெனில் இவர்களின் மொழியை பிறர் அறிவதை அச்சமூகத்தினர் விரும்பவில்லை. அவர்களுக்கு ரகசியக் குறியீட்டுச் சொற்கள் உண்டு. எனவே இவற்றை குறியீட்டு மொழிகள் என்று வகைப்படுத்தினேன்.

மொழிகளின் இலக்கணம், செயல்பாடு, பல்வேறு அம்சங்களைக் குறிக்கப் பயன்படும் சொற்களைச் சேகரித்தல் ஆகியவற்றைச் செய்தோம். உதாரணத்துக்கு இயற்கையைக் குறிக்கும் சொற்களைச் சேகரித்தால் அம்மக்கள் எப்படி உலகைப் பார்க்கிறார்கள் என்பது பற்றிய தத்துவார்த்தமான கருத்துகள் தெரியவரும். நாங்கள் ஒவ்வொரு மொழியிலும் எல்லா சொற்களையும் சேகரிக்கவில்லை. ஏனெனில் ஏராளமான சொற்களை இந்திய மொழிகள் பகிர்ந்துகொண்டுள்ளன. ஒரியா, தெலுங்கு மொழிகளை உதாரணத்துக்கு எடுத்தால் இருமொழிக்கும் 60 சதவீதம் பொதுவான சொற்களே உண்டு. ஆனால் இலக்கணம் வேறானது.

அதுபோல் சைகை மொழிகளையும் சேகரித்துள்ளேன். இது காதுகேளாதவர்களால் தொடர்பு கொள்ள உதவும் மொழி. நான் அவர்கள் தமிழ் போன்ற பெருமொழிகளை சைகைகளில் மொழிபெயர்த்து பேசிக்கொள்வார்கள் என எண்ணியிருந்தேன். ஆனால் அந்த சைகைகள் எந்த மொழியுடனும் தொடர்புடையவை அல்ல. அவைகளே தனி மொழிகள். இவையே அவர்களின் மனதில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளாக மாற்றம் கொள்கின்றன. இந்தியாவில் இதுபோல் ஆறிலிருந்து எட்டு சைகை மொழிகள் உள்ளன. சில பழங்குடிகள் படங்கள் மூலம் சுவர்களில் எழுதுகிறார்கள். காற்றில் எழுதி தொடர்புகொள்ளும் மொழியும் இருக்கிறது. அம்மொழி பேசும் ஒருவரிடம்  பிரெஞ்சு மொழியில் ஒரு வாக்கியத்தைக் கூறினேன். அதைக் கேட்டு ஒருவர் காற்றில் எழுதினார். தூரத்தில் இருந்து அதை வாசித்த இன்னொருவர் அந்த பிரெஞ்சு தொடரை அப்படியே கூறினார். இருவருக்குமே பிரெஞ்சு தெரியாது. இது போன்ற 780 மொழிகளைக் கண்டறிந்தோம்.இன்னும் சில மொழிகள் உள்ளன.

அந்தமானில் போ என்ற பழங்குடி மொழியைப் பேசிய கடைசிப் பெண்மணியைச் சந்தித்துள்ளீர்களா?

நான் பார்க்கவில்லை. என் நண்பரான ஒரு பேராசிரியர் அவரைச் சந்தித்துள்ளார். இந்த பெண்மணி 26, ஜனவரி 2010 அன்று இறந்தார். அதற்கு Akzu மாதமே நான் முதல் மொழிகள் மாநாட்டை பரோடாவில் நடத்தினேன். அவரது மரணமே, இதுபோன்ற மொழிகள் அழிவதற்கு முன்பாக இந்த PnURk செய்து முடிக்கப்படவேண்டும் என்று நான் உழைக்கக் காரணமாக இருந்தது. போவா என்ற அந்த பெண்மணி இறந்தபோது அவருக்கு வயது 85. அப்போது போ மொழியைப் பேசும் பிறர் யாருமே இருக்கவில்லை. அவரது பேரப்பிள்ளைகள், உறவினர்கள் எல்லாம் இந்திக்கு மாறிவிட்டிருந்தார்கள். அதனால் அவர் பறவைகளுடனும் செடிகளுடனும் பேசிக்கொண்டிருந்தார். அவரது மொழி 65,000 ஆண்டுகள் தொடர்ச்சியான வரலாறு கொண்டது. அந்தமானுக்கு வெளிநபர்கள் போய் நூறாண்டுகள் இருக்கலாம். இந்தி பள்ளிகள் திறக்கப்பட்டன. முக்கியமான இந்திய மொழியியலாளரான டிபி பட்நாயக் கூறுவார்:

‘ கல்விதான் இந்திய மொழிகளின் மிகப்பெரிய எதிரி' என்று. ஏனெனில் நாம் ஆங்கிலவழியில் குழந்தைகளைப் பயிற்றுவிக்கிறோம். உள்ளூர் மொழிகள் ஆபத்தை எதிர்கொள்கின்றன. வானொலிப் பேட்டி ஒன்றில் என்னிடம் இந்த கணக்கீட்டின்போது நீங்கள் எதிர்கொண்ட சோகமான விஷயம் என்னவென்று கேட்டார்கள். நான் சொன்னேன்: இந்தியாவில் எங்கு சென்றாலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் படிக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதில் தவறில்லைதான். ஆனால் இதன் விளைவாக குழந்தைகள் தங்கள் தாய்மொழியை எழுதவோ வாசிக்கவோ தெரியாமல் வளர்கிறார்கள். ஆனால் அதில் அழகாகப் பேசுகிறார்கள். தாய்மொழியில் பிற கலைத்திறன்கள் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வாசிக்கவோ எழுதவோ தெரியாது. இதுவொரு அபூர்வமான நிகழ்வு. ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் தெரிந்திருந்தாலும் அதனுடன் உள்ளார்ந்த உறவு கிடையாது. புதிய மொழியியல் வாழ்வு நம் இளையதலைமுறைகளைச் சூழ்ந்துள்ளது.

மொழிக்கும் கிளைமொழிக்கும் என்ன வித்தியாசம்?

மொழி என்றால் அதற்கு வரி வடிவம் உண்டு. வரிவடிவம் இல்லாத மொழி கிளைமொழி(dialect) என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் ஆங்கில மொழிக்கு சொந்தமாக எழுத்துவடிவம் இல்லை. அது ரோமன் எழுத்துவடிவை பயன்படுத்துகிறது. அதையும் மொழி என்றுதான் வகைப்படுத்தி உள்ளோம். ஆகவே எழுத்துவடிவம் என்பது மொழியை தீர்மானிக்கும் அம்சம் அல்ல. அது ஒரு முக்கிய பண்பு மட்டுமே. மொழியைத் தீர்மானிப்பது அதன் இலக்கணம். தன்னைச் சூழ்ந்திருக்கும் பிற பேச்சு வழக்குகளில் இருந்து மாறுபட்ட இலக்கணத்தை ஒரு பேச்சுவழக்கு கொண்டிருக்குமேயானால் அதை மொழி என்று வகைப்படுத்தவேண்டும். ஒரு மொழியைப் பேசுகிறவர்கள் அது பிற மொழிகளில் இருந்து வேறுபட்டது என்று உணர்ந்திருக்கவேண்டும்.  எனவேதான் மக்கள் மொழிக் கணக்கெடுப்பு என்று இதை அழைக்கிறோம்.

டோல் என்ற பெயரில் ஒரு பழங்குடி மக்கள் மொழியிலான செய்தித்தாள் நடத்தியிருக்கிறீர்கள் அல்லவா?

பரோடாவில் நான் பேராசிரியராகப் பணிபுரிந்தபோது, பழங்குடி மொழிகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தேன். வெளிநபராகிய நான் சொல்வதை விட அந்த மொழி பேசுகிறவர்களே தங்களைப் பற்றிச் சொல்லவேண்டும் என நினைத்தேன். எனவே பழங்குடியினர் சொல்ல சொல்ல யாராவது எழுதி, அதை அச்சிட்டு, அவர்கள் மத்தியில் வாசிக்கப்படவேண்டும் என நினைத்தேன்.  நான் ஒரு பழங்குடி மொழியில் அந்த செய்திச்சுற்றறிக்கையைத் தொடங்கினேன். இதைப் பார்த்துவிட்டு பிற பழங்குடியினரும் வந்தனர். அவர்களின் மொழி இதுவரை எழுதப்பட்டதே இல்லை. அப்போதுதான் முதன் முதலாக எழுதப்பட்டு அச்சிடப்படுகிறது. குஜராத்தி மொழியின் வரிவடிவை குஜராத் பழங்குடியினருக்காக சில மாறுதல்களுடன் பயன்படுத்தினேன். மராத்தி பழங்குடியினருக்கு மராத்தி எழுத்துவடிவில் சில மாறுதல்களுடன் பயன்படுத்தினேன். இது மராத்தி, குஜராத்தி எழுத்து அல்ல என்பதை அவர்கள் உணரவேண்டும் என்பதற்காக வரிவடிவில் மாற்றங்கள் செய்திருந்தேன்.

வரலாற்றில் முதல்முறையாக அவர்களின் மொழிகள் எழுத்துவடிவில் பதிவு செய்யப்பட்டன எனலாமா?

அப்படித்தான் சொல்லவேண்டும். இதில் எனக்குத் தயக்கம் இல்லை. இருப்பினும் வடகிழக்கு இந்தியாவில் மதபோதகர்கள் பழங்குடியினரின் மொழியை ரோமன் வரிவடிவைக் கொண்டு எழுதியுள்ளனர். ஆனால் இந்திய எழுத்துக் களில் இதுபோல் பழங்குடியினரின் மொழிகள் எழுதப்படுவது இதுதான் முதல்முறை… அல்லது ஆரம்பகட்ட முயற்சிகளில் ஒன்று எனச்சொல்லலாம். நான் செய்ய ஆரம்பித்தபிறகு ஆந்திராவிலும் ஒரிசாவில் பழங்குடி செயற்பாட்டாளர் இதைப் பின்பற்றினர்.

தமிழகத்தில் இருளர்களின் மொழியில் ஒரு நூல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.. அதுபோல எனலாமா?

ஆம். இருளர்கள் பாம்புகளைக் கையாளுவதில் சிறந்தவர்கள் அல்லவா? நான் அறிந்துள்ளேன். குஜராத்தில் காருடீகள், ராஜஸ்தானில் மதாரிகள் ஆகிய குடியினர் இவர்களைப் போன்றவர்களே. ஆங்கில ஆதிக்கத்தில் இவர்கள் குற்ற மரபினராகக் கருதப்பட்டனர்.  டோல் பத்திரிகை வெளிவந்தபின்னால் பல இனக்குழுவினர் தங்கள் மொழியிலும் இது வெளிவரவேண்டும் என்று வேண்டினர். இதுபோல் 12 மொழியில் அதை வெளியிட்டேன். இதில் பழங்குடி மக்களுக்கு அக்கறை இருக்காதே என்று என் நண்பர்கள் ஐயம் கொண்டனர். ஒருமுறை சௌதரி மொழியில் 700 பிரதிகளை அச்சிட்டு எடுத்துச் சென்று அவர்கள் முன்பாக வெளியிட்டேன். காட்டில் ஒரு மலை உச்சியில், மாலை நேரத்தில் அந்த நிகழ்வு. மின்சாரமே இல்லை. வாடகைக்கு பெட்ரோமாக்ஸ் விளக்குகள் எடுத்துச் சென்று இருந்தோம். அறுபது பக்கங்கள் கொண்ட பத்திரிகை அது. நான் விளம்பரங்கள் எதுவும் வாங்கவில்லை. பத்து ரூபாய் பிரதியின் விலை. பணம் கொடுக்க முடிந்தவர்கள் பணத்தை அங்கிருந்த ஒரு கூடையில் போட்டுவிட்டு எடுத்துச் செல்லுங்கள். முடியாதவர்கள் இலவசமாக எடுத்துச் செல்லுங்கள் என்று அறிவித்தேன். அங்கு வந்திருந்த மக்கள் தங்கள் மொழி அச்சிடப்படுவதில் பெருமை கொண்டு, நான் வைத்திருந்த கூடையில் பத்து ரூபாய் போட்டுவிட்டு, பிரதிகளை எடுத்துச் சென்றனர். பலருக்கு வாசிக்கத் தெரியாது. இருப்பினும் கொண்டுசென்றனர். அன்றைய இரவில் வீடு திரும்பி, பணத்தை எண்ணினேன். பெரும்பாலும் கசங்கிய அழுக்கேறிய தாள்கள். ஒவ்வொருவரும் பணத்தைச் செலுத்தியிருந்தனர் என்பதை நினைக்கும்போது உணர்ச்சி மேலிட்டது. அன்றைய தினத்தில் பத்து ரூபாய் அவர்களின் தினக்கூலியில் கால் பங்கு. இந்த ஏழைமக்கள் தங்கள் மொழியை  இவ்வளவு நேசிக்கும்போது, யாராவது அவர்களின் மொழிக்காகப் பணியாற்றவேண்டும் எனக் கருதினேன். அது என் வாழ்க்கையின் திசையைத் தீர்மானிப்பதாக அமைந்தது. இவர்களின் வாழ்விலிருந்து மொழி மக்களின் வாழ்வாதாரம், அதிகாரம், வளர்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று அறிந்தேன்.

வடகிழக்கு மாகாணங்களின் மொழிகள் குறித்து..

வடகிழக்கு மாநிலங்களில் கிறித்துவ போதகர்கள் பணியாற்றினர். அவர்கள் கல்வி புகட்டினர். அவர்களின் மொழியை ரோமன் வரிவடிவில் எழுதினர். அங்கிருக்கும் நிலப்பகுதியின் அமைப்பால் ஒவ்வொரு மலைக்கும் ஒவ்வொரு இனக்குழு ஒவ்வொரு மொழி இருந்தது. அருணாச்சல பிரதேசத்தில் புவியியல் ரீதியில் அசாமுக்கு Akzu பெரிய மாநிலம். அங்கு அதிகமான மொழிகள் பேசப்படுவதில் ஆச்சரியம் இல்லை. மேகாலாயாவில் அரசுகள் இருந்தன. அதனால் அங்கு காசி, காரோ ஆகிய இரு மொழிகள் மட்டுமே. திரிபுராவுக்கு பழமையான வரலாறு உண்டு. அங்கு 28 மொழிகள் இருந்தன. நாகாலாந்து பழங்குடியினர் 16 மொழிகள் கொண்டிருக்கிறார்கள். மிசோராம், மியான்மருக்கு நெருக்கமானது.

சிக்கிம் இந்தியா உருவானபிறகு நம்முடன் சேர்ந்த மாநிலம். அதனால் அங்கு மொழிகள் பேசும் குழுக்கள் துண்டாடப்பட்டன. சிலர் நேபாளத்திலும் சிலர் இந்திய மண்ணிலுமாக வசிக்கின்றனர். உதாரணத்துக்கு மாஸி மொழி பேசுகிறவர்கள். நாங்கள் மொழிக்கணக்கீடு செய்தபோது இம்மொழியைப் பேசுகிறவர்கள் நான்கே பேர்தான் சிக்கிமில் இருந்தார்கள். இன்று அவர்களில் யாரும் உயிருடன் இல்லை. ஆனால் இந்திய எல்லைக்கு வெளியே மாஸி மொழி பேசுகிறவர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு தன்மைகள் உண்டு. அஸாமில் குறைந்தது ஐந்து பிரதானமான மொழிகள் உண்டு. அசாமி, வங்காளம், போடோ, நாகாமி போன்ற மொழிகள் அங்கே உள்ளன. வடகிழக்கு மாகாணங்களில் 250 - 300 மொழிகள் பேசப்படுகின்றன.

அழியும் நிலையில் இருந்த மொழிகள் மீட்கப்பட்ட சம்பவங்கள் உண்டா?

1991 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டில் பில்லி என்ற குழுவைச்சேர்ந்த மொழிகளின் எண்ணிக்கை 37ஆக இருந்தது. 2001ல் இந்த குழுவின் எண்ணிக்கை 85% அதிகரித்தது. இதற்குக் காரணம் டோல் பத்திரிகை. காரணம் பில்லி பேசுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது அல்ல. முன்பு அவர்கள் தங்களை இந்தி, குஜராத்தி, மராத்தி பேசுகிறவர்களாகச் சொல்லிக் கொண்டார்கள்.(குஜராத், ராஜஸ்தான், ம.பியில் வாழ்கிறவர்கள் அவர்கள்) இப்போது அவர்கள் தங்களை பில்லி பேசுகிறவர்களாக அறிவித்துக் கொண்டனர். இது மொழியின் மறுமலர்ச்சி அல்ல. மொழி உணர்வின் வளர்ச்சி! கொங்கணி மொழி 1960களில் மராத்தியின் பேச்சுமொழிகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. ஆனால் இன்று கொங்கணி இலக்கிய அகாதமி, இலக்கிய விருதுகள், கொங்கணியில் நூற்றுகணக்கான நூல்கள் வருகின்றன. யாரும் இன்று மராத்தியின் கிளைதான் கொங்கணி என்று சொல்வதில்லை. இது மொழியின் வளர்ச்சி. இன்று மராத்தியில் எதற்கெல்லாம் சொல் இருக்கிறதோ அதற்கெல்லாம் கொங்கணியிலும் சொல் உள்ளது. இங்கே மாநில அரசின் பங்களிப்பு மொழி வளர்ச்சிக்கு உதவி உள்ளது. பில்லி மொழியில் மக்களின் மொழி இயக்கம் அதன் அடையாளத்தைச் சாத்தியப்படுத்தியது.

 மூன்றாவது உதாரணம், போஜ்பூரியைப் பற்றியது. 2011 மக்கள்தொகைக் கணக்கீட்டில் 5.03 கோடிப்பேர் தங்களை போஜ்பூரி பேசுகிறவர்களாக அறிவித்துக் கொண்டிருக்கின்றனர். இது பெரிய எண்ணிக்கை. இங்கு அரசு ஆதரவோ, மொழி இயக்கமோ இல்லை. முன்னதாக போஜ்பூரி பேசுவது இழிவாகக் கருதப்பட்டது. இந்தி பேசினால்தான் மதிப்பு. ஆனால் தற்போதைய வளர்ச்சி, மக்களின் ஆர்வத்தாலும் தொழில்வளர்ச்சியாலும் ஏற்பட்டது. மொழி வளர்ச்சிக்கு என்று ஒரு நிலையான வழிமுறைகள் இல்லை. இதே தொழில்வளர்ச்சி, தெலுங்கு மொழி விஷயத்தில் உதவவில்லை. 2001 கணக்கீட்டில் தெலுங்கு மொழிக்கு மூன்றாவது இடம் இருந்தது. 2011ல் அதுவே நான்காவது இடம். 60 லட்சம் பேர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. காரணம் தெலுங்கு மொழி பேசுவோர் வெளிநாடுகளுக்கு வேலைக்காகப் புலம்பெயர்ந்துவிட்டனர்.

தமிழின் பழமையான இலக்கியமான தொல்காப்பியம் உலகை வரையறுத்து இருப்பதற்கும் சமஸ்கிருதம் வரையறுத்திருப்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. தமிழ் உள் உலகை அகம் என்றும் வெளி உலகை புறம் என்றும் கூறுகிறது. சமஸ்கிருதம் அஹம், பரம் என்கிறது. சுயத்துக்கும் வெளிஉலகுக்குமான தொடர்பு சமஸ்கிருதம் மற்றும் அதுசார்ந்த மொழிகளிலும் தமிழ் மற்றும் அது சார்ந்த மொழிகளிலும் வேறாக வெளிப்படுகிறது. சமஸ்கிருதத்தில் அஹம் என்பது சர்வவியாபி என்று சொல்லப்படுகிறது. எங்கும் நிறைந்துள்ளது. ஈஷோவியாச உபநிடதம், ‘‘அது இல்லாத சிறுதுளி கூட இல்லை' என்கிறது. ஆனால் தமிழோ புறம்தான் எங்கும் நிறைந்திருக்கிறது என்கிறது. என்ன ஒரு அற்புதமான வேறுபாடு! புறம் என்பது ஒன்றே அல்ல. நான்கு வகைப்பட்டது. எனவேதான் தமிழர்களின் உலகப்பார்வை என்பது அதிலிருந்து வேறுபட்ட பார்வை உடையவர்களால் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாதது. காலம், வெளி, தொன்மம், வரலாறு, பிம்பங்கள், மதம், திரைப்பட ஆளுமை ஆகியவற்றுக்கு தமிழர்களின் மனம் எப்படி எதிர்வினையாற்றுகிறது  என்பது தனித்துவமானது. தமிழ் நாட்டில் மட்டும் திரைப்பட நடிகர்கள் பெரும் அரசியல்வாதிகள் ஆகிறார்களே ஏன் என்று கேட்டால், அதன் காரணம் சினிமாவில் இல்லை! தமிழ் மொழி அவர்களை தம்மையும் பிறவற்றையும் எப்படிப் பார்க்கவேண்டும் என்று பயிற்றுவித்திருக்கிறது! இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்கு சொற்கள். தம் மொழியை மட்டுமல்ல, பிற மொழியையும் கூட எப்படிப்பார்க்கவேண்டும் என்றும் முப்பரிமாண வரையறை கொண்டது தமிழ் மொழி. சரியான மொழி, கிளைமொழி, தமிழுக்கு வெளியே இருந்து வந்த சொல் எல்லாமே தமிழ்தான் என்கிறது. சுயம் என்பது தமிழ் மற்றும் பிற மொழிகளுடனான அதன் உறவு. எதுவும் விலக்கம் கிடையாது. பனராஸில் உள்ள மொழி பண்டிதர் வைத்திருக்கும் மொழி விதிகளுக்கும் தமிழின் மொழி விதிகளுக்கும் தொடர்பே இல்லை. நாட்டின் முக்கியமான தலித் இயக்கம் தமிழ்நாட்டில்தான் தொடங்கியது என்றால் அதற்குக் காரணம் தமிழ் கொண்டிருக்கும் உலகப்பார்வைதான்.

பொதுவாக பள்ளிக்கல்வியில் இப்போது ஆங்கில மோகம் இருப்பதைக் காண்கிறோம்.  தாய்மொழிக் கல்வி எந்த அளவுக்கு முக்கியமானது?

பனிரெண்டாம் நூற்றாண்டில் ஆங்கிலம் ஒரளவுக்கு நிலைபெறத்தொடங்கி பதினைந்தாம் நூற்றாண்டில்தான் முழுமையான மொழியாக மாறியது. அதுவரை அது பிரெஞ்சு மொழியின் ஆதிக்கத்தில் இருந்தது. தமிழின் வரலாறு என்பது ஆங்கிலத்தை விட பதினான்கு நூற்றாண்டுகள் நீளமானது. இன்றைக்கு உலகில் வழங்கும் மொழிகளில் தமிழ்தான் மிகப் பழைமையான வாழும் மொழி. இது ஏன்? தமிழில் ஏதோ ஒரு சிறப்பம்சம் அதை நீடித்து நிலைக்கச் செய்வதாக இருக்கிறது. ஆகவே இது ஆங்கிலம் இன்று அளிக்கும் சவாலை மிக வலிமையுடன் எதிர்கொள்ளும் திறன் கொண்டது. இன்று ஆங்கிலம்; முன்பு பெர்சிய மொழி, அதற்கு முன்பு சமஸ்கிருதம். இவற்றை தமிழ் வெற்றிகரமாக எதிர்கொண்டது.

இன்று பெற்றோர் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்விக்கு அனுப்புகிறார்கள். காரணம் வாழ்வாதாரம் எளிதாக ஆங்கில வழிக் கல்வி கற்றோருக்குக் கிடைக்கிறது. ஆனால் எல்லோரும் ஆங்கில வழிக்கல்விக்குப் போனால் அந்த வேலைவாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. பலர் தமிழுக்குத் திரும்பத்தான் வேண்டும். இது அதிகப்படியான நம்பிக்கை என்று நினைக்கலாம். ஆனால் மொழிகளின் வரலாறு, பெரிய மொழிகள் எல்லாம் சரிவுற்றன என்பதையே சொல்கிறது. சிறு மொழிகள் நீடித்துள்ளன. ரோமானிய மொழி வீழ்ந்தது. அது ஆதிக்கம் செலுத்திய மக்களின் மொழி ப்ரெஞ்சு, ஸ்பேனிஷ் ஆகியவை வளர்ந்தன. சமஸ்கிருதம் இந்தியா முழுக்க ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் அது வீழ்ந்து, பிராகிருதம் வந்தது. வங்கம், குஜராத்தி, மராத்தி வளர்ந்தன. தமிழ் எப்போதும் ஆதிக்க அரசுகளின் மொழியாக இருக்கவில்லை.

அது மக்களின் மொழி. எனவே இது லத்தீன், சமஸ்கிருதம் ஆகியவற்றின் நிலையை எதிர்கொள்ளாது. இம்மொழிகளும் தமிழும் ஒரே நேரத்தில் பிறந்தவை. தமிழ் மனம் உலகை ஆளவேண்டும் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று எண்ணாதவரைக்கும் தமிழ்மொழி ஏதோ ஒரு வடிவில் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும். அதிகப்படியான ஆங்கிலப்பள்ளிகள் ஒருவேளை தமிழ் மேலும் வளர உதவலாம். நிறைய ஆங்கிலச் சொற்கள் தமிழ் மொழிக்குள் இடமளிக்கப்படலாம். ஆனால் அது தமிழ் மொழியாகவே வளரும்.

 ஆனால் நான் எப்போதும் தாய்மொழி வழிக்கல்வியையே ஆதரிப்பேன். மூளை வளர்ச்சி, திறன் ஆகியவை வீட்டிலும் பள்ளியிலும் ஒரே மொழி பயன்பாட்டின்போது கூடுதலாக இருக்கும். ஆய்வுத்திறன் சிறப்பாக இருக்க உதவும்.

மொழியைக் காக்க என்ன செய்யவேண்டும்?

இதற்குப் புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும். ஏற்கெனவே செய்தவற்றைத் திரும்பச் செய்வதில் பயனில்லை. நமது பெருநகரங்கள் அனைத்துமே பல்மொழி நகரங்கள் என்பதை அங்கீகரிக்கவேண்டும். உதாரணத்துக்கு சென்னையில் உள்ள சமூகங்கள் சுமார் 200 மாறுமட்ட மொழிகளைப் பேசுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு மொழிச்சமூகக் குழந்தையும் தங்கள் தாய்மொழியுடன் தொடர்பு கொண்டிருப்பதை உறுதிப் படுத்தும் பள்ளி அமைப்பை உருவாக்க முடியும். ஒவ்வொரு பள்ளியிலும் அந்த 200 மொழி பேசும் ஆசிரியர்களை நியமிப்பதல்ல. ஒவ்வொரு மொழிக்கும் தனித் தனியே மையங்கள் அமைக்கலாம். அங்கே வாரத்தில் சில நாட்கள் அந்தந்த மொழி மாணவர்கள் சென்று கற்பது போல் அமைக்கமுடியும். யூனியன் பிரதேசங்களை நாம் அங்கீகரித்து வைத்து இருப்பதுபோல். பன்மொழி பிரதேசங்களை நாம் அதிகாரபூர்வ அங்கீகாரம் அளித்து உருவாக்க வெண்டும்.

மொழி ஒரு தகவல் தொடர்பு சாதனம் தானே... இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்ற கேள்வியை எதிர்கொண்டிருப்பீர்களே..

மொழி தொடர்புக் கருவிதான். ஆனால் அதன்மூலம்தான் நாம் உலகுடன் நம்மை பிணைத்துக்கொண்டிருக்கிறோம்.  வேறுபட்ட மொழிகள் இருப்பது தடையல்ல. அது நம் முக்கியச் செல்வங்கள் ஆகும். பல்லுயிர்கள் இயற்கையில் பெருகி இருப்பது போலத்தான் இது. ஏன் இவ்வளவு வகையிலான மரங்கள் உள்ளன? என்று கேட்கலாம். பல்லுயிர்ப் பெருக்கமே நம் இருப்பை தொடரச்செய்யும் வழி. அதுபோல் பல மொழிகள் இருப்பதுதான் நம் கலாச்சார விழுமியங்களைத் தொடரச் செய்யும் வழி. பல மொழிகளைப் பேசும் நாட்டில் வசிப்பவர்கள் ஒரே மொழி பேசும் நாட்டில் வாழ்பவர்களை விட அதிக சகிப்புத் தன்மை உடையவர்களாக இருக்கிறார்கள். ஒரே மொழியை வலியுறுத்துபவர்கள் சகிப்புத்தன்மை அற்றவர்களாக இருப்பர். உதாரணத்துக்கு இந்தியே நாட்டின் ஒரே மொழியாக இருக்கவேண்டும் என்று சொல்பவர்களைப் பாருங்கள். மானுட குலத்தின் முன்னேற்றமே பன்மொழித் தன்மை. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து பன்மொழித் தன்மை பெருமளவு செலவழித்து மனிதகுலத்தால் பேணப்படும். இன்று நாம் செலவில்லாமல் பன்மொழி சமூகத்தில் வசிக்கிறோம். அதை இழந்துவிடக்கூடாது.

சினிமா எப்படி மொழி வளர்ச்சிக்கு உதவும்?

சினிமா நிழல்களின் மூலம் உரையாடும் ஊடகம். இது ஒரு புதிய மொழி ஊடகம். ஐந்து லட்சம் ஆண்டுகள் மனிதனின் பரிணாம வளர்ச்சி வரலாறு, 70,000 ஆண்டு மனிதகுலத்தின் மொழி வரலாறு ஆகியவற்றை எடுத்துக்கொண்டால், எதிர்காலத்தில் மொழி என்பது சொற்களுக்குப் பதிலாக நிழல்களால் உருவாக்கப்படுவதாகவே இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. காட்சி மொழிகள், விரைவில் பேச்சு மொழிகளின் இடத்தை எடுத்துக் கொள்ளும். இணைய ஊடகத்தில் காட்சி பிம்பங்களே எழுத்துக்களை விட அதிக அர்த்தம் தருபவையாக மாறிவருகின்றன. திரைப்படம் என்பது மனித தகவல் தொடர்பு வரலாற்றில் புதிய ஆரம்பமாக பதிவாகும். எனவே தான் இது மிகவும் பிரபலமான ஊடகமாக உள்ளது.

தார்வாருக்கு வசிக்க வந்திருப்பது பற்றி..?

நான் என் 65வது வயதில் தார்வாருக்குக் கிளம்பி வந்தேன். அந்த வயதில் அனைவரும் ஓய்வெடுக்கவே விரும்புவார்கள். நானும் அப்படியே எண்ணி இருந்தேன். ஆனால் திடீரென சூழல் மாறிவிட்டது. தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகியோர் கொல்லப்பட்டனர். தபோல்கருடைய வழக்கை அவரது அமைப்பு பார்த்துக்கொள்கிறது. பன்சாரேவின் கொலை வழக்கை அவர் சார்ந்த கட்சி அழுத்தங்கள் கொடுத்து விசாரணையைக் கவனிக்கிறது. ஆனால் கல்புர்கியின் கொலை விசாரணையைக் கண்காணிக்க யாரும் இல்லை. அவரது குடும்பம் மட்டுமே உள்ளது. எனவே அதை மேற்கொள்ள கடந்த ஆண்டு இங்கே வந்துசேர்ந்தேன். வந்ததற்கு பலன் இருந்தது. கர்நாடக அரசின் மீது அழுத்தம் கொடுத்து, காவல்துறையும் விசாரணையை கவனமாகச் செய்துவருகிறது. கல்புர்கியின் கொலையாளிகளை காவல்துறை நெருங்கிவிட்டது. இப்போதைக்கு என் பணி இதுதான். இது முடிந்தபின்னர், நான் மௌனமாக ஓய்வு பெறவிரும்புகிறேன். ஏனெனில் நான் மௌனத்தை ஆய்வு செய்ய விரும்புகிறேன்.

சந்திப்பு : அசோகன், கௌதமன்

அக்டோபர், 2018.