எஸ். ராமகிருஷ்ணன் படங்கள்: புதுவை இளவேனில்
பேட்டிகள்

பெரும்பான்மை தமிழ்நாவல்கள் சொல்வது என்ன?

எஸ். ராமகிருஷ்ணன் நேர்காணல்

Staff Writer

சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனைச் சந்தித்தபோது வாழ்த்துமழையில் நனைந்துபோயிருந்தார். அவரிடம் நடத்திய நேர்காணலில் இருந்து...

நிலப்பரப்பு உங்கள் நாவல்களில் தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. உதாரணத்துக்கு சஞ்சாரம்...

 அது தான் எனது அடையாளம். அலைந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை விவரிப்பதே எனது நாவல்கள். ஆகவே பல்வேறு நிலக்காட்சிகள் நாவலில் வந்து போகின்றன. வாழ்நிலம் குறித்தே அதிகம் யோசிப்பவன் நான். ஆகவே எனது நாவல்கள் நிலவெளியின் கதையை தான் அதிகம் பேசுகின்றன.

 போரும் வாழ்வும், கரம சோவ் சகோதரர்கள், மோபி டிக் போன்ற மாபெரும் நாவல்கள் தமிழில் இல்லை. தமிழ்நாவல்களில் எண்பதுகளுக்குப் பின் தான் நாவல் என்கிற வடிவம், அதன் மொழி கட்டுமானம் பற்றிய பேச்சு தொடங்கியது. வட்டார வழக்கு அறிமுகம் ஆனது. அதுவும் ஆப்ரிக்க எழுத்திலிருந்து உருவானதுதான். இனக்குழுவின் வரலாற்றை அதன் மொழியில் எழுதுதல் ஆப்பிரிக்க இலக்கியத்தின் முதன்மைப்பணி. அதையே இந்திய இலக்கியமும் உள்வாங்கிக் கொண்டது.

பொழுதுபோக்கு நாவல்கள் செத்துவிட்டனவா?

 அப்படி இல்லை. பொழுதுபோக்கு நாவல்கள் போதாமையை அடைந்துவிட்டன.  சுவாரஸ்யமாக இலக்கிய நாவல்கள் எழுதப்பட்டுவிட்ட காலமிது. உம்பர்தோ ஈகோவின் நேம் ஆப் தி ரோஸ் நாவலை துப்பறியும் கதையாகவும் படிக்கலாம். இலக்கிய நாவலாகவும் படிக்கலாம். முரகாமியின் நாவல்களும் மிகச்சுவாரஸ்யமானவை. ஆகவே பொழுதுபோக்கு நாவல்கள் தடுமாறத்துவங்கின. அவை தனது மொழியை, கதைகூறலை புத்துருவாக்கம் செய்து கொள்ளவில்லை.

இதுபோல் தமிழில்..?

இன்று நாவல் வாசிப்பதற்கு என தனிவாசகர்கள் உருவாகியிருக்கிறார்கள். விற்பனையிலும் நாவல்கள் அதிகம் விற்கின்றன. ஜெயமோகன் மகாபாரதத்தை மிக நீண்ட நாவல்வரிசையாக வெளியிடுகிறார். அது ஒரு சாதனை. பா.வெங்கடேசன் எழுதிய ‘தாண்டவராயன் கதை' பாகீரதியின் மதியம் இரண்டும் மிக முக்கியமான நாவல்கள். ஷோபா சக்தியின் Box கதைப் புத்தகம் சமீபத்தில் படித்த முக்கியமான நாவல்.

 நான் ஒன்பது நாவல்கள் எழுதியிருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு கதைக்களம். ஒருவிதமான எழுத்துமுறையை கொண்டது. யாமம் இஸ்லாமியர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது என்றால் துயில் கிறிஸ்துவர்களின் வாழ்வை விவரிப்பது. இடக்கை அதிகாரத்தை கேள்விகேட்பது. சஞ்சாரம் கரிசல் வட்டார நாதஸ்வரக்கலைஞர்களை பற்றியது.

சஞ்சாரம்

 நாதஸ்வரம் பற்றி கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் சுவாரஸ்யமான நாவல். அது சினிமாவாகவும் வந்து  கொண்டாடப்பட்டது. ஆனால் அதன்பிறகு நாதஸ்வரம் பற்றி விரிவாக யாரும் நாவல் எழுதவில்லை. குறிப்பாக தென்மாவட்ட நாதஸ்வரக்கலைஞர்களை பற்றிய கவனம் பொதுவெளியில் உருவாகவில்லை. அதற்காகவே நான் இந்த நாவலை எழுதினேன்.

இடதுசாரி நாவல்களை பற்றி...

 சோசலிச யதார்த்த வாதமே இலக்கியத்தின் உச்சநிலை என புரட்சிக்குபிறகான ரஷ்யா ஒரு நிலைப்பாடு எடுத்தது. அந்த எண்ணத்தை பிரதிபலிக்கும் நாவல்கள் எழுதப்பட்டன. ஆனால் அவை பெரிய வெற்றியை பெறவில்லை. உலகெங்கும் இடதுசாரி நாவல்களை எழுதியவர்கள் இடது சாரி எண்ணம் கொண்டவர்கள். அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இல்லை. போராடும் மக்களின் வாழ்வை விவரிப்பதில் டிக்கன்ஸ் முன்னிலையில் இருக்கிறார். ஆனால் அவர் தன்னை இடதுசாரி என சொல்லிக் கொண்டதில்லை. எமிலி ஜோலாவும் அப்படித்தான்.

ஆயிரம் பக்கம் இரண்டாயிரம் பக்கம் என நாவல் பக்கங்களை கொண்டு முடிவு செய்யப்படுகிறதா ?

 நாவலின் அளவை வைத்து நாவலின் தகுதியை முடிவு செய்யமுடியாது. ஜப்பானிய எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவருமான யாசுனாரி காவபாட்டாவின்  நாவல்கள் அத்தனையும் நூறு முதல் 150 பக்கம் கொண்டதே. நாவலில்  அவர் தொட்ட உச்சம் அபூர்வமானது. அதே நேரம், ஆயிரம் பக்கங்களுக்கு மேலான   கரமசோவ் சகோதரர்கள், போரும் வாழ்வும் போன்ற நாவல்கள் இன்றும் விரும்பி வாசிக்கப்படுகின்றன; கொண்டாடப்படுகின்றன

 தமிழ்நாவல்கள் விரிவான களத்தை தேர்வு செய்வதில்லை. பெரும்பான்மை தமிழ் நாவல்கள் தமிழ்க் குடும்பத்தின் கதையை தான் சொல்கின்றன. அந்தக்குடும்பம் எந்த ஊரில் உள்ளது. எந்த வகை பின்புலத்தில் உள்ளது என்பதில் தான் வேறுபாடு.  இரண்டாம் உலகப்போரில் தமிழர்களும் கலந்து கொண்டார்கள். ஏன் ஒருவர் கூட அதை நாவல் எழுதவில்லை?

 அந்தக்காலத்தில் ஊர் ஊருக்கு சர்க்கஸ் நடந்தது. ஆனால் சர்க்கஸ் பற்றி என்ன நாவல் இருக்கிறது. பிஜி தீவிற்கு கரும்பு தோட்டத்தில் வேலை செய்ய போனவர்களை பற்றி பாரதி கவிதை எழுதியிருக்கிறார். நாவல் என்ன இருக்கிறது. தமிழர்கள் கல்கத்தாவில் தலைமுறையாக வசிக்கிறார்கள். கல்கத்தாவை பிரதான களமாக கொண்டு எத்தனை தமிழ்நாவல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் வங்கத்தில் நமது தூத்துக்குடியை கதைக்களமாக கொண்டு சிப்பிக்குள் முத்து என்ற ஒரு நாவல் வெளியாகி மிகுந்த புகழ்பெற்றிருக்கிறது. தமிழர்கள் நாசா வில் வேலை செய்து செவ்வாய்கிரகத்தை பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள். ஆனால் எழுத வேண்டும் என்று நினைத்தவுடன் குடும்ப பிரச்சனைகளே முதன்மையாக வருகின்றன. இப்போது தான் இந்தப் போக்கு மாறத் துவங்கியிருக்கிறது.

நீங்கள் திரும்பத் திரும்பப் படிக்கும் தமிழ்நாவல்?

 நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன், பா.சிங்காரத்தின் நாவல்கள், நகுலனின் நாவல்கள், சு,ராவின் புளியமரத்தின் கதை, சா.கந்தசாமி யின் சாயாவனம், கிராவின் கோபல்லபுரம், தி. ஜானகிராமனின் மோகமுள். வண்ணநிலவனின் கடல்புரத்தில், வாடிவாசல்- சி சு செல்லப்பா, ஒற்றன்- அசோகமித்திரன், பசித்த மானுடம்-& கரிச்சான் குஞ்சு,  அபிதா- லா ச ராமாமிர்தம் இப்படி நிறைய உள்ளன.

உங்கள் எழுத்துமுறையை பாதித்த தமிழ் நாவல் எதுவென்று சொல்லலாம்?

 நாவல் இல்லை. வண்ணநிலவனின் சிறுகதைகள் என் எழுத்தை பாதித்துள்ளன. தஸ்தாயெவ்ஸ்கி, செகாவ் இவர்களின் எழுத்துகளில் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.

சஞ்சாரத்தில் ஊரைப்பிரிக்கும் ஒரு சாதியச் சுவர் வரும். அதை உத்தபுரத்தில் நடந்த நிகழ்விலிருந்து பெற்றீர்களா?

 எந்த ஊரில்  சாதியசுவர் இல்லை? நம் கண்ணுக்கு தெரியாத சுவர்கள் இருக்கதானே செய்கின்றன.   உத்தபுரம் சுவர்  நம் கண்முன்னால் தெரிந்தது. ஆனால் பல ஊர்களில் அரூபமாக இருக்கிறது.  அது ஒரு சமூக அவலம் அதை நாவலில் சுட்டிக்காட்ட விரும்பியே அந்த சுவரை பற்றி எழுதினேன்.

தமிழ் நாவலின் எதிர்காலம்?

 ஒவ்வொரு பத்தாண்டிலும் தமிழ் நாவலில் புதிய போக்கு உருவாகும். அப்படி தான் இன்றுவரை தொடர்கிறது. இரண்டாயிரத்திற்கு பிறகும் அப்படி ஒரு புதிய எழுத்துமுறை உருவாகியுள்ளது. இளந்தலைமுறை நாவலாசிரியர்கள் உருவாகி வருகிறார்கள். குறிப்பாக லட்சுமி சரவணக்குமார், சயந்தன், தமிழ்நதி, குணா கவியழகன், ஏக்நாத், இரா.முருகவேள், தமிழ்பிரபா, கரன்கார்க்கி, என சிறந்த நாவல்களை எழுதியவர்கள் நிறைய உருவாகிவருகிறார்கள்.

எஸ். ராமகிருஷ்ணன்

தமிழில் எழுதப்படாத நாவல் களங்கள் பற்றி?

 தஸ்தாயெவ்ஸ்கியை பற்றி கூட்ஸி என்ற நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் பீட்டர்ஸ்பெர்க் நாயகன் என ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அப்படி எந்த தமிழ் எழுத்தாளர் பற்றியும் நாவல் எழுதப்படவில்லை.  கோலார் தங்கவயலுக்கு வேலைக்கு பல்லாயிரம் தமிழர்கள் சென்றனர். அவர்களின் வாழ்க்கையை பற்றி என்ன நாவல் வந்துள்ளது ? சங்க இலக்கியம் பற்றி, சிலப்பதிகாரம் பற்றி, தமிழர்களின் கலைகள் பற்றி எவ்வளவு நாவல்கள் வந்திருக்கலாம்? வரவில்லையே.. தமிழகத்தில் முக்கியமான ஆதீனங்கள். சைவமடங்கள் உள்ளன அவற்றை பற்றி யார் நாவல் எழுதியிருக்கிறார்கள்?  சென்னையைப் பற்றி மட்டுமே நூறு நாவல்கள் எழுதலாம்.. எழுதப்படவில்லையே! தமிழ் நாவல் செல்லவேண்டிய தூரம் நிறையவுள்ளது.

ஜனவரி, 2019.