நிலக்கரித் தொழிலாளர்களோ, கடலுக்குள் வேலை பார்க்கும் தொழிலாளர்களோ நம் கண்ணுக்கு அன்றாடம் புலப்படுவதில்லை. ஆனால் தினசரி வீட்டை விட்டு வெளியில் வந்தால் ஒரு துப்புரவுத் தொழிலாளி கூட நம் கண்ணில் படாமல் போகமாட்டார்கள்.
ஆனால் அவர்களைப்பற்றி நமக்கு என்ன தெரியும்? எப்படி நாம் அவர்களைப் புறக்கணித்தோம்? காரணம் சாதி. சாதி வெறி என்றில்லாவிட்டாலும் உங்களையும் எங்களையும் இவர்களைப் பார்க்கவிடாமல் தடுத்தது சாதிதான்” என்று எடுத்த எடுப்பிலேயே பொட்டில் அடிக்கிறார் திவ்யா பாரதி. கக்கூஸ் என்ற ஆவணப்படத்தின் இயக்குநர். துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வை தீவிரமாக சித்திரித்த படம். அதன் மூலமாகச் சர்ச்சைகளையும் எதிர்கொண்டிருக்கும் படம். திவ்யாவிடம் பேசினேன்.
சரியாக எந்த நிகழ்வு இப்படியொரு படம் எடுக்கத் தூண்டியது?
அக்டோபர் 2015ல் மதுரையில் இரண்டு தொழிலாளர்கள் மலக்குழியில் விஷவாயு தாக்கி இறந்து போனார்கள். அரசு மருத்துவமனையில் தலித் அமைப்புகளும் இடதுசாரி அமைப்புகளும் இணைந்து உடலை வாங்க மறுத்து நடத்திய போராட்டத்தில் எங்கள் அமைப்பும் இணைந்திருந்தது. அன்றுதான் முதன் முதலில் நூற்றுக் கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களை நேருக்கு நேர் பார்த்தேன்.
இறந்து போன முனியாண்டி, விஸ்வநாதன் இருவருக்குமே வயது முப்பதுக்குள் தான். சட்டக் கல்லூரி மாணவியாதலால் என்னைப் புகார் எழுதச் சொன்னார்கள். ஆனால் சிக்கலென்னவென்றால் என்ன புகார், என்ன சட்டப் பிரிவில் எழுதுவது என்பதையே நான் அறிந்திருக்கவில்லை.
ஆனால் துப்புரவுத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் எந்தவித அக்கறையையும் அதுவரை செலுத்தாது இருந்திருக்கிறேன். மலக்குழியில் இறந்தவர்களுக்கு அரசு தலா பத்து லட்சம் தர வேண்டும் என்று 2013இல் இயற்றப்பட்ட சட்டம் குறித்துக் கூட, நான் அப்போது அறிந்திருக்கவில்லை. அதன் பின் தோழர்களிடம் கலந்தாலோசித்து, இறந்தவர்கள் குடும்பத்தினருக்குச் சட்டப்படி தலா பத்து லட்சம் இழப்பீடு கிடைக்கவும், இறப்புக்குப் பொறுப்பான உயரதிகாரிகளைக் கைது செய்யவும் கோரிக்கை எழுப்பிப் போராட்டத்தை நடத்தினோம். மலக்குழியில் இறந்தவர்களுக்காக முதன்முதலில் பெரிய அளவில் தமிழ்நாட்டில் நடந்த போராட்டம் அது தான்.
இறுதியில் மீடியாவின் வெளிச்சம் அதிகமானதால் பத்து லட்சம் இழப்பீடு மட்டும்தான் கிடைத்தது, ஆனால் ஒருவரும் கைது செய்யப்படவில்லை. அதன் பின் தான் இதற்குத் தொடர்பான அத்தனை சட்டங்களையும் செய்திகளையும் தேடித்தேடித் தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தேன்.
பாஷா சிங்கின் “தவிர்க்கப்பட்டவர்கள்” நூல் (கிழக்கு வெளியீடு, ஆங்கிலத்தில் unseen) நூல் எனக்குப் பெரிய புரிதலைக் கொடுத்தது. ஆனால் நானூறு பக்கம் கொண்ட அந்த நூலை நண்பர்களிடம் பகிர்ந்த போது யாருமே முழுமையாய்ப் படிக்க ஆர்வம் காட்டவில்லை. அப்போது தான் காட்சி வடிவத்தில் இதைக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
ஆவணப்படம் எடுக்கும் ஆர்வமும் திறனும் எப்படி உங்களுக்குள்?
ஒன்பதாவது படிக்கும் போதே மார்க்சிய லெனினிய விடுதலை அமைப்பின் கலை இலக்கியக் குழுவில் ஆர்வலராக இருந்தேன். பதினோராவது படிக்கும் போது கட்சி உறுப்பினராகி விட்டேன். கல்லூரி படிப்பதற்குள் கட்சி அலுவலத்தில் முழு நேர உறுப்பினராகி விட்டதால் போராட்டம் என்பது ஒரு அங்கமாகி விட்டது. கட்சியின் கலை அமைப்பில் இருந்ததாகச் சொன்னேன் அல்லவா? அங்கு மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை உலகத்திரைப்படங்கள் திரையிடுவார்கள். திரைமொழி மீதும், மாற்று சினிமா மீதும் எனக்கு மிகப்பெரிய ஆர்வமும் ஈடுபாடும் வந்தது அப்படித் தான்.
நான் பன்னிரண்டாவது முடித்ததும், பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் விஸ்காம் தான் படிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தேன். இங்கு என் குடும்பப்பின்னணி பற்றி சொல்லியாக வேண்டும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பம் எங்களுடையது. அப்பா பஞ்சுமில்லில் வேலை பார்த்தார்.
பஞ்சுமில் முதலாளி நடத்திய பள்ளியில் படித்த எனக்கு அங்கிருந்த ஆசிரியர்கள் மார்க்சிய லெனினிய அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தார்கள். என்னைப் பலவகையில் வளர்த்தெடுக்க அவர்கள் மிகவும் மெனக்கெட்டார்கள். என்னை இலக்கியத்தில் பெரிய ஆளாக்கிப் பார்க்கவேண்டும் என்று விரும்பினார்கள். இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு உண்டு, கதைகள் கூட எழுதி இருக்கிறேன்.
மிகுந்த போராட்டத்துக்குப் பின்பே எனக்குப் பிடித்த படிப்பைத் தேர்ந்தெடுக்க முடிந்தது. 2008இல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விஸ்காம் சேர்ந்தேன். ஆனால் சேர்ந்து மூன்று மாதங்களில் அங்கு பெரிய போராட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டதால் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டேன். அப்போது அம்மாவுக்குப் புற்று நோய் என்றும் தெரிந்ததால், செலவு அதிகம் பிடிக்கும் இந்தப் படிப்பைத் தொடராமல் சட்டம் படிக்கச் சென்று விட்டேன்.
ஆனால் திரைப்படம் எடுப்பது குறித்தான ஆர்வம் இருந்தது. மேலும், விஸ்காம் சேர்ந்த பிறகு அதில் முழு ஆர்வத்துடன் படிக்க வந்தவர்கள் ரொம்பக் குறைவு என்றும், பாடத்திட்டத்தில் சிறப்பாக ஏதும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையும் உணர்ந்தேன்.
கக்கூஸ் படத்தின் பரவலான வெற்றியும் மீடியாவின் வெளிச்சம் பற்றி?
2008 லிருந்தே தீவிரமாகப் போராட்டக்களங்களில் தோழர்களுடன் இயங்கி வந்தாலும் மீடியா வெளிச்சம் என்பது நம்மை வேறுபடுத்திக் காட்டத்தான் செய்கிறது. ஆனால் நான் என்றுமே ஓர் ஆவணப்பட இயக்குநராய் என்னை உணரவில்லை. நான் சமூகப் போராளிதான். முதலில் இயக்க வேலைகளில் தான் தொடர்ந்து ஈடுபடுவேன். ஒரு படைப்பு என்பது சமூகம் நம்மிடமிருந்து கோரவேண்டும்.
அதற்கான தேவை மக்களுக்கும் சமூகத்துக்கும் இருப்பதாக நாம் நம்பவேண்டும் என்று எண்ணுகிறேன். நம் சுய அரிப்புக்காகவெல்லாம் படமெடுக்க முடியாது. இந்தக் கக்கூஸ் படத்துக்கான வித்து என்னைத்தூங்க விடாமல் செய்த அந்த துப்புரத்தொழிலாளர்களின் பாடு தான். அது குறித்து பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதாவது செய்யவேண்டும் என்ற தொடர்ந்து உள்ளே இருந்த உந்துதல் தான் இப்படத்தை எடுக்கக் காரணம். அடுத்து என்ன படம் எடுக்கலாம் என்று உட்கார்ந்து யோசித்தால் ஒன்றுமே தோன்றாது என்பது தான் எதார்த்தம்.
கக்கூஸ் படத்தில் எந்தெந்த சாதியினர் மலம் அள்ளும் தொழிலில் இருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டது விமர்சனத்தை உருவாக்கியது. இப்படி விமர்சனம் வரும் என்று எதிர்பார்த்தீகளா?
இல்லை. அரசு தரப்பிலிருந்து வரும் என்றுதான் எதிர்பார்த்தோம். இதை முதலில் தலித்களிடமிருந்து வரும் எதிர்ப்பாக யாரும் பார்க்கக் கூடாது என்பதே எங்கள் வேண்டுகோள். கிருஷ்ணசாமி தன்னைத் தலித்தே இல்லை, ஆண்ட பரம்பரை என்கிறார்.
இதற்குப் பின்னணியையும் நாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது.
கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவிக்கும் முன்பே கக்கூஸ் படத்துக்குப் பரவலான வரவேற்பு ஏற்பட்டு விட்டது. படம் குறித்து எழுதாத வார இதழ்களே இல்லை, இரண்டு லட்சம் காட்சிகளையும் தாண்டியது யூடியுப்பில் வெளியிட்ட காணொளி. ஆறுமாதமாக அமைதியாக இருந்து விட்டு அதன்பின் ஏற்பட்ட எதிர்ப்புக்குக் காரணம் வேறு அரசியல்.
என்ன அது?
திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழகத்தின் டீன் சித்திரைச் செல்வி பதினைந்து துப்புரவுத் தொழிலாளர்களைச் சட்டவிரோதமாக மலக்குழியைச் சுத்தம் செய்யச் சொல்வது, கையால் மலம் அள்ள வைப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து அந்தப் பதினைந்து பேரும் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பான ஒரு காணொளியை நான் எனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். மேலும் ஜூலை மாதம் 29ஆம் தேதி பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். சரியாக ஜூலை 26 என்னை 2009 நடந்த போராட்டம் தொடர்பாகக் கைது செய்து மதுரையிலேயே முடக்கி வைத்தார்கள். 27ஆம் தேதி கிருஷ்ணசாமி தெரிவித்த எதிர்ப்பு என் மீதான பிரச்னையைத் திசை திருப்பி விட்டது. நோக்கம் என்னவென்றால் 29ஆம் தேதி நாங்கள் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தைத் தடுப்பதுதான்.
இந்த எதிர்ப்பு எதைக் காட்டுகிறது? நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
படம் வெளியிட்ட நாள் தொடங்கி பலவித எதிர்ப்பு வந்தது. நான் தலித் அல்லாதவள், இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவள். தலித் பிரச்னை குறித்துப் பேசுவதற்காக அடையாள அரசியலை உயர்த்திப் பிடிக்கும் அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு வந்தன. அமுதன், வினோத் மிஷ்ரா போன்றவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால் யாருமே இந்த விஷயம் குறித்து எதுவுமே பேசியதில்லை.
அப்புறம், ஆவணப்படத்தொழிலில் என்னை ஒரு போட்டியாளராகப் பார்க்கக் கூடியவர்களும் இந்தப் பிரச்னை குறித்து ஏற்கனெவே படைப்புகள் கொண்டுவந்தவர்கள் ஒரு சீனியர் ஈகோவுடனும் எழுப்பும் எதிர்ப்புகளும் கூட கணிசமான அளவில் இருக்கின்றன. அப்புறம் இருக்கவே இருக்கு. பெண் என்பதால் எளிதில் பெயர் கிடைத்ததாய் நம்பும் பொச்சரிப்புகள். எவரையும் பெயர் சொல்ல விரும்பவில்லை. (சிரிக்கிறார்)
கக்கூஸ் படம் எடுத்த அனுபவம் பற்றி?
2015 நவம்பரில் தான் வேலையைத் தொடங்கினோம். அதற்கு ஓராண்டு முன்னதாகவே திட்டமிடத் தொடங்கி இருந்தோம். என்னுடைய சங்கிலியை முப்பத்தாறாயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து தான் முதலை ஏற்பாடு செய்தோம். நான் தான் இயக்குநர். என் துணைவர் கலாகோபால் தான் ஒளிப்பதிவாளர் என்று முதல் அடி எடுத்து வைத்தோம்.
சென்னை நோக்கியாவில் வேலை பார்த்த அவருக்குத் தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டதில் வேலை போனபின்பு, நாங்கள் இருவரும் மதுரையில் ஸ்டுடியோ ஒன்று தொடங்கினோம். இருவரும் சொந்த ஆர்வத்தில் காமிரா, எடிட்டிங் கற்றுக் கொண்டு, திருமணம், காதுகுத்து விழாக்களுக்குப் படம் மற்றும் வீடியோ எடுப்பது தான் எங்கள் தொழில். ட்ரைபாட் கூட எங்களிடம் சொந்தமாக இல்லை. வாடகைக்கு எடுத்துத்தான் பயன்படுத்துவோம். கக்கூஸ் படத்துக்காக நண்பர் ஒருவர் 5டி மார்க் 2 என்ற நல்ல கேமிராவை பிப்ரவரி வரை பயன்படுத்தக் கொடுத்தார். அன்பு என்பவர் ட்ரைபாட் அளித்தார். லெபிள் மைக், குமார் என்ற நண்பர் கொடுத்தார்.
கரூரில் முதல் ஷூட்டிங் தொடங்கினோம். பின்பு பழனிகுமார் என்ற ஃபோட்டோகிராஃபர் எங்களுடன் இணைந்தார். பின்பு கடனைச் சமாளிக்கவும், வீட்டு வாடகை இதர செலவுகளை ஈடு கட்டவும் கலாகோபால் தொழிலைக் கவனித்துக் கொள்ள வேண்டி இருந்தது.
டீ வாங்கிக் கொடுத்ததும் பைக்குக்குப் பெட்ரோல் போட்டதும் தவிர பழனிகுமாருக்கு எந்த வித ஊதியமும் நான் இன்று வரை கொடுக்கவில்லை. படம் எடுத்ததால் ஏற்பட்ட கடனைச் சமாளிக்க நானும் கோபாலும் இன்னும் நிறைய திருமண வீடியோக்கள் எடுக்க வேண்டும்!
இரோம் திருமணத்தில் மணப்பெண் தோழியாக இருந்தீர்களே?
வியப்பு தான்! என்றாவது மணிப்பூர் செல்வோம் இரோமைப் பார்ப்போம் என்று கனவு இருந்தது. நான் கைதானதைச் செய்திகளில் பார்த்த அவர் அதைத் தொடர்ந்து கக்கூஸ் படத்தைப் பார்த்திருக்கிறார்கள். அது அவரைப் பெரிய அளவில் பாதித்திருக்கிறது. அதில் ஏற்பட்ட நட்புதான். முதன்முறை பார்த்த போது என்னை அணைத்து ஆதூரமாகக் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
அவரது திருமணத்தில் தோழியாகக் கலந்து கொண்டதும் நான்கு கிலோமீட்டர்கள் வீட்டுக்கும் பதிவு அலுவலத்துக்கும் இடையே அவருடன் பேசிக் கொண்டே நடந்து சென்றதும் பரவசமான அனுபவம்.
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, திருமணம், சொந்த ஊர், எதிர்காலத் திட்டம் பற்றி?
என் 19 வயதிலேயே அம்மா புற்றுநோயில் இறந்துவிட்டார். அதன்பின் ஒருவகையில் அந்த இழப்பின் வடிகாலாகவே அரசியல் வாழ்வில் வெறித்தனமாக ஈடுபட ஆரம்பித்தேன். கணவர் கோபால் மார்க்சிய லெனினிய அமைப்பின் காஞ்சி மாவட்ட பொறுப்பாளர். நான் திருச்சி மாவட்டத்தின் பொறுப்பாளர். அப்பா முப்பது ஆண்டுகாலமாய் முழுநேர கட்சி ஊழியர். அம்மா இடத்தை எனக்கு வெகுவாய் நிறைவு செய்தவர் என் துணைவர். பெண்ணியம், பெரியாரிசம், எல்லாம் பெரிதாகப் பேசத் தெரியாதவர். ஆனால் முழுநிறைவாய் அதன்படி வாழ்ந்து கொண்டிருப்பவர். ஆண் பெண் வித்தியாசமே வாழ்விலோ கருத்தளவிலோ பார்க்காதவர். மூவாயிரத்துச் சொச்சப் பெண்களுடன் நோக்கியாவில் வேலை பார்த்த அவரிடம் விளையாட்டாய்க் கேட்டிருக்கிறேன். “ஒருவரைக் கூடவா நீ காதல் நோக்கில் பார்க்கவில்லை?” என்று. தொழில் ரீதியாக அவர்கள் அன்றாடம் சந்தித்த இன்னல்களைக் கண்ணுற்ற எனக்கு அவர்களை உழைப்பு சுரண்டப்படும் வர்க்கத்தின் பிரதிநிதிகளாய்த்தான் பார்க்க முடிந்தது” என்றார்.
செப்டெம்பர், 2017.