இலக்கிய சிந்தனை அமைப்பின் நிறுவனரான ப.லட்சுமணனை அவரது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சந்தித்தோம். ஐம்பது ஆண்டை எட்டுகிறது இந்த அமைப்பு. முதலில் சற்று தயக்கத்துடன் பேசத் தொடங்கியவர், பிறகு மெல்ல இறுக்கம் தளர்ந்து நினைவு நாடாவைச் சுழலவிட்டார். நினைவுகளின் கிளர்ச்சியில் மலர்ந்து, அவர் சிரிக்கிறபோது மேல் முன்வரிசைப் பற்களில் பக்கவாட்டில் இரண்டு காணாமல் போயிருப்பது தெரிகிறது. அவரது சிரிப்புக்கு கூடுதலான அழகை அது அளிக்கிறது.
காரைக்குடி அருகே கண்டனூர்தான் லட்சுமணனுக்கு சொந்த ஊர். அப்பா தொழிலதிபர். குடும்பம் திருநெல்வேலிக்கு இடம்பெயர்ந்ததால் தொடக்கக் கல்வியை அங்கே கிறிஸ்துவப் பள்ளி ஒன்றில் படித்தார். ‘‘அங்கே ஸ்டெல்லா என்று எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் இருந்தார். நான் இரண்டாம் வகுப்பு சிறுவன். அங்கே எனக்கும் இன்னொரு மாணவனுக்கு அந்த அக்காதான் பொறுப்பு. மூத்தமாணவியை பொறுப்பாக நியமிப்பது என்பது அந்த பள்ளியில் வழக்கம். என்னை மிக அன்புடன் பார்த்துக்கொண்டார். எனக்கு அந்த வயதில் அவர்தான் தாயாக இருந்தார். எனக்கு வழிகாட்டியாக நற்போதனைகள் புரிந்தவர். அந்த பள்ளியிலிருந்து சில ஆண்டுகளில் நான் கண்டனூருக்கே திரும்பக் கூட்டி வரப்பட்டுவிட்டேன். அதன்பின்னர் ஸ்டெல்லா அவர்களை நான் பார்க்கவில்லை. ஆனால் இன்றும் அவர்கள் என்னிடம் காட்டிய கனிவை நான் மறக்கவில்லை. அவர்கள் என்ன ஆனார்களோ எங்கு இருக்கிறார்களோ தெரியாது. ஆனால் இன்றும் அவர்களைப் பற்றி நினைத்தால் எனக்குக் கண்ணீர் துளிர்த்துவிடும். பாசத்துக்கு அப்படி ஒரு சக்தி உண்டு!''
பின்னர் திருச்சியில் படித்துவிட்டு சென்னைக்குக் குடும்பம் இடம்பெயர்ந்தபோது இங்கே வந்து லயோலாவில் படித்தார். பிறகு குடும்பத் தொழிலில் ஈடுபட்டார். இவரது தம்பிதான் ப.சிதம்பரம். முன்னாள் மத்திய நிதி அமைச்சர். இலக்கியச் சிந்தனை என்பது இவர்கள் இருவரும் சேர்ந்து தொடங்கிய அமைப்புதான். சிதம்பரம் பத்திரிகை தொடங்கலாம் என்று சொன்னதாகவும் பின்னர் இலக்கிய அமைப்பாகத் தொடங்கலாம் என்று இருவரும் முடிவெடுத்ததாகவும் லட்சுமணன் தெரிவிக்கிறார். ஒவ்வொரு மாதமும் பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகளை ஆராய்ந்து சிறந்த
சிறுகதை ஒன்றைத் தெரிவு செய்து அறிவிப்பார்கள். ஆண்டுக்குப் பன்னிரெண்டு தேறியதும், அதில் சிறந்த ஒன்றைத்தெரிவு செய்து ஆண்டின் சிறந்த சிறுகதை அது என்று அறிவிப்பார்கள். இந்த பன்னிரெண்டும் சேர்த்து ஒரே தொகுப்பாகக் கொண்டு வருவார்கள். முதல் நான்கு ஆண்டுகள் இவர்களே இந்த தொகுப்பைக் கொணர்ந்துள்ளனர். ஆனால் விற்பனை ஆகவில்லை. லட்சுமணன் பல தொழிலதிபர்களைத் தொடர்புகொண்டு ஆளுக்கு நூறு பிரதிகள் வாங்கி தங்கள் பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டு அவற்றை விற்றிருக்கிறார். நான்காம் ஆண்டுக்குப் பிறகு வானதி பதிப்பகம் அந்த தொகுப்புகளை ஆண்டுதோறும் நூலாக வெளியிடும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. 1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலக்கியச் சிந்தனை இப்போது ஐம்பது ஆண்டுகளைத் தொட இருக்கிறது. தமிழில் சிறுகதை இலக்கியத்தை இப்படி ஐம்பது ஆண்டுகளாகத் தேடித் தேடி பாராட்டி மகிழும் அமைப்பு வேறொன்றும் இல்லை. தொடர்ச்சியான செயல்பாட்டால் முக்கியப் பங்களிப்பை இவர்கள் செய்துள்ளனர்.
மாணவப்பருவத்திலேயே நண்பர்களுடன் இணைந்து கையெழுத்துப் பத்திரிகை நடத்தியவர் லட்சுமணன். அதில் தொடங்கிய இலக்கிய ஆர்வம்தான் இந்த நீண்ட நெடிய பயணத்துக்கு வழிகோலி இருக்கிறது. இந்த அமைப்பில் செயல்பட்டது ஏராளமான நண்பர்களை பெற்றுத்தந்திருக்கிறது என்பதே மகிழ்ச்சி என்கிறார் லட்சுமணன். உண்மைதான். இலக்கிய சிந்தனையிடம் பரிசு பெறாத தமிழ் எழுத்தாளர்களே இல்லை எனலாம். பிறகு நாவல் எழுத்தாளர்களுக்கு பரிசுகள் கொடுத்து கௌரவப்படுத்தினார்கள். படைப்பாளிகளின் வாழ்க்கையை நூலாக வெளியிடும் பணியையும் செய்திருக்கிறார்கள்.
ஜெயகாந்தன் இலக்கியச் சிந்தனை அமைப்புக்கு நெருங்கியவர். ஆனால் அவருடன் மோதலும் உண்டு. ‘‘ மதுரையில் இருந்து பேராசிரியர் எஸ்.ஆர்.கே அவர்களை ஆண்டுவிழாவில் பேச அழைத்திருந்தோம். அவர் தங்கி இருந்த விடுதிக்கு அவரைக் காண ஜெயகாந்தனும் வந்திருந்தார். எஸ்.ஆர்.கே முன்னால் அவர் நாற்காலியில் அமரமாட்டார். தரையில்தான் அமருவார். நான் போய் எஸ்.ஆர்.கேவிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு
பேசிக்கொண்டிருந்தேன். அந்த ஆண்டு ஜெயகாந்தனின் சிறுகதை சிறந்ததாகத் தேர்வாக வில்லை. சக்கரம் நிற்பதில்லை என்றொரு கதை ஜெயகாந்தன் எழுதி இருந்தார். கதைத்தேர்வு அம்முறை சுஜாதா. வருத்தத்தில் இருந்த ஜெயகாந்தன்,‘‘எழுதப்படிக்கத் தெரியாதவன் எல்லாம் சிறுகதைத்தேர்வு செய்தால் இப்படித்தான் ஆகும்'' என்றார் காட்டமாக. எஸ்.ஆர்.கே. சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் ஜெயகாந்தன் மிகக்கடுமையான சொற்களைப் பயன்படுத்தினார். நானோ,‘‘நீங்கள் படைப்பாளி, நான் வாசகன். நீங்கள் பேசுவதுபோல் நான் பேச இயலாது'' என்றேன். பிறகு எஸ்.ஆர்.கே ஜெயகாந்தனை கடிந்து அமைதிப்படுத்தினார். நான் சிரித்துக்கொண்டே இருந்தேன். ‘‘போங்கய்யா நீங்களும் உங்க இயக்கமும்'' என்றார் ஜெயகாந்தன். மறுநாள் விழா. அவர் வரமாட்டார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். முதல்வரிசையில் வந்து அமர்ந்து ஆச்சரியப்படுத்தினார். அவரிடம், ‘‘ நேற்றைய நிகழ்ச்சிக்குப் பிறகும் நீங்கள் இங்கே வந்ததில் மிகவும் மகிழ்ச்சி'' என்றேன். அவரோ,“இரண்டு பயில்வான்கள் மோதிக்கொண்டால் அப்படித்தான் இருக்கும். அதில் எனக்கொன்றும் பகையில்லை'' என்று பதிலளித்தார். அதன் பின்னர் மிகவும் நெருக்கமாகி விட்டார்.
இலக்கியச் சிந்தனையின் முதலாம் ஆண்டு விழாவில் ஜெயகாந்தன் நாம் ஏன் கதை சொல்கிறோம் என்ற தலைப்பில் பேசியதை நான் குறிப்பிட வேண்டும். அதில் நீதிபதி மகாராஜன், சீனிவாசராகவன் ஆகியோர் உரையாற்றினார்கள். ஜெயகாந்தன் உரை மிக அற்புதமாக இருந்தது. ‘உங்களைச் சீண்டிப்பார்ப்பதுதான் என் எழுத்து. உங்களை குனிய வைப்பதில்லை. நானும் குனியமாட்டேன். அப்போதுதான் உங்களுக்கும் எழுதவேண்டும் என ஆர்வம் வரும்' என்று அவர் பேசினார்.'' என நினைவு கூர்ந்த லட்சுமணன், ‘‘புதுமைப்பித்தனுக்குப் பிறகு தமிழில் ஒரு இடைவெளி. பிறகு அவரது நீட்சியாக வந்தவர் ஜெயகாந்தன் தான். இடையில் விந்தன் வேண்டுமானால் ஒரு பாலமாக இருந்தார் எனச் சொல்லலாம்'' என்கிறார்.
இலக்கியச் சிந்தனை விழா ஒன்றுக்கு மலையாள எழுத்தாளர் தகழியை அழைத்து வந்திருக்கிறார். அது ஒரு எதேச்சையாக நடந்த சந்திப்பில் நடந்தது. கேரளாவில் குடும்பத்துடன் ஆலம்புழா அருகே காரில் போய்க்கொண்டிருந்தவர் கண்ணில் தகழி என்ற ஊர்ப்பெயர்ப்பலகை கண்ணில் பட்டதும் நேராக காரை அங்கே விட்டு அவரது வீட்டைக் கண்டுபிடித்து சென்றுவிட்டார்.
‘என் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்து என்னைக் கௌரவப்படுத்தி விட்டீர்கள் என்று தகழி சொன்னார். மிகப்பெரிய மனது அவருக்கு. எளிமையான வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தார். அவரை சென்னையில் வந்து விழாவில் பங்கேற்குமாறு கேட்டேன். அவர் ஒப்புக்கொண்டார். வந்தவர் அட்டகாசமாகப் பேசினார். மேடையில் பேசி முடித்ததும் பீடி வேண்டும் என்றார். வாங்கிக் கொண்டுபோய்க் கொடுத்தேன். யாரைப்பற்றியும் கவலைப்படாமல் புகைத்துக்கொண்டிருந்தார்.' என்கிற லட்சுமணனுக்கு மகாஸ்வேதா தேவியை ஒருமுறை இலக்கியச் சிந்தனை விழாவுக்கு அழைத்து வந்ததில் மிகுந்த பெருமை. ஒரு தெலுங்கு எழுத்தாளரை அழைத்துவந்து சிக்கலிலும் மாட்டி இருக்கிறார். அவர் தன் தோழியுடன் வர விரும்புவதாகச் சொல்ல, கொள்கைப்படி ஒரு டிக்கெட் தான் தருவோம் என்று சொல்லிவிட்டார். வந்த எழுத்தாளர் நிகழ்வில் பேசும்போது தெலுங்குதான் தமிழை விட மூத்தமொழி என்று பேசிக்கொண்டே போக, ‘சம்பந்தமில்லாமல் பேசுகிறீர்கள். உட்காருங்கள்' என்று சீட்டு அனுப்பி அமரவைக்க வேண்டி வந்த சம்பவமும் உண்டு.
‘‘கலைஞரை ஒருமுறை ஆண்டுவிழாவுக்கு அழைப்பதற்காக சந்திக்கப் போனோம். மாடியில் தனியாக இருந்தார். விவரத்தைக் கேட்டதும் வருவதாகச் சொன்னார். பெரியாரும் தமிழும் என்ற தலைப்பில் பேசச் சொல்லி இருந்தோம். தலைப்பைக் கேட்டு சிரிக்கவும் செய்தார். அப்புறம் அழைப்பிதழ் அடிப்பதற்கு முன்பாக ஒருமுறை அவரிடம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்று மீண்டும் சென்றோம். உதவியாளர் சண்முகநாதனிடம் சொன்னபோது அப்படியொரு ஒப்புதலே அவர் கொடுத்ததாக தனக்குத் தெரியாதே என்று
நிகழ்ச்சிக்கான குறிப்பேட்டைக் காட்டினார். எங்கள் நிகழ்ச்சியே எழுதப்படவில்லை. அன்றைக்கு கலைஞர் தனியாக இருந்தார். சண்முகநாதன் இல்லை. அவரிடம் சொல்ல அவர் மறந்திருக்கலாம். எனவே நேரில் கேட்டுவிடுவோம் எனக் காத்திருந்தோம். மாடிப்படிகளில் இறங்கிவந்தார். பின்னால் போனேன். என்னைப் பார்த்ததும் நீங்க? என்றார். இலக்கியச் சிந்தனை விழாவுக்கு ஒப்புதல் வாங்கியிருந்தோம் என்றேன்.. அவர் அதிர்ந்தார். என் கைகளைப் பிடித்துக்கொண்டார். ‘தவறு நடந்துவிட்டது, மன்னிக்கவும்' என்றார். ‘அடடா இந்தவார்த்தை நீங்கள் சொல்லக்கூடாது.. நாங்கள் வேறு ஏற்பாடு செய்துகொள்கிறோம்.. வேறு ஒருமுறை நீங்கள் வாருங்கள்'' என்று சொல்லிவிட்டு வந்தேன். மறுமுறை அவரை அழைக்க வாய்ப்பு ஏற்படவில்லை..''நினைவுகூர்கிறார்.
''கடந்த பத்து ஆண்டுகளாக எங்கள் பதிப்பாளர் சொல்ல ஆரம்பித்துவிட்டார். இந்த மாதிரி தரத்தில்தான் சிறுகதைகள் இருக்குமானால் அது சரியல்ல. இம்மாதிரி கதைகளை இலக்கிய சிந்தனை தேர்வு செய்தது என்றால் உங்களுக்கு அது நல்ல பெயர் தராது. ஒரு விற்பனையாளனாக எனக்கு பெரிய நஷ்டம் இருக்காது இருப்பினும் இதை நீங்கள் கவனிக்கவேண்டும் என்று. நானும் சமீபத்தில் மேடையிலேயே குறிப்பிட்டேன். இது என்ன ஆயுள்தண்டனை போல ஆகிவிட்டதே.. மாதந்தோறும் கதைகளைப் படிக்கவேண்டி இருக்கிறது. ஆனால் ஒன்றுகூடத் தேறுவதில்லை. கதைகளைப் படிக்காமல் கருத்து சொல்லக்கூடாதே என்பதால் படிக்காமல் விடவும் முடியவில்லை. கதையே சரி இல்லை... பத்திரிகைகளும் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். பத்து நொடி, பத்துவரி கதைகள் கேட்கிறார்கள். முன்பு விகடன் பாலசுப்ரமணியத்திடம் ஒருமுறை நேரிலேயே கேட்டுவிட்டேன். ஒரு பக்கம் ஜெயகாந்தன் கதைகளும் போடுகிறீர்கள் இன்னொரு பக்கம் இப்படித் தரம் குறைந்த கதைகளும் போடுகிறீர்களே.. உங்களுக்கு இதயமே இல்லையா என்று.
அவர் சொன்னார், அலுவலகத்துக்குக் கிளம்பும்போது இதயத்தைக் கழற்றி வீட்டு அலமாரியில் வைத்துவிட்டுத்தான் வருகிறேன் என்று. எஸ்.ஏபியிடம் கூட்டம் ஒன்றில் கேள்வி கேட்டேன். அவர் நேரடியாக ; ‘வேசியிடம் கற்பை எதிர்பார்க்காதீர்கள்!' என்று சொல்லிவிட்டார். இப்போது மாதந்தோறும் சிறுகதைகளைத் தேர்வு செய்வதை நிறுத்திவிட்டோம். ஒவ்வொரு மாதமும் வருகிறவை அனைத்தும் குப்பையாக இருந்தால் ஏதோ ஒன்றைத் தேர்வு செய்தால் ஐந்து மாதத்தில் ஐந்து குப்பைகள் தேர்வாகின்றன. அதனால் வரவர படிப்பது. நன்றாக இருந்தால் எடுத்து வைத்துக்கொள்வது. அப்புறம் 12 கதைகளைத்தேர்வு செய்வது, அதை வேறொருவரிடம் கொடுத்து சிறந்த ஒன்றைத் தேர்வு செய்வது என்று பின்பற்றுகிறோம். சிறுகதை இலக்கியம் அழிந்தால் மொழி அழிந்துவிடும். ஆணிவேர் சிறுகதைதான். இது கவலை அளிக்கிறது.'' என்கிறார் லட்சுமணன்.‘'அடுத்த ஆண்டில் இருந்து இதெல்லாம் நிறுத்திவிடலாம் என்ற முடிவுக்கே வர யோசித்துக்கொண்டிருக்கிறேன். சிறுகதைக்குப் பரிசு கொடுப்பதை நிறுத்திவிட்டு இலக்கியச் சொற்பொழிவு ஒன்றை ஏற்பாடு செய்வது, தகுதியான தமிழறிஞர் அல்லது படைப்பிலக்கியக் கலைஞருக்கு பரிசு வழங்குவது என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்'' என்கிற இவர் இலக்கியச் சிந்தனை சார்பாக வழங்கப்படும் ஆதி.லட்சுமணன் நினைவுப் பரிசு குறித்துச் சொல்கிறார்.
‘‘எங்கள் இலக்கியச் செயல்பாட்டைக் கண்டு மும்பையில் இருந்த ஆதி.லட்சுமணன் என்பவர் என்னைச் சந்திக்க விருப்பம் கொண்டிருந்தார். மும்பைக்குப் போனபோது அவரை சந்தித்தேன். நண்பர்கள் ஆனோம். அவர் இலக்கியவாதிகளுடன் நல்லுறவு கொண்டிருந்தார். குற்றாலத்தில் எழுத்தாளர்கள் தங்கி படைப்புகளை உருவாக்க வசதியாக மாளிகை ஒன்றை எழுப்பலாமா என்று எண்ணம் கொண்டிருந்தார். அவர் மரணமடைந்த பின்னர் வெகுநாள் கழித்து, அவர் ஒரு லட்சரூபாய் இலக்கியச் சிந்தனைக்காக உயில் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பணத்தின் மூலம் பதினைந்தாயிரம் ரூபாய் வருமானம் வரும்படி ஏற்பாடு செய்து எழுத்தாளர்களுக்கு அதை மும்பை ஆதி லட்சுமணன் நினைவுப் பரிசு வழங்கி வருகிறோம்''
நீண்ட உரையாடலுக்குப் பிறகு விடைபெறுகிறோம். மின் தூக்கிவரை மெல்ல நடந்துவந்து விடைதருகிறார் லட்சுமணன்.
ஜனவரி, 2020.