பேட்டிகள்

எனது ஆய்வுக் கட்டுரைகளைப் படிப்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்!

மா.கண்ணன்

மொழியியல் துறையில் புகழ்வாய்ந்த அறிஞரான பேராசிரியர் ஜேம்ஸ் கிரிகோரி, சீனாவில் பீஜிங் வானொலி நிலையத்தில் தற்செயலாக ஒரு தமிழ்மொழி அறிவிப்பாளரை சந்தித்திருக்கிறார். “எனக்கு வேர்ச்சொல் ஆய்வு தொடர்பாக சில ஐயங்கள் உள்ளன யாரிடம் கேட்டால் தெரியும்?” என்று  கேட்டுள்ளார். உடனே அந்த தமிழ்மொழி அறிவிப்பாளர் பரிந்துரை செய்தபெயர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய அருளி. கிரிகோரி தமிழ்நாடு வந்து தஞ்சாவூரில் அருளியைச் சந்தித்தார்.  அருளி தமிழ் பல்கலைக்கழகத்தில் கூட்டத்தைக் கூட்டி எல்லோர் முன்னிலையிலும்  அவருடன் உரையாடினார். 

சற்று நேரத்திலேயே கிரிகோரி,‘கண்டுகொண்டேன்.... கண்டுகொண்டேன்.... என் தாய்மொழியை கண்டுக்கொண்டேன்’ என்று கத்தியவாறு அருளியை அணைத்துக் கொண்டார்.  அருளி “மேலும் கேளுங்கள்” என்று கூறினார். உடனே கிரிகோரி “உங்களைச்  சோதிக்க நான் வரவில்லை.  நான் தனிப்பட்டமுறையில் உங்களிடம் கேட்டு தெரிந்துகொள்கிறேன்” என்று பணிவோடு கூறினார். இந்த சம்பவத்தைச் சொல்லி அருளி அவர்களை அறிமுகம் செய்வித்தார் சமீபத்தில் திருநெல்வேலியில் நடந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்  சங்கரநாராயணன்.  அம்மாநாட்டில் சிறப்புரை ஆற்ற வேர்ச்சொல் ஆய்வறிஞர் அருளி வந்திருந்தார். அவரைச் சந்திக்கச் சென்றோம். அவரது அறைக்குச் சென்றபோது  “கண்ணாடி வாங்கப் போயிருக்காங்க. சற்று நேரத்தில் வந்துவிடுவார்கள்” என்றார்  அவரது துணைவியார் தேன்மொழி. இவர்  பாவலரேறு பெருச்சித்திரனாரின் மகள்.

சிறிது நேரம் காத்திருந்தோம். கறுப்புக்கண்ணாடியுடன் வந்து சேர்ந்தார் அருளி.  “கண்ணாடி அணிந்தால் தான் என்னால் நடக்கமுடியும். எனது பார்வை 20 சதவீதம்தான் இருக்கிறது. அதற்குள் தமிழுக்கு செய்யவேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது.”என்று கனிவோடு பேச்சைத் தொடக்கினார்.

“தமிழில் மிக அமைதியாக மென்மையாக சில செய்திகள் சொல்ல விரும்புகிறேன். மென்மை என்பது  உணர்வு சார்ந்தது. இந்த உணர்வு உடல் சார்ந்தது. அது எப்படியென்றால் மலரினும் மெல்லியது என திருவள்ளுவர் சொல்லுவார்.  மலரினும் மெல்லியது காமம்! இதில் மெல்லியது என்றசொல் தான் ட்டிடூஞீ என்ற ஆங்கில சொல்லுக்கு மூலம். ஆனால் ட்டிடூஞீ என்ற சொல் எங்கே இருந்து வந்தது என்று தெரியாது என்றே ஆக்ஸ்போர்டுஅகராதியில் போட்டு இருக்கிறார்கள். எனவே நான் மெல்லியதாக சிலவற்றை கூற விரும்புகிறேன். நீங்கள் கேளுங்கள்” என்றார் மென்மையான புன்னகையுடன். அவர் தனித்தமிழில் நம்மிடம் உரையாடியதை சற்றே பத்திரிகைத் தமிழில் தருகிறோம். அருளியார் பொருத்தருள்க!

“என் இயற்பெயர் பக்தவச்சலன். என் தாய் தந்தை கல்வியறிவு நிறையாத அடிப்படை உழைப்பாளிகள். தவறாத வழிகாட்டுதலினால்  இப்படி எனக்கான இயற்பெயரை தவறாக சூட்டிவிட்டனர். தூய மனம் படைத்த அவர்களுக்கு உரிய வரலாறு கூறுவதற்கு யாரும் அமையாமையே இதற்குக் காரணம்.

என்பெயரை பாவாணர் ‘அடியார்க்கருளி’ என்று அமைத்துக்கொள்ளச் சொல்லி எழுதித் தந்தார். 1971 முதல் 73 வரை என் செயல்பாடுகள் இந்த பெயரில் தொடர்ந்தன! 1973 ஆம் ஆண்டில் தமிழ்ப்பிறை என்ற திங்களிதழைத் தொடங்கினேன். அவ்விதழிலும் அடியார்க்கருளி என்ற பெயரிலிலேயே எழுதினேன். பிறகு இந்த நீளப் பெயரை பாவலேறு பெருஞ்சித்திரனார் சுருக்கி ‘அருளி’ என்றழைத்தார். வணிகவியல் படித்த நான் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டக்கல்வி பயின்று தேறினேன். அதன் பின்னர் அருளி என்ற பெயரை சட்டப்படியாக வழக்குக்குக் கொண்டுவந்து தொடர்கிறேன். 1971-ல்  இருந்து மொழியியலின் அடிப்படை உட்பிரிவான  வேர்ச்

சொல்லியலில் என் அறிவும் மனமும் ஈடுபட்டன. இதற்கு அடிப்படைக் காரணம் பாவாணரின்  மொழிசிந்தனைப் பற்றிய வாசிப்பு! இதற்கு வித்திட்டது பெருஞ்சித்தரனாரின் தென்மொழி இதழும் அவரின்  தொடர்பும்.

 ஒரு பத்தாண்டு வேர்ச்சொல் ஆய்வின் தொடர்ச்சிக்குப் பின் சென்னை எழும்பூரில் இருந்த தமிழ்-சமஸ்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் என்னுடையவேரியல் ஆராய்ச்சி உரைகள் ஏழு நிகழ்வுகளாக நடைபெற்றன.

இவ்வாராய்ச்சி  உரைகள் ‘தமிழ்-சமஸ்கிருதம் மற்றும் பிற இந்தியமொழிகளின் ஆராய்ச்சிநிறுவனத்தில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள்’ என்னும் தலைப்பில் ஐந்துதொகுதிகளாக 1985-ல் வெளிவந்தன.

 வழக்கறிஞர் படிப்பை முடித்த பின்பு தொழிலில் ஈடுபட முனைந்தேன். நான்கைந்துஆண்டுகள் முதுவழக்கறிஞர் இல்லத்திற்கும் வழக்குமன்றத்திற்குமாக அலைந்தேன். ஆனால் எனது மனம் அனைத்தும் வேர்ச்சொல் ஆராய்ச்சியிலே இயங்கிகொண்டிருந்ததால் வழக்குப்பணியில் நாட்டமில்லாமல் போய்விட்டது.

இடையில் மொழியியலறிஞர் முனைவர் வ.ஐ.சுப்பிரமணியம் அவர்களின் புறநானூற்றுச் சொல்லடைவு ஆய்வு நூலினைப் பார்க்க நேர்ந்தது. அவரே  ஆய்வுத் தலைவராக இருந்து பத்துக்கும் மேற்பட்ட சொல்லடைவு ஆய்வுகளைத் தமிழுலகம் பெறுவதற்கு துணையிருந்தார். அப்பொழுது அவர் கேரள பல்கலைக் கழக தமிழ்த்துறையின் தலைவராக இயங்கினார். அதன் பின்னர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் ஆக அமர்ந்தார். இரண்டாம் முறையும் அவரே துணைவேந்தர்! தமிழியல் ஆய்வு அடிப்படை நெறிகள் குறித்து அவருடன்  மடல் தொடர்புகள் ஏற்பட்டன. கருத்து முரண்களில் மோதியும்கொண்டோம்.

தமிழறிஞர் மு. அருணாசலம் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இயங்கிவந்த‘பெருஞ்சொல்லகராதி’நூலுக்கான கருத்தரங்கில் பேசுவதற்காக துணைவேந்தர் வ.ஐ.சு. கடிதம் அனுப்பியிருந்தார். அதன் அடிப்படையில் நான் கலந்துகொண்டு கருத்துரைத்தேன். அச்சமயம் தானே அமர்ந்து உரையைக் கவனமாகக் கேட்டு உள்வாங்கிக்கொண்டிருந்தார் துணைவேந்தர்.  பின்னர் எனது ஆய்வுநூல்கள் சிலவற்றை படித்துவிட்டு மடல்கள் அனுப்பினார்.  என்னை  நேரில் சந்திக்க விரும்பினார்.  சென்று சந்தித்தேன். நீண்டநேரம் பேசினோம். அவர் ‘உங்களுக்காக இப்பல்கலைக்கழகத்தில் தனித்துறையினை நிறுவவிரும்புகிறேன். நீங்கள் பணிசெய்ய இயலுமா?’என்று அன்புடன் வேண்டுகோள் விடுத்தார். பிறகு 6.7.1985-ல் சேருவதற்கான அமர்த்தல் ஆணை ஆனுப்பியிருந்தார். அப்போதும் சேருவதில் ஒரு தயக்கம் உள்ளத்தில் ஊசலாடிக்கொண்டிருந்தது. ஆணை அனுப்பியதற்குப் பிறகும் அதற்கு பதில் அனுப்பாமல் இருந்தேன்.

ஆனால் அவரோ விடவில்லை. 11.7.1985-ல் மீண்டும்  தொலைவரி அனுப்பினார். (Order Posted- Join Early : Vice Chancellor Subramanian). நான் அப்போதும் பணியில்

சேர்வது பற்றி மறுமொழி கூறாமல் இருந்தேன். இது தொடர்பாக மீண்டும் மடல் இட்டார். ஒரு  மொழி அறிஞர்- துணைவேந்தர்- மிகச்சிறந்த பண்பாளர் இவ்வளவுக்கு இறங்கிவந்து நம்மை அழைக்கிறாரே என்று மிகப்பணிவோடு  தமிழ் பல்கலைக்கழகத்தினுள் நுழைந்தேன்.

‘தூயதமிழ்-சொல்லாக்க அகரமுதலிகள் துறை’ எனும் பிரிவு ஏற்பாடாயிருந்தது. உதவியாளர் ஒருவரை நானே அமர்த்திக்கொண்டேன். ஆங்கிலத்தில் வந்துள்ள கலைச்சொல் அகரமுதலிகள் மிகப்பலவற்றின் நெறிமுறைகளை எல்லாம் ஒரு திங்கள் முழுமையும் ஆய்ந்து கவனம் செலுத்தினேன். பின்னர் நான் கலைச்சொல் தொகுப்புமுயற்சியில் ஈடுபட்டேன். கிட்டத்தட்ட 3,00,000 சொற்களில் இவ்வாறு கவனம் செலுத்தினேன். இளநிலை ஆராய்ச்சிக் கல்வியாளர்கள் மூவர் துறையில் பணிக்கு அமர்ந்தனர். தமிழகத்தில் இனநல ஓர்மையோடு இயங்கிய தமிழ் வளர்ச்சியாக்க நாட்டமுள்ளவர்கள் பலரையும் பயன்படுத்திக்கொண்டேன். அறிவியல்-கலையில் ஆசிரியர்கள் பலரிடமும் கலந்துரையாடினேன்.

135 அறிவியல் கலையியல் துறைக்களுக்குரிய இன்றியமையாத 1,20,000 அருங்கலைச்சொற்களின் தொகுப்பினைஅறிஞர்கள் பலரின் துணையுடன் 18 ஆண்டுக்கால உழைப்பில் உருவாக்கினேன். தமிழ்ப் பல்கலைக்கழகம் 2002-ல் இந்நூலை வெளியிட்டது. தற்போது நான்காம் பதிப்பாக வெளிவந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான நூல்களில் இருந்துசொல்-பொருள்- இலக்கணக்குறிப்பு- வேர் விளக்கம் என்ற நிலையில் 2,50,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட குறிப்பு விளக்கங்கள் என்னால் எழுதி அட்டையிடப்பட்டு துறையில் தொகுத்து வைக்கப்பெற்றன. அவற்றில் பெரும்பகுதி என் ஓய்வுகாலத்திற்கு பின் பராமரிப்பு இல்லாமல் கரையானுக்கு இரையானதாக சிலர் மனம் வெதும்பிக் கூறினார்கள். எனக்கு உயிரெல்லாம் கனலெரிந்து, உணர்வெல்லாம் நோக்காடாகிப் போயினது! ” என்று இடைவெளி விட்டார் அருளி. அவரிடம்,” மொழியியல் அறிஞர் பேராசிரியர் கிரிகோரி ஜேம்ஸ் உங்களை வந்து சந்தித்த விவரம்  சொல்லுங்கள்” என்றோம்.

”முனைவர் கிரிகோரி ஜேம்ஸ் ஹாங்காங் அறிவியல்-தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சிறப்புத்துறையான மொழியியல் நடுவத்தின் இயக்குநராக இருந்தார்.  அவர் அடிப்படையில் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். மொழியாய்வில் குறிப்பாக தமிழ் அகராதியியல் வரலாற்றில் மிகுந்த தெளிவுடையவர்.  தமிழ் அகராதியியல்(1991)என்னும் இவரின் நூல், உலக அளவில் தமிழுக்குரிய அடிப்படை வேலைகளின் நடப்புகளைப்பற்றிய சிறந்த நூலாகும். மும்முறை என் துறைக்கே நேரில் வந்தமர்ந்து என்னுடன் உரையாடிய வெளிநாட்டு அறிஞர்களில் இவர் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர். என் நூல் செய்திகளை தன்னூலில் எடுத்துக்காட்டி உள்ளார். கிரேக்கம், லத்தீனம் போன்ற மொழிகளின் சொற்களில் மிகப்பல தமிழ் தந்த கொடைச்சொற்களே என்னும் என்னுடைய வேரியல் சார் விளக்கங்களை கூர்ந்து கேட்டு அவற்றோடு ஒத்திசைந்து இணங்கியவர். 1995-ல் எட்டாம் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வந்தவர் பிற நிகழ்வுகளுக்குப் போகாமல் என் அறைக்குள் வந்து தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தது எனக்கு பெருவியப்பாக இருந்தது. அப்போது அவரின் தமிழ் அகராதியியல் நூலை  எனக்கு கொடுக்கும்போது, To P. Aruli with respect and thanks for several insights into the methodology of transcreation என்று எழுதிக் கையெழுத்திட்டார்.” என்கிற அருளி தமிழ் உலகப்பெருமொழிகள் மிகப்பலவற்றுக்கும் தாய் என்பதை தெரிவிக்கும் விதமாக ஆங்கிலமொழியில் Original Origins (An Etymological Survey) என்னும் நூலை உருவாக்கி வருகிறார்.  36 ஆண்டுகள் உழைப்பு இது! சுமார் 60,000 குறிப்புகள் இதுவரை பதிவுசெய்யப்பட்டுள்ள இந்நூலின் பகுதிகள் விரைவில் வெளியாக உள்ளன.

உங்கள் தமிழ்ப்பணி குறித்து இக்காலத்தமிழ் எழுத்தாளர்களின் பார்வை என்னவாக இருக்கிறது? என்றோம்.

 “என் பணி உள்ளீடானது. அடிப்படையில் ஆய்வுநிலைக்குரியது. இவற்றை நமது எழுத்தாளர்கள் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள். அவர்களுக்கு விருப்பமும் தேவையும் இல்லை. மேலும் பல எழுத்தாளர்கள் எழுத்தர்களாக தான் இருக்கிறார்கள். படிக்கும் ஆர்வமும் தேவையும் பலரிடமும் இல்லை.  எனது ஆய்வுக் கட்டுரைகளை படிப்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.  என் ஆய்வின் உண்மை விளங்க நீண்டநெடுங்காலம் ஆகும்போல் தெரிகின்றது. அப்போது இப்போதிருக்கும் நான் இங்கு இல்லாதிருப்பேன்!” என்றார்.

அருளி பணி ஓய்வு பெற்றாலும் அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. அதற்காக வழக்கு தொடர்ந்து உள்ளார் இவர். இது பற்றிக்கேட்டபோது இன்னொருமுறை விரிவாகப் பேசலாம் என்று பேசமறுத்துவிட்டார்.

பிப்ரவரி, 2017.