தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுவடியியல் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் முனைவர் மோ.கோ. கோவைமணி அவர்களுக்குத் தமிழ் விக்கி வழங்கும் தூரன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு வாழ்த்துகளைச் சொல்லி தொலைபேசி வாயிலாக உரையாடினோம். கோவைமணி தமிழ் ஓலைச்சுவடிகளைத் திரட்டல், சேமித்தல், பாதுகாத்தல் போன்ற பணிகளைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் மேற்கொண்டவர். சுமார் 5000 தமிழ் ஓலைச்சுவடிக் கட்டுகள், 2000 பிறமொழிச் சுவடிகள் ஓலைச்சுவடிக்கட்டுகள் மற்றும் 1500 ஓலைச்சுருணைகள் அங்கே உள்ளன. அவற்றில் சுமார் 4150 தமிழ் சுவடிக்கட்டுகளை டிஜிட்டல் வடிவில் சேமித்து முடித்திருக்கிறார். பணி ஓய்வு பெற்றுள்ள அவருக்கு இன்னும் ஓராண்டு வழங்கப்பட்டிருந்தால் மீதமுள்ள அனைத்து சுவடிகளையும் மின்வடிவில் மாற்றி வழங்கி இருப்பார். அவரது இந்த பணிக்காகத்தான் தூரன் விருது வழங்கப்படுகிறது.
தமிழ் படித்த நீங்கள் இந்தச் சுவடியியல் துறைக்கு வந்தது குறித்தும் இத்துறை பற்றியும் கூறுங்கள்?
தமிழில் முதுகலைப் படித்திருந்த எனக்கு இந்தச் சுவடிகள் மீது ஏற்பட்ட ஈர்ப்பே இத்துறைக்கு நான் வரக்காரணம். காகிதம் அறிமுகம் ஆவதற்கு முன்பாக ஓலைச்சுவடிகளில்தான் எழுதி வந்தார்கள். நம் பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் சாதகக்குறிப்புகள் வரை அனைத்தும் ஒலைச்சுவடிகளில்தான் எழுதப்பட்டன. தென்னிந்தியாவில் கீறல் எழுத்து முறையிலும் வட இந்தியாவில் மை எழுத்து முறையிலும் சுவடிகளில் எழுதுவார்கள். நாட்டுப்பனையில் ஆண் பனையின் ஓலைகளே சுவடிகள் எழுதப் பயன்படுத்தப்படும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது, சுவடிகளில் இருக்கும் அரிய படைப்புகளைப் பாதுகாக்க, முதல் புலமாக சுவடியியல் துறைதான் தொடங்கப்பட்டது. ஓலைச்சுவடிகள் எங்கள் துறையில் மட்டுமல்லாமல் அரசினர் கீழ்த்திசை நூலகம், திருவனந்தபுரம் நூலகம், கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம், தஞ்சை சரஸ்வதிமகால் நூலகம் போன்ற பல்வேறு இடங்களிலும் சேகரித்துப் பாதுக்காக்கப்படுகின்றன. தஞ்சைப் பல்கலைக்கழகத் துறையில் நாங்கள் ஓலைச்சுவடிகளைச் சேகரித்தல், பாதுகாத்தல், பதிப்பித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுவந்தோம். ஓலைச்சுவடிகள் பத்திரமாக வைக்கப்பட்டால் சுமார் 500 ஆண்டுகள் கூட வைத்திருக்கலாம். பொதுவாக சுமார் 200-300 ஆண்டுகள் பழைமையான சுவடிகளே அதிகம் கிடைக்கின்றன. பழங்காலத்தில் சுவடிகளை படியெடுத்துக் கொடுப்பதையே தொழிலாகச் செய்தவர்கள் இருந்தனர். இப்போதைய புத்தகங்களைப் போல் சுவடிகளை விற்பனை செய்யும் இடங்கள் இருந்தன. திருக்குறள் போன்ற இலக்கியங்கள் இப்படித்தான் தலைமுறை தலைமுறையாக படியெடுக்கப்பட்டு நமக்குக் கிடைக்கின்றன. தற்போது வந்திருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பப்படி, இவற்றை மின்வடிவில் சேமித்தால், இந்த சுவடிகளில் இருப்பவற்றை நிரந்தரமாகப் பாதுகாக்கலாம்.
இந்த மின்வடிவாக்கப் பணி எப்போது தொடங்கப்பட்டது?
2010-இல் தமிநாடு அரசு வழங்கிய நிதி கொண்டு தொடங்கினோம். ஆனால் அப்போது நம்மிடம் இருந்த கருவிகளைக் கொண்டு சாதாரண முறையில்தான் மின்வடிவாக்கம் செய்ய முடிந்தது. 2018-இல் British library endangered archives programme மூலமாக நல்கை பெற்று சர்வதேச தர நிலைகளின் அடிப்படையில் இந்தச் சுவடிகளை மின்படிவமாக்கினோம். தற்போது இன்னும் சுமார் 700-800 சுவடிக்கட்டுகள் அளவுக்கு இப்பணியில் மீதமிருக்கும் நிலையில் நான் ஓய்வுபெற்றுவிட்டேன். இவற்றில் சுமார் 12000 நூல்கள் வரலாம் என்பது என்னுடைய கணிப்பு. இச்சுவடிகளில் சுமார் 60% சித்த மருத்துவச் சுவடிகள், மீதி சங்க இலக்கியம், நீதி இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம் போன்ற பல பொருண்மைகளில் இருக்கின்றன. இதில் நாட்டுப்புறப் பாடல்களும் அடக்கம்.
பல இடங்களுக்குச் சுவடிகளைத் திரட்டச் சென்றிருப்பீர்கள். நீங்கள் திரட்டியதில் அரிய சுவடி எது?
பல உண்டு. சுவடிகளைத் தேடிச் செல்லும்போது இன்ன கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்த்துச் செல்வது இல்லை. கிடைப்பதைக் கொண்டுவந்து பாதுகாப்பதுதான். ஒருமுறை சொற்கோவை என்ற இலக்கியச் சுவடி கிடைத்தது. இன்னும் நூலாக்கம் பெறவில்லை. அச்சுவடி பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெறும் சொற்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் கொண்டது. மிக அரிய நூல். பல கதைப்பாடல்கள் இருக்கின்றன. அவையும் இன்னும் நூலாக்கம் பெறவில்லை. கலியுகப் பெருங்காப்பியம் என்றொரு கதைப்பாடல் உள்ளது. அது வீரபாண்டியக் கட்டபொம்மன் தூக்கிலிடப்படவில்லை. அவர் தப்பி வந்து மருது சகோதரர்களுடன் இணைந்துபோரிட்டார் என்கிறது. ஆங்கிலேயர் பதிவுகள் சொல்லும் வரலாறுதான் கட்டம்பொம்மன் பற்றி நாம் சொல்வது. அவர் காலத்தில் வாழ்ந்த புலவன் ஒருவன் எழுதி இருப்பது இந்தக் காப்பியம். எது உண்மை? அப்பச்சிமார் காவியம், தமிழ் நாவல் சரிதை எனப் பல சுவடிகள் வெளிவராமல் உள்ளன. பாடபேதங்கள் சுட்டிக்காட்டும் சுவடிகள் நம்மிடையே ஏராளம் கிடைத்துள்ளன.
சுவடிகள் படியெடுக்கும்போது மாற்றி எழுதப்படுவது உண்டு என்பார்கள்?
ஆமாம். ஓரெழுத்து மாறினாலும் அர்த்தம் மாறிவிடும். தமிழ் இலக்கண அறிவு கொண்டுதான் பலவற்றை விளங்க வேண்டும். குறள் இரு அடி என்பார்கள். ஆனால் சுவடியில் நீளமாகத்தான் எழுதி இருக்கும். வெண்பா நான்கடி என்றால் சுவடியில் ஒரே நீளமாக எழுதி இருக்கும். கலிப்பா, ஆசிரியப்பா எதுவானும் அதேதான்கதி. அடிகள், சொற்கள் என்று பிரிக்கவேண்டும். இலக்கண அறிவு அதற்குத் தேவைப்படுகிறது. அந்தக் காலத்தில் புள்ளி எழுத்தும் இடையின ரகரமும் எகர ஒகர நெடில்களும் எழுதமாட்டார்கள். அதனால் தற்போது வழக்கத்திலிருக்கும் பல பாடல்வரிகள்கூட தவறாகப் பொருள் கொள்ளப்பட்டனவோ என்று ஒரு கருதுகோள் எனக்கு உண்டு. உதாரணத்துக்கு குறளில் முதல் குறளைப் பார்ப்போம். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. ஆதி பகவன் என்றால் கடவுள் எனப் பொருட்கொள்ளப்படுகிறது. அது ஆதி பகலன் என இருந்திருந்தால்? அப்படித்தானே வள்ளுவர் எழுதி இருக்கக்கூடும்? படி யெடுக்கையில் பிழை நேர்ந்திருக்கலாம் அல்லவா? சங்க இலக்கியங்களில் கடவுள் வாழ்த்தே கிடையாது என்பதுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். இன்னொரு குறள்: எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. இதில் அக்கால எழுது வழக்கப்படி எப்பேரருள் என்பதைத்தான் எப்பொருள் எனச் சுவடியில் எழுதப்பட (இரட்டைக் கொம்பு, இடையின ரகரம் சுவடி எழுத்தில் இல்லை), அப்படியே நாம் புரிந்துகொண்டிருக்கிறோமா என்பதெல்லாம் ஆய்வுக்குரியதாக நான் கருதுகிறேன். எப்பொருள் என்பதற்குப் பதிலாக எப்பேரருள் எனப் போட்டு இக்குறளை வாசித்துப் பாருங்கள்.
சுவடிகளைத் திரட்ட களப்பணிக்குச் சென்ற அனுபவங்கள்?
பல இடங்களில் சுவடிகளைக் கண்டால் அவை இருக்கும் நிலையைப் பார்த்தால் கண்ணில் ரத்தமே வரும் அளவுக்கு பாதுகாப்பில்லாமல் வைத்திருப்பார்கள். கரையான் அரித்துத் தின்றிருக்கும். கையில் கிடைத்தும் பலன் இருக்காது. பல்லடம் அருகே ஒரு கோவிலில் வழிபாட்டில் சுவடிக்கட்டுகள் இருக்கின்றன என்று சொல்லித் தேடிப் போனோம். அவர்களும் எங்களிடம் தர இசைந்தார்கள். அந்தச் சுவடிக்கட்டை ஆவலுடன் எடுத்தால் பிரிக்கவே முடியவில்லை. அப்படியே ஒட்டிப் போயிருந்தது. ஒன்றும் செய்ய முடியவில்லை. என்னவென்று கேட்டால், தூசியாக இருந்ததால் அந்தச் சுவடிகளைக் கடந்த ஆண்டு குளத்தில் போட்டு முக்கிக் கழுவி வைத்தோம் என்றனர். பெரும் துன்பம் அடைந்தோம். கொல்லிமலையில் அரிய சுவடிகள் கிடைக்கும் எனத் தேடிச் சென்றபோது மழையில் நனைந்த காட்டுச்சாலையில் வழுக்கி அறுபது அடிப் பள்ளத்தில் விழுந்துவிட்டேன். அன்று அப்பகுதி மக்கள் காப்பாற்றினர்.
ஓலைச்சுவடிகளில் இடம்பெற்ற இலக்கியங்கள் பற்றி ஆய்வுகள் நடக்குமே?
நான் 1798-இல் இருந்து வெளியான சஞ்சிகைகளை ஆய்வு செய்து அதில் வெளியான ஓலைச்சுவடிகளில் இருக்கக்கூடிய படைப்புகள் 825ஐத் தொகுத்துப் பருவ இதழ் சுவடிப்பதிப்பு வரலாறு என ஆய்வுப் பதிப்பு வெளியிட்டிருக்கிறேன். இவை தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறாதவை. இக்காலத்தில் யார் கடினமான ஆய்வுகளைச் செய்ய முன்வருகிறார்கள் சொல்லுங்கள். நவீன இலக்கியத்தில் ஆய்வு செய்யவே மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். எளிதாக விரைவாக பட்டம் பெற்றுச் செல்லவே விரும்புகிறார்கள். முப்பதாண்டுகளுக்கு முன்பு சங்க இலக்கியத் தலைப்புகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இப்போது யாரும் எடுப்பது இல்லை. இது வருத்தத்துக்குரிய விஷயம். சில ஆயிரங்கள் வழங்கி நூல் எழுதச் செய்து, தங்களைப் பதிப்பாசிரியர் எனப் போட்டுக்கொள்கிறார்கள். நீங்கள் எல்லாம் பதிப்பாசிரியர் என்றால் உ.வே.சா., சி.வை.தா., வையாபுரிப்பிள்ளை போன்றோரெல்லாம் யார்?