கரூர் மாவட்டம் க. பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்குச்சென்றால் சாந்தகுமாரைப் பார்க்கலாம். அவர் அப்பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினர். ஓவியத்தில் திறமை மிகுந்தவர் என்பதால் பள்ளி மேலாண்மை குழுவின் வேண்டுகோளுக்கிணங்க ஓய்வு நேரங்களில் பள்ளிக்கு வந்து மாணவ மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி அளித்து வருகிறார். மற்ற நேரங்களில் அவர் ஒரு லாரி ஓட்டுநர்.
இதே பள்ளியில் தேவைப்படும் குழாய் இணைப்புகள் பிளம்பிங் வேலைகள் மின் வேலைகள் அனைத்தையும் பொறுப்பேற்றுக்கொண்டு செய்து வருகிறார் சண்முகம். இவரும் மேலாண்மைக் குழு உறுப்பினரே.
சில பெண் உறுப்பினர்கள் ஓய்வு நேரங்களில் எம்பிராய்டரி, கூடைகள் முடைதல் ஆகிய கைவினை பயிற்சியை மாணவ மாணவிகளுக்கு செய்து கொடுக்கிறார்கள். பள்ளியில் வழங்கப்படுகின்ற மதிய உணவை தரத்தை சோதிக்கிற பணியை சுழற்சி முறையில் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள்.
இப்பள்ளியின் மேலாண்மைக் குழுவினரே ஒவ்வொரு வருடமும் மே மாத இறுதியில் கிராமங்களிலுள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பள்ளி செல்லும் வயதில் இருக்கின்ற குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கின்ற பணியையும் செய்கிறார்கள். இதுபோன்ற பல பணிகளை இக்குழு மேற்கொள்கிறது.
பள்ளி மேலாண்மைக்குழுவா? அது என்ன என நீங்கள் கேட்கலாம். முன்பு பள்ளிகளில் இருந்த பெற்றோர் ஆசிரியர்கழகம் என்பது ஆசிரியர்களுக்கும்.பெற்றோர்களுக்கும் நல்லுறவை பேண ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகும்.
ஆனால் ஒரு கட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் போதாமைகள் அதிகரித்த நிலையில் அந்த வெற்றிடத்தை நிரப்ப பள்ளி மேலாண்மைகுழு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தது. இது சராசரி பெற்றோர்களுக்கு அவர்கள் வெறும் வேடிக்கை பார்ப்பவர்கள் என்ற நிலையிலிருந்து மாறி, பள்ளி நிர்வாகத்தில் பங்கேற்பதற்கான இடத்தையும் வாய்ப்பையும் வழங்கியது.
குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009 இவ்வமைப்புக்கு உரிய சட்டப்பாதுகாப்பை வழங்குகிறது. இக் குழுவை அமைக்க 2009 கல்வி உரிமைச்சட்டம் வாய்ப்பளித்தாலும் அக் குழுக்களை உருவாக்கும் முயற்சி ஏனோதானோவென்றே நடந்துவந்தது. அவ்வாறு அமைக்கப்பட்ட குழுக்களும் பெரும்பாலும் கையொப்பமிடும் அமைப்பாகவே இருந்தன. காரணங்கள் வெளிப்படையானவை. மிக முக்கிய காரணம் அக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரங்கள்தான்.
இவ்வதிகாரங்களை பரவலாக்கினால் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்ற அச்சம் பலருக்கு இருந்தது.
ஆனால் இப்போது இந்த இக்குழு அமைத்தலை மாநிலம் தழுவிய மக்கள் இயக்கமாக மாற்ற தீவிரமான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது தமிழக பள்ளிக்கல்வித் துறை. மாநிலமெங்கும் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதுபோன்ற சமுக பங்கேற்பு, கண்காணிப்பு வெற்றிக்கதைகள் வர ஆரம்பித்துள்ளன. பள்ளிகளில் கேள்விகளை பெற்றோர் எழுப்புகையில் பல பட்டாசுகள் வெடிக்கும்!
கடந்த மாதம் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் அழைப்பின்பேரில் மூன்று பள்ளிகளுக்குச் சென்றிருந்தேன். பள்ளி மேலாண்மைக்குழு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி அது. அவை மூன்றும் முழுமையாக பழங்குடிகுழந்தைகள் பயிலும் பள்ளி. அன்று அனைத்துப் பெற்றோர்களும் வருகை புரிந்து ஆசிரியர்களுக்கு ஆச்சரியமளித்தனர் .
கூட்டம் தொடங்கியதும் மைக்கை கொடுத்து என்னை பேசுமாறு பணித்தனர். ஆனால் நான் மைக்கை, வருகை புரிந்த பெற்றோர்களின் கையில் கொடுத்து இந்த பள்ளி எப்படி இருக்கவேண்டுமென்று கனவு காண்கிறீர்கள் என்று கேட்டேன். ஒவ்வொருவராக அவர்கள் கனவுகளை பகிர்ந்துகொண்டனர் .
மாணவிகள், ஆசிரியர்கள் என பலரையும் பேசச் செய்துவிட்டு அப்புறமாக நான் பேசினேன். அரசுப் பள்ளியின் முக்கியத்துவம், பள்ளி சந்திக்கும் சவால்கள், மேலாண்மைக்குழு அமைத்தல், அதன் பொறுப்புகள் என அவர்கள் மொழியிலேயே இயல்பாக பேசிமுடித்தேன்.
முடித்ததும் இப்போது உங்கள் கனவுகளை யார் நிறைவேற்றுவார்கள் என்று கேட்டேன். நாங்கதான் சார் நிறைவேற்றணும் என்று பெற்றோர்கள் ஒன்றாகக் குரல் கொடுத்தார்கள். இது நம்ம பள்ளி இதை நாம்தான் ஆளவேண்டும் என்ற உணர்வைக் கண்டேன். நிறைவாக இருந்தது.
(ஒடியன் லட்சுமணன், செயற்பாட்டாளர்)
ஏப்ரல், 2022