சிறந்த கலைப்படைப்பு என்ற நிலையில் நாவலும் திரைப்படமும் சமமான மதிப்புடையன. தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரையில், நாவல்களைப் பயன்படுத்துவது ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. பிற மொழித் திரைப்படங்களில் இருந்து கதையையும் காட்சிகளையும் திருடி உருவாக்கப்படுவதுதான் பெரும்பாலான தமிழ்ப் படங்களின் நிலையாக உள்ளது. இன்னொருபுறம் தமிழ் நாவல்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சுட்டு, திரைக்கதையாக்கும் போக்கும் நிலவுகிறது.
1935-இல் வெளியான தமிழின் முதல் சமூகப் படமான மேனகா, வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவலான மேனகா என்ற நாவலை மூலமாகக்கொண்டது. அண்மையில் விசா ரணை என்ற பெயரில் திரைப்படமான மு.சந்திரகுமாரின் லாக்கப்(2015) உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள் தமிழில் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. இலக்கிய உலகில் உன்னதமாகக் கருதப்படும் நாவல், காட்சி வடிவில் வேறு ஒன்றாக மாறும்போது, ஏற்படும் மாற்றங்கள், பெரும்பாலும் நாவலாசிரியர்களுக்கு உவப்பானதாக இல்லை. பொதுவாக நாவலைத் திரைப்படமாக்குவது என்பது ஒருவகையில் சவால்தான். தமிழ் சினிமாவின் தொடக்ககாலத்தில் சமூகப்படங்கள் உருவாக்கத்தில் பிரபலமான தமிழ் நாவல்கள் பெரிதும் பயன்பட்டுள்ளன. இத்தகைய திரைப்படங்கள், மூல நாவல்களுக்கு விசுவாசமாக இருந்தனவா என்பதை அறிய இயலவில்லை.
நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை எழுதிய மலைக்கள்ளன் நாவல், எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் 1954 ஆம் ஆண்டில் திரைப்படமாக வெளியிடப்பட்டது. திரைக்கதைக்கான வசனத்தை மு.கருணாநிதி எழுதினார். எம்.ஜி.ராமச்சந்திரன், பானுமதி நடிப்பில் உருவான படம், சிறந்த தமிழ்ப்படத்திற்கான குடியரசுத்தலைவர் விருது பெற்றது. நாவலின் மையத்தை நன்கு புரிந்துகொண்ட இயக்குநர் ஸ்ரீராமுலு நாயுடு, நாவல் வாசிப்பினில் ஏற்படுத்திய சுவராசியத்தைத் திரைப்படத்திலும் தந்திருந்தார். ஒப்பீட்டளவில் மலைக்கள்ளன் சினிமாதான், மூல நாவல் வாசிப்பினில் தந்த அனுபவத்தை முதன்முதலாகத் திரையின் வழியே பார்வையாளர்களுக்குத் தந்தது.
அறுபதுகளில் திராவிட இயக்கத்தினரின் நாவல்கள் திரைப்படங்கள் ஆயின. அடுக்கு மொழி வசனங்களும் , எதிர்பாராத திடுக்கிடும் சம்பவங்களை உள்ளடக்கிய சமூக சீர்திருத்தக் கருத்துகள் நிரம்பிய தி.மு.க, கட்சித் தலைவர்களின் திரைப்படங்கள், மக்களைக் கவர்ந்தன. அதேவேளையில்; அரசியல்ரீதியில் நாவலாசிரியர்கள் பிரபலமடைவதற்குப் பயன்பட்டன.
அடுத்த காலகட்டத்தில் திரைப்படமான நாவல்களில் கல்கியின் பார்த்திபன் கனவு(1960), மு.வரதராசனின் பெற்ற மனம்(1960), அகிலனின் பாவை விளக்கு(1960), ரா.கி.ரங்கராஜனின் சுமைதாங்கி(1962) ஆகியன குறிப்பிடத்தக்கன. வெகுஜனரீதியில் வாரந்தோறும் பத்திரிகைகளில் வெளியான இத்தகைய நாவல்கள், வாசகர்களின் அசட்டு ரசனைக்குத் தீனி போடுகின்றவனாக இருந்தன. இத்தகைய திரைப்படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை.
தமிழ் சினிமா வரலாற்றில் புதிய அலைக்கு வித்திட்ட யதார்த்தவகையிலான உன்னைப் போல ஒருவன் 1965இல் வெளியானது, ஒரு திருப்புமுனை. நாவலாசிரியர் ஜெயகாந்தன் தான் எழுதிய உன்னைப் போல ஒருவன் நாவலை , நண்பர்களின் உதவியுடன் தயாரித்தார். இதற்கு, இந்தியஅரசின் விருது கிடைத்தது. ஏற்கனவே சினிமா என்றால் வெறுமனே கேளிக்கை, பொழுதுபோக்கு என்று உருவாக்கப்பட்டிருந்த மரபினை உடைத்தெறிவதற்கு உன்னைப் போல ஒருவன் நாவல் பயன்பட்டது. ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தைப் பார்க்க வந்த பத்திரிகையாளர்களுக்கு ஜெயகாந்தன் அளித்த அறிக்கையின் சிறிய பகுதி : “இன்றைய தமிழ் சினிமா ரசனையையும் அதன் சிருஷ்டி முறைகளையும் இந்தப்படம் பூரணமாக மறுத்து ஒதுக்கி இருக்கிறது என்று தெரிந்தும் பார்க்க வந்திருக்கும் நண்பர்களே, உங்களை நான் வணங்குகிறேன்; பாராட்டுகிறேன்.”
கொத்தமங்கலம் சுப்பு, ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதி, மிகவும் பிரபலமடைந்திருந்த தில்லானா மோகனாம்பாள் நாவல், ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் திரைப்படமாக 1968 ஆம் ஆண்டு வெளியானது. சிவாஜி, பத்மினி, மனோரமா, நாகேஷ் போன்ற முன்னணிக் கலைஞர்களின் நடிப்புடன் ஒரு காலகட்டத்தினைச் சித்திரித்த திரைப்படம், நாவல் வாசிப்பினில் தந்த அனுபவத்தினைப் பார்வையாளர்களுக்குத் தந்தது. நாவலின் சாராம்சம் சிதையாமல், எப்படி ஒரு திரைப்படம் தயாரிக்கலாம் என்பதற்கு தில்லானா மோகனாம்பாள் இன்றளவும் எடுத்துக்காட்டாக உள்ளது.
சொல்லத்தான் நினைக்கிறேன்(1973) திரைப்படம் மணியனின் இலவு காத்த கிளி நாவலை மூலமாகக் கொண்டது. கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான படத்தில் காதலை முன் வைத்து, இளைஞன்- இளைஞிக்கிடையிலான தோன்றும் மன உணர்வுகள் சுவராசியமாகக் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. எம்.ஜி.ஆர்., ,சிவாஜி ஃபார்முலா படங்கள் ஆளுகை செலுத்திய காலகட்டத்தில் சொல்லத்தான் நினைக்கிறேன் புதிய போக்கினுக்கு வழி வகுத்தது.
மதுவிலக்கு பிரச்சாரம் செய்வதற்காக ராஜாஜியினால் எழுதப்பட்ட திக்கற்ற பார்வதி நாவல், சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ் இயக்கிட, அதே பெயரில் 1974 ஆம் ஆண்டில் வெளியானது. வழக்கமான தமிழ் சினிமாவிலிருந்து வேறுபட்ட முயற்சி, ராஜாஜியின் நாவல் என்ற அளவில் அன்றைய ஊடகங்கள் இப்படத்தினைப் புகழ்ந்தன.
எண்பதுகளில் வெகுஜன பத்திரிகைகளின் ஆதிக்கம் வலுவாக இருந்தது. முற்றிலும் கேளிக்கை எழுத்துக்கு முன்னுரிமை தரப்பட்டது. மனித வாழ்க்கை அல்லது மதிப்பீடுகள் சார்ந்து எதையும் உருவாக்கிடாத வெற்றுச் சம்பவங்கள் அடங்கிய இத்தகைய நாவல்களுக்கு இருந்த பிரபல்யத்தை பணமாக்கிட விழைந்தவர்கள் அவற்றின் பின்புலத்தில் சினிமா தயாரித்தனர். வெகுஜன ரசனையைச் சீரழிக்கின்ற இவை வெளியானபோது, பெரிய அளவில் பார்வையாளர்களைக் கவரவில்லை என்பது ஆறுதலான விஷயம்.
நாவலைத் திரைப்படமாகக் காட்சிப்படுத்தியதில், ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்(1976) நாவல் தனித்து விளங்குகிறது. கங்கா என்ற பெண் எதிர்கொண்ட பிரச்சினைகள், அனுபவங்கள் வழியாக மாற்றுச் சினிமா என்ற போக்கினுக்குச் சில நேரங்களின் சில மனிதர்கள் திரைப்படம் வித்திடுவதற்கு முதன்மையான காரணம், ஜெயகாந்தன் நாவலின் வலுவான கதையமைப்புத்தான். வழக்கமான காட்சிகளின் நகர்த்துதல்களில் இயங்கும் சினிமாவிற்கு மாற்றாக நிறைய வசனங்களின் வழியே படத்தினை இயக்கியிருக்கும் இயக்குநர் பீம்சிங்கின் மேதைமை அபாரமானது.
நாவல்களைப் படமாக்குவதில் முனைந்து செயல்பட்டவர்களில் இயக்குநர் மகேந்திரன் குறிப்பிடத்தக்க ஆளுமை. உமா சந்திரன் எழுதிய முள்ளும் மலரும் என்ற சாதாரணமான நாவலைப் பின்புலமாகக்கொண்டு வெளியான முள்ளும் மலரும்(1978) திரைப்படம், பார்வையாளர்களிடம் புதிய மொழியில் உறவாடியது. புதுமைப்பித்தனின் சிற்றன்னை நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமான உதிரிப்பூக்கள், புதிய வகைப்பட்ட சினிமாவிற்கு வழி வகுத்தது. பொன்னீலனின் உறவுகள் குறுநாவலை முன்வைத்து மகேந்திரன் இயக்கியிருந்த பூட்டாத பூட்டுகள்(1980) வெற்றி அடையாவிட்டாலும், முக்கியமான படைப்புதான். இந்திரா பார்த்தசாரதியின் குருதிப் புனல் நாவலை கண் சிவந்தால் மண்சிவக்கும் (1983) எனத் திரைப்படமாக்கிய இயக்குநர் ஸ்ரீதர் ராஜன் தனது படைப்பில் காத்திரமான அரசியலை முன் வைத்தார். நாவலைப் பின்புலமாகக் கொண்டிருந்தாலும் இயக்குநரின் தனித்துவம் காட்சிப்படுத்துதலில் வெளிப்பட்டுள்ளது.
ஞான் ராஜசேகரனின் இயக்கத்தில் வெளியான மோகமுள் (1995) திரைப்படம் தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலைப் பின்புலமாகக் கொண்டது. இசையை முன் வைத்து விரியும் நாவல், வாசிப்பின் வழியே பலருக்கும் ஏற்படுத்தியிருக்கின்ற லஹரியைக் காட்சி வடிவில் கொண்டு வர இயக்குநர் கடுமையாக உழைத்திருக்கிறார். இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை, படத்திற்குப் பக்கபலமாக இருப்பினும், ஏதோ ஒன்று குறைவதாகத் தோன்றுகிறது.
நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் நாவல், தங்கர் பச்சான் இயக்கத்தில் சொல்ல மறந்த கதை(2002) என்ற பெயரில் திரைப்படமாக வெளியாகியுள்ளது.
நாஞ்சில் நாட்டிற்குரிய மருமக்கள் தாயம் பின்புலத்தில் நாவலை வாசித்தால், அந்த நாவலின் உன்னதம் புலப்படும். ஆனால் தங்கர் பச்சான் கதைக்களத்தைப் பண்ருட்டி பகுதியாக்கியது, எப்பொழுதும் அழுது வடிகின்ற முகபாவனை காட்டும் சேரனைக் கதாநாயகனாக்கியது என விரியும் காட்சிகள், நாவலுக்குச் செய்துள்ள துரோகமாகும். அருமையான நாவலை எப்படி மோசமாகப் படம் எடுக்கலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்ல மறந்த கதை வெளியாகியுள்ளது.
இதுபோல சினிமா ஆன பல நாவல்களைப் பற்றி இங்கே விரித்துச் சொல்லிக்கொண்டே செல்லலாம்.
ஆயிரக்கணக்கில் வெளியாகியுள்ள தமிழ்த் திரைப்படங்களை உலகத் திரைப்படங்களுடன் ஒப்பிட இயலாத நிலையே இன்றுவரை நிலவுகிறது. தமிழ் சினிமா உலகிற்கு வழங்கிய கொடை என எந்தப் படங்களைச் சொல்வது? யோசிக்க வேண்டியுள்ளது. நல்ல சினிமாவை உருவாக்கிட வலுவான கதை தேவைப்படும் நிலையில், நாவல்களையே தேடிச் செல்ல வேண்டியுள்ளது. தமிழில் வெளியாகியுள்ள நாவல்களில், குறைந்தபட்சம் ஐநூறு முக்கியமான நாவல்களைக் குறிப்பிட முடியும். ஆனால் இதுவரை இதுபோன்ற காத்திரமான நாவல்களை மூலமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களின் எண்ணிக்கை இருபத்தைந்துகூட இருக்காது.
இத்தகைய சூழலில் இயக்குநர்கள் சிறந்த நாவல்களைத் தேர்ந்தெடுத்து வாசித்தால், வித்தியாசமான தமிழர் வாழ்க்கையைப் பதிவாக்கிடும் திரைப்படங்களை உருவாக்கிட முடியும்.
ஜனவரி, 2016.