கட்டுரை

சவுக்கின் கதை!

Staff Writer

சவுக்கின் கதை!

தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியராகப் பணிபுரிந்த சங்கர், ஊழல் எதிர்ப்புக்காக அனைவராலும் அறியப்பட்டவர். முந்தைய திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உபாத்யாயா என்பவருக்கும் தலைமைச்செயலாளர் திரிபாதி என்பவருக்கும் இடையில் நடந்த உரையாடல் செய்தித்தாள்களில் வெளியானது.  இவற்றை வெளியிட்ட பழி அந்த துறையில் பணியாற்றிய தன் மீது விழுந்ததும் அதனால் தான் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்ததும் பின்னர் வழக்கில் வாதாடி வென்றிருப்பதும் வரையிலான அனுபவங்களை சங்கர் நூலாக எழுதி உள்ளார். ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கினாலும் போகப்போக விறுவிறுப்பாகவும் மனதைப் பிசையும் அனுபவங்களுடன் செல்கிறது இந்த நூல். முதன்முதலாகச் சிறைக்குள் செல்லும் சங்கர் அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து அஞ்சுகிறார். அவரை அடைக்கும் அறையில் இருந்த இரண்டு பேரின் தோற்றத்தைப் பார்த்ததும் அவர்கள் தன்னை என்ன செய்வார்களோ என்று எண்ணி, இந்த அறை வேண்டாம் என்கிறார். ஆனால் காவலர்களோ உள்ளே தள்ளிப் பூட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் வழிப்பறிக் குற்றவாளிகள். இரவு உணவை அவர்கள்தான் சங்கருக்குத் தருகிறார்கள். ஒருவன் அவருக்கு பீடி புகைக்கத் தருகிறான். அவர்கள் அறை மாறிச் செல்லும்போது ஒருவன் மேலும்  ஐந்து பீடிகட்டுக் களைத் தந்துவிட்டுச் செல்கிறான்.  சங்கரின் அனுபவங்களில் இந்நூலில் இடம்பெற்றிருப்பது குறைவுதான். அவர் இறுதியாகச் சொல்கிறார்:  ‘‘காலச் சக்கரத்தை பின்னோக்கிச் சுழற்றினால் நான் இதை மீண்டும் செய்வேனா என்றால் நிச்சயம் செய்வேன்!''

ஊழல் உளவு அரசியல்& அதிகார வர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம், சவுக்கு சங்கர், வெளியீடு:

கிழக்கு பதிப்பகம்,

177/103, முதல் தளம்,

அம்பாள் கட்டடம், லாயிட்ஸ் சாலை,

ராயப்பேட்டை,  சென்னை - 14, பேச: 044&42009603  விலை ரூ:200

வரலாறு

நீண்ட நாட்களாக தமிழ் இலக்கிய உலகில் இயங்கிவரும் எழுத்தாளர் ஃபிர்தவுஸ் ராஜகுமாரனின் நாவல் இது. கடந்த 30 ஆண்டுகளாக கோவை மாநகரின் உடலில் மதங்களால் உண்டான கீறல்களின் உண்மையை அறிந்துகொள்ளும் விசாரணையே இந்த நாவல் என்று முன்னட்டைக் குறிப்பு கூறுவதற்கு நியாயத்தை இந்த நாவலில் அவர் செய்திருக்கிறார்.  பொதுவாகவே தமிழகத்தில் இஸ்லாமிய எதிர்ப்புவாதம் எப்படி வேர்விட்டு கோவை கலவரம் அளவுக்கு முற்றிப்போனது என்பதற்கும் வரலாற்று சாட்சியமாக இது உருவாகி இருக்கிறது. சாமானிய முஸ்லிம்கள் கோவை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சமூகத்தால் எப்படி புறக்கணிக்கப்பட்டார்கள், பல ஆண்டுகளுக்கு அவர்களுக்கு தவணை முறையில் கூட டிவி பிரிட்ஜ் போன்ற பொருட்களை வழங்க நிறுவனங்கள் எப்படி மறுத்தன, எப்படி அப்பாவிகள் வேட்டையாடப்பட்டார்கள் என தங்கள் சமூகத்தின் வலிகளை எழுதியுள்ளார்.  கலவரத்துக்குத் தொடர்பில்லை எனிலும் காவல்துறையின் கண்காணிப்பில் வந்து அன்றாட வாழ்க்கையே பாதிப்புக்குள்ளாகி நொடிந்துபோகும் பல இஸ்லாமியக் குடும்பங்களின் கண்ணீர்க் கதையை இந்நாவல் முன்வைக்கிறது. 

ரணங்கள்,

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்,

இலக்கியச்சோலை,

26, பேரக்ஸ் சாலை, பெரிய மேடு, 

சென்னை- 3 விலை: ரூ 250

பொறியில் அகப்பட்டுக்கொண்ட எலி

மூன்று சிறுகதைகளும், ஒரு குறுநாவலும், நாடகமும் கொண்ட தொகுப்பு இது. ரமாவும் உமாவும் குறுநாவல்.  நாற்பது வயதை எட்டிய இரண்டு குஜராத்திப் பெண்கள் சுற்றுலாவில் சந்திக்கிறார்கள். இருவருக்கும் ஓர் அறை கொடுக்கப்பட்டிருக்கிறது, அங்கே அவர்களுக்குள் ஒரு அந்தரங்க உறவு ஏற்பட்டுவிடுகிறது. அப்போது அவர்களுக்குள் நிகழும் உரையாடல்களின்வழியே மொத்தக் குறுநாவலும் சொல்லப்பட்டுவிடுகிறது. அந்த இரு பெண்களின் வாழ்ந்த வாழ்வின் மொத்த வெறுமையும் அப்போது பகிரப்பட்டுவிடுகிறது. அவ்வப்போது படைப்பாளியுடனும் அந்தப் பெண்கள் உரையாடுகிறார்கள். வெளிவந்த போது பரவலான பாராட்டுக்களையும் அதைவிட அதிகமான கண்டனங்களையும் எதிர்கொண்ட படைப்பு இது. ரமாவும் உமாவும் குறுநாவலை மறைந்த ஞாநி அவர்கள் நாடகமாக மேடையேற்றினார் என்பது உபரி செய்தி.  ஒரு எலிய கதை கச்சிதமாக எழுதப்பட்ட ஒரு சிறுகதை. பொறியில் மாட்டிக் கொண்ட ஒரு எலிக்கும் கடவுளுக்கும் இடையே நடக்கும் சம்பாஷணைதான் மொத்தக்கதையும். ‘பூனைகளும் பாம்புகளும் கூட எலிகளை நேசிக்கும் காலம் வந்தாலும் வரும்; ஆனால் மனிதர்கள் மட்டும் எலிகளை வெறுத்துக்கொண்டே இருப்பான்' என்கிறது கதையின் ஒரு வரி. மொத்தக்கதையின் ஆதார அம்சம் இதுதான். ஒருதலைபட்சமான அன்பு, கருணை, காருண்யம், நட்பு என எல்லாவற்றையும் பகடியான சித்தரிப்புகளின் வழியே கேள்விக்குள்ளாக்குகிறார் திலீப்குமார். இந்த இரண்டாவது பதிப்பை அழகாகப் பதிப்பித்துள்ளார்கள் க்ரியா பதிப்பகத்தினர்.

ரமாவும் உமாவும் - திலிப்குமார் க்ரியா,

புதிய எண் 2, பழைய எண் 25, முதல் தளம்,

17ஆவது கிழக்குத் தெரு, காமராஜர் நகர்,

திருவான்மியூர், சென்னை - 600 041.  தொலைபேசி: +91&44&4202 0283 விலை ரூ:195

கீச்சுகள்

எழுதி எழுதி என்னை அடைகிறேன் என அறைகூவல் விடுக்கும் ராஜா சந்திரசேகரின் டிவிட்டர் பதிவுகளின் பெருந்தொகுப்பு இந்தப்புத்தகம். ட்விட்டரில்140 வார்த்தைகளுக்குள் நறுக்குத் தெறித்தாற்போல் சொல்லிவிட வேண்டும். அது விடுக்கும் சவாலே அதன் வசீகரம். அந்த வசீகரம் இந்தத்தொகுப்பு முழுவதும் நிறைந்து கிடக்கிறது. அவர் ஒரு கவிஞர் என்பது கூடுதல் வசதிதான். கச்சிதமும் ஒழுங்கும் கொண்ட வரிகள். பெரும்பாலான வரிகள் நம்மை ஒரு நிமிடமேனும் யோசிக்க வைத்து அதன் அர்த்தத் தளத்துக்குள் நம்மை செலுத்துகின்றன என்பதை இந்தப்புத்த்கத்தின் சிறப்பாகச் சொல்லலாம்.. 'மன்னிக்கப் பழகிவிட்டீர்கள்; குற்றவாளிகள் அதிகமாகிவிட்டார்கள்' என்பது ஒரு டிவீட். இந்த ஒரு வரி தமிழ்நாட்டின் மொத்த அரசியல் சூழ்நிலையையே கண்முன் கொண்டுவந்துவிடுகிறது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். இந்த நூலை எந்தப் பக்கத்திலிருந்தும் வாசிக்கத் தொடங்கலாம் என்பதும் வாசிப்பவர்களுக்கு ஒரு கூடுதல் வசதிதான்.

மைக்ரோ பதிவுகள் - ராஜா சந்திரசேகர்.

வெளியீடு: சந்தியா பதிப்பகம்,

எண்:77, 53ஆவது தெரு, அசோக் நகர்,

சென்னை - 600083.     பேச: 98411 91397 விலை: ரூ 185

கவிதை விளையாட்டு

அதிகமும் அறியப்படாத புத்தகங்களின் மீதும் செய்யுட்களின் மீதும் செய்யுட்களில் தொழிற்படும் விளையாட்டின் மீதும் வெளிச்சம் பாய்ச்சும் முயற்சியே கவிஞர் இசையின் இந்த நூல். தமிழில் எழுதப்படும் பகடிக் கவிதைகள் பற்றிய கட்டுரையும் உண்டு. கவிதையில் விளையாட்டு எப்படி தொழிற்படுகிறது என்பதை நுணுகி ஆராய்கிறார் அவர். ஞானக்கூத்தன், தேவ தேவன், தொடங்கி மனுஷ்யபுத்திரனின் 'பேன்' கவிதையை விளையாட்டாக இல்லாமல் தீவிரத்துடன் அலசுகிறார்.  இதைப்போலவே தமிழின் பழம் இலக்கியப்பாக்கள், தனிப்பாடல்கள், தொடங்கி பாரதி மற்றும் நவீன கவிஞர்கள்  சி.மணி, யுவன் சந்திர சேகர், நரன், லிபி ஆரண்யா, முகுந்த் நாகராஜன், இளங்கோ கிருஷ்ணன், வெய்யில், கண்டராதித்தன், போகன் சங்கர், சபரிநாதன்  என நீளும் கவிஞர்களின் கவிதைகளில் பகடி எப்படி நிகழ்ந்துள்ளது, அது கவிதைகளை எங்ஙனம் பாதித்துள்ளது என்பதையும்  தீவிரமாக ஆராய்கிறது இந்த நூல். ஒரு நவீன கவிஞனின் கவிதை குறித்த மாற்றுக்கோணப் பார்வை நூல் இது.  தலைப்பைக் கண்டு அஞ்சத் தேவையில்லை!

பழைய யானைக் கடை - இசை,காலச்சுவடு பதிப்பகம்,

669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001.

போன்: 04652 278525 விலை ரூ: 195

மார்ச், 2018.