சாஹிதுல் ஆலம் 
கட்டுரை

காமிராவின் எதிர்க் குரல்!

இரா. கௌதமன்

பங்களாதேஷின் தலைநகரான டாக்கா. ஆகஸ்டு 5 ஆம் தேதி இரவு.  முக்கியமான புகைப்பட பத்திரிகையாளரான சாஹிதுல் ஆலம் வீட்டின் முன்பாக வெள்ளை நிற வேன் ஒன்று புழுதி பறக்க வந்து நிற்கின்றது. அதிலிருந்து இறங்கும் பத்து பேர் அடுத்த ஐந்து நிமிடத்தில் அவரை குண்டு கட்டாக வேனுக்குள் தூக்கிப் போட்டுக்கொண்டு பறந்துவிடுகிறார்கள். ஆலம் கடத்தப்பட்டுவிட்டார். யாரால் எதற்காக என்று யாருக்கும் தெரியாது.

ஆலம் பத்திரிகையாளர் மட்டுமல்ல பங்களாதேஷ் உருவானதிலிருந்து அதனுடைய அத்தனை முக்கியமான நிகழ்வுகளிலும் சாட்சியமாக இருந்துள்ளார். பெரும்பாலான அவரது புகைப்படங்கள் அதற்கு சாட்சியாக இருக்கின்றன. பிராஸ்தலா என்ற புகைப்படக்கலை பள்ளியை தொடங்கி புகைப்படங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர். சோபி மேளா என்ற புகைப்படத் திருவிழாவை தொடங்கி தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தெற்காசிய பகுதியின் முகமாக உலகம் ஆலமை கவனித்துக் கொண்டிருக்கிறது. 1971 ல் பங்களாதேஷ் உருவானபோது அவர்  15 வயது சிறுவன். அன்றைய நிகழ்ச்சிகளை தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டு, ரத்தம் சிந்திப் பெறப்பட்ட சுதந்தரமும் உரிமையும் பாதுகாக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டவர். இன்றுவரை அதற்காக போராடிக் கொண்டிருப்பவர்.

 கடந்த ஜூலை மாதத்தில் டாக்காவில் பள்ளி குழந்தைகள் இருவர் மீது பஸ் ஏறி இறந்துவிடுகிறார்கள். வருடத்திற்கு 3000 விபத்துகள் நடக்கும் டாக்கா நகரம் இந்த விபத்தினை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. மாணவர்கள் அமைப்பு சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய சொல்லிப் போராட்டத்தில் இறங்குகிறது. சாலை மறியல் செய்கிறார்கள். அரசாங்கம் போராட்டத்தை ஒடுக்க கடுமையான வழிகளை மேற்கொள்கிறது. கண்ணீர் புகை குண்டுகள், தடியடி என்று ஒடுக்குமுறைகளை ஏவிவிடுகிறது. இந்தப் போராட்டத்தை ஆலமின் காமிரா முழுமையாக பதிவு செய்கிறது. போராட்டத்தைப் பற்றி, அதில் அரசு ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட மாணவர்களைப் பற்றி, ஆளும் அரசின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கையில் கத்திகளுடன் போராட்டக்காரர்களை துரத்துவது என்று அத்தனையையும் முக நூலில் பதிவிடுகிறார். அப்போதே அவருக்கு நாள்குறிக்கப்பட்டுவிட்டது.

கடத்தப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு நேரலை பேட்டி அளித்திருக்கிறார் அவர். 'ஷேக் ஹசீனாவின் அரசு மீது மக்கள் முழுமையாக நம்பிக்கையை இழந்து விட்டார்கள். இது சாலை பாதுகாப்புக்கான போராட்டம் மட்டுமல்ல, அரசின் ஊழல்கள், நிதி முறைகேடுகள், அரசுக்கு அச்சுறுத்தல்கள் அனைத்துக்கும் எதிரான மக்களின் போராட்டம்,' என்று இந்த போராட்டத்தை வர்ணித்திருக்கிறார்.  மேலும் 2013 ல் எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்த நிலையில் வெற்றிபெற்ற அரசு இது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசல்ல என்று விமர்சித் திருக்கிறார்.

 ஆலம் கடத்தப்பட்ட  உடனே அவரின் மனைவி ரஹ்னுமா அகமதுவும், நண்பர்களும் ராம்னா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். காவல் துறை எதுவுமே தெரியாது என்று சாதித்திருக்கிறார்கள். ஆனால் ஆலமின் நண்பரும் தெற்காசிய பகுதிக்கான பாதுகாப்புக்கான பத்திரிகையாளருமான கலீலுக்கு சந்தேகம். ஏனெனில் கலீல் இதே போல் அரசால் ஏற்கெனவே கடத்தப்பட்டவர். தன்னுடைய பத்திரிகை தொடர்புகள் மூலம் விசாரித்தவருக்கு ஆலம் அரசின் புலனாய்வு துறையினரால் கடத்தப்பட்டு அதே ராம்னா காவல் நிலையத்தில்தான் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கிறது. அவரை விடுவிக்கச் சொல்லி போராட்டங்கள் வலுக்கின்றன. உலகின் பல பகுதிகளிலிருந்தும் கண்டன குரல்கள் எழுகின்றன. இதற்குப் பிறகுதான் காவல்துறை ஆலம் அவர்களுடைய விசாரணையில் இருப்பதாக ஒப்புக் கொள்கிறது.

ஆலமை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது அவரால் நடக்க முடியவில்லை. காப்பிடப்பட்ட கைகளுடன் இரண்டு காவலர்கள் துணையுடன் அழைத்து வரப்படுபவர் பேச முயற்சிக்கையில் காவலர்கள் வாயைப் பொத்தி தடுக்கிறார்கள். அதையும் மீறி அடித்து துன்புறுத்தப்பட்டதையும், அழைத்து வருவதற்கு முன்னதாக ரத்தம் தோய்ந்த உடையின் ரத்தக் கறையை கழுவி அழைத்து வந்ததையும் தெரிவிக்கிறார்.

 ஆலம் கைதை எதிர்த்துப் போராடியவர்கள் மீது அடக்குமுறையை ஏவியதுடன் அச்சத்தையும் விதைத்திருக்கிறது அரசாங்கம். கறுப்பு நிற வேன் போராட்டக்காரர்களை கண்காணித்தபடியே சுற்றி சுற்றி வரும். போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களை அச்சுறுத்தும் விதமாக குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.' அவர்களுடைய நோக்கம் ஆலமின் கைது மட்டுமல்ல 'அரசுக்கெதிராக குரலை உயர்த்தினால், அதை நசுக்குவோம், ஜாக்கிரதை' என்ற செய்தியை தெரியப்படுத்துவதுதான் என்றிருக்கிறார் பத்திரிகையாளர் கலீல்.

பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜிப் வாஜித் சமூக வலைதளங்களில் ஈடுபாட்டுடன் பங்கேற்பவர். அவர் ஆலம் நீதிமன்ற வாசலில் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார். 'ஆலம் பொய் சொல்கிறார், அதுவுமல்லாமல், நாட்டிற்கெதிரான அயல் நாட்டு சதிகளில் ஆலம் ஈடுபட்டிருக்கிறார்' என்றுகுற்றம் சாட்டி வருகிறார்.  

 கடைசியாக நீதிமன்றம் செப்டம்பர் 20 ல் ஆலமை பிணைக்கைதியாக விடுதலை செய்து விட்டது. பெயில் கிடைத்தும் ஐந்து நாட்கள் கழித்துதான் அவரை விடுதலை செய்திருக்கிறார்கள். ஆனால் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அன்று அவரை  சுற்றிகேமராக்கள்ஒளிர்ந்தவண்ணமிருந்தன. கூடவே ஆலமின் காமிராவும்.

ஜனவரி, 2019.