யுவன் சந்திரசேகர்
கட்டுரை

கழைக்கூத்தின் முதல் கரணம்!

குள்ளச் சித்தன் சரித்திரம்

யுவன்சந்திர சேகர்

மாற்று மெய்ம்மை' என்ற சொற்றொடர் எனக்கு அறிமுகமானது 1980களின் கடைசியில் - கோவில்பட்டியில் தேவதச்சனிடம் சென்று சேர்ந்த பிறகுதான்.

ஆனால், அது அனுபவபூர்வமான புதிராக எனக்குள் ஊன்றிக்கொண்டது அதற்கு சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்பே & என் தகப்பனாரின் மரணத்தையொட்டி. ஆறுமாதத்துக்குள் அவர் இறந்துவிடுவார் என்பதை இரண்டு வெவ்வேறு ஊர் ஜோசியர்கள், ஒரு சாமியாடி, அதிகாலையில் வந்து பீதி கிளப்பிவிட்டு, வெயில் ஏறியபிறகு வந்து என் அம்மாவிடம் விளக்கிச் சொல்லி அரிசியும் பணமும் வாங்கிக்கொண்டுபோன குடுகுடுப்பை என்று நாலைந்துபேர் கண்டு சொல்லியிருந்தார்கள்.

அப்பா இறந்ததற்குப் பிறகு பெரியவர்கள் பேசிக் கொள்ளும்போது மேற்சொன்ன ஆரூடப் பட்டியல் தவறாமல் இடம்பெறும். சிறுவனான எனக்கு எதுவுமே புரியாது; ஆனால், மேற்சொன்ன புதிர் தானாய் எனக்குள் புகுந்து அமர்ந்துகொண்டது.

தேர்ந்த மருத்துவர்கள்கூட அறியமுடியாத ஒன்றை மேற்சொன்ன நபர்கள் எப்படி அறிந்தார்கள்; மகோதரத்தின் முதல் அறிகுறி தெரிவதற்கு முன்பே அப்பாவின் மரணத்தை அவர்களால் எப்படி முன்கூற முடிந்தது என்பதெல்லாம் வாலிப வயதில் என்னைக் குடையத் தொடங்கின.

தேவதச்சனின் சுட்டுவிரலைப் பிடித்துக்கொண்டு, நவீன இலக்கியத்தின் ஆழங்களுக்குள் பாய முற்பட்ட காலகட்டத்தில், அலெக்ஸிஸ் காரெல் என்ற நோபல் பரிசாளரின் Man the Unknown என்ற புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தை மொழிபெயர்க்க வாய்த்தது. உள்முகக் காலம் (Inwart Time) என்ற கட்டுரை. காலம் என்பது ஒரு தனித்துவம் வாய்ந்த பிரத்தியேக அனுபவம்; மொழியின் புலம் அதைப் பொது அனுபவம்போலத் தோன்றச் செய்கிறது; புலன்களின் வழி அறியக் கிடைப்பது மட்டுமே அறுதியான பேரண்டமல்ல என்றெல்லாம் விளக்கிச் சொன்ன கட்டுரை அது. தமிழ் நவீன இலக்கியத்தில் ‘காலம்' என்ற சொல் பெரும்பாலும் ‘நேரம்' என்ற குறுகிய பொருளிலேயே பயன்பட்டு வந்திருக்கிறது என்றும் அறிய வைத்தது.

சிகரமாக, என் நெருங்கிய நண்பன் தண்டபாணியின் மனைவிக்கு உடல்நலம் படுமோசமாகச் சீர்கெட்டு ஆங்கில மருத்துவமும், மாற்று மருத்துவ முறைகளும் முற்றாகக் கைவிட்ட காலகட்டத்தில், தானாக முன்வந்து பொறுப்பேற்றுக் கொண்ட புலம், தான் நிகழ்த்திய மாயங்களின் பகுதியாகவே அவளைக் குணப்படுத்திய விந்தையும் சேர்ந்துகொண்டது.

இதுதான்,‘குள்ளச் சித்தன் சரித்திரம்' நாவலை எழுத என்னைத் தூண்டிய பின்புலம். முதல் நாவல் என்பதால், அபரிமிதமான உற்சாகமும், ஆர்வமும் என்னைச் செலுத்தின. முன்பே சுமார் பத்து வருடங்கள் கவிதை மட்டுமே எழுதி, மொழியின் அந்தரங்கத்தை அறிய முயன்றுவந்தவன்; வழக்கமான அளவைவிடச் சற்று அதிக நீளமான, ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளைக் கோத்துக் கதைசொல்லும் பாணியைச் செயல்படுத்த முனைந்த ஒரு சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவன் என்பதால், நாவல் எழுதும் அனுபவம் பெரிய சவால் எதையும் எனக்குத் தந்த ஞாபகமில்லை.

மாறாக, காட்சிகளாக எனக்குள் விரிந்தவற்றை வார்த்தைகளாக, வாக்கியங்களாக உருமாற்றும் சுவாரசியம் என்னை வெகுவாக ஆட்கொண்டிருந்தது. சிறுகதைகளைப் பொருத்தவரை, முதல் தொகுப்பை எழுதுவதற்கு என் கடந்தகால வாழ்வனுபவங்கள், அவை தொடர்பான ஞாபகங்கள் பெருமளவில் உதவின என்றால், இந்த நாவலை எழுதுவதற்கு ஞாபகங்கள் கொஞ்சமும் பயன்படவில்லை என்றே சொல்வேன். பதிலாக, விநோதமான புனைவெழுச்சி என்னை ஆக்கிரமித்தது.

அநாதிகாலமாக நிலவும் வேறொரு அனுபவ முறை, அதன் விசித்திரமான தர்க்கங்கள், பருவுலகத்தின் நிபந்தனைகளை அது சர்வசாதாரணமாக உதாசீனம் செய்வது என்று ஒவ்வொரு அம்சமுமே வசீகரமாய்த் தென்படத் தொடங்கின. காலமும் வெளியும் மொழிரீதியாகவும் அனுபவ ரீதியாகவும் முன்னரே விவரிக்கப்பட்டதன் பிரகாரம் திகழ்பவை அல்லவோ என்ற ஐயம் என்னை உந்திச் சென்றது.

தொழில்மயமான நவீன உலகம், தனது அறிவியல் ஆய்வுகளின் வழியே நிறுவிக் காட்டும் நடைமுறை உலகம் உள்ளீடற்றதாகவும், ஒன்றின்மேல் ஒன்றாகப் படிந்த ஏகப்பட்ட இழைகளால் ஆனதாகவும் புலப்பட ஆரம்பித்தது. காலம், வெளி என்ற அம்சங்களை ஆராய்ந்தறியும் அருகதை, இரண்டே புலங்களுக்குத்தாம் இருக்கிறது என்றே நம்பத் தொடங்கினேன். இதில், அறிவியல் கைக்கொள்ளும் உபகரணங்களுக்கு மாற்றாக வேறு கருவிகளை, முறைமைகளைப் பயன்படுத்துகிற, மதாசாரம் தவிர்த்த ‘ஆன்மிகம்' என்ற புலமும் சம அளவில் வலுவுள்ளதாகவே தென்பட்டது.

அறிவியலின் புனைவுகள் தர்க்கபூர்வ அடிப்படையுள்ள பொது அனுபவமாக வடிவம் கொள்ளும்போது, மாற்றுப் புலத்தின் புனைவுகள் அந்தந்தத் தனிமனிதரின் அனுபவமாகவே முற்றுப் பெறுவதையும்; அதை வழிமொழியும் புறக்காரணிகள், அநேகமாக, அறவே இல்லாமல் போவதையும்; ஆன்மிகப் புனைவுகளின் வசீகரம் அறிவியல் புனைவுகளுக்குக் கொஞ்சமும் சளைத்தவை அல்ல என்பதையும் அறியத்தந்தது குள்ளச் சித்தனுடன் நான் மேற்கொண்ட மானசீகப் பயணம்.

நாவலின் முதல் பதிப்பைப் பிரசுரித்த நண்பர் வசந்தகுமார், நேர்ப்பேச்சில் சொன்னார்:

சேகர், இந்த நாவல் பேசுகிற ஒரு விஷயத்துடனும் ஒப்ப மாட்டேன். ஆனால், இதன் இலக்கிய மதிப்பைப் பற்றிக் கொஞ்சமும் சந்தேகமில்லை எனக்கு.

இன்றுவரை நானும் அப்படியே எண்ணுகிறேன் & புனைகதை என்ற வடிவத்தின் பிரதான அக்கறை, கருத்தாக்கங்களை உருவாக்குவதும், முன்னரே நிறுவப்பட்ட கருத்தாக்கங்களை வழிமொழிவதும் மட்டுமே அல்ல. நூதனமான அனுபவங்களை உருவாக்க முயல்வதும், அவற்றைப் பரிசீலிப்பதும்கூட இலக்கியத்தின் பணிதான்.

வெளிவந்த சமயத்தில் பரபரப்பான வரவேற்பை அடையாவிட்டாலும், இத்தனை ஆண்டுகள் கழித்தும் தனக்கான கவனத்தை இந்த நாவல் அடைந்தபடியே இருப்பது எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. ஓர் எழுத்தாளனாக நான் எந்தக் காலகட்டத்தின் அரசியல் சரித்தன்மைக்கும் கட்டுப்பட்டவன் அல்ல என்ற எனது சுதந்திர உணர்வைப் பதிவுசெய்யக் கிடைத்த சந்தர்ப்பமாகவே 'குள்ளச் சித்தன் சரித்திரத்'தைக் கருதுகிறேன்.

ஒருவேளை, இத்தனை கால எழுத்தனு-பவத்துக்குப் பிறகு அந்த நாவலை எழுத முற்பட்டிருந்தால், அதன் தற்போதைய வடிவத்தில் இருக்கும்  சாகசமும், கிளர்ச்சியும் வசப்பட்டிருக்காதோ என்றுகூடத் தோன்றுகிறது. தவிர, ஒவ்வொரு நாவலுமே எழுதும் மனத்துக்கு ஒரு புதுப்பிறவியை அளிக்க வல்லது என்றும்தான்!

எனது பல பிறவிகளுக்கு முன்னால் எழுதப்பட்டது என நான் இப்போது உணரும் 'குள்ளச் சித்தன் சரித்திரம்' என் முதல் நாவலாக அமைந்தது வெறும் தற்செயல் என்று படவில்லை!

ஜனவரி 2022