கட்டுரை

அயல்தேசத்து மனிதர்கள்

செல்வன்

தன் முதல் நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார் பவா செல்லத்துரை. திருவண்ணாமலை நகரில் ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்டு வருகிற வெளிநாட்டுவாசிகளைப் பற்றிய நாவல் இது.

‘‘புதுச்சேரிக்கு அடுத்தபடியாக திருவண்ணாமலையில் மேலை நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் இருக்கிறார்கள். கொஞ்சபேர் நிரந்தரமாக வசிக்கிறார்கள். கொஞ்சபேர் அவ்வப்போது வந்துபோகிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஊருக்குப் போய் காசு சேர்ந்தவுடன் திரும்பவும் திருவண்ணாமலைக்கு வருவார்கள். இவர்களுக்கென்று ஒரு தனி உலகம் இருக்கிறது. உள்ளூரிலிருந்து தனித்து இயங்கும் இவர்களுக்கென்று தனி உறவுகள், தனி வாழ்க்கை முறை உள்ளது. ஆசிரமம், கிரிவலம், மலை என்று அவர்களுடையது தனி உலகம். திருவண்ணாமலையைச் சுற்றி இருக்கும் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் சிலர் இவர்களுடன் இணைந்து வாழ்வார்கள். ஆண்களில் சிலருக்கு இதில் உள்ள பெண்களுடன் உறவு ஏற்பட்டிருக்கும். சமீபத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் விபத்தில் மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு அவரது மனைவி டென்மார்க்கில் இருந்து இரண்டு குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வந்து சேர்ந்தார். விபத்து நடந்தபோது அவரது ஆட்டோவில் இன்னொரு டென்மார்க் பெண்ணும் பயணம் செய்துகொண்டிருந்தார்.

இவர்களில் பெரும் கலைஞர்கள், ஓவியர்கள், புகைப்படக்காரர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவரவர்கள் அமைதியாக, எழுத, படிக்க என்று வாழ்கிறார்கள். எப்போதாவது அவர்களிடையே குற்றச்சம்பவங்களும் நடக்கின்றன. மரங்கள் நடுவது, ரமணாஸ்ரமம் செல்வது, விலங்குகளுக்குத் தண்ணீர் வைப்பது என்று நிகழும் இவர்களின் வாழ்வைப் பற்றிய நாவலொன்றை எழுதிவிடவேண்டும் என இருபது ஆண்டுகளாக சிந்தனையில் அடைகாத்து வருகிறேன். இப்போது அதற்கான மனநிலை வாய்த்து எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் எழுதி முடிவிட ஆசைப்படுகிறேன்,'' என்கிற பவா செல்லதுரை அதிகம் சிறுகதைகளும் கட்டுரைகளுமே எழுதி இருக்கிறார். பவாவின் முதல் எழுத்து ஒரு நாவலாகத்தான் அச்சில் வெளியானது. உறவுகள் பேசுகின்றன என்பது அதன் பெயர்! அது அவர் பத்தாம் வகுப்பு விடுமுறையில் இருந்தபோது எழுதியதாம். ஆனால் அவர் தற்போது எழுதிக்கொண்டிருப்பதையே தன் முதல்நாவலாக முன் வைக்க விரும்புகிறார். “‘‘ஏதோ ஒரு இடத்தில் திருவண்ணாமலையைச் சுற்றி இருக்கும் கிராமங்கள் இவர்களின் வாழ்வில் குறுக்கிட்டு தொடர்புகொள்கின்றன. இந்தத் தொடர்பை நாவலில் ஆராய்கிறேன்'' என்கிறார் பவா.

பவா செல்லத்துரை எழுதிக்கொண்டிருக்கும் பெயரிடப்படாத நாவலில் இருந்து ஒரு சிறுபகுதி அந்திமழை வாசகர்களுக்காக.

மரியம்

ரெபேக்காள் மரியத்தின் சாவினால் சூழப்பட்டிருந்தோம். மரணத்தின் நிமித்தம் நிகழும் கூடுகை மௌனத்தால் மட்டுமே நிரம்பியது என்பது ஏற்கனவே உணர்ந்த ஒன்றுதான். அதுவும் மரியம் மாதிரியான ஒரு பேரழகியின் இருபத்தைந்து கூட முந்தாத மரணம் எவரின் பேச்சையும் உறிஞ்சிவிடக் கூடியதுதான்.

கடந்த இருபது நாட்களாய் ரமணாஸ்ரமம் பகுதியில் வசித்த, வந்து போன எவரையும் வேறெதுவும் செய்யவிடாமல் கிறங்கடித்தவள் மரியம். அவளுக்கான உடல்வாகே அநாவசியமான ஒன்றாக இயல்பிலேயே அமைந்திருந்தது.

யாரையும் அதிலும் ஆண்களை உதாசீனப்படுத்தும் மனம் அவளிடம் துளியேனும் இல்லை. ஆனால் எந்த ஆணும் சமீபித்துவிடமுடியாததொரு உடல்.  ‘பொருட்படுத்தாமை' என்ற வாசகம் பதிந்த அவள் மார்புகளின் திரட்சி யாரையும் ஒரு நிமிடமேனும் கவனம் குவிப்பவையும், சட்டென விலகவைப்பவையும்தான்.

ரெபேக்காள் மரியத்தின் மேலிருந்து பரவிய சுகந்தமானதொரு நறுமணம் அவள் போன பாதையெங்கும் சிந்தியிருந்தது. சமுத்திர ஏரி கரையெங்கும் பூத்திருந்த ஆவாரம் பூக்கள் மட்டுமே இந்நிலப் பரப்பில் அவளை அதிசயிக்க வைத்தவை.

உலகமெங்கும் உற்பத்தியான எல்லா கடிகாரங்களையும் அவள் வெறுத்தாள். அவளுடைய பொழுதுகள் அவளுக்கானவை மட்டுமே. எதன் பொருட்டும் மனிதர்களோ, கடிகாரமோ, பருவமோ எவரும் அவளைத் தங்களுக்குள் அமிழ்த்திவிடலாகாது. அப்படி எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்விலேயே  முடிந்தன.

தினம் தினம் புதிது புதிதாய் ரெட் ஒயின் நிரப்பபட்ட கண்ணாடி குடுவைகளும், தீயினால் சுடப்பட்ட முழுக்கோழியும், கூட ஆவராம் பூக்களாய் அலங்கரிக்க பட்டிருக்கும் இரவுகள் அவை.

மிதமான போதையில் அவள் தன் டைரி வாசகங்களை ஒரு இசைப்பாடல் மாதிரி எங்களுக்கு இசைத்திருக்கிறாள். பொறாமைக் கொள்ளும் மனங்களைப் பார்த்து உள்ளுக்குள் சில்லிட்டுக் கொள்வாள் போலும்.

மரணபரியந்தம் நான் உன்னுடனே இருப்பேன் என ஸ்வீடிஷ் மொழியில் எழுதப்பட்ட வார்த்தைகளை அவளை மனதுக்குள்ளேயே மொழிபெயர்த்து எங்களுக்கு அர்ப்பணித்த நள்ளிரவில் நான் துணிந்து அவள் கைகளை பற்றியிழுத்து கைகளில் முத்தம் தந்தேன்.

அந்த பேரழகியை முழுவதுமாய் அங்கீகரித்த என் சகோதரனுக்கான பிரியம் நிறைந்த முத்தம் அவை என என்னைச் சுற்றியிருந்தவர்கள் நினைத்திருக்கக்கூடும். உள்ளுக்குள் வெந்து தணிந்த சாம்பல் மேடுகள் முத்தங்கள் வழியே வெளியேறுகின்றன என்பதை நான் மட்டுமே உணர்ந்ததாய் நம்பிக் கொண்டிருந்தேன்.

ஒரு வேளை மரியத்தின் கை உஷ்ணமும் அதையே உணர்த்தியிருக்கக்கூடும்.

ஆஸ்ரம வழியில் மலையேறும் பாதையில் விருப்பாட்சி குகைக்கும் சற்று கீழே இரு கரும்பாறை இடுக்கொன்றில் கிடத்தப்பட்ருந்த மரியத்தின் உடலைப்பார்த்து கேவிக்கொண்டு கீழிறங்கி ஓடிவந்த ஒரு ஆடு மேய்த்த இடைப்பையனின் அதுவரை யாரும் கேட்டிராத ஒரு விநோதமான ஒலியே தரையிலிருந்து மனிதர்களை மலை நோக்கி உந்தியது.

அப்போது இறுகிய மௌனம் இன்னும் உடைந்தபாடில்லை. கவர்மெண்ட் ஆஸ்பிட்டல், டவுன் போலீஸ் ஸ்டேஷன், மார்ச்சுவரி, நள்ளிரவு, தொலைபேசிகளின் இரகசிய விசாரிப்புகள், காம்பௌண்ட் சுவரோர இருளில் துக்கம் மறக்கவென விழுங்கிய மிடறுகள், புதிது புதிதாய் எழுந்த கேள்விகள், விசாரிப்புகள்,

விசாணைகள், சர்வதே விதிகள், மீறல்கள், பூட்டி கிடந்த அவள் அறை அந்த டைரி.

தேசம் தாண்டிய ஒரு மரணம் நிச்சயம் துர்மரணம், அதுவும் நேற்று காலைவரை தன் சுகந்தத்தை வழியெல்லாம் சிந்திக்கொண்டே ஆவாரம் பூக்களை நோக்கிப்போன ரேபேக்காள் மரியத்தின் பாதை இடுக்கிலான உயிர்விடல் இன்னும் துர்பாக்கியம் நிறைந்தது. மூடிய கைகளில் கொத்தாக அவள் இறுக்கிப் பிடித்திருந்த ஆவாரம் பூங்கொத்துகளை அந்த டவுன் ஸ்டேஷன் கான்ஸ்டேபிள்தான் வலுகொண்டிழுத்தான்.

சுற்றிலும் நாற்றமடித்த அந்த மின் மயானத்தின் வராண்டாவில் அவள் வெறுந்தரையில் கிடத்தப் பட்டிருந்தாள். கைகளின் இறுக்கம் தளர்த்தப்பட்டு விரித்து வைக்கப்பட்டிருந்தது. ஏதேதோ சம்பிரதாய படிவங்களில் நாங்கள் கையெழுத்திட்டோம். ஒயின் அருந்தி பாதி கிறக்கமேறிய மயக்கத்தில் படுத்திருப்பது மாதிரி மரியம் படுத்திருந்தாள்.

அச்சமும், துயரமும் கலந்த முகங்கள் எங்களை எவருக்கேனும் காட்டிக் கொடுத்துவிடுமோ என்ற கலக்கம் எங்கள் ஒவ்வொருவருக்குமிருந்தது.

சிறு இசையும், அலங்கரிக்கப்பட்ட ஆவாரம் பூக்களும் ஒயின் நிறப்பட்ட அழகிய கண்ணாடி குவைளை களும் நிரம்பியிருந்த எங்கள் பத்திருபது நாள் இரவுகள் இப்போது பயமுறுத்தியது.

மரியத்தின் முகத்திலிருந்து பக்கவாட்டில் கசிந்த சிறு புன்னகையோடு அவள் ஒரு ஸ்ட்ரெச்சருக்கு மாறிக் கொண்டாள். அவள் அணிந்திருந்த அடர் சிகப்பு பனியனில் ‘‘ஆதூஞு'' வாசகத்தை கவனித்தேன். இப்போது நீ எங்களைப் பார்த்து கையசைக்க வேண்டும் மரி.

அந்த டைரியை பிரித்து டிசம்பர் 31- ல் அப்பையன் கையெழுத்தில் எழுதிய ‘‘மரணபரியந்தம் நான் உன்னோடேயிருப்பேன்'' என்ற வார்த்தைகளை ரெட் ஒயின் நனைந்த உன் உதடுகளாய் உச்சரிக்கவேண்டும் மரி.

சடாரென எழுந்த ஒரு சப்தத்தினூடே மரியைச் சுமந்த அந்த ஸ்ட்ரெச்சர் உள்ளிழுத்துக் கொண்டது.

ஜூன், 2018.