1.சிங்காரம் தாத்தா
1963. இடது காலில் முறிவு ஏற்பட்டு சரியான சிகிச்சை இல்லாமல் தாத்தா மலேசியாவில் தனது 39 ஆவது வயதில் இறந்து போனார். தஞ்சையில் இருந்து 32 கிலோமீட்டர் தூரம் உள்ள எங்கள் கிராமம் வன்னிப்பட்டுக்கு அவர் இறந்த தகவல் வந்து சேர்வதற்கு 15 நாட்கள் ஆனது. மூன்று பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள், அப்பாயிக்கு 35 வயது மலேசியாவில் தன் கையாலேயே தாத்தாவை அடக்கம் செய்ததாக மாணிக்கம் தாத்தா வந்து சொல்லுகிற வரையில், அப்பாயி பனை மரத்தடி முனிக்கோவிலில் விரல்களால் ஒத்தைப்படை இரட்டைப்படையில் கோடு போட்டுக் கணக்குப் போட்டு பார்த்து சில நாட்கள் தாத்தா உயிரோடு இருக்கிறார் என்று சந்தோஷமாகவும் ,சில நாட்கள் அவர் இறந்து விட்டார் என்று சோகமாகவும் வீடு திரும்புவாராம் .மீன் குழம்பு சமைத்து சாப்பிட தயாராகிக் கொண்டிருந்த ஒரு மத்தியான நேரத்தில் உச்சி வெயிலோடு சேர்த்து தாத்தாவின் மரணச் செய்தியையும் கொண்டு வந்தார்கள் அப்பாயின் அக்கா வழி சொந்தங்கள். அன்று என் அப்பாவின் வீட்டினுள் நுழைந்த பசி பெரிய அத்தை வேலைக்குச் செல்வது வரை அங்கேயே தங்கியிருந்தது. தாத்தாவின் மரணம் அன்று முதல் அக்குடும்பத்தின் பசியாக மாறிப்போனது.
தரணியும் நானும் ப்ரதரை சிங்காரம் என்று தான் அழைப்போம்
2.வனரோசா அக்கா
அப்பாயிக்கு எத்தனைப் பிள்ளைகள் எத்தனைப் பேரன்கள் பேத்திகள் என்று விளையாட்டாகக் கணக்குப் போட்டோம் . தன்னுடைய முதல் பேத்தியான வன ரோசா இறந்தபோது. ”ஐயோ கணக்கு போட்டீங்களே கணக்கு போட்டீங்களே” என்று மாரடித்து அழுதார் அப்பாயி. அப்பாயி இறந்தபோது “என்னப்பா பேர புள்ளைங்க இப்படி அழுது கதறுதுங்க” என்றும் “அந்த அம்மாவுக்கு ஒரு நெய் பந்தம் குறைஞ்சு போச்சே” என்றும் ஊரில் பேசிக் கொண்டார்கள். அப்பாயியின் இறப்பில் வனரோசா அக்காவுக்கு இன்னும் ஒரு முறை வார்த்தைகளால் நெய் பந்தம் பிடிக்கப்பட்டது. தன் கணவர் வீடு மதிப்புடன் இருக்க வேண்டும் என்று வனரோசா அக்கா 25வது வயதில் வாழாமலும், தன் 5 பிள்ளைகளைக் கரைச் சேர்க்க வேண்டும் என்று அப்பாயி தனது 70வது வயதில் வாழ்ந்து முடித்தும் இறந்து போனார்கள் . மரணம் இங்கு வைராக்கியமாக மாறியிருந்தது.
‘முதற்கனவு’ பிரதர் எழுதுன முதல் ஸ்க்ரிப்ட் அதில் அரசஇலையைப் பறித்து தைத்து, விற்று தன் பேரனைப் படிக்க வைக்கும் பாட்டி ஒருவர் இருப்பார்.
3.மாதவ் அம்மா
மாதவ் பொதுவாக எதற்கும் கலங்க மாட்டார். அவரின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் கேட்டு பிரிட்டனில் இருந்து வருகிறார். வந்து நினைவிழந்த அம்மாவின் அருகில் 14 நாட்கள் அமர்ந்தே இருக்கிறார்.15 அவது நாள் அம்மா இறந்து போகிறார். மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த பின் அம்மா முன்அறையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். அம்மாவின் சொந்தங்களும் நண்பர்களும் மாதவுக்கு ஆறுதல் சொல்ல வருகின்றனர் அதில் ஒருவர் அம்மாவின் இளம்பிராயத்துத் தோழி பம்பாய் மாநகரில் முலுந்த் என்ற இடத்தில் இருவரும் ஒன்றாக விளையாடி இருக்கிறார்கள். திருமணம் ஆனபிறகு பரபரப்பான மும்பையிலிருந்து சென்னையின் அமைதியான பகுதியான நங்கநல்லூருக்கு வந்து இருக்கிறார் அம்மா. “you know ur mother jeyanthi was a very creative girl” உங்களுக்கு எல்லாம் தெரியுமோ தெரியாதோ அங்க பாருங்க இன்சுலின் பாட்டில்ஸ எப்டி எல்லாம் ஸ்ட்ரக்சர்ஸா செஞ்சு இருக்கா”என்று அலமாரியை சுட்டிக் காட்டினார். மாதவ், அவரின் அப்பா, அவரின் அண்ணன் அனைவரும் ஒரு சேர அந்த கண்ணாடி அலமாரியைப் பார்த்தனர் ஜெயந்தி அம்மா கண்ணாடி கூடுகளாய் அந்த வீட்டில் இன்னும் சில காலங்கள் இருக்க போகிறார். கடற்கரையில் அம்மாவைக் கரைத்து விட்டு “நான் பொதுவாக அப்பா அண்ணனுக்கு போன் பண்றது இல்ல எதுவாக இருந்தாலும் அம்மா தான். சண்டே விடிஞ்சதுமே அம்மாவுக்கு போன் பண்ணி விசாரிப்பேன் இனிமே யாருக்கு நான் phone பண்றது? இந்தியாவோடு எனக்கு இருந்த ஒரே தொடர்பு இன்னையோடு முடிஞ்சுருச்சு” என்று அழுதுக்கொண்டே சொன்னார். பெரும்பாலும் அம்மாக்கள் தான் நம் குடும்பங்களின் உறவுக்கொடிகள். அம்மா இல்லாமல் போனால் அங்கு பேச்சு அறுந்து, அந்நியோன்யம் அறுந்து, கடைசியில் உறவும் அறுந்துப் போகிறது. மரணம் உறவுகளின் தொடர்புக் கொடிகளை அறுக்கத் தொடங்கி இருந்தது.
“மரணம் மலரோடு சேர்த்து மரணித்தவரின் நினைவுகளையும் வாசமாய் பரவவிடுகிறது” – பிரதர் எழுதிய கவிதை
4.மகேஷ் அப்பா அம்மா
மகேஷ் சோகமாக இருந்து நான் பார்த்ததே இல்லை அவன் எங்கு இருந்தாலும் சிரிப்புதான், சிரிப்பான் ,சிரிக்க வைப்பான். கிண்டல் பண்றதுன்னா எங்க செட்ல அவன் தான் ஹிட் மேன். எல்லாரையும் கலாய்த்து ஓட விடுவான். தன்னை கலாய்த்த க்ளாஸ்மெட்டுகளை திருப்பி கலாய்க்க முட்டைப் பப்ஸ் வாங்கி கொடுத்து, மகேஷை தனது ரூட் பஸ்சில் நண்பர்கள் எற்றி சென்ற சம்பவங்கள் எல்லாம் உண்டு. தாம்பரம்-நுங்கம்பாக்கம் லோக்கல் ரயில் பயணத்தில் அப்பா அம்மா எங்க இருக்காங்க என்று நான் எதார்த்தமாக ஒரு நாள் அவனிடம் கேட்டேன். “அப்போ +2 படிச்சிட்டு இருந்தேன் அப்பாவுக்கு போலீஸ் வேலையில ரொம்ப ஸ்ட்ரெஸ் மச்சான் மெண்டலா கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருந்தாரு, அம்மாவும் அவர் கூட சேர்ந்து ஸ்ட்ரெஸா இருந்தாங்க ஒரு நாள் நானு, தங்கச்சி, தம்பி மூணு பேரும் ஸ்கூல் விட்டு வந்து பாக்குறோம். அம்மாவும் அப்பாவும். ஃபயர் பண்ணிக்கிட்டு டெத் ஆயிட்டாங்க “ என்று எந்த சலனமும் இல்லாமல் சொல்லிவிட்டு அடுத்த ஸ்டேஷனில் ஏறும் காக்கா கார்த்திக்கை கலாய்க்க தயாராகி விட்டான். அன்று அவனின் முகத்தில் துளி சோகத்தைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை. ஒருமுறை நாங்கள் அனைவரும் மகேஷின் வீட்டிற்குச் சென்று இருந்தோம் பாட்டி மாமா அத்தை அத்தையின் பிள்ளைகள் என்று கூட்டுக் குடும்பமாக அமைந்தகரையில் சிறிய வீட்டில் வாழ்ந்தார்கள் “அம்மா அப்பா நினைப்பு வரமா இருக்க நாங்க நல்லா பாத்துக்குறோம். ,நீங்களும் காலேஜ்ல புள்ளைய பாத்துக்கங்கப்பா” என்று அழுதுகொண்டே சொன்ன பாட்டியையும் மகேஷ் கலாய்த்து சிரிக்க வைத்தான். மகேஷின் விஷயத்தில் மரணம் சிறிது அளவேனும் கருணையோடு நடந்து கொண்டது. அந்த இரண்டு மரணங்களையும் பல உறவுகளாக மாற்றி இருந்தது.
“பாட்டி தாத்தா மாமாக்கள் அத்தைகள் இல்லை என்றால் இவ்வுலகில் எத்தனை குழந்தைகள் அனாதையாய் நிற்கும் தெரியுமா?”-என்பார் பிரதர்
5.நவீன் அப்பா
அப்பாவ பத்தி ஞாபகம் உனக்கு வருமா என்று நவீனிடம் கேட்பேன் “எனக்கு அப்போ 7 வயசு ஒரு ஆண்டீ கத்திக்கிட்டே ஓடி வந்து சொன்னங்க, அஸாம்ல அப்பாக்கு கொள்ளி வச்சது எல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு 24-25 வயசு ஆகும்போது அத பத்தி நெனச்சு பாத்துருக்கேன் இப்போ கடந்துட்டேன். அப்பா இல்லாத வருத்தம் தெரியாம என்னையும் தங்கச்சியையும் அம்மா வளத்துட்டாங்க“ என்றான். அப்பா பத்தி என்ன எல்லாம் தெரியும் சொல்லு என்றேன் “பெருசா தெரியலடா ஆன சொந்தக்காரங்க எல்லாம் சொல்றது வச்சு பாத்தா I am more like him ன்னு தோணுது ”.என்றான். நவீன் அப்பா இராணுவத்தில் விமானப் படைப் பிரிவில் பொறியாளராக பணிபுரிந்தார். 1993 இல் நடந்த ஒரு விமான விபத்தில் தனது சக இராணுவ வீரர்கள் 13 பேரோடு அவரும் உயிரிழந்தார் .அம்மாதான் நவீனுக்கு எல்லாம் நன்றாக படித்தான், அமெரிக்காவில் மாஸ்டர்ஸ், கனடாவில் பெரிய நிறுவனம் ஒன்றில் மேனேஜர். வாசிப்பவன், சாதி மறுப்புத் திருமணம், அழகிய சிறிய குடும்பம். அறிவாகவும் பொருளாகவும் செட்டில் ஆனவன் .இவை அனைத்திற்கும் நிதானமான நவீனின் அம்மா தான் காரணம் என்பேன். விவரம் தெரிந்த பிறகு அப்பாவின் விபத்தைப் பற்றி தகவல் சேகரிக்க முயற்சி செய்து இருக்கிறான் நவீன். ஓர் விவரமும் பிடிபடவில்லை.”நோ ப்ரூஃப்ஸ் ஃபௌண்ட்” என்று 13 மரணங்களின் கோப்பையும் மூடியுள்ளார்கள் அந்த விபத்தின் காரணம் இறுதி வரை தெரியப் போவதேயில்லை . மரணம் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாய் இருக்கிறது.
“ஒரு குழந்தைக்குச் சிறு வயதில் கிடைக்கும் மிகப் பெரியப் பரிசு தந்தை அந்த குழந்தைக்கு தரும் பாதுகாப்பு அப்டினு சிக்மண்ட் பிராய்ட் சொல்றாரு மாப்ள…” என்பார் ப்ரதர்.
6.தனி ஒருவர்
தஞ்சையில் ஒருமுறை காரில் சென்று கொண்டு இருந்தேன் வாகன நெருக்கடிக்கு இடையில் என் முன்னே கிறிஸ்தவ அமரர் ஊர்தி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த ஊர்தியில் பயணம் செய்த மரணித்த உடலோடு ஒருவர் மட்டுமே இருந்தார் அழுதுகொண்டே இருந்தார். அவரை தேற்ற ஆறுதல் கூற ஒருவர்கூட அவர் அருகில் இல்லை. உறவுகளற்ற மனிதர்களற்ற மரண ஊர்வலங்கள் வீட்டுக்கும் இடுகாட்டுக்குமான அந்த எளிய தூரத்தை கனம் மிகுந்த பயணமாக மாற்றிவிடுகிறது. அந்த காட்சி மனதில் அப்படியே அப்பி கொண்டு என்னவோ செய்தது. உயிரோடு இருக்கும்போது நாம் சேர்க்கும் பொருளும் புகழும் தான் நம் மரணக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை முடிவு செய்கிறது. மரணம் சுயநலமாய் நடந்துகொள்கிறது.
“குடும்ப உறவுகளைப் பொருள்தான் தீர்மானிக்கிறது”- கார்ல் மார்க்ஸ் இதை எனக்கு விளக்கியதும் பிரதர் தான்.
7.ஆல்ஃபிரடோ(எ) பிரதர்(எ)ஸ்ரீதர் மாம்ஸ்
சினிமா பாரடைசோ படம் பார்த்திருக்கிறீர்களா? அந்த படம் போனின் மூலம் வரும் ஒரு மரண செய்தியில் தொடங்கும். ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் இருந்து 11 மணி அளவில் பிரதர் இறந்துவிட்டார் என்று செங்கல்பட்டில் இருந்த எனக்கு போன் வந்தது. வண்ணங்களை மட்டுமே பார்த்து இரசித்து வரைந்து கொண்டிருந்த பிரதரின் மூளை 11 நாட்கள் இருள் வெளியில் சிக்கி சிதைந்துக் கொண்டிருந்தது. 12 ஆவது நாள் மூளை ஒத்துழைக்காததால் உடல் அங்கங்கள் தனது செயல்பாட்டை நிறுத்தி கொண்டன. செங்கல்பட்டிலிருந்து ஜி.எச் வந்துவிட்டேன் “ஸ்ட்ராங்கா இரு ஸ்ட்ராங்கா இரு இருக்கணும்” என்று மூளை சொல்லிக்கொண்டே இருந்தது. டவர் மூன்றின் முதல் மாடியில் இருக்கும் ஐ.சி.யூ வில் பிரதரைப் பார்க்க நான் எடுத்து வைத்த அடிகள் ஒவ்வொன்றும் நெடும் பாதைகளாய் நீண்டுகொண்டே போயின. பிரதர் பற்றிய அத்தனை நினைவுகளும் முதல் மாடிக்கு செல்லும் 30 படிகளை 3000 படிகளாக மாற்றிக் கொண்டிருந்தன. ப்ரதர் எனக்கு யார்? அண்ணனா ,நண்பனா, மாமாவா சித்தப்பாவா குருவா? என்னை விதைத்து நீரூற்றி வளர்க்க முயன்றவர் என்று மட்டும் புரிகிறது. அழுதுகொண்டே படிகளை ஏறி தாழ்வாரத்தில் நடக்கிறேன். சினிமா பாரடைசோ படத்தில் ஆல்ஃபிரடோ என்பவர் டூட்டோ என்கிற அந்த தந்தையற்ற 5 வயது சிறுவனுக்கு தான் ப்ரொஜக்டர் ஆப்ரேட்டர் ஆக வேலை செய்யும் சினிமா தியேட்டரில், அவனையும் சேர்த்துவிட்டு தனக்கு தெரிந்த அனைத்தையும் சொல்லிக் கொடுப்பார். அவன் பெரியவன் ஆனதும் டூட்டோ தனது எதிர்காலத்தை நோக்கிய பயணத்திற்காக ரயில் நிலையத்தில் தன் குடும்பம் மற்றும் ஆல்ஃபிரடோவோடு நின்று கொண்டு இருப்பான்
ஆல்ஃபிரடோ டூட்டோவிடம் சொல்லுவார் “இந்த ஊருக்கு திரும்பி வராதே,எங்கள் யாருக்கும் கடிதம் போடாதே, புகழ் பெற்ற மனிதனாகிவிடு” என்று அவன் கன்னத்தை வருடி வழி அனுப்புவார். பல ஆண்டுகள் கழித்து மிக பெரிய இயக்குநராகியிருக்கும் டூட்டோ, ஆல்ஃபிரடோ வின் இறப்பு செய்தியறிந்து அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொள்வதற்காக ஊர் திரும்புவான். பிரதருக்கும் எனக்குமான 20 வருட நட்பின் இறுதி ஊர்வலத்தை ஜீ.எச் இன் 30 படிகளை கடப்பதன் மூலம் நான் நிகழ்த்தி கொண்டிருந்தேன். “என் வாழ்வின் ஆல்ஃபிரடோ நீ தான் மாம்ஸ்” என்று என் மூளை கதறி கொண்டே இருந்தது “என்னால் உன்னிடம் வர முடியாது மாம்ஸ், உனக்கு கடிதமும் போட முடியாது மாம்ஸ், என் கன்னங்களையாவது வருடிவிட்டு நீ எங்களிடம் இருந்து விடைபெற்றிருக்கலாம் ஆல்ஃபிரடோ(எ) பிரதர் (எ) ஸ்ரீதர் மாம்ஸ். என் வாழ்வின் அனைத்து படிமங்களிலும் நீ தான் இருக்கிறாய் மாம்ஸ். நான் என்ன செய்தாலும் அனைத்திலும் நீ தான் வியாபித்து இருப்பாய்". தமிழ் சினிமாவைத் தன் படைப்புகளால் புரட்டிப் போடவேண்டும் என்கிற அவரின் பேரண்ட நம்பிக்கை ஒரு சிகப்பு நிற பூப்போட்ட போர்வையில் அவரோடு மூட்டையானது .அமரர் ஊர்தியின் சில்வர் நிற ஐஸ் பெட்டியில் அவரை உள் அனுப்பி அவரை மூடியபோது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மணிக்கூண்டில் 4 மணி ஆனது. கண்ணீர் நிற்காமல் ஊற்றிகொண்டே இருந்த்து, பிரதருக்கு மிகவும் பிடித்த படமான ‘உதிரிபூக்கள்’ படத்தின் டைட்டில் சாங்கை மனம் முணுமுணுத்துக் கொண்டே இருந்தது…
“ஏ…இந்த பூங்காற்று தாலாட்ட சின்ன பூவோட நீராட ராகம் எழுப்பும் காத்து ஒரு தாளம் முடிக்கும் சேத்து…” அன்றொருநாள் ஸ்ட்ரோக் வந்து ஹாஸ்பிடலில் அவரை அட்மிட் செய்த போது,பீபி 200 ஐத் தொட்டு இருந்தது. ராமச்சந்திரா மருத்துவமனையின் எமர்ஜென்ஸி வார்டில் இருந்தார், நோய் வந்தவர் போல் அல்லாமல் சாதாரணமாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். “மாப்ள டாக்டர் வர்றதுக்கு 1 மணி நேரம் ஆகும் போல இருக்கு…அதுக்குள்ள ஒரு லைன் சொல்லவா “என்றார். எப்பொழுதும் சினிமாவுக்கான கதைகளை யோசித்து இயக்குநராக வேண்டும் என்று பெருங்கனவைக் கொண்டிருந்தார் பிரதர். மரணம் அவரின் கதைள் அனைத்தையும் முற்றுப் பெறாத கதைகளாக மாற்றியிருந்தது.
மயானத்தில் மழை பெய்துகொண்டே இருக்கிறது…
மரணம் மழையைப் போன்றது.. மழை நாம் நிற்கும் இடத்தைப் பொருத்தும் நாம் பார்க்கும் பார்வையைப் பொருத்தும் நம் மனநிலையயைப் பொருத்தும் வேறுவேறு உருவம் கொள்ளும் சில நேரங்களில் சாரலாய், அடைமழையாய், உயிர்களை உருவாக்கும் ஜீவஊற்றாய் சில நேரங்களில் காடுகளைக் கவிழ்த்துப் போடும் பேரலையாய் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உருவெடுக்கும். மரணம் இவ்வனைத்தையும் நமக்கு நிகழ்த்தி விடுகிறது, சில நேரத்தில் தகவலாய் நம்மை கடந்துச் செல்கிறது, சில நேரத்தில் அடிஆழத்தில் தேங்கிக் கிடக்கும் உணர்ச்சியை நம்மில் அவிழ்த்துவிடுகிறது. சில நேரங்களில் தத்துவமாகவும் ,பழிவாங்கும் உணர்ச்சியாகவும் நம்முள் சூல்கொள்கிறது, ஆம், மரணம் மழையைப் போன்றதுதான்!