கட்டுரை

50 இலக்கிய நாவல்கள்

தமிழ் நாவல்களில் முக்கியமான ஐம்பதைத் தெரிவு செய்து வெளியிட்டு உள்ளோம். இதுதான் ‘டாப் 50' என்றும் கறாராகச் சொல்வதற்கில்லை. ஆனால் தமிழ் இலக்கிய வாசகனொருவன் கண்டிப்பாக வாசித்திருக்கவேண்டியவை.

Staff Writer

1. இடைவெளி - சம்பத் இடைவெளி நாவல், தத்துவத்தின் கேள்வியை எதிரொலிக்கிறது. மரணம் என்பது இன்மைதானே. இன்மையை நாம் எப்போதெல்லாம் உணர்கிறோம் என்பதை அந்த நாவல் சுட்டிக்காட்டுகிறது. மரணம் என்பது ஒரு நிகழ்வு என்று நினைக்கிறோம். ஆனால் மரணம் குறித்த நமது புரிதல்கள் மொழியால் உருவாக்கப்பட்டவையே. சம்பத் காமத்தை மரணத்துடன் ஒப்பிடுகிறார். பாலுறவின் உச்சம் மரணத்தின் நிமிஷநிலை என அடையாளப்படுத்துகிறார். இடைவெளியின் நாயகன் தினகரன் மரணத்தைப் புரிந்துகொள்ள நினைக்கிறான். மரணம் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என ஆராய்கிறான். இடைவெளியை கண்டு கொள்கிறான். இடைவெளி என்பது அற்புதமான குறியீடு. இரண்டு சொல்லுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை எப்படி புரிந்து கொள்வீர்கள்? ஒரு சொல்லை நினைப்பதற்கும் சொல்வதற்கு இடையிலிருக்கும் இடைவெளியை அளவிட முடியுமா?

-எஸ்.ராமகிருஷ்ணன்

2. புயலிலே ஒரு தோணி - சிங்காரம் சிகரெட் புகை கண்ணில் படர்ந்து உறுத்திற்று. சீச்சீ... மனம் உடல் எல்லாம் கற்பனை. நாமே வகுத்த வேறுபாடு, அடிகாள்! மனதை அடக்கத் தெரியாததால்தானே நீடு வாழாமல் இளமையிலேயே மாண்டு போனீரோ.. அதுவும் அந்தப் பொட்டைக் காட்டில்போய். அதிருக்கட்டும், அண்டகோடி புகழ் காவை வாழும் அகிலாண்ட நாயகி அம்மை உம்மைக் கைவிட்டது ஏன்? மனம் குவியும் தந்திரம் உமக்குக் கைவரவில்லையா? அன்றி, ‘அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையாகிய பிள்ளையுங் கன்னி’ யெனத் திரிவதால் அம்மைக்குப் பிள்ளைப் பாசம் அற்றுவிட்டதா..? ஐந்து ராணுவ லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கடந்து சென்றன. வாயிலிருந்த சிகரெட்டை கையிலெடுத்துப் பார்த்தான். கங்கு மின்னுகிறது. இன்னும் உயிர் போகவில்லை. புகையை இழுத்து ஊதினான். சீச்சீ.. எல்லாம் கதை.

(நாவலிலிருந்து...)

3. விஷ்ணுபுரம் - ஜெயமோகன் சுசு ஆண்டுகளுக்கு முன்பாக எண்ணூறு பக்க அளவில் விஷ்ணுபுரம் வெளியானபோது அதை முழுவதும் படிக்கமுடியாமல் திணறி அதனாலேயே அதைத் திட்டித்தீர்த்த பெருங்கும்பலே உள்ளது. ஆனால் அதன் பெருவடிவம் இன்று பழகிவிட்டிருக்கிறது. காலத்தில் முன்னும் பின்னுமாக நிகழும் மூன்று பகுதிகளைக் கொண்டது விஷ்ணுபுரம். இந்திய தத்துவஞான மரபுகளுக்குள் நடக்கும் பிரமாண்டமான விவாதத்தில் பௌத்தம் பேசும் அஜிதன் வென்று விஷ்ணுபுரத்தைக் கைப்பற்றும் பகுதி சாதாரண வாசகனை கிறுகிறுக்கவும் மலைத்துப்போகவும் வைக்கும். உயர்ந்த கோபுரங்கள் அனைத்தும் ஒரு நாள் உடைந்து சரியும் என்று இந்நாவல்  நிறுவ முயன்றுகொண்டே இருக்கும். காலப்போக்கில் இந்நாவலே இன்று ஓர் உயர்ந்த கோபுரமாக வளர்ந்து நிற்பதுபோல் தோன்றுகிறது.

4. நினைவுப்பாதை- நகுலன் யார் இந்த நடராஜன்? நேற்று வந்தவன். ஒரு சரியான படைப்பு இன்னும் வரவில்லை. அதற்குள் என்ன பாவம்? என்று கேட்பாய். ஆனால் சிவா, எறும்புப் புற்றுக்கு அரிசி போட்டுக்கொண்டு, எறும்பு கடிக்கிறது என்று ஏன் சொல்லவேண்டும்? நாம் இவனிடம் ஏன் வருகிறோம்? இவன் பணக்காரன் என்றா? (பணத்தைப் போல கேவலம் வெறும் பணம் பண்ணுவதைபோல இந்த உலகில் வேறு ஈனமான தொழில் என்ன இருக்கிறது?) அவன் அப்படி நினைக்கலாம். நினைக்கலாம் என்பது கூடத் தவறு. அப்படித்தான் நினைப்பான். அவனிடம் பணம் தாராளமாகவே இருக்கிறது. அதனால் தாராளமாகவே அவனிடம் பலரும் முதுகெலும்பில்லாமல் ஒளிவு மறைவில்லாமலும் மறைவாகவும் பலர் நடந்துகொள்கிறார்கள். இலக்கிய உலகில்தான் என்ன வாழ்ந்தது? ஒரு பெரிய கையின் உதவி இல்லாமல் இங்கும் அப்படி உரிய இடத்துக்கு வரமுடிகிறதா? முடிகிறதா என்பது இல்லை. தெரிந்தவரையில் ஒருவனை கீழே தள்ளிவிட்டு அவன் மீது நடந்தாலொழிய உரிய இடத்துக்குப் போக முடியாத நிலை.

 (நாவலிலிருந்து...)

5. நாளை மற்றுமொரு நாளே - ஜி. நாகராஜன் கந்தன் என்கிற சாமான்ய விளிம்புநிலை மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு நாள் சம்பவங்களே இந்த நாவல். ஜி.நாகராஜன் குறைவாகவே எழுதி இருக்கிறார். ஆனால் அதிலேயே உச்சத்தை எட்டிவிட்டவர்.

6. மோகமுள் - தி.ஜானகிராமன் கடற்கரை ஓரமாக உள்ள ஊரில் வானிலை எதிர்பாராத ஏமாற்றங்களையும் நம்பிக்கைகளையும் கொடுக்கிற வழக்கம். ஆனால் யமுனா எதற்கும் அசையாதவள். அவள் உள்ளத்துள் புகுந்து என்ன இருக்கிறது அங்கு என்று கண்டுபிடிக்கவேண்டும் என்று நானும் எட்டு வருடமாக முயன்று வருகிறேன், முடியவில்லை. அவள் உள்ளத்தில் புகுந்து புரிந்துகொண்டு விட்டோம் என்று நினைக்கும்போது மீண்டும் சுவரில் ஒரு திட்டிவாசல் தெரிகிறது. அங்கே நுழைந்தால் அதுவும் கடைசி இல்லை என்று மீண்டும் ஒருகதவு தென்படுகிறது. மீண்டும் அதில் போனால் மீண்டு ஒரு கதவு. இது இவளிடம்தான் தோன்றுகிறதா? அல்லது எல்லோருக்கும் பொதுவான அனுபவம்தானா? ஒரு மனிதனை இன்னொரு மனிதன் புரிந்துகொள்ள முடியாது என்ற நிலையா இது?

 (நாவலிலிருந்து...)

7. சாயாவனம்-சா.கந்தசாமி ஒரு காட்டின் அழிவை சுருக்கமாக சொல்லும் இந்நாவல் நாற்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. நேரடியான மொழியில் பேசும் இது பேசுபொருளால் பல அழிவுகளைச் சுட்டும் பொதுக் குறியீடாக இருக்கிறது.

8. கோவேறு கழுதைகள் -இமையம் கிராமத்தில் சலவைத்தொழில் செய்யும் ஆரோக்கியம் என்ற பெண்ணின் கதையாக விரியும் இந்நாவல் எழுதப்பட்டு சு5 ஆண்டுகள் ஆன பின்னரும் இமையத்தின் முக்கிய அடையாளமாகத் தொடர்கிறது.

9. வானம் வசப்படும் - பிரபஞ்சன் புதுச்சேரியின் காலனிய வரலாற்றில் ஒரு பகுதியைச் சொல்கிறது. வரலாற்றை சுவாரசியமாக கலைவடிவில் சொல்வதில் பிரபஞ்சன் வெற்றி பெற்றவர். சாகித்ய அகாதமி விருதுபெற்ற நாவல்.

10. தூர்வை- சோ தர்மன் முற்றிலும் வேறுபட்ட ஒரு தலித் வாழ்க்கையைச் சொல்கிறார் சோ.தர்மன். இந்நாவலில். நிலம் வைத்திருக்கும் தலித்களின் வாழ்க்கை.

11. ஜே ஜே சில குறிப்புகள் -     சுந்தர ராமசாமி கவிதைகளைப் படித்து முடித்ததும் ஜே.ஜே. வாய்விட்டுச் சிரித்தான். ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டாள் ஓமனக்குட்டி. அவள் முகம் லேசாகச் சிவந்தது. “பெட்டிக்குள் வைத்துக்கொள்,” என்று சொல்லி கவிதைப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தான். அதன் பின் இருவராலும் சுதந்தரமாகப் பேசிக்கொள்ள முடியவில்லை. இறுக்கத்தைத் தளர்த்த முயன்று வெளிப்படுத்திய ஒன்று இரண்டு வார்த்தைகளும் தலைகுப்புற கவிழ்ந்து, இறுக்கத்தையே வலுப்படுத்தின. ஓமனக்குட்டி உள்ளூர கொதித்துக் கொண்டிருக்கிறாள் என்பது ஜேஜேவுக்குத் தெரிந்துவிட்டது. “நான் ஒன்றும் செய்வதற்கில்லை” என்று ஜேஜே மனதிற்குள் சொல்லிக்கொண்டான். ஈரோடு ஸ்டேஷனை வண்டி நெருங்கிக் கொண்டிருந்ததும், “என் கவிதைகளைப் பற்றி அபிப்ராயம் சொல்லாவிட்டால் பயணம் தொடர்வது சற்று சிரமமாக இருக்கும்,” என்று ஓமனக்குட்டி ஜேஜேயிடம் சொன்னாள். “அந்த கவிதைத் தொகுதியை ஜன்னல் வழியாக வீசி எறிந்துவிடு,” என்றான் ஜேஜே.

 (நாவலிலிருந்து...)

12. எட்டு திக்கும் மத யானை -நாஞ்சில் நாடன் பூலிங்கம் என்ற இளைஞனின் மறுக்கப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் மூலமாக நாஞ்சில்நாடன் நம்முன் சமகால யதார்த்தமொன்றை சு70 பக்கங்களில் பதிவுசெய்திருக்கிறார்.

13. பொய்த்தேவு - கா.நா.சு சோமு என்ற மனிதனில் ஆரம்பித்து நேர்க்கோட்டில் செல்லும் கதை. பு940களில் முதல் பதிப்பு வெளியாகி இருக்கிறது. வாழ்வின் அர்த்தங்களைக் கேள்விக்குள்ளாக்கும் நாவல்.

14. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன் ஹென்றி என்ற இந்நாவலில் வரும் பாத்திரம் பற்றிப் பேசாத வாசகர் யாரும் இருக்க முடியாது. இதில் வரும் மனிதர்கள் மாபெரும் மானுட அறத்தைக் கைக்கொள்கிறவர்கள். தர்மத்தையும் தியாகத்தையும் பேணும் லட்சியவாதிகள்.

15. பள்ளிகொண்டபுரம் - நீல.பத்மநாபன் ஆனால், வாழ்க்கையில் ஞானப்பசியை மட்டுமே யதார்த்தமென்று ஒப்புக்கொண்டுவிட்டுத் தப்பித்துக் கொள்ள முடியுமா? அதைப் போலவே இந்தப் பசியும் ஒரு யதார்த்தம்தானே? அந்த அளவுக்கு இதையும் அங்கீகரிக்காமல் வேறு வழி? இந்தப் பிரச்னையை இன்னும் தீவிரமாக அலசி ஆராய்ந்து ஆலோசிக்க அவர் மூளை கூசியது.

(நாவலிலிருந்து...)

16. நெடுங்குருதி- எஸ். ராமகிருஷ்ணன் வேம்பிலை என்கிற கரிசல்காட்டு கிராமத்தின் வெயில் அடிக்கும் சூழலை எழுத்தில் கொண்டுவந்த நாவல். இன்றும் நெடுங்குருதி என்றாலே அதன் வெயில் முகத்தில் அறைவதாகக் கருதும் வாசகர்கள் இருக்கிறார்கள்.

17. 18வது அட்சக்கோடு- அசோகமித்திரன் அசோகமித்திரன் எழுதியவற்றில் முதலிடத்தில் வைத்துச் சொல்லப்படும் இந்நாவல் இந்திய விடுதலையை ஒட்டி செகந்தராபாத்தில் நடக்கும் பிரச்னைகளை களமாகக் கொண்டு ஆரம்பமாகிறது. அவரது பால்யகால நினைவுகள் மூலம் ஒரு வரலாற்றின் சாட்சியமாகிறார் அ.மி.

18. மலரும் சருகும்- டி.செல்வராஜ் முற்போக்கு எழுத்தாளரான செல்வராஜின் முதல் நாவல் மலரும் சருகும். இது உழவுத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் தலித்களின் வாழ்வைச் சொல்லக்கூடியது. இவரது தோல் என்ற நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.

19. கோபல்ல கிராமம்- கி.ராஜநாராயணன் தமிழில் வட்டாரமொழி இலக்கியத்தின் பிதாமகரான கி.ரா. எழுதிய இந்நாவல் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் கதையைச் சொல்கிறது. எளிமையான அதேசமயம் அற்புதமான பதிவுகள் மிளிரும் நாவல்.

20. கடல்புரத்தில்- வண்ணநிலவன் பண்டியலுக்கு துணிமணிகளை செபஸ்தியும் அமலோற்பவமும் போட்டி போட்டிக்கொண்டு வாங்கி இருந்தார்கள். பிலோமிதான் மிகவும் மெலிந்துவிட்டாள். செபஸ்தி வீட்டுப்பொடியன்கள் ரெண்டு பேரும் மூங்கில் பிளாச்சுகளினாலே நட்சத்திரங்களும் விளக்குகளும் செய்வதில் உற்சாகத்துடன் முனைந்திருந்தார்கள். பிலோமிக்கு ஒன்றும் வேலையில்லை. தன்னுடையை மருமகப் பிள்ளைகளுடைய கைவேலைகளைப் பார்த்துக்கொண்டே அவர்களுக்கான சின்னச் சின்ன உதவிகள் செய்துகொடுத்தாள். அமலோற்பவ அக்காவுடைய மகள் மெர்ஸி அவளுடைய பூஞ்சையான மடியில் படுத்து தூங்கிப்போனாள். வாழ்க்கையில் பல விஷயங்களைச் சொல்லி வெளியிட முடியாத நளினங்கள் உண்டு. அனுபவத்தாலே மட்டும் உணர முடிகிறவைகள். பிலோமி மிகுந்த சந்தோஷத்துடனே இருந்தாள். வாழ்க்கை சந்தோஷமானதாக இல்லாவிட்டாலும் அது சந்தோஷமானதுதான் என்று நம்புவதற்குத் தயாராகி விட்டாள்.

(நாவலிலிருந்து...)

21. பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு காவேரி நதி தீரத்தில் வாழும் இரு மனிதர்களின் கதை. ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட பாலியல் விஷயங்களைச் சொல்லி மிக அலட்சியமாக மரபுகளை மீறும் எழுத்து.

22. வாசவேஸ்வரம் - கிருத்திகா அங்கதத்தைக் கையாண்ட ஒரே தமிழ்ப் பெண்ணெழுத்தாளர் என்று ஜெயமோகனால் சுட்டப்படும் கிருத்திகாவின் இந்நாவல் ஒரு கிராமத்து வாழ்க்கையை விவரிக்கிறது. அதன் பின்னணியில் பாலியல் மீறல்கள் நிழலாகப் படர்ந்துள்ளன.

23. கிருஷ்ண பருந்து- ஆ.மாதவன் திருவனந்தபுரத்தில் சாலைக்கடைத்தெருவை பின்னணியாகக் கொண்ட இது இவரது இரண்டாவது நாவல். குருஸ்வாமி என்ற பாத்திரத்தின் உணர்வுகள் மூலமாக விரிவடைகிறது. ”மாதவனின் படைப்புப் பயணத்தில் இந்த நாவல் ஒரு புதிய திருப்பம் என்கிறார் நகுலன். தமிழுக்கு சமீபத்தில் கிடைத்த அருமையான சேர்மானங்களில் ஒன்று இது என்று எனக்குத் தோன்றுகிறது.” என்பது நாவல் வந்த 1987-ல் நாஞ்சில்நாடன் எழுதிய விமர்சன வரிகள்.

24. வெக்கை -பூமணி எதிரியின் கையை வெட்ட நினைத்து, தவறுதலாக சாகடித்துவிட்டு ஓடும் பு5 வயது சிறுவனின் கதை இது. கரிசல் மண்ணின் வாழ்வை நுட்பமாகப் பதிவு செய்யும் பூமணியின் மாஸ்டர்பீஸ்களில் இதுவும் ஒன்று.

25. குருதிப்புனல்- இந்திரா பார்த்தசாரதி கீழ்வெண்மணிப் படுகொலைகளைப் பின்புலமாகக் கொண்டு இ.பா. எழுதிய இந்நாவல் சாகித்ய அகாதமி பரிசு பெற்றது. மிகவும் விறுவிறுப்பாக மனதில் தைக்கும் கதைப் போக்கு கொண்டது.

26. புத்ர - லாசரா இது பு965-ல் லாசரா என்கிற மொழியின் ரசவாதியால் எழுதப்பட்ட முதல் நாவல். நூறு ஆண்டுகளாகத் தொடரும் ஒரு சாபம்தான் நாவலின் மையம். மனித மனத்தின் மேடுபள்ளங்களை மொழிக்கு மடைமாற்றுவதில் லாசராவை யாரும் வெல்ல இயலாது.

27. புதிய தரிசனங்கள் -பொன்னீலன்  “என்னோட இரண்டாவது நாவல் ‘புதிய தரிசனங்கள்’தான் எனக்கு பு994-ல் சாகித்ய அகாடமி விருதை வாங்கிக் கொடுத்துச்சு. இந்திரா காந்தி இருபது அம்சத் திட்டத்தை அறிமுகப்படுத்துன காலத்துல, அதை நம்பிக் களம் இறங்குனோம். அதுல எங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களோட தொகுப்புதான் கதைக் களம். இந்த நாவலை எழுதுறதுக்கு பு4 வருசம் ஆச்சு. அதை ஏழு தடவை திருத்தி எழுதினேன். கிராமத்துல இருக்குற பலவிதமான மனித மனோபாவங்களையும் உள்வாங்கித்தான் அந்த நாவலை உருவாக்குனேன். அந்த நாவலுக்கு 4 பதிப்புகள் வெளியாச்சு. இன்னும் எனக்கான அடையாளமாகவும் அந்த நாவல் நிக்குது!’’

-பொன்னீலன் தமிழ் இந்து நேர்காணலில்.

28. புத்தம் வீடு- ஹெப்சிபா ஜேசுதாசன் இரவில் இருட்டோடு இருட்டாக குடுவைகளைத் தூக்கிக் கொண்டு நடமாடுவார்கள். முன் நிலாவானால் அவர்கள் வீட்டுக்குப் போவதற்கு இரவு பன்னிரண்டுகூட ஆகலாம். பின்னிலாவானால் முதல் கோழி கூவும்போதே ‘சரக், சரக்’ என்று பனையில் இருந்து, ஏறுகிறதும் இறங்குகிறதுமான அரவங்கள் கேட்கும்.பனையேறுகிறவர்களின் ‘கான்பரன்ஸ்’ பனைகளின் உச்சியிலிருந்தவாறே நடைபெறும். அதில், அவர்கள் பாஷையில் பல ’மும்பர்கள்’ உண்டு. அவர்கள் சந்திக்கும் இடம் ஆகாயந்தான். வேலை, அவரவர்கள் சௌகரியத்தைப் பொறுத்தது.  ‘கூ’ வென்று புத்தம் வீட்டிலிருந்து தங்கையன் கூவினால் அதற்குக் ‘கூ’வென்று பதில் கொடுப்பவன், மூன்று நான்கு ‘விளைகளுக்கு’ அப்பால் மிஷன் வீட்டுக் காம்பவுண்டில் நிற்கும் ஒரு பனையின் உச்சியில் இருப்பவன் ஆகலாம்.

(நாவலிலிருந்து...)

29. ஏறுவெயில்- பெருமாள் முருகன் கொங்குப் பகுதியின் ஒரு கிராமப்புறக் குடும்பத்தின் வாழ்வை, அது காலப்போக்கில் அடையும் சமூக பொருளாதார மாறுதல்களை கண்முன்னே நிறுத்துகிறார் பெருமாள் முருகன். அப்பட்டமான சாதி வெறி, சமூக அவலங்கள் ஆகியவை இந்நாவலில் முகத்தில் அறைகின்றன.

30. சோளகர் தொட்டி- பாலமுருகன் பழங்குடியினரான சோளகர்கள் மீது செலுத்தப்பட்ட அரச வன்முறையைப் பதிவு செய்யும் முக்கியமான நாவல். சந்தன வீரப்பன் மீது நடந்த தேடல்வேட்டையின் போது நடந்த கொடூரங்களைக் கண் முன் வைக்கிறது

31. ரத்த உறவு -யூமா வாசுகி குடும்ப வன்முறையின் பல்வேறு கூறுகளை ரத்தமும் சதையுமாக நாவலாக்கிய யூமா வாசுகி வாசிப்பவர்களின் மனதைக் கலங்க அடிக்கிறார்.

32. தகப்பன் கொடி- அழகிய பெரியவன் வலிமையான எழுத்தாற்றல் கொண்டவர் அழகிய பெரியவன். சாதிய ஒடுக்குமுறை, நிலத்தை உரிமை கொண்டாட முடியாத அவலம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் தலித் மக்களின் கதை இது.

33. கன்னி - ஜே. பிரான்சிஸ் கிருபா ஏசு சாமி ஃபோட்டோ எடுத்தபோது அவர் நெஞ்சுக்குள் பந்தாக திரண்டு எறிந்து கொண்டிருந்த பரிசுத்த ஆவி நெருப்பாக ஃபோட்டோவில் வந்துவிட்டது. அதுபோல பாண்டி வயிற்றுக்குள் குழைந்திருந்த பூரி கிழங்கும் வடையும் ஃபோட்டோவில் வந்து விடுமோ என்று அஞ்சினான். அவன் அஞ்சியபடி நடக்கவில்லை. அது ஒருவகையில் ஆறுதலாக இருந்தது.

(நாவலிலிருந்து...)

34. மணல் கடிகை - எம்.கோபாலகிருஷ்ணன் திருப்பூர் பாரம்பரிய கைத்தறித்தொழிலில் இருந்து மிகப்பெரிய தொழில்நகரமாக மாறுவதைப் பதிவுசெய்யும் இந்நாவல் வாழ்வில் எதிர்கொள்ளும் எதார்த்தச் சிக்கல்களை நுட்பமாகப் பதிவு செய்கிறது.

35. அஞ்சலை- கண்மணி குணசேகரன் அநாதையாய் நிற்கிற வெறி, கோபம், ஆத்திரம், வெறி கொண்ட மாதிரி ஓடி எட்டி அஞ்சலை மயிரைப் பிடித்து, வளைத்துப் போட்டு அடிக்கிறாள். வஞ்சம் தீரக் குத்துகிறாள். உதைக்கிறாள்.

 “நாடுமாறி, நீ ஏண்டி சாவப் போற? நீ பண்ணனதுக்கு நாந்தாண்டி சாவனும்”

 “..அவனுவ பண்ணானுவளோ, நீனா போனியோ, போனதுன்னு ஆயிப்போச்சி. ஒரு தடவ சொன்னாலும் அதான். ஓராயிரம் தடவ சொன்னாலும் அதான். செத்துட்டா மட்டும் அழிஞ்சிடவா போகுது. பொறந்தது பொறந்தாச்சி. என்னா ஆயிடுங்கிற? இதுவுமில்லாம இப்ப, நானும் வேற கூட வந்திருக்கன். இன்னம் பத்துப் பொழுது, இந்த சனங்ககிட்ட இருந்து, என்னா ஏதுன்னு வாழ்ந்து பாக்காம, செத்துப் போறதுதானா பெரிசு? ஏந்திருஞ் சாவப் போறாளாம் சாவ

(நாவலிலிருந்து...)

36. காவல் கோட்டம் - சு. வெங்கடேசன்      வட திசையில் இருந்து நாயக்க மக்கள் தமிழ்நாட்டுக்குப் புலம்பெயர்வதில் தொடங்கும் இக்கதை, மதுரை, அதன் சுற்றியுள்ள பல குடி மக்களின் சில நூற்றாண்டு வரலாற்றைத் தீவிரமாகச் சொல்கிறது.

37. நாகம்மாள் - ஆர்.சண்முகசுந்தரம் கொங்கு தமிழ்நடையில் நாற்பதுகள் காலகட்டத்தில் எழுதப்பட்ட மணிக்கொடி எழுத்தாளரான இவரது இந்நாவல் நாகம்மாள் என்கிற மனுஷியை அந்த காலகட்ட போக்குகளை மீறி அச்சுஅசலாக கண்முன் நிறுத்தியதற்காக நினைவுகூரப்படுகிறது.

38. இதயநாதம் - சிதம்பர சுப்ரமணியன் இசையை அடிப்படையாகக் கொண்ட நாவல். கிட்டண்ணா என்ற வித்வானின் வாழ்க்கையை விவரிப்பது. தாசி ஒருத்தி அவர் மீது காதல் கொள்வதும் பின்னர் அவர் குரல் வளம் போய்விடுவதுமான கதை.

39. ஆறாவடு- சயந்தன் புலம்பெயர்ந்த ஈழ எழுத்தாளரான சயந்தனின் இந்நாவல் மண்ணை விட்டுச் செல்லும் ஈழ அகதிகளின் வாழ்வை விவரிக்கிறது. தேர்ந்த மொழியில் செல்லும் அற்புதமான நாவல் இது. 87 இல் தொடங்கி சு003 வரையான இந்த இரண்டு அமைதிக்கான காலங்களுக்கு இடையே இந்த நாவலின் கதைகள் நகர்கின்றன.

40. நிறங்களின் உலகம் - தேனி சீருடையான் கண் தெரியாதவர்களின் உலகில் நுழைந்து எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் அது பேசும் விஷயங்களுக்காக முக்கியமானது.

41. நித்யகன்னி - எம்.வி. வெங்கட்ராம் பித்துப் பிடித்துவிடும்போன்றிருந்தது அவளுக்கு. பால் சுரக்க முடியாத மார்பைக் கிழித்து எறிந்து உயிர்விடலாம் என எண்ணினாள். ஹர்யசுவன்மீது மட்டும் அல்ல. அவளுக்குக் கன்னிவரம் அளித்த தபஸ்விகள் மீதும் தந்தையார் மீதும் காலவன் மீதும் மிகுந்த ஆத்திரம் உண்டாயிற்று. தர்ம தாதா யயாதி; தர்மபோதகன் காலவன்; தாய்மையற்ற பெண்ணை சிருஷ்டிப்பதற்காகவா தர்மம்? இதுவே தர்மம் எனில் இந்தத் தர்மத்தைக் குழிதோண்டிப் புதைப்பதே மேல் அல்லவா? அவள் இதற்கு ஏன் பணிய வேண்டும்? இன்னும் இரு மன்னர்களை இவள் ஏன் மணம் புரியவேண்டும்? இன்னும் இரு குழந்தைகளை ஈன்றெடுக்கவேண்டும். எதற்காக?

(நாவலிலிருந்து...)

42. கலங்கியநதி - பி ஏ கிருஷ்ணன் அசாமில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பொறியாளர் ஒருவரை மீட்கும் முயற்சியில் ஈடுபடும் அரசு அதிகாரியின் கதை இது. அஸாம், வடகிழக்கு மாநில போராட்டச்சூழலை நியாயமாக அணுகுகிறது இந்நாவல்

43. வாடிவாசல் - சி.சு. செல்லப்பா தென் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஒன்றில் பார்வையாளராகக் கலந்துகொள்ளும் கிழவனும் சிறுவனும் காளை ஒன்றை ஊர்ப்பெருமையைக் காக்க களமிறங்கி அடக்கும் கதை. சிறிய அதே சமயம் செறிவான நாவல்.

44. கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான் ”திருநெல்வேலியில் எனக்கு ஒரு கடையிருந்தது. அங்கு பால் விற்கக் கூடிய ஒரு செட்டியார் இருந்தான்.

 அவன் என்னிடம் வாசிக்க ஏதாவது கேட்டபோது என்னிடமிருந்த முஸ்லிம் முரசு பத்திரிகைக் கட்டைக் கொடுத்தேன். அவன் அதிலுள்ள எனது நாவலைப் படித்துவிட்டு அதனை பைன்ட் செய்து கொண்டு வந்து தந்தான்.

 அவனை எந்த வார்த்தையில் பாராட்டுவது என்று தெரியவில்லை. ஏனெ னில் அவன் ஒரு சாதாரண ஆள். இவனே இந்தக் கதையை உள்வாங்கி யிருக்கின்றான். இது முஸ்லிம் சமூகத்திற்கு வெளியில் நிச்சயம் புரியப்படும் என ஒரு நம்பிக்கை எனக்குள் எழுந்தது.

 எழுதி பத்து ஆண்டுகளின் பின்னர்தான் இது நிகழ்கிறது. எனது சொந்தச் செலவில் புத்தகத்தை அச்சிட்டு ஊரில் ஒரு வெளியீட்டு விழா வைத்தேன். அங்கு பேசியவர்கள் இதில் எமது கிராமத்தின் கதை சொல்லப்பட்டிருப்பதால் அதை ஒரு வரலாற்று நூல் எனக் கருதிக் கொண்டு பேசினார்கள்.

 அன்று 70 புத்தகங்கள் விற்கப்பட்டன. அடுத்த நாள் ஒரு புரளி கிளப்பி விடப்பட்டது. இது நமது ஊர் வரலாறல்ல. தங்கள்மார்களையும் முதலாளிகளையும் திட்டி எழுதிய புத்தகம் என்பதே அந்தப் புரளி.

 ஊரில் ஜதுபு பிடித்த ஒரு தங்கள் இருந்தார். அவருக்கு இடைக்கிடையே ஜதுபு வரும். சாதாரண மக்களுக்கு வந்தால் அது பைத்தியம். அவர்களுக்கு வந்தால் அது ‘ஜதுபு ஹால்’ என்று சொல்லப்படும்.

 அது ஒரு அந்தஸ்தான பைத்தியம். அந்தத் தங்களிடம் எவனோ விசயத்தைச் சொல்லிவிட்டான். அவர் கொஞ்சம் பெருத்த ஆள். கம்பீரமான தோற்ற முடையவர். அவர் மக்களோடு கிளம்பி வந்தபோது நான் திருநெல் வேலிக்கு ஓடிவிட்டேன். சுந்தர ராமசாமி தனது நண்பர்களுக்கு எழுதிய எல்லாக் கடிதங்களிலும் ‘இப்படியொரு சிறப்பான நாவல் வந்துள்ளது; கட்டாயம் படியுங்கள்’ என ஒரு வரி எழுதினார். இதனால் நாவல் விற்றது. பு999ம் ஆண்டு இஸ்லாமிய இலக்கிய மாநாடு இந்தியாவில் நடந்தது. இந்த மாநாடு நடக்கும் முன்பே இந்தியாவின் சாகித்திய அகாடமி விருதை நான் பெற்றிருந்தேன். இந்தியாவில் ஒரு முஸ்லிம் வாங்கிய முதல் விருது இது”- --தோப்பில் முகமது மீரான்

 -நன்றி: மீள்பார்வை

45. பார்த்தீனியம் - தமிழ்நதி முழுக்க சாதாரண மனிதர்களின் பார்வையில் ஈழத்தில் நடக்கும் போருக்கான எதிர்விளைவுகள் பதிவாகின்றன. உண்மையான மனிதர்கள், போராளிகள், அதிகாரிகள் வந்துபோகின்றார்கள். இந்நாவல் நடக்கும் காலகட்டம் ஈழத்தில் சகோதர யுத்தம் நிகழ்ந்த கட்டம். துரோகிகள் என்று விடுதலைப்போராளிகள் ஒருவரை ஒருவர் கொன்றொழித்த காலம். இந்த விஷயங்களை சாதாரண ஈழப்பொதுமக்களின் பார்வையிலிருந்து எதிர்ப்பு ஆதரவு என இருவேறு கருத்துகளையும் பதிவு செய்துகொண்டே போகிறார் தமிழ்நதி.

46. குள்ளச்சித்தன்சரித்திரம்- யுவன் சந்திரசேகர்   யுவன் சந்திரசேகர் பல்வேறு வகை மனிதர்களின் வாழ்வை துண்டு துண்டாக எழுதி ஒன்றாகக்கோர்த்து நிறுத்துகிறவர். இந்த நாவலும் அப்படியே. குள்ளசித்தன் கதை என்ற பெயரில் ஒருவர் நாவல் எழுத, அதைப் படிக்கும் ஒருவரின் வாழ்க்கையிலும் அதே போல நடக்க ஆரம்பிக்கிறது. இவ்வளவு எளிதாக இந்த நாவலின் கதையைச் சொல்லிவிடமுடியாது என்பதே யுவனின் தனித்தன்மை.

47. பெருவலி- சுகுமாரன் ஷாஜகானுக்குப் பிறகு ஆட்சிக்கு வரும் ஔரங்கசீப், தன் சகோதரர்களைக் கொன்றதுடன் தந்தையை சிறையில் வைத்தார் என்பது வரலாறு. தந்தையுடன் சிறையிருந்தவள் ஜஹனாரா. ஔரங்கசீப்பின் அக்கா. மிகுந்த மதியூகி. ஷாஜகானுக்கு ஆட்சி நிர்வாகத்தில் ஆலோசனை கூறியவர். இந்த காலகட்ட சங்கதிகள் ஜஹானாராவின் பார்வையில் இந்நாவலில் பதிவாகின்றன. அக்பர் காலத்தில் ஒரு விதி கொண்டுவரப்பட்டது. அரச குடும்ப பெண் வாரிசுகள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்பது அது. அதைத் தொடர்ந்து அரண்மனைச் சுவர்களுக்குள் கேட்கும் உஷ்ண பெருமூச்சின் வலியை இந்த நாவலில் உணரமுடியும். சிறையில் தந்தையுடன் இருக்கும் ஜஹானாராவுக்கு பரிசென்று ஒன்றை அனுப்புகிறார் அது ஔரங்கசீப்பின் அண்ணனும் இவர்களால் பட்டத்துக்கு உரியவனாகத் தெரிவு செய்யப்பட்டவனுமான தாராவின் தலை! ஜஹனாராவுக்கு இணையாக இந்த நாவலில் ஔரங்கசீப் பக்கம் சேர்ந்துகொள்ளும் ரோஷனாரா என்ற ஷாஜகானின் இன்னொரு மகளும் வந்துபோகிறாள்! சதிகள், கொலைகள் என முகலாயர் அரண்மனை நிகழ்வுகளுக்கு நடுவே சிக்கித் தகிக்கும் தூய்மையான ஆன்மாவாக ஜஹனாராவைப் படைத்துள்ளார் சுகுமாரன். இந்நாவலின் வரிகளூடாக நாம் ஸ்பரிசிப்பது இந்தியாவைக் கட்டியாண்ட சக்கரவர்த்தியொருவரின் மகளின் நிஜமான உணர்வுகள்.

48. ராசலீலா - சாருநிவேதிதா கண்ணாயிரம் பெருமாளுக்குப் பிடிக்காதவை: இந்தியா இந்தியர்கள் பெரும்பாலான ஆண்கள் பெரும்பாலான பெண்கள் பெரும்பாலான குழந்தைகள் கடல் சாக்கடை இந்திய சாலைகள் காகம் பசி சோறு தொலைக்காட்சி சினிமா நடிகைகள் (இந்தியா) சினிமா நடிகர்கள் (இந்தியா) தமிழ் எழுத்தாளர்கள் மிருகக்காட்சிசாலை சர்க்கஸ் சிறைச்சாலை அரசியல்வாதிகள் பிச்சைக்காரர்கள் குஷ்டரோகிகள் மருத்துவமனை பெண்ணியவாதிகள் antipaedophiles மது அருந்தாதவர்கள் புகைப் பழக்கம் இல்லாதவர்கள் பெண் கவிஞர்கள் (தமிழ்) சுய மைதுனம் கல்விக்கூடம் நீதிமன்றம் போலீஸ் ஸ்டேஷன் மழை குடும்பம் மலம் கலாச்சாரம் political correctness  நிறுத்தற்குறிகள் குதிகாலில் வெடிப்புள்ள பெண்கள், ஆண்கள் அர்த்தம்

(நாவலிலிருந்து...)

49. வேனல்- கலாப்ரியா கவிஞராகவே பல ஆண்டுகள் அறியப்பட்ட கலாப்பிரியா சமீபத்தில் எழுதிய முதல்நாவல். தாமிரபரணி ஆற்றின் கரையில் வாழும் சமூகத்தின் வாழ்வை சுவைபடச் சொல்கிறது. அப்பகுதியின் ஆன்மாவை தன் வரிகளில் சிறைப்பிடித்திருக்கிறார் கலாப்ரியா என்று சொல்லலாம்.

50. என் பெயர் ராமசேஷன் - ஆதவன் இந்த ஸ்பின் பௌலிங்கில் பிரேமா மிகவும் தேர்ந்தவள். ஆண்களைப் பற்றிய விமர்சனம் போல் பேச்சைத் தொடங்கி பெண்களைப் பற்றி என்னைப் பேசவைத்து சட்டென்று பெண்களைப் பற்றி இவ்வளவு அனுபவம் எங்கேயிருந்து கிடைத்தது என்று மடக்குவாள். என் அம்மாவும் தங்கையும்தான் இருக்கிறார்களே என்று நான் சமாளித்துக்கொள்வேன். என்னுடைய பூர்வாசிரமத்தைப் பற்றிய வதந்திகளைக் காதில் போட்டுக்கொள்ளவேண்டாம் என்று சொல்வேன். ராவையும் மூர்த்தியையும் மனதில் வைத்துக்கொண்டு,’டோண்ட் பீ ஸோ கன்ஸீட்டட்’ இங்கே இருபத்தி நான்கு மணி நேரமும் உன்னைப் பற்றித்தான் டிஸ்கஸ் பண்ணுகிறோமா என்று அவள் சொல்வாள். நான் சும்மா தமாஷுக்காகப் பெண்களுடன் எனக்குப் பலவகை அனுபவங்கள் ஏற்பட்டது போல் புரூடா விடுவேன். சில ஆசாரப்பிச்சுக்கள் அதையெல்லாம் நிஜமென்று நினைத்து அதிர்ச்சி அடைந்து நான் ஏதோ பயங்கரமான க்ஷீணீஜீவீst  போல எல்லோரிடமும் சொல்லிவருகிறார்கள்”.

(நாவலிலிருந்து...)

ஜனவரி, 2019.